Wednesday, June 28, 2006

நாலு போயி ஆறா??

இது என்ன விளையாட்டுன்னு தெரியல்லை, நாலு எழுத சொன்னாங்க, இப்ப ஆறு எழுதனுமாம். நம்ம வவ்வாலும், மணியனும் என்ன இந்த ஆறு விளையாட்டுக்கு கூப்பிட்டாங்க. நானும் எழுதனும்னு நினைச்சி ரொம்ப நாளாகி போச்சு! திடீர்னு உத்தியோக வேலை வந்திருச்சு, 'உத்தியோகம் புருஷலட்சணமில்லையா', அதெ எப்படி உடுறதுன்னு இருந்துட்டேன்! தமிழ்மணம் பக்கம் வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதுக்குள்ள தமிழ்மணத்தை ஏலம் போட்டு தண்டோரா எல்லாம் வந்திருக்கு, அது தான் கொஞ்சம் புதுசா இருந்திச்சி, மத்ததெல்லாம் பழசு தான். சரி இந்த பிடிச்ச ஆறு விஷயத்துக்கு வர்றேன்!

1) பிடித்த நூல்கள்/எழுத்தாளர்கள்
சுஜாதாவின் எல்லா கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த காலத்திலே இரட்டை பெண்மணிகள் சிவசங்கரியும்,வஸந்தியும் சேர்ந்து எழுதின கதைகள் ரொம்ப பிடிச்சிருந்தது! அப்புறம் சிவசங்கரி கதைகள் பிடிக்கும். பிடிச்ச புத்தகங்கள், வேறென்னா, சின்ன புள்ளையிலேருந்து இந்த ஆனந்த விகடன், குமுதம் தான். கல்கண்டு புத்தகத்தில வர்ற அந்த துணுக்கு செய்திகளும், 'சங்கர்லால் துப்பறிகிறார்' தொடரும் படிக்க அப்படி ஒரு பைத்தியமா அலைவேன் சின்ன வயசிலே! சினிமா பத்திரிக்கைகள், அந்த காலத்திலே பேசும் படம், பொம்மை விரும்பி படிப்பேன். இதை சும்மா ஓசியிலே படிக்க சலூன்ல போய் உட்கார்ந்திடுவேன்! அப்படியே தலை, மீசையும் ஒதுக்கிட்டு வருவேன்!

கொஞ்சம் விவரமானோன்ன, இந்தியாவிலே இருந்த வரை இந்தியா டுடேயும், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியும் தவறாம வாங்கி படிப்பேன். இப்ப டைம்ஸ், த எக்னாமிஸ்ட், வாரம் கழிஞ்சாலும் இந்த புத்தகம் படிக்கலேன்னா தூக்கம் வராது. அப்புறம் லீடிங் காலமினிஸ்ட்ங்களோட கட்டுரைகள் ரொம்ப புடிக்கும், அதுவும் சுப்ரமணியன்னு ஒருத்தர் ஐஐஎஸ்சியிலிருந்து எழுதிற அத்தனை டெக்னிகல் காலம்ஸ்ம் இந்த எக்னாமிக் டைம்ஸ்ல வர்றதை விடாம படிப்பேன், சமயத்திலே அப்ப அப்ப, அவருக்கு மெயில் போடுவேன், ஆனா, ரிப்ளே வந்த பாடு ஒன்னுமிருக்காது!

நாவல்னு எடுத்துக்கிட்டா எல்லா பேம்ஸ் எழுத்தாளர்கள் புத்தகமும் வாங்கி படிச்சிருக்கேன். இதிலே நான் - பிக்ஸன் கேட்டகிரி புக்ல பொருளாதாரம் வணிகம், உலகமயமாக்கல், இதிலெ வர புத்தகமெல்லாம் விரும்பி படிக்கிறதுண்டு!

அப்புறம் சின்னபுள்ளையிலே விரும்பி அதிகமா திருட்டுத்தனமா படிச்சது 'சரோஜாதேவி' புத்தகங்கள், படம் பார்க்கவும், படிக்கவும்!

2) பிடித்த திரைப்படங்கள்
இதுக்கு இந்த பதிவு போதாதே! ஏகப்பட்டதுல இருக்கு! ஆரம்பத்தில எல்லா எம்ஜிஆர் படமும் பார்க்க பிடிக்கும். அதுவும் பேலஸ், ஜீபிடர் தியோட்டர்ல டிக்கெட் கவுண்டருக்கு, ஆளுங்க தலைமேல ஏறி நடந்து போய் டிக்கெட் வாங்கி பார்க்கிற திரில் வேறெதில்லயும் இல்லை! எம்ஜிஆர் படத்திலே ரொம்ப அதிகமா பிடிச்சு போய் கிட்ட தட்ட ஒரு 40 தடவைக்கு மேலே பார்த்த படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'

சிவாஜி படங்கள், எப்பவுமே நான் போய் பார்க்கிறது செக்கண்ட் இன்னிங்ஸ்ல வர்றப்ப தான். படம் ஓடி, திரும்ப வரும் போதோ, இல்ல ஊர்ல இருக்கிற மெயின் தியேட்டர்ல ஓடி, புறநகர் பகுதிக்கு போய் டப்பா தியேட்டர்ல ஓடறப்ப பார்க்கிறது தான்! பெரும்பாலும், எங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற பிரபாத் தியெட்டர்ல வந்த எல்லா சிவாஜி படங்களையும் முதல் இன்னிங்ஸ்லயே பார்த்திடுவேன்! அதிக தடவை பார்த்த படம், 'திருவிளையாடல்' தான்

அப்புறம் ரஜினி, கமல், பாலசந்தர், பாரதிராஜான்னு ஆரம்பிச்சா, அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும், அரிதாரம் எழுதிறவங்கிட்ட இந்த மாதிரி கேட்டு ஒரு பதிவில, அதுவும் ஒரு பாராவிலே எழுதி முடின்னா, எங்கன போறது நான்!

3) பிடித்த உணவு:
ஏங்க இது உங்களுக்கே போதுமா? அலும்பு தானே, சாப்பாட்டுராமன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன், என்னோட நட்சத்திர வாரத்திலே, என்ன இதபத்தி திருப்பி எழுத சொல்றீங்க! சரி கேட்டுட்டீங்க, சொல்லிடுறேன், அதிகமா பிடிச்சது நொறுக்குத் தீனி தான், அதுவும் தீபாவளி பலகார நொறுக்கு ஒருக்குங்களே, சொல்லவேணாம், இந்த தீவாளி பட்சணம் சுடும் கதை எங்க வீட்ல தமாஷா இருக்கும், அதை ஒரு தனி பதிவா அப்புறம் போடுறேன்! அந்த பட்சணத்திலே அதிகம் பிடிச்சது, சோமாஸா, பாசிபயரு உருண்டை, முறுக்கு தான், அடிச்சி நொறுக்குவேன்!

4)பிடித்த இடங்கள்
சுற்றுலான்னு எடுத்துக்கிட்டா ஏகப்பட்ட இடங்கள் போயிருக்கேன். போனதிலே திரில்லிங்கா, போய்ட்டு வந்தது காஷ்மீர், அதாவது ஒரு மூணு வருஷத்துக்கு முன்னே! அதுவும் தீவிரவாதி, கலவரம் அப்படி இப்படின்னு சொல்லியும், சும்மா ஜம்ம்முன்னு போய் காஷ்மீர்ல இறங்கி, இருந்த அஞ்சு நாளும் ராத்திரி பத்து மணிக்கு மேலே ரோட்ல ஜாலியா சுத்திட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தது ஒரு பயம் கலந்த திரில்லான அனுபவம். என்னவேணாம்னாலும் நடக்கலாம். நாங்க போய்ட்டு வந்த ஒரு பழய பஸார் பகுதியிலே, நாங்க வந்து அரைமணி நேரம் கழிச்சு தீவ்ரவாதிகள் துப்பாக்கி சூடு, கர்ஃப்யூன்னு ஏக ரகளை. அடுத்த நாளு படிக்கிறப்ப அப்படியே ஆடி போயாச்சு, இருந்தாலும், ம்.. அங்கேயும் போய்ட்டு வந்துட்டோம்ங்கிற ஒரு தில்லு, ஜில்லு, திரில்லு, சும்மா சொல்லக்கூடாது. அப்பறம் ஹிமாச்சல் பிரதேசம் முழுக்க மலையிலேயே ஒரு பதினைஞ்சு நாள் சுத்தினது மறக்க முடியாது. திவ்யமான சாப்பாடு, சுத்து, ராத்திரியிலே வேணுங்கிறதை ஏத்திக்கிட்டு குளிர் காஞ்சிட்டு, அப்புறம் தூங்கி எழும்பி பிரயாணம் தொடருவது ரொம்ப சந்தோஷமான ஒன்னு. அதே மாதிரி நல்ல ஜனவரி குளிர்ல ராஜஸ்த்தான் பாலைவனம் போய், அங்க மணல் மேட்டுல நடன நிகழ்ச்சி பார்த்திட்டு வந்தது மறக்க முடியாத ஒன்னு! (இந்த துபாய் பக்கம் நான் மட்டும் போனப்ப, டெஸர்ட் சபாரின்னு போய்ட்டு, ராத்திரியிலே பெல்லி டான்ஸ் பார்த்துட்டு வந்ததை, என் பொண்டாட்டிக்கிட்டேக்கூட சொல்லல, அதனால உங்கள்ள, யாராவது துபாய்வாசிக்கு அப்படி அனுபவம்னா, பின்னோட்டம் போடுங்க!)

5)பிடித்த பொழுது போக்கு
பொதுவா, அதிகமா சினிமா போறது, கம்ப்யூட்டர்ல அதிக நேரம் செலவழிக்கிறது தான் பிடித்த பொழுது போக்கு! அதுவும் இந்த வார கடைசியிலே ஏதாவது ம்ல்டிபிளக்ஸ்க்கு போய் DTSல படம் பார்த்துட்டு, நல்லா கானா சாப்பிட டில்லியிலே இருந்த எல்லா நல்ல ஓட்டலுக்கு போனதும் பிடித்த ஒன்னு! கிரிக்கெட் மேட்ச் அதிகமா டிவியிலே பார்க்கிறதும், அப்புறம் இந்த நியூஸ், டாக்ஸோ, இதெல்லாம் போட்டுட்டா டிவியோட ஒட்டிக்கிடறது தான். ஆனா, சீரியல், சித்திரஹார்னு நடுவிலே வர்ற, என் பொண்ணோட இடைஞ்சல், குடச்சல் தாங்க முடியாம, மறுபடிய்ம், இண்டெர்நெட், கம்ப்யூட்டர்னு நேரம் செலவளிக்கிறதுல இஷ்டம்!

6)பிடித்த/ அழைக்க விரும்பும் ஆறு சகவலைப்பதிவாளர்கள்

1)குமரன் - இவருக்கு ஏகப்பட்ட பதிவு இருக்கு, இவர் பதிவு எல்லாத்துக்கும் போய் உள்ளேன் ஐயா சொல்லிடணும்! அவரு இந்த ஆறு விஷயம் போட்டுட்ட்டாரான்னு தெரியாது, அவரை அழைக்கிறேன்!
2)தருமி- இவரு பதிவுகள் ஏகப்பட்ட பாக்கி இருக்கு பழசை எல்லாம் ரிவைஸ் பண்ண, அதுக்குன்னு நேரம் எடுத்து பண்ணனும், இவரையும் அழைக்கிறேன்!
3)கால்கரி சிவா- நம்ம ஊர்க்காரு, அவரையும் அழைக்கிறேன்
4)உஷா ராமசந்திரன் - தேன்நிலவு பரிசு வாங்கினதற்காக பாராட்டி, இந்த ஆறு விளையாட்டுக்கு அழைக்கிறேன்
5)துளசி கோபால் - இவங்க மூத்த குடி, இவங்க இல்லாமலா, இவங்களையும் அழைக்கிறேன்
6)சிறில் அலெக்ஸ்- இவரு பதிவுக்கு அப்ப அப்ப போவேன், எழுதறதெல்லாம், புடிக்கும், இவரையும் அழைக்கிறேன்

ஆக நானும் இந்த ஆறு மனமே ஆறுன்னு, அந்த ஆண்டவன் கட்டளை மாதிரி எடுத்துக்கிட்டு விளையாடி முடிச்சிட்டேங்கோ!

Wednesday, June 21, 2006

உஷ்ணமே உயிரின வகைக்கு காரணம்?

நம்ம ஊர்ல பார்க்கிற சில மிருகங்களை இந்த பக்கம்,அதாவது துருவ பிரதேசத்தில பார்க்க முடியாது, அது மாதிரி நம்ம ஊர்ல பார்க்கிற அநேக வகையான தாவரங்கள், செடி, கொடி எல்லாம் இந்த துருவபிரதேசப் பக்கம் பார்க்க முடியாது? இது ரொம்ப நாளா மண்டைய போட்டு அரிச்சிக்கிட்டிருந்த விஷயம். என்னடா நம்ம ஊர்ல பார்க்கிற சிங்கம், புலி, யானை எல்லாம் இங்கே விலங்கியல் பூங்கால்ல தான் புடிச்சி வச்சிருக்காங்க, நம்மலும் காடு, மலைன்னு இந்த தேசத்திலே சுத்திட்டமே ஒன்னும் கண்ணுக்கு அகப்பட மாட்டேங்கிதேன்னு எனக்கு ஒரு எண்ணம் இருந்துக்கிட்டே இருந்தது! சரி இதுக்கு என்னா காரணம், எப்படின்னு ஆராஞ்சப்ப தான், இந்த 'Ecology and Evolution theory' படிச்சா கொஞ்சம் விளங்குமான்னு பீராஞ்சப்ப சில உண்மைகள் தென்பட்டது! சரி அது என்னா தான்னு தேடி பார்த்தா, இங்கே ஒரு பட்டி மன்றமே நடக்குது, எல்லாத்துக்கும் காரணம் உஷ்ணம் தான்னு. அதாவது உலகத்திலே தேவை அதிகமா போற உஷ்ணம், குளோபல் வார்மிங், பத்தி நான் சொல்ல வர்றல்லை! பொதுவா நம்ம பூமத்திய ரேகைக்கு பக்கத்திலே இருக்கிற கடக ரேகை, மகர ரேகைக்கு இடைப்பட்ட வெப்ப மண்டல நாடுகள்ல அதிகமா காணப்படும் எல்லா இனங்களும் மேலேயோ இல்ல, கீழயோ கொஞ்சம் துருவ பிரதேசங்கள் பக்கம் நகர்ந்திங்கன்னா, அதிகமா இருக்காது! இதுக்கு காரணம் என்னா, இதெல்லாம் என்னக்கூத்துன்னு கொஞ்சம் பார்ப்போமா?

நான் சொல்ற இந்த டிரெண்டு, அதாவது ட்ராபிக்கல் தேசத்திலேருந்து நகர்ந்து துருவபிரதேசம் போனா, நீரிலும் சரி, நிலத்திலும் சரி இந்த பலவகையான உயிரினங்கள் வாழுவது வேறுபட்டிருக்கும்! இதுக்கு முக்கிய காரணம் உஷ்ணம், மிதமான வெப்ப மண்டலம் தான்! ஆக இந்த எக்காலஜிஸ்ட்ங்க எல்லாம் என்ன சொல்லவர்றாங்கன்னா, இந்த கிளைமேட்ல வர்ற காரணம் தான்னு! ஆனா இந்த மித வெப்ப மண்டலங்கள் எப்படி இந்த மாதிரி வகைக்கு ஒன்னா, பலதரப்பட்ட உயிரினங்கள் உருவாக காரணமா இருக்குதுங்கிறதை பத்தி சரியான விளக்கம் இல்லை, ஆனா இதுவே காரணம்ங்கிறது ஒரு மறுக்கமுடியாத உண்மையா இருக்குது!

ஒரு வாதம் என்னான்னா, அதிகமா சூரிய ஒளி கிடைப்பதால் உண்டாகும் இந்த 'போட்டோசிந்தசிஸ்'ங்கிர தாவர உணவு சேகரிப்புக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கிறதாலேயே இந்த மாதிரி வகைக்கு பல தாவரங்கள் உருவாகி இருக்குதுன்னு சொல்றாங்க! மேற்கொண்டு இந்த மித வெப்பமான சீதோஷ்ணநிலை அதிகமான உயிரினங்கள், தாவர வகைகளை உருவாக்கினாலும், அதிலெ எப்படி இவ்வளவு வெரைட்டியா இந்த தாவர, உயிரினங்கள் உருவாக்கப்படுது அப்படிங்கிற விளக்கம் இன்னும் தெளிவா வரவில்லை! ஒன்னுவேனா உண்மையா இருக்கலாம், எப்பவும் சீரா மாறாத சீதோஷ்ண வெப்பநிலை இருப்பதால், இந்த தாவரம் மற்ற உயிரினங்கள் அவ்வளவு சுலபமா அழிஞ்சு போவதில்லை! ஆனா துருவ பிரதேசங்களின் சீரா சீதோஷ்ணவெப்பநிலை இல்லாத காரணத்தால், அவ்வாறு தோன்றும் உயிரினங்களோ, தாவரவகைகளோ அவ்வாறு உயிர்வாழ முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம் என்றும், இல்லை பூமியின் சுத்தும் விசை ('centrifugal force') பூமியின் மத்தியரேகைக்கு அருகில் ஈர்ப்பதால், இந்த இட மாற்றம் ஏற்பட்டு அங்கே, அதிக வகை உயிரினங்கள், மற்றும் தாவர வகைகள் இருப்பதாக இன்னொரு தத்துவ உண்மையாக கூறுகிறார்கள்!

எந்த தத்துவம் உண்மையானாலும், ஒரு முக்கிய காரணம் என்னான்னா, இந்த வெப்ப மண்டலத்தில் மாறும் இந்த சீதோஷ்ண நிலைகளே இந்த உயிரின மாற்றங்களுக்கு காரணம், அதனால் தான் இத்தனை வகை உயிரினங்களும், தாவரங்களும் தோன்றி இருக்கலாம் என்கிற உண்மையை முன் வைக்கின்றனர்!

இந்த உண்மைகளை கண்டறிய ஒரே மாதிரியான தாவர வகை ஒன்று இந்த வெப்ப மண்டலத்தில் இருந்தும், துருவபிரதேசத்திலும் இருந்தும் எடுக்கப்பட்டு அதனுடய 'டிஎன்ஏ' ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது, அதாவது இந்த 'Molecular Evolution' என்கிற இந்த உரு மாற்ற முறைகளை சோதித்து பார்த்த பொழுது ஒரு உண்மை விளங்கியது! அதாவது வெப்பமண்டல பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தாவர வகையின் அந்த 'டிஎன்ஏ'க்குள் இருக்கும் 'nucleotides' என்றழைக்கப்படும் நுண்ணனு துகள்களின் மாற்றம் இரட்டிப்பாக இருந்தது, துருவப்பிரதேச பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட அதே இன தாவரத்தின் 'டிஎன்ஏ' உருவமாற்றம் பார்க்கும் பொழுது என்று அறியப்பட்டது! இந்த உரு மாற்றம் ஆராய்ச்சி நேராக ஒரு உண்மையை விளக்கி உள்ளது, அதாவது உஷ்ணப்பிரதேசத்தில் இந்த மாற்றம் அதிவேகத்தில் நடைபெறுவது!

இந்த உண்மைக்கான விளக்கம் என்னவென்றால் இந்த உஷ்ண மண்டலத்தில் அந்த ரசாயண மாற்றம் அதி வேகமாக நடை பெருவதாலும், பிறகு 'மெட்ட்பாலிக் ரேட்' என்று சொல்லக்கூடிய உட்கொள்ளும் உணவை மாற்றி சக்தியாக எடுத்துக்கொள்ளும் முறை தாவரங்களிலிருந்து, மிருகங்கள், மனிதர்கள் வரை அதிகமாக உள்ளது இந்த வெப்பமண்டலத்தில் வசிப்பவர்களுக்கு, இருப்பவைகளுக்கு! இந்த அதிரிகப்பட்ட இந்த மெட்டபாலிஸம் என்ற மாற்றம் ஆக்ஸிஜன் சத்துடன் கூடிய இந்த ஃப்ரி ரேடிக்கல்ஸ் என்றழைக்கப்படும் இந்த நுண்ணனுக்கள் (Molecules) உருவாவதால், அதுவே இந்த உரு மாற்றத்துக்கு முக்கிய காரணம் என்பதால், வகை வகையான தாவரங்களும்,உயிரினங்களும் நீரிலும், நிலத்திலும் காணமுடிகிறது!

