Saturday, April 29, 2006

கருவிலே உருவான அற்புதம்!

அந்த காலத்திலே சிவசங்கரி எழுதிய கதை 'ஒரு சிங்கம் முயலாகிறது' படிச்சிருக்கிங்களா? இல்ல அந்த கதையை வச்சு வெளி வந்த படம் 'அவன் அவள் அது' பார்த்திருக்கிறீங்களா? சரி அதுவும் இலேன்னா இப்ப சமீபத்தில வந்த 'கண்டேன் சீதையை' படம், விக்ரம் செளந்தர்யா நடிச்சது பார்த்திருக்கீங்களா? சரி அதுவும் இல்லேன்னா ஹிந்திலே ஒரு படம் வந்துச்சே 'சோரி சோரி சுப்கே சுப்கே' ன்னு சல்மான்கான், ராணிமுகர்ஜி, ப்ரீத்தி சிந்தா எல்லாம் நடிச்சது. ஏன் கேட்கிறேன்னா, நான் மேலே சொன்ன படங்கள், அந்த சிவசங்கரி கதை, எல்லாம் 'வாடகை மனைவி' என்கிற கருவை மையமா கொண்டது. குழந்தை பெறமுடியாம போயி அதுக்காக இன்னொரு பெண்ணின் கருவிலே, வாடகைக்காக அமர்த்தப்பட்ட பெண்ணின் (Surrogate mother) கருவிலே குழந்தை சுமக்க, செயற்கை முறை கருத்தரிப்பால் (artificial insemination) குழந்தை உண்டாக்கி (சில சமயம், நம்ம சினிமாகாரங்க, கதைக்கு சூடு வேணும்னு இயற்கையாவே இணைய வச்சு, சூடேத்தறது வந்து.. அது தனிக்கதை!) அப்புறம் சென்டிமெண்டலா பல முடிச்சோட சிக்கல்களை அவுக்கும் கதையை கொண்ட படங்கள் தான் நான் மேலே சொன்னது. சரி இப்ப அதுக்கென்னான்கிறீங்களா, இருக்கே, இன்னைக்கி பலத்த சர்சைக்கிடையே நடைப் பெற்று வரும் ஆராய்ச்சி எதுன்னா இந்த 'Human Cloning and Embryonic Stem Cell Research', அதாவது கருவிலருந்து எடுக்கப்பட்ட கருவணு('Stem Cell') கொண்டு எப்படி பட்ட அற்புதம் இந்த மருத்துவ உலககுக்கு வரப்போகுது, அந்த ஆராய்ச்சிக்கு ஏன் உலகத்தில இவ்வளவு எதிர்ப்பு இருக்குங்கிற கதை தெரியுமா உங்களுக்கு? தெரியலைன்னா கீழே பார்ப்போம் அது என்னான்னு!

கொஞ்சம் விவரமா உள்ள போகுமுன்னே, நீங்க மகாபாரதம் கதை படிச்சோ இல்ல பார்த்தோ இருந்தீங்கன்னா, அதில் காந்தாரிக்கு 100 கெளரவர்கள் எப்படி பிறந்தாங்கன்னு தெரியுமில்ல. வேணும்னா 'பாலபாரதம்'னு ஒரு படம் வந்தது, அந்த பட கேசட்டு வாங்கி பாருங்க. அதில முனிவர், காந்தாரி கருவுற்றிருந்த வயித்தில இருந்த வந்த பிண்டத்தை ஒரு 100 கூறா போட்டு, அதில மூலிகை ஓமம் எல்லாம் போட்டு முனிவர் ஒரு இரண்டு வருஷம் தபஸ்யம் பண்ணி பொறந்த குழந்தைங்க தான் கெளரவர்கள்! ஆக அந்த மகாபரத்தில விவரிக்கிற முறைகள் இருக்கே, அதே மாதிரி தான் கருவிலிருந்து பிரித்தெடுக்கும் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி, வளர்ச்சி எல்லாம் நாம தொலைச்ச அந்த பழயகால விஞ்ஞானம்!

இந்த கருவணு ('Stem Cell') என்னான்னு ஒரு விஷேஷமான தனித்துவம் வாயந்த உயரணு, மத்த உயிரணுக்கள் போல இல்லாம, எந்த உறுப்பையும் சார்ந்தது கிடையாது. அதாவது நம்ம உடம்புல இருக்கிற மூளை, தோல், இருதயம் போன்ற உறுப்புகள்ல இருக்கிற உயரணுக்கள், அந்த அந்த உறுப்புகள் ஒழுங்காக பணிபுரிய உண்டான செயல்கள் மட்டும் செய்யக்கூடிய வகையில் அமைந்தவை. அதற்காக உண்டான ஜீனோம்கள் அமைந்த செல்கள் தான் இந்த உறுப்புகளில் இருக்கும் செல்கள். இந்த ஜீனோம் பத்தி கொஞ்சம் விவரம் வேணும்னா, நான் ஏற்கனவே போட்ட பதிவு, ஜீனோம் - Who is your Daddy? போய் கொஞ்சம் படிச்சிட்டு வாங்க!
ஆனா இந்த கருவணுக்கள் எந்த உறுப்புகளையோ, எந்த ஒரு உடம்பின் பாகங்கள் செய்யக்கூடிய செயல்களையும் சார்பற்று இருப்பது தான் இந்த ஸ்டெம் செல் என்பது. இந்த கருவணு குழந்தை தரிச்ச கருமுட்டையில் உள்ள ஒன்னு. அதாவது குழந்தை முழு வளர்ச்சி அடையறதுக்கு முன்னே கருத்தரிச்ச சினைப்பையில இருக்கிற அந்த ஜீவப்பொருள்ல உள்ள அணுதான் இந்த கருவணு, இதை ஆங்கிலத்திலே 'ஸ்டெம் செல்'('Stem Cell')ன்னு சொல்லுவாங்க! மத்த அணுக்கள் மாதிரி, தன்னை பிரதி எடுத்து, தானே பெருகும் திறன் கொண்டவை. ஆனால் இந்த ஸ்டெம் செல்கள், மற்ற செல்களாக மாறக்கூடிய தகுதிபடைத்தவை, அதாவது மனித உடம்பில் இருக்கும் 200 வகை அணுக்களில் எந்த அணுக்களாகவும் மாறக்கூடிய திறன் கொண்டவை!

1998 ம் ஆண்டு, விஞ்ஞானிகள், இந்த கருவணுவை, கருமுட்டையிலிருந்து தனியாக பிரித்தெடுத்து அதை பரிசோதனக்கூடத்திலே வைத்து வளர்ச்சியடைய செய்து, அதை எந்த விதமான அணுக்களாகவும், பழுதுப்பட்ட உறுப்புகளில், இதயமோ, நரம்பு மண்டலங்களோ, இல்லை இரப்பையில் உள்ள சுரப்பியோ ( pancreas), அதற்கு தேவையான அதன் உயிரணுக்களாக மாற்றி அதை புகுத்தி தசைகளாகவும், அந்த நன்கு இயங்கும் உறுப்புகளாக மாற்றும் சிகச்சை செய்ய வல்லமை படைத்த உயிரணு இந்த ஸ்டெம் செல் என அறிந்து கொண்டனர்! இதுவே ஆரம்பம்! மேற்கொண்டு இதை போன்ற இன்னொரு ஸ்டெம் செல், அதாவது ஸ்டெம் செல் போன்ற குணாதிசயத்தை கொண்ட உயிரணுக்கள், வளர்ந்த மனிதனின் இரத்தத்திலிருந்தும் எடுக்கலாம் என்றும், அதற்கு 'adult stem cells' என்று கூறி அதிக காலமாக மருத்துவ சிகிச்சைகளில் உபயோகத்தில் இருந்ததும் தெரிந்ததே!ஆனால் இந்த 'adult stem cells' களையும் அந்தந்த உடல் உறுப்புகளில் சார்ந்த உயிரணுக்களாக மாற்றும் திறனையும் கண்டறிந்தனர். அந்த மாற்றும் முறைக்கு 'adult stem cell plasticity' என்று பெயர்! இந்த இரண்டு வகை ஸ்டென் செல்களுக்கும் அந்த மாற்றும் திறன் இருந்தாலும், இந்த 'adult stem cells' உபயோகிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதையும் கண்டறிந்தனர். மேற்கொண்டு, இந்த செல்களை கொண்டு முழுமையான சிகிச்சை மருத்துவம் ('cell-based therapies' )முழுமை அடைய இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதனை உபயோகத்தில் கொண்டுவர உலகம் எங்கிலும் விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்! ஆனால் இந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு நிறைய எதிர்ப்புகளும், அந்த ஆராய்ச்சின் குளறுபடிகளும், இன்றைக்கு மிகப்பெரிய செய்திகளாக வருகின்றன. நம்மள்ல எத்தனை பேருக்கு இதுள்ள ஆர்வமா, என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்ப அப்ப CNN,BBCல வர்ற நியூஸை பார்க்கிறீங்களோ எனக்குத் தெரியாது. சில சமயம், நான் இதை பாதி புரிஞ்சும் புரியாமலும் கேனத்தனமா பார்த்துட்டு, அப்புறம் அது விட்டுடறதோட சரி. மேலே என்னான்னு போய் பீராஞ்சப்பதான் நிறைய விஷயமே விளங்குச்சு. நீங்களும் அப்படித்தான்னா, தெரிஞ்சக்க இஷ்டம்னா, வாங்க கீழே பார்ப்போம்!

இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியில முக்கியமா என்னான்னா, சரியா இந்த உயிரணுக்களை ('Stem Cell') எல்லாம் பிரிச்செடுத்து, அதை பரிசோதனைக்கூடத்தில வளர்த்து (culture ல வளர்த்து) அதை ஸ்டெம் செல்லுதான் நிருபிக்கிறதுக்குதுங்கிறது ஒரு பெரிய சவால்! அதுவும் ஆராய்ச்சிக்குன்னு எடுத்துக்கிறது இந்த மிருகங்களோடது தான், அதுவும் மிக்கியமா சுண்டெலியோடது! இதை ஒரு 20 வருஷமாவே பெரும்பாலும் இந்த எலியிலருந்து எடுத்து தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா 1998ம் ஆண்டு,'James Thomson' ங்கிறவரு, அமெரிக்காவில உள்ள விஸ்காஸின் பல்கலைகழகத்தில், மனித கரு முட்டையிலிருந்து எடுத்து உயிரணுவை பரிசோதனைக்கூடத்தில வளர்த்து அதை தொடர்ந்து வளர்ச்சி அடைய செய்ய வச்சாரு, அதே மாதிரி 'John Gearhart' ங்கிறவரு 'Johns Hopkins' பல்கலைகழகத்திலயும் வளர்ந்த மனித கருவிலருந்து எடுத்தது 'human embryonic germ cells'ங்கிற வகையை சார்ந்த்து. இந்த ஆராய்ச்சிகளில் முக்கியமானது இந்த cell "lines" ன்னு சொல்லக் கூடிய அந்த உயிரணு தொடர்ச்சி முக்கியம், அதவாது செல்களில் பெருக்கம் வளர்ச்சி, நிறைய நாட்களுக்கு இறந்து போகாமல்! அப்பொழுது தான் அதை பற்றி மேற்கோண்டு ஆராய்ச்சி செய்து மத்த செல்களாக மாற்றம் செய்விக்கும் முறையை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கும் முறையை கண்டறியவும் தோதுவா இருக்கும். அப்புறம், நான் சொன்ன அந்த பழுதுபட்ட உடலுறுப்புகளில் இந்த 'cell-based therapies' சிகிசை செய்ய நிறைய இந்த கரு உயரணுக்கள் தேவை! அங்கதான் சிக்கலே!

ஆக இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்னான்னா, சில நோய்கள் என்ன தான் மருந்துக்கள், மாத்திரைகள் சாப்பிட்டாலும், அதை கட்டுபாடில் வைத்து கொள்ள முடிகிறதே தவிர அதை முற்றிலுமாக குணப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்ட நோய் என்னான்னா, முதல்ல சர்க்கரை நோய்(diabetes), பிறகு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் இருதய நோய் (chronic heart disease), பக்கவாதம் இல்ல நரம்பு தளர்ச்சி (Parkinson's disease), கல்லீரல் நோய், கடைசிதருவாயில் இருக்கும் சிறுநீரக நோய், கடைசியா புற்று நோய்.இந்த நோய்களுக்கெல்லாம் இந்த ஸ்டெம் செல் கொண்டு அளிக்க போகும் சிகிச்சை முறை ('cell-based therapies')தான் துயர் தீர்க்கும் மிகப்பெரிய சிகிச்சை! (முக்கியமா மொத்த உலகமும் எதிர்பார்ப்பது இந்த சர்க்கரை நோய் தீர்க்கும், ஆக முற்றிலும் குணமாக்கும் அந்த நோய் தீர்க்கும் சிகிச்சைக்காக!) அதற்காக நடந்துவரும் ஆராய்ச்சிகள் தான் இப்பொழுது இந்த 'Stem Cell Research' என்பது! இன்றைக்கு இருக்கும் சிகிச்சை முறையிலே இந்த மாற்று உறுப்பு பொருத்துதல் ('transplantation') எப்படியொரு வெற்றி பெற்ற சிகிச்சையாக இருக்கிறதோ, இந்த மாற்று ஸ்டெம் செல்களின் முறை ஒரு பெரும் வெற்றியாக வர வாய்ப்பு இருக்கிறது! ஆனால் இன்னைய தேதிக்கு இந்த செல்களை எடுத்து பொருத்தி சிகிச்சை பண்ணினால் நமது உடம்பு ஏற்பதில்லை. ஆக அந்த ஏற்று கொள்ளும் வகையிலே இந்த உயிரணுக்களை மாற்றி அமைத்து சிகிச்சை ஏற்படுத்தி கொள்ள இன்னும் இந்த ஆராய்ச்சியிலே பலகாத தூரம் போக வேண்டி உள்ளது! ஆனாலும் அந்த சிகிச்சை முறை கனிந்து வரும் காலம் அதிக தூரமும் இல்லை!

இப்படி நடந்து வரும் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் ஏனென்றால், இந்த ஸ்டெம் செல்களை வளர்ந்து வரும் கருவிலிருந்திருந்து பிரித்தெடுப்பதால், ஒரு ஜீவனை, சிசுவை கொல்ல வேண்டும். அப்படி வளரும் மனித சிசுவைக் கொன்று அதை ஆராய்ச்சியின் உபயோகத்திற்கு உட்படுத்துவது பெரிய பாவம் என்று மதத் தலைவர்கள் கோஷமிடுவதால், ஆராய்ச்சி ஒழுக்கதிற்கே ('Research Ethics') பாதகத் தன்மை விளைவிப்பதாக விஞ்ஞான சமூகத்தில் சிலர் கருதுகின்றனர்! ஆனால் இந்த ஆராய்ச்சியை ஆதிரிக்கும் சிலர், மனித குலத்துக்கே வாழ்வளிக்கக்கூடிய, குணப்படுத்த முடியாத வியாதிகளை குணபடுத்தும் சிகிச்சைகளை வழிகொடுக்கும் ஆராய்ச்சி இது என்று கூறுகின்றனர், அதுவும், நாங்கள் யார் கருகலைப்பில் ஈடுபடிகின்றனரோ அவர்களிடமிருந்து தான் அதை பெறுகிறோம், ஆக இது ஒன்றும் பாவமில்லை என்று வாதிடுகின்றனர். மேற்கொண்டு தனியார் மூலம் நிதி உதவி பெற்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருந்த நிறுவனங்கள், இப்பொழுது அரசாங்க நிதி உதவி பெற முயற்சிப்பதால், பெரும்பான்மையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன! இப்படியாக சர்ச்சையுடன் சென்று கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியிலே சில குளறுபடிகலும், சில மோசடிகளும் நடந்தவண்ணம் இருக்கினறன.

போன மாதத்திலே தென் கொரியாவிலே, Dr. Hwang என்பவர் இந்த ஸ்டெம் செல் ஆராயச்சி பற்றி ஒரு முக்கியமான உண்மைகளை கண்டுபிடித்ததாக அவர் வெளியிட்ட கண்டுபிடிப்பில், அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளும் படியான கருத்துகளும் சங்கதிகளும்(stem cell lines Data) இல்லை என்றும், அனத்தும் மோசடி என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! இதற்காக, அவர் எடுத்து கொண்ட முட்டைகள் 185 என்று வெளியிட்டார்,ஆனால் இவை 2200 மேற்கொண்டு இருக்கும் என அறியப்பட்டுள்ளது. இதற்காக அவர் முட்டை பெற்ற கர்ப்பம் தரித்த பெண்களுக்கு தலா 1400 டாலர் கொடுத்ததாகவும், இது அந்நாட்டு அவ்வாரய்ச்சியின் சட்ட திட்டத்துக்கு புறம்பானதென்றும், இதிலே அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரு பெண்களும் தங்கள் கருவுற்றிருந்த முட்டைகளை கொடுத்து உதவியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது அந்நாட்டு அரசின் பல லட்ச டாலர்கள் உதவியுடனும், சரியான் ஒழுக்க கட்டுபாட்டுடனும் நடக்க வேண்டிய ஒரு ஆராய்ச்சி. ஆனால் Dr. Hwang அனைத்தையும் மீறி ஒழுக்கமின்றியும், மோசடியுடணும் நடந்த இந்த அராய்ச்சியின் விளைவு பல பாதிப்புகளை இந்த ஆராய்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. அதனால் உலகெங்கும் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இப்படி அநேக எதிர்ப்புகளையும் தாங்கி நடந்து வரும் இந்த ஆராய்ச்சி மனித குலத்துக்கு நல்லது செய்யாவிடினும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல் எடுத்து இப்பொழுது ஆராய்ச்சியில் இருக்கும் நிலை மாறி சிகிச்சை நிலக்கு மாறினால், நிறைய உயிரணுக்கள் தேவை படும் பொழுது இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக்கப்படும், அப்பொழுது ஏழ்மை நிலையில் இருக்கும் கருவுற்ற பெண்கள் தங்கள் சிசுக்களை கொன்று இந்த சிகிச்சைக்கு தேவையான கரு உயிரணுக்கள் தர முன்வந்து, இது எப்படி பட்ட பயங்கரமான நிலைக்கு வரக்கூடும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது!

Tuesday, April 25, 2006

காசேதான் கடவுளடா!

நான் டெல்லியிலே இருந்தப்ப, தருமி எழுதிய பதிவு மாதிரி'பிள்ளையாரும் பால் குடித்தார்…' மாதிரி ஒரு விஷயம் பத்து வருஷ முன்ன நடந்தது. அதை வெகுவா நம்புற ஜனங்கள் மட்டுமில்லாம, மெத்த படிச்ச நம்ம ஆளுங்களும், அறிவியல் தர்க்கம் பண்றவங்களும் 'capillary action' ன்னும், 'surface tension' னும் போட்டுவுட்டுகிட்டு அதை justify பண்ணிக்கிட்டு இருந்தை இப்ப நினைச்சிக்கிட்டாலும் சிரிப்பா தான் வருது! இந்த கதை டில்லின்னு இல்லாம லண்டன் வரை நம்மூரு பிள்ளையாரை வச்சி விளையாண்டது பத்தி சில பேரு ஆச்சிரியபடலாம். இதெப்படி மேலை நாட்ல இந்த கூத்து அப்படின்னு. ஆனா இந்த சாமி, கோவில் விஷயங்க இங்கே அமெரிக்காவிலே எப்படி ஒரு பெரிய வியாபாரமா வியாபிச்சு இருக்குங்கிறதை பத்தி ஒரு சின்ன பார்வை பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு. அது எப்படி இங்கே உள்ள சர்ச்சுங்க எல்லாம் ஒரு பெரிய கார்ப்ரேட் வியாபாரத்தலமா இயங்கிக்கிட்டு இருக்குங்கிறதை, சுவராசியாமா நீங்க பார்க்கலாம். சாமி, கோயிலு, பூஜை, புணஸ்காரம்னு காசு புடுங்கும் கூட்டம் நம்ம ஊர்ல மட்டுமில்லை, இங்கேயும் தான், அதுவம் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில எம்பிஏ படிச்சிட்டு எவ்வளவு பெரிசா செஞ்சுக்கிட்டிருக்காங்க தெரியுமா?

நம்ம சினிமாக்கள்ல காமிக்கற மாதிரி மரத்துக்கு மஞ்சத்துணியை கட்டிவிட்டு காசு பார்க்கும் கும்பலுங்க நிறைய, அதே மாதிரி அங்கங்க திடீர் கோவில் முளைச்சு பூஜை, பாட்டுன்னு அமர்க்களம் படுத்துவாங்க. கவுண்டமணி ஒரு படத்தில, மஞ்சத்துணியை மரத்துக்கு மரம் கட்டிவிட்டு பிறகு ஸ்கூட்டர்லயும், காருலயுமா போயி உண்டியல்ல இருந்து கலெக்ஷன் பண்ணி வரதை காமிச்சி காமிடி பண்ணது ஞாபகம் இருக்கா! இங்கேயும் ஆக மொத்தத்தில அதே மாதிரி தான், ஆனா என்ன, எல்லாமே கார்ப்ரேட் பிஸினஸ் ஸ்டையில்ல நடக்கிற ஒன்னு, எப்படின்னு பாருங்க!

