Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Tuesday, April 25, 2006

காசேதான் கடவுளடா!

நான் டெல்லியிலே இருந்தப்ப, தருமி எழுதிய பதிவு மாதிரி'பிள்ளையாரும் பால் குடித்தார்…' மாதிரி ஒரு விஷயம் பத்து வருஷ முன்ன நடந்தது. அதை வெகுவா நம்புற ஜனங்கள் மட்டுமில்லாம, மெத்த படிச்ச நம்ம ஆளுங்களும், அறிவியல் தர்க்கம் பண்றவங்களும் 'capillary action' ன்னும், 'surface tension' னும் போட்டுவுட்டுகிட்டு அதை justify பண்ணிக்கிட்டு இருந்தை இப்ப நினைச்சிக்கிட்டாலும் சிரிப்பா தான் வருது! இந்த கதை டில்லின்னு இல்லாம லண்டன் வரை நம்மூரு பிள்ளையாரை வச்சி விளையாண்டது பத்தி சில பேரு ஆச்சிரியபடலாம். இதெப்படி மேலை நாட்ல இந்த கூத்து அப்படின்னு. ஆனா இந்த சாமி, கோவில் விஷயங்க இங்கே அமெரிக்காவிலே எப்படி ஒரு பெரிய வியாபாரமா வியாபிச்சு இருக்குங்கிறதை பத்தி ஒரு சின்ன பார்வை பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு. அது எப்படி இங்கே உள்ள சர்ச்சுங்க எல்லாம் ஒரு பெரிய கார்ப்ரேட் வியாபாரத்தலமா இயங்கிக்கிட்டு இருக்குங்கிறதை, சுவராசியாமா நீங்க பார்க்கலாம். சாமி, கோயிலு, பூஜை, புணஸ்காரம்னு காசு புடுங்கும் கூட்டம் நம்ம ஊர்ல மட்டுமில்லை, இங்கேயும் தான், அதுவம் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில எம்பிஏ படிச்சிட்டு எவ்வளவு பெரிசா செஞ்சுக்கிட்டிருக்காங்க தெரியுமா?

நம்ம சினிமாக்கள்ல காமிக்கற மாதிரி மரத்துக்கு மஞ்சத்துணியை கட்டிவிட்டு காசு பார்க்கும் கும்பலுங்க நிறைய, அதே மாதிரி அங்கங்க திடீர் கோவில் முளைச்சு பூஜை, பாட்டுன்னு அமர்க்களம் படுத்துவாங்க. கவுண்டமணி ஒரு படத்தில, மஞ்சத்துணியை மரத்துக்கு மரம் கட்டிவிட்டு பிறகு ஸ்கூட்டர்லயும், காருலயுமா போயி உண்டியல்ல இருந்து கலெக்ஷன் பண்ணி வரதை காமிச்சி காமிடி பண்ணது ஞாபகம் இருக்கா! இங்கேயும் ஆக மொத்தத்தில அதே மாதிரி தான், ஆனா என்ன, எல்லாமே கார்ப்ரேட் பிஸினஸ் ஸ்டையில்ல நடக்கிற ஒன்னு, எப்படின்னு பாருங்க!