இந்த அதிக வகையான தாவரங்கள் அதிகம் இந்த வெப்ப மண்டலத்தில் தோன்றினாலும் அதன் மொத்தம் தோன்றி உள்ள கூட்டுத்தொகை எண்ணிக்கையை பார்க்கும் பொழுது அது கம்மியாக இருக்கிறது, இதே இன தாவர வகைகளையோ, இல்லை உயிரினங்களையோ குளிர் பிரதேசத்தில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது! ஆனால் உங்களுக்கு அதே இனத்தை சேர்ந்தவைகளின் வகைகள் அதிகம் இருக்கும்! உதாரணத்துக்கு ஊர்வனவை என்று பார்க்கும் பொழுது எத்தனை வகையான பாம்புகளிலிருந்து கரப்பான், பல்லி, பூரான், தேள் என்று ஏகப்பட்டதை அடுக்கி கொண்டே போகலாம்! இந்த வெப்பத்தினால் மாற்றங்கள் ஏற்பட்டு இந்த மாலிக்கியூலர் ப்ராஸஸ் என்கிற மாற்றம் ஏற்பட்டலாம், அதை வெவ்வேறு வகை இனங்களாக உரு மாற்றும் ('Mutation') நடைப்பெறுவதால் உங்களுக்கு அந்த இனத்திலேயே பலவகையான ஜந்துக்களை பார்க்க நேரிடுகிறது! இதே இனம் குளிர் துருவ பிரதேசப்பகுதிகளில் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் இருப்பது தான், ஆனால் அந்த இனத்தில் மாறுபட்ட வகைகள் கொஞ்சம் கம்மியாக இருக்கும்!ஆக மாற்றங்களின் வேகம் கூடுவதால், வகைகளின் மாறுபாடும் அதிகம் என தெரியவருகிறது!

ஆக உருமாற்றத்திற்கு காரணம் இந்த வெப்பம், ஆதலால் இன வகைகளும் அதிகம்!

இந்த காரணத்தால் தான், இந்த குளிர் பிரதேசங்களில், பாம்பு, பல்லி, பூரான், தேள் என்று ஒன்னும் இருப்பதில்லை! ஆனா நம்ம ஊர்ல இது ஜாஸ்தி! இது விலங்குகளுக்கு ன்னு இல்லை, தாவரவகைக்கும் பொருந்தும்! அதனால தான், இதெல்லாம் அதிகம் பார்க்காம நம்மல பாம்பாட்டிங்கன்னு இவளவு நாளா சொல்லிக்கிட்டிருக்காங்க, இந்த ஊரு பசங்க, பார்த்தீங்களா? குளிர்பிரதேச உண்மைகள் இன்னும் எவ்வளவு இருக்கோ, நம்ம ஊரு ஜனத்தொகை மாதிரி இங்கே அதிகம் இல்லையே, அதுக்கும் உஷ்ணம் தான் காரணமோ-:)

Monday, June 19, 2006

துளசி காட்டுல (மழை) காத்து!!

என்ன தலைப்பை பார்த்தோன என்னடா நம்ம செடியக்கா காட்ல மழைங்கிறதை அடிச்சிட்டு காத்துன்னு எழுதிருக்கே, என்னா அதுன்னு குழப்பமா இருக்கா! அவங்க காடல தான் எப்பவும் மழையாச்சே, எந்த குறச்சலும் இல்லியே! நான் பேசபோறது தமிழ்மண துளசி இல்லை! இது வேற துளசி, அதாவது 'துளசி தண்ட்டி'ன்னு ஒருத்தரு! இவரு யாருன்னு கேட்கிறீங்களா, ஒலகமகா பணக்காரர்கள் லிஸ்ட் போட்டு இந்த 'Forbes'ன்னு ஒரு அமெரிக்க பத்திரிக்கை வெளியிடுமே, அந்த பத்திரிக்கை, போன மே மாசம் இவரை ஏழாவது மனிதனா காமிச்சிருக்கு! அதாவது ஏழாவது இந்திய பணக்காரன்னா சொல்லி இருக்குங்காங்க! இவரு அறுநூறு கோடிக்கு அதிபதி! உலகத்திலே பெரிய பணக்காரர்கள்ல லிஸ்ட்ல உள்ள இந்தியர்கள் வருசையிலே இப்ப இவரும் ஒருத்தரு! முத பணக்காரரு, லட்சுமி மித்தல், இவரு ஐரோப்பாவிலே இரும்பு காய்ச்சு உருக்கியே, பல ஆயிரம் கோடிக்கு அதிபதி, அப்பறம் நம்ம ரிலெயன்ஸ் சகோதரர்கள், முகேஷ் பையாவும், அனில் பையாவும், பிறகு விப்ரோ அதிபர், ஆஸிம் பிரேம்ஜி, இவரு கம்ப்யூட்டர், மென்பொருள், உலக சேவை, எல்லாம் விக்கிறதுக்கு முன்னே சூரிய காந்தி எண்ணெய் வியாபரம் பண்ணிக்கிட்டிருந்தார்! இவங்களோட இப்ப துளசியும் சேர்ந்திட்டாரு! சரி யாரு இவரு, என்ன பண்ணுனாரு, பெரிய பணக்காரரானாருன்னு கேட்கிறீங்களா? அதை சொல்லத்தானே இந்த பதிவு, வாங்க கீழே பார்க்கலாம்!

இந்த துளசிக்கு போன செப்டம்பர்ல அடிச்ச காத்துதான் அது! அதாவது காற்றாலைகள் பண்ணி விக்கக்கூடிய இவரு கம்பெனி, சுஷ்லான் ('SuZlon Energy') நம்ம பங்கு சந்தையிலே போடு போடுன்னு போன வருஷம் போட்டதிலே, இந்தோ தம்மாத்தூண்டு தான் பங்குக்கு வச்சிருந்த ஷேர்ங்க கொஞ்சத்தை வித்ததாலே இவரு டாப்ல போயிட்டாரு! இவரு பண்ணது நான் ஏற்கனவே சொல்லிக்கிட்டிருந்து மாற்று சக்திக்கான உபகரணங்கள் பண்ணக்கூடியது , அதுவும் சரியான நேரத்திலே, இந்த சரியான வியாபாரம் பண்ண போயி இப்ப உலகத்தில உள்ள இந்திய பணக்காரர்கள்ல இவரு ஏழாவது மனிதன்! நீங்க பங்கு சந்தையிலே விட்டு புடிக்கிற ஆளா இருந்தா, அதுவும் இந்த கம்பெனியிலே ஷேர் வாங்கி இருந்திங்கன்னா, நீங்களும் கொஞ்சம் டாப்ல போயிருப்பீங்க! (இப்ப ஏக இறக்காமாமில்ல இருக்கு, காசை எதும் இந்த ஆட்டையிலே ஜூதாடி உட்ருந்தீங்கன்னா, சாரி, ஆனா இந்த கம்பெனி ஸ்டெடியா நிக்குதுன்னு கேள்வி, விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க!) இந்த கம்பெனி பேலென்ஸ் ஷீட் ரொம்ப நல்லாவே இருக்குது! இவரு கம்பெனி உலகத்திலே அஞ்சாவது இடம்! இந்த காற்றாலைகள் மின்சாரம் செய்யக்கூடிய, 'wind turbine generators' பண்ணக்கூடிய கம்பெனி!

நான் ஏற்கனவே மாற்றுசக்தி வேணும்கிறதை பத்தி பதிவு போட்டுருக்கேன், அப்புறம் இன்னைக்கு அதிகம் விலை விக்கக் கூடிய இந்த கச்சா எண்ணெய், எரிவாய், மற்றும் நிலக்கரி போன்ற விரைவில் அழிஞ்சுப்போக்கூடிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரசக்தியால, காசும் ஜாஸ்தியாகுது, சுற்றுப்புற சூழ்நிலையும் மாசுப்படுது! ஆனா இந்த காற்றலைகளால உறபத்தி பண்ணக்கூடிய மின்சாரம் மலிவானது, சுற்றுப்புற சுழல் மாசுப்படாது!! அதுவும் இப்ப வளர்ந்து வரும் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப இந்த வகையான மாற்று சக்தி ஒரு வரப்பிரசாதம்! அதுவும் இப்ப இந்த காற்றாலைகளால உற்பத்தி பண்ணக்கூடிய மின்சாரம் 4500 மெகாவாட் தான், அதுவும் இந்தியா பலவகைகளிலும் உற்பத்தி பண்ற மொத்த மின்சாரத்தில் வெறும் 3.4 சதவீதம் தான்! அதுவே பெருகி பன்மடங்காச்சினா இன்னும் நல்லா இருக்கும்!

சரி இந்த 'wind mills', காற்றாலைகள் என்ன தெரியுமா? ராட்சத அலகுகள் ('Blades') கொண்ட காத்தாடி ! நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலே கட்டி வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பீங்க, சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்பீங்க! அது இப்ப நம் வாழ தேவையான சக்தி கொடுக்குதுன்னா பார்த்துக்கங்களே! இந்த ராட்சத காற்றாலை பண்ணைகளை நீங்க திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி போறப்ப நிறைய பார்த்திருக்கலாம்! அது காலி மைதானத்திலே இந்த நூற்றுக்கணக்கான காற்றாலைகளை நிர்மானித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது! இது மாதிரி நல்ல காத்தடிக்கும் இடங்கள்ல இதை நிர்மானிச்சா, அந்த காத்தின் விசையால் ராட்சச காத்தாடிகள் சுழண்டு அந்த காத்தாடிகளோட இணைக்கப்பட்ட கியர்களும் சுழன்று வட்டமா சுத்துற விசையை கியர் மூலம் மாத்தி அதை ஒரு பெரிய செங்குத்தான தண்டின் ('vertical shaft')வழியா அந்த விசையை கடத்தி பிறகு அந்த செங்குத்து தண்டுடன் இணைக்கப்பட்ட இன்னொரு சுத்தும் தண்டின் வழியால் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் எடுப்பதே இந்த காற்றாலை மின்சாரம்! இதுக்குன்னு நிலம் வாங்கி இதை நிர்மானிச்சு மின்சாரம் எடுக்க அரசாங்கமே செலவு செய்து! சில சமயம் தனியீட்டார்களின் முதலீடுகளாலும் இது நிர்மானிக்கப்படுகிறது! இது போன்று எடுக்கப்படும் மின்சார செலவு கம்மி, அப்புறம் நான் சொன்ன மாதிரி கழிவுகளால் உண்டாகும் மாசு எதுவும் ஏற்படுத்தவதில்லை!

இந்த காத்தாடி வந்து இன்னைக்கு வந்ததில்லை, இது ஒரு பழைய தொழில்நுட்பம்! அதாவது இதை 12ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க! அதிகமா இதன் உபயோகம் ஐரோப்பாவில் தான் முதல்ல இருந்தது, அதுவும் ஹாலந்து நாட்டில் மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகளால் இயங்கப்பட்ட கிணத்து தண்ணி எடுத்து இரைக்கும் கருவிகளால் செஞ்சாங்க, அதாவது நீர்பாசன வசதிகளில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான அங்கம்! இதை இப்ப வர்ற சினிமாவிலே, ராட்சச காற்றாலை பின்னனியிலே காட்சிகள் அமைத்து பாட்டு சுட்டுட்டு வர்றாங்க அந்த நாட்லருந்து! அந்நியன் படத்திலே வர்ற பாட்டு 'குமாரி, என் காதல் குமாரி'ன்னு, அதில் நீங்க பார்த்திருக்கலாம்! அப்பறம் இந்த இரயில்வே நெட்வொர்க் அந்த காலத்திலே அதிகரிச்சோன, நீராவி இஞ்சின்களுக்கு அங்கங்க தண்ணி இரைச்சு ஊத்த இந்த காற்றாலைகளை பயன் படுத்தினாங்க! அமெரிக்காவில , 1930க்கு முன்னே மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகள் கொண்டு தான் செஞ்சாங்க! நிறைய அந்த பழைய கெளபாய் படங்கள் பார்க்கிறப்ப, அந்த பண்ணை தோட்ட வீடுகளை காமிக்கிறப்ப இந்த காற்றாலையை காமிப்பாங்க! (இப்பவும் எல்லா வீடுகள்லயும் 'scale down verson wind mills' அழகுக்காக வச்சிருப்பாங்க, அப்படி பெரிய ஆலை வச்சிருக்கிரவங்க பெரிய பண்ணைன்னு அர்த்தம்! அந்த காலத்திலே விவசாயம் மட்டுமில்லை மக்கா சோளம் அரைக்கவும் இந்த் காற்றாலை விசையை உபயோகப்படுத்தினாங்க!) ஆனா இந்த மலிவான மின்சாரம் கிடைச்சோன இந்த காத்தாடிகள் அப்படியே செத்து போச்சு! இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழியபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டிருக்காங்க!

சரி நம்ம துளசி கதைக்கு வருவோம்! இவரு நேரா இந்த காற்றாலை உபகரணங்கள் பண்ணும் தொழிலுக்கு வந்துடலை! முதல்ல இவரு குஜராத்திலே துணி நெய்யும் ஆலைகள் வச்சிருந்தாரு, எல்லம் பவர் லூம்ஸ், ஆனா சரியா மின்சாரம் கிடைக்காம, அப்ப அப்ப வெட்டு விழுந்த தாலே, தன்னுடய மில்லுக்கு இரண்டு காற்றாலை வாங்கி அதவச்சு மின்சாரம் உற்பத்தி பண்ணி துணி நெஞ்சாரு! கடைசியிலே இதோட மகிமை பார்த்து இதையே செய்யும் தொழிலா எடுத்துக்கிட்டு செஞ்சு இன்னைக்கு ஏழாவது மனிதன் ஆயிட்டாரு! அங்க கணக்கு எப்படின்னா,ஆளுக்கு ஒரு காத்தாடி வாங்கி ஓட்டி, அதில உற்பத்தி பண்ற மின்சாரத்த எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கே வித்துட்டா, பிறகு எப்ப எப்ப வெட்டு விழுதோ, அப்ப உங்களுக்கு மட்டும் வெட்டு இல்லை! இப்படி ஒரு திட்டம் வந்த தாலே, அங்கே இருக்கிற சின்ன சின்ன கம்பெனிங்க இந்த மாதிரி ஒன்னு இரண்டு காத்தலையை நிர்மானிச்சு எலெக்ட்ரிசிட்டி உற்பத்தி பண்ணி மின்சார வாரியத்துக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டு, வெட்டு விழுவறப்ப ஜாலி மின்சாரம் வாங்கிக்கிறாங்க, இது எப்படி இருக்கு?

அப்படி அந்த காற்றாலைகள் செய்ய போய் இன்னைக்கு இவரு கம்பெனி, 'SuZlon Energy' செஞ்சுக் கொடுத்த காற்றாலகளை வச்சி மின்சாரம் உற்பத்தி பண்ற வாடிக்கையாளர்கள் 300க்கும் மேலே! இவரு இந்தியா மட்டுமில்லமா, இந்த காற்றாலைகளை வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி செய்றார். இவருக்கு உறபத்தி பண்ணி தரக்கூடிய தொழிற்சாலைகள் இங்கே அமெரிக்காவிலே, மினசோட்டாவிலே இருக்கு! அப்பறம் சைனாவிலேயும் முதலீடு பண்ணி காற்றாலை அலகுகள் செய்யும் தொழிற்சாலை வச்சிருக்கிறாரு! பிறகு பெல்ஜியத்திலே இருக்கிற கம்பெனி ஒன்னையும் விலை கொடுத்து வாங்கிட்டாரு! அது இந்த விண்ட் டர்பைன் கியர் பாக்ஸ் பண்ற கம்பெனி! இப்படி தொழில அபிவிருத்தி பண்ணி பெரியாளாயி இன்னைக்கு ஏழாவது மனிதனாயிட்டாருன்னா, கேட்கறத்துக்கு அப்படியே ஜில்ல்லுன்னு இருக்கில்ல!

இதிலே விஷேஷம் என்னான்னா, இந்த காற்றாலை வாங்கி நிர்மானிச்சா வரி விலக்கு உண்டு! அதாவது இதை வாங்கி ஒரே வருஷத்திலே இந்த முதலீடுக்கான டிப்ரிசியேசன் 80 சதவீதம், அதால வர்ற வரி விலக்கு தான் இந்த காற்றாடிகளை ஈர்க்கும் சக்தி! உலக அழகி ஐஸ்வர்யா ராய்லருந்து , சச்சின் டெண்டூல்கர் வரை தாங்க சம்பாரிக்கிறதை இந்த மாதிரி காத்திலே பறக்கவிட்டு காசு பார்க்கிறாங்க! ஆக இந்த வழியா, ஆளுக்கு ஒரு காத்தாடி விட்டாலே போதும், நம்ம பாதி மின்சாரத்தேவை பூர்த்தியாயிடும், இதுக்கு எல்லா மாநிலமும் வரி சலுகை கொடுத்து ஊக்குவிச்சா, உங்க வீட்டு பின்னாடியே மின்சாரம் தயாரிச்சு , மின்வாரியத்துக்கு வித்துடலாம், பிறகு உங்களுக்கு மின் வெட்டு இல்லாம மின்சாரம் வரும்! அப்புறம் அக்னிநட்சத்திரத்திலே, கரெண்ட் இல்லாம, உஸ் புஸ்ன்னுட்டு இருக்க வேணாம் பாருங்க!

இப்ப தெரியுதா இவருக் காட்ல ஏன் மழை, இல்லே காத்துன்னு!

Sunday, June 18, 2006

விடை தருவார் யாரோ!


நட்சத்திர வாரத்தின் அந்திமப்பொழுது! இந்த ஒரு வாரமும், வகைக்கு ஒரு விருந்து படைக்க வேண்டும் என பலவாறு இடுகைகளை இட்டேன்! அனைத்தும் முத்துக்களா இல்லை வெறும் பித்துக்களா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்! ஆனால் நீங்கள் கொடுத்த உற்சாகத்திற்கு அளவே இல்லை! ஒவ்வொரு நாளும் இனிதாகவே முடிந்தது! இது ஒரு இன்பமான வாரம் எனக்கு!

இந்த பதிவுகள் இடுவதில் பல அரிதான முயற்சிகளை மேற்கொண்டு செய்து பார்த்தேன்! அதற்கான வரவேற்பு மிக நன்றாகவே இருந்தது! ஊடகம் என்று வரும் பொழுது, இன்றைய தொழில்நுட்பம் நமக்கு கொடுத்திருக்கும் சக்திகள் அநேகம்! எல்லாவற்றையும் வெறும் எழுத்து வடிவில் படைப்பதை விட, பார்த்து மகிழ, கேட்டு சிறக்க என வழிபடைக்கும் மென்கருவிகள் இருக்கும் பொழுதும், கற்பனை சக்திகளுக்கும் அளவில்லை எனும் போது நல்ல படைப்புகள் வழங்க வழி இருக்கிறது!

இன்று எல்லாம் உள்ளங்கை அளவில்! எதை வேண்டுமானால் ஊடகமாக்கலாம்! அதுவும் இது போன்ற கிடைப்பதற்கரிய சந்தர்ப்ப தருணங்களில் உற்சாகம் பீறிடும் பொழுது வெளிவரும் படைப்புகளின் உருவங்களுக்கும் வடிவங்களுக்கும் அளவுகோல் எதுவுமில்லை!

பதிவுகள் பொதுவாக இலக்கிய சிந்தனையோடு எழுத இலக்கிய அனுபவங்கள் தான் தேவை என யார் சொன்னது! வாழ்நாளிலே நாம் கற்றவை அனைத்துமே இலக்கியங்கள் தான்! அப்படி கற்றது மட்டுமன்றி பார்ப்பது, கேட்பது, படிப்பது என எத்தனையோ விடயங்கள் நம் கண் முன்னே வந்து விழும் பொழுது படைப்புகளுக்கு என்ன பஞ்சம் வந்துவிடவா போகிறது!

தமிழ்மண உறவுகள் நீங்கள் எல்லோரும் நான் அளித்த அனைத்து விருந்தினையும் அன்புடன் ஏற்று கண்டு களித்து மகிழ்வுற்று மறுமொழியினை சமர்ப்பித்து எனை ஆனந்த தாண்டவ கூத்தாட்டம் பெற செய்தீர்கள், மிக்க நன்றி! இது போல் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து எனது எழுத்துருவங்களையும், ஒலிப்பேழைகளையும், ஆடும் பிம்பங்களையும் அழகாய் இந்த தமிழ்மண மேடைக்கு எடுத்து வருவதில் எனது அயராத முயற்சி தொடர்ந்து இருக்கும். இன்று இணைய ஊடகத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இவை அத்தனைக்கும் வழி வகுக்கும் பொழுது, படைப்பு திறைமைகளை ஏன் வெறும் எழுத்துக்குள் பூட்டி வைக்க வேண்டும்!