இந்த வில்லோ கிரீக் கம்யூனிட்டின்னு (Willow Creek Community) ஒரு இடம், இல்லினீயாஸ்(Illinois) மாகாணத்திலே, 'south Barington' ங்கிற ஊருல இருக்கிற அந்த சர்ச்சு, ஒரு ஷாப்பிங் மாலுக்கு இருக்கிற அத்தனை வசிகளோட, அதாவது 'food court' லருந்து 'basket ball court' வரை, அப்புறம் சின்ன சின்ன cafe, starbucks வோடது, பெரிய ராட்சஷ டிவி ஸ்கிரீண், அப்புறம் 4000 காருக்கு மேலே நிறுத்த உண்டான பார்க்கிங் ஸ்பேஸ், டிஸ்னிலேண்ட் தோத்துச்சு போங்க! ஆனா, நம்ம ஊரு மாதாக் கோவிலு மாதிரி கூறிய கோபுரங்களோட, இல்லை பெரிய சிலுவைகள், ஞானஒளியில சிவாஜி அடிக்கிற பெல்லு, அப்புறம் அந்த சர்ச்சுக்களுக்கே உரிய கலர் கலரா கண்ணாடி ஜன்னல்கள் இது எல்லாம் எங்கேப்பா இந்த சர்ச்சுலன்னு தேடினீங்கண்ணா, ஒன்னும் கிடைக்காது(இப்பவும் நிறைய பழமையான அந்த கோத்திக் கலைகளுடன் கூடிய புரதான யேசுகிறித்துவ ஆலயங்கள் நிறைய அமெரிக்காவில பார்க்கலாம், இருந்தாலும், நான் சொல்ற இந்த சர்ச்சுங்க கொஞ்சம் மார்டன், இது தான் இன்றய கார்ப்ரேட் அமெரிக்காவின் மத சின்னம்! அதுதான் பெருகி நிக்குது!)

மேலே சொன்ன சர்ச்சுகளில், இந்த கார்ப்ரேட் தீம் வெறும் உருவ வடிவங்கள், வசதிகள்ல மட்டும் இல்ல, அதனுடய நிர்வாகமும் கார்ப்ரேட் ஸ்டைல் தான். கோவிலின் தூதறிக்கையிலருந்து ('Mission statement') அதாவது, 'நாத்திகர் அனைவரையும் யேசு கிறித்துவன் வழி நடப்பவராக செய்வதே', அப்புறம் ஏழு வழி தந்திரம் மற்றும் பத்து முக்கிய கடவுள் நம்பிக்கை எண்ணங்கள் வரை எல்லாம் உண்டு. இதுக்குன்னு ஹார்வோர்ட் மற்றும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ ('MBA') படித்த மாணவர்களை கொண்ட நிர்வாகம் மற்றும் இதற்கென கன்செல்டன்ஸி நிறுவனம்! இது மாதிரி கார்ப்ரேட் உலகத்திலருந்து கடன் வாங்கி வழிநடத்தபடும் செயல் முறைகள் தான் இன்னைக்கு இந்த மாதிரி சர்ச்சுகள் இயங்கும் ரகசியம்! ஆக இந்த கோவில்கலின் மூத்த மத தலைவர்கள் CEO, COO என அழைக்கப்படுகிறார்கள், பூஜைபண்ணும் பாதிரியார்கள், 'Service Directors' என அழைக்கப்படுகிறார்கள். பிறகு இது போன்ற குட்டி குட்டி கோவில்களில் பிரசங்கம் பண்ணுபவரை 'Pastor' என அழைப்பார்கள், அவர்கள் தான் இப்பொழுது 'Pastorpreneur' காக கருதப்பட்டு, நல்ல ச்ம்பாத்தியம் ஈட்டுகின்றனர். அப்படியே தங்களை அழைத்துக்கொள்ளவும் முற்படுகிறார்கள்.

1975ம் ஆண்டுக்குப்பிறகு, மக்கள் வெகுவாய் சர்ச்சுகளுகு வருவது குறைந்தது கண்டு, இதுக்கு காரணம் என்னவென்று, இந்த வில்லோ கிரீக் சர்ச்சின் நிறுவனர் அறிய முற்பட்டார். அதன்படி ஒரு இன்ஃபார்மல் சர்வே எடுத்து, அதற்கு தகுந்த மாதிரி மாற்றங்களை கொண்டு வந்தார். அதாவது முதலில் கிறித்துவ மத பிம்பங்களான சிலுவை மற்றும், அந்த கலர் கண்ணாடி ஜன்னல்கள் என்றிருந்த பிம்பங்களை உடைத்து, பூஜை, பிரசங்கங்களை நாடக இசை வடிவிலே பெரிய வீடியோ திரைகள் அமைத்து மக்களின் உண்மையான பிரச்சனைகளை எடுத்து பேசி தமது போதனைகளில் ஒரு புதுமை புகுத்தினார். அதாவது இழந்த வாடிக்கையாளர்களை மீட்கும் வியாபார தந்திரமாகவே இது ஆயிற்று!

அடுத்து 'user-friendliness' என்ற உபயோகிப்போர் நட்பு எனும் அடுத்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக கோவிலில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஊடுறவச் செய்தார்! மதம் காண வரும் புதியோருக்கு எல்லா வசதிகளும் ஒழுங்கு முறையில், அதாவது சரியாக் சீர் செய்யப்பட்ட புல்வெளி மேடைகள், கார்கள் ஒழுங்காக நிறுத்த உண்டான வசதி என்று ஓவ்வொரு கோவில் சேவையும்(கரசேவை முதற் கொண்டு) திறம்பட செய்து தந்த வரவேற்பு மக்களை பெரிதும் கவர்ந்தது! அது மட்டுமில்லை, இந்த கோவிலின் மீது ஈடுபாடு வரக் காரணம், சில தன்விருப்ப கூட்டத்தினராலும் (மோட்டர் சைக்கிள் ஓட்டுபதில் விருப்பம் உடைய கூட்டத்தினர், இல்லை தன் எடையை கண்காணிக்கும் கூட்டத்தினர் என்று)மற்றும் குடிகாரர்களை, செக்ஸ் அடிக்ட்களை திருத்தி ஆலோசனை வழங்கி பொது சேவை செய்வ தாலும், கார் இல்லோதருக்கு தானமாக வரும் கார்களை பழுதுநீக்கி இல்லாதோருக்கு வழங்கிய தாலும், அனைவருக்கும் ஒரு ஈடுபாடு வரத்தொடங்கியது. அதுவுமில்லாமல், சிறு குழந்தைகள் பராமரிப்பு, வாலிப வயதினருக்கென பிரத்தியோக ஆடிட்டோரியங்கள் என்று அனைத்து வசதியும் செய்து கொடுத்து இந்த 'user-friendliness' கொள்கையை கடைபிடித்து அடுத்த வியாபர தந்திரம்!

இது மட்டுமில்ல, நான் மேலே கூறியது போல், சில சர்ச்சு வளாகங்கள் பெரிய ஷாப்பிங் மால் போன்ற அத்தனை வசதிகள், பேங்கிலிருந்து, மருந்து கடைகளிருந்து, பள்ளிக்கூடங்கள் என அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு கார்ப்ரேட் உலகம்! கோவிலிலும் பூஜைகள் வயோதிகருக்கு தனி நேரம், இளைஞருக்கு தனி நேரம், கல்யாணமாகாதோர் என வெறும் புதன் ஞாயிறு கிழமைகள் மட்டுமில்லாது அனைத்து நாட்களிலும் கோவில் திறப்பாடு! இது போன்ற வசதிகளுடன் அமெரிக்கா முழுமையும் நிறைய சர்ச்சுகள் வர தொடங்கி உள்ளன. அவை எல்லாம் மக்களை கவர சில பூஜைகளில் பிரபலங்களையும், பெரிய விபத்துகளில் மாண்ட உறவினர்களையும் அழைத்து சிறப்பு பூஜைகள் செய்வது , மற்றும் டிவி போன்ற ஊடகத்துறையிலும் ஒளிபரப்பு செய்து அதிக பட்ச மக்களை அடைய வழி செய்து அனைத்து வியாபர தந்திரங்களையும் செய்கின்றன.

இந்த வியாபார யுக்தியில் வெற்றி பெற்ற சில கோவில்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 15% மேலாக செலவிட்டு தொழில்நுட்பங்களையும் புகுத்தி உள்ளன என்றால் ஆச்சிரியத்திற்கு இடமில்லை. பெரிய பெரிய வீடியோ புரெஜக்ஷன்கள், மற்றும் கம்ப்யூட்டர், இசைபதிவுக்கூடங்கள் என எல்லாமே ஒரு மாயாஜாலம் தான்! இவ்வளவு பெரிய வசதிகளோடு, அத்தனை வியாபார தந்திரங்களால் இயங்கும் இந்த கோவில்களின் ஆண்டு வருமானம் ஐந்து ஆறு கோடி டாலர்களுக்கு மேல், அதில் வேலை பார்க்கும் நபர்கள் ஐந்நூருக்கும் மேலே! இந்த கோவில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல் Finance, HR என அத்தனை துறைகளும் உள்ளன!

இப்படி விஷ்வரூபமாக வளர்ந்தாலும் தொல்லை தான், மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல! தியானமோ அல்லது தொழ வரும் பக்தர்கள் அனைவரும் தனி தனியாக பிரத்தியோக கவனம் தங்கள் மீது பிரசங்கம் செய்யும் பாதிரியார்களைடமிருந்து வர வேண்டும் என வரும் எதிர்பார்ப்புகளை சமாளிக்க முடியாமல் போகிறது. ஏனென்றால், ஒரு பெரிய ஸ்டேடியம் போல 5000, இல்லை 6000 பேருக்கு இறை கூட்டம் நடத்தும் போது இது முடிவதில்லை. ஆகையால் சிறு சிறு கூட்டங்களாக பிரித்து இறைக்கூட்டம் நடத்தி வாடிக்கையாளர்கள் சிதறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டி உள்ளது இந்த கோவில் நிறுவாகத்தினருக்கு! மற்றும் நான் ஏற்கனவே கூறியது போல் இறைகூட்டங்கள் வகைபடுத்த படுகின்றன, அதாவது ஞாயிற்று கிழமைகளில் பொதுவானவர்களுக்கும், புதன் கிழமைகளில் ஆழமாக இறையான்மையில் ஈடுபடுவர்களுக்கும், புதன்கிழமையில் புதியதாக சமயத்தில் நுழைந்தவர்களுக்கும் என வகை படுத்தி புது நிர்வாக யுக்தியுடன் நடத்தபடுகிறது! மேலும் ஆங்காங்கே கிளைகோவில்களை தோற்றுவித்து வழிபாடு சேவைகளை உண்டாக்குதல் ('a form of religious franchising') ஆக வியாபார தத்துவத்தில் அடங்கிய அத்தனை திட்டங்களும், தொலைநோக்கு பார்வைகளும், வழிமுறைகளும் பின்பற்ற பட்டு ('Strategic planning and strategic vision') நடத்தபட்டு வருகிறது!

இது மட்டுமல்ல, நான் கூறிய இந்த கோவில், இந்த கோவில் நிர்வாக முறையை திறம்பட நடத்திட ஒரு தனியே கன்செல்ட்டிங் ஆர்மே நடத்துகிறது. இதன் கீழ் பதியப்பட்ட கோவில் கள் பத்தாயிரத்துக்கு மேலே! மேற்கொண்டு சிறப்புக்கூட்டங்கள் நடத்தி, அதில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டு, தலைமை பிரசங்கராக புகழ் பெற்ற அமெரிக்க வியாபார ஆசான் 'Jim Collins', மற்றும் 'Bill Clinton' போன்றோரை வைத்து, இந்த சிறப்பு கூட்டங்ளால் சம்பாரிக்கும் தொகை 2 கோடி டாலருக்கு மேல்! இக்கோவில்கள் வியாபார உலகத்தின் தந்திரங்களை கடைபிடிப்பதோடு, அதை திரும்ப அவ்வுலகுக்கே கற்றும் கொடுக்கின்றன(reversal businesses), எப்படி என்பதை வணிக மேதை 'Peter Drucker' கூறுகிறார், இக்கோவில்கள் எப்படி புதியதாய் வழிபட ஆரம்பிப்போரையும், volunteer களையும் ஊக்கபடுத்தி ஒரு நல்ல ஊழியனாக மாற்றுகின்றன, பிறகு திறம்பட்ட தொழிலாளராக மாற்றுகினறன. இந்த கொள்கை (Motivation factor) வியாபர உலகுக்கும் மிகத்தேவை என்கிறார்!

ஆக இம்மாதிரி கோவில்களும் தொழுகைகளும் முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்டது இந்த மண்ணிலே! இது தொன்று தொட்டு அமெரிக்காவில் நடப்பது தான். அந்த காலத்தில் வந்து குடியேரியவர்கள் மதக்குருமார்களும், வியாபார கும்பல்களும் தான். அக்கால 'Methodist preachers', அதாவது 'Fransisco' போன்ற மதத் தலைவர்கள் வியாபர நுட்பங்களை ('Marketing Technics') கையாண்டு மதத்தை பரப்பினார்கள். அது இப்பொழுதும் தொடர்கிறது, எல்லாமே ஒரு வியாபாரமாய்! அவர்கள் கூரும் கூற்று கடவுள் 'உன்னை படைத்தான், உன்னுடய சிறந்த உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்து கொள்ள' ஆம் உண்மை தான், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, 20 லட்ச டாலர்களில் வீடும், 10 லட்ச டாலர்களில் பறக்கும் விமானம் வைத்துக் கொண்டு காசு பார்க்கும் இந்த பாதிரியார்கள் கடவுள் படைத்த மனிதர்கள்!

இத எதுக்கு பதிவு பண்ணேன்னா, நம்ம ஊர்லயும் இந்த professional அநியாம் நடக்கத்தான் செய்து, காஞ்சி மடம் முதக்கொண்டு, தினிகரன் கூட்டம்னும், அம்மா அமிர்தாமாயினினும், சாமி பிரேமதாசான்னும் மேல்மருவத்தூர்ன்னும் நடக்கிறது நடந்துகிட்டு தான் இருக்கு!. விவேக் போட்டு காமிக்கிற காமடிங்க, இப்படி ஸ்டைலா சம்பாரிக்கும் டெக்னிக் நம்ம ஊர்லயும் வந்தாலும் ஆச்சிரியபடறதுக்கில்லை. மேலை நாடா இருந்தா என்ன, கீழை நாடா இருந்தா என்ன, காசேதான் கடவுளடா!

Sunday, April 23, 2006

மனிதனின் மச்சாவதாரம் - பரிணாம வளர்ச்சி!!

இந்த பதிவோட தலைப்பை 'மனிதனின் மச்சாவதாரம் - பரிணாம வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பு!' ன்னு படிங்க. இவ்வளவு பெரிய தலைப்பு வச்சா, ப்ளாக்கர் டேட்டே பேஸ் அதை கடிச்சு துப்பிடுச்சு! சரி விஷயத்துக்கு வருவோம். நமக்கு ரொம்ப காலமா தெரிஞ்ச ஒன்னு 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!' சமீபத்தில இதை பத்தி பதிவுகள் ரொம்ப சுவாரசியமா தமிழ் மணத்தில மக்கள் எழுதி 'அறிவியலா, ஆன்மீகமா' ஒரு பட்டி மன்றமே நடத்தினாங்க! இந்த பதிவுகளை படிக்காதவங்களுக்கு கீழே சில சுட்டிகளை தரேன். நம்ம பதிவை படிக்கும் முன்னே முன்னோட்டமா கொஞ்சம் என்னதான் எழுதி இருக்காங்கன்னு படிச்சிட்டு மேற்கொண்டு நம்ம பதிவை படிச்சா நல்லாயிருக்கும்!

முதல்ல இந்த கவனப்பிரியன், சாரி சுவனப்பிரியன் எழுதிய பதிவு 'மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்?' இது அவரா போட்டதா, இல்ல சுட்டதான்னு தெரியல்லை, ஏன்னா அதே பதிவு முதல்லயே வந்தது அபு உமர்ங்கிறவரு எழுதிய 'மனிதன் குரங்கிலிருந்து தோன்றினானா?' பதிவிலருந்து! அப்புறம் இதுக்கு பின்னோட்டம் போட்டு பதிலடி கொடுத்திட்டு, பிறகு தனியா பதிவு போட்டாரு நம்ம தெக்கிகாட்டான், அவரு எழுதின '*பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...' பதிவையும் பார்த்துட்டு வாங்க. இதன்னில, நம்ம சூப்பர் சுப்ரா எழுதிய 'இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி' பதிவையும் பார்த்திட்டு மேலே படிக்க வாங்க!(நீங்க கொஞ்சம் சந்தோஷப் பட்டுக்கலாம், நீங்க சொன்ன பரிணாம வளர்ச்சியின் தசவதாரத்தின் முதல் அவதாரம் உண்மைன்னு அஞ்ஞானம் சொன்னதை விஞ்ஞானம் நிரூபிடிச்சிடுச்சி!)

ஆக மொத்தத்திலே இதை எல்லாம் படிச்சிட்டு நமக்கு மண்டையே கொஞ்சம் கிர்ன்னு சுத்துச்சு. எப்படின்னு கேளுங்க. அந்த காலத்தில மனிதனோட பரிணாம வளர்ச்சியை பத்தி கண்டுபிடிச்ச தத்துவம் சொன்ன சார்லஸ் டார்வின் வாழ்ந்த காலம், அறிவியல் முன்னேறாத, மதங்களின் ஆளுமைக்குட்பட்ட காலகட்டம், அதை ஆங்கிலத்தில அழகா, 'Christian evangelical fervor' காலகட்டம்னு சொல்றது. அப்ப இந்த மாதிரி தத்துவங்களை சொன்னா, பைத்தியக்காரன்னு அடிக்கவந்த மதத்தலைவர்கள் அதிகம். ஆனா இந்த விஞ்ஞானம் வளர்ந்த இந்த 21ம் நூற்றாண்டுல, அதுவும் எல்லா தத்துவங்களையும் உண்மை, பொய்யின்ன்னு நிரூபிக்க வழிமுறைகள் வந்துக்கிட்டிருக்கிற இந்த காலகட்டத்திலே, இப்படியும் பைத்திக்காரத்தனமா இந்த தத்துவம் தப்பு, 'எங்கே சொல்லு, மனுச ரத்தமும் குரங்கு ரத்தமும் ஒன்னா ஒத்து போவுதான்னு' சொல்லிக்கிட்டு திரியற கும்பல பார்க்க ஒரே நகைச்சுவையா இருக்கு போங்க!

முதல்ல விஞ்ஞானம்னா என்னா? உண்மைகளை தொடர்ந்து தேடுவதே!அதுவும் இயற்கை அளித்த உண்மைகள் என்னா, இயற்கையாக இது உண்டாக காரணமுன்னு சொன்ன அத்தனை தத்துவங்களையும் தகுந்த ஆதாரங்களோடு அதன் தத்துவக்குறிக்கோள்களை நோக்கி ஆராய்ந்து உண்மை அறிவதே! இந்த தத்துவங்கள் தகுந்த ஆதரங்களோடு நிரூபிக்க படாவிடில், தொடர்ந்து தேடல்கள் இருந்து கொண்டே இருக்கும், அந்த தொடர் தேடலில் ஏற்கனவே கூறப்பட்ட தத்துவங்கள் மாற்றபடலாம் இல்லை மறுக்கப்படலாம், ஆனால் தேடல் தொடரும்! இப்படியாக விஞ்ஞான அறிவும், புரிதலும் தொடர்ந்து பரிணாமிக்கக்கூடிய ஒன்று. ஆனால் அஞ்ஞானம், ஆன்மீகம் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் கூறபட்ட கூற்று, அதை தொடர்ந்து தேடி யாரும் பொய்யாக்கப்போவதில்லை! ஆகவே தான் விஞ்ஞான வழியே தேடலுக்கு உட்பட்டது. அஞ்ஞானம், ஆன்மீகம் சொல்வது விஞ்ஞானமாகாது, வேண்டுமானல் அவை கூறிய தத்துவங்களின் மதிநுட்ப செயல்திட்டம் பற்றிய ஆராய்வு செய்து அண்டசராசரங்களின் புரிதல்களை தெரிந்துக் கொள்ளலாம், அவ்வளவே! இந்த கோட்பாடுடன் பரிணாம வளர்ச்சியை பற்றி அறிய முற்படுவோம்!

நான் சொன்ன அந்த தேடல் காரணமா, இப்ப புதுசா ஒரு 375 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த மீன் இனம் ஒன்னை கண்டுபிடிச்சிருக்காங்க. அதுவும் சிககோ பல்கலைகழக விஞ்ஞானிகள், மண்ணிய புரதான உயிரின கண்டுபிடிப்பாளர்கள் (இந்த 'Paleontologist' ன்கிற ஆங்கில பதத்துக்கு நான் செய்த மொழி மாற்றம், சரியா, தப்பான்னு சொல்லுங்க நண்பர்களே!) அதாவது கனடா நாட்டின் வடபாகத்திலருக்கிற 'Bird Fjord'பகுதியில் இருக்கும் 'Ellesmere Island'ங்கிற தீவில் ஒரு பழமையான சிகப்பு கற்படிகங்களை('Red slitstone') பார்த்துவிட்டு, இது என்னாதுன்னு ஆராய்ந்த பொழுது அது ஒரு மீனின் மீதம் ('Fishapod'), அதாவது ஒரு 375 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மீன் இனம். இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக குறிப்படபடுகிறது. அதாவது டார்வின் தத்துவத்துக்கு ஒரு தொடர்பு கிடைத்ததாக அறிவியல் உலகம் முழக்கமிடுகிறது!

இதுல என்ன ஆச்சிரியம்னு கேட்கிறீங்களா! அதாவது மனித பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்றப்ப, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றி, உயிரினங்கள் தோன்ற ஆரம்பிச்சதிலருந்து ஓவ்வொரு உருவமா பரிணாம வளர்ச்சி அடைந்ததிலே இடைப்பட்ட காலத்திலே எப்படி நீரில் நீந்தும் உயிரினம் நிலத்துக்கு வர ஆரம்பித்ததுங்கிறது சில பிரச்சனைகள் இருந்தது. அதாவது சரியாக நிரூபிக்கப்படாத தொடர்ச்சி, இந்த தொடர்ச்சியை ஆங்கிலத்திலே 'Traits' ன்னு சொல்வாங்க! அது தான், கடல், நீர் நிலைகளில் நீந்தி வாழ்ந்த உயிரணம் நிலங்களில் தாவி ஊர்ந்து, நடந்து,ஓடி,பறக்கும் இனங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தது, மனிதனின் கடைசி உருவத்துக்கும், அதுக்கும் மேலே இன்னும் அந்த பரிணாம வளர்ச்சி தொடர்ந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை கண்கூடாக நிரூபணம் செய்ய உதவும் ஒரு அரிய கண்டுபிடிப்பு!