இந்த வில்லோ கிரீக் கம்யூனிட்டின்னு (Willow Creek Community) ஒரு இடம், இல்லினீயாஸ்(Illinois) மாகாணத்திலே, 'south Barington' ங்கிற ஊருல இருக்கிற அந்த சர்ச்சு, ஒரு ஷாப்பிங் மாலுக்கு இருக்கிற அத்தனை வசிகளோட, அதாவது 'food court' லருந்து 'basket ball court' வரை, அப்புறம் சின்ன சின்ன cafe, starbucks வோடது, பெரிய ராட்சஷ டிவி ஸ்கிரீண், அப்புறம் 4000 காருக்கு மேலே நிறுத்த உண்டான பார்க்கிங் ஸ்பேஸ், டிஸ்னிலேண்ட் தோத்துச்சு போங்க! ஆனா, நம்ம ஊரு மாதாக் கோவிலு மாதிரி கூறிய கோபுரங்களோட, இல்லை பெரிய சிலுவைகள், ஞானஒளியில சிவாஜி அடிக்கிற பெல்லு, அப்புறம் அந்த சர்ச்சுக்களுக்கே உரிய கலர் கலரா கண்ணாடி ஜன்னல்கள் இது எல்லாம் எங்கேப்பா இந்த சர்ச்சுலன்னு தேடினீங்கண்ணா, ஒன்னும் கிடைக்காது(இப்பவும் நிறைய பழமையான அந்த கோத்திக் கலைகளுடன் கூடிய புரதான யேசுகிறித்துவ ஆலயங்கள் நிறைய அமெரிக்காவில பார்க்கலாம், இருந்தாலும், நான் சொல்ற இந்த சர்ச்சுங்க கொஞ்சம் மார்டன், இது தான் இன்றய கார்ப்ரேட் அமெரிக்காவின் மத சின்னம்! அதுதான் பெருகி நிக்குது!)

மேலே சொன்ன சர்ச்சுகளில், இந்த கார்ப்ரேட் தீம் வெறும் உருவ வடிவங்கள், வசதிகள்ல மட்டும் இல்ல, அதனுடய நிர்வாகமும் கார்ப்ரேட் ஸ்டைல் தான். கோவிலின் தூதறிக்கையிலருந்து ('Mission statement') அதாவது, 'நாத்திகர் அனைவரையும் யேசு கிறித்துவன் வழி நடப்பவராக செய்வதே', அப்புறம் ஏழு வழி தந்திரம் மற்றும் பத்து முக்கிய கடவுள் நம்பிக்கை எண்ணங்கள் வரை எல்லாம் உண்டு. இதுக்குன்னு ஹார்வோர்ட் மற்றும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ ('MBA') படித்த மாணவர்களை கொண்ட நிர்வாகம் மற்றும் இதற்கென கன்செல்டன்ஸி நிறுவனம்! இது மாதிரி கார்ப்ரேட் உலகத்திலருந்து கடன் வாங்கி வழிநடத்தபடும் செயல் முறைகள் தான் இன்னைக்கு இந்த மாதிரி சர்ச்சுகள் இயங்கும் ரகசியம்! ஆக இந்த கோவில்கலின் மூத்த மத தலைவர்கள் CEO, COO என அழைக்கப்படுகிறார்கள், பூஜைபண்ணும் பாதிரியார்கள், 'Service Directors' என அழைக்கப்படுகிறார்கள். பிறகு இது போன்ற குட்டி குட்டி கோவில்களில் பிரசங்கம் பண்ணுபவரை 'Pastor' என அழைப்பார்கள், அவர்கள் தான் இப்பொழுது 'Pastorpreneur' காக கருதப்பட்டு, நல்ல ச்ம்பாத்தியம் ஈட்டுகின்றனர். அப்படியே தங்களை அழைத்துக்கொள்ளவும் முற்படுகிறார்கள்.

1975ம் ஆண்டுக்குப்பிறகு, மக்கள் வெகுவாய் சர்ச்சுகளுகு வருவது குறைந்தது கண்டு, இதுக்கு காரணம் என்னவென்று, இந்த வில்லோ கிரீக் சர்ச்சின் நிறுவனர் அறிய முற்பட்டார். அதன்படி ஒரு இன்ஃபார்மல் சர்வே எடுத்து, அதற்கு தகுந்த மாதிரி மாற்றங்களை கொண்டு வந்தார். அதாவது முதலில் கிறித்துவ மத பிம்பங்களான சிலுவை மற்றும், அந்த கலர் கண்ணாடி ஜன்னல்கள் என்றிருந்த பிம்பங்களை உடைத்து, பூஜை, பிரசங்கங்களை நாடக இசை வடிவிலே பெரிய வீடியோ திரைகள் அமைத்து மக்களின் உண்மையான பிரச்சனைகளை எடுத்து பேசி தமது போதனைகளில் ஒரு புதுமை புகுத்தினார். அதாவது இழந்த வாடிக்கையாளர்களை மீட்கும் வியாபார தந்திரமாகவே இது ஆயிற்று!