அடுத்து எனது கல்லூரி காலங்களுக்குப் பிறகு எனது கலைச்சேவை கொஞ்சம் மங்கி இருந்தது என்னவோ உண்மை! இப்பொழுது கிடைத்த மேடையும், பார்க்க வந்த தமிழ்மணக் கூட்டமும் கண்டு நான் அந்த காலத்திற்கு தள்ளப்படுகிறேன்! ஆதலால், இனி அந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறேன், அதுவும் புதுமையான ஒரு கூட்டு முயற்சிக்கு! தமிழ்மண நண்பர்கள் நாம் அனைவரும் இணணந்து இது போன்ற கலை முயற்சிகளில் ஏன் ஈடுபடக்கூடாது! எத்தனையோ நம் தமிழ்மண அன்பர்கள், கல்லூரி பருவம் முடிந்த பின் மூட்டை கட்டி வைத்த தம் திறமைகளை வெளிக்கொணர இது அருமையான வாய்ப்பு! நான் ஒரு திரைக்கதை எழுதி, பல காட்சிகளை விளக்கி பதிவிடுகிறேன்! அதில் யார் எந்த ஒரு காட்சியை நடிப்பதிலும், அல்லது திரைக்கதையை செம்மை படுத்துவதிலும் உங்கள் பங்களிப்பை ஏற்கலாம். பிறகு காட்சிகளை வகையாக பிரித்து, அதை விருப்பமுடையவர் தங்கள் பகுதிகளை தாங்களே ஒளிப்பதிவு செய்து வீடியோ கோப்புகளை எனக்கு அனுப்பினால் வெட்டி ஒட்டி இசை சேர்த்து, வெளியிடுகிறேன். இப்படி குறும்படம் எடுப்பதில் நாம் ஏன் கூட்டு முயற்சியில் ஈடுபடக்கூடாது? இதை 'இணைய சினிமா'('Collaborative Cinema') என அழைக்கலாமே! இந்த முயற்சிக்கு உங்கள் எண்ணங்களை தெரிவியுங்கள்!

நல்லதொரு இனிமையான வாரத்தை எனக்களித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! அது போல் எனது அத்தனை இடுகைகளுக்கும் உங்கள் சிறப்பான வருகையை தந்து எனை ஊக்குவித்த அனைத்து தமிழ்மண நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

சரி எனக்கு விடை தருவார் உண்டோ! இல்லை, 'கபி அல்விதா நா கெஹ்னா'


ஒலிப்பேழைக்கு:

Saturday, June 17, 2006

பாரதிராஜாவின் முதல் ஜந்து நட்சத்திரங்கள்!

நான் எழுதனும்னு நினைச்ச இந்த பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்களை, எனை ஆண்ட அரிதார சிறப்பு பகுதியிலே அதிகமா சொல்ல முடியாம போயிடுச்சு, வேறே ஒலி கலப்பு பண்ணி புதுசா குடுக்கலாமுன்னு நேரம் செலவழிச்சதாலே முழுசும் எழுத முடியல்லை, அதான்! இப்ப விஷயத்துக்கு வர்றேன்! முத அஞ்சு படங்கள் எல்லோரையும் கவுத்து போட்டது, ஒவ்வொன்னும் பத்தியும் நினச்சு பார்க்கும் போது, அப்படியே நான் ஒரு பதினைஞ்சு வருஷம் கம்மியான மாதிரி! அதாவது நான் வாலிபத்தின் தொடக்கத்தில இருந்த நேரம்! பாரதிராஜாவும் எங்களுக்கே வேண்டிய காதல் கதைகளை தமிழ் நாட்டு மணம் கமிழ சொல்லி, அங்கங்க ஐதீகம், கிராமபஞ்சாயத்து, அப்படின்னு சொல்லி வந்த படங்கள். என்னா ஒரு குறைன்னா, நம்ம பிரகாஷ் சொன்ன மாதிரி கிராமத்து தேவதைகள் எல்லாருமே பவுடர் பூசின சுந்திரிகள்! அதான் கதாநாயகிகளை மட்டும் கொஞ்சம் இயற்கையா காமிச்சிருந்தாருன்னா நல்லா இருக்கும்! ஆனா அப்படி காமிச்சா கதைக்கு நல்லா இருக்கலாம், யாரு அவங்களை பார்க்கிறது-:) சரி அந்த ஐந்து படங்களையும் பார்ப்போம்!

16 வயதினிலே: நான் எற்கனவே சொன்ன மாதிரி, இது முதப்படம், கிராம மணம் கமிழ வந்தப்படம். அப்ப கமல்,ரஜினி எல்லாம் லீட் ஆக்டருங்க கிடையாது, சட்டையை வேட்டியை கழட்டிப்போட்டுட்டு கோமணத்தோட நடிக்க யாரும் முன் வராத காலம்! அதுவும் வாய் நிறைய பொகையிலையே மென்னுக்கிட்டு! ஸ்ரீதேவியை பத்தி நிறைய சொல்லிட்டேன், இந்தபடம் வந்தப்ப நான் எஸ் எஸ் எல் சி படிச்சி முடிச்சி ஷேஷஷாயி இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்த நேரம்! மலேசியா வாசுதேவன் குரல் எனக்கு கப்புன்னு புடிச்சிருந்தது, அது வரைக்கும் இந்த உச்சாயிலேயே பாடி அலுப்பு அடைய வச்சிருந்த டிஎம்ஸ் க்கு சமமா பளீர்னு பாடிய பாடகர், புதுசா வந்திருந்த நேரம்! எனக்கு அவரை குரலை கேட்டமாத்திரத்திலே புடிச்சிப்போச்சு!
இந்த படத்திலே பாக்யராஜ் நடிச்சிருக்காரு உங்களுக்கு எல்லாம் தெரியுமா? ஸ்ரீதேவிக்கு ஒரு தடவை மேலுக்கு சரியில்லைன்னு கமல் ஒரு வைத்தியரை கூட்டிட்டு வருவாரு தெரியுமா, அவரு தான்! தலையிலே சாக்கை போட்டுக்கிட்டு ஸ்ரீதேவிக்கு வைத்தியம் பண்ண வருவாரு! அதுல கமலஹாசனை என்ன புரியதோ, எழவோ, கேனப்பயலேன்னு திட்டு வாரு! அடையளம் கண்டு கொள்ள முடிஞ்சதா உங்களாலே!

கிழக்கே போகும் ரயில்: இது நான் இஞ்சினியரிங் போய் சேர்ந்த வருஷம் வந்த படம்! பாரதிராஜாவோட முதப்படத்தின் வெற்றியாலே அதே கோஷ்டி, பன்னாரி அம்மன் மூவிஸ், புதுசா நடிக்க வந்த சுதாகர், ராதிகா ஜோடி! இந்த படம் மெட்ராஸ்ல ஒரு வருஷத்துக்கு மேலே ஓடுனச்சு! இந்த படத்திலே அதிகமா பேசப்பட்டது இரண்டு ஒன்னு கவுண்டமணி, இன்னொன்னு அந்த ஐதீகம்! நான் கவுண்டமணி வசனத்தை மிமிக்கிரி பண்ணி பேசனதை தான் எழுதி இருந்தேன்னா! ஒன்னு தெரியுமா படத்திலே நடிச்ச நடிகைகளை விட சுதாகர் ரொம்ப அழகு! ஒரு மாதிரி தமிழை கடிச்சி கடிச்சி பேசின ராதிகவா இப்ப சித்தியிலே இந்த போடு போடுதுன்னு ஆச்சிரியப்பட்டது உண்டு! ஒரு நடிகையின் பரிணாம வளர்ச்சி எப்படிங்கிறதுக்கு ராதிகா ஒரு நல்ல உதாரணம்! அதே மாதிரி கட்டையா, எதோ எம் ஆர் ராதா பொண்ணுன்னுங்கிற தகுதியோட நுழைஞ்சுது தான் அந்த படத்தில! எனக்கு ராதிகாவை விட சிம்பு அம்மாவை புடிச்சிருந்து அந்த படத்திலே! ஒரு முறை டில்லியிலே மோனலிஷா ன்னு ஒரு பட ஷீட்டிங்ல பார்த்திருக்கேன், பெருத்த யானை மாதிரிய இருந்திச்சு, சிம்பு மோர் குடுக்க குடிச்சிக்கிட்டு தனியா தூரத்திலே உட்கார்ந்து இருந்த உஷாவை அப்ப கடலை போட்டுட்டு வந்தேன்! நான் சின்ன வயசிலே ரசிச்ச அம்முனி இல்லை! இந்த படத்திலேயும் பாக்கியராஜ் நடிச்சிருக்காரு! அவரு ஒரு ஜோக்கும் அடிப்பாரு, ஒரு தடவை ஆத்திலே குளிக்கிறப்ப, ஒருத்தர் கூப்பிடுவாரு சினிமா பாக்க வர்றியா, இவரு சினிமா பார்த்த அனுபவத்தை சொல்லுவாரு! அது மட்டுமில்லை இந்த படத்துக்கு அவர் வசன உதவிகர்த்தா! இந்த படப்பாடல்கள் எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு, இதில வர்ற ஜெயச்சந்திரனோட 'மாஞ்சோலை கிளிதானோ' பாட்டு கிளாஸ்!

சிகப்பு ரோஜாக்கள்: இரண்டு படம் கிராமத்து வச்சு கதை எடுத்தோன, அவருக்கு கிராமத்து கதை தான் எடுக்கத் தெரியும், அது தான் வெற்றி படங்களா கொடுப்பாருன்னு சொன்னேன்ன இந்த கதையை எடுத்ததா எல்லாரும் சொல்வாங்க! ஆனா இது பாரதிராஜாவின் இன்னொரு கதை, 16 வயதினிலேக்கு அப்புறம் இது அவருடய கதை! இதுக்கு வசனம் பாக்யராஜ். பாக்யராஜை முன்னமே இரண்டு படத்தில நடிச்சிருந்தாலும் அவரை நடிகரா கண்டு கொண்டது இந்தப்படம் தான். ஏன்னா வடிவுக்கரசியொட கமல் ரெஸ்டாரெண்ட் வரும் போது அதை பார்த்த தாலே, ஒன்னுக்கு போற இடத்திலே இவரை எத்தி கொள்ளூவாரு, அது ஒரு முக்கியமான கேரெக்டர், அதனால மக்கள் இவரை இனம் கண்டுக்கிட்டாங்க! இதிலே கடைசியிலே ஸ்ரீதேவியை சுடுகாட்ல துரத்திக்கிட்டு வர்ற சீன்னு ரொம்ப பிரமாதம், அப்ப ராஜா ரீரெக்காடிங்களை அசத்தி இருப்பாரு! இந்த படம் வந்தப்ப நாங்க முதல் செமஸ்டருக்கு பரீச்சைக்கு படிக்கிறோம் பேர்வழின்னு ராத்திரி முழுக்க சீட்டு விளையாடி கழிச்ச பொழுதுகள் ஞாபகம் வருது! இந்த படத்துக்கு அப்ப கோயம்புத்தூர்ல கர்னாடிக் தியோட்டருக்கு கும்பலா போய் பார்த்த அனுபவம் தனி! இப்பவும் கமலஹாசன் பாடின பாட்டை கேட்டா எனக்கு அந்த ஹாஸ்டல்ல கழிச்ச நாட்கள் தான் ஞாபகம் வருது!

புதிய வார்ப்புகள்: இந்த படம் ஒரு கிளாஸ்! பாரதிராஜா கல்லு, மண்ணை நடிக்கவச்சாலும் படம் ஓடும்னு பேரு வாங்கிகொடுத்தப்படம்! இதில பாரதிராஜாவுக்கே உரித்தான அந்த 'R' லாஜிக்ல ரத்தி அப்படினு பேரு வச்சு புது அரிமுகம் ஆனது! அந்தம்மா முழுப்பேரு ரத்தி அக்னிஹோத்திரி! இந்த அக்னி எல்லாம் தமிழ்நாட்டுக்கு சரிப்பட்டு வர்றாதுன்னு சுருக்கி ரத்தி ஆக்கினாரு! பாக்யராஜ்ஜும் கதாநாயகனா நடிச்சு வந்தது! இதிலெ ரொம்ப ஹைலைட் கவுண்டமணியும் சீனிவாசனும்! சீனிவாசன் பெரிய பண்ணை, கிராமத்துல இருக்கிற பொண்ணுங்களை தேத்துறது தான் ஜோலி! அவரு புள்ளளயா ஜனகராஜ், இவரை நான் பாரதிராஜ, அவரு பட பாட்டு ரெக்கார்டிங்ல பார்த்திருக்கேன்! அப்புறம் இன்னொருத்தரு சந்திரசேகர், 'மாமா, மாமா, சாணியை மிதிச்சுட்டேன்னு' நொண்டி நொண்டி வசனம் பேசிட்டு வருவாரு! அப்புறம், எல்லா பாரதி ராஜா படத்துக்கும் உண்டான அந்த பொண்ணு எடுக்க வர்றவங்களை போட்டு குடுத்து கலைச்சு ஓடவைக்கிற டெக்னிக் நல்ல டெக்னிக்! கே கே செளந்தர் இதிலே நாயணம் வாசிக்கவரா வந்து நல்லா நடிச்சிருப்பாரு! அப்புறம் அந்த கிராமத்துக்கே உண்டான கேலி, நக்கலா பேசறதை நல்லா எடுத்திருப்பாங்க. ஒரு தடவை உண்டியல் குழுக்கிட்டு வர்ற கும்பல், பாக்யராஜ்ஜை, சமூக சேவகி வீட்ல பார்த்தோன, 'அய்யா சாப்பிட்டீங்களா, சாப்பிட்ருப்பீங்க, ம்..வடபாயசத்தோட சாப்பிட்டுருப்பீங்கன்னு அங்க உஷாவை பார்த்து கண்ணு சிமிட்டி கிண்டலா சொல்லிட்டு போற வசனத்தை நான் மிமிக்கிரி பண்ணி அந்த சீன்களை சொல்லி மோனோ ஆக்டிங் பண்ணற்தை ரசிச்ச மக்கள் நிறைய உண்டு! அப்புறம் கவுண்டமணியோட 'கனெக்ஷன் கொடுத்திருவோம்'ங்கிற வசனமும் ரொம்ப பேமஸ்! அப்பறம் இந்த படத்திலே ஒரு கூத்துப்பாட்டு இருக்கு, 'வாயிலே வந்தப்படி, வாயில்ல வந்தபடி, நான் படிக்கப்போறேன் பாட்டு'ன்னு, அது செம் ரகளையா இருக்கும், அதுலே கூத்து பாட்டுகள் வர வசனங்கள், பாட்டுகளோட நக்கல வர்ற்து நல்லா இருக்கும், சாம்பிளுக்கு, 'அண்ணே அண்ணே', 'என்னடா முக்காபடி வெண்ணே', 'அக்காவை கட்டிக்கிட்டா தப்பில்ல', அதுக்கு இன்னொரு கூத்தாடுறவரு, 'கட்டிக்கிட்டா தாண்டா தப்பு, வச்சிக்கிட்டா' அப்படின்னு முடியும் பாட்டு! இந்த பாட்டை தேடி பார்த்தேன், கிடைக்கல, யாருக்கிட்டயாவது இருந்தா மயில்ல அனுப்பி வைங்க!

நிறம் மாறத பூக்கள்: இது முத நாலு படத்தில நடிச்ச வெற்றி புது முகங்களை போட்டு எடுத்தது! விஜயன், ரத்தி, சுதாகர், ராதிகா நடிச்சது! அவ்வளவா மிகப்பெரிய வெற்றி இல்லை, ஆனா சுமாரும் இல்லை, பாலுமகேந்திரா மாதிரி அழகா நிவாஸ் ஊட்டியை காமிச்சப்படம். இதில ஹைலைட் பாரதிராஜா வோட கணீர் குரல் விஜயனுக்கு டப்பிங்! காதல்ல பிரியும் ஜோடி, அப்படி காதலியே எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவனால, ஏதோ சந்தர்ப்பத்திலே பிரிஞ்சவங்களை சேர்த்து வைக்கிறது! பாரதிராஜாங்கிற பெரிய மேஜிக் மாதிரி கதை சொல்ல பாலுமகேந்திராவும், மகேந்திரனும் வந்திட்டாங்க இந்தப்படம் வந்தப்பெல்லாம். இருந்தாலும் இது மறக்க முடியாத ஒரு படம். இதுலெ ஜென்சி பாடின பாட்டு அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம்! ராதிகா கிட்ட அப்படி ஒன்னும் முன்னேற்றம் இருந்திடலை, ரத்தியும் சுமார். ஆனா ஒரு காமக்கிழவி இதில சூப்பரா நடிச்சிருக்கும்! வயசான கிழவங்க தான் காமம் பிடிச்சு நிறைய வர்ற மாதிரி இருக்கும், ஆனா இதிலே புதுசா இப்படி! நாங்களும் பிரான்ச் எடுத்து சீரியஸா படிக்கனுமே காலேஜ்ல படிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! ஆனாலும் இந்தப்பட ராஜா பாட்டுக்களை சத்தமா ஹாஸ்டல் முழுக்க போட்டுகிட்டு கூத்தடிச்ச நாட்கள் அதிகம்!

இப்படி பாரதிராஜா படங்கள் அந்த நேரத்திலே அதிகம் தாக்கத்தோட இருந்த ஒன்னு, அதற்கப்புறமும் கல்லுக்குள் ஈரம் படத்தில அவரு நடிச்சு வந்தாலும் பெரிசா ஓடலை,அவருக்கூட இருந்த பாக்யராஜ், செல்வராஜ் எல்லாம் தனியா போய் படம் எடுக்க ஆரம்பிச்சதாலே, கொஞ்சம் தொய்வு! அதுக்குள்ள மணிவண்ணன் அவருக்கூட சேர்ந்து நிழல்கள் எடுக்க ஆரம்பிச்சு, அலைகள் ஓய்வதில்லையிலே உச்சத்திலே போனாங்க! அதல்லாம் வெற்றி படங்களா இருந்தாலும் என் மனசை பாதிக்கலை! கொஞ்சம் வளர்ந்திட்டேனோ என்னவோ! அவரு தொடர்ந்து சாகசங்கள் செஞ்சாலும் இந்த அஞ்சு முத நட்சத்திரங்கள் என்னால மறக்க முடியாத ஒன்னு, நீங்களும் அந்த காலகட்டத்தை கடந்து வந்தவங்கன்னா உங்க நினைவுகளை அசை போடுங்க! இல்லை இன்னெக்கு வழி வழியா சேரன் வரை வந்த நல்ல டைரக்டர்கள் செயின் ஆரம்பிச்சது பாரதிராஜாவிலிருந்து தான்! அப்படி இடைப்பட்ட காலத்தில உங்களுக்கு புடிச்ச டைரக்டருங்க சொல்லியிருந்திருப்பாங்க பாரதிராஜா பத்தி, ஆக பாட்டையும் என பேச்சையும் இந்த பதிவிலே கேளுங்க!

மேலே நான் எம்பெட் பண்ணின பாட்டுகள் உங்களுக்கு சரியா கேட்க முடியவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியை கிளிக்கு கேட்கவும் , இதை வெளிகண்ட நாதர் தொகுத்த வழங்கிய தேன்கிண்ணம் மாதிரி வச்சுக்கங்க.
இதை குணா படத்தில வர பாட்டு ஸ்டைல் படிங்க
"மறக்காம எல்லா பாட்டையும் கேட்கணும், ம்.. அப்புறம் எல்லா பாட்டுக்கும் உங்க கருத்த எழுதனும்,ம்.. சொத்தை ஜொள்ளைன்னு போட்டுக்கணும், ம்.. அதையும் போட்டுக்கனுமா??? -:)))"

16 வயதினிலே

கிழக்கே போகும் ரயில்

சிகப்பு ரோஜாக்கள்

புதிய வார்ப்புகள்

நிறம் மாறாத பூக்கள்

Friday, June 16, 2006

சாப்பாட்டு ராமன்!

இந்த பேருல அந்த காலத்திலே ஒரு படம் சிவாஜி நடிச்சு வர வேண்டி இருந்துச்சு, அப்புறம் அந்த படத்தோட பேரு அப்படி வச்சா எல்லாரும் சிவாஜியை சாப்பாட்டு ராமன்னு கூப்டுவாங்கன்னு, அதை மாத்திட்டாங்க, என்ன பேரு வச்சாங்கங்கிறதை உங்க பின்னோட்டத்திலே எழுதுங்க! யாரு முதல்ல எழுதுறாங்கன்னு பார்க்கலாம்! என்ன கொஞ்சம் குளு சொல்றேன், இதிலே கே ஆர் விஜயா, முத்துராமன் நடிச்சிருந்தாங்க! கிராமத்திலே இருந்து பட்டணம் போய் சிவாஜி நடிச்சி, சிவாஜியாவே, பெரிய நடிகரா வருவாரு! இப்ப சொல்லுங்க பார்க்கலாம். சரி விஷயத்துக்கு வர்றேன்! இந்த சாப்பாட்டு விஷயத்திலே, நம்ம எல்லாருமே கொஞ்சம் சாப்பாட்டு ராமன்கள் தான்! நான் பல இடங்களுக்கு போனதால பல தரப்பட்ட சாப்பாடு, அப்புறம் சாப்பாட்டுக்குன்னு அலைஞ்ச கதைன்னு நிறையவே இருக்கு, சரி சாப்பாட்டையும், அப்படி அலைஞ்ச கதையும் எழுதுவோமேன்னு தான் இந்த பதிவு!

