Friday, January 26, 2007

நிழல்கள்-PodCasting - இணையத்தில் ஒலிப்பரப்பு!

இப்ப தான் போன பதிவுல நிழல்கள் படத்தை பத்தி பதிவு போட்டிருந்தேன், அது எழுத்து, ஆனா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து உலவியை தட்டி பக்க பதிவுகளை படிக்க சோம்பேறியா இருக்கிறவங்களுக்கு இப்ப இணையத்திலே ஒரு வசதி இருக்கு, அதாவது படிச்சு தெரிஞ்சிக்கிறதை, அறிஞ்சிக்கிறதை கேட்டு தெரிஞ்சுக்கிலாம்! அதுவும் நம்ம வசதியை போல நின்னுக்கிட்டோ, ஓடிக்கிட்டோ, படுத்துக்கிட்டோ, இல்லை என்னமாது காரியம் பண்ணிக்கிட்டே நீங்க கேட்டு மகிழலாம். அதுக்கு பேரு தான் 'Podcasting'!

ஒரு காலத்திலே கேளிக்கைன்னு நமக்கு இருந்தது இந்த ரேடியோ தான். சினிமான்னு கொட்டைகைக்கு போய் பார்த்துட்டு வந்தாலும் அதை திருப்பி பார்க்கணும்னா திரும்ப கொட்டாய்க்கு தான் போயாகனும், அப்ப டிவி ஏதும் வராத நேரம், அப்ப இந்த ரேடியோ தான் ஒரு பெரிய பொழுது போக்கு சாதனம், ஏன் இன்னைக்கும் அதுவே சிறந்த பொழுது போக்கு சாதனம் நம்ம கிராமங்கள்ல! நீங்க அப்படி பெரிய டவுண்லருந்து சின்ன சின்ன கிராம ஊருகளுக்கு போனா இப்பவும் மக்கள் டிரான்ஸிஸ்டரை கையிலே வச்சுக்கிட்டு பாட்டை கேட்டு மகிழுவாங்க! அப்பறம் நகரங்கள்ல டிவி வந்து அவங்க எப்ப எப்ப பார்த்த படங்களை போட்டா ஆசையா பொட்டி முன்னே உட்கார்ந்து பார்ப்போம்! பிறகு அதுவே இணைய தொழில்நுட்பம் வளர்ந்தோன்ன, இப்ப பார்க்கிறதுக்கு, கேட்டு மகிழறதுக்கு நிறைய வீடியோ கிளிப்புகள் இருக்கு! ஆனா அந்த காலங்கள்ல ரேடியோவிலே கேட்டு ரசிச்ச பாடல்கள் மாதிரி வராது, ஏன் இலங்கை வானொலி நிலையம் நம்ம காதுகள்ல ரீங்காரமிட்டதை இன்னைக்கும் மறக்க முடியுமா, பாடல்களை விட அதை அழகா ஒலிபரப்பும் ஒலிபரப்பாளர்கள், அப்துல் ஹமீது போன்றோரை மறக்க முடியுமா?

ஆக அந்த மாதிரி பழைய ரேடியோ கேட்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா நம்மகிட்ட இருந்து போனாலும் அது திரும்ப வந்து சேர்ந்துடுச்சு, அதான் எல்லாமே சில காலகட்டங்கள் நம்மகிட்ட தங்கும், அப்பறம் மறையும், திரும்ப வந்துடும்! இந்த பெல்பாட்டம் பேண்ட்டு பிறகு பேகியா வந்த மாதிரி! இந்த 'IPOD' வந்ததுக்கு அப்பறம் நம்ம ம்யூசிக் கேட்கிற தன்மையும் மாறிடுச்சு, அதான் எங்க போனாலும் காதுல மாட்டிக்கிட்டு பிடிச்ச பாட்டை கேட்டுகிட்டு காலம் கழிக்கிறோம், அது மாதிரி பாடல்கள்னு இல்லாம, கேட்டு மகிழ எவ்வளவோ விஷயங்கள், ஏன் கதை புத்தகங்களே ஒலி வடிவில் வந்து அதை இணையத்திலேருந்து தரவிறக்கம் செஞ்சு அப்பறம் வேணுங்கிறப்ப நம்ம வசதிக்கு ஏற்ப கேட்கும் ஒரு செளகரியம் சுகம் தான்!

அப்படி வந்த ஒரு வசதியிலே நான் சிலாகிச்சு ரசிச்ச நிழல்கள் படத்தை பத்தி ஒலி வடிவிலே சொல்லி இருக்கிறேன், அதோட இணைப்பு இதோ, Nizhalgal-'Raja's' Excellent work during 80's அதை இங்கேயே கேட்டு மகிழனும்னா இதோ!