அடுத்து 'user-friendliness' என்ற உபயோகிப்போர் நட்பு எனும் அடுத்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக கோவிலில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஊடுறவச் செய்தார்! மதம் காண வரும் புதியோருக்கு எல்லா வசதிகளும் ஒழுங்கு முறையில், அதாவது சரியாக் சீர் செய்யப்பட்ட புல்வெளி மேடைகள், கார்கள் ஒழுங்காக நிறுத்த உண்டான வசதி என்று ஓவ்வொரு கோவில் சேவையும்(கரசேவை முதற் கொண்டு) திறம்பட செய்து தந்த வரவேற்பு மக்களை பெரிதும் கவர்ந்தது! அது மட்டுமில்லை, இந்த கோவிலின் மீது ஈடுபாடு வரக் காரணம், சில தன்விருப்ப கூட்டத்தினராலும் (மோட்டர் சைக்கிள் ஓட்டுபதில் விருப்பம் உடைய கூட்டத்தினர், இல்லை தன் எடையை கண்காணிக்கும் கூட்டத்தினர் என்று)மற்றும் குடிகாரர்களை, செக்ஸ் அடிக்ட்களை திருத்தி ஆலோசனை வழங்கி பொது சேவை செய்வ தாலும், கார் இல்லோதருக்கு தானமாக வரும் கார்களை பழுதுநீக்கி இல்லாதோருக்கு வழங்கிய தாலும், அனைவருக்கும் ஒரு ஈடுபாடு வரத்தொடங்கியது. அதுவுமில்லாமல், சிறு குழந்தைகள் பராமரிப்பு, வாலிப வயதினருக்கென பிரத்தியோக ஆடிட்டோரியங்கள் என்று அனைத்து வசதியும் செய்து கொடுத்து இந்த 'user-friendliness' கொள்கையை கடைபிடித்து அடுத்த வியாபர தந்திரம்!

இது மட்டுமில்ல, நான் மேலே கூறியது போல், சில சர்ச்சு வளாகங்கள் பெரிய ஷாப்பிங் மால் போன்ற அத்தனை வசதிகள், பேங்கிலிருந்து, மருந்து கடைகளிருந்து, பள்ளிக்கூடங்கள் என அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு கார்ப்ரேட் உலகம்! கோவிலிலும் பூஜைகள் வயோதிகருக்கு தனி நேரம், இளைஞருக்கு தனி நேரம், கல்யாணமாகாதோர் என வெறும் புதன் ஞாயிறு கிழமைகள் மட்டுமில்லாது அனைத்து நாட்களிலும் கோவில் திறப்பாடு! இது போன்ற வசதிகளுடன் அமெரிக்கா முழுமையும் நிறைய சர்ச்சுகள் வர தொடங்கி உள்ளன. அவை எல்லாம் மக்களை கவர சில பூஜைகளில் பிரபலங்களையும், பெரிய விபத்துகளில் மாண்ட உறவினர்களையும் அழைத்து சிறப்பு பூஜைகள் செய்வது , மற்றும் டிவி போன்ற ஊடகத்துறையிலும் ஒளிபரப்பு செய்து அதிக பட்ச மக்களை அடைய வழி செய்து அனைத்து வியாபர தந்திரங்களையும் செய்கின்றன.