ஆரம்பத்திலே, சின்ன வயசிலே, ஓட்டல்னு போனா விரும்பி சாப்பிடுவது, ரவா தோசை! அப்புறம் ஓட்டல்னு பார்த்தா, நான் சின்ன வயசிலே அதிகம் போனது பாலக்கரை பவானி, மற்றும் சுந்தரமய்யர் ஓட்டல்கள் தான். இது அந்த ஏரியாவுக்கு ரொம்ப பேமஸ்! அதிலேயும் சுந்திரமய்யர் ஓட்டல் ரவா தோசை எப்பவும் நான் விரும்பி சாப்பிடுவது! இது பாலக்கரையிலே சுத்தினப்ப, கொஞ்சம் வளர்ந்து திருச்சி மெயின்கார்டுகேட், ஜங்ஷன் எல்லாம் போக ஆரம்பிச்சப்ப, காஞ்சனா, தேவி இதெல்லாம்! அதுவும் இந்த ரவா தோசை திங்க ஆசைப்பட்டு ஒவ்வொரு மாசமும் கிருத்திகைக்கு கோயிலுக்கு என் தந்தையோடு போவேன்! இது சைவம். அசைவம்னு பார்த்தா, பாலக்கரையிலே இருக்கிற ஆறுமுகம் ஓட்டல் ரொம்ப பேமஸ்! தீபாவளிக்கு தீபாவளி அந்த விஷேஷ நாட்கள்ல, வான்கோழி பிரியாணி போடுவாங்க!, அதான் டர்க்கி, அமெரிக்காவிலே வந்து தேங்ஸ்கிவ்விங் டேக்கு சாப்டறதுக்கு முன்னேயே அதை நம்ம ஊர்ல வச்சி சாப்பிட்டாச்சு, அதுவும் அப்புறம் முட்டைக்குள்ள குஸ்கா, சால்னா, இதெல்லாம், ரொம்ப விரும்பி சாப்பிடுவது! புரோட்டா, தோசைன்னு வந்திட்டா தோசை தான் பிடிக்கும் நமக்கு, ஆனா சில பேருக்கு புரோட்டா சால்னா தான் புடிச்சது, அதுக்குன்னு போற ஆளுங்க நிறையவே!

அப்பறம் கோயம்புத்தூர் வந்தா, மரவள்ளி கிழங்கு சிப்ஸ், டீ, இது காலேஜ் படிக்கிறப்ப தினம் சாப்பிட போறதுண்டு. அப்புறம் எங்க காலேஜ் மெஸ், இப்பவும் எனக்கு என்வி மெஸ் மெனு ஞாபகம் இருக்கு! பொதுவா காலையிலே பிரட், இல்லை ஊத்தப்பம் கிடைக்கும், மத்தியானம் சாம்பார், ரசம் மோர் எல்லாம். ஆனா சாய்ந்திரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னு! திங்க கிழமை கீரைஸ், கோழி வருவல், செவ்வாய், இட்லி, மட்டன் குழம்பு, புதன், வெரைட்டி ரைஸ், கோழி வருவல், வியாழன், முட்டை குழம்பு, காரரசம், சாதம், சிப்ஸ் வெள்ளி,பாசிபருப்பு சாம்பாரு, தக்காளி ரசம், மட்டன் வருவல், சனிக்கிழமை வெரைட்டி ரைஸ், இல்ல கீரைஸ், சிப்ஸ், கோழி வருவல், ஞாயித்துக்கிழமை வெறும் ஊத்தப்பம், மத்தியானம் கோழி பிரியாணி, அப்பா ஒரு வழியா சாப்பிட்ட அத்தனையும் சொல்லிட்டேன்!

அப்பறம் தமிழ்நாடு முழுக்க, மொத்ததிலே எல்லா ஓட்டலுங்களும் காலையிலே பதினோரு மணிக்கே 'சாப்பாடு தாயார்' ன்னு சாக்பீஸ்லேயோ, இல்லெ பெயிண்ட்ல எழுதின போர்டு வெளியிலே மாட்டிடு வாங்க, அந்த மாதிரி பெரிய நகரங்கள்லருந்து சின்ன ஊருங்க வரை இது உண்டு! அளவு சாப்பாடு எப்பவும் நமக்கு கட்டுபிடியாகாது, அதனால 'ஃபுல் மீல்ஸ்' எந்த ஓட்டல்ல போடுறான்னு தேடி கண்டுபிடிச்சி சாப்டறதுண்டு, இந்த மெட்ராஸ்ல பாரிஸ் கார்னர், 'மிண்ட்'(அதான் தங்கசாலை, பஸ் எல்லாம் இந்த பேருலதான் ஓடும், ஆனா மக்கள் பேர் சொல்லி அழைப்பது 'மிண்ட்' தான், மெட்ராஸ்ல முக்காவாசி, தமிழாக்கம், திமுக அப்ப எவ்வளவு முயற்சி பண்ணாலும் மக்கள் இங்கிலிபீஸ்ல தான் சொல்லுவாங்க, பேச்சு தமிழ்ல 'மெளண்ட் ரோடை' இன்னும் அப்படி தான் கூப்பிடறாங்க, அண்ணா சாலைன்னு அதிகமா சொல்றதே கிடையாது, இப்ப அப்படியே தானா, இல்ல மாறி போச்சா, சென்னை வாழ் பதிவர்கள் இது பற்றி பின்னோட்டம் போடுங்க) இங்க எல்லாம் இந்த முழு சோறு போடற போஜன சாலைங்க நிறைய உண்டு!

அடுத்து அந்த காலத்திலே மெட்ராஸ்னு எடுத்துக்கிட்டா சைவத்திலே பேம்ஸ்ஸா, அந்த அந்த ஏரியாக்கு ஒரு ஓட்டலுங்க இருக்கும், ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சு எல்லாஇடத்துக்கும் பொதுவானா, பாரீஸ் கார்னர்ல இருந்த ராம்கிருஷ்ணா ஓட்டல், அப்ப சரவண பவன் எல்லாம் வராத நேரம்!(இப்ப ஓட்டல் முதலாளிக் கதை என்னாச்சு? தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க, பின்னோட்டம் கொடுங்க, இல்லைன்னா தொடர் பதிவு போடுங்க சுவாரசியமா இன்னொரு தடவை படிக்கலாம்!) அதுல்ல போடற பாசந்தி ரொம்ப பேமஸ்! அப்புறம் புகாரியிலே பிரியாணி, முட்டை புரோட்டா, இது அசைவம்! அப்பறம் எல்லா ஊருக்கும் இருக்கிற நம்ம முனியாண்டி விலாஸ் செயின் எல்லாருக்கும் தெரிஞ்சது தானே! மெக்டனால்டு அந்த காலகட்டங்கள்ல ஆரம்பிச்சவங்க தான், நம்ம உடுப்பி, முனியாண்டி எல்லாம் அப்படி தான், ஆனா பிராண்டு நேம்மை காசு பண்ண தெரியலை பாருங்க நம்மலால! நான் மெட்ராஸ்ல படிச்ச காலத்திலே கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்லே போடற தயிர் சாதமும், ரவா தோசையும் புடிக்கும்! நான் சேர்ந்த மெஸ்ல சீக்கிரம் தீர்ந்திடும், எப்போதும் லேடீஸ் ஹாஸ்டல் தயிர் சாதம் தான் எனக்கு எப்பவும் கிடைக்கும், ஏன்னா நான் எப்பவும் லேட்டா மெஸ்ஸுக்கு போறதாலே, லேடீஸ் ஹாஸ்டல் இருந்து எது கிடைச்சிதோ, இல்லையோ, ஆனா தயிர்சாதம் கிடைச்சிது எனக்கு-:)

அப்பறம் பாம்பேலன்னு பார்த்தா, செம்பூர் பக்கம் அதிகம் நம்ம ஊரு ஓட்டலுங்க இருக்கு, அதனாலே கவலையில்லே! நான் தங்கி இருந்தது அப்ப அணுசக்தி நகர்லே, ஆக சாப்பிட செம்பூருக்கு போய் வருவோம்! பாம்பே பாவு பாஜி ரோட்டு கடைங்க ரொம்ப பேமஸ், ராத்திரி எத்தனை மணி ஆனாலும் சாப்பிட கிடைக்கும்! பேச்சலரா காலம் கழிச்சப்ப, ராத்திரி ஒன்னும் சாப்பிடாம சினிமா போயிட்டு நடுராத்திரி இந்த மாதிரி பாவு பாஜி தின்னுட்டு வூடு வந்த நாட்கள் அதிகம்! வட இந்தியாவுக்குன்னு போக ஆரம்பிச்சிட்டீங்கன்னா, சரியா சொல்லலுனும்னா, விந்திய சாத்பூர மலைத்தொடர் வரை கவலையில்லை, அதுவும் நீங்க வெறும் சோறு திங்கற ஆளா இருந்தா, அதை தாண்டினீங்க, நம்ம ஊரு சோறு கிடைக்காது, அப்பறம் எல்லாமே கோதுமை, கடுகு எண்ணெய் தான்! பழகாத ஆளா இருந்தா முத பத்து நாளைக்கு வவுத்திலே ஒன்னும் இறங்காது! ஆனா இன்னும் கொஞ்சம் வடக்க வந்தா பஞ்சாபி கானான்னு சுத்தமான தேசி கீ ன்னு எல்லாம் நெய்ல செஞ்சது ! அதுவும் டில்லி எருமை பால்ல இருந்து எடுத்த நெய்! ஆரம்பத்திலே மூக்கிலே புடிக்க கஷ்டம், பழகிட்டா பஞ்சாமிர்தமா இருக்கும்!

அது மாதிரி ரோடு கடைகளை இவெங்க தாபான்னு கூப்பிடுவாங்க! வட இந்தியாவின் பல பகுதிகள் போய் வந்தவங்கிர முறையிலே, இந்த தாபாக்கள் எனக்கு ரொம்ப பரிச்சயம்! காலையிலே இட்லி, தோசை, இல்லே பொங்கல் வடைன்னு நீங்க தேடினீங்கன்னா ஒன்னும் கிடைக்காது! நம்ம ஊர்லருந்து தாஜ்மஹால் சுத்தி பார்க்க வர்றேன்னு வர்ற ஜனம் தவிச்சிடும். வீட்டை வுட்டு வெளியே வந்தா வாயை கட்டி போடணும்னு அறிவுரை சொல்ற நம்ம ஊரு பெருசுங்க, சில சம்யம் ப்ச்.. கொட்டிக்கிட்டு, என்ன இருந்தாலும் நம்ம ஊரு சாப்பாடு வரும்மா, எல்லாம் சப்னு இருக்கும்னு முதல்ல அதுங்க தான் பாட்டு படிக்கும்! ஆனா நீங்க இந்த வடக்கிந்திய உணவு வகைகளை சரியா சாப்பிட கத்துக்கிட்டீங்கன்னா, அப்புறம் அதுவே சொர்க்கமா இருக்கும்!

காலையிலே பொதுவா இந்த ஊர்ல, புரோட்டா, தயிர், ஊறுகாய், காரியம் முடிச்சிடுவாங்க! சில தாபாக் கடைகள்ல இந்த புரோட்டாவும் தயிரும் தான்! தயிர்ல மிளகாய் பொடியை தூவி உப்பை போட்டு சாப்டுங்க, அப்படியே அமிர்தமா இருக்கும்! மத்த படி தந்தூரி ரொட்டி, காய்கறிகள்! சாப்பிட முதல்ல கஷ்டம் தான்! போகப்போக பழகிடும்! நம்ம ஊரு சாம்பாரு, தோசைன்னு இங்கே கிடைப்பதெல்லாம் கடலை மாவு கலப்படம். ஆக சுத்தி பார்க்க போனால் தென்னிந்திய உணவகம்னு எதையாவது தேடி போய் சாப்பிடுவதை விட சப்பாத்தியும் ரொட்டியும் சாப்பிட பழகிக்கங்க! வீணா கடலை மாவு தோசை சாப்பிடத்தேவையில்லை!

டில்லியிலே இருந்தவரைக்கும் நாங்க சாப்பாட்டை அனுபவிச்சு எல்லா ஓட்டல்கள்ளயும் சாப்பிட்டு இருக்கோம். அப்ப கரோல்பாக்ல இருந்த ராமானுஜம் ஓட்டல், நம்ம ஊரு இட்லி, வடை தோசை கிடைக்கும்! இதபத்தி ஒரு தடவை ஆனந்த விகடன்ல வந்திச்சு! இந்த ஓட்டல் நடத்தினவங்க 1950 களில் டில்லி போனவங்க, அப்ப ஊருக்கு ஒதுக்குப்புறம்னு இருந்த கரோல்பாக் இப்ப டெல்லி செண்டர், அதாலே இன்னும் எத்தனை நாளைக்க்கு வெறும் தோசை சுட்டு குடுக்கிரதுன்னு எல்லாம் ரூமு கட்டி போட்டு லாட்ஜாக்கிட்டாங்க, வருமானம் அதிலே ஜாஸ்தி! அப்புறம் 'சாகர் ரத்னா'ன்னு இது ஒரு செயின் டில்லி புறநகர் எல்லா இடத்திலேயும் இருக்கு! நாங்க இருந்த வீட்டு பக்கமும் இருக்கு! பாதி வீட்ல மீதி ஓட்ல்லன்னு சனிக்கிழமைகளிலே வீட்ல வெண்பொங்கல் போட்டா சாம்பார் செய்ய சோம்பேறி பட்டுகிட்டு போய் வடையும் சாம்பாரும் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு கழிச்ச சனிக்கிழமைகள் அதிகம்!

பெரும்பாலும், மதியம் சாப்பிட 'ஆந்திர பவன்' என்ற ஆந்திரா ஸ்டேட் ஹவுஸ்ல இருக்கும் கேண்டினுக்கு போய் சாப்பிட்டு வருவது வழக்கம்! பருப்பு பொடி கோங்கரா ஊறுகாய் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்னு! அது போல வழக்கமா ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையிலும், எதவாது மல்டிபிளக்ஸ்ல சினிமா பார்த்திட்டு சாய்ந்திரம் 'நார்த் இண்டியன் கானா' அப்படின்னு சாப்பிட்டுட்டு வருவது மிகவும் பிடித்த ஒன்று!

வட இந்திய உணவுகள் அப்படின்னா, நொறுக்கு தீனியிலிருந்து ஆரம்பிக்கனும், டிக்கி, இது உருளைக்கிழங்கு மசிய வச்சி எண்ணெய்ல வாட்டி எடுப்பது! அப்பறம் கோல் கப்பே, அப்டீன்னா, பாணி பூரின்னு சாப்பிடுவோமே மெட்ராஸ்ல அது தான், இது மாதிரி நிறைய அயிட்டம் இருக்கு! நீங்க நார்த் இண்டியன் கல்யாணம் எதுக்கும் போனீங்கன்னா, நம்ம ஊரு மாதிரி முதல்ல சாப்பாட்டை போடமாட்டாங்க, இது மாதிரி நொறுக்குத் தீனி, அப்பறம் சாப்பாடு!

அப்புறம் கல்யாண சாப்பாடு தனி தான், என்ன தான் ஓட்டல்கள்ல சாப்பிட்டாலும், இந்த கல்யாணத்திலே போடற சாப்பாடு மாதிரி வராது! கல்யாணத்துக்குன்னு எப்படி தான் தனியா சமைப்பாங்களோ! ஒரு தடவை செல்வராகவன் இண்டர்வியூ கேட்டப்ப, நீங்க எப்ப சோனியா அகர்வாலை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்னு கேட்டதுக்கு, எனக்கும் கல்யாணத்தில எல்லாம் ஆசை இருக்கு, எது இருக்கோ இல்லையோ, கல்யாணத்திலே நல்லா சாப்பாடு போடறாங்கன்னு சொல்லி பேட்டியை படிச்சேன்! அது மாதிரி நம்ம தமிழ்நாட்ல கல்யாண விருந்து சாப்பிடறது தனி தான் போங்க!

இப்படி எல்லாம் இருந்துட்டு வெளி நாடு போய், நம்ம சாப்பாட்டுக்குன்னு அலைஞ்ச கதை உண்டு! சிங்கப்பூர்ல இருந்த அஞ்சு நாளும் 'கோமள விலாஸ்'ல சாப்பிட்டு ஒரு உன்னதம் அடைஞ்சோம்! இதிலே ஒரு கூத்து என்னான்னா, இங்கே அமெரிக்கா வந்து கோமள விலாஸ் தேடி அலைஞ்ச கதை உண்டு! ஒரு தடவை, சான்ஃபிரான்ஸிஸ்கோ போறப்ப சேன் ஜோன்ஸ்ல இருக்கிற கோமள விலாஸை தேடி கண்டுபிடிச்சு சாப்பிட்டுட்டு வந்தோம். அப்புறம் நியூயார்க், கேட்கவே வேணாம், சரவண பவன்ல இருந்து , அத்தனை ஓட்டலும் போய் சாப்பிட்டு வந்தோம்!

இது ஒரு பக்கம்னா, இந்த ஊரு, 'கிளைம் ஜம்பர்'லருந்து, 'ஐ ஹாப்' வரைக்கும் அத்தனை செயினும் போய் சாப்பிட்டாச்சு! இந்த மெக்ஸிகோ உணவுகளை என் பொண்ணு ரொம்ப டீசண்டா 'லோஃபர் ப்ரட்ம்பா'! இத்தாலியன் பாச்ட்டாலருந்து பான் கேக்கு வரைக்கும் எல்லாமே சீஸ்! ஆக, அந்தந்த ஊருக்கு போய் அந்த அந்த உணவு சாப்பிட பழகிகிட்டா வம்பில்லை! ஆனா எல்லாமே மனுசன் சாப்பிடறது தான், அது பாருங்க எப்படி நாக்குக்கு நாக்கு ருசியாகுதுன்னு! இப்ப தான் என் சம்சாரம் இந்த 'ரேச்சல் ரே' தயாரிக்கும் இந்த ஊரு உணவு முறைகளை டீவியில பார்த்து செய்ய கத்துக்கிட்டிருங்காங்க! இன்னும் கொஞ்ச நாள்ல அந்த உணவுகள்ல என்னா, எப்படின்னு சாப்பிட்டுட்டு பார்த்து விட்டு பதிவு போடறேன்!

ராஜாக்கா பாவா!

"குமாரு, ராஜாக்கா எண்ணெய்யை ஊத்தி கொளுத்திக்கிட்டு வெந்து போயி ஆஸ்பத்திரிலே கிடக்கிறாடா" ஒப்பாரியும், அழுகையுமாக என் அம்மா , நான் வீட்டில் நுழைந்த அந்த தருணத்தில், கிடந்து தலையிலும் மாரிலும் அடித்துக் கொள்ள தெருக்கூட்டம் அவளை சுற்றி நின்றது. எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, அந்த ஒருக்கணம் அப்படியே விக்கித்து நின்றிருந்தேன்!

"அழுகாத பேபி, புள்ளை பொளச்சிக்குவா" என்று தேத்தியது கூடி நின்ற கும்பல்

"பாஸூ, நான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திர்றேன், நீ அம்மாவை பாத்துக்கடா" என்று என் தம்பியிடம் கூறிவிட்டு, செருப்பை மீண்டும் காலில் போட்டுக்கொண்டு, வெளியில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க தயாரானேன்.

"குமாரு, எங்கடா போறே, ஆஸ்பத்திரிக்கு வர்றலே, இந்தா ஆட்டோ கூட்டிட்டு வந்துட்டேன். நான் அம்மாவை ஏத்திட்டு போறேன், நீ அங்க வந்து சேர்ந்திடு" என்று சொல்லிக் கொண்டே சென்ற என் இன்பா அண்ணனுக்கு, "சரிண்ணே!" என்று கூறி சைக்கிளை எடுத்து தெரு முனைக்கு வந்தேன்!

"குமாரு, இன்பாவும் அம்மாவும் கிளம்பியாச்சா, கோயிலு முக்குலே டிராபிக்கா ஆயிடுச்சு, ஆட்டோக்காரன் நிறுத்த மாட்டேங்கிறான்!" என்று கூறியபடி வந்தான் அலெக்ஸ், என் அண்ணனின் நண்பன்.

நான் நேராக என் ராஜாக்கா வீட்டிற்கு சைக்கிளை அழுத்தினேன்!