இதைபத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னே, இன்றய கால கட்டத்திலருந்து ஒரு 50 இல்லை 60 கோடி வருஷத்துக்கு முன்னே உயிரினம் தோன்றி இருக்கும், அப்படின்னு விஞ்ஞானம் சொல்லுது. அதாவது 60 கோடியிலருந்து 50 கோடி வருஷத்துக்கு முன்னே இடைப்பட்ட கால கட்டம் 'ProteroZoic' 'Cambrian' period, அதாவது முதன்முதலா சிப்பி மீன்களும்,முத்துக்களும் (Shell Fish, Corals)தோன்றிய காலக்கட்டம், பிறகு 50 கோடியிலருந்து 40 கோடி வருட்ங்களுக்கு முன்னே இடைப்பட்டக்காலம் 'Ordovician', 'Silurian' Period, அதாவது முதல் மீன்கள் மற்றும் நிலத்தடி செடிகொடிகளும் முளைத்த காலகட்டம், பிறகு 40 கோடியிலருந்து 30 கோடி வருஷத்துக்கு இடைப்பட்டக்காலம் 'Devonian' 'Carbonferous' Period, அதாவது முதல் முதலாக நாலுகால் உருவங்கள் தோன்றிய காலகட்டம், ஊர்வன, பாலூட்டிபோன்ற பல்லினங்கள் தோன்றிய காலக்கட்டம், அதாவது ஆங்கிலத்தில் tetrapods, First Reptiles, First Mammal-like Reptiles ன்னு சொல்லுவாங்க. இந்த 'Devonian' காலக்கட்டத்தில் தோன்றிய இந்த மீன் இனம் தான் இப்பொழுது கனடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்னு. அதுக்கு பேரு 'Tiktaalik roseae'. இந்த மீன் இன சுவட்டிலருந்து கண்டுபிடிக்க பட்ட துடுப்பின் பாகத்தில் இருக்கும் விரல்கள், மணிகட்டு போன்ற அமைப்புகள், பிற்காலத்தில் உருமாறி நிலத்தில் தவழ்ந்து செல்ல ஏதுவாக உருவாக்கபட காரணமாய் இருக்கும் மூல அதாரம்! அதாவது இந்த 'Tiktaalik roseae' மீன் இனம் தோன்றுவதற்கு முன் உண்டான மீன் இனத்திற்கு இது போன்ற துடுப்பமைப்பு கிடையாது. அதற்கு இருந்த துடுப்பு காதமைப்பை உடயவை (Lobe Fins), அவை நீரில் நீந்தி செல்ல ஏதுவானவையே ஒழிய நிலத்தில் தவழ்ந்து செல்ல உவவாது! ஆக இது தான் அந்த பரிணாம வளர்ச்சியின் விஞ்ஞான பூர்வமான ஆதாரம்!

சரி அடுத்த காலக்கட்டங்கள் என்னான்னு பார்ப்போமா? சுமார் 30 கோடியிலருந்து 20 கோடி வருஷத்துக்கு முன்னே இடைப்பட்ட காலம் தான் 'permian', 'Triassic' period, இந்த இடைப்பட்ட காலத்தில தான் முதல் டைனோசர் மற்றும் பாலூட்டிகள் தோன்றின. பிறகு 20 கோடியிலருந்து 10 கோடி வருடங்களுக்கு இடைப்பட்டக்காலக்கட்டங்கள் தான் 'Jurassic' 'Cretaceous' period, இந்த காலக்கட்டத்தில தொடர்ந்து டைனோசர்களும், முதல்முதல்லா பறைவகளும், செடி கொடியில் பூக்களும் பூத்துக்குலுங்கிய கால கட்டங்கள். இப்போதிலருந்து ஒரு 10 கோடி வருஷசம் இடைப்பட்டக் காலகட்டம் தான் 'Cenozoic' period ங்கிறது. இந்த இடைபட்ட காலக்கட்டமே முதன்முதலாக குதிரை, மற்றும் குரங்கு, சிம்பென்ஸி, மற்றும் மனிதன் தோன்றிய காலகட்டங்கள்! இப்ப புரிஞ்சதா இந்த புதியதாக கண்டுபிடிச்ச மீன் இனம் நம் மனித வளர்ச்சிக்கு எப்படி தொடர்புன்னு!

இந்த மீனின் சுவடுகளை ('fossil') கண்டுபிடிக்கிறதுக்கு முன்னே கண்டுபிடிச்சது காதமைப்போடுக்கூடிய 'Panderichthys'ங்கிற மீன் இனம். இதன் சுவடுகளை கிரீன்லேண்ட்ல 1920ல கண்டுபிடிச்சப்ப, எப்படி நீரில் வாழ்ந்த உயிரினம் நிலத்தில் வாழ ஏதுவாய் உருமாறிச்சுன்னு மண்டையை பிச்சிக்கிட்டப்ப தான் இந்த கண்டுபிடிப்பு அதற்கு வழி வகுத்துது. ஏன்னா, அந்த 'Panderichthys'ங்கிற மீன் இனம் நீர்ல மட்டும் வாழ தகுதி பெற்ற உடலமைப்பு கொண்டது. நிலத்தில் நகர உருவமைப்பு ஏற்றதா இல்லை. அதனால தான் அத்தனை சுலபமா அந்த பரிணாம வளர்ச்சியின் தொடர்பை விளக்கமுடியவில்லை!

இந்த கண்டுபிடிக்கப்பட்ட மீன்கள் தான் அப்போது முதன்மையாக உருவாக்கப்பட்ட உயிரின வளர்ச்சியின் ஆரம்பம், தன்னை சுற்றுபுற சுழலுக்கு தக்க மாற்றி கொள்ளும் வழி பெற்றவையா இருந்தது. ஏன்னா, அந்த காலக்கட்டம் தான் பூமியில் நீர்நிலைகள் தோன்றி பெரும் ஆறுகள் தோன்றிய காலக்கட்டம், மீன்களின் காலம் ('Age of Fishes'). அதற்கு முன்னே இருந்த கற்காலம், வெறும் கற்களும் பாறைகளும் அதற்கிடையே தோன்றிய சிறு செடி கொடிகளே, அதுவும் நம் கணுக்காலளவே வளர்ந்தவை! அதற்கு பிறகு ஆற்று படிகையிலே தோன்றிய காய், கறி, மரம் செடி கொடிகளின் வளர்ச்சியே நாலுகால் பிராணி உருவாகக் காரணம். இந்த சிறு தாவரங்களே நீர்வாழும் உயிரினத்துக்கு ஆகாரம், மேலும் உயிர் வாழத்தேவையான ஆக்ஸிஜனை பூமியின் காற்றுவழிமண்டல வெளிவிடுத்து பலதரப்பட்ட உயிரினங்கள் தோன்ற ஏதுவாக்கியது! பிறகு அந்த தாவர கரிம சிதைவுகளே பாக்டீரியா, பங்கஸ், மற்றும் சிறு பூச்சிகள் போன்ற சிறு உயிரின ஆதாரங்கள் தோன்ற வழி வகுத்தது. இந்த தாவர கரிம சிதைவுகளில் ஊர்ந்த பூச்சிகளை உட்கொண்டு உயிர் வாழ்ந்த சிறுமீன்கள், சிறுமீன்களை உட்கொண்ட பெருமீன்கள் என இந்த உணவு வழி தொடர்பு (food chain) முறையை உண்டாக்கி கொடுத்தது.

இந்த மீன் சுவடின் கண்டுபிடிப்போட முக்கியம்சமே அந்த விரல்கள், மனிகட்டுகள் கொண்ட உருவமப்புதான். ஏன்னா ஜெனிடிக்லா இதை பத்தி ஆராஞ்சு அதற்கு காரணமான 'Hox Genes' தான் கை, கால் விரல் அசைவுகள், வளர்ச்சிக்கு பிரதானம்னு கண்டு பிடிச்சிருக்காங்க. இதுதான் மனித குலத்துக்கும் காரணமான ஜீன்ஸ். ஆக இந்த மீன் இன அரியகண்டுபிடிப்பு மேற்கொண்டு இதனை ஆராஞ்சு பரிணாம வளர்ச்சியின் முக்கியத்தை உலகுக்கு பறைசாற்றும்! ஆக இது போன்ற சுவடுகளே உயிரிணங்களின் மாற்றம், பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவை, அதிலும் முக்கியமாக உருவ மாற்றமைப்பின் தொடர்ச்சி (Transistional forms) கண்டறிவதில் ஒரு பெரிய வெற்றி!

ஆக டார்வின் தத்துவம் மெல்ல மெல்ல வெற்றி பெற்று வருகிறது! அவர் கண்டறிந்த தத்துவக்காலத்திலருந்து இன்றைய வரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் அந்த தத்துவத்தை ஊர்ஜிதம் செய்கின்றன! அவர் அமைத்துக் கொடுத்த அந்த தத்துவ மேடையே இன்றைய முன்னேறிய உயரியல் தத்துவத்துக்கு வழிக்காட்டி, தொடர்ந்து கண்டுபிடித்து வரும் சுவடுகளை சரியாக இன்று கண்டுபிடிக்கப்படும் ஜீனோம்களோடு ஒப்பிட்டு அட்டவணையிட தோதுவாகிறது! இந்த விஞ்ஞானம் அளித்த பரிணாம வளர்ச்சியை எள்ளி நகையாடி, ஆன்மிக போதையை மக்களுக்கு அளித்து, அதுவும் நல்லதொரு ஊடகக் கருவிக் கொண்டு மனிதகுல முன்னேற்றத்திற்கு காரணமாகமல் நேரவிரயம் செய்யும் என் நண்பர்கள் சற்றே யோசிக்கவும்! இந்த பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமி 'H5N1' மிருகத்திடமிருந்து மனிதனுக்கு பறவக் காரணம் என்ன தெரியுமா, அதுவும் ஒரு பரிணாம வளர்ச்சியே! ஆக இந்த பரிணாம வளர்ச்சி தத்துவங்கள் நம் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கின்றன!

டார்வின் தத்துவம் சொல்லுவது மாறிவரும் சுழலுக்கு ஏற்ப மாற்றம் கொள்ளுவதே பரிணாம வளர்ச்சி ('Survival of Fittest'). ஆக இந்த சுவடுகளின் கண்டுபிடிப்பில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மாறிவரும் சுழலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து வாழ்கின்றன, அப்படி முடியாதவை அழிகின்றன. இதோ மாறி வரும், அதி வெட்ப சுழலிலும்,காடுகள் அழியும் இப்பூவுலகிலும், பிராண வாயு(ஆக்ஸிஜன்) குறைந்து, கார்பன்டை ஆக்சைடால் வலைசூழும் இந்த காற்றுமண்டலத்தில் ஜெயித்து வாழபோகும் உயிரினங்கள் யார் இனி? நீங்களும் நானுமில்லை! இறக்கை முளைத்த புது மனிதனாகக் கூட இருக்கலாம், யார் கண்டார். இது தான் பரிணாம வளர்ச்சி!

Friday, April 21, 2006

ஆர்டிக் துருவ மிதக்கும் பனி பாறைகள் - A Titanic Journey!!

'டைட்டானிக்' இங்கிலீஷ் படம் எல்லாரும் பார்த்திருப்பீங்க! நம்ம ஊரு காதலை போல ஒரு அருமையான காதல் கதையோட பின்னோட்டத்தில 1912ம் வருஷம் இங்கிலாந்திலந்திலருந்து அமெரிக்கா வந்த கப்பல் பனி பாறையில மோதி, கப்பல் மூணா உடைஞ்சு, அந்த ஆழ்கடலில் மூழ்கிபோனதை அழகா படம்புடிச்சு வந்த ஒரு ஹாலிவுட் படம்! ஞாபகமிருக்கா! அந்த படத்தோட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை காப்பி அடிச்சு நம்ம ஷங்கர் இந்தியன் படத்தில அந்த அண்ணா சாலை டிராபிக் ஜாம் எடுத்திருந்தாருல்ல. டைட்டானிக் படத்தில எந்த காட்சின்னு தானே கேட்கிறீங்க! அதான் முதன் முதல்ல பயணிகள் எல்லாம் கப்பல்ல ஏறும் காட்சிகள், அந்த கிராஃபிக்ஸ் கலக்கலோட எடுத்தது தான். அதுக்குன்னு உபயோகிச்ச கம்பூட்டர் தொழில்நுட்பத்தை நம்ம கணனி தொழில்நுட்ப வல்லுநர்கள்கிட்ட கேட்டீங்கன்னா அப்படியே உருகி அந்த 'VAX' கம்ப்யூட்டரை பத்தி நிறைய சொல்வாங்க! நான் கேட்டுறுக்கேன். இப்ப அந்த கதை எதுக்கு, இந்த மிதக்கும் பனிப்பாறைகள்(Iceberg)பத்தியும், அது எங்க, எப்படி கடல் பயணத்துக்கு பயங்கரத்தை விளைவிக்கும்ங்கிறதை பத்தி கொஞ்சம் பார்ப்போமா!

மொத்தமா உலகம்னு எடுத்துக்கிட்டிங்கன்னா, எத்தனை கண்டம் இருக்கு தெரியுமா, எல்லாரும் தப்பா அஞ்சு தான் இருக்கும்பாங்க, அது ஆசியா, ஆஸ்திரேலையா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு. ஆனா நம்ம கதை கேட்ட மாதிரி, ஏழு கண்டம் ஏழுகடல்னு மொத்தம் ஏழு இருக்கு! வட துருவத்தில இருக்கிற ஆர்டிக் கண்டமும், தென் துருவத்திலே இருக்கிற அண்டார்ட்டிக்கா கண்டமும் தான் அந்த மிச்சம் இரண்டு! அதில ஆர்டிக் கண்டம் நீராலும் அண்டார்ட்டிக்கா கண்டம் நிலத்தாலும் உருவாக்கப்பட்டது தெரியுமா! மனுசன் உலகம் பூரா போயி குடியேறி, வாழ்ந்தது, வாழ்ந்துகிட்டு இருக்கிறது இந்த அஞ்சு கண்டத்திலே, ஆனா அந்த துருவக் கண்டங்கள் மனிதன் போய் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. ஏன்னா அந்த ரெண்டுமே கடுங்குளிர் பிரதேசம். எப்பவும் தட்பவெப்பநிலை -50oC மேலே! ஆனா அதிலேயும் மனுசன் போய் போடற ஆட்டம் இப்ப இருக்கே அது தனி! ஏன்னு கேளுங்க!

ஆர்டிக் துருவம் மொத்தமுமே கனடா நாட்ல இருக்குது. ஆனா இந்த அண்டார்ட்ட்டிக்கா இருக்கே அதுல தனி நாடுகள்னு எதுவும் இல்லை. ஆனா உலகத்திலே இருக்கிற அத்தனை வளர்ந்த நாடுகளும் அங்க அங்க இடம் பிடிச்சு, இது என்னுதுன்னு உன்னுதுன்னு எல்லை கோடு போட்டு வச்சிருக்காங்க தெரியுமா உங்களுக்கு! ஏன் நம்ம இந்தியா கூட அங்க ஒரு பகுதியை பிடிச்சு நிலத்தடி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கு! அது மாதிரி பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான்னு அத்தனை வளர்ந்து நாடுகளும் அங்க இடம் போட்டு வச்சிருக்கு. அமெரிக்கா சரியா துருவத்தின் மையத்திலே இடம் பிடிச்சி வச்சிருக்கு, அங்கே கரக்டா பூமத்திய ரேகையின் ( Longitudinal and Latitudinal Crossing) 0o ல அவெங்க கொடி நட்டு வச்சிருக்காங்கன்னா பார்த்துக்கங்க. அதாவது தென் துருவம மையத்தில்!
(இங்க குளிர்காலத்தில, காத்தும், புயலும் வந்தா சீதோஷணம் -80oC லருந்து -90oC வரை போயிடும், இந்த டெம்ரேட்சர்ல மனுஷன் எவ்வளவு நேரம் தாக்குபிடிப்பான்னு தெரியுமா, சரியா நாலு நிமிஷம், அவ்வளவு தான் மண்டையை போட்டுறுவான்!) இது அத்தனைக்கு காரணம், அத்தனை கனிமவளமங்கள் நிறைந்த கண்டம் அது! உலகத்திலே மத்த பகுதியிலே இருக்கிற கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அளவில(கண்டுபிடிக்கபட்ட வரையில்!) நாலு பங்கு அதிக வளங்கள் கொண்டது இந்த அண்டார்ட்டிக்கா, அதான் பிரச்சனையே! அதனால தான் எல்லா நாடுகளும் நான் நீன்னு அடிதடி போட்டுகிட்டிருக்காங்க!. என்னா ஒரு சிரமம், அவ்வளவு குளிரையும் தாங்கி அந்த கனிம வளங்களை எடுக்கிறத்துக்கான தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் வரலை, வந்தா இனி அண்டார்ட்டிக்காவுலயம் போர், படைன்னு செய்தி வரக்கூடிய நாள் அதிக தூரமில்லை! இன்னொரு விஷயம் தெரியமா, இந்த அண்டார்டிக்காவிலேயிருந்து பிச்சிக்கிட்டு வந்த தேசங்கள்ல ஒன்னு தான் நம்ம இந்தியா ( நம்மூருல லெமூரியா கண்ட கதை, முன்தோன்றிய மூத்தகுடின்னு கதைவிட்டுட்டு திரிவாங்கல்ல, அத நிஜமா என்னான்னு தெரிஞ்சுக்கணுன்னா கொஞ்சம் சயிண்டிபிக்கா, இந்த நிலம் நீர் பரப்போட உருவாக்கம்(Evolution) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே எப்படி தோன்றிச்சின்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டீங்கன்னா, இணையத்திலே நிறைய தகவல் நிலையங்கள் இருக்கு போய், வேணும்னா பாருங்க!)

சரி நம்ம தலைப்பில எடுத்துக்கிட்ட பனிபாறைகளை பத்தி பேசுவோம் இனி, இந்த பனிபாறைகள் அதிகம் மிதக்கும் இடம் இந்த வடதுருவ ஆர்டிக் கண்ட பகுதி! முதல்ல இந்த பனிபாறைன்னா என்னா, எங்கிருந்து வந்துச்சு, அது எடை, வயசு என்னான்னு பார்ப்போமா! இந்த பனிபாறைகள் அதிகமா இருப்பது இந்த வட அட்லாண்டிக் சமுத்திரத்தில! இது அனைத்தும் உருவாவது நகரும் பனிமலைகள்(Glaciers)லாள, கிரீன்லேண்ட்ன்னு ஒரு நாடு இருக்கு பாருங்க, அதாவது வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் அந்த பனிமலைகள் மிகுந்த நாட்ல இருந்து இந்த நகரும் பனிமலைகள் அப்படியே கடல்ல விழுந்து சின்ன சின்ன பனிபாறைகளா(Iceberg) நகர்ந்து கொண்டிருக்கிருக்கின்றன! இந்த மாதிரி நகரும் மலைகள் ஒரு 100க்கும் மேலே அங்க இருக்கு, சில பனிபாறைகள் கனடா நாட்டின் வடக்கு பகுதியான சிறு சிறு தீவுகள் அடங்கிய பகுதிகள்லருந்தும் விழும் நகரும் பனிமலைகளாகும். இப்படி மிதக்கும் பனிபாறைகள் அந்த பகுதியில சின்னதும் பெருசுமா சுமார் ஒரு 40000 மிதந்துகிட்டு இருக்கு. இது அந்த குளிர்காலத்தில இருந்து வசந்தகாலம் வரும்போது கொஞ்ச கொஞ்சமா அந்த சமுத்திர அலையால தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். சில பனிபாறையோட அளவு 13 சதுரமைல் பரப்பளவுக்கு இருக்கும், அதாவது அதில ஒரு பெரிய நகரத்தையே நிர்மானிக்கலாம்! இந்த பனிபாறைகள் உருகி நீராவதுக்கு ஒரு வருஷம் பிடிக்கும், அதாவது இதோட வயசு, ஒரு வருஷத்திலே இருந்து ஒன்னரை வருஷம் வரை! ஆனா இந்த பனிபாறைகள் உருவாக காரணமா இருக்கும் அந்த நகரும் பனிமலைகள்(Glaciers) உண்டாக்கபட்ட பனிகட்டிகள் 15000 வருஷத்துக்கும் மேலேன்னா நம்ப முடியுமா உங்களுக்கு!

சரி இதோட கடல்ல நகரும் வேகம் என்னான்னு தெரியுமா, சுமார் 0.7km/h, அதாவது கிட்டதிட்ட ஒரு கி.மீ. ஒரு மணி நேரத்துக்கு! சில சமயம் அடிக்கும் காத்து மற்றும் கடல் அலைகளா இது மணிக்கு 3.6 கி.மீ வேகத்திலக் கூட இது மிதந்துக்கிட்டே நகரும். இது ஏன் மிதக்குது அப்படின்னா, இந்த பனிபாறைகள் அடர்த்தி (density) இருக்கே அது உப்புகடல் தண்ணியை விட கம்மி, அதாவது பனிபாறை அடர்த்தி கிட்ட திட்ட 900 kg per cubic meter இருக்கும், ஆனா கடல் தண்ணி அடர்த்தி 1025 kg per cubic meter இருக்கும். அதனால இந்த மொத்த பாறையில எட்டுல ஏழுபங்கு தண்ணிக்கு கீழேயும் மீதி ஒரு பங்கு தண்ணிக்கு மேலயும் இருக்கும். அதைத்தான் ஆங்கிலத்தில "tip of the iceberg" ன்னு சொல்வாங்க!
இந்த மாதிரி மிதக்கிற பனிபாறைகள் வடக்கிலருந்து தெற்கா ஒரு 4000 கி.மீ வரை நகர்ந்து போகும், அதாவது கனடா நாட்டில் 'Baffin Bay'ங்கிற இடத்தில இருந்து St. John's ங்கிற ஊருக்கு தெக்காலே ஒரு 800 கி.மீ நகர்ந்து போகுது. இதை சிலசமயம் கிழக்காலே அயர்லேந்து பக்குமும் தெக்காலே கரிபியன் தீவுகள்ல பெர்முடா பக்கமும் பார்க்கலாம்!