இந்த வியாபார யுக்தியில் வெற்றி பெற்ற சில கோவில்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 15% மேலாக செலவிட்டு தொழில்நுட்பங்களையும் புகுத்தி உள்ளன என்றால் ஆச்சிரியத்திற்கு இடமில்லை. பெரிய பெரிய வீடியோ புரெஜக்ஷன்கள், மற்றும் கம்ப்யூட்டர், இசைபதிவுக்கூடங்கள் என எல்லாமே ஒரு மாயாஜாலம் தான்! இவ்வளவு பெரிய வசதிகளோடு, அத்தனை வியாபார தந்திரங்களால் இயங்கும் இந்த கோவில்களின் ஆண்டு வருமானம் ஐந்து ஆறு கோடி டாலர்களுக்கு மேல், அதில் வேலை பார்க்கும் நபர்கள் ஐந்நூருக்கும் மேலே! இந்த கோவில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல் Finance, HR என அத்தனை துறைகளும் உள்ளன!

இப்படி விஷ்வரூபமாக வளர்ந்தாலும் தொல்லை தான், மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல! தியானமோ அல்லது தொழ வரும் பக்தர்கள் அனைவரும் தனி தனியாக பிரத்தியோக கவனம் தங்கள் மீது பிரசங்கம் செய்யும் பாதிரியார்களைடமிருந்து வர வேண்டும் என வரும் எதிர்பார்ப்புகளை சமாளிக்க முடியாமல் போகிறது. ஏனென்றால், ஒரு பெரிய ஸ்டேடியம் போல 5000, இல்லை 6000 பேருக்கு இறை கூட்டம் நடத்தும் போது இது முடிவதில்லை. ஆகையால் சிறு சிறு கூட்டங்களாக பிரித்து இறைக்கூட்டம் நடத்தி வாடிக்கையாளர்கள் சிதறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டி உள்ளது இந்த கோவில் நிறுவாகத்தினருக்கு! மற்றும் நான் ஏற்கனவே கூறியது போல் இறைகூட்டங்கள் வகைபடுத்த படுகின்றன, அதாவது ஞாயிற்று கிழமைகளில் பொதுவானவர்களுக்கும், புதன் கிழமைகளில் ஆழமாக இறையான்மையில் ஈடுபடுவர்களுக்கும், புதன்கிழமையில் புதியதாக சமயத்தில் நுழைந்தவர்களுக்கும் என வகை படுத்தி புது நிர்வாக யுக்தியுடன் நடத்தபடுகிறது! மேலும் ஆங்காங்கே கிளைகோவில்களை தோற்றுவித்து வழிபாடு சேவைகளை உண்டாக்குதல் ('a form of religious franchising') ஆக வியாபார தத்துவத்தில் அடங்கிய அத்தனை திட்டங்களும், தொலைநோக்கு பார்வைகளும், வழிமுறைகளும் பின்பற்ற பட்டு ('Strategic planning and strategic vision') நடத்தபட்டு வருகிறது!

இது மட்டுமல்ல, நான் கூறிய இந்த கோவில், இந்த கோவில் நிர்வாக முறையை திறம்பட நடத்திட ஒரு தனியே கன்செல்ட்டிங் ஆர்மே நடத்துகிறது. இதன் கீழ் பதியப்பட்ட கோவில் கள் பத்தாயிரத்துக்கு மேலே! மேற்கொண்டு சிறப்புக்கூட்டங்கள் நடத்தி, அதில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டு, தலைமை பிரசங்கராக புகழ் பெற்ற அமெரிக்க வியாபார ஆசான் 'Jim Collins', மற்றும் 'Bill Clinton' போன்றோரை வைத்து, இந்த சிறப்பு கூட்டங்ளால் சம்பாரிக்கும் தொகை 2 கோடி டாலருக்கு மேல்! இக்கோவில்கள் வியாபார உலகத்தின் தந்திரங்களை கடைபிடிப்பதோடு, அதை திரும்ப அவ்வுலகுக்கே கற்றும் கொடுக்கின்றன(reversal businesses), எப்படி என்பதை வணிக மேதை 'Peter Drucker' கூறுகிறார், இக்கோவில்கள் எப்படி புதியதாய் வழிபட ஆரம்பிப்போரையும், volunteer களையும் ஊக்கபடுத்தி ஒரு நல்ல ஊழியனாக மாற்றுகின்றன, பிறகு திறம்பட்ட தொழிலாளராக மாற்றுகினறன. இந்த கொள்கை (Motivation factor) வியாபர உலகுக்கும் மிகத்தேவை என்கிறார்!