-------


"ராஜாவுக்கு வாத்தியார் மாப்பிள்ளை பார்த்து முடிச்சாச்சு, அடுத்த தையிலே கல்யாண தேதி குறிச்சிட்டு வந்தோம்!" என் அம்மா எனக்கு தட்டில் சோறு எடுத்து வைத்துக் கொண்டே என் அப்பாவுக்கு விவரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"எத்தனைப்பேரு, குடும்பத்திலே"

"பையன் தான் மூத்தவன், இரண்டு பொண்ணுங்க, மூத்தவளை மெட்ராஸ்ல கட்டிகுடுத்துட்டாங்களாம், சின்ன பொண்ணு நம்ம குமாரு மாதிரி, எஸ் எஸ் எல் சி படிச்சிக்கிட்டிருக்கு! அப்புறம் நாலு பசங்க"

"பெரியக்குடும்பம் தான்.. ம்..", பெரு மூச்சுடன் அன் அப்பா.

"என்னமோ, பாவம் முப்பது வயசாச்சு, சீக்கிரம் முடிங்க! உங்க அக்காவுக்கும், அண்ணனுக்கும் பெரிய பாரம் குறஞ்ச மாதிரி இருக்கும், கடைசி பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடி போனதிலிருந்து பாவம் மனுஷன் ரொம்பத்தான் ஆடிப்போயிட்டார். இந்த கல்யாணத்திலேயாவது கொஞ்சம் நிம்மதி வரும்!

"ஜாதகம் எல்லாம் பொருந்தி நல்லா வந்திருக்கு, ஆனா பையனுக்கு மூலம்" இது என் அம்மா.

"அதுக்கு பார்க்கமுடியுமா, எல்லாம் ஒண்ணா பொருந்தி வந்தா, முடிச்சிட வேண்டியது தானே"

-------


"வா குமாரு, இங்கே தான்.. டூப் லைட் எல்லாம் வெடிச்சி சிதறிடுச்சி, நாங்க ஒன்னுமே செய்யலையே, எங்களுக்கு அம்மா மாதிரியில்லே இருந்தாங்க" என் அக்கா கணவனின் கடைசி தம்பி!

"எத்தனை மணிக்கு, நடந்துச்சி?"

"காலையிலே எங்களுக்கெல்லாம் செஞ்சுக்குடுத்துட்டு, டிபன் எல்லாம் கட்டி, நாங்க எல்லாம் போனதுக்கப்புறம்.."

"பாவா, வீட்ல இருந்தாரா, அவருக்கு ஒன்னும் ஆகலையே!"

"ஆமா, அவரும் ஸ்கூலுக்கு கிளம்பிக்கிட்டிருந்தாரு, மாடியில்லருந்து கீழே வர்றதுக்குள்ள, எரிஞ்சிட்டாங்க...ம்ம்.." விம்மலுடன் கூடிய அழுகையோடு

"அப்ப அக்கா ஆபீஸு போகலையா"

"அவங்க, என்னமோ தெரில்ல, இரண்டு நாளு ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு இருந்தாங்க"

"சரி நான் ஆஸ்பத்திரி போறேன், நீங்க வர்றீங்களா?"

"நீ போ, குமாரு, நான் இதை எல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிட்டு வந்துடுறேன்"

-------


"ஆபிஸு க்கு போன் போட்டு வர சொன்னாரு பின்னி", ராஜாக்கா என் அம்மாவிடம்

"கல்யாணத்துக்கு இரண்டு வாரம் தானே, அதுக்குள்ளே என்ன சுத்த வேண்டியிருக்கு", என் அம்மா

"இல்லை காபி சாப்டலாமுன்னு, ப்க்கத்திலே கேண்டீன்ல தான்"

"என்னடா, சர்க்கரை கிடச்சிச்சா ரேஸன்ல", என் அம்மா

"ராஜாக்காவா, எப்ப வந்தீங்க", இது நான்

"இப்ப தான், நல்லா படிக்கிறீல்ல குமாரு, ஸ்டேட் ஸ்காலர்சிப் வாங்கற மாதிரி மார்க்கெடுக்கணும், அப்பதான் உன்னையை மேற் கொண்டு படிக்க வைப்பாங்க, இல்லேன்னா பூக்கடை தான்!"

"நல்லா படிக்கிறேங்க்கா, மார்க்கு ரிவிஷன்ல எல்லாம் நல்லா வந்திருக்கு, போர்டுல வாங்கிடுவேங்க்கா"

"குமாரு நல்லா படிக்கிறான், பின்னி! அவனை நிறைய படிக்க வைங்க!"

"இப்பவே, வெறும் கைக்கு முழம் போட வேண்டியிருக்கு, ம்.. எங்க ஆவப்போறது, அதான் எஸ் எஸ் எல் சி லே நல்ல மார்க் வாங்கினா, போஸ்ட் ஆபிஸிலே மெரிட்ல வேலை கிடச்சிடும்னு சொன்னியே, அப்படி இவன் வேலைக்கு போனா, இங்க உதவியா இருக்கும்!"

"அதெல்லாம் வேணாம் பின்னி, நல்லா படிக்கிறப் பையனை, ஸ்காலர்ஷிப்பு, அது இதுன்னு புரட்டி படிக்க வச்சிடலாம், கவலையை விடுங்க"
-------


பெரியாஸ்பத்திரியில், முழுவதுமாக திரைச்சீலை போட்டு கட்டிலில் வாழையிலையில் கிடத்தி வைத்திருந்தார்கள்

"கும்பலா நிக்காதீங்க, கொஞ்சம் ஒதுங்கி விராண்டால போய் எல்லாரும் இருங்க, ஸ்டாப் நர்ஸ் பாய்ந்தாள்

"85 பர்செண்ட்டு எரிஞ்சு போச்சுன்னு, டாக்டர் சொல்லிருக்காரு, இன்னும் நினவு வர்றல, குளுக்கோஸ், ஆக்ஸிஜன் எல்லாம் கொடுத்து வச்சிருக்காங்க..", பெரிய அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்திச்சு

"பாலு எங்கே?", இது எங்க கண்ணா மாமா

"அந்த சண்டாளனை எதுக்கு கூப்பிடுறீங்க, என் பொண்ணை கொளுத்திட்டு, கை வெந்து போச்சுன்னு நாடகமாடுறான்", இது என் பெரியம்மா

"அய்யா, இதுக்கா இவ்வளவு நாளு வச்சிருந்து கட்டி குடுத்தோம், ஒரு வீட்டு கும்பலுக்கே சோறுபோடுவாளே முகம் சுழிக்காமே எம் பொண்ணு, அவளை கட்டையிலே எரிய வச்சிட்டானுங்களே, இன்பா, இத விடக்கூடாது!"

"அந்தாளை வெட்டி பொலி போட்டாதான் என்க்கு நிம்மதி வரும், எங்க இருக்கான் அவன்", என் இன்பா அண்ணன்

"டேய் இந்த நேரத்திலே, ஆளாளுக்கு.. அவ கண்ணு முழிக்காம படுத்துக் கிடக்கா, நீ போடா கீழே, சரி நீங்க எல்லாம் அந்த மூலையிலே போய் உட்காருங்க ", இது என் மாமா

நான், மூலையில் அழுது அழுது பார்க்க கூட திராணி இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்த என் ராஜாக்கா பாவாவிடம் சென்றேன். என்னை பார்த்துட்டு, குலுங்க குலுங்க அழுது அப்படியே சரிந்தார்

"டேய் குமாரு, கீழே போய் சோடா எதாவது வாங்கியாடா"

நான் கீழே, ஆஸ்பத்திரி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் கடைக்கு சென்றேன்!

-------


"இப்ப நான் ஆயிரம் ரூவாயிக்கு எங்கப் போறது, நாளைக்கே போய் இஞ்சினியரிங் காலேஜ்ல சேரணும்னா, நான் என்ன முந்தானைலயா முடிஞ்சி வச்சிக்கிட்டுருக்கேன், அந்தாளு, எனக்கொன்னும் தெரியாதுன்னு கிடக்கிறாரு மனுஷ்சன்", இது என் அம்மா

"சரி பின்னி, இஞ்சினியரிங் சீட்டு கிடைக்கிறதுங்கிறது அவ்வளவு ஈசியில்லே, படிக்காம சுத்துற எத்தனை தருதலைய பார்த்திருக்கோம், படிக்கற புள்ளயை படிக்க வைங்க", இது என் அக்கா

"குமாரு, பொறுப்பா நல்லா படிப்பான் அத்தை, படிக்க வைங்க" இது ராஜாக்கா பாவா

"இப்ப பணத்துக்கு எங்க போவேன், நாளைக்கே கோயம்புத்தூரு போகணும்கிறானே"

"நீங்க கவலையை வுடுங்க, நான் கொண்டு பணத்தை கட்டி சேர்த்து விட்டுட்டு வர்றேன்", ராஜாக்கா பாவா

"பணத்தை எப்படியும் திருப்பி கொடுக்கறதுன்னா, ஒரு ஆறு மாசமாவது ஆயிடும்"

"அது எதுக்கு அத்தை, நல்லா படிக்கிறப் புள்ளைக்கு எவ்வளவு காசு செலவு பண்ணுனாலும் தகும்"

"குமாரு, நான் தான் ஒன்னோட அப்ளிகேஷன் பில்லப் பண்ணி கொடுக்கிறப்பயே சொன்னனே, சீட்டு கிடைச்சா நான் சேர்த்து வைக்கிறேன்னு"

'எனக்கு கல்லூரி போய் சேரும் பாக்கியம் கிடைக்குமோ' என தவித்துக் கொண்டிருந்த நான், இவர்கள் பேசுவதை கேட்டு நம்பிக்கையோடு மூலையில் நின்று கொண்டிருந்தேன்.

-------


"அய்யோ எரியுதே, வலி தாங்க முடியலயே, பின்னி, என்னை கொண்ணுட சொல்லுங்க பின்னி" ராஜாக்கா மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.

"அய்யோ என் பொண்ணு இப்படி துடிக்கிறாளே, யாராவது எதாவது பண்ணி, அவளுக்கு வலி வராம பாத்துக்குங்களேன், டாக்டரை கூப்பிடுங்களேன்!", இது என் பெரியம்மா

"ஆ..உயிர் போகுதுதே, ம்.... ம்..."

"என் பொண்ணுக்கு கண்ணு சொருகுதே, குமாரு, போய் டாக்டரை கூப்புடய்யா"

"தள்ளுங்க, தள்ளுங்க, அந்த ஆக்ஸிஜன் சிலெண்டரை கொஞ்சம் எடுத்துட்டு வரமுடியுமா, சிலிண்டெர் தீந்து போச்சு", ஸ்டாப் நர்ஷ்

நடு ராத்திரியில், அனைவரும் இங்கொன்று, அங்கொன்று என்று சென்று விட்டதால், நானும், ராஜாக்கா பாவா மட்டும், அந்த சிலிண்டெரை தள்ளி கொண்டு வருகிறோம். அதற்குள் டாக்டர் வந்து விடுகிறார்

"ம்... நர்ஷ், பேசெண்ட்டுக்கு பல்ஸ் வர்ரமாதிரி தெரியலை, அந்த கார்டியோகிராம் கொண்டாங்க"

சிறிது நேரம், அவர்கள், இங்கும், அங்கும் மருந்துகளையும், ஊசிகள் எடுத்து வருவதிலும் அலைந்து கொண்டிருக்கின்றனர்

திடீரென்று என் அம்மா, "டேய் போய்ட்டாடா...போய்ட்டா, அவக்கதை முடிஞ்சி போச்சி, அவ்வளவு தான், ஒன்னுக்கில்லாம என் தங்கத்தை பறி கொடுத்தேனே", ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்

-------


நடுக்கூடத்தில் என் ராஜாக்காவை கிடத்தி வைத்துள்ளார்கள். சுற்றி பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர், வீட்டு வெளியில் பெரியவர்களும், மற்ற ஆண்களும் கூடி உள்ளனர், பாடை செய்பவர் மூங்கில்களை எடுத்து அடுக்கி கொண்டிருக்கிறார்.

வீட்டின் உள்ளே, "கட்டிக்கிட்டு வந்த ஆறு மாசத்திலே, அவ அப்பனை சாப்டுட்டான், இப்ப பாருங்க இவளை, மூலம், எடுக்க வேணாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன், என் பேச்சை எவளாவது கேட்டீங்களா" இது என்னுடய இன்னொரு பெரியம்மா

"அவன் அம்மாக்காரி பண்ண கொடுமை தான்"

"மாமியாகாரி, புள்ளைங்களோட ஒத்து வர்றலேன்னு, புருஷனோட தனியா போய் இருந்தா எல்லாரையும் இவ தலையிலே கட்டிட்டு, இவளும் அம்மா மாதிரி அவன் தம்பி, தங்கச்சிங்களை பாத்துக்கிட்டா"

"எப்பவும் புடுங்கல் தான், அது வேணும், இது வேணும்னு"

"அந்தாளு சரிதான், ஆனா அம்மாக்காரி சொன்னான்னு என்னமோ அன்னைக்கு அப்படி சொல்லிட்டாராம், புள்ள, மனசுக்கு தாங்கல, ஊத்திக்கிச்சு"

"நல்லா தானே நாலு நாளைக்கு முன்னே நம்ம விஜிக்கு மொட்டை அடிச்சி, காது குத்தறப்ப, புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் வந்து போனாங்க"

"இதோ பச்சபுள்ள, இப்பதான் எட்டு மாசக் கைகொழந்தை, அத விட்டுட்டு ஊத்தி கொளுத்திக்க இவளுக்கு எப்படி தான் மனசு வந்ததோ"

"பையனுக்கு என்னா மூணு வயசா"

"ஆமா, என்னா நடக்குதுன்னு தெரியலை, தோ, பாட்டியாகாரி மடியிலே உட்கார்ந்திருக்கான்"

-------வீட்டுக்கு வெளியே, "உடுங்க, எங்கக்காவை கொளுத்தினவனை கொளுத்தாம வுடறதில்லை", வேட்டியை மடக்கி கட்டிக் கொண்டு என் கடைசி அண்ணன் பாபு

"ஆமா, அந்தாளுக்கு மாப்பிள்ளைன்னு என்ன குறை வச்சோம்"

"சரி, சரி இப்ப எதுக்கு விவகாரம் பண்ணிக்கிட்டிருக்கீங்க"

"பொண்ணுக்குன்னு போட்டது எல்லாத்தையும் வாங்கி ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட்ல போட்ருங்க, பையனுக்கு பதினெட்டு வயசு வர வரைக்கும், தம்பா, நீயும் அவரும் குழந்தைக்கு கார்டியன்", இது என் பெரிய அண்ணனிடம் கூறி கொண்டிருந்தனர்

"சரி மள மளன்னு ஆகிற காரியத்தை பாருங்க, ரொம்ப நேரமாச்சு, இதுக்கு மேல தாங்காது எவ்வளவு ஐஸ் வச்சாலும்"

-------


எல்லா காரியங்களும் முடிந்து,வீட்டுக்குள் முன் அறையில் நானும், என் ராஜாக்கா பாவாவும். இரண்டு இரவுகளாக கண் விழித்து ஆஸ்பத்திரியில் இருந்து, தொடர்ந்து அழுது மயங்கிய நிலையில் நாங்கள் இருவருமே! 'குமாரு, நான் ஒன்னும் உங்க அக்காவை பண்ணலடா என்கிற மாதிரி ஒரு பார்வையில்' என்னிடம் ஏதோ குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதை போல பார்த்துக்கொண்டிருந்தார்

நானும், 'சரி விடுங்க பாவா, அக்காதான் பைத்தியக்காரத்தனமா செஞ்சுக்கிச்சு' என்று அவரிடம் சொல்லாமல் சொல்லுவதை போல நினைத்து, "பாவா, இந்த காப்பியாவது சாப்பிடுங்க, ரெண்டு நாளா நீங்க வாயே நனைக்கலே" என்றேன்

"உங்க மொத்த சொந்தமும் என்னை திட்டுது, ஏதோ நான் தான் அவளை கொளுத்தி போட்டதா"

"எனக்கு எல்லாம் தெரியும், பாவா, நீங்க குடிங்க" என்று அவரிடம் நீட்டுகிறேன். அனைவரை விட அதிகம் அவர்களுடன் உறவாடியவன் நான். சிறு வயதிலிருந்தே என் ராஜாக்காவிடம் ஒரு ஒட்டுதல். அவர்கள் திருமணம் ஆகி சென்றதும் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு சென்று, அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொள்ளும் அன்பை, அந்நியோன்யத்தை அருகிலிருந்து பார்த்தவன்! எனக்குத் தெரியும் பெண்கள் அனைவருமே உணர்ச்சியின் உச்சங்கள்!

தன் சொந்தங்கள் எதை இழந்தாலும், அடுத்தவர் செய்நன்றி அறியா சுயநலவாதிகள், எதிரி போல, அவரை பார்க்கும் கூட்டத்தில், அன்பாக அவரை ஆதரித்து, ஆறுதலாக துணைக்கு பக்கத்தில் இருந்து அவரை, அந்த நிலையிலும் தேற்றுவதை பார்க்கும் பொழுது, எனக்கே மலைப்பு, நான் எப்படி என் விடலையை தொலைத்து பக்குவத்துடன் அந்த கணத்தில் நடந்து கொண்டேன்!

-------


தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

Thursday, June 15, 2006

எனை ஆண்ட அரிதாரம் - நட்சத்திரப்பதிவு!

நீங்க எல்லாம் தொடர்ந்து என்னோட எனை ஆண்ட அரிதாரம் படிச்சிக்கிட்டு வந்திருப்பீங்க! அப்படி படிக்காதவங்களுக்கு எனை ஆண்ட அரிதாரம் -பகுதி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12,13,14 அது இன்னும் தொடரா எழுதிக்கிட்டு இருக்கேன்! இந்த நட்சத்திர வாரத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு பகுதி, பதினைந்தாம் பகுதி! என்னுடய அரிதார வாழ்க்கைக்கு முக்கிய மான பங்கு பாரதிராஜாவோட படங்கள், அதுவும் முதல் ஐந்து படங்கள் முத்துக்கள், அந்த ஐந்து நட்சத்திரங்களும் என்னால மறக்க முடியாதது, ஏன்னா அந்த காலகட்டத்திலே நடந்த நிறைய சம்பங்களை இந்த படப்பாடல்கலை கேட்கிற போது அசை போடுவதுண்டு!

கொசுமருந்து அடிக்கிற இன்ஸ்பெக்ட்ரா இருந்த பால்பாண்டியன் தேனியவிட்டு சினிமா ஆசையிலே சென்னை வந்து டைரக்டர் புட்டண்ணாக்கிட்டே, இவரு அதிகமா கன்னடப் படம் எடுக்கிறவரு, வேலை பார்த்து, பிறகு பாரதிராஜான்னு, அக்காவோட பாதி பேரை வச்சிக்கிட்டு தமிழ் சினிமாவையே புரட்டி போட்டாரு அந்த 70 களின் கடைசியில்! எது அப்படியோ, என்னோட பால்யத்துக்கு அப்பறம், விடலை முடிஞ்சு,வாலிபனா மீசை முறுக்கின நேரத்திலே, இந்த ஒரு பெரிய மாற்றங்களோட வந்த தமிழ் சினிமாக்கள் எனக்கு பல இனிமையான வாழ்க்கை நினைவுகளை ஞாபகபடுத்திக்கிட்டே இருக்கும். தமிழனக்கு சினிமாங்கிறது இரண்டற, இல்லை நாலற கலந்த ஒன்னு(உபயம்:செடியக்கா!) அப்படி பயணிச்ச என் வாழ்க்கையின் அந்த முக்கிய கட்டங்கள்ல வந்த முதல் ஐந்து பாரதிராஜா படங்கள் மனதை விட்டு அகலாத ஒன்னு! இன்னைக்கும் அந்த படங்களோட பாடல்களை கேட்டா திரும்ப அந்த காலக்கட்டத்துக்கு நான் போயிடறது என்னவோ வாஸ்தவம் தான்! அப்படி பட்ட அந்த முதல் ஐந்து படங்களையும், அந்த படங்கள் வந்த காலகட்டங்கள்ல நிகழ்ந்த முக்கிய என்னுடய வாழ்க்கை அனுபவத்தைய்ம் எழுதலாமேன்னு தான்!

(எங்க சுத்தியும் கடைசியிலே பழைய நினப்பை அசைப்போட வந்திட்டேன் பார்த்தீங்களா!, இதை கிண்டலா, ஒரு தடவை ஆனந்த விகடன் இந்த ப்ளாக்கர்னா என்னான்னு அவங்க பத்திரிக்கையிலே எழுதனப்ப, நக்கலா, அவங்க அவங்க இணையத்திலே தனியா வீடு கட்டி, அதிலே என்ன வேணும்னாலும் எழுதறது, அவங்க பார்த்தசாரதி கோயில்ல கையொழுக தின்ன பொங்கலை பத்தியும் எழுதுவாங்க, பக்கத்து வூட்டு சரோஜாக்கூட அம்மா அப்பா விளையாண்டதையும் எழுதுவாங்கன்னு கிண்டலடிச்சிருந்தாங்க, எப்பா,எண்ணா, எக்காவ், தமிழ்மண அன்பர்களே, அப்படியா நீங்க எல்லாம், முடிஞ்சா உங்க பார்த்தசாரதி கோயில் மாதிரி அனுபவத்தை பின்னோட்டத்திலே சொல்லுங்க!)