சரி இப்படி கடல்ல வந்து விழுற பனிபாறைகள், சனியன் விழுந்தது, அதுகிடக்கு, அதில என்ன இவவளவு வந்து கிடக்குங்கிறீங்களா! ஆமா இப்ப நீங்க ஆகாய மார்க்கமா எங்க வேணும்னாலும் போயிடுறீங்க. ஒரு 100 வருஷம் முன்னாடி நினைச்சு பாருங்க. எல்லாமே கடல் மார்க்கம் தான். அப்படி கப்பல் பிரயாணம் போறவங்க இந்த மிதக்கும் பனிபாறைகள்ல மோதி கப்பல் மூழ்கி செத்தது நிறைய! ஏன் இப்பக்கூட, இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் இதோட விளைவுகள் பயங்கரம் எப்படின்னு கேட்கிறீங்களா?

இந்த சின்னதும் பெரிசுமா மிதக்கும் இந்த பனிபாறைகள் அவ்வளவு ஈஸியா இந்த ரடார் ஸ்கிரீனுக்கு சிக்காது. அதுனால ஓட்டிக்கிட்டு போற கப்பலை திடீர்னு நிறுத்தமுடியாது! இதில நம்ம சினிமா பார்த்த டைட்டானிக் கப்பல் மட்டுமில்ல, அந்த பகுதியில, இந்த மாதிரி பனிபாறைகள்ல மோதி முழுகுன கப்பல்கள் ஏராளம்! 1841லேயே 'William Brown'ங்கிற கப்பல் இந்த பனிபாறையிலே மோதி ஒரு 64 பேரு செத்து போனாங்க, ஆனா டைட்டானிக்கல இறந்தவங்க 1500 பேரு! 1909ல 'Geisha'ங்கிற இன்னொரு கப்பலு கேரம்போட்ல நாலு சுவத்தில அடிச்சு சிவப்பு காய் போயி குழியில விழும் பாருங்க, அது மாதிரி வழிநெடுக இருந்த ஒவ்வொரு பனிபாறையிலயும் மோதி கடைசியில மூழ்கி கடலுக்கு கீழே போச்சு, நல்ல வேளையா அதுல பயணம் செஞ்சவங்க தப்பிச்சோம் பொழச்சோமுன்னு St. John's ங்கிற ஊருக்குவந்து சேர்ந்தாங்க! இப்படி சொல்லிக்கிட்டே போகலாம், இது மாதிரி ஒரு 240 Collisions (பனிபாறை மோதல்கள்). இதை கனடா நாட்ல இருக்கிற 'The Institute of Ocean Technology (IOT)' ங்கிற நிறுவனம் செய்திகளை சேகரிச்சு வச்சிருக்கு. அதுமட்டுமில்லம, இந்த பனிமலை மோதல்கள், ஆழ்கடல் கொந்தளிப்புகள் எல்லாத்துக்கும் கப்பல்கள், நடுகடலில் மிதக்கும் எண்ணெய் மேடைகள் (Oil Platforms and Rigs) எல்லாம் எப்படி ஈடு கொடுத்து தாக்குபிடிக்கணும், அதுக்கு தகுந்தமாதிரி இந்த கப்பல் மற்றும் மேடைகள் கட்டுமான தொழில்நுட்பத்துக்கு உதவ ஆராய்ச்சிகளும் செஞ்சுக்கிட்டு இருக்கு!

இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, இந்த ஆர்டிக் பகுதியும் அன்டார்ட்டிக்கா மாதிரி கனிம வளங்கள் நிறைந்த பகுதி! எண்ணெய் வளமும் அதிகம். ஆனா கடுமையான குளிர் மற்றும் இந்த பனி பாறைகள் மோதல்கள்லாள ஆபத்துகளும் இருப்பதால அதை எப்படி பாதுகாப்பாக அந்த வளங்களை எடுக்கலாமுன்னு இப்போ முனைப்பா இருக்காங்க, அது ஓன்னு. இன்னொன்னு, இந்த 'வடக்கு ஆர்டிக் கடல்வழி தடம்'. அதாவது ஐரோப்பாவிலருந்து ஆசியா போகவும், வட அமெரிக்க கிழக்கு பகுதியிலருந்து மேற்கு பகுதி செல்லவும் இந்த கடல் மார்க்கம் ரொம்ப வசதி ஏற்கனவே அமெரிக்க கிழக்கு பகுதியிலருந்து மேற்கு பகுதி செல்ல பனமா கால்வாய் இருக்குல்ல, (இது எப்படி வந்தது என்னான்னு யாருக்கும் விருப்பம் இருந்தா சொல்லுங்க, இன்னொரு தனி பதிவு இந்த பனமா கால்வாய் பத்தி எழுதுறேன்!) அது மாதிரி இந்த வடக்கு பனமா கால்வாய் திட்டம் ரொம்ப நாளா இருக்கு. இந்த மார்க்கமா ஒரு 300 வருஷத்துக்கு முன்னமே கடல்வழி பயணம் போறேன்னு பனிகடல்ல சொருகி செத்த கதைகள் நிறைய இருக்கு! மாறி வரும் தட்ப வெப்ப நிலையால, ஆர்டிக் பனி உருகி, இப்போ அத்தடங்கள், பிராயாணம் செல்ல ஏதுவா இருக்கு! ஆக அந்த மார்க்க பிரயாணத்துக்காகவும் தான், இந்த IOT நிறுவனம் அனைத்து ஆராய்ச்சிகள்லயும், இந்த பனிபாறைகள் பற்றி செஞ்சுக்கிட்டு இருக்காங்க!

எவ்வளவு திரில்லாங்கா இருக்கில்ல! இந்த பனிபாறைகளை பார்க்க, இப்போ சுற்றுலா மாதிரி அழைத்து செல்லவும் நிறைய நிறுவனங்கள் இருக்கு. அதுக்கு நீங்க மொதல்ல கனடா போகனும், அதுவும் St. John's ங்கிற ஊருக்கு போன நீங்க போய் இதை அப்படியே பார்க்கலாம்! இந்த மிதக்கும் பனிபாறைகளை பார்க்கலாம். எத்தனை நாள்தான் நீங்க கந்தக பூமியிலேயே இருப்பீங்க, போய் துருவப் பிரதேசம் பார்த்துட்டு வாங்க!

Thursday, April 20, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பதிமூன்றாம் பகுதி

என்ன திடீர்னு அரிதாரத் தொடரை நிறுத்திட்டீங்கன்னு நண்பர்கள்கிட்ட இருந்து கடிதம் வந்ததாலே, திரும்ப கொஞ்சம் அரிதாரம் பூசுவோமுன்னு தான் இந்த பாகம். நாங்க நாடகமே வாழ்க்கைன்னு காலேஜ்ல காலம் கழிச்சப்ப, சில வில்லத்தனமான காட்சிகளும் நடந்து அரங்கேறிச்சு! எப்படின்னு கேளுங்க. நாங்க மூணாவது வருஷம் படிச்சப்ப, அந்த வருஷம் எங்க காலேஜ்குள்ளேயே இருக்கும் அஞ்சு வருஷ ஜனங்களுக்குண்டான, அதாங்க 'Intera College Dramatic Competition' ஏதோ காரணங்களால நடத்தமுடியாம, அந்த வருஷம் சும்மா வெளிக் காலேஜ்ங்களுக்குத்தான் Competion க்கு நாடகம் எடுத்து போயி பரிசெல்லாம் வாங்கி வந்தோம். அப்ப எங்க குரூப்ல இல்லாத அம்பேத்கார் கோஷ்டி பையன், எங்க யியர் தான், தான் 'நடிக்க ஆர்வம இருக்கேன், நானும் உங்க நாடகத்திலே நடிக்கிறேன், ஏதாவது ரோல் கொடுங்கன்னு கேட்டு வந்தான்! அவன் பேரு வேணுகிருஷ்ணன். நானும் சரிடான்னு அவனுக்கு ஒரு டாக்டர் ரோல் கொடுத்து நடிக்க வச்சேன். நல்லாவும் நடிச்சான். சரி, அப்ப அப்ப இனி நாடகம் போடும் போதெல்லாம் உனக்கும் ரோலு கொடுக்கிறேன்னு சொல்லி அவனையும் வச்சிருந்தோம். என்ன எங்ககூட சரியா ஒட்ட மாட்டான், ஆனா நாடக ரிகர்சல் எல்லாம் சரியா வந்து ஒழுங்கா அமைதியா இருந்தான், ஆனா அவன் பண்ண போற வில்லங்கம் என்னான்னு எங்களுக்கு அப்ப தெரியாது!

அடுத்த வருஷம், நாங்க ஃபோர்த் யியர், அப்ப டிராமா கிளப்புக்கு செக்ரெக்டரி ஃபைனல் யியர்லருந்தும் ஜாயின்ட் செக்ரெக்டரி எங்க யியர்லருந்தும் போடனும். பொதுவா, இந்த கிளப் ஸ்டாப் அட்வைசர், முன்னாடியே தெரியும், யாரை போடனும்னு, நாமினேஷன பேசிஸ் தான். ஃபைனல் யியர்ல ரங்கசாமின்னு ஒருத்தரை செக்ரெட்ரியா போட்டார், அவரும் ஸ்கிட் எல்லாம் தமாஷா போட்டு பேரு வாங்கினவர். எங்க யியர்ல, ஸ்டாப் அட்வைசர் என்னைதான் அப்ரோச் பண்ணுனார், ஏன்னா நான் தான் பாப்புலர் அப்ப, ஆனா எங்கூட முத வருஷத்திலே இருந்தே நடிச்சுக்கிட்டு வர கதிரேஷன், அதான் எனக்கும் டூயட் வேணும்னு சண்டைபோட்டு டூயட் பாட்டு கேட்டு வாங்கி நடிச்சவன். கொஞ்சம் கதை, கவிதை எல்லாம் நல்லா எழுதுவான்! அப்புறம் அவனும் ரங்கசாமியும் தேனீ பக்கம், அதனால ரெண்டு பேரும் தோஸ்த், ரங்கசாமி செக்ரெக்டரி ஆனோன, ஜாயின்ட் செக்ரெக்டரிக்கு கதிரேஷனை நாமினேட்டு பண்ணி ரெக்மெண்ட் பண்ணினான் ஸ்டாப் அட்வைசர்கிட்ட, அவரும் என்ன கூப்பிட்டு என்னப்பா, உன்னை தான் ஜாயின்ட் செக்ரெக்டரியா போடலாமுன்னு பார்க்கிறேன், ஆனா செக்ரெடரி, வேற ஒருத்தரை சொல்றாரே, அப்படின்னு எங்கிட்ட கேட்டாரு. நானும், 'சார், ஃபைனல் இயர்ல நான் செக்ரெக்டரி ஆயிக்கிறேன், நிறைய நிகழ்ச்சிகள்லாம் நடத்தி ரொம்ப பெருஷா செய்யனும், செக்ரெட்ரியா இருந்தா தான் சுதந்திரமா நினைச்ச மாதிரி செய்யலாம், இந்த வருஷம் வேணும்னா, கதிரேஷனையே ஜாயின்ட் செக்ரெக்டரியா போட்டுடுங்க, ஆனாலும் நானே மன்றத்து வேலை எல்லாத்தையும் செய்றேன்' சொல்லிட்டேன்.

நாடக மன்றத்தை பொருத்தவரை, நான் முதவருஷத்திலேருந்தே, என் சீனியர் செக்ரெக்டரிங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அதாவது நாடக மேடை அலங்காரம், அப்புறம் கஸ்ட்டா ஆர்டிஸ்ட்ங்களை, போட்டிக்கு நீதிபதிகளை, சின்னதா டான்ஸ் ஆட குட்டி பாப்பாங்க எல்லாம் கூட்டிட்டு வரது போறது எல்லா விஷயங்களும் எனக்கு அத்துபடி. இந்த புதுசான செக்ரெக்டரி ரங்கசாமியோ, இது வரை மன்ற வேலைகள் எதுவும் செஞ்சது கிடையாது, நம்ம கதிரேஷனும், அப்ப அப்ப வந்து வேலை செய்வான், ஆனா சரியான் டுபாக்கூர் ஆளு, திடீர்னு நடுவிலே எல்லாத்தையும் உட்டுபுட்டு ஓடி விடுவான், சரியா வேலை செய்யாம எங்க சீனியர்ஸ்கிட்ட திட்டு வாங்குவான், சில சமயம் எங்க சீனியர் செக்ரெக்டரி ஆறுமுகம் அவனை துரத்திவிட்டுவிடுவார். அதனால ரங்கசாமிக்கு நல்லா தெரியும் கதிரேஷனை வச்சு எந்த வேலையும் பண்ண முடியாது, தனக்கும் அவ்வளவு அனுபவம் பத்தாதுன்னு! அதனால என்னோட ஆதரவு வேணும்னு எப்பவும் அனுசரனையா, அதாவது என்னை எப்பவும் தூக்கி வச்சே நடத்தி வந்தாரு. இம்டீயட் சீனியர் இல்லயா, அப்ப அப்ப உள்ளுக்குள்ள புகஞ்சுக்கிட்டும் இருந்தாரு, 'என்ன இவனுக்கு காலேஜ்ல இவ்வளவு வாய்ஸான்னு" ஏன்னா, அதிக எஸ்டிமேட் கொடுத்து, பணம் சாங்ஷன் பண்றது எல்லாம் குதிரை கொம்பு எங்க காலேஜ் அபீஸ் சூப்ரெண்டென்ட் கிட்ட, ஆனா நம்ம மேல அவருக்கு எப்பவும் ஒரு தனிபாசம், அதனால நான் ரொம்ப ஈஸியா சாங்ஷன் வாங்கிட்டு வந்துடுவேன்!, அதையும் இரண்டு மூணு தடவை பார்த்தாரு இந்த புது செக்ரெக்டரி. வழக்கம் போல அந்த வருஷம் தொடங்கி சில நிகழ்ச்சிகள்ல நான் தான் எடுத்து எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு இருந்தேன், அதிலேயே புது செக்ரெக்டரியும் நிறைய கத்துக்கிட்டார்.

அப்ப எந்த காலேஜ்க்கு எந்த டிராமா கொண்டு போகணும், அப்புறம் யாரு நாடக் போட்டியில கலந்துக்கனும் அப்படின்னு மொத்த டிஸிசன் பவரும் அப்ப நம்ம கையில தான். ஸ்டாப் அட்வைசரும் செக்ரெக்டரிக்கிட்ட என்கிட்ட கேட்டுக்க சொல்லுவாரு. அப்பதான் நம்ம கதிரேஷன் நமக்கு எதிரியானது! சரி நம்ம ஃபிரண்டு, நமக்கு என்ன இடைஞ்சலாவா இருக்க போறான்னு நினைச்சப்ப, தேவையில்லாம பாலிக்டிஸ் பண்ணுவான். நாடகம் நாங்க எழுதி வெளிகாலேஜ்க்கு எடுத்துட்டு போனாலும், அங்க டைரக்ஷன் யாருன்னு ரெஜிஸ்டர் பண்றப்ப அவன் பேரைதான் எழுதி அனுப்பிச்சிட்டான், அதுக்கு நம்ம செக்ரெக்டரியும் சப்போர்ட்டு! அதுவும் இல்லாம நாங்க போட்ட டிராமாவுக்கு, சிறந்த இயக்குனர்க்கான பரிசு அந்த Competitionல கிடைச்சது அதையும் அவன் வாங்கிகிட்டு போனதை பார்த்து எங்க குரூப் மொத்தமும் குமுறுச்சு! சரி பொறுத்துக்கங்கடான்னு எல்லாத்தையும் அடக்கிட்டு சமாளிச்சு வந்தேன். அப்ப தான் அந்த வருஷத்துக்கான 'Intera College Dramatic Competition' அறிவிச்சப்ப, நம்ம முருகவேள் எழுதிய நாடகம், பேரு 'தொலைவில்' ன்னு, அதை போடலாமுன்னு எங்க வருஷபசங்க நினைச்சு வச்சிருந்தப்ப, வந்தது இடி!

அந்த வருஷத்துகான் அந்த Competion க்கு நாடகம் கொடுக்க சொல்லி நோட்டீஸ் போட்டோம், எல்லா யியர்லருந்தும் நாடக 'Entry' வரும், அதில ஒன்னுக்கு மேலே 'Entry' வந்தா, பரீசலிச்சு நல்ல நாடகங்களை செலெக்ட் பண்றது பெரும்பாலும் என் வேலைதான். மத்த யியர்களுக்கு இப்படி, ஆனா எங்க யியர்ல, நான் தான் எப்பவும் எழுதுவேங்கிறதாலே யாரும்'Entry' கொடுக்கமாட்டாங்க, ஏன்னா எல்லாருக்குமே தெரியும் நான் எழுதி போடற நாடகங்களுக்கு எப்பவுமே அட்லீஸ்ட் ரெண்டு பரிசு கேரெண்டின்னு, அதனால எப்பவுமே யாரும் எனக்கு எதிரா, போட்டியா 'Entry' கொடுக்க மாட்டாங்க. அப்படியே கொடுக்க விருப்ப பட்ட எங்கிட்ட வந்து பேசுவாங்க, நானே அவங்க டிராமாவை எடுத்து அதில எதும் மாற்றம் செய்றதுன்னா செஞ்சு போடுவோம். அப்படிதான் முருகவேள் நாடகத்தை எடுத்து போடலாம்னு இருந்தோம்! அப்ப தான் போன வருஷ நம்ம நாடகத்திலே நடிச்சாரே டாக்டரா, அந்த அம்பேத்கார் கோஷ்டி, தனியா ஒரு நாடகம் எழுதி செக்ரெக்டரிகிட்ட கொடுத்திட்டான்! அதையும் நம்ம கதிரேஷனும் அந்த செக்ரெக்டரியும் செலக்ட் பண்ணிட்டாங்க, எங்கிட்ட கூட ஒரு வார்த்தை கேட்காம!
வந்ததே கோபம் எங்க குரூப்புக்கு!, எல்லாம் கதிரேஷனை புடி புடின்னு புடிச்சிட்டானுங்க! பிறகு சரி விடுங்கடான்னு, செக்ரெக்டரிக்கிட்ட பேசினேன், அவரும், நான் என்ன பண்றது உங்க 'Entry' வரதுக்கு முன்னே அவங்க கொடுத்திட்டாங்க, நானு அவ்வளவு தான்னும் செலெக்ட் பண்ணிட்டேன்னார். நான் சொன்னேன், 'நான் தான் மத்த வருஷ நாடகமெல்லாம் பரீசிலனை பண்ணிக்கிட்டிருக்கேன்னே,எப்படி என்ன கேட்காமா செஞ்சீங்கன்னு' ( அந்த டாகடர் எழுதி எங்கிட்ட கொண்டாந்து கொடுத்திருந்தா, அதை வகையா மாத்தி நல்லா எடுத்துட்டு போய் அரங்கேற்றம் பண்ணி இருப்பேன், ஆனா இது நம்ம கதிரேஷன் பாலிடிக்ஸ்ன்னு அப்புறம் தான் தெரிய வந்துச்சு!) அப்பறம் அவரு சமாதானமா, சரி வேணுமுன்னா உங்க நாடகத்தை கெளரவ அரேங்கற்றமா செய்யுங்க, ஆனா 'Competition'ல அவங்க நாடகம் வரட்டும்னுட்டாரு. நான் சொன்னேன் , இது எங்க யியருக்குள்ள பாலிடிக்ஸ் வளர தோதுவா போயிடும், அதனால நம்ம பரிசீலனை பண்றமாதிரி செஞ்சு, நாடகத்தை மாத்துவோமுன்னு சொன்னேன்! அந்த நாடகத்தை வேண்ணா அவங்க கெளரவ நாடகமா போடட்டும், நம்மலும் அதுக்கு ஒரு ஆறுதல் பரிசு எதும் கொடுத்திடுவோமுன்னு! அதுக்கு செக்ரெக்டரியும் முதநாள் ராத்திரி சரின்னார். நடுவில நம்ம கதிரேஷன் என்ன பாலிடிக்ஸ் பண்ணுனானோ தெரியல்லை, அடுத்த நாளு முடியாதுன்னுட்டாரு! போட்டிக்கு உங்க நாடகத்தை போட முடியாது அதை கெளரவ அரேங்கற்றம் பண்ணுங்கன்னு!

வருஷா வருஷம் நாடக போற எங்க குரூப் பசங்க அப்படியே இடிஞ்சு போயிட்டானுங்க, சரி இந்த நாடகத்தை நம்ம போட்டிக்கு போடவேணாம், ஆனா இது மாதிரி இந்த காலேஜ்ல இத்தனை வருஷத்தில போடலன்னு எல்லாரும் மூக்கிலயும் விரலை வைப்போமுன்னு பேசி,அதை எவ்வளவு 'Professional' போடமுடியுமோ, அவ்வளவு 'Professional' போட்டு கலக்கிட்டோம், அதுக்காக நாங்க எடுத்துகிட்ட சிரமங்கங்கள் எக்கசக்கம். எதுக்கு சொல்ல வரேன்னா, இந்த பாலிடிக்ஸ் எல்லா இடத்திலேயும் இருக்கிற ஒன்னு! மனுஷ ஜன்மங்கன்னு கூட்டம் எங்கெல்லாம் இருக்கோ, அங்கெல்லாம் இது இருக்கும், இது ஒரு அடிப்படை நியதி! அந்த நியதியலே, நான் எவ்வளவு ஈஸியா, அடுத்த வருஷம் செக்ரெக்டரி ஆயி நல்ல பெரிசா எதை எதையோ செய்யனும்னு கனவுக் கோட்டை கட்டி வச்சிருந்தோன்னோ அதில எல்லாம் இடி விழுந்த மாதிரி அந்த செக்ரெக்டரி ஆக நாம் பட்ட சிரமக்கதை இருக்கே, அது பெரியகதை, அதில என்ன வில்லங்கம் வந்தந்துன்னு அடுத்த பதிவிலே பார்க்கலாமா?