ஆக இம்மாதிரி கோவில்களும் தொழுகைகளும் முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்டது இந்த மண்ணிலே! இது தொன்று தொட்டு அமெரிக்காவில் நடப்பது தான். அந்த காலத்தில் வந்து குடியேரியவர்கள் மதக்குருமார்களும், வியாபார கும்பல்களும் தான். அக்கால 'Methodist preachers', அதாவது 'Fransisco' போன்ற மதத் தலைவர்கள் வியாபர நுட்பங்களை ('Marketing Technics') கையாண்டு மதத்தை பரப்பினார்கள். அது இப்பொழுதும் தொடர்கிறது, எல்லாமே ஒரு வியாபாரமாய்! அவர்கள் கூரும் கூற்று கடவுள் 'உன்னை படைத்தான், உன்னுடய சிறந்த உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்து கொள்ள' ஆம் உண்மை தான், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, 20 லட்ச டாலர்களில் வீடும், 10 லட்ச டாலர்களில் பறக்கும் விமானம் வைத்துக் கொண்டு காசு பார்க்கும் இந்த பாதிரியார்கள் கடவுள் படைத்த மனிதர்கள்!

இத எதுக்கு பதிவு பண்ணேன்னா, நம்ம ஊர்லயும் இந்த professional அநியாம் நடக்கத்தான் செய்து, காஞ்சி மடம் முதக்கொண்டு, தினிகரன் கூட்டம்னும், அம்மா அமிர்தாமாயினினும், சாமி பிரேமதாசான்னும் மேல்மருவத்தூர்ன்னும் நடக்கிறது நடந்துகிட்டு தான் இருக்கு!. விவேக் போட்டு காமிக்கிற காமடிங்க, இப்படி ஸ்டைலா சம்பாரிக்கும் டெக்னிக் நம்ம ஊர்லயும் வந்தாலும் ஆச்சிரியபடறதுக்கில்லை. மேலை நாடா இருந்தா என்ன, கீழை நாடா இருந்தா என்ன, காசேதான் கடவுளடா!

Saturday, March 11, 2006

லக்க..லக்க...லக்க...லக்க...லக்க..லக்க.......

இன்னைக்கு சண்டைக்கோழி படம் பார்க்கிறப்ப, மதுரை வீரன் சாமி பத்தியும், காக்கும் தெய்வம் பத்தியும் அதிகம் பேசி வசனம் வந்தோன, இதை பத்தி கொஞ்சம் அலசலாமுன்னு தான் இந்த பதிவு. ஏற்கனவே நான் வெளிகண்ட நாதர் பேர்ல போடற பதிவை பார்த்துட்டு ரொம்ப பேர் என்ன, நீங்க ஆன்மீகம் எழுதலையான்னு கேட்டாங்க, அதுக்குத்தான் இந்த பதிவு. அதுக்கு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு, சும்மா ஒரு பில்டப்புக்குத்தான். கோயில், சாமி, பூதம்னு பேசபோறோமே, கொஞ்சம் வித்தியாசமா தலைப்பு வைப்போம்னுதான்.