16 வயதினிலே:


இந்த படம் வந்தப்ப உண்டு பண்ண தாக்கத்தை ஒலிப்பேழையா போட்டு இருக்கிறேன்! கேட்டு பாருங்க! கேட்டு பார்த்துட்டு நல்லா இருக்குதுன்னு சொன்னீங்கன்னா மீதி நட்சத்திரங்களின் தாக்கத்தையும் அடுத்தடுத்த பதிவா போடுறேன்!

இந்த பாடலுடன் கூடிய ஒலிப்பேழையை நீங்கள் கேட்பதில் சிரமம் இருப்பதை அறிந்தேன்! இது முழுவதும் இந்த ஃப்ரீ வெப் சைட்களுக்கே உண்டான பேண்ட்வித் லிமிட்டேஷனால், நீங்கள் இதை கேட்க முடியவில்லை, இதோ புது கணக்கு ஏற்படுத்தி உள்ளேன், அந்த கணக்கு ஆயுத்த படுத்தவதில் சிறிது கால தாமதம், அதுவரை இதில் கிளிக்கி ஒலிப்பேழையை கேட்கவும்! விரைவில் நீங்கள் 'ரியல் ப்ளேயரில் கேட்கமுடியும்!


தொடரும்..

Wednesday, June 14, 2006

எனது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்!

என்னென்னமோ எழுதியாச்சு, பயணக்கட்டுரை எழுதிலயேன்னு எப்பவும் ஒரு ஏக்கம் இருந்திச்சு, இதோ, கொஞ்சம் எழுதலாமுன்னு உட்கார்ந்தா, எதப்பத்தி எழுதறதுன்னு பார்க்கிறப்ப, சரி நம்ம போய் வந்த ஆஸ்திரேலியா, நியுசிலாந்து பத்தி எழுதுவோம்னு தோணுச்சி! அதுக்கு கொஞ்சம் காரணமும் இருக்கு, ஏன்னா நியுசிலாந்து பத்தி உங்களுக்கு நிறையா சரித்திரம் சொல்லி பாடம் கத்துக்கொடுக்கிற டீச்சர் தமிழ்மணத்திலே இருக்கிறதால, அது கொஞ்சம் உங்களுக்கு பரிச்சியமா இருக்குங்கிறதாலே, சரி அதை எடுத்துக்குவோம்னு இந்த டூரைப் புடிச்சேன்!

பொதுவா இந்த டூர் போறது எங்க வீட்ல, என் மனைவி, மகளுக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு! நான் டில்லியிலே இருந்த சமயத்திலே, ஒரு மூணு மாசத்துக்கு அப்புறம் எங்கேயாவது டூர் போறது பெரும்பாலும் எங்க வழக்கம்! அதுவும் டில்லி சரியான இடம், ஏன்னா எல்லாத்துக்கும் சென்டர்! வடக்காலே நீங்க இமயமலை அடிவாரம் போகணும்னாலும் சரி, மேற்காலே ராஜஸ்த்தான் பாலைவனம் போறதா இருந்தாலும் சரி, கிழக்காலே காசி, இலகாபாத்ன்னு புண்ணிய தரிசனம் பண்ண போகனாலும் சரி, இல்லே தெக்காலே, தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா சிற்பங்கள் பார்க்க போகனாலும் சரி போய்ட்டு வந்திடலாம்! நாங்க இந்த எல்லா இடத்துக்கும் போய் வந்தவங்க!

சரி உள்நாடு சுத்தி பார்த்து போரடிச்சு போச்சுன்னு, வெளி நாடு போகலாமுன்னு போனது தான் இந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம். நான் முதல்ல வேலை பார்த்த கம்பெனியிலே சேரும் போது, அந்த HRல எல்லா பேப்பரையும் கை எழுத்து வாங்கிக்கிட்டு இருந்த ஒரு அம்மாக்கிட்ட, ஆமா இந்த கம்பெனியிலே 'பாரத் தர்ஷன்' போக எல்லாம் வழி இருக்கான்னு கேட்டுட்டேன்! ஏன்னா அதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த மத்திய அரசாங்க நிறுவனத்திலே, அந்த மாதிரி ஒன்னு இருந்திச்சு, அதான் LTC ன்னு சொல்றது! அந்த அம்மா சிரிசிக்கிட்டே, பக்கத்திலே இருந்தவருக்கிட்டே, இதப்பாருடா, புது சேரவந்தவரு 'பாரத் தர்ஷன்' போக முடியுமான்னு கேட்கிறாரு சொல்லி சிரிச்ச கதை இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது!

எங்க வெளி நாட்டு பயணம் 15 நாளைக்குன்னு சரியா ரூட்டெல்லாம் போட்டு திட்டமிட்டு பண்ணுனது நானே தான், வேறே டிராவல் ஏஜண்ட் யாருமில்லை! அப்பவும் எல்லாத்துக்கும் இந்த இணையம் தான் கை கொடுத்தது! எல்லாமே உட்கார்ந்த இடத்திலே இருந்து முடிக்கிற விஷயம். அதே மாதிரி ஏர் டிக்கெட்டுக்கும், பக்கத்து காம்பிளக்ஸ்ல இருந்த டிராவல் ஏஜண்ட்டை பாடா படுத்தி டிக்கெட்டும் ரொம்ப மலிவா வாங்கியாச்சு. இந்த பயணம் நான் ஒரு இரண்டு வருஷம் முன்னே இந்தியாவிலே இருந்து போனது! அப்புறம் போனா எங்க தங்கறதுன்னு யோசிச்சப்ப, இந்த ஹோட்டல் எல்லாம் கட்டுபட்டு வராதுன்னு நினைச்சப்ப, நமக்கு கைக்கொடுத்தது 'YWCA', 'YMCA' தான்! பொதுவா வெளி நாட்ல, அதுவும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்ல எல்லா பெரிய ஊர்லயும் இது இருக்கு! இங்கே தேடி கண்டுபிடிச்சு போய் தங்கினீங்கன்ன மலிவு, இந்த தந்திரம் எங்கிட்ட கேட்டு வாங்கிங்க,ரொம்ப கைக்கொடுக்கும்! சரி அதில போய் தங்கினாலும் செலவாகுமுன்னு, வேறே என்ன வழின்னு பார்த்தா, இந்த கேம்பர்வேன், அதாவது நீங்க கேள்விபட்டிருப்பீங்களே, நடிகர் நடிகைகள், படுத்து தூங்க, மேக்கப் போடன்னு அவங்களுக்கும்னு ஒரு தனி வேன் இருக்கும் இல்லே, அது தான், அத்தனை வசதிகளோட படுத்து, தூங்கி குளிச்சு, எல்லாம் பண்ண வேன்னு குள்ளேயே வசதி இருக்கும்! அப்புறம் அதை நீங்களே ஓட்டி எல்லா இடத்தையும் சுத்தி பார்த்திடலாம்! அதிலே போய் தங்கிக்கிட்ட இந்த வண்டி சத்தம் மிச்சம், தங்கிறதுக்கும் செலவில்லைங்கிற கதையாயிடும்!

அப்படி கேம்பர்வேன் வாடகைக்கு கொடுக்கிற கம்பெனி நியூசிலாந்திலே 'Brit' இல்லே, 'Maui' ன்னு இருக்கு, அதை இணையத்திலே தேடிபுடிச்சி புக் பண்ணியாச்சு, வாடகை செலவு ஜாஸ்தி இல்லை, இன்ஸ்யீரன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு 7-8 நாளைக்கு 1000 நியூசிலாந்து டாலர்குள்ள வந்திடும், அதுக்கு சீசனுக்குன்னு போனா கொஞ்சம் வாடகை ஜாஸ்தி, நாங்க போனது குளிர்காலம் தான், அதாவது கடுங்குளிர் குறஞ்சிருந்த நேரம், செப்டம்பர்ல, வாடகை கம்மி தான் (டீச்சர் கிட்ட பாடம் படிச்சீங்களா, சீதோஷ்ண நிலை, நம்ம ஊருக்கும், அங்கேக்கும் உல்ட்டான்னு! நமக்கு கோடைன்னா, அங்க குளிர், தெரியுமில்லை!) ஆக இப்படி போட்ட திட்டத்தோட பயணம் ஆரம்பமாச்சு!

முதல்ல சிங்கப்பூர், வழியிலே நின்னு போகணும், பிறகு நேரா சிட்னி! ஆகா, என்ன அழகான ஊரு தெரியுமா, ஏர்போர்ட்டு விட்டு வந்தோன்ன ஒரு சில்லு காத்து உடம்பை கிழிக்கும்! இந்த சிட்னியை நிறைய படத்திலே பார்த்திருப்பீங்க, சமீபத்திலே வந்த படம் திருட்டுபயலே, மெல்போர்ன்ல எடுத்தது, கிட்ட திட்ட அப்படி தான் இருக்கும்! இல்லேன்னா, 'சலாம் நம்ஸ்த்தே' ஒரு ஹிந்திப்படம் வந்ததுல்ல, அதை போய் பாருங்க, ஏன் நம்ம ஷங்கர் இந்தியன் எடுத்தாருல்ல, டெலிபோன் மணி பாட்டு, அது முழுக்க சிட்னியிலே எடுத்தது தான்! இங்கே பார்க்க வேண்டியது 'சிட்னி பிரிட்ஜ்' 'ஓப்ரா டவர்' அப்புறம் கடலை சுத்தி குரூஸ் போய் அழகா கட்டி போட்டுறக்க வீடுகள்! அப்புறம் சிட்டியில்லே நீங்க நடந்து ஜாலியா பார்த்துக்கிட்டே போகாலாம்! அதுவும் பொம்பளங்க மார்லருந்து கீழே நழுவி எப்ப விழும்ங்கிற மாதிரி போட்டுக்கிட்டு போற ஃபிராக், கவுன் அழகிகள் அதிகம்!

சிட்னில இருந்து புறப்பட்டு நேரே 'க்ரைஸ்ட்சர்ச்' போய் இறங்கியாச்சு! ஒரே குளிர்! ராத்திரி YMCAல தங்கிட்டு காலையிலே 'Brit' கடைக்கு போய் நம்ம கேம்பர் வேன்னை வாடகைக்கு எடுத்தாச்சு! வழக்கம்ப்போல எது வண்டில எங்க இருக்குன்னு சொல்லிக்கொடுக்க ஒரு பொண்ணு வந்தா, கேஸ் சிலண்டர் இருந்ததாலே சமச்சுக்கலாம், ஓவன் வச்ச சமயல் செய்ய குக்கிங் ரேஞ், பாத்ரூம் படுக்கை, சோபா எல்லாம் சொல்லி கொடுத்துட்டு கடைசிலே கீழே இறங்கி தண்ணி எப்படி ரொப்பரது, அப்புறம் சூவெஜ் எப்படி ட்ரைன் பண்றதுன்னு விலாவாரியா சொல்லிக் கொடுத்தா! எல்லாம் சரி, செஞ்சுப்புடலாம், ஆனா நம்ம கழிஞ்சதை, அதான் அந்த செப்டிக் டேங்க்கை எடுத்தி கழுவி அதிலே திருப்பி கெமிக்கலகலந்து திருப்பி மாட்ரது இருக்கே, உவ்வே! 'பீயள்ள போகிறார் சுஜாதா' ன்னு நம்ம முத்துக்குமரன் ஒரு பதிவு போட்டார்ல, அது மாதிரி நம்ம அனுபவத்தை இன்னொரு பதிவா போட்டாகணும்! எல்லாம் முடிச்சிட்டு, வண்டியை எடுத்திட்டு கிளம்பியாச்சு! இந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலே எல்லாம், நம்ம ஊர் மாதிரி ரைட் ஹேண்ட் ட்ரைவ் தான், அதனாலே ஓட்ட சிரமமில்லை! மேற்கொண்டு இங்கே ஓட்ட நீங்க வச்சிருக்கிற இந்தியன் ட்ரைவின் லைசென்ஸ் போதும்!

இந்த க்ரைட்ஸ்சர்ச் இருக்கிறது தெற்கு தீவுல, அதாவது நியூசிலாந்து இரண்டு தீவுகள் கொண்டது, வடக்குத்தீவுல தான் வெலிங்டன், அதோட தலைநகரம், அப்புறம் அக்லேண்ட், எல்லாம், நீங்க கிரிக்கெட் பார்த்திருப்பீங்க இங்கெல்லாம் விளையாடி! நாங்க சுத்தினது தெற்கு தீவு முழுக்க! க்ரைஸ்ட்சர்ச் கிழக்கு கடற்கரையிலே இருக்கிற ஒரு அழகான நகரம், முதல்ல நாங்க அதை சுத்தி பார்க்கலை, நேரா கிளம்பியாச்சு கீழே தெக்க பார்க்க போய்ட்டோம்! குவுன்ஸ்டவுன்னு நம்ம ஊரு ஊட்டி மாதிரி, அப்புறம் அங்கிருந்து மில்ஃபோர்ட் சவுண்ட்ன்னு, அதாவது மலைகளின் நடுவே வியாபித்திருக்கும் கடல், இதையே ஃபிஜார்ட்ன்னு சொல்லுவாங்க! நார்வேயிலேயும் அதிகம்! அப்புறம் எங்க சுத்தினாலும் மலைகளும் ஏரிகளும் தான், இயற்கையை உண்மையிலே கண்டு களிக்குனும்னா போய் ஒரு எட்டு நியுசிலாந்து பார்த்திட்டு, அப்படியே நம்ம துளசியையும் பார்த்துட்டு வந்திடுங்க! அப்புறம் ஃபிரான்ஸ் ஜோஸப் கிளேசியர்னு நகரும் பனிப்பாறைகள் பார்த்திட்டு, அப்புறம் அழகா ஆங்கில படத்திலே வர்ற கண்னை பறிக்கும் காட்சிகள் கொண்ட இடங்கள் முக்கியமா 'The Lord of the Rings' ல வர்ற அத்தனை இடங்களையும் பார்த்திட்டு வந்தோம்! அதுக்குன்னே கூட்டிக்கிட்டு போக நிறைய டூர் இருக்குது! அப்பறம் பங்கி ஜம்பிங்ன்னு மேலேந்து கீழே குதிக்கிறது! என் பொண்ணு நான் குதிக்க போகணும் ஒரே குதி, ஆனா எங்களுக்கு கொஞ்சம் பயம், போகவிடலை, அப்பறம் கணவாய்கள், மலைக்குகைகள், மேற்கு கடற்கரை பகுதி மலைகளும், அழகிய பள்ளத்தாக்குகளும் கொண்ட பகுதி! இயற்கையை அணு அணுவா ரசிக்கனும்னா, நியூசிலாந்து போய் பார்த்துட்டு வாங்க! இப்படி சுத்தி முடிச்சி திருப்பி க்ரைஸ்ட்சர்ச் வந்து சேர்ந்தோம்!

பிறகு அங்கிருந்து வடக்கு தீவு போய், அங்க இருந்த கந்தக பூமியை பார்த்திட்டு வந்தோம்! இந்த பகுதிகள் எல்லாம் ஒரு காலத்திலே எரிமலைகளா இருந்த பகுதிகள், எல்லாம் சூடு தனிஞ்சு போச்சு இப்ப, இருந்தும் அங்கங்க நீராவி ஊற்று, கொதிக்கும் களிமண் எல்லாத்தையும் நீங்கப் பார்க்கலாம்! இந்த இடத்தக்கு பேரு 'ரோட்ருவொ'ன்னு! அப்படி சுத்தி முடிச்சு அந்த பக்கம் இருந்த பண்ணைங்க நிறைய பார்த்தோம். நம்ம ஊரு மாதிரி மாட்லருந்த பால் கையிலே கறக்கிரதெல்லாம் இல்லை! எல்லாமே மெசின்னு தான்! மாட்டு பால்காம்பை கப்புன்னு புடிச்சி அதுபாட்டுக்கு அமுத்தி எடுத்து பாலை குழாய்ல கொண்டு வந்து கடைசிலே ரெஃப்ரிஜிரேட்டட் டேங்க்ல சேகரிக்க எல்லாம் மெக்கனைஸ்ட் தான் போங்க! அப்படியே சுத்திட்டு வர்றப்ப தான் கடைசியா இந்த முடிவளர்ந்த கடா ஆடுங்களை பார்த்துட்டு அது தோல் உரிக்கிரது எல்லாம் பார்த்துட்டு வந்தோம். இந்த சின்னபுள்ளையிலே மிரட்டுவாங்களே, 'படவா தோலை உறிச்சுடுவேன்னு', அதே மாதிரி 'தோலுறுத்து காட்டுகிறார்'ங்கிற சொற்றொடர் வருமே, அதே மாதிரி தோல் உரிச்சு காம்பிச்சாங்க! உங்களுக்காக அந்த வீடியோ இங்கே!இப்படி நியுசிலாந்து முடிச்சிட்டு பிறகு வர்றப்ப திரும்ப ஆஸ்திரேலியாவுக்கு பயணம்! திரும்ப வந்தறங்கினது பிரிஸ்பென்! அங்கேந்திருந்து 100 கிமீ தூரத்திலே இருக்கிற 'Gold Coast' கடற்கரைக்கு போனோம்! இது ஒரு ஜாலியான விடுமுறை கழிக்கிற ஸ்தலம்! நீச்சல், ஸர்ஃப்பிங், பீச்சிலே வெட்டியா பொழுதை கழிக்க இந்த ஊரு! அப்புறம் ஃபுளோரிடால இருக்கிற ஓர்லோண்டோ மாதிரி ஒரே தீம் பார்க்குங்க! இங்கே வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவும் இருக்கு! என் விதியை பார்த்தீங்களா, 'எனை ஆண்ட அரிதாரம்' னு தொடர் எழுதி நான் சினிமால சேர துடிச்ச சோகக் கதையை சொன்னேன் இல்ல, ஆனா ஆஸ்திரேலியா வந்து நடிச்ச கதை, அதுவும் இந்த வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவிலே, இருக்கு! ரொம்ப ஆர்வமா நீங்க வேணும்னு கேட்டா அடுத்த பதிவிலே வீடியோ காட்டுறேன்!

இதெல்லாம் சுத்திட்டு, அங்கிருந்து ஹாங்காங் போய் இரண்டு நாளு சுத்திப்பார்த்துட்டு, கடைசியா டில்லி வந்து சேர்ந்தோம்! ஆனா எங்களுக்கு இது ஒரு மறக்க முடியாத சுற்றுலா,ஒரு இன்ப உலா! நீங்களும் எப்பவாது எஙகேயாவது அப்படி சுத்தனும்னு வெளிநாடு போகனும்னா இந்த இரண்டு நாட்டுக்கும் போய் சுத்திட்டு வாங்க! மறக்க முடியது, முக்கியமா, நியுசிலாந்து போய்யிட்டு வாங்க! அப்படியே செடியக்காவை சந்திச்சு பதிவர் மாநாடு ஓன்னும் போட்டுட்டு போட்டோ புடிச்சி போடுங்க முடிஞ்சா!

Tuesday, June 13, 2006

பதிவுகளிடுவதிலா, பின்னோட்டமிடுவதிலா - எதில் ஆர்வம்?

இந்த பதிவுகள் எழுத ஆரம்பிச்சு, அதை தமிழ்மண திரட்டி மூலம் வெளி கொண்டுவந்து உலக மக்களூக்கு நமது எழுத்து வல்லமையை எடுத்து சொல்ல, இந்த தொழில்நுட்பமும், இணையமும் எவ்வளவு ஒத்தாசையா இருக்குது பார்த்தீங்களா! அதுவும் தமிழ்ல மாட்லாடுவதுக்கு! இதெல்லாம் ஒரு அஞ்சு,ஆறு வருஷத்துக்கு முன்னே நினைச்சு பார்க்கிற காரியமில்லை! எல்லாமே நுட்ப வளர்ச்சி! யுனிக்கோடு, உன்கோடுன்னு அதன் தொழில்நுட்பங்களை தெரிஞ்சு வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன், இல்லையினா ஒரு எட்டு காசி போட்ட அந்த விளக்கத்தை எல்லாம் படிச்சி பார்த்துட்டு வாங்க! அப்புறம் செய்தி திரட்டின்னு இந்த 'RSS' இயங்கும் முறை, அதன் மூலம் எப்படி வலைப்பதிவு திரட்டிகள் வேலை செய்யுதுங்கிற விளக்கத்தை நிறைய பேரு எழுதிட்டாங்க! அப்புறம் இந்த வலைபதிவுகள்ல அதிகமா உறவாடும் நெஞ்சங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் துறையை சேர்ந்த ஜாம்பவான்கள், அதனால, இந்த விஞ்ஞான உண்மைகள் எல்லாம் பொதுவா தெரிஞ்சிருக்கும்! இல்லைன்னா அவங்க மாதிரி ஆளுங்களை ஃபிரண்டு புடிச்சு, விவரம் கேளுங்க, மத்த விஷயம் பேசறப்ப நிறைய கம்ப்யூட்டர் நண்பர்கள் கிடைச்சிடுவாங்க! ( பொதுவா விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதறவன் தான், இதிலே கொஞ்சம் நான் அடக்கியே வாசிக்கலாமுன்னு தான்!) அப்படி நம்ம பெருகி ஒரு கூட்டு குடும்பம் மாதிரி ஆயாச்சி! இப்ப உங்க முன்னே நான் வைக்கும் கேள்வி பொதுவா உங்களுக்கு எதிலே ஆர்வம், பின்னோட்டமிடுவதிலா, இல்லை புதுசு புதுசா பதிவுகள் சுட சுடப் போடுவதிலா?