Wednesday, April 19, 2006

சின்னபயலேயும் திருட்டுபயலேயும்!

'சின்னபயலே சின்னபயலே சேதி கேளடா'ங்கிற பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தோட பாட்டை உல்ட்டா பண்ணி வைரமுத்து எழுதிய 'திருட்டுபயலே திருட்டுபயலே'ங்கிற பாட்டோட ஆரம்பம் ஆகிறது இந்த திருட்டுபயலே படம். எம்ஜீஆருக்கு நல்லா சின்னபிள்ளைங்களுக்கு புத்திமதி சொல்லி அழகா எழுதிகொடுத்த பாட்டை குட்டிசுவரு பண்ணி இப்படி ஒரு பாட்டு, என்ன விழிப்புணர்ச்சி ஏற்படுத்தன்னு தெரியல்லை! இந்த ரீமிக்ஸ்ல தொட்டால் பூமலரும்ங்கிற வாலியோட பாட்டை திருப்பி போட்டு இந்த எஸ்ஜே சூர்யா பண்ண கருமத்தை தான் இவெங்களும் பண்ணி இருக்காங்க! அந்த காலத்தில நயத்தோட காதலை சொல்லியும், அறிவுரைகள் சொல்லியும் அழகா வந்த தமிழ் பாட்டுகளின் லட்சணம் இப்ப இப்படி இருக்கு! சரி பாட்டு தான் இந்த கந்தரகோலம்னாலும், படம் என்னான்னு பார்க்கலாமுன்னு உட்கார்ந்தா, ம்.. எல்லாம் கலிகாலம்!

படத்தோட ஹீரோவை அவரு அஞ்சாம் கிளாஸ் படிக்கிறப்பவே, அவங்க அப்பா தனக்கு வரும் லஞ்சப் பணத்தை வாங்கி வர அனுப்பி, சின்னபிஞ்சு மனசுல நஞ்சை விதச்சிடுறாரு! நல்லா படிச்ச பையன் காசு கொடுத்தா எல்லாம் கிடைக்கும்னும், லஞ்ச காசை திருடி கெட்டுப் போயி ஊதாரி ஆயி போய்ட்டானாம். பிறகு பெரியவனா வளர்ந்து, ஒரு தோசை கிடைக்கிலன்னு தம்பிய அடிச்சு போட்டுட்டு அவன் மாமா வீட்டுக்கு மெட்ராஸ் வந்து, அங்க திருட்டுத்தனமா ஒரு பணக்காரன் பொண்டாட்டியை அவ எசகுபிசகா கோல்ஃப் விளையாடினதை, அதாங்க புருஷன் ஃபிரண்டோட சல்சா பண்ணதை நம்ம டாக்டர் பிரகாஷ் மாதிரி படம் எடுத்து, அத வச்சி பிளாக்மெயில் பண்றான். அவள் செலவில ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மஜா பண்ணிக்கிட்டு அப்படியே ஆஸ்திரேலையா சுத்தி பார்க்கவும் புறப்பட்டு போறான்! அங்கனதான் கதைக்கு முடிச்சு. அப்படி ஆஸ்திரேலியா போனப்ப, வெறும் வெள்ளக்காரிங்களை பார்த்து போரடிச்சு, நம்மூரை பொண்ணை தேடறப்பதான், நம்ம சோனியா அகர்வால் வந்து பீச்சுல குளிக்க, நம்ம ஹீரோ துரத்தி துரத்தி அவளை காதலிக்கிறாராம். அப்புறம் சோனியாவை அந்த பணக்காரிதான் செட்டப் பண்ணி அனுப்பி வச்சாளாம். அதாவது ஹீரோவை காதல் வலையில விழவச்சு, அவனை வழிக்கி கொண்டுவர பார்க்கிறாளாம். எப்படி கதை பாருங்க!

கடைசியில ஹீரோ சோனியா ஒரு வேலைக்காரி பொண்ணுன்னு தெரிஞ்சும், அந்த பணக்காரி செட்டப் பண்ண ஆளும் தெரிஞ்சும் விடாம காதிலிக்கிறாராம். ஹீரோ தொடர்ந்து பிளாக்மெயில் பண்ணி காசை கறக்கிறாராம். அந்த வேலைக்காரி மகளையும் தொடர்ந்து காதலிக்கிறராம்.பிறகு காதலி சொல்லி திருந்தி அந்த அஜால் குஜால் கேசட்டை அந்த பணக்காரிக்கிட்டேயே திருப்பி கொடுத்துட்டு உழச்சு வாழ தயாரானப்ப, எல்லா விஷயமும் அந்த பணக்காரனுக்கு தெரிஞ்சு, பொண்டாட்டியை மன்னிச்சுட்டு, ஹீரோவை போட்டு தள்ளுறான், குடும்பம் விஷயம் தெரிஞ்சுப் போச்சேன்னு. அப்புறம் சுபம்! கரும்மம்டா சாமி!

படத்திலே விவேக் இலங்கை தமிழரா பண்ற காமடி கொஞ்சம் பரவாயில்லை. அப்புறம் அந்த திருட்டு வீடியோ புடிச்சு, நானும் காசு சம்பாரிக்கப்போறேன்னு, சீரியல் எடுக்கறவங்களையும், இப்ப எடுக்கற சீரியலுங்களையும் நக்கலடிச்சு வர காமடி ரசிக்கும் படியா இருக்கு. இதுல வர சில டைலாக்கு, சொல்லவேணாம், உதாரணத்துக்கு, 'ஒரு தடவை பண்ண தப்பு, அதை தொடர்ந்து பண்ணா அது ஸ்டைல்'.

இந்த சோனியா பொண்ணு, இந்த மாதிரி முரட்டுதனமா, வெட்டியா திரியற ஆம்பளை பசங்களை திருத்தி நல்லவழியில வாழவைக்க முயற்சி செய்யும் காதலியா நல்லாவே நடிக்குது. அந்த பொண்ணுக்கு இயற்கையாவே இந்த மாதிரி லவ்வர் கேரக்கெடர், அதுவும் புத்தி சொல்லி திருத்தும் அந்த கேரக்டர் ரொம்ப சாதரணமா வருது. நான் ஏற்கனவே 7 ரெயின்போ காலனியிலயும், காதல் கொண்டேன்லயும், அதே சேட்ல வர கேரக்டர்ஸ்ஸ அழகா பண்ணுது இந்த பொண்ணு! இது மாதிரி வாழ கத்து கொடுக்கும் காதல் எவ்வளவோ மேல், வெட்டியா பீச்சு, சினிமான்னு சுத்தி வந்து அந்த வாலிப வயசுக்கே உண்டான கவர்ச்சி, காமத்தால அனுபிவிக்கும் உடல்சுகத்தை விட ஒருத்தி ஒருத்தனை திருத்தி நல்ல வழியில வாழ்க்கை வாழவச்சு, கடைசியா இந்த சுகத்தை அவனுக்கு கொடுப்போமுன்னு ஒரு போல்டா சொன்ன செல்வராகவன் அப்ரோச், அட இது புதுசா, பார்க்க நல்லா இருக்கேன்னு தோணுச்சு!

அப்படி ஏதாவது கதை பண்ணி சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும், ஆனா இந்த திருட்டுபயலே, ம்.. என்னமோ இந்த டைரக்டர் சுசி நம்ம மணிக்கிட்ட வேலை செஞ்ச ஆளாமே. அந்தாளும் படத்தில ஒரு டிடெக்டிவா நடிச்சிருக்காரு! சுவாராசியாமா கதை பண்ணனும்னா எப்படி வேணும்னாலும் பண்ணலாம் போலருக்கு!

Monday, April 17, 2006

இது எலெக்ஷன் டைம்!

இந்த தேர்தல் இருக்கே, இது தான் என்னுடய 'Extravert Character' ஐ முதன் முதல்ல வெளிக் கொண்டுவர காரணமா இருந்த ஒன்னு! அப்ப, நான் இரண்டாவதோ இல்ல மூணாவதோ படிச்சிக்கிட்டு இருந்த நேரம். அது பார்லிமெண்டுக்கும், சட்டசபைக்கும் சேர்ந்து நடை பெற்ற தேர்தல்னு நினைக்கிறேன். 1971ல நினைக்கிறேன். அப்ப காங்கிரஸ் பிரிஞ்சு, ஒன்னு இராட்டை சின்னத்தோடயும், இன்னொன்னு பசுகன்று சின்னத்தோடயும் தேர்தல்ல போட்டியிட்ட நேரம். நான் சும்மா எங்க கடைக்கு போயிருந்தப்ப, எங்க கடைக்கு எதிர்த்தாப்பல நல்ல சின்னதா காங்கிரஸ் கட்சி ஆபீஸ், கூரையிலனால மேஞ்ச ஒன்னு, அதில பேப்பர், நோட்டீஸ்னு, அப்புறம் மைக் போட்டு சிவாஜி பாட்டு எல்லாம் போட்டு, அப்ப அப்ப நிறுத்தி மைக்ல பேசி ஓட்டு சேகரிச்சாங்க, அம்மா அய்யா எல்லாரும் ஓட்டை ராட்டை சின்னத்துக்கு போடனும்னு. நான் கொஞ்சம் துறு துறுன்னு இருப்பேன். என்னையை அந்த கட்சி ஆபீஸ்ல கூட்டி வச்சு, மைக்கை கைல கொடுத்து, இந்த மாதிரி நடுவில நடுவில பேச சொல்லி சும்மா உட்காரவச்சுட்டு போய்ட்டாங்க. நானும் சும்மா வீரமா, வளைஞ்சு, நெளிஞ்சு பல குரல்கள்ல பேசி அந்த கடை வட்டாரத்தை ரொம்ப கவர்ந்திழுத்தேன் என் பேச்சால. எல்லா கடைக்காரங்களும், யாரு மைக்கில பேசிறதுன்னு கட்சி ஆபிஸு வரை ஒரு எட்டு வச்சு வந்து பார்த்துட்டு போனாங்க. நம்ம பேச்சுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால எலெக்ஷன் முடியும் வரை தினம் வந்து பேச சொல்லி சும்மா சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினாங்க!

எதுக்கு சொல்ல வரேன்னா, இது நமக்கு தைரியமா எப்படி மேடைகள்ல பேசனும்னு அச்சாரம் போட்டு கொடுத்த நிகழ்ச்சி. அதுக்கப்பறம், இந்த அரசியல், தேர்தல் எல்லாம் கொஞ்சம் ஆர்வத்தோட கவனிக்க காரணம், என்னோடய அண்ணன் ஒருத்தர் அரசியல் இருந்த தால. அதுவும் நான் எம்ஜிஆர் ரசிகன், அவரும் அந்த அதிமுக வில உறுப்பினரா இருந்து நல்ல வளர்ந்த நேரம். அப்புறம் எங்க பெரிய அண்ணன் நல்ல விமரிசகர், எல்லா கட்சிகளையும் நல்லா விமரிசனம் பண்ணக்கூடியவர். அவர் வருவாய் துறையில வேலை செஞ்சதாலே, அரசாங்க சட்ட திட்டங்கள், எப்படி ஏழை பாளையை போய் சேருது,இல்ல எந்த விதமா பாதிக்கிதுன்னு அழகா அப்ப அப்ப எங்க வீட்ல இருக்கிற பெருசுங்க, வர விருந்தாளிங்க கூட கதை அடிச்சிக்கிட்டு இருப்பார். அந்த கதைகளை அங்கன உட்கார்ந்து கேட்கிறதில நமக்கு ஒரு சுவாரசியம்!

அப்பதான் இந்த தேர்தல் சின்னங்கள் பத்தி பேச்சு வந்தப்ப, திமுகவின் புத்திசாலித்தனதை அழகா சொல்லிக்கிட்டிருந்தார், அதாவது தேர்தல் சின்னங்கிறது சரியா படிக்காத பாமரனையும் போய் சேரனும். அதை அவங்களே கட்சி உதவி இல்லாம் வரஞ்சு promote பண்ணனும். அப்படி பட்ட சின்னத்தை தேர்ந்தெடுப்பதில் அண்ணாதுரையின் புத்திசாலித்தனத்தை சொல்லுவாரு. இந்த உதயசூரியன் சின்னம் ரொம்ப ஈஸி, இரண்டு கோடு போட்டு மலையை போட்டுடலாம், பிறகு ஒரு அரை வட்டம் அதுக்கு மேலே ஒளி கோடுகள், எவ்வளவு ஈஸி பாருங்க. அதே மாதிரி எம்ஜிஆரும் தன் கட்சி சின்னத்தை தேர்ந்தெடுத்தப்ப இரட்டை இலை தேர்ந்தெடுத்தார். அதுவும் சுவத்தில வரையறுது ரொம்ப ஈஸி. அதுக்காக இவெங்க சண்டை போட்டு இந்து தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையத்துக்கிட்டருந்து வாங்கினாங்க. மத்தபடி பசுகன்று, பம்பரம், மாம்பழம் அப்படின்னு அதுங்களை வரஞ்சு அவ்வளவு ஈஸியா ஷேட் கொடுத்திட முடியாது எல்லாராலயும்! இன்னும் விஜயகாந்துக்கு சின்னமே கிடைக்கிலன்னு கெள்விபட்டேன். அவரு இதுல கொஞ்ச்ம் புத்திசாலித்தனத்தை கடைபிடிப்பாரன்னு தெரியல்லை! இன்னும் இந்த சின்னங்கள் எத்தனை காலம் இருக்கப்போதோ தெரியல்லை. எப்ப எல்லாருக்கும் படிப்பறிவு வந்து பேரை படிச்சி ஓட்டு போடும் நிலமை எப்போது நம் நாட்டுக்கு வரப்போகுதுன்னு தெரியல்லை!

இந்த எலெக்ஷன்ல சீட்டு வாங்கிறதும் ஒரு பெரிய அரசியல், இதை நான் நேரில இருந்து பார்த்தவன்ங்கிறதால சொல்றேன்! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க அண்ணன் அதிமுகவில சேர்ந்து அப்ப முசிறி புத்தன், சோமசுந்திரம் அகியோரோட செல்லப்பிள்ளை மாதிரி இருந்து, கொஞ்சம் வாய்ஸ் உள்ள ஆளா வளர்ந்திருந்த நேரம். அப்ப 1977ல வந்த எலக்ஷன்னு நினைக்கிறேன். திருச்சி ஒன்னு தொகுதில எல்லாரும் எதிர்பார்த்த வேட்பாளர் மதிவாணன் ஒருத்தர், அவருக்குத்தான் 100 சதவீதம் சீட்டுன்னு எல்லாரும் நினனச்சிருந்த நேரம். ஆனா வேட்பாளர் பட்டியல் வந்தப்ப பாத்திரக்கடை வச்சிருந்த மாணிக்கம் என்பவருக்கு எம்ஜிஆர் சீட்டு கொடுத்திட்டாரு! அதுக்கு ஒரே காரணம், மாணிக்கம் கொடுத்த பெரிய பணபொட்டி தான். அது தெரிஞ்சு மாணிக்கத்தை எங்க அண்ணன் அவங்க தோஸ்த்து எல்லாம் மாணிக்கத்தை அடிச்சு பெரிய ரகளையா போயி, கட்சி மேலிடிம் தலையிட்டு, மாணிக்கத்துக்கு வேலை செய்ய சொல்லி எங்க அண்ணனுக்கு உத்திரவு போட்டுட்டாங்க! அவரும் அப்படியே செஞ்சுக்கிட்டிருந்தாரு. ஒரு தடவை எம்ஜிஆர் திருச்சிக்கு பேச வந்தப்ப கூட்டத்தில ஆரம்பிக்க முன்ன சொன்னது, எங்க அண்ணன் பேரை கூப்பிட்டு, அவரை அவரு வண்டியில போயி உட்காரச் சொன்னது தான், அப்புறந்தான் பேச்சை ஆரம்பிச்சு முடிச்சுட்டு போனார். அவரு அடுத்து முசிறி போயி பேசனும், அதுக்குள்ள எங்க அண்ணனுக்கு காருக்குள்ள வச்சு நல்ல பூசை எம்ஜிஆருக்கிட்ட. சும்மா மொத்து மொத்தி அப்புறம் முசிறில இறக்கி விட்டுட்டு, ஒழுங்கா மாணிக்கத்துக்கு வேலை செய்யனும்னு சொல்லிட்டு போயிட்டார். இது நிறைய பேருக்கு தெரியாது ஆனா எங்களுக்கு தெரியும்!

ஆக வேட்பாளர்கள் தேர்வு எப்பவுமே இப்படிதான். பெரும்பாலும் ஓட்டு போடறவங்க, அரசாங்கம் எப்படி நடந்தது போன ஆட்சியிலே, இல்ல அதுக்கு முன்ன ஆட்சி செஞ்சவங்க என்னா செஞ்சாங்கன்னு தீர ஆராஞ்சு அதுக்கு தகுந்த மாதிரி ஓட்டு போடறதில்லை. எல்லாமே எதோ அந்த நேரத்தில கிடைச்ச ஆதாயம், பிறகு தன் கூட இருக்கிற சொந்தபந்தங்கள் ஏதோ ஒரு வகையில எந்த கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்திவதால போடும் ஓட்டுகள் தான். ஒரு தடவை என் தந்தை ஓட்டு போட்டுட்டு வந்து சொன்னாரு, அந்த வேட்பாளர் படிச்சது B.E., அது நீ படிச்ச படிப்பு அதுனால நான் ஒட்டு போட்டேன்னு! இது போல கல்வியை பார்த்து போட எத்தனை பேரு முன்வருவாங்க. அவருக்கு படிச்சவங்க நல்லது செய்வாங்கன்னு மனசுல தோண்றமாதிரி எத்தனை பேருக்குத் தோணும்! அப்படியே இல்லனாலும் நம்மல மாதிரி படிச்சவங்க ஆராஞ்சு நல்ல வேட்பாளர்களை நம்ம வீடு பெரியவங்களுக்கு வழிகாட்டலாம். அப்படியே செய்யலாமுன்னு இந்த கட்சி அறிக்கைகள்(Manifesto) பார்த்து அப்படியே கொஞ்சம் மத்த விஷயங்களையும் பீராயலாமுன்னு பார்த்தா சோகந்தான் போங்க!

இந்தோ தமிழ்நாடு அரசாங்க web siteல தமிழக நிதி நிலமை அஞ்சு வருஷத்துக்கு முன்ன இருந்ததுக்கும்(White Paper on Tamil Nadu Government's Finances), இப்ப இடைக்கால வரவு செலவு திட்டத்தில அறிவிச்சிருக்கிற முன்னேற்றத்தையும்(இந்த அரசாங்கம் செஞ்சதா சொல்றதை)விமரிசச்சு, திமுக, அதிமுக கூட்டனிகளை தெளிவா சொல்ல நம்ம ப்ளாக்கருங்க யாரும் முன் வரல்லையே. நாமலும் சுட சுட கவர்ச்சி செய்திகளை தானே இந்த ஊடகத்திலை போட்டுக்கிட்டு இருக்கோம்! அழகா தேர்தல் 2006 ன்னு ஒரு தனி வகைப்பிரிவு தமிழ்மணத்தில வந்தாலும், இந்த மாதிரி இதை அழகா விமரிசனம் யாரும் இன்னும் பண்ணவே இல்லை! ஒரு கட்சியில சொலற மாதிரி 2 ரூவாக்கி அரிசி , இலவச டிவி, இலவச மின்சாரம் துணி நெய்றவங்களுக்கு(ஏற்கனவே விவசாயத்துக்கு கொடுக்கிறது எங்க போகுதுன்னு தெரியல்லை), இலவச கேஸ் அடுப்பு, இது எல்லாம் சாதரண படிக்காத மக்களை கவரும் எலெக்ஷன் அறிக்கைகள். இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்லிக்கிட்டு திரியப்போறாங்களோ! அப்புறம் இலவசமா 2 ஏக்கர் நிலம், இருக்கிற தமிழக பூமில விலைநிலங்கள் ஒரு 21 சதவீதம் தான் அரசாங்க கணக்குப்படி. எந்த நிலத்தை பட்டா போட்டு எங்க கொடுக்கப்போறங்கன்னு தெரியல்லை! மேற்கொண்டு தமிழக அரசு web siteல இருக்கிற எல்லா ரிப்போர்ட்டும் படிச்சி கொஞ்சம் ஆராயலாமுன்னு பார்த்தா, எல்லாம் அரதப்பழசு, அதுவும் 'Tamil Nadu - An Economic Appraisal 1999-2000' படிச்சா அஞ்சு வருஷ முன்னாடி கணக்கு. என்னத்தை மக்கள் படிச்சு, என்ன நிலைமையை தெரிஞ்சுக்க போறங்கன்னு ஒன்னும் தெரியல்லை!

கடைசியில இந்த எலெக்ஷன்ல என்னதான் நடக்கிதுன்னு பார்க்கப்போனா, கவர்ச்சியா சிம்ரன், விந்தியா, கோவை சரளா மேடையில பேசற படங்கள் போட்டு ஜாலியா வச்சிருக்காங்க! அவ்வளவுதான்! இன்னய தேதிக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்க இந்த மாதிரி ஏழைபாளைங்களை முன்னேத்த எங்கயோ போய்கிட்டிருக்கு. ஈத்தோப்பியாவில மக்களை நேரிடையா பேட்டி கண்டு, அங்க உள்ள கஷ்ட நஷ்டங்களை எடுத்தி சொல்லி up to date ஆ BBC website ல பதிவு பண்ணி, இந்த ஆப்பிரிக்க உதவி தொகைகள் ஒழுங்கா எப்படி போய் சேரணும்ங்கிறதுக்கு வழி வகை செய்றாங்க! அதையும் அழகா Blog பண்ணி விமரிசனம் செஞ்சு விழிப்பூட்டிகிட்டுருக்காங்க. வேணும்னா இந்த சுட்டியில போய் பாருங்க! நம்மலும் இந்த மாதிரி மக்களை நேரில் கண்டு ஆட்சி செஞ்சவங்க குறை நிறைகளை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'Journalism' நம்மூர்லயும் வராதா????