இதை அப்படியே தறவிறக்கம் செஞ்சு பிறகு உங்க Ipodலேயோ இல்லை mp3 ப்ளேயர்லயோ கேட்கணும்னா, இதோ தொடுப்பு!

கேட்டு பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்களேன், இங்கே சொன்னாலும் சரி இல்லை PodBazzarலே சொன்னாலும் சரி! வர்றட்டா!

Tuesday, January 23, 2007

நிழல்கள்- 'ராஜா'க்கள் படைத்த அற்புதம்!

நிழல்கள், இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத படம், இந்த படத்தை பத்தி நாள் கணக்கா பேசிக்கிட்டு இருந்திருக்கோம் அப்ப, இது என்னோட இஞ்சினிரியங் காலேஜ் மூணாவது வருஷம் படிச்சப்ப அப்ப தீபாவளிக்கு ரிலீஸ் ஆச்சு, அப்ப பாரதிராஜா மேலே ஒரு கிறுக்கா இருந்த நேரம், ஏன்னா முத அஞ்சாறு படங்கள்ல அவரு செஞ்சு காமிச்ச வித்தைகள்ல மயங்கி போய் அவரு படம்னா முத நாள் தியேட்டர்ல போய் உட்கார்ந்துடுவேன்! அப்ப தான் பாலசந்தோரோட வறுமையின் நிறம் சிகப்பும் வந்தது, இரண்டுமே வேலையில்லா திண்டாட்டத்தை கருவா வச்சு வந்தது தான் ஆனா வ.நி.சி ஜனங்களுக்கு இந்த படத்தை விட பிடிச்சிருந்திச்சு, காரணம் ஏன்னா அதிலே கொஞ்சம் எல்லாருக்கும் தெரிஞ்ச கமல், ஸ்ரீதேவி நடிச்சிருந்தது தான், எஸ் வி சேகர், திலீப்புன்னு புதுசா ஆள போட்டு எடுத்திருந்தாலும் தெரிஞ்ச முகங்கங்கள்ங்கிறதாலே தியேட்டர்ங்கள்ல கூட்டம் அலை மோதிச்சு, ஆனா நிழல்கள் அவ்வளவா போகல்ல! ஆனா பாட்டுகள் எல்லாம் மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, இதிலே தான் வைரமுத்து அறிமுகம்! 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாட்டை இப்பையும் கேட்டா, உண்மையிலே கஞ்சா அடிச்சிட்டு எல்லாத்தை மறந்திட்டு வேற உலகத்தை நினைச்சு மருகிறவன் மாதிரி தான் உங்களுக்கு தோணும், அது வைரமுத்தோட வரிகளுக்கும் இளையராஜாவோட ம்யூசிக் கம்போசிசனுக்கும் கிடைச்ச வெற்றி! ஆனா பார்த்தீங்கன்னா இந்த படம் டெக்னிக்கல்லா ஒரு பிரில்லியெண்ட்! இந்த படத்தை சென்னைத் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு படம் எடுக்கறதுன்னா எப்படி எடுக்கணும்னு அத்தனை டிப்பார்ட்மெண்ட்லேயும் போட்டு காமிப்பாங்கன்னு என்னோட ஃபிரண்டு சொல்ல கேட்டுருக்கேன்! நம்ம ஃபிரண்டு படிச்ச நேரத்திலே தான் சுஹாசினியும் படிச்சாங்க, அந்த காலகட்டத்திலே அளப்பரை பண்ணிக்கிட்ட திரிஞ்ச அம்மணி அவங்க! அதை பத்தி வேறெ ஒரு வாட்டி அப்பறமா எழுதுறேன்! இந்த படத்தை அக்குவேறே ஆறு வேறே அலசி ஆராஞ்சி திரும்ப திரும்ப பார்த்து சிலாகிச்சிருக்கோம்!