இப்ப வர்ற பதிவுகளை வச்சு பார்க்கிறப்ப, சில பேருக்கு புதுசு புதுசா விஷயங்களை எழுதணும்னு தோன்றதாலே அப்ப அப்ப பதிவுகளை போட்டு கிட்டெ இருப்பாங்க, சில பேரு விஷயம் இருக்கோ, இல்லையோ சும்மா ஏதாச்சும் எழுதி பதிவு போட்டு, தமிழ்மணத்தில முதல்ல அப்ப அப்ப நம்ம பதிவுகள் நிக்கணும்னு ஆசை, ஏன்னா 'இந்த நிமிடம்' பக்கம் வந்து 'static'ஆ அப்படியே நின்னுறதில்லையே, அப்படியே ரோலோவர் ஆயிக்கிட்டே 'dynamic' கா இருக்குமே, படிக்க வரை ரொம்ப பேருக்கு இடுகைகள் tabஐ கிளிக் பண்ணி, விலாவாரியா ஒவ்வொன்னா மேஞ்சு கண்டுபிடிச்சு படிக்க பொறுமை இருக்காது! அதனால அப்ப அப்ப முழிச்சிக்கிற வரை, ஏன்னா 'இந்த நிமிடம்' 24 மணி நேரமும் ரோலோவர் ஆயி வேலை செய்யக்கூடியதே, ஏதாவது பதிவு போட்டு முதல்ல வர்ற மாதிரி பார்க்கிற ஆளாக்கூட இருக்கலாம் நீங்க! சிலப்பேரு சும்மானாலும் எதையாவது தொட்டுபுட்டு குசும்பா எதையாவது இழுத்துவிட்டு, பின்னோட்டத்திலே காலம் கழிக்கலாம்!

இந்த பின்னோட்டமும் அப்படி தான், ஒரு அடிமை ஆக்கிடும்! 'அன்மையில் மறுமொழி செய்யப்பட்ட இடுகைகள்'னு வரக்கூடிய லிஸ்ட்ல அப்ப அப்ப பதிவு தலைப்பு வந்தா, ஹிட்டுக்கு சான்ஸ் இருக்குங்கிற வியாபார தந்திரம் மாதிரி கூட இருக்கலாம். அதுக்காக ஸ்பெஷலா 'அதிகம் பின்னோட்டம் பெறுவது எப்படி'ன்னு பதிவு போடறவங்க தரும் டிப்ஸ்ஸை வச்சி அதிகமா பின்னோட்டம் பெற்று பதிவு தலைப்பு அந்த 'அன்மையில் மறுமொழி செய்யப்பட்ட இடுகைகள்' பகுதியிலே வர்ற மாதிரியும் பார்த்துக்கலாம்! இல்லை சுவாரசியமா கருத்து பரிமாற்றங்கள் செஞ்சுக்கிட்டு, அது மூலம் விஷய ஞானம் வேணும்னு பின்னோட்டங்கள்ல அதிக ஈடுபாடு கொள்ளலாம்! இல்லை வெட்டியா சண்டை போட்டுகிட்டு திட்டி தீர்த்துக்கிட்டு பொழுதை கழிக்கிறதில்லை விருப்பம் கொண்டவராக் கூட இருக்கலாம்! இல்லை தனக்குன்னு சில குரூப்பா இருக்கிறவங்களோட மட்டும் இந்த சாட்டிங் செய்ற மாதிரி பின்னூட்டங்கள் போட்டுக்கிட்டு இருக்கலாம்! இல்ல எதிர்மறை கருத்துக்கள் சொல்றேன்னு குண்டக்க முண்டக்கன்னு பதில் கொடுத்து, பதில் வாங்கறதிலேயும் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம்!

ஆக மொத்ததிலே ரெண்டுமே ஒரு அடிக்ட் மாதிரி தான், தமிழ்மணம் பக்கம் வந்த நம்ம எல்லாருக்கும் இது தெரியும். அதுனால இந்த பதிவின் பின்னோட்டத்திலே நீங்க உங்க கருத்தை சொல்லலாம், உங்க ஆர்வம் எதில்லைன்னு பதிவுகள் இடுவதிலையா, இல்லை பின்னோட்டம் இடுவதிலையா? இல்ல இரண்டுத்திலயுமே வா! அதுக்கான காரணத்தையும் நீங்க விரும்புனீங்கனா எழுதுங்க! இல்லைன்னா விட்டு விடுங்க! அப்படியும் இல்லேன்னா உங்களுக்கு இதுவரைக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும் புதுசா இருந்தா எழுதுங்க!

இது முற்றிலும் நகைச்சுவையா எல்லாரும் 'paraticipate' பண்றதுக்காக, என்னோட நட்சத்திர வாரத்திலே இது ஒன்னு புதுமையா இருக்கட்டுமேன்னு இந்த விளையாட்டு! ஆதலால் இதை ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டு பின்னோட்டம் போடுங்க, சும்மா விளையாடலாம்-:)

2026ல் உலக அரசியல் - ஒரு கண்ணோட்டம்!

சரியா இன்னும் 20 வருஷம் கழிச்சு பார்த்தா இந்த உலகம் எப்படி இருக்க போகுதுன்ன்னு நினைச்சு பார்க்கிறதுண்டா? இல்லேன்னா கொஞ்சம் பார்க்கலாம் வாங்க! சரி, சரித்திரம்னு எடுத்துக்கிட்டா, அது ஒரு கோடு கிழிச்ச மாதிரி நேரா கிழிச்சி இப்படி தான் நடந்ததுன்னு சொல்லிட முடியாது! ஏகப்பட்ட ஏற்றம் இறக்கங்கள் கொண்டது, ஒரு காலத்திலே நம்மளும் சைனாவும் தான் ராஜா உலக பொருளாதாரத்திலே, செல்வ செழிப்புல, ஆடம்பரத்திலே, அப்புறம் வாழ்க்கையை அணு அணுவா ரசிச்சு வாழ்றதுல்ல, ஏன்னா அப்படி பட்ட பூமி நம்மது, அதுனால தான் காமசூத்திரம் எழுதியும், அழகு அழகா சிற்பம் செதுக்கியும் அந்த காலத்திலே கழிச்ச கேளிக்கைகளின் நவரசத்தை செதுக்கி வச்சி, ஒய்யார வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்! அப்பறம் என்னாச்சு, கொஞ்சம் கொஞ்சமா உலகின் மத்த பாகங்கள்ல இருந்து கடல்ல நிலம் தேடி, நல்லா ஆடம்பரமா இருந்து சுகவாசி வாழ்வு வாழ்ந்த இடங்கள் எங்கேன்னு தேடி, கொஞ்சம் தன்னோட புத்தியை உபயோகிச்சு, எப்படியும் முன்னேறி வாழ்னும்னு தேசம் விட்டு வந்த மாற்று கண்டத்துக்காரங்க அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இப்படி செழிப்பா வாழ்ந்து கழிச்ச இடங்களை அண்டி, கடைசியிலே அதையே புடிச்சி ஆட்சி செஞ்சு நாம் தலைகீழ் ஆனது சரித்திரம்! ஆனா எதிர்காலம் மட்டும் அப்படி எதிர்பார்த்தது போல கிழிச்ச ஒரே நேர்கோட்ல ஏத்தம் இறக்கம் இல்லாம மாறிவுடுமா என்ன? அது அப்படி எப்படித் தான் மாறப்போகுதுங்கிறதை கொஞ்சம் பார்ப்போமா?

இன்னும் சரியா 20 வருஷத்திலே பார்த்தீங்கன்னா, சைனாவோட பொருளாதாரம் அமெரிக்காவை தூக்கி சாப்பிட்டுடும்! அப்புறம் நம்ம பொருளாதாரத்தை எடுத்துக்கிட்டா, எந்த ஒரு ஐரோப்பிய நாட்டைவிட அதிகமா இருக்கும். அப்புறம் ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா, இவெங்கெல்லாம் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிட்டு முன்னே வந்திடுவாங்க! ஊரு உலகம் முழுக்க இனி பாட்டு படிக்கப்போறது ஆசியாவை பத்தி தான், அதுவும் "Asian values", "Beijing consensus", அப்படின்னு ஒரே புராணம் தான் பத்திரிக்கை, அப்புறம் எல்லா ஊடகமும் பாட்டு படிக்க போவுது (இப்பவே அப்படி பாட ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு!) இந்த நாடுகள் எல்லாம் வளர ஆரம்பிச்சோன, நிறைய தட்டுப்பாடு வரப்போவுது, இயற்கை செல்வங்களுக்கும், மனித குலத்துக்கும் தான்! உலகமே நொறுங்கி நிக்க போகப்போகுது மூணு விஷயத்துக்கு, ஒன்னு எண்ணெய், இன்னொன்னு தண்ணீர், மூணாவது விஷயம் தெரிஞ்ச, சாமர்த்தியம், திறமை கொண்ட தொழிலாளர்கள்!

ஆனா பெரும் சக்திகள், வல்லரசுகள்னு சொல்லப்பட்ட நாடுகள் எல்லாம் பெரியதொரு தாக்குதலுக்கு உட்படுத்த படுவார்கள்! அழிவுகள் அனைத்தும் தனிவுடமை ஆக்கப்படும், ஆமா, தன் படுக்கை அறையிலிருந்து உலகத்தை ஆட்டி படைப்பார்கள் கம்ப்யூட்டர் நெர்ட்ஸ்னு சொல்லக்கூடிய அதி புத்திசாலிகள், அதே மாதிரி தீவிர வாதிகள் உலக சந்தையில் விக்கக்கூடிய பேரழிவு சாதனங்களை, அனைவரையும் கொல்லும் ஆய்தங்களை ('Weapons of Mass Destruction') சுலபமா வாங்கக்கூடும்! தனிமனித கும்பல்கள் ஒரு தேசத்தையோ, இல்லை மாநிலங்களையோ அழிக்கக்கூடும்! இந்த தாக்கப்படும் அபாயத்தால், பாதுகாப்பு அளிக்கும் ஏகாதிபத்தியத்தை ('Defensive Imperialism')கடைபிடிப்பார்கள் பெரும் வல்லரசு என அழைக்கப்படும் நாடுகள்! அதாவது, வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகள், இது போன்ற தீவரவாதம் வளரும் பகுதிகளையும், நாடுகளையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள், இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு கட்டு பாடு கொண்ட ஈராக், ஆப்கானிஸ்தானம் போல!

பொருளாதார இமயங்கள் ('Economic Mights') உலகத்தின் வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் மாறி தெற்கு, கிழக்கு பகுதிகளில் வியாபித்து விடும், அதனால் கலாச்சார சக்திகளும் ('Cultural power')மாறிவிடும்! வளர்ந்து வரும் அல் ஜாசீரா போன்ற ஊடகங்கள் 'சி என் என்' போன்றவற்றை விட வழுபெற வாய்ப்பு இருக்கிறது! பிறகு நமது 'பாலிவொட்' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது! இதனால் என்ன ஆகுமென்றால் உலகம் எல்லாவற்றையும் அமெரிக்க கண்கள் கொண்டு பார்க்கப்போவதில்லை! நமது பழமையான நாகரீகம் மீண்டும் தளிர்த்து எழுத்து புத்துணர்வுடன் பீறு நடைப்போடப் போகிறது! அதிக சுயநம்பிக்கையுடன் எழுந்தாடப்போகிறது மேற்கத்திய நாகரீகத்தை விட, எல்லோரும் அமெரிக்காவில் சாம்பாரும், கறிக்கொழம்பும் சாப்பிடுவது சாத்தியமே! அதைவிட அதிக நம்பிக்கையுடன் நமது கருத்துக்கள் மேலோங்கி நிற்கும்! குடியுரிமை, சுதந்திரம், சட்ட விதிகளில் நமது எண்ணங்கள் தழைத்தோட போகிறது!

இந்த போக்குகள் வரும் பொழுது, 2026 ஒரு புதிய உலக ஆணையை ('World Order') மட்டும் சந்திக்கப்போவதில்லை, நான்கு உலக ஆணையை சந்திக்கவிருக்கிறது! உலகம் நான்காக பிரிந்து இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது! அதாவது இரண்டு அட்சுகளால் சுழலப்படும் நான்கு துருவ உலகம் வர வாய்ப்புள்ளது! மக்கள் பலம் பொருந்திய குடிஆட்சி கொண்ட உலகம் ஒரு பக்கமும், கொடுங்கோன்மை மேலோங்கிய சர்வாதிகார ஆட்சி கொண்ட உலகம் மறுபக்கமும் ஒரு அட்சில் சுழலப்போகிறது! அதே போல சமசீர்தூக்கிய பலம் ('Balance of Power')கொண்ட நாடுகள் ஒரு பக்கமும், பன்னாட்டு சட்டத்திட்டங்களுக்கும், ஸ்தாபனங்களும் அடங்கி வாழும் நாடுகள் கொண்ட இன்னொரு பக்கமும் அடங்கிய இன்னொரு அட்சும் சுழல இருக்கிறது!

இதிலே அதிக வல்லமை படைத்த துருவமாக அமெரிக்காவும் அதை சார்ந்த இந்தியாவும் வர வாய்ப்பிருக்கிதறது! ஆனால் சரிந்து விழும் டாலர் மதிப்புகளும், உலகம் முழுக்க அதிக இராணுவ தடம் பதிப்புகளையும் கொண்ட அமெரிக்கா உலக நாடுகளால் கவர்ந்துழுப்பதை காட்டிலும் துரத்தி விடப்படுவதை அதிகம் காணலாம்! அதன் தொன்று தொட்ட தோழமைகளான ஐரோப்பிய ஐக்கிய நாடுகள், ஜப்பான், மற்றும் தெற்கு கொரியா போன்ற நாடுகள் அவ்வளவாக அமெரிக்க தலைமைக்காக, எவ்வாறு சோவியத் யூனியனிடன் நடந்த பனிப்போரில் ஆர்வம் காட்டினவோ, அவ்வாறு ஆர்வம் காட்டப்போவதில்லை!

உலகத்தின் மேற்கிலே பல்கேரியா, ரோமேனியா, நார்வே, சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன், மோடோவ்வோ, போன்ற நாடுகள் கொண்ட ஒரு அகண்ட ஐரோபியகுழுமம் குடியரசு ஆட்சி முறையை பெரிதும் நம்பி, அமெரிக்க, இந்திய நாட்டு குடிஆட்சிகளின் தன்மையில் கொண்ட நம்பிக்கையை தாங்களும் கொள்ள வாய்ப்பிருக்கிறது! ஆனால் அமெரிக்காவுடன் கூடிய உறவை துண்டித்துக்கொள்ள விரும்புவார்கள்! முன்பு சோவியத் பிளாக் என்றழைக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட சிறிய நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள் அனத்தும் வணிகம், மற்றும் முதலீடு, உதவித்தொகை பெறுவது போன்ற அனைத்திற்கும் ஐரோபிய குழுமத்தை நம்பி இருக்கப்போகிறார்கள்! சிறுக சிறுக ஐரோபிய வணிக முறை மற்றும் செயல்பாடுகளில் முற்றிலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள் இவ்வனைத்து நாடுகளும்!

ஐரோப்பாவின் கிழக்குப்பகுதி ரஷ்யா, சைனாவால் ஈர்க்கப்பட்டு, தங்களின் சர்வாதிகார ஆட்சி தன்மையை நிலைநிறுத்த முற்படுவார்கள்! அவர்கள் அனைவரும் பலதரப்பினை கொண்ட ஆட்சிஅமைப்பை ஏற்படுத்தி சர்வாதிகாரம் கொண்ட உலகத்திற்கு வழி வகுப்பார்கள்! ரஷ்யா ஐரோப்பிய வாழ்க்கை மதிப்புகளை தடுக்க எல்லா வகையிலும் முற்பட்டு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவார்கள்! சைனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு ஒளி விளக்காக அமையும்! தங்களின் ஆளுமையை விட்டுக்கொடுக்காமல், வளர்ச்சியடையவே முற்படுவார்கள், அதனால் அந்நாட்டு மக்களின் சுதந்திரம் அடக்கி ஆளப்படும்! சைனா, ரஷ்யா மற்றும் கஷக்கிஸ்தான், கிர்கிஷ்த்தான், தஜக்கிஷ்த்தான், உஜபெக்கிஷ்த்தான் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து ஷாங்காய் கூட்டுறவு கொள்கை என்ற ஒன்றை உருவாக்கி இப்பொழுது இருக்கும் பொருளாதார வல்லமை பொருந்திய, மற்றும் பொருளாதார அடக்குமுறை கொள்கைகளை கையாளும் G7 என்ற நாடுகளின் கூட்டமைப்புக்கு எதிர் குரல் கொடுப்பார்கள்! மேலும் பலதரப்பட்ட ஸ்தாபனங்களில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு ஐரோப்பிய குழுமத்தில் தங்கள் வணிக வல்லமையை வழுப்படுத்தி அமெரிக்காவை அடக்கி ஆள முற்படுவார்கள்

அடுத்த துருவம் நம்பிக்கை பிராந்தியம்-இது குடிஆட்சி முறைகளாலோ இல்லை சட்டவிதிகளாலோ விளக்கப்படும் ஒன்றல்ல! 2026ல் மதச்சார்பற்ற ஐரோபிய கண்டம் மத எதிர்ப்பு வாதத்தால் பந்தாடப்படும்! முஸ்லீம் உலகம் அதற்கு முதல் வரிசையில் நின்று ஆட்டுவிக்கும்! மத்திய கிழக்கு நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், ஈரான் போன்ற நாடுகள் ஒரு புதுவிதமான முஸ்லீம் குடியாட்சியினை கொண்டு வர முற்படும்! ஆனால் அதிகமான நாடுகள் எந்த அரசியல் மாற்றத்தையும் சமூக தேவைகளுக்கு ஏற்ப அவ்வளவு விரைவாக கொண்டு வருவதில் முனைப்பாக இருக்காது! சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் ஊழல்புரியம் சீமாந்தர்கள், இஸ்லாமியர்களால் துடைக்கப்பட்டு வெளியேற்றப்படுவர், அதுவும் பன்னாட்டு துணைக்கொண்டு!

அனத்து நாடுகளும் செல்வாக்கு கொண்ட புது கோளத்தின்( 'sphere of Influence') ஒரு பகுதியாக இருக்கப்போவதில்லை! இந்த செல்வாக்கினையுடய கோளங்களை அடைவதற்கான உலக சண்டையில் எந்தப்பக்கமும் சாயக்கூடிய நாடுகளின் மீது எல்லோர் கண்ணும் இருக்கும்! இந்த செல்வாக்கினை நிலை நிறுத்திக்கொள்ளும் போட்டியில் முற்படப்போவது தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசிய, காக்கஸ் என்றழைக்கப்படும் பகுதியான காஸ்பியன் மற்றும் கருப்பு கடலை ஒட்டிய பகுதியும் மத்தியகிழக்கு ஆசிய பகுதியும் தான்! எந்தப்பக்கமும் சாயக்கூடிய தன்மையில் உள்ள நாடுகளில் இந்தியா மிக முக்கியமான ஒன்று!

இந்த நான்கு துருவ உலகானது தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, தங்கள் வல்லமையை நிலைநிறுத்த எப்பாடுபட்டாவது சண்டை போடும் அளவிற்கு செல்ல வாய்ப்பில்லை, ஆனால் இந்த நம்பிக்கை பிராந்தியம் என்று சொல்லக்கூடிய துருவத்தில அதி தீவிர வாதம் வளர வாய்ப்பிருக்கிறது! ஆனால் இந்த நான்கு துருவங்களையும் கட்டிபோட்டு வைப்பது ஒற்றை பொருளாதார அமைப்பு ('Single Economic System'), அதில் அனைத்து துருவங்களும் போட்டி போடுக்கொண்டு வணிகம், வர்த்தகம், முதலீட்டினை அதில் ஒருவொருக்கொருவர் செய்து கொண்டிருப்பார்கள், அதுவே அனைத்தையும் சமன் செய்யும் மிருதுவான வல்லமை கொண்டிருப்பதால், ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உறுதியுடன் இருப்பது என்னவோ முற்றிலும் உண்மை!