Saturday, April 15, 2006

ஜீனோம் - Who is your Daddy?

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில, அந்த சின்ன பொண்ணுக்கு விவரம் தெரிஞ்சோன, தன் தாய்யை பார்க்க துடிக்கும். அதை தொடர்ந்து, சண்டை பூமியான இலங்கைக்கு தன் அம்மாவை தேடி போறதை உணர்ச்சிமயமா, இலங்கை போராட்ட பின்னனியிலே அழகா படம் புடிச்சிருந்தார், நம்ம மணி. எத்தனை பேரு படம் பார்த்தீங்களோ எனக்கு தெரியது. ஆனா, அது உணர்ச்சிகளின் குவியல். அதத்தான் விஞ்ஞானம் வழியா பார்த்தோமுன்னா என்னான்னு தோணுச்சு! இன்னைக்கு 'Bio Technology'ங்கிற விஞ்ஞானம் எங்கேயோ போய்கிட்டு இருக்குது. அப்படீன்னா என்னான்னு நீங்க கேட்கிறது புரியுது! இந்த விஞ்ஞானம் உயிரியல்(Biology) மற்றும் தொழில்நுட்பம் (Technology)சம்பந்தபட்டது. அதுமிட்டுமில்லாம, அதோட இணைஞ்ச, பரம்பரைத்தனம்(Genetics), உயிர்இரசாயனம்(Biochemistry), நுண் உயிரியல்(Microbiology), நோய்தடைகாப்பியல்(Immunology), கிரிமியியல்(Virology), ரசாயனம்(Chemistry), பொறியியல்(Engineering) போன்ற விஞ்ஞானங்கள் கொண்டது தான். இதனுடய உபயோகம், சுகாதாரம், மருத்துவம், விவசாயம், விலங்கின நிர்வாகம் (Animal Husbandry), விளைபயிர் நிர்வாகம் (Cropping system and Crop Management), இயற்கைசுழல் (Ecology), உயரணுவியல்(Cell Biology), மண் வளம் சம்பந்தபட்ட விஞ்ஞானம் (Soil science), மண்வளபாதுகாப்பு (Soil Conservation), உயிரின புள்ளி விபர இயல் (Bio-statistics), தாவர உடற் கூறுவியல்(Plant Physiology), விதை தொழில்நுட்பம்(Seed Technology ) அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். மொத்ததில உயிர், உயிர் சம்பந்தபட்ட அத்தனையும், ஆறடி மனுசன்லருந்து, செடி கொடி, இந்தோ துக்னியோண்டு, நுண்கிருமி, வாழும் உயிரினத்தின் கடைசி வடிவம் செல், அமீபான்னு, அது வரை எல்லாத்தையும் பத்தி அதனுடய அடிப்படை கட்டம் என்னான்னு நோண்டி, அதில வளர்ந்த விஞ்ஞானம் தான் இது! ம்.. இப்பவே இவ்வளவு மூச்சு வாங்குது, இன்னம் மீதியை எப்படி சொல்றது.. ங்....!

பள்ளிக்கூடம் படிச்சப்போ, நமக்கு ஆர்வம் எல்லாமே கணிதத்தில தான், அதுவும் கஷ்டமான கணக்குகளை போட்டு விடை கண்டுபிடிச்சு சட்டுன்னு எல்லாத்துக்கும் முன்னே செஞ்சு காமிக்கிறதுல ஒரு திரில். ஆனா இந்த விஞ்ஞானத்தில, பொளதீகம், இரசாயணத்தில இருந்த அளவுக்கு ஆர்வம் இந்த உயிரியல், தாவரவியல், விலங்கியல்ல அவ்வளவு இருந்ததில்லை. அதிகமா பாடம் நடத்தறப்ப ஏதாவது பேசிகிட்டு, எங்க நவநீதம் வாத்தியாருகிட்ட, 'ஆமா நுரையீரல்லின் படம் வரஞ்சு பாகங்களை குறின்னா குறிக்காதிங்க, ஆனா ஜெயலலிதா படம் வரைஞ்சு பாகங்களை குறின்னா குறிச்சுடுங்க கரெக்டா, பன்னாடை, அங்க என்னா பேச்சு, பாடத்தை கவனின்னு' பாட்டு வாங்கிகிட்டே படிச்ச பாடங்கள்.ஆனா கணிதத்தை வச்சு வந்த கணனியும் இந்த உயரியல் விஞ்ஞானமும் சேர்ந்து போடற ஆட்டம் இருக்கே, இப்ப மலைப்பா இருக்கு! அதாங்க 'Bio-Informatics', அதைத்தான் சொல்றேன். இப்பையும் இணையத்தில பீராஞ்சு படிக்க படிக்க, தங்க சுரங்கத்தில தங்கம் எடுத்த மாதிரி, 'அய்யோ, இந்த ஆழகு படிப்பை முடிக்காம முத்திபோய்ட்டமேன்னு வருத்தமா இருக்கு. ஆனா, கல்விக்கு எப்பவுமே வயசில்லை பாருங்க, தொடர்ந்து படிச்சுக்கிட்டே இருக்கலாம். படிச்ச அதத்தான் என்னான்னு உங்களோட அரட்டை அடிப்போமேன்னு தான் இந்த பதிவே!

சரி முதல்ல உயரியல்ல பார்த்தீங்கன்னா, வாழும் எந்த உயரினத்துக்கும் அடிப்படை உருவம் உயரணு, அதாவது செல் (Cell). அதாவது சின்ன சவ்வு பைக்குள்ள சிக்கலான அமைப்பில இருக்கிற இரசாயன பொருட்கள் தான் எல்லாமே. அதவச்சு கட்டின வீடு தான் மனுசக்கூடு! அது மாதிரி செல்லுங்க நம்ம உடலுக்குள்ள எவ்வளவு இருக்கு தெரியுமா, கோடிக்கு கோடி, அதாவது 6x1013. அது ஒரு 320 வகை, மூளை(neurons), தசை, தோல் அப்படின்னு எல்லாத்திலேயும் இந்த செல்லுதான். அதன் நீள அகலம் ரொம்ப கம்மி. அதாவது ரத்ததில இருக்கிற சிவப்பணு அஞ்சு மைக்ரான் தான், அதே மாதிரி மூளையில இருந்த முதுகு வடம் வழியா போற நியூரான் செல் ஒரு மீட்டர் நீளம். வெறுமன ஒரே செல்லுல்ல இருக்கிற உயிரினம் தான் பாக்டீரியா, அப்புறம் உரமோர்ல இருக்குமே யீஸ்ட்டு(Yeast), அதாங்க பாலை தயிராக்கிரது! இது மாதிரி தாவரம், விலங்கு, மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இது பொருந்தும். இந்த உயிரினத்தில இருக்கிற செல்லுங்க இரண்டு வகை. ஒன்னு 'prokaryotes'ன்னு இதுதான் ஆதிமூலம். அடுத்தது 'eukaryotes', இதிலருந்து உண்டானது தான் மனசன்லருந்து, தாவரம், எலி, பூனை, எல்லாம். நாம் முதல்ல சொன்னது பாக்டீரியா வகையை சேர்ந்தது. இந்த இரண்டும் தான் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை. இதுங்க பூமி தொடங்கி உயிரினம் ஆரம்பிச்சப்ப வந்து அப்புறம் கொஞ்ச கொஞ்சமா உரு மாறி, இன்னைக்கு இப்படி எல்லா உயிரினங்களா இருக்கிறது! அதுக்கு அத்தாட்சி மண்ல தோண்டி எடுத்த டைனோசர் எலும்பு, மற்ற மண் புதைந்த சுவடுகள் ('fossil')தான். இதை பத்தி சொல்னும்னா 'Big Bang Theory' லருந்து ஆரம்பிச்சு கதையே சொல்லிக்கிட்டு போலாம். பிறகு ஒரு தடவை பூமிக்கு கீழ புதையுண்ட எண்ணெய் பத்தி சொல்றப்ப, கொஞ்சம் கதைக்கலாம், இப்ப உங்க அப்பா யாருன்னு பார்ப்போம்!

சண்டைகோழி படம் பார்த்தீங்களா, அதில ராஜ்கிரண்ங்கிட்ட, ஒரு பெரியவர் ஹீரோ விஷால் சண்டை போட்டதை சொல்றப்ப, இப்படி சொல்வாரு, 'ஐயா, நீங்க பார்க்கலயே, தம்பி சண்டை போட்டதை, வானத்துக்கும், பூமிக்குமா எகிறி குதிச்சு சண்டை போட்டதை பார்ககும் போது நம்ம பெரிய அய்யா ஞாபகந்தாங்கே வந்தது', இதை தான் 'Heredity' ன்னு சொல்றது! பரவாயில்ல நம்ம தமிழ் சினிமாவிலயும் விஞ்ஞானத்தோட இழஞ்சு காட்டுறாங்க! சரி விஷயத்துக்கு வருவோம்! அதாவது இந்த 'Heredity' மூலமா தான் நாம நம் தாய் தந்தையர்கிட்ட இருந்து கண்ணு, கலரு, மூக்கு, உயரம், குட்டை, முடி நிறம் எல்லாமே நமக்கு வருது. அது எப்படி வருதுங்கிற ஆராய்ச்சிதான் இந்த 'genetics', 'human genome', அப்படீன்னா...! ம்.. இப்ப கேட்டீங்களே இது கேள்வி!

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த செல்லு இருக்கே, அதில இருக்கிற ரசாயணம் கட்டங்கள் (' biochemical structures ') தான் ஜீன்ஸ் ('genes'). அந்த ஜீன்ஸ் உண்டாக்கிற ரசாயண பொருள் தான் 'டி என் ஏ' DNA (deoxyribonucleic acid). இந்த பொருள் ஒன்னுக்கொனு பின்னி உருவாக்கிக்கிட்ட உருவம் தான் 'க்ரோமஸம்'(chromosomes). ஆங்.. எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கா, ஆமா, ஆம்பிள புள்ள, பொம்பள புள்ள உண்டாக்க இந்த 'X' 'Y' க்ரோமஸம்ங்களை இணைவதை பத்தி தெரியுமுல்ல, அந்த சங்கதிதான்!. இது மாதிரி நம்ம உடம்புல்ல ஒரு 46 வகை க்ரோமஸம் இருக்கு!அப்படி வந்த க்ரோமஸம்ங்களின் அடிப்படை தான் ஜீன்ஸ். இந்த ஜீன்ஸ் தாய்யா, எது எது எப்படி வரணும்னு சொல்ற மந்திரம். அதுக்குள்ள தான்யா எல்லா 'instructions' னும் இருக்கு. இந்த உடம்புல உள்ள ரசாயணங்கள் எப்படி வந்து, ஆள் உருவம், கலரு முதக்கொண்டு, ஆணவம், கர்வம்னு எல்லா குணாதிசியங்களையும் அப்பன் ஆத்தாக்கிட்ட இருந்து கொண்டு வர காரணமா இருக்கு!

'சரி இதை கண்டுபிடிச்சு என்னா புண்ணியம், இதெல்லாம் தெரிஞ்ச சேதிதானே! இவெங்கெல்லாம் ஒரு ஆக்கங்கெட்ட கூவெங்க'ன்னு நீங்க புலம்பறதை கேட்குது, ஹலோ மிஸ்டர், கொஞ்சம் நில்லுங்க, மேலே போகலாம்! ஆக நான் முன்ன சொன்ன மாதிரி இந்த பின்னி பினைஞ்ச DNA இரட்டையர்களா இருப்பாங்க இந்த ஜீன்ஸ்ல, அது மாதிரி மொத்தம் 3 பில்லியன் இரட்டையர்கள் நம்ம உடம்புகுள்ள குரூப்பு குரூப்பா ஜீன்களின் கலவை இந்த 46 வகை க்ரோம்ஸங்களுக்கு அடங்கி இருக்கு! இதுங்க வேலையே புரோட்டீன்களை உண்டு பண்றது தான். (புரோட்டீன்னா , அமோனோ திரவத்தால செய்யப்பட்ட ஒரு வஸ்து, Polymer('Organic Molecule')) இந்த புரோட்டீன் தான் நம்மல உயிரோட இருக்க, உயிர் வாழ அடிப்படையான் முக்கிய வேலைகளை உடம்புல செய்யுது. எந்த புரோட்டீன், எந்த மாதிரி எதுக்கு உருவாக்குனும் அப்படிங்கிற 'instruction' ஐ இந்த ஜீனோம் கோட்ல இருந்து தான் தெரிஞ்சுக்கும். இது மாதிரி 30000 இல்ல 40000 ஜீனோம் இருக்கிற உடம்புல இந்த சூட்சமம் கொண்ட 'instruction Code' இருக்க கூடிய ஜீனோம் ஒரு 2 சதவீதந்தான், மீதி எல்லாம் அந்த க்ரோமஸ்ம் இருக்கிற பிணைப்பு, பிறகு உற்பத்தி ஆகிர புரோட்டின் எல்லாத்தையும் வழி நடத்தி ஒழுங்கா இருக்க செய்றதுக்கு உண்டான வழி தடங்கள். அதுவும் எல்லா ஜீனும் எல்லா உறுப்புக்கும் தேவையான புரேட்டீன்களை உண்டு பண்ற கோடை ('instruction Code' ) வச்சுக்கிட்டு திரியல்லை!அது அதுக்கு தனி தனி ஜீன். மூளைக்கு தனி, தோலுக்கு தனி, இதயத்துக்கு தனி, நுரையீரல், கல்லீரலுக்கு தனி. இப்படி எல்லாத்துக்கும் தனி தனி. அந்தந்த உறுப்பில உள்ள செல்லுங்க சரியான ஜீன்ல இருக்கிற கோடுகளை முடுக்கிவிட்டு அந்த உயிரணுவுக்கு தேவையான புரோட்டீன்களை சரியா உண்டு பண்ணிக்கும். அந்த சரியான ஜீன்களின் தொடர் வரிசை (DNA sequence)தான் எல்லாத்துக்குமே. இதில ஏதும் வில்லங்கம் ஆயிபோச்சு அவ்வளவு தான், தாறு மாறா புரோட்டீன்களை ஊண்டு பண்ணி, அந்தந்த உறுப்புகள் உயிர்வாழவும், ஒழுங்கா வேலை செய்யவும் உதவும் அந்த புரொட்டீன்களை அம்பேலாக்கி, கடைசியிலே எல்லாம் ஏடா கூடம் தான். அப்பதான் நாம எல்லாம் நோய்வாய் படுறது. அதனால வர நோய்கள் தான் சர்க்கரை வியாதி, இதய நோய், புற்று நோய் எல்லாம்!

இந்த ஜீன்களின் தொடர் வரிசை (DNA sequence) மாற்றம் தான் 'mutation' சொல்லுவாங்க. இது தான் எல்லாத்துக்கும் பொறி! இதோட ஆராய்ச்சிதான் எல்லாத்துக்குமே மூலம். இதை கண்டு பிடிக்கிறதல தான் இப்ப ஆவல். அது வழியா முதல்ல ஓவ்வொரு ஜீன் தொடர் வரிசை கண்டுபிடிச்சு, அதற்கப்பறம் அதன் மாற்றங்களையும் கண்டுபிடிச்சு பெரிய டேட்டா பேஸ் தயாரிச்சாச்சு. அது தான் எல்லா நிவரண மருந்துகள் கண்டுபிடிச்சு நோய் தீர்க்கா சுழுவா செய்ய போகுது! இதை பத்தி நிறைய படிக்க இணையத்தில நிறைய தளங்கள் இருக்கு!

இந்த மாதிரி கண்டுபிடிச்ச ஜீனோம் தொடர் வரிசை டேட்டா பேஸ்ஸ வச்சு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தோட, அதை அராயக்கூடிய சாஃப்ட்வேர்கள் நிறைய வந்திருச்சு. இந்த தொழிநுட்பத்தை தான் 'Bioinformatics' ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இதனுடய உபயோகம் இன்றைய உலகத்தில என்னான்னு பார்போமா!

முதல்ல இந்த 'Molecular medicine', அதாவது மருந்து தயாரிப்பில எப்படி உபயோகம்னு பார்க்கலாம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த நோய்கள் உண்டாகக்கூடிய மூலமான ஜீன்களின் வரிசை மாற்றம் (இது பரம்பரை பரம்பரையா தொடர் வியாதியா வந்தாலும், உயிர் வாழும் தருணத்தில சுற்றம், வாழும் வாழ்க்கை முறையால் வந்தாலும்) அதன் விளைவாய் வரும் அனைத்து நோய்களின் ஆதாரத்தை சரியான முறையில தெரிஞ்சிக்க இந்த விஞ்ஞானம் உதவுது. அதனால புது புது மருந்துக்கள் கண்டு பிடிக்க ரொம்ப வசதியா இருக்கு.
அதே மாதிரி நாம சாப்பிடற மருந்து மாத்திரைகள், வெறும் சிம்படத்தை வச்சு குத்து மதிப்பா சாப்பிடமா, அப்பிடியே சாப்பிட்டு வர 'side effects' எல்லாம் இனி வரப்போவதில்லை. 'Clinical medicine' சொல்ற மருந்து எல்லாம் 'personalised' ஆகப்போகுது. இதுக்கு 'pharmacogenomics' முறையிலே, உங்க பூர்வசரித்திரத்தை இந்த ஜீனோம்ல இருந்து வச்சு கண்டுபிடிச்சு சரியான மருந்து மாத்திரைகள் கொடுத்து குணப்படுத்தும் முறை வரும் நாள் ரொம்ப தூரமில்லை. ஜீன் தெரப்பின்னு, அந்த ஜீன்னையே(நோய்களின் மூல காரணகர்த்தா) பிடிச்சு அதை சரிபண்ணக்கூடிய மருத்தவம் ரொம்ப தூரத்தில இல்லை. பிறகு ஜீன் டெஸ்டிங் உங்களுக்கு தெரிஞ்ச ஒன்னு தான்.. தடவியல் (forensic) ஆதரம் கண்டு பிடிக்கதறதிலருந்து, குழந்தையோட தாய் தகப்பனை கண்டு பிடிக்கிறதிலருந்து, ஜெனடிக் டிஸ் ஆர்டர் எல்லாத்துக்குமே இந்த DNA டெஸ்டிங் எவ்வளவு உதவுதன்னு.

இது மட்டுமில்ல இதனுடய உபயோகம் இன்னும் எத்தனையோ துறையில வரப்போகுது.'Microbial genome applications' ன்னு எக்கசக்கம் இருக்கு, இந்த Microorganisms ங்கிறது எங்கயும் இருக்கு, நீர், நிலம், காத்து, ஏன் நம்ம உடம்புல, நம்ம சாப்பிடற சாப்பாட்டுல, அப்படின்னு எல்லாத்திலேயும் இருக்கு. அதனால அமெரிக்காவில இதை பத்தி ஆராய 'Microbial Genome Project'ன்னே ஒன்ன ஆரம்பிச்சு, அந்த வாழும் பாக்டீரியா போன்ற சிற்றுயிர்களை ஆராய்ஞ்சு அதன் ஜீன் தொடர்கள் பற்றின செய்தி சேகரிப்பு, அதன் உபயோகம் இந்த energy production, environmental cleanup, industrial processing and toxic waste reduction எல்லாத்திலயும் வர செய்யபோறாங்க! இது மட்டுமில்ல, இதன் ஆராய்ச்சி, விவசாயத் துறையில, விலங்கின பாதுகாப்பு அப்படின்னு சொல்லிகிட்டே போகலாம். உதாரணத்துக்கு 'Lactococcus lactis'ங்கிறது ஒரு micro-organisms, இது தான் நான் மேலே சொன்ன உரமோர்ல இருக்கிற வஸ்து இதபத்தி ஆராய்ச்சி செஞ்சு ஜீனோம் வரிசை கண்டு பிடிச்சிட்டாங்க. இது இந்த 'food manufacturers' அப்புறம் 'pharmaceutical industry' க்கு பெரிதும் உதவும் அதன் உறபத்தியை கூடு பண்ண, தனி மருந்துகள் கண்டுபிடிக்க.

இந்த 'Biotechnolgy' வளர்ந்து வரும் பெரிய தொழில் துறை. இதில இந்தியா எவ்வளவு தூரம் இருக்குன்னு தெரியல்லை, ஆனா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்ல இது மூணு பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி, லாபகரமா ஓடிகிட்டிருக்கிற ஒரு தொழில் துறை! சும்மா என்னான்னுதான் பார்க்கலாமேன்னு தான் போனா இவ்வளவு விஷயம் இருக்கு!

Friday, April 14, 2006

சித்திரை பொறந்திடுச்சு!

பள்ளி நாட்களில் இந்த சித்திரை பொறப்புங்கிறது நான் ரொம்ப பெரிசா எதிர் பார்க்கிற ஒன்னு. ஏன்னா, பொதுவா அந்த வருஷ படிப்பு முதல்ல முடிஞ்சு, பள்ளிக்கூடம் லீவு விட்டு விடும். படிப்பில்ல இனி, 'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு' பாட்டு பாடிகிட்டு ஒரே ஜாலியா இரண்டு மாசம் சுத்தலாங்கிறதால ஒரே மகிழ்ச்சி! அப்புறம் எங்க மாரியம்மன் கோவில் திருவிழா ஆரம்பம். கரகம், ஆட்டம் பாட்டம்னு ரொம்ப ஜாலியா இருக்கும். தினம் சாய்ந்திரம் கோவில்ல சிங்காரிச்சு சாமிசிலை வச்சு கூட்டம் கூட்டமா வர ஜனத்தை பார்க்கிறதில ஒரு ஆனந்தம். தினம் சாயந்திரம் பாட்டு, கச்சேரி அமர்க்களமா இருக்கும்!