முதல்ல அந்த டைட்டில் சீக்குவன்ஸ், அதாவது இளம் பட்டதாரிகள் பட்டம் வாங்கிட்டு அப்படியே கிராஜிவேஷன் சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு கடற்கரையிலே ஒடறமாதிரி காட்சி வரும், அதுக்கு நம்ம ராஜா பேக்ரவுண்டு ம்யூசிக் பட்டையை கிளப்பும், அப்ப ராஜா பாரதிராஜா படத்துக்குன்னா துள்ளலோட ம்யூசிக் போட்ட நேரம், வெறும் பாட்டுகள் தான் அதிகமா வெகுஜனங்களுக்கு பிடிச்சி தெரிஞ்சிருக்கும் ஆனா இந்த பேக்ரவுண்ட் ம்யூசிக் யாராவது இப்படிதான்னு சொல்லிக்கேட்டா உங்களுக்கு திருப்பிக் கேட்கப் பிடிக்கும்!ஆரம்பத்திலே 'Congratulations' ன்னு சொல்லிட்டு அப்பறம் வர மெலோடியஸான ஹம்மிங், அதுக்கப்பறம் வர சின்ன கிடார் லூப்பு, அப்பறமா ஒரு வயலினோட சேர்ந்த 'haunting flute bit', பிறகு ஒரு 'freewheeling fast beat', அதை அப்படியே கட் பண்ணிட்டு பிச்சைக்காரர்கள், 'அம்மா பிச்சை போடுங்கம்மான்னு' ஒரு அழுகையோட கூடிய சப்தம், அப்பறம் திருப்பி கொண்டாட்டம் அமர்க்களம்னு திரும்பும் காட்சிகள் அப்படின்னு வாழ்க்கையிலே தான் எத்தனை நிழல்கள் (shades) இருக்குங்கிறதை காமிச்சிட்டு கடைசியிலே ஒரு நையாண்டி தாளத்தோட 'We want job, we want job' ன்னு வர்ற அந்த கோரஸ், பாரதிராஜாவும் இளையராஜாவும் கலக்கி இருப்பாங்க! வேணும்னா அந்த விஷுவல்ஸை பாருங்க!

அடுத்த கிளிப்லே இளைஞர்களுக்கே உண்டான வீம்பு, எதையும் வளைஞ்சு கொடுத்து வாழ்க்கையிலே முன்னேறமா, பஞ்சமா, பட்டினியா போறது, வேலை வெட்டி இல்லாம ஒரு கிளாஸ் டீ தண்ணிக்கு வழி இல்லாம கடஞ்சொல்லி காலம் கழிக்கிறதை அழகா சின்ன சீக்வுன்ஸ்ல எடுத்திருப்பாரு! இந்த கிளிப்பிலே பாரதிராஜாவும் வந்து நடிச்சிட்டு போயிருப்பாரு! இதிலே இன்னொரு கலக்கலான பேக்ரெவுண்டு ம்யூசிக் என்னான்னா, நிழல்கள் ரவி கைத்தட்டி டீக்கடைக்காரனை கூப்பிடறதை தப்பா நம்மலை தான் டாவு வுடறான்னு காமிக்கும் அந்த காட்சியின் பிண்ணனி, சும்மா சொல்லக்கூடாது இளையராஜ பின்னியிருப்பாரு, பாருங்களேன்!

அடுத்து நம்ம ராஜசேகர், கஞ்சா அடிச்சிட்டு அவரோட உலகமே தனின்னு இருக்கிற ஆளு! இது மாதிரி எனக்கொரு ஃபிரண்ட் இருந்தான், அவன் அப்படியே டிட்டோ, அவன் பேசறதுக்கும், அவன் இருக்கிற ஆள் நிலமையை பார்க்கிறதுக்கும் சம்பந்தமே இருக்காது, இது மாதிரி கவித்துமா எதாவது சொல்லிக்கிட்டு அலைவான், ஆனா ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொட்டணத்தை சுருட்டிட்டார்னா, அதுக்கப்பறம் அவரு உலகமே தனி, ஆனா அப்பேர்பட்ட ஆளு இன்னைக்கு எங்கருக்கிறான்னு கேட்டா ஆச்சிரியப்படுவீங்க, இப்போ 'Intel' கம்பெனியில்ல டைரக்டர், இங்க தான் அமெரிக்காவிலே குப்பை கொட்டிக்கிட்டிருக்கான்! சரி இந்த 'பொன்மாலைப்பொழுது' வைரமுத்தோட வைரம்! அப்ப எங்க காலேஜ் சர்க்கிள்ல 'மு மேத்தா' இருந்த அளவுக்கு வைரமுத்து அவ்வளவு பிரபலமில்லை, ஆனா இந்த ஒரே பாட்டு அவரு அடுத்த நாளே எங்கேயோ கொண்டி உட்கார வச்சிடுச்சு! பாரதிராஜா, இளையராஜாவின் அற்புத கண்டுபிடிப்பு தமிழ் திரை உலகத்துக்கு, அப்பறம் உன் சத்ததாலே என் சிந்து போச்சுன்னும், உன் சிந்தாலே என் சந்தம் போச்சுன்னும் சண்டை போட்டுக்கிட்டாங்க! ஆனா இரண்டு பேரும் சேர்ந்து போட்ட பல பாடல்கள், அதுவும் கிராமிய மணம் கமழும் பாடல்கள் இன்னைக்கும் நீங்க கேடுக்கிட்டே இருக்கலாம். இந்த ஜோடி பிரிஞ்சதாலே நமக்கு தான் பெரிய இழப்பு!