இந்த இந்து கடவுள ஆராச்சி பண்றப்ப, இந்துயிசத்தை, அந்த ரிக் வேத காலத்திலருந்து கொஞ்சம் பார்த்தோமுன்னா, விஷயம் தெரியும், அதாவது வழிபாட்டுகள்ல தலைவான விளங்கினது, பிரஜாபதி, அதாவது கடவுள், மனிதர்கள் எல்லாருக்கும் தந்தை! அந்த பிராஜாபதியை யாரு பார்த்தது? ஏதோ ஒளி கற்றை, அந்த பிராஜாபதியைதான் பல ரூபமா அப்ப கொண்டாடினாங்களாம், அதாவது, இந்திரன், வருணன், சூரியன், அக்னி, சோமன், ருத்ரன், யமன் அப்படின்னு. இந்திரன் வீரக்கடவுள், இடி, மின்னல்களோட சம்பந்தபடுத்தி அழைக்கப்பட்டவன். அதாவது, மின்னலை பூட்டிய வண்டியில், இடி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உலவினவன். இந்த இந்திரனை, கிரீக்லயும், ஜெர்மனியிலையும் அப்பவே கொண்டாடினாங்களாம், அதவாது, Zeus God of Greek and Thor of the Germans னு ஒரு கருத்து இருக்காம். இந்த இந்திரனுக்கு வாகணம் வெள்ளையானை! அடுத்தது வருண பகவான், இயற்கையை ஆளுமை கொண்டவன், மிகவும் பரிசுத்தமான கடவுள் ரிக் வேதத்திலே! இந்த வருண பகவானுக்கு பழைய இரானிய மக்களுக்கு மிகவும் வேண்டபட்ட கடவுள், இந்து மதத்தை போல! பிறகு சூரிய பகவான், இப்படின்னு போயிகிட்டு இருக்கு...

பிறகு ஆரம்பிச்சது தான் ஆரிய கடவுள்கள், திருமூர்த்திகள், சிவா, விஷ்ணு, பிரம்மான்னு. உங்களுக்கு எல்லோருக்குமே தெரியும் இந்த கடவுள்களோட புராணங்கள், கதைகள் எல்லாம், சிவபுராணம், தசாவதாரம், இராமாயணம், மஹாபாரதம், அப்படின்னு.. போயிகிட்டு இருக்கும்...
அதே மாதிரி, சக்தி அவதாரம் கதைகளும், அவங்களோட ஒட்டிய சாமிகளையும் உங்களுக்கு தெரியும். பார்வதி, மலைகளின் ராணி, மஹாதேவி, கெளரி, அன்னபூரணி, சரஸ்வதி, அப்படின்னு எல்லோரும் ஆரியமாலங்க! இவங்க கதைகளும், புராணங்களும் நிறையவே தெரிஞ்சு இருக்கும். ஆதிபராசக்தியிலருந்து பொட்டு அம்மன் வரைக்கும், ஏபி நாகராஜன், இராமராஜன் எல்லாம் படமா எடுத்து தள்ளி நம்மல பக்தி வெள்ளத்தில ஆழ்த்திட்டாங்க போங்க! ஆக இவங்களையும் நல்லா தெரியும்.

பிறகு தமிழக கிராமங்கள்ல அதிகம் கும்பிட படுகிற மாரியாத்தாளையும் நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா.. நம்ம காக்கும் தெய்வங்கள் பத்தி அதிகமா புராணமோ, கதைகளோ வர்றதில்லை, ஏன்? மதுரை வீரன், முனீசுவர்ன், ஆஞ்சனாரு, இப்படின்னு, இவங்க கதைகள் அதிகம் நம்க்கு தெரிவதில்லை.
அதை பத்தி திரைப்படங்கலும் அதிகம் வரதில்லையே. ஆனா, கிராமத்து கதையை வச்சு எடுக்கிற படங்கள்ல கடைசி சண்டைக்காட்சி, இது மாதிரி காவல் தெயவத்துக்கு முன்னே, பிரம்மாண்டமா இருக்கும். எல்லா சாமிக்கும் அந்தந்த ஊருங்கல்ல ஒரு குட்டிக்கதையிருக்கும்.. இவங்க எல்லாம் எல்லை சாமிகள். அந்த ஊரைவிட்டு வேறெங்கேயும் பிரசித்தம் அவ்வளவு கிடையாது.