அப்புறம் தமிழ் வருஷபொறப்பு.நல்ல வடை பாயசத்தோட சாப்பாடு வீட்ல போடுவாங்க. காலையிலே எல்லாம் நல்ல விளையாடிட்டு, மத்தியான சாப்பாடு செஞ்சு சாமி கும்புட்டுட்டு, சாப்பிட உட்காரனும். ஆனா அதுக்கு முன்னே ஒரு சோகம். சாமிக்கு எல்லா சாப்பாட்டையும் வச்சு கும்பிட்டு விட்டு, அதை கொஞ்சம் எடுத்து முதல்ல காக்காய்க்கு வச்சிட்டுத் தான் பிறகே நமக்கு சாப்பாடு. ஆனா அப்பதான் காக்கா சட்டுன்னு வந்து சாப்பிட்டுட்டு போகாது. சும்மா தொண்டகிழிய கா..கா..ன்னு கூப்பிட்டாலும் துரை ரொம்ப லேட்டாதான் வருவார். நமக்கோ பசி வயத்தை கிள்ளும்! மத்த நாள்ல வடகம் போட்டு காயவச்சா எந்நேரமும் ஐயா அங்கே உட்கார்ந்து தின்னுகிட்டு இருப்பார். அப்பெல்லாம் அவரை விரட்டு விரட்டுன்னு விரட்டிட்டு, ஆனா பாருங்க சித்திரை பொறப்பன்னைக்கு தேவுடு காத்துக்கிட்டு இருக்கணும். ராஜா கடைசியிலே எங்கிருந்தோ வந்து ஜம்முன்னு ரெண்டு பருக்கை எடுத்து திண்ணுட்டு பறந்து போயிடுவார். நம்ம அதான் சமயம்னு உள்ள போய் வடையை லபக்குன்னு எடுத்து போட்டுகிட்டு, பிறகு இலையிலே உட்காருவோம்!

ஆக இன்னைக்கு சித்திரப் பொறப்பு, தமிழ் புத்தாண்டு தொடங்குது. இனி ரெண்டு மாசம் ஒரே வெயில் தான். அக்னி நட்சத்திரம், முன்னேழு, பின்னேழு எல்லாம் பார்க்கப் போறீங்க! அப்புறம் வெயில், மழை, குளிர் எல்லாம் வரநேரத்தில வர்றதுதானே! ஆக தமிழ் மணத்தில வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். வீட்ல வடை பாயசதோட சாப்பிடுங்க நல்லா!

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Tuesday, April 11, 2006

அமெரிக்க முதலாளித்தவமும் வந்தேறிகுடிகளும்!

அமெரிக்கா வந்து இறங்கினோன, எல்லாமே ஒரு புதிய உலகமா தெரியும். அது கனடாவா இருந்தாலும் சரி, இல்ல யூஎஸ்ஸா இருந்தாலும் சரி. ஆனா இன்னு ஒரு உண்மை பளிச்சுன்னு தெரியவரும், அதாவது நம்ம ரொம்ப எகத்தாளமா சொல்லிக்கிட்டுத் திரிவோமே, 'மண் தோன்றி கல் தோன்றாமுன் பிறந்த மூத்தக்குடி தமிழ்குடின்னு', அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திறியவரங்க எவனும் இங்கே கிடையாது. அதாவது எல்லோருமே, இந்த பூமிக்கு பொழைக்க வந்தவுங்க. தாங்கள் சமய ரீதியாவோ, இல்ல கொடுங்கோலர்களின் ஆட்சியில் இழைக்கப்பட கொடுமையிலிருந்தோ தப்பிக்கவோ, இல்லை பஞ்சம் பட்டனியை விட்டுட்டு நல்லதொரு வாழ்க்கை வாழவோ வந்தவங்க. ஏன்னா இந்த பூமியிலே அப்ப அந்த மாதிரி சாதி சமய கொடுமைகளோ, இல்ல கொடுங்கோலன்களோ ஆட்சி புரியலை, இது ஒரு இந்திரபுரியாவும் சுததந்திரபுரியாவும் தான் இருந்தது. வற்றாத வளம் கொண்ட அனைத்து பூமி செல்வங்களையும் கொண்டிருந்திச்சு, இந்த பூமி.

ஒரு 500 வருஷத்துக்கு முன்னே, பூமியோட இன்னொரு பக்கத்தை யாருமே பார்க்கல. நம்ம கதையில படிச்சிருப்போமே ஏழு மலைகள் ஏழு சமுத்தரம் கடந்து போய் அதிசயமான உயிர் நிலையை எடுத்துட்டு வர ஹீரோ போயிட்டு வருவாருன்னு, அத கடந்து போறதுக்குள்ள என்னன்ன பிரளயங்களை சந்திக்க வேண்டியிருக்குமுன்னு. அப்படித்தான் ஒரு 1000 வருஷத்துக்கு முன்னே, இந்த உலகத்திலே ஒரு பகுதியில இருந்தவங்களுக்கு, இன்னெரு பகுதியும் ஒன்னு இருக்குன்னு தெரியாம இருந்திச்சாம்! அந்த காலகட்டங்கள்ல திக்கு திசை எதுவும் தெரிஞ்சிக்கிட அறிவையும் பெறல, சாதனங்களும் இல்லை, எதோ போய்பார்ப்போமுன்னு கடல்ல படகு கட்டி ஓட்டி, வடக்கால ஆர்டிக் பக்கத்தில கடல் பிராயாணம் செஞ்சவங்க, 'வைக்கிங்'கிற கூட்டம், நார்வே, சுவீடன் பக்கத்திலன்னு நம்ம சரித்திரம் படிச்சமில்ல! அவங்க கடல்ல மீன்கள் பிடிக்க இந்த அமெரிக்க கரை வர வந்து, திரும்ப போய்ட்டாங்களாம். அப்புறம் கட்டுமரக்கப்பல்கள்ல, அட்லாண்டிக் சமுத்திரத்தில பிராயணம் செஞ்சு, இந்தியா போக ஆசைப்பட்டு, கடைசியிலே மேக்கால போயி தான் கண்டுபிடிச்ச நிலபரப்பை, இந்தியான்னு சொன்ன கொலம்பஸ் பத்தியும் தெரியும்.(இதல விஷேஷம் ஒன்னு தெரியுமா, இப்ப நம்ம அமெரிக்க மோகம் கொண்டு இங்க வந்துபுடனும்னு துடிச்ச மாதிரி, அப்ப ஐரோப்பாவின் குளிர் பிரதேசத்தில இருந்தவெனல்லாம் நம்ம இந்தியாக்கு வந்துப்புடனும் அலைஞ்சாங்களாம். ஏன்னா உரப்பா சாப்பிடறதுக்கு உண்டான விளைபயிர் நம்ம நாட்லதான் கிடைச்சுச்சாம், பிறகு மற்ற வளம் நிறைஞ்சு செழிப்பா இருந்திச்சாம், இன்னும் ஒரு 100 வருஷம் கழிச்சு இந்த சைக்கிள் திரும்பமா, இந்த வெள்ளக்கார பசங்க நம்மூர் வர ஆசைபபடுவாங்களாம், 'கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு'ன்னு பாடபோறாங்கெளாம்! 'சரியா'ன்னு விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!) அப்படி கண்டுபிடிச்ச கண்டம் இது! அதுக்குப்புறம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் அப்படின்னு ஓன்னு ஓன்னா இந்த வட தென் அமெரிக்க கண்டத்தை கூறு போட்டு அவங்க சந்ததியினரால உருவாகி நிக்கிற நாடுகள்தான் அனைத்து வட தென் அமெரிக்க நாடுகள்.

இதில படைபலம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதிகம் பிடிச்ச பகுதி தான் இந்த வட அமெரிக்க பகுதி, அதிலேயும் முதல்ல ஆதிக்கம் செலுத்தின பிரன்சு காலனிகளை காலி பண்ணிட்டு எல்லா பகுதியையும் தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டு வந்தவங்க தான் இந்த ஆங்கிலேயர்கள். அதிகமா மதம் பரப்ப வந்த ஸ்பேனியர்ட்ஸ்ங்கிற ஸ்பெயின் நாட்டினரை தெக்கால ஓட விரட்டிட்டு, அவங்க வசம் இருந்த வட மேற்கு, மேற்கு அமெரிக்க பகுதிகளை புடிச்சு போட்டுட்டு, இப்ப அந்த தெக்கால இருந்து வந்து பொழக்க வந்தவங்க, அதாவது மதில் சுவர் ஏறி குதிச்சு ஓடி வந்தவங்களை நாடுவிட்ட துரத்த, அவங்க ஜீவனாம்சத்துக்கு பெரிய இடைஞ்சலா, இன்னெக்கு ஆர்ப்பட்டம் நடத்திக்கிட்டிருக்கிற இந்த 'Immigration Bill', குடியேறு சட்டம் என்னா அதுனால நம்ம ஊர்லருந்த வர மக்களுக்கும் என்னா துன்பங்கள்ன்னு கொஞ்சம் சொல்லலாமேன்னு தான் இந்த பதிவே!

அதுக்கு முன்ன தலைப்பிலே இருந்த முத பாதியை பார்ப்போம். முதலாளித்தவம் பத்தி உங்களுக்குத் தான் தெரியுமே! அதாவது எந்த ஒரு பொருளோட உற்பத்தியோ, இல்லை எந்த ஒரு சேவையோ யாருவேனாலும் செய்யலாம், அதாவது காசு இருந்தா! இதுக்குன்னு அரசாங்கம் எல்லாத்தையும் தான் கையில எடுத்துக்கிட்டு ஒன்னும் செய்யாது எல்லாமே சப்ளே டிமாண்டு கணக்குப்படி, அதவச்சுத்தான் எல்லாத்தோட விலைகளும் நிர்ணயம். அதாவது அரசாங்க கோட்டா, விலை நிர்ணயம்ங்கிற கதையே கிடையாது. உதாரணத்துக்கு சொல்னும்னா, இந்த பெட்ரோல் விலையை நம்ம நாட்ல எடுத்துக்குங்க, அரசாங்கம் நிர்ணயக்கிற விலையில தான் பெட்ரோல் கம்பனிங்க வித்தாவனும், அதுக்குப்பேரு அட்மினிஷேட்ரிவ் ப்ரைஸிங் மெக்கானிசம், இதை நம்ம சிதம்பரம் ஏற்கனவே எடுத்த போட்டுட்டு, மார்க்கெட்டு விலைக்கு இனி பெட்ரோல் விக்கனும்னு 1998ல் திட்டம் போட்டு 2002ல அமுல் படுத்தனாலும் அது சும்மா பேருக்குத்தான் ஓடிக்கிட்டு இருக்கு, இப்பயும் அரசின் ஆளுமை இருந்துக்கிட்டு இருக்கு, ஏன்னா கிருஷ்ணாயில் விலை ஏறி, அப்புறம் ஆட்சி கவுந்துடும்னு, இதில நிறைய சூட்சமங்கள் இருக்கு, அதாவது அரசியல் ஈடுபாடு(ஓட்டு வங்கிக்காக), அப்புறம் ப்ரைஸ் சென்சிட்டிவ்னு ஏழைபாளையை ரொம்ப பாதிக்கும் விஷ்யம்ங்கிறாதால எதிர்பார்த்த மாதிரி இந்த மாற்றுமுறையை (De-regulation)ஐ நம்மலால செயல்படுத்த முடியல. (இதுநாள அந்த கம்பெனிங்களுக்கு வரும் நட்டம், இத பத்தி அப்புறம் ஒரு பதிவு விரிவா போடலாம்).

ஆனா இந்த பிரச்சனை எதுவும் இல்லாத (நான் சொன்னது, பிரச்சனைங்கிறது, ஸோசியலிஸம், சமத்துவம்) முறை தான் இந்த முதலாளித்தவும். அதுக்குன்னு எல்லாத்தையும் அமெரிக்கா அரசாங்கம் விட்டுடறதில்லை, இந்த பேங்கல கடன்வட்டி இருக்கே (prime lending rate) அதை நிர்மாணிச்சு பணவீக்கத்தை சரி பண்ணிகுவாங்க. இதுவும் நம்ம ஊர்ல இருக்கு ஆனா கிச்சடி மாதிரி நம்மக்கிட்ட எல்லா கொள்கையும் இருக்கு, அதாவது கேப்டலிஸம், ஸோசலிஸம் அப்புறம் கொஞ்சம் கம்யூனிசம். எல்லாமே. ஆனா இங்க முழுக்க முழுக்க முதாலளித்துவம்தான்! மொத்ததில சொல்னும்னா சப்ளே டிமாண்டை, ப்ரீ மார்க்கட் எக்னாமின்னும், இந்த பேங்க் இன்வெஸ்ட்மெண்ட், இன்டெரஸ்ட், பங்கு சந்தை, பாண்டு, மியூட்சுவல் ஃபண்டு, இத்யாதி, இத்யாதி.. இப்படி சொல்லிக்கிட்டே போலாம். இப்ப கொஞ்ச காலமா நாம குளோபலைஷேசன்னு இதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கும். (இதை தர்க்கம் பண்ண ஒரு கும்பல் இருக்கு, நம்ம நாட்டுக்கு நல்லதா, இல்லையான்னு, நான் அந்த சர்ச்சைக்கு போகல்லை, just, முதலாளித்தவம் பத்தி விளக்க இது தேவை பட்டுச்சு, அவ்வளவுதான்!) அடுத்து நம்ம எடுத்துக்கிட்ட பதிவோட மையக் கருத்துக்கு போவோம்!

நியுயார்க் நீங்க போயிருந்தா அந்த டார்ச்சு லைட்டை கையில தூக்கிக்கிட்டு அமெரிக்க சுதந்திர தேவி சிலை பார்க்க போயிருப்பீங்க. அப்பிடி போகதவங்க சினிமால நிறைய பார்த்திருப்பீங்க, அப்பிடியும் பார்க்கலைன்ன 'வேட்டையாடு விளையாடு' ன்னு கமல் படம் ஒன்னு வரும் பாருங்க! அது இருக்கிற எல்லீஸ் ஐலேண்ட்ல இருக்கிற மியூசத்துக்கு போனா உங்களுக்கு அந்த காலத்தில அமெரிக்க பொழைக்க வந்த குடியேறிகளை பத்தியும், அப்ப அவங்களை நாட்டுக்குள்ள விட என்னன்ன பரிசோதனை செஞ்சாங்கன்னு பார்க்கலாம். அதாவது 1900த்திலருந்து 1950 வரை அந்த எல்லிஸ் தீவில தான் கொண்டுவந்து விடுவாங்களாம். அதாவது அப்ப ரொம்ப வறுமையிலும் அரசன், சர்வாதிகாரிகள் கொடுமையிலிருந்தும் தப்பிக்க இத்தாலி, ருமேனியா, சோவியத் குடியரசு நாடுகள், முக்கியமா கிழக்கு ஐரோப்பிய நாடுகள்லருந்து அகதியா வந்தவங்கதான் இன்னெக்கு அமெரிக்காவில இருக்கிற குடிமகன்கள். அதுக்கு முன்னே ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில வாழ்ந்தவங்க எல்லாம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டினர் அவங்க வந்து நிர்மாணிச்ச நகரங்கள் தான் இந்த நியுயார்க், நியு ஜெர்ஸி எல்லாம். சரித்திரம் தெரியனும்னா நிறைய சுட்டிகள் இருக்கு இணையத்திலே. இந்த மாதிரி வந்தவங்க எல்லாம் முறையா, சட்டபடி குடிமகனாகி, இன்னெக்கு 98 சதவீத ஜனத்தொகை அமெரிக்காவில வந்தேறி குடிகள் தான், அவங்க வழி வந்த சந்ததிகள் தான்!(நம்ம நாட்ல இருந்து வந்து குடியுரிமை பெற்றவர்களும் இதில அடக்கம்) இதில ஒரு சோகம் என்ன தெரியுமா, இது மாதிரி வந்தேறிகுடிகளுக்கு முன்னேமே இந்த பூமியில வாழ்ந்த சிவப்பிந்தியர்கள், அதாவது அவர்களை அமெரிக்கன் இண்டியன்ஸ்னு அழைப்பாங்க, நம்ம எல்லாம் 'ஈஸ்ட் இண்டியன்ஸ்', அவங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதே, 1925க்கு அப்பறம் தான்! (நல்ல வேளை, ஆங்கிலேயர்கள் வந்து அரசாண்டாலும், அவங்களா பார்த்து நமக்கு குடியுரிமை தரும் நிலை ஏற்படல, நாம கொடுத்து வச்சவங்க!)

அப்புறம் தொடர்ந்து, அமெரிக்காவின் பொருளாதர வளர்ச்சிக்கு என்னைக்குமே ஆளுங்க தேவைப்பட்டாங்க. அதனால தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டவர்களை இங்கு வந்து குடியேற அனுமதிச்சு, அவங்களும் குடியேறினார்கள். அப்படி நம் நாட்டவரும் 1960க்கு அப்புறம் கல்வி கொடுத்த செலவத்தால நிறைய பேர் இங்கு வந்து குடியேறி சமூகத்தின் உயர்மட்ட நிலைகள்ல இருந்துக்கிட்டிருக்கோம் நாம! அதாவது நாம் எப்பவுமே லேபர் கிளாஸ் கிடையாது. நம்ம ஏன் இந்த புது உலகத்துக்கு அந்தகாலத்தில வரமுயற்சிக்கல்ல? ஆசியாவிலருந்து சைனாகாரனும் ஜப்பான்காரனும் மற்ற பலபேரு கணிசமா 1900களிலேயே வந்தப்ப, நம்ம ஏன் அதிகமா இந்த புது உலகத்து சொத்தோ வசதிகளோ தேடி வரலை. அதற்கான காரணங்கள் பல இருக்கு. சுவாரசியமா படிக்குனும்னா, இதோ சுட்டி

சரி இவெங்கெ எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா இம்மிகிரண்ட்ஸ் அப்படின்னு சொல்லிடுவாங்க. அமெரிக்காவின் பக்கத்து நாடான மெக்ஸிக்கோவில, நம்ம ஊரு மாதிரி கொஞ்சம் அடிதடி. அதாவது அமெரிக்க மாதிரி சொகுசான வாழ்க்கை கிடையாது. மேற்கொண்டு நல்லா உழைச்சு சாப்பிட போதுமான சந்தர்ப்பங்களை உண்டாக்கி கொடுக்கல்லை அந்த நாட்டு அரசாங்கம். அதனால அங்கிருந்த மக்கள் பக்கத்து நாடான அமெரிக்காவிக்கு சட்ட விரோதமா பொழப்பு தேடி வந்துட்டாங்க. நம்ம ஊர்ல சொல்லுவோமே கள்ளத்தோணி ஏறி. அது மாதிரி சமுத்திரம் கடக்கவேணாம். நிலபரப்பு எல்லையை கடந்தாலே போதும். அப்படி அந்நாட்டு எல்லையிலே இருக்கிற அமெரிக்க மாகாணங்கள், கலிஃபோர்னியா, நியூ மெக்ஸிக்கோ, டெக்ஸாஸ், அரிசோனான்னு அப்படியே ஊடுருவி நியுயார்க், பிலடால்பியான்னு கிழக்கு மாகணங்கள் வரை போய்ட்டாங்க. அப்படி போயி பத்து வருஷ காலத்துக்கு மேலே இங்கேயே தங்கி வசிச்சி வராங்க. இவங்க முழுக்க முழுக்க லேபர் கிளாஸ். அதிகமா திராட்சை தோட்டங்கள்ல வேலை செய்றவங்க, அப்புறம் எல்லா பளுவான வேலை பார்க்கும் தொழிலாளர்கள்! அவங்க குடும்பம், குழந்தைங்களோட இங்கேயே செட்லாயிட்டாங்க. இவங்கதான் இப்ப அண்டாக்குமென்டட் இம்மிகிரண்ட்ஸ்ன்னு அமெரிக்க அரசாங்கம் குறிவச்சு, அவங்கள வெளியேத்த போட போற சட்டம் தான் இந்த 'இம்மிகிரேஷன் பில்'

எதுனால இந்த சட்டம்னு நீங்க கேட்கிறது புரியுது. அதாவது இங்க குடியிரிமை வாங்கறது குதிரை கொம்பு. அதாவது எல்லாருமே வரவங்க எதாவது வேலை மேல வரணும். அப்புறம் அவனுக்கு வேலை கொடுக்கிற கம்பெனி, இவன் இந்த அமெரிக்க கம்பெனிக்கு முக்கியமா வேணும் அப்படின்னு சிபாரிசு செஞ்சா, உங்களுக்கு கிரீன் கார்டுன்னு, அதாவது பச்சை அட்டை. அப்புறம் அஞ்சு ஆறு வருஷம கழிச்சு, நான் இவ்வளவு நாள் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கிறேன். என்னுடய வாழ்க்கை இனி திடமா இங்க அமெஞ்சுடும், அதனால எனக்கு குடி யுரிமை கொடுங்கன்னு அப்ளிகேஷன் போட்டு அதுக்கப்பறம் பரீசலணை பண்ணி கொடுக்கப்படுவது இந்த குடியுரிமை. ஆனா கள்ளத்தோணியில வந்த அந்த அன் டாக்குமெண்டட் இம்மிகிரண்ட்ஸ், வரி வட்டி எதுவும் கட்டிறதில்லை. ஏன்னா அவன் வந்ததே கள்ளத்தனம். அவன் பொழப்பு சம்பார்த்தியதை சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை இதுனால. அதனால அரசாங்க வருமானம் இல்லை. ஆனா ஏதோ ஒரு விதத்தில மனிதாபிமானத்தில இந்த குழந்தைங்க படிப்பு, மருத்துவம்னு செலவ செய்ய வேண்டி இருக்கு (இதுக்கு பலத்த எதிர்ப்பு இருக்கு இங்கே உள்ள குடிமகங்கிட்ட). ஆனா, இந்த தொழிலாளர் கூட்டத்தால சில முதாலாளிக் கூட்டத்துக்கு லாபம். எப்படின்னு கேளுங்க. இங்கே பிறந்த குடிமகனை போட்டு வேலை செஞ்சா, அதிகம் சம்பளம் கொடுக்கனும், ஆனா திருட்டுத்தனமா வந்தவன் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிட்டு போயிடுவான். அதனால குறஞ்ச சம்பளத்தில ஆளுங்க வேலைக்கு கிடைக்கிறாங்க. இதனால அந்த நிலையிலே இருந்தா இந்த முதாலளிகளுக்கு சாதகம். அதனால உள்ளுக்குள்ளயே அரசியல். எப்படின்னா இங்கேயே பொறந்து படிச்ச புள்ளங்கங்க, ஹை-ஸ்கூல் தாண்டாதவங்களுக்கு, அந்த சின்ன சின்ன வேலை வாய்ப்புகள் போய்டுங்கிற பயம். ஆக இதினால பாதிப்பு உண்டும்னும், அவங்களை சட்டபடி தங்க அனுமதிச்சா, சில பொருளாதார பலன்கள் வருமுன்னும் இங்க இரண்டு பங்கா பிரிஞ்சு சண்டை போட்டுகிட்டிருக்காங்க!