அடுத்த ஒரு கிளிப்பு ராஜசேகர் கேரெக்டரை சித்தரிச்சிருக்கும் விதம், அப்பறம் அவருக்கும் ரோகிணிக்கும் ஏற்படும் ஒரு சிநேகிதம், அழகா கவிதை மாதிரி சொல்லி இருப்பாங்க! ஜென்ரலா இந்த மாதிரி கேரெக்டர் எப்பவுமே ஒரு அலாதி தான், இது மாதிரி ஆழமா நல்ல சிந்தனைகள் இருக்கும், ஆனா அதை வெளியிலே சொல்லும் போது அதுக்கு தகுந்த வரவேற்பு இருக்காது, அதனாலே மனசு ஒடிஞ்சு போவாங்க! அந்த சிந்தனை மற்றும் எண்ணங்களை யாரும் உற்சாகபடுத்தாத போது நொடிஞ்சிடுவாங்க! அப்ப தன்னை பாராட்டி நெருங்கி வர்றவங்கள்ட்ட நட்பு பாராட்டி அதை வேறே பல ரூபத்திலே உறவாக்கிக்க ஆசைப்படுவாங்க, இது போன்ற உணர்வுகளோட போராடி அதற்கிடையிலே ஏற்படும் சிக்கல்கள் நிறைய மலையாளப் படங்கள்ல நல்லா சொல்லி வந்திருக்கும், ஆனா இதுலே வேறெ மாதிரி சிந்திக்கிறவனை, பெண் சிநேகத்தை காதல்னு பட்டுன்னு எடுத்துக்கிற சராசரி மனிதனா ராஜசேகர் கேரெக்டரை சித்தரிச்சது கொஞ்சம் வலுக்கல்! ஆனா இதிலே நம்ம இளையராஜா பிண்ணனியிலே பட்டையை கிளப்பி இருப்பாரு! பாருங்களேன்!


அடுத்து நிழல்கள் ரவிக்கும் ரோகிணிக்கும் ஏற்படும் காதல், எவ்வளவோ படங்கள்ல பாரதிராஜா காதல் பிறக்கும் விதம் பத்தி சொல்லி இருந்தாலும் இந்த படத்திலே சித்திரிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு! ரோமியோ ஜீலியட் கதை சொல்லி, சோலோலிக்கி(Soliloquy) டைலாக், இந்த ஆங்கில இலக்கியம் படிச்சிவங்க லயிச்சு போற ஷேக்ஸ்பியர் காதல் கதைகள் வச்சு காதலை பில்டப் பண்ணறது கொஞ்சம் ரசனையோட இருக்கும்! டீக்கடை பையனை கைத்தட்டி கூப்பிட்டதை தப்ப புரிஞ்சிக்கிட்டோமுன்னு பிறகு தெரிஞ்சுக்கிட்டு அவருக்கிட்ட பரிவா காதல் சிநேகம் கொள்ள முயற்சிக்கும் ரோகினி அதை தொடர்ந்து வரும் பேக்ரெண்ட் கம்மிங், முக்கியமான ஒரு பீஸு, அதை நல்லா கேளுங்க! அப்பறம் வர்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' பாட்டு ஒரு கிளாஸ்! என்ன அந்த புது முகம் ரோகிணி அவ்வளவு சிறப்பா செய்யலை, வேற யாராவது செஞ்சிருந்தா கிளாஸா இருந்திருக்கும், பாவம் எவ்வளவு கஷ்டபட்டும் பாரதிராஜா ஒரு ராதாவையோ, இல்லை ரேவதியையோ இந்த படத்திலே உண்டு பண்ண முடியல்லை, அதுவே படத்துக்கு பெரிய அடி,ஆனா டெக்னிக்லா திரைக்கதை, எடிட்டிங், பேக்ரவுண்டு ம்யூசிக்னு சும்மா கிச்சுன்னு நின்னப்படம் இது!