நம் சினிமாக்கள் ஏன் உலகை வலம் வருவதில்லை?

போன பதிவிலே நான் எழுதின மாதிரி, அதுக்கு முன்னே என்னுடய 'சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!'ங்கிற பதிவிலே பின்னோட்டம் போட்ட இலவசகொத்தனாரின் கண்ணோட்டத்தை கருதியும் இந்த பதிவு! தொழில்நுட்பத்தை கையாண்டு திறம்பட நாம் எடுக்கும் படங்கள், பல ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்தாலும், அதை எல்லாம் சொல்லி கொள்வது போல இருந்தாலும், நம்முடய கதைகள், அதன் ட்ரீட்மெண்ட், மற்றும் கதையமைப்பு, களம், போன்றவற்றில் நாம் இன்னும் பழய பஞ்சாங்கமாக இருப்பதால் நம்மால் முன்னேற முடியவில்லை. தொழில்நுட்பங்கள், பிரமாண்டமாக படம் பிடித்து வெளியிடுவது எப்படி என்பதை நாமும் கற்றுக்கொண்டு, இந்தியபடங்கள் வர துவங்கி உள்ளன சிறிது காலமாக! மேற்கொண்டு இந்த 'பாலிவுட்' எனக்குறிக்கும் இந்தியப் படங்களுக்கு அதிக ஆர்வம் வெளிநாட்டவரிடம் வர துவங்கி உள்ளது! ஆனால் அதை சரியாக நாம் உபயோகித்து வெற்றி வாகை சூடுகிறோமா என்றால் அது தான் இல்லை!

முன்பெல்லாம் மொழி தெரியவில்லை என்றாலும்,அந்த ஹாலிவுட் ஆங்கில படங்களை ரசித்து பார்த்து விடுவது நம்மிடையே தொன்று தொட்டு வரும் வழக்கம்! வியாபார நோக்கின் காரணமாக, 'wider audience reach'க்காக அந்த படங்கள் எல்லாம் நம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வரதுவங்கி உள்ளன இப்போது! தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுகின்றன நம் நாட்டில்! ஆனால் இன்று உலகம் முழுக்க வியாபித்திருக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு 'Crossover Cinema' என்ற ஒரு வகை படங்களை நம்மவர்கள் எடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்தப் படங்களும் அதிகமாக இந்த வெளிநாடுகளில் ஓடினாலும், அப்படங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மட்டும் கவருகிறதா, இல்லை வெளிநாட்டவரையும் கவருகிறதா என்பதை பற்றி சற்று ஆராய்வோம்!

இதுக்கு முன்னே 70, 80 களில் 'parallel cinema' என்ற ஒரு கான்செப்ட் இருந்தது, அதாவது ஆர்ட் ஃப்லிம்ஸ், கமர்சியல் ஃப்லிம்ஸ்ன்னு ! சில படங்களை அப்போது பார்த்து விட்டு, அது கொஞ்சம் மெதுவா போனாலோ, இல்ல காட்சியை இழுத்தாலோ, சத்தமில்லாம, வசனமில்லாம காட்சிகள் நகர்ந்தாலோ, 'டேய் ஆர்ட் ஃபிலிம் மாதிரி எடுத்திருக்காண்டா' என்று தியேட்டரில் படம் பார்த்து விட்டு வரும் பொழுது நாம் கூக்குரல் இடுவதுண்டு. சத்யஜித் ரே, மிருணாள் சென்,ஆடூர் கோபலக்கிருஷ்ணன், அரவிந்தன் இப்படின்னு பல டைரக்டர்களை சொல்லிக்கிட்டே போகலாம், இந்த 'parallel cinema' எடுத்தவங்களை! சில முத்தான படங்களும் வந்தது! அதாவது அந்த காலத்திலே மரத்தை சுத்தி வெறும் பாட்டு படிச்சு, ஓடி திரிந்த மாதிரி எடுத்த படங்களின் மேல் கொண்ட வெறுப்பால், இந்த கமர்ஷியல் விஷயத்திலேருந்து கொஞ்சம் தள்ளி, உண்மை வாழ்க்கை முறை, யதார்த்தம், தத்துவங்களை சொல்லி படம் புடிக்க வந்த அந்த 'genre' படங்கள் தான் இந்த ஆர்ட் சினிமா, இல்லை 'parallel cinema' ன்னு சொல்ற ஒன்னு. இதை நம் அரசாங்கமே நிர்மாணித்து, அதுக்கு நிதி உதவி செஞ்சாங்க! அப்புறம் சினிமா கலைகளை கத்துக்குடுக்க ஃபிலிம் இன்ஸ்டிடுயூட் பூனாவிலேயும், பிறகு சென்னையிலும் ஆரம்பிச்சாங்க! அப்படி அந்த வகையிலே எடுத்து வந்த ஹிந்திப்படங்கள் எல்லாம் தனி ரகம், பெங்காலி, மலையாளப்படங்கள் பலவும் இந்த ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு அதிகமா இருந்தது! இன்னும் விவரமா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!

இந்த மாதிரி தமிழ்லயும் அப்பொழுது வரத்தொடங்கிய படங்கள் நிறைய! ருத்ரையான்னு ஒரு டைரக்டர் எடுத்த சிலப்படங்கள், அதிலே 'அவள் அப்ப்டித்தான்' குறிப்பிட தக்க ஒன்னு! அப்புறம் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்டுயூட்லருந்து வந்த டைரக்டர்கள் பாலு மகேந்திராவிலருந்து கொஞ்சம் ஆர்ட்டையும் கமர்சியலையும் கலந்தடிச்சு, நல்ல கதைகளை விஷவலா தரத்துவங்கினாங்க! அப்பவும் அப்படங்களோட எல்லை தமிழ்நாடு தான், தமிழ் மக்கள் தான், அதை தாண்டி போறதில்லை! பிறகு மகேந்திரன், பாரதிராஜான்னு தமிழ் படத்தின் மாற்றங்கள் எல்லாம் கொஞ்சம் மாறி வந்த போதிலும் இந்த டிஸ்டிங்ட்டா, வித்தியாசம் ஆர்ட், கமர்ஷியல் படங்களுக்கு இருக்கத்தான் செஞ்சது!

பிறகு, கம்ப்யூட்டர், உலகமயமாக்கப்படல்ன்னு, உலகம் சுருங்கி, நம்ம எல்லாரும் இந்த அமெரிக்கா பக்கம் படை எடுக்க ஆரம்பிச்சோன, நல்ல சாஃப்ட்வேர் கம்பெனியிலே வேலை பார்த்தவங்களுக்கு, சினிமா படம் எடுக்கணும்னு ஆசை வந்து, இந்த ஊரு கலாச்சாரம், நம் இந்தியகுடி மக்கள் எப்படி இங்கே வாழ்றாங்கன்னு கதை சொல்லி எடுத்து வந்த படங்கள் தான் 'Crossover Cinema' சொல்ற அந்த வகையை சேர்ந்தது. அதுவும் வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களை கவனம் வச்சி பிணைக்கப்பட்ட கதைகள். முதல்ல இந்த கெமிக்கல் இஞ்சினியர், நாகேஷ் கணுக்கர்ன்னு நம்ம ஆந்திராகாரரு, எடுத்து வந்த 'Hydrabad Blues' சும்மா பிச்சிக்கிட்டு ஓடிச்சி, அப்பறம் 'Bend it like beckham' லருந்து ஆரம்பச்சி, இதோ இப்ப 'Mistress of Spices' வரைக்கும் படங்கள் வந்த வண்ணம் இருக்கு! எல்லாமே இந்திய வழி அமெரிக்க குடிகளை கருத்தில் கொண்டு வியாபரம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் எடுத்தது! ஆனா வெளி நாட்டுக்காரங்களை அது எந்த பாதிப்பும் ஏற்படுத்திலே! நம் இந்திய நாட்ல இருக்கிற ஜனங்க, குறிப்பா, தமிழகத்தில உள்ளவங்க, இந்த படங்களை எல்லாம் பார்த்திருப்பீங்களான்னு தெரியாது, வாங்க, இந்த படங்கள் எல்லாம் என்னா, எப்படி களம் கொண்டு அமைக்கப்பட்டது அப்படின்னு பார்க்கலாம்!

அதுக்கு போறதுக்கு முன்னே, நம்ம கதைகளை ஏன் வித்தியாசமா சொல்றதில்லைன்னா, அந்த கால புராணத்திலருந்து ஆரம்பிக்கறது, 'கணவனே கண் கண்ட தெய்வம், 'மணாளனே மங்கையின் பாக்கியம்', 'மனைவி என்பவள் தனிப்பிறவி', கொடுமையான மாமியார் கடைசியில் திருந்தி மருமகளை ஏற்பது, 'தர்மமே வெல்லும்', நல்லது கெட்டதில் கடைசியில் நல்லதே ஜெயிக்கும், இப்படின்னு நம்மகிட்ட புதஞ்சு போன விஷயங்கள், அந்த கால இராமயண, மகாபாரத்திலேருந்து இருக்கு! மகா பாரதத்திலே பாஞ்சாலி அஞ்சுப்போரோட வாழ்ந்ததா சரித்திரம் வந்தாலும் அதை ஒத்துக்கொண்டு வித்தியாச கதை களம் அமைக்க வருவதில்லை யாரும்! கமலஹாசன் பாடின மாதிரி 'பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை பாராட்ட யாரும் இல்லை'ன்னு அது மாதிரி தான் நம் மனோபாவம்! அதுக்குள்ள கதை சொல்லியாகணும், அதை கொஞ்சம் தாண்டினா, டைரக்டரும், புரடியூசரும், வியாபாரங்கிற ஒன்னை போட்டு தள்ளி விட்டுடுவாங்க! மாறி வரும் காலத்துக்கேற்ப இவங்க ஏன் மாறி கதை சொல்லமாட்டேங்கிறாங்கங்கிறது தான் புரியாத புதிர்!

இந்த சட்ட திட்டங்களுக்குள் படம் எடுக்கணும்னு நினைச்சா நம்ம எப்படி வெளிநாட்டவரை ரீச் ஆகிறது! இதுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்கு! ஒருதடவை இந்த ஆஸ்கர் பட போட்டிக்கு நம்ம இந்தியாவின் பெருமைன்னு சொல்லிக்கிட்டு வந்த 'மதர் இண்டியா' படம் பார்த்துட்டு ஒரு அமெரிக்க விமரிசகர் சொன்னாராம், எனக்கு சரியா லாஜிக் புரியல, வாய்க்கும் ஓன்னும் கிடைக்காம பஞ்சம் பட்டினியோட இருக்கிறதோட, அந்தம்மா, அந்த நிலச்சுவாந்தாரோடு ஒரு ராத்திரி படுத்து தூங்கி தன் பசியை போக்கிக்க வேண்டியது தானே, அப்படி எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்னு கேட்டாராம்! இது தான் இந்த நாட்டவர்களின் கண்ணோட்டம்! இதை அழகா ஆங்கிலத்திலே சொன்னா இப்படி தான், 'This is a case of pseudo morals overtaking logic — a disease that plagues the majority of our films'. ஆனா நீங்க சொல்லுவீங்க நம்ம ஜனம் இதை எல்லாம் ஒத்துக்குமான்னு! ஏன் இப்பதான் டெலிவிஷன் தாக்கம் கிராமத்து வரைக்கும் போயிடுச்சே, எம்டிவி வரைக்கும்! ஆனா அந்த பழைய பஞ்சாங்க கதை ட்ராக்லருந்து நமது தயாரிப்பாளர்கள் மாற முடியல்லை! எல்லாமே மாறி போச்சு, ஆனா வாய்மையே வெல்லும், நல்லது கெட்டதை கொள்ளும்னு பழைய லாஜிக்லே போறது தான் கஷ்டம்! கதையை கொஞ்சம் மாத்தி அதை சொல்லும் விதத்திலே சொன்னா மக்கள் ஏன் ஏத்துக்க மாட்டங்கன்னு தெரியல்லை,ம்.. இது நம்ம மெயின்ஸ்ட்ரீம் சினிமா கதை, சரி 'Crossover Cinema' என்னா கதைன்னு பார்ப்போம்!

இந்த 'Crossover Cinema' எல்லாம் நகரத்திலே வசிக்கிற கும்பல கருத்தில் கொண்டு, அதுவும் டிஸ்கோத்தே, ஆட்டம் பாட்டுன்னு ஆடி திரியிற இளசுகளை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா, இல்லை 'cross clutural' படங்களா?, இல்லை பலமொழிகளில் எடுக்கப்படும் படங்களா?, இப்படின்னு நீங்கள் கேள்வி கேட்கலாம்! இதிலே முக்காவாசி உண்மை, ஆனா அதுவே முற்றிலும் உண்மை இல்லை! இந்த மெயின்ஸ்ட்ரீம் படங்களிலருந்து கொஞ்சம் மாறுபட்டு, பைத்திக்காரத்தனமா மரத்தை சுத்தி பாட்டு பாடாம, இல்லே பாட்டே இல்லாம, அப்புறம் சுவிட்சர்லாந்து, நியிசிலாந்துன்னு பறந்து போய் டூயட் எல்லாம் பாடாம, சில புதுமையா குளிர்ச்சியான கதை கண்ணோட்டத்திலே, புதுமுக நடிகர்கள், நம்ம தினசரி பார்க்கிற ஆளுங்க மாதிரி(ரொம்ப தடவை பவுடர் பூசன நம்ம நடிகை எல்லாம் பார்த்துட்டு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கான்னு டூப்பு உடுவோமே, அப்படி இல்லாத!), குறைந்த பட்ஜெட்ல எடுத்த படங்கள் வெறும் மல்டிபிளக்ஸ்ல மட்டும் நகரங்கள்ல ஓடி, ஆனா சந்திரமுகி மாதிரி 25 வாரமெல்லாம் ஓடற படங்கள் இல்லை இவைகள்! ஆனா சில சமயம் ஜீவன் உள்ள கதைகள், நல்ல படியா படமாக்கப்பட்டு வரக்கூடியவை!

நான் ஏற்கனவே சொன்னேன்னே அந்த 'parallel cinema' வோட கம்பேர் பண்ணலாமான்னா, அதுவும் இல்லை, அந்த காலத்திலே இந்த மாதிரி 'parallel cinema' படங்களை பார்க்க புத்திசாலித்தனம் வேணும்னு சப்பை கட்டு கட்டுவாங்க இல்லை, அப்படி இல்லாம, ஆனால் மெயின் ஸ்ட்ரீம்னு நாம் சொல்ற படங்களுக்கு எந்த ஆபத்து வராம அது பாட்டுக்கு வந்துக்கிட்டிருக்கும் படங்கள்னு சொல்ல முடியாது தான்! இருந்தாலும் மொத்தத்திலே சொன்னா ,காசு சம்பாரிக்க இன்னொரு வழி! இப்ப இருக்கிற இந்த 'Bollywood'ங்கிற கிரேஸ்ஸை யூஸ் பண்ணி சீக்கிரம் காசு பண்ண வரும் படங்கள், ஆனா இதுவும் வெளி நாட்டவர்களை அவ்வளவா பாதிப்பு ஏற்படுத்தவில்லை, ஆனா நம்ம ஊர் மக்கள், பரவலா இங்கே இருக்கிறவங்க கண்டு களிக்கும் படங்கள்! மேற்கொண்டு அங்கேயும் இங்கேயும் மாறி வருக் கதை களங்களை கொண்டு, ட்ரீமெண்ட் எல்லாம் வித்தியாசமாக செய்து எடுக்கப் பட்ட இந்த படங்கள் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்!

இப்பொழுது வரும் நிறைய ஹிந்திபடங்கள் நல்ல வகையில் எடுக்கப்பட்டு, வழிவழியாக கொண்டாடி வரும் காட்சி அமைப்புகளை மாற்றி அமைத்து எடுக்கப்படுகிறது! தமிழ்ல நம்ம கொஞ்சம் மந்தம் தான்! படக்கதைகள் சொல்லும் விதம், காட்சி அமைப்பு இது எல்லாத்திலேயும் சொல்லி கொள்கிற மாதிரி படங்கள் வருவதில்லை! வேணும்னா அந்த நல்ல காரியத்தை செஞ்சுக்கிட்டு வர்றது நம்ம செல்வராகவன் மாதிரி கோஷ்டி தான்! (பழைய பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், மணிரத்னம், பாலு மகேந்திரான்னு இருந்தாலும், அவெங்க கதையில்லாம் நான் மேலே சொன்ன அந்த பிரின்சிபல் குள்ள தான் இருக்கும், அதுக்குள்ள எவ்வளவு வித்தியாசம் பண்ண முடியுமோ, அந்த காலக்கட்டங்கள்ல செஞ்சாங்க,ஆனா, இப்போ, நல்ல டைரக்டர்கள் இல்லவே இல்லை!)ஆனா ஹிந்தி படங்கள் நல்லதொரு மாற்றம், நீங்க எத்தனை பேரு படம் பார்ப்பீங்களோ எனக்குத் தெரியாது, பாஷை தெரியாதுங்கிற காரணமே வேணாம், வசனத்தை வச்சி காட்சி நகர்வுகளை புரிஞ்சிக்கிட்ட அந்த காலம் போயே போச்சு, எல்லாமே விஷவல்ஸ் தான்! அப்படி பண்ற கூட்டம் கரன் ஜொகர்லருந்து, நம்ம 'சிவா' படம் எடுத்தாரே ராம் கோபால் வர்மா, சஞ்சய் லீலா பன்சாலி, அப்படின்னு ஏகப்பட்ட பேர் நல்லா படம் எடுக்கிறாங்க!

பிறகு இப்ப இவெங்க எடுக்கும் படங்களின் கதை களங்கள் இந்த நாட்டை பேஸ் பண்ணி இருக்கும்! 'கல் ஹோ நா ஹோ'ன்னு ஒரு படம் எத்தனை பேரு பார்த்திருப்பீங்களோ, கொஞ்சம் இந்த ஊரு ஆடியன்ஸ அட்ராக் பண்ண காட்சிகள் கொஞ்சம் வந்தாலும், கடைசியிலே இதய நோய்ல செத்து போறதாலே காதலியை வேற ஒருத்தன் கிட்ட புடிச்சி கொடுக்கிற நம்மூரு 'வாழ்வே மாயம்', பயணங்கள் முடிவதில்லை மாதிரி கதை தான்! ஆனா அதை அசத்தலா எடுத்த விதம் ட்ரீட்மெண்ட் எல்லாம் கண்ணுக்கு விருந்து! இப்ப ஹிந்திலே இப்படி வெளிநாடுகள்ல வசிக்கும் இந்தியர்களை பேஸ் பண்ணி வரமாதிரி கதை அமைச்சு, ஊரு சுத்தி பாத்துட்டு படம் புடிச்சு வெளியிடுறாங்க! சமீபத்திலே வந்த 'சலாம் நமஸ்த்தே' அப்படி தான், நம்ம ஊரு எஸ்ஜே சூர்யா எடுத்த அ ஆ படக்கதை, ஆனா அதை நல்ல விதமா எடுத்திருந்தாங்க!

ஆக நான் மொத்தத்திலே என்ன சொல்ல வர்றேன்னா, இப்ப உலகமயமாக்கல்ன்னு எல்லாரும் எல்லா இடத்துக்கும் போக ஆரம்பிச்சி, எல்லா கல்ச்சரையும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க! உதாரணத்துக்கு, நம்ம ஊருக்கு சாஃப்ட்வேர் படிக்க வந்திருக்கும் வெளிநாட்டு பொண்ணுக்கும், கால்செண்டர்ல வேலை பார்க்கறவனுக்கும் வரும் காதல், அதனால் உண்டாகும் சிக்கல், பிணக்கம், அப்படின்னு கதை களம் அமைச்சிக்கிட்டு இரண்டு கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி படங்கள் எடுக்க முயற்சி பண்ணலாமே!(நான் சும்மா ஐடியா கந்தசாமி மாதிரி ஏதோ சொல்லிட்டேன், அப்படி படம் எடுத்து வந்தா சந்தோஷம் தான்!) ஆனா இந்த 'Crossover Cinema'ங்கிற படங்கள் மட்டும் 'wider audience'க்காக எடுக்கப்படுமான்னு தெரியல்லை, ஏன்னா எடுக்கப்படும் கதை களம், ட்ரீட்மெண்ட் எல்லாத்துக்கும் சில கட்டுபாடுகள் இருக்கு! ஆனா கொஞ்சம் போல படங்கள், இந்த டைட்டானிக், லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஷோலே, லகான் மாதிரி எல்லாரையும் போய் சேரக்கூடிய படங்கள் எடுப்பது கஷ்டம்! ஆனா முயற்சின்னு ஒன்னு இருந்தா முடியாதது ஒன்னும் இல்லையே!