பில் இப்ப செனட்டுக்கிட்ட இருக்கு, அம்சம் என்னான்னா, அப்பா, நீங்க எல்லாம் சட்டபடி அமெரிக்காகுள்ள வரலை, ஆனா பரவாயில்லை, நீங்களா வந்து ஒரு 1000 டாலர் ஃபைன் கட்டிட்டு பதிஞ்சுடுங்க, உங்களுக்கு மூணு வருஷம் தங்க அனுமதிக்கறோம், அப்புறம் உங்க நாட்டுக்கு போய்ட்டு திருப்பி ஒரு வருஷம் கழிச்சு வாங்க, பிறகு மூணு வருஷம், அப்புறம் சில வருஷங்கள் கழிச்சு, நீங்க ஒழுங்க வரிகட்டி, இங்கிலீஷ் எழுத படிக்க தெரிஞ்சு, அமெரிக்க அரசியல் சாசன முறை எல்லாம் தெரிஞ்சா உங்களுக்கு குடி உரிமை கொடுக்கிறோம். அதுவும் வருஷத்துக்கு இவ்வளவு கோட்டான்னு!

ஆனா அந்த மாதிரி வந்தேறிய குடியேறிகள், இந்த பத்து பதினைஞ்சு வருஷத்தில இங்க வாழ்ந்து எல்லாம் சொந்தம் பந்தம் அகி போனதால இதல்லாம் ஒன்னு பண்ணாம, எங்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குன்னு போராட்டம் நடத்திகிட்டிருக்காங்க. இதில நம்மல மாதிரி வந்து போற ஆளுங்களுக்கும் பாதிப்புகள் வரலாம். அதுவும் 9/11 பிறகு,இப்ப இருக்கிற கெடுபிடியில, நம்ம ஆளுங்க வரது கம்மியாயி போயிடுச்சி, அப்புறம் அப்படியே வந்து கிரீன் கார்டு வாங்கனாலும், கல்யாணம் பண்ணி பொண்டாட்டி, புள்ளைகளோட சேர்ந்து வாழமுடியாம எத்தனையோ பேரு இந்த அமெரிக்க கனவுகள்ல வந்து கஷ்ட படுறாங்க. திரும்பவும் இந்தியா போயிடறாங்க. இன்னமும் 'Land of Opportunity'ன்னு அழைக்கப் பட்டு அமெரிக்க கனவுகளோட வரதுடிக்கும் இளைஞர்கள்க்கு இந்த கனவுக் கோட்டைக்கு வரது ரொம்ப கஷ்டம். ஆனா மாறி வரும் சூழல்ல நம் தாயகமே நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துக்கிட்டு இருக்குங்கிறதும் மறக்க முடியாத உண்மை!

Sunday, April 09, 2006

டிஜிட்டல் சினிமா - நாளைய சினிமா!

நீங்க எல்லாம் ஆனந்த விகடன் படிக்கிறவங்களா இருந்தா, இந்த சேரன் எழுதிக்கிட்டு வர 'டூரிங் டாக்கீஸ்' தொடர் படிச்சிக்கிட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன். அதில சேரன் சின்ன வயசிலே அவங்க அப்பா டூரிங் டாக்கீஸ்ல ஆப்ரேட்டரா வேலை செஞ்சு எப்படி எல்லாம் கஷ்டபட்டாருன்னும் அவருக்கு அப்ப அப்ப துண்டு பிலிம் கொடுத்து சந்தோஷப்படுத்துவாருன்னும் எழுதி இருந்தார். நம்மல்லயும் நிறைய பேரு இந்த துண்டு பிலிம்மை எடுத்துட்டு வந்து சின்ன புள்ளையில பிலிம் காட்டி விளையாண்டதை மறந்திருக்கிறமாட்டீங்க. அட்லீஸ்ட் நான் மறக்கல்லை. ஆனா இனி வரும் நாட்கள்ல இந்த மாதிரி துண்டு பிலிம் எடுத்து விளையாட முடியுமான்னா, அது சந்தேகம் தான். ஏன்னு கேட்கிறீங்களா, அதான் அந்த டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம்.

பாரதிராஜா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு, 'அப்பன் ஆத்தாளை விட்டு போனாலும் இந்த சினிமாவை விட மாட்டான் இந்த தமிழன்னு'. அது மாதிரி எங்கும் எதிலும் சினிமா தான். சினிமா படங்களை பார்த்து, அதே பொழப்புன்னு அலயற ஜனங்களுக்கு, இந்த சினிமாவுக்கு பின்னால இருக்கும் இந்த தொழில்நுட்பம் என்னா, இப்ப எங்க போய்கிட்டு இருக்குன்னு தெரியுமா? அதே மாதிரி படம் புடிக்கிறது இப்ப எவ்வளவு சுலுவு தெரியுமா? அதுவும் இப்ப காலேஜ் படிக்கிற பசங்க, தங்க கிரியேட்டிவிட்டியை காமிக்க வீடியோ, எடிட்டிங், அப்புறம் ஒளிபரப்ப இணையம்னு எவ்வளவு தொழில் நுட்ப வசதிங்க வந்திருக்கு தெரியுமா? இதெல்லாம் 1980 முன்னே நினைச்சு பார்க்கிற காரியமா? இல்லவே இல்லை. ஆனா, எதிர்காலத்தில இந்த சினிமா எடுத்து காண்பிக்கிறதுங்கிறது ஒரு குடிசை தொழில் மாதிரி வரப்போகுது! அது எப்படின்னு பார்க்கலாமா..

இந்த சினிமான்னு எடுத்துக்கிட்டீங்கன்ன்னா, இதுல நாலு ஸ்டேஜ் இருக்கு, முதல்ல ஃபில்மிங்ன்னு(Filming), அதாவது படம் புடிக்கிறது, அடுத்தது, புரெடெக்ஷன்(Production), அதாவது தயாரிப்பு, மூணாவதா டிஸ்ட்ரிபியூஸன்(Distribution), அதாவது படம் வெளியிடுதல், நாலாவது புரெஜெக்ஷன்(Exhibition), அதாவது படம் தியோட்டர்ல காட்டுறது. இப்ப இந்த நாலு ஏரியாவிலேயுமே, இந்த டிஜிட்டல்ங்கிற புதுமையான தொழில்நுட்பம் வர தொடங்கியிருக்கு. இதுக்கு உதாரணமா சொல்லுனும்னா, நம்ம போட்டோ புடிக்கிற கலையை பத்தி முதல்ல சொல்லியாகணும்.

அந்தக்காலத்தில புகைப்படம் எடுப்பது கேமிராவில ஃபில்ம் ரோல் போட்டு படம் புடிச்சு, பிறகு ப்ரிண்ட் போட்டு எடுக்கிறது, எனக்கு தெரிஞ்சு சின்ன புள்ளயில போட்டா கடைக்கு போயி நல்ல டிரஸ் போட்டு படம் எடுத்து அப்புறம் வீட்டுல மாட்டி வைக்கிற வரை தான் தெரியும். பிறகு படிச்சு முடிச்சு வேலைக்குப்போன பிறகு தான் கேமிரா எல்லாம் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சது, அதாவது நான் சொல்றது 1990க்கு அப்புறம் கணிசமா எல்லாரும் கேமிராவை தூக்கிட்டு டூர் போனா படம் புடிக்கிறது சர்வ சாதாரணமாச்சு, அதே மாதிரி ஃப்லிம் உற்பத்தியில முன்னேற்றம் கண்டு, விலையில்லாம் சரிவடைஞ்சு சாதாரண மனிதர்கள் அனைவரும், ஜப்பான்காரன் புண்ணியத்திலே ஃப்லிம் விலை மலிவா இருந்தாதாலே எடுத்து கொண்டாடினோம். அதிலயும் அதே சமமான காலத்திலே இந்த டெவலப்மெண்ட், பிரிண்டு போடற விலையும் கம்மி. ஆனதால புகைப்படம் எடுப்பதென்பது ரொம்ப சுலபமாச்சு. இப்ப ஒரு நாலு அஞ்சு வருஷமா இந்த டிஜிட்டல் கேமரா, கம்புயூட்டர், இணையம் வந்தோன, இந்த போட்டோங்கிறது எல்லாம் சகஜமாச்சு, எந்த போட்டோ கலை நிபுணரும் தேவையில்ல, அழகான வசந்தகாலத்தையோ, இல்ல மூடுபனிகளையோ, இதோ இந்த தமிழ் இனையத்தில அழகா படம் புடிச்சி போடுறாங்க. இதுக்கு இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தான்!

அதே மாதிரி இந்த டிஜிட்டல சினிமா வளர்ச்சி எங்கேயோ போய்கிட்டிருக்கு. இந்த டிஜிட்டல் முறையிலே படம் பிடிக்க ஃபிலிம் தேவையில்லை. அப்பறம் நம்ம ஊர்ல 'பொட்டி வந்திடுச்சு, பொட்டி வந்திடுச்சு'ன்னு கூப்பாடு போட தேவையில்லை. ஏன்ன, நான் மேலே சொன்ன நாலு ஸ்டேஜ்மே டிஜிட்டல் மயம் தான். இப்ப ஹாலிவுட்லயும் இதே டிரண்டுதான். அப்படி அதுல முழுக்க எடுத்த வந்த படம், இப்ப வெளியாச்சே 'Star Wars: Episode III-Revenge of the sith' அப்புறம் 'Sin City'. நம்ம தமிழ்ல முழு முயற்சியோட எடுத்த படம் பிசி ஸ்ரீராம் எடுத்த 'வானம் வசப்படும்', பிறகு இப்ப வந்த கமலஹாசன் படம் 'மும்பய் எக்ஸ்பிரஸ்'. இந்த படங்கள் நான் சொன்ன அந்த நாலு ஸ்டேஜ்மே டிஜிட்டல் முறையில செய்து வெளி வந்தது. ஆனா இந்த தொழில்நுட்பம் அவ்வளவா திரைப்படத்துறையாலர்களால ஏத்துக்கப்பட்லங்கிறதுதான் அங்க சங்கிதியே. ஏன்னா எல்லோருக்குமே பயம், எங்க இந்த தொழில்நுட்பம் வந்தா நம்ம வேலை போயிடுமோன்னு நிறைய பேருக்கு பயம். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால இந்த கம்ப்யூட்டர் எல்லா துறையிலும் வர எப்படி எதிர்ப்பு இருந்துதோ அதே மாதிரி இப்ப சினிமா உலகத்தில இதுக்கு சின்னதா எதிர்ப்பு இருக்கு. ஆமா ஏன் இந்த தொழில்நுட்பத்துக்குள்ள போகணும், என்ன பயன் அப்படின்னு நீங்க கேட்கிறது தெரியுது? மேற்கொண்டு இதை அப்படியே அணைச்சுக்கிறதுல உண்டான சிக்கல்கள் என்னன்னு உனக்கு தெரியுமான்னு நீங்க கேட்கிறது புரியுது. அது என்னான்னு கீழே பார்க்கலாமா?

முதல்ல படம் புடிக்கும் சினிமா கேமராக்கள் பத்தி சொல்லியாகணும். இந்த பிலிம் போட்டு புடிக்கிற கேமராக்களுக்கும் இந்த டிஜிட்டல் முறையில எடுக்கிற கேமராக்களுக்கும் உள்ள வித்தியாசமே frame rate தான். அதாவது 24 frame ஒரு செகண்டுல ஃபிலிம் கேமரால ஓடும்,ஆனா டிஜிட்டல இது 30 frame ஒரு செகண்டுல ஒடும். டெலிவிஷன்ல படம் புடிக்க பெரும்பாலும் இந்த 30 frame rate speed தான் உபயோகிப்பாங்க. அப்புறம் ஓடும் படத்தில பிம்பங்கள் அசஞ்சு ஒடுறது இந்த frame rate கணக்காலத்தான். அதெல்லாம் எப்படின்னு தொழில் நுட்பம் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டிங்கீன்னா, இந்த சுட்டிக்கு போய் பார்க்கவும். ஆனா 'Star Wars' எல்லாம் எடுத்த மூவிக்கேமரா 'Sony'யோட 'HDCF950'ங்கிற 'High Definition Camera' அதுல frame rate ஐ எப்படி வேணாலும் செட் பண்ணிக்கலாம். அதனால இதில படம் எடுத்த துல்லியமா இருக்கும். இந்த கேமரா விலை என்ன தெரியுமா, 50 லட்ச ரூவா. நானும் ஹேண்டிகாம் வீடியோ கேமரா வச்சிருக்கேன்னு சினிமா புடிக்க போயிடாதீங்க. நம்ம வச்சு விளயாடற கேமராவுக்கும், இதுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எப்படின்னா, தொழில்நுட்பம் தான்!

அதாவது film கேமராவுக்கும், இந்த டிஜிட்டல் கேமராவுக்கும் வித்தியாசமே படம் புடிக்கும் விதம் தான். எதிர்த்தாப்பல தெரியற பிம்பத்தை ஒளி கற்றையால film ல பதிக்கிற மாதிரி, இந்த டிஜிட்டல்ல (Charge Couple Device)CCD ன்னு ஒளிகதிர்களை எலக்ட்ரானா மாத்தக்கூடிய, ஒரு இன்ச்(அளவு கேமிராவுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்) அளவில இருக்கக்கூடிய அந்த சாதனம்தான் எல்க்ட்ரானிக்கா மாத்தி, டேப்லயோ, தகட்டிலோயோ பதியுது. அதுல சிவப்பு, பச்சை, நீலம்னு வண்ணங்களின் கலவைகளை படம் புடிக்க ஒரே சில்லு தான் இருக்கும் நாம உபயோகிக்கும் வீடியோ கேமிராவில, ஆனா, நான் சொன்ன அந்த SONY 'HDCF950'கேமராவில தனி தனி CCD சில்லு அப்புறம் 'base splitter'ன்னு வண்ணங்களை தனி தனியா பிரிச்சு பதிக்கற சமாச்சாரம், அப்புறம் அந்த பதியும் விகிதாசாரங்கள் (Ratio: 4:4:4) அளவு எல்லாம் அதிகம். நம்ம பார்க்கிற 'view finder', இது எல்லாமே உசத்தி.

இப்படி படம் புடிச்சதை வெட்டி ஒட்டுறது தான் அடுத்த வேலை அதாவது தயாரிப்பு, புரடெக்ஷன். இது பழய ஃபிலிமா இருந்த எடிட்டர் இந்த வேலையை ஒட்டி வெட்டுவாரு. ஆனா இப்ப தான் அந்த வீடியோ எடிட்டிங் மென்பொருள் வந்திருச்ச்சே அதை வச்சு கம்ப்யூட்டர்ல வெட்டி ஒட்ட வேண்டியது தான். இதுக்கு பேரு 'Non Linear Editing'னு. இதை filmல புடிச்சாலும் பண்ணலாம். அந்த பிலிம்ல உள்ளதை கம்ப்யூட்டருக்கு மாத்தி இதை பண்ணலாம். அடுத்து ரீரெக்கார்டிங், ட்ப்பிங், அப்படின்னு எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிடலாம் கம்ப்யூட்டர்ல. இதுக்கு மொத்தமா 'Post Production'ன்னு சொல்லுவாங்க. அடுத்த எல்லாம் முடிச்சு படம் வெளியாகனுமே. ம்.. அங்க தான் சிக்கலே.

நாம வழி வழியா பார்த்துக்கிட்டு இருக்கிற தியோட்டர் எல்லாம், படப்பொட்டி வந்தா தான் படம் போட்டு காட்ட முடியும். ஏன்னா எல்லாமே பிலிம் ஓட்ற புரெஜெக்டர்ங்க தான் இருக்கு எல்லா ஊரு கொட்டாய்லயும். அதனால அத டிஜிட்டல் கேமிராவில புடிச்சாலும் திருப்பி பாஸிட்டிவ்,நெகட்டிவின்னு போட்டு பிலிம்லே ஏத்தி படப்பொட்டியை எல்லா ஊருக்கும் அனுப்பிகிட்டிருக்காங்க. இதுக்கு என்னா பண்ணனும்னா எல்லா ஊரு கொட்டாய்லயும் இந்த டிஜிட்டல் புரெஜெக்டர் வச்சாகணும். இதுக்கு ஏகப்பட்ட செலவு. அதனால இத மாத்த யாரும் முன் வரதில்லை. சென்னையில அபிராமி தியேட்டர்தான் முழுசா டிஜிட்டல் புரெஜெக்ஷனோட வசதி உள்ள தியோட்டர்னு கேள்விப்பட்டேன். இப்ப கொஞ்ச கொஞ்சமா எல்லா தியேட்டர்களையும் டிஜிட்டல் புரெஜக்ஷன் வசதிகளோட மாத்திக்கிட்டு வரதா கேள்வி படுகிறேன். அதிலேயும் மெட்ராஸ்ல இருக்கிற Real Image Media ங்கிற கம்பெனி இந்த வசதிகளை செய்றதா கேள்விபட்டேன். அப்புறம் எல்லா தியேட்டர்ங்களும் இந்த புரெஜெக்ஷன் வசதி இருந்தா, இன்னைய தேதியில கனெக்டிவிட்டி இருக்கிறப்ப, டிஸ்டிரிபூஷன் சேட்டிலைட் மூலமா பூரா படத்தையும் டவுண் லோடு பண்ண முடியும். இந்த கம்ப்ளீட் சைக்கிள் தான் டிஜிட்டல் சினிமா. ஆக தொழில் நுட்பம் எங்க கொண்டு போய் விடப்போகுதுன்னு பார்த்துக்கங்க!

இதனால யாருக்கு என்ன லாபம்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. முதல்ல இந்த சினிமா தயாரிப்பு சிக்கனமாயிடும். அதாவது 3 மணி நேரம் படம் புடிக்கணும்னா, நீங்க 18000 அடி பிலிம் தேவை படும், அதுக்கு டிஜிட்டல பத்து லட்சம் தான் ஆகும், ஆனா பிலிமில அதே footage எடுத்து டப்பால அடுக்க பல கோடியாகும். அப்புறம் படம் எடுத்தோன ரஷ் போட்டு பார்த்து திருத்திக்கவோ, ரீஷூட் பண்ணவோ முடிஞ்சுடும், ஆனா பிலிம்ல எடுக்கிறப்ப திருப்பி திரிஷாக்கிட்ட கால்ஷீட்டு கேட்டாவுணும். அதே மாதிரி நீங்க கீறல் இல்லாம் படம் பார்க்க முடியும். உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி 300 நாள் படம் ஓடினாலும் அதே புத்தம் புதுசா பார்க்க முடியும். அப்புறம் நம்ம சின்ன புள்ளயில துண்டு பிலிம் பொறுக்கன மாதிரி பொறுக்க முடியாது. தியோட்டர்ல, திடீர்னு படம் அனைஞ்சு 'டேய் படத்தபோடுன்னு' கத்த தேவையில்லை (இது அந்த கார்பன் எரிஞ்சு முடிஞ்சு, ஆப்ரேட்டர் தூங்கிட்டா, பிலிம் புரெஜக்டர்லருந்து ஒன்னும் வராது. அப்புறம் ஒரு புரெஜ்க்டரை வச்சி ஓட்டி நாலு இடைவேளை கொடுக்கத் தேவையில்லை. அப்புறம் ஒழுங்க சீரா இந்த திரைப்பட வியாபாரம் பெருகும். இது மாதிரி அடிக்கிட்டே போலாம். வேணும்னா மணிரத்தனம், ஏவிஎம் சரவணன் பேசின பேச்சை இந்த சுட்டி யிலே கேளுங்களேன்!

இது இன்னையோட ஆரம்ப வளர்ச்சி, ஆனா இதுவே இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சா நான் சொன்ன அந்த விலை மிகுந்த கேமிராக்கள் விலை கம்மியாகலாம். எவ்வளவோ பேரு சினிமா ஆசை வளர்த்துக்கிட்டு அலையறாங்களே, அந்த கிரியேட்டிவிட்டி உள்ளவங்க, புதுசு புதுசா திறமைகளை படம் புடிச்சு வெளியிடலாம். இது பெரிய தொழிற்சாலையா இருந்தாலும், இன்னய தேதிக்கு இது 'Entertainment Industry'ன்னு பெருகிகிட்டு இருக்கு. அதேமாதிரி மீடியா சேனல்களும் 'Contents'ன்னு நிகழ்ச்சிகள் தயாரிச்சா, அது நல்லா இருந்த, வியாபாரம் பண்ண நல்ல 'Scope' இருக்கு. இப்ப இந்த மீடியா 'outsourcing'ன்னு ஒரு பெரிய தொழில்வளம் நம்நாட்ல வளர வாய்ப்பிருக்கு(Non Linear Editing கோர்ஸ் படிச்சாலே போதும், அந்த editing செய்ய, அப்புறம் இங்கே அமெரிக்காவில வர நிறைய கார்ட்டூன் படங்கள் எல்லாம் நம்ம ஊர்ல தான் outsourcing) அதுவும் இல்லம, 'Hollywood' படம் நம்ம பண்ணைபுரத்தில எடுத்து இங்கே அமெரிக்காவில வெளி வந்தாலும் நீங்க ஆச்சிரியப்படவேண்டாம். அதே மாதிரி 'கருத்தம்மா' மாதிரி படம் இங்கே 'Bay area'விலருந்தோ, இல்ல நம்ம கறுப்பி மாதிரி ஆளுங்க டொரண்டோலருந்தோ எடுத்து வெளி வரக்கூடிய நாட்கள் அதிக தூரமில்லை!