அடுத்தது இந்த 'பூங்கதவே தாழ்திறவாய்' பாட்டு, இதை பாடுனது தீபன் சக்கரவர்த்தியும், உமா ரமணனும்! உமா ரமணனுக்கு இது முதப்படம். அப்ப 70 களின் கடைசியிலே மெட்ராஸ்ல கலக்கிக்கிட்டு இருந்து ஆர்ச்சஸ்ட்ரா குழுவிலே இரண்டு பேரோடது ரொம்ப பாப்புலர், ஒன்னு அபஸ்வரம் ராம்ஜியோடது, இன்னொன்னு ஏ வி ரமணன் குழுவோடது, அதான் சன் டிவியிலே சப்தஸ்வரங்கள் நடத்துவார்ல்ல, அவருதான், அப்ப அவர் குழுவிலே பாட வந்த உமாவை அப்பறம் லவ் பண்ணி அவர் கல்யாணம் பண்ணிகிட்டது எல்லாருக்கும் தெரியும்! அப்ப கச்சேரிகள்ல ரமணன் பாடி பட்டையை கிளப்புவாரு, ஆனா அவருக்கு சினிமாவிலே சான்ஸ் கிடைக்கல்ல! ஆனா உமா ரமணனை வச்சு பல அற்புதமான பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். இன்னைக்கும் அன்னைக்கு பாடினமாதிரி அமைதியா பாடிக்கிட்டு இருக்காங்க கச்சேரியிலே எல்லாம், அதான் வீடியோ பார்க்கிறேன்ல்ல! அப்ப ஜென்சி கல்யாணமாயி கேரளா போனதுக்கப்பறம் இளையராஜாக்கு ரெகுலரா பாடிக்கிட்டிருக்கிற சிங்கர்ல இருந்து ஒரு மாறு பட்ட குரல் கொண்ட ஆளுங்க தேவைப்பட்டாங்க, ஏன்னா தன் பாடலகளை தனியா காமிக்க அது தேவை பட்டுச்சு, அது ராஜான்னு இல்ல, இப்ப வந்த ரஹமானும் இதே உத்தியைத் தான் பண்ணுனார். அதனாலே தான் ஜானகியை பொதுவா எல்லா பாடல்கள்லயும் உபயோகிச்சாலும், சசிரேகா, எஸ்பி சைலஜா, சாருலதான்னு வேறே ஆளுங்கல வச்சு புது சப்தத்தை கொடுத்தாரு அப்ப! தீபன் சக்கரவர்த்தி, நம்ம திருச்சி லோகநாதனோட புதல்வன், நல்ல பாடல்களை பாடுனார், அப்பறம் என்ன ஆச்சோ அளையே கானோம்! இந்த பாட்ல பாரதிராஜா, வழக்கம் போல தாமரைக்குளம், முழ்கி எந்திருக்கிறதுன்னு கவர்ச்சியா காமிச்சாலும், அலைகள் ஓய்வதில்லை கார்த்திக், ராதாவை கவர்ச்சியா ரோஜா பூக்கள் உடை உடுத்தி காமிச்சு அளவுக்கு கிக் இல்லை!

அடுத்தது சந்திரசேகர் கேரெக்டர், அதாவது ஆரம்பகாலங்கள்ல எப்படி இளையராஜா கஷ்டபட்டு ம்யூசிக் டைரக்டரா வந்திருப்பாருங்கிறதை பாட்டு கட்டியே நடிச்சி காமிச்சிருப்பாரு இந்த படத்திலே, பேசமா அவரே நடிச்சிருக்கிலாம், அவரு அப்ப அப்ப சந்திரசேகர் மூலம் போட்டு காட்டும் ஹம்மிங் எல்லாம் சூப்பர், அதோட உச்சகட்டமா இந்த 'மடைதிறந்து தாவும் நதி அலை நான்' பாட்டு ரொம்ப துள்ளலோட ம்யூசிக் போட்டிருப்பார். வழக்கம் போல நம்ம பாரதிராஜா, பீச்சிலே கன்னிகளோட ஆடிப்பாடி, என்னா வெள்ளை உடை தேவதைகள் மஞ்சள், ஊதான்னு கலர் கலரா கவுனு மாட்டி கிடார் எல்லாம் வாசிச்சிக்கிட்டு அளப்பரை பண்ணி எடுத்திருப்பாரு, அதே மாதிரி இளையராஜாவும் வெள்ளையா அவர் போடற வழக்கமான சட்டை பேண்ட்ல வந்து பாடி கலக்கிருப்பாரு! சும்மா மொட்டை போட்டு பார்த்த இளையராஜாவை பார்த்தவங்க இதிலே ஸ்டைலா பாடற இளைய இளையராஜாவை பாருங்க!

சந்திரசேகர் இசை அமைக்கும் படத்துக்கு 'நிஜங்களின் தரிசனம்'னு டைட்டில் வச்சு இன்விடேஷன் எல்லாம் அடிச்சு, ரெக்கார்டிங் பண்ண போறப்ப அது நின்னு போயிடும்! கடைசியிலே வழக்கம் போல சோகமா அவரை படத்திலேருந்து தூக்கிடுவாங்க, புது ம்யூசிக் டைரக்டர்லாம் போட்டு எடுத்தா ஃபைனான்ஸ் கிடைக்காதுன்னு! அதுக்கு இளையராஜா பின்னனி ம்யூசிக் அருமையா போட்டிருப்பார், பாருங்களேன்! அதுக்கப்பறம் எல்லாமே மெலோடிரமாட்டிக்கா எல்லாமே சோகமா முடிஞ்சி, மக்கள் இது என்னாடா அழுமூஞ்சி படமா இருக்குன்னு சரியா ஓடவைக்கல, பின்ன ரோகிணி, ரவியை கொலைகாரனாக்கி, அப்பறம் சந்திரசேகரை பைத்திக்காரனாக்கி, ராஜசேகரை குளோஸ் பண்ணி, ஒன்னு பின்னாடி ஓன்னு கொலை, சாவுன்னு அந்த கடைசி 20 நிமிஷ ஃபூட்டேஜ் மொத்த படத்தையும் ஜீரோ பண்ணிடுச்சு, ரொம்ப ஸ்ட்ராங்கா மெலோடிரமாட்டிக்கா போனா அப்படி தான்! ஆனா இந்த படம் மற்ற எல்லா விதத்திலேயும் நல்லப்படம்னு கொண்டாடின ஒன்னு. நானும் துண்டு துண்டா முழுப்படம் காமிச்சிட்டேன், ஆனா மொத்தமா முழு படத்தையும் பாருங்க, நான் சொன்னதை வச்சு நீங்க ரசிக்க முடியும்!

ஒலி வடிவில் கேட்டு மகிழ இதோ!

Thursday, January 18, 2007

குருபாய் 'பிஜினஸ்'!

குரு படம் பார்த்து சரியா ஒரு வாரமாகப்போகுது, பார்த்துட்டு வந்தன்னைக்கே ஏதாவது எழுது போடலாமுன்னு இருந்தேன், ஆனா இந்த வீணாப்போன ஜலதோஷம், காய்ச்சல், மூக்கடைப்புன்னு ஆளை கீழ சாச்சு, இதோ எழுந்து உட்கார சரியா ஒரு வாரமாயிடுச்சு! அதுக்குள்ள ஏகப்பட்ட விமர்சனப்பதிவுகள் வந்து படத்தை பத்தி எல்லாரும் எழுதி கலக்கிட்டாங்க! நம்ம என்ன சொல்ல இருக்குன்னு நினைக்கிறப்ப, அடடா முக்கியமான ஒன்னை சொல்ல எல்லாரும் மறந்திட்டாங்களே, அதான் குருபாயோட பிஜினஸ் பத்தி, அதான் சொல்லலாமுன்னு இந்த பதிவு!

இந்த 'சீமை சில்க்', இல்லே 'கேலா சில்க்' பத்தி சின்ன வயசிலே பீத்திக்கிட்டு 'அவங்க பெரிய பணக்காரங்க டெர்லின் துணிதச்சு போட்டுக்குவாங்கன்னு', சொல்ல கேட்டது ஞாபகத்துக்கு வர்து! அப்ப பாலியெஸ்டர் துணியிலே சீப்பா சட்டை தச்சி போட்டுக்கிறதுங்கிறது ஒரு எம்பதுக்கப்பறமா மலுவா வந்துச்சு, அதுவரை காட்டன் சட்டைதான்! அப்படி இந்த பாலியெஸ்டர் நூழிழையில் நெய்யபட்ட சட்டை துணிமணிங்க நம்ம ஊருக்கு பொருந்தாத ஒரு உடுப்பா இருந்தாலும் அது மேலே ஒரு மோகம் இருக்கத்தான் செஞ்சுச்சு, அந்தகாலத்திலே மடிப்பு கலையாம போட்ட துணி போட்ட மாதிரி போட்டுக்கிட்டு பிகர்ங்களை மடக்கணும்னு விமல் ஷூட்டிங் ஷர்ட்டிங் துணிகளை தேடி புடிச்சு வாங்கி தச்ச காலத்தை நினைச்சா, ம்.. பெருமூச்சு நிறைய விட வேண்டிருக்கு! இதை ஏன் சொல்றேன்னா இந்த குரு படத்து கதநாயகன் 'பாலியெஸ்டர் கிங்' துணி மூட்டை எடுத்து வித்து பொழச்சு, அப்பறம் அந்த சீமைசிலுக்குங்கிற துணிக்கு உண்டான மூலப்பொருள் வந்த அந்த ஒட்டு மொத்த தொடர்புகளா இருக்கும் அத்தனை பொருட்களையும் தன் கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து, அதன் கட்சா பொருளை பூமியிலே தோண்டி எடுக்கும் தொழில் முதக்கொண்டு நம்ம ஷங்கர் மாதிரி எதையும் பிரம்மாண்டமா செய்து இன்னைக்கு உலகிலே இந்த மாதிரி இணைத்து உருவான சக்தி சாம்ராஜ்யத்திலே முப்பவதாவதா நிக்கும் ரிலெயென்ஸ் ஸ்தாபகர் திருபாய் அம்பானியின் அச்சு!

என்ன தான் நான் வர்த்தக நகரத்திலே பொறந்து வளர்ந்தாலும், நான் பார்த்தது எல்லாம், என்ன பார்க்கிறீங்க, திருச்சி மாநகரத்தை தான் சொல்றேன், சின்னதா பூக்கடை வச்சாலும் சரி, பெரிசா மளிகமண்டி வச்சு நடத்துனாலும் சரி, தான் செஞ்ச தொழிலுக்கு புள்ளைங்க வரவே வேண்டாம், நீ படிச்சு, ஏதாவது உத்யோகம் பார்த்து சம்பாதிச்சு குடும்பத்தை கரையேத்தி, பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இருன்னு சொல்லி அதட்டி உருட்டி படிக்க வைக்கும் வியாபார சமூகம் தான் அதிகம்! அதிலேயும் அப்பன் ஆத்தாக்கிட்டே கொட்டிக்கிடக்குன்னு படிக்காம ஆட்டம் போட்டுட்டு வேறே வழியில்லாம் அப்பன் தொழிலையே செஞ்சுகிட்டு இருக்கிற நடுத்தரக்குடும்ப மக்களிடையே, ஆனா ஒன்னுமே இல்லாத கிராமத்து வாத்தியாரு வளர்ப்பு புள்ளைக்கு இந்த பிஜினஸ் செய்யணும்ங்கிர ஆர்வமும், அப்படியே வெறும் துணிமூட்டை மாத்திரம் தூக்கி வித்து சம்பாரிச்சா போதாது, பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவனும்னு கொஞ்ச படிப்பு படிச்சிருந்தாலும் அதன் சூத்திரங்கள் அறிஞ்சு அதை சாமர்த்தியமா நிறுவி இன்னைக்கு உலகிலே முத முப்பது இடத்துக்குள்ளே உள்ள அந்த "Integrated Energy Conglomerate" நிறுவன ஸ்தாபகர் பத்தி படம் எடுத்து, இன்னைக்கு முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு "Entrepreneurial spirit" உண்டாக்கும் விதமாக இந்த படத்தை எடுத்து விட்ட மணிக்கு அநேக நமஸ்காரங்கள்! இந்த படத்தையும் 'மணி மாறமாட்டாரான்னு' என்ன தான் நக்கலடிச்சாலும் இந்த மாதிரி படங்கள் வெகுஜனங்கள் கண்டு கேளிக்கைன்னு மட்டும் போயிடாம அதன் கருத்து, 'எந்த பிஜினஸ்ஸையும் எடுத்து செஞ்சு பிரம்மாண்டக்கி சக்தியுள்ள நாளை இந்தியாவிற்கு இது போன்ற பல குருக்கள் வளர வழி வகுக்கும் விதமாக இருக்கும்' என்பதில் எந்த ஐயமுமில்லை!

இதை நான் ஏன் சொல்றேன்னா, நான் இந்த தொழில் துறையிலே இருந்து பார்த்தவங்கிர முறையிலே! ஆங்கிலேயர் அடிமையிலிருந்து விடுதலையாகி, இது போன்று பெருந்தொழில் நிர்மானிக்க அரசாங்கமே பார்த்து உருவாக்கின தான் ஒன்னு, இல்லை பரம்பரை பணக்கார குடும்பங்கள் தொழில் அபிருத்தி பண்ணனும் அதுவும், அந்த கட்டுப்பாடான 'லைசென்ஸ் ராஜ்' காலகட்டத்திலே இப்படி பிரம்மாண்ட தொழில்துறை நிறுவுவதில் ஏகபட்ட சிரமங்கள் இருக்கத்தான் செஞ்சது! அதுமட்டுமில்லை பணக்கார வர்க்கமில்லாம, ஏழை இடைநிலை குடும்பத்திலே உள்ளவன் இது போன்று கனவு கண்டு முடிக்கணும்னா அது சிம்ம சொப்பனம் தான்! அதுவுமில்லாம, துணி உற்பத்தி செய்யும் நூற்பாலை மட்டும் ஆரம்பிச்சதில்லாம , அதுக்கு உண்டான மூலப்பொருள் பாலியெஸ்டர் ஃபிலமெண்ட் (Polyester Textile Filament Fiber)மற்றும் உற்பத்தி செய்யும் ஒரு பெரிய பெட்ரோ கெமிக்கல் தொழில் தளம் உருவாக்குவது என அதன் முழு 'Value Chain' பத்தி சரியா யோசிச்சி நிர்மானிப்பதென்பது அந்த காலகட்டத்திலே பெரிய பணக்கார டாட்டாவே யோசிக்காத ஒன்னு! அப்படியே அவங்க யோசிச்சு ரிஃபைனரி கட்ட வறேன்னு 80ல அடிபோட்டு வந்தாங்க, அப்பறம் இந்த தொழில் நமக்கு வராதுன்னு ஓடி போயிட்டு அப்பறம் IOCL தானே கட்டி இன்னைக்கு பானிபட்டுங்கிற இடத்திலே அம்பானி பண்ணிகாட்டின அந்த 'Vertical integration' ஐ உருவாக்க படாத பிராயத்தனம் பண்ணிக்கிட்டிருக்காங்க! ஆனா அம்பானி பார்த்தீங்கன்னா பாதள்கங்காவிலிருந்து(இங்கே தான் அவங்களோட பெரிய பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸ் இருக்கு, இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள இடம்!) ஜாம் நகர் வரைக்கும் இந்த 'Vertical integration' ங்கிற தொடர்பு சங்கிலியை பிரம்மாண்டமா,(உலகத்திலே உள்ள ரிஃபைனரியிலேயே ஜாம் நகர் ஆறாவது இடம், எண்ணை சுத்திகரிப்பு அளவில், அதாவது 590000 பேரல் எண்ணையை ஒரு நாளைக்கு சுத்திகரிப்பு செய்றாங்க!) ஜாம் ஜாமுன்னு செஞ்சு காமிச்சிட்டாங்க!

இது போன்ற பெரிய ரிஃபைனரியோ இல்ல பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் 80 களில் ஏகப்பட்ட சிரமம் இருந்தது! அதாவது இந்த மாதிரி பாலியெஸ்டர் அதை ஒட்டிய பல பெட்ரோகெமிக்கல் பதார்த்தங்கள் உருவாக்கும் தொழில்முறை பெரும் விலை கொடுத்து வாங்க வேண்டும் அதற்கு உண்டான சில இயந்திரங்கள், தளவாடங்கள் அப்பொழுது இந்தியாவில் சொல்லிக்கொள்ளும்படி தயாரிக்கபட வில்லை, எல்லாவற்றையும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்! சிலசமயம் அது கிடைத்தாலும் அந்நிய நாட்டில் தயாரிப்புகளுடன் ஒத்து பார்க்கும் பொழுது தரத்தில் குறைவாக இருக்கும். ஆனால் அரசாங்கம் இந்த தொழில்துறைக்கு பாது காப்பு அளிக்க இங்கு தான் வாங்க வேண்டும் எனக்கூறும்! மேற்கொண்டு நான் "நாளை உலகம் நமது கையிலா??" என்ற பதிவில் எழுதியது போல அந்நிய செலவானி அவ்வளவு எளிதில் கிடைக்காது! அப்படியே கிடைத்து இது போன்ற பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவும் பொழுது அதற்கு அனுமதி கிடைத்தாலும் நம்ம தாலி அறுந்துவிடும்! (அந்த காலத்திலெ இது மாதிரி பெரிய காம்ப்ளெக்ஸ் டிசைன் செய்து உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்ததால் அந்த கஷ்டம் எனக்கு தெரியும், பப்ளிக் செக்டார் கம்பெனிகளுக்கே இந்த நிலமை என்றால் ப்ரைவேட் செக்டாருக்கு கேட்க வேணாம்)பிறகு இது போன்ற அடிப்படை தொழில் நிறுவும் பொழுது அரசாங்கம் சில அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்கு வரி கொஞ்சம் தாழ்த்தும், அதற்காக இந்த நரக வேதனை கொண்டு அப்ரூவல் வாங்கி இந்த தொழிற்