நான் கிராமத்தில வளராதவன், அதனால அதிகமா கதைகள் எனக்குத்தெரியாது. ஆனா, மதுரை வீரன் சாமியை நாங்க தொடர்ந்து கும்பிடுவோம். இன்னொன்னு, ஆடு கடா வெட்டி படையல் போட்டு நல்லா மூக்க புடிக்க சாப்பிட்டுட்டு ஏப்பம் உட, இந்த சாமியை அடிக்கடி கும்படுறதுண்டு. அதுக்குன்னே எங்க பங்காளிங்க வீட்டுக்கு சாமி கும்பட எப்ப போப்போறோம்னு சும்மா நச்சரிச்சுக்கிட்டு இருப்பேன். என் கேள்வி என்னான்னா, கிராமங்களை விட்டுட்டு அதிகமா இந்த சாமிக்கோயில்கள் இருப்பதில்லை, ஏன்? அதாவது ஆரியக்கடவுள்கள், திராவிடக்கடவுள்ங்கிற பிரிவுல இது வந்துடுதோ!.


நான் வட நாட்டில இருந்த பொழுதும், அங்கே மேலே சொன்ன, சிவன், விஷ்ணு, சக்தி கோயில்கள் தான் அதிகம். இது மாதிரி மனிதரை மனிதர்கள் காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த சாமிகள் தெக்காலதான் அதிகம். ஏன் அப்படி? இதுதான் திராவிட கடவுள்களா? அப்புறம் இந்த சாமிகளை வேற விதமாத்தான் சித்தரிச்சு காட்றாங்க, அதாவது பேய் விரட்ட, சித்தபிரம்மை தீக்க, அப்படின்னு.. ஏன் அன்பான வெளிப்பாட, சரஸ்வதி, லக்ஷமி, அன்னபூரணி, அப்படின்னு நல்லமாதிரி சாமிகளை, இந்த சாமிகளை வெளிப்படுத்திக்காட்டல, விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்! நான் ஆர்யம், திராவிடன் பிரிவனை பேசவர்ல. பொதுவா, நம்ம தமிழ் நாட்ல அதிகமா இந்த மாதிரி கும்படற சாமிகள், சுடலை மாடன் சாமி, மதுரை வீரன், (மதுரைக்காரங்க, மீனாட்சியை தான் தூக்கிவச்சுக்குவாங்க, இந்த மதுரை வீரன் சாமியை வுட்டுடுவாங்க, ஏன்னோ) அதிகமா பரவலா கும்படறதில்லை, இதன் சரித்திரம் என்ன? ஆரிய அமுக்கமா? எப்படி..

அப்புறம் கடைசியா, ஆரிய வழியில வந்த கடவுள் தான் முருகப்பெருமான், ஆனா, நம்ம அவரை அதிகமா தமிழ்கடவுள்னு சொல்லுறோம், ஏன்? பெரும்பாலும் வடக்கால, அதாவது, வட இந்தியாவில யானைமுகத்தானை அதிகம் வழிபடுவதால், நம்ம முருகப்பெருமானை எடுத்துக்கிட்டமோ? கார்த்திக்னு, அவ்வளவு பாப்புலர் இல்ல அவரு அங்க, ஏன்? இந்த உருவ வழிபாடு வருவதற்கு முன்ன, வேதகாலத்துக்கு முன்ன, நம்ம முன்னோர்கள் உருவ வழி இல்லாம வழிபட்ட அஞ்சு பூதங்கள் வழிப்பாடு ஏன் இப்படி உருவ வழிபாடானாது. அந்த உருவ வழிபாட்டு முறையில வந்த இந்த காவல் தெய்வங்கள் அதிகம் ஊர் எல்லையை வுட்டு தாண்டரதில்ல! வெறும் பேய்விரட்ட அப்படின்னு ஏன்? லக்க..லக்க..லக்க..லக்க...லக்க...லக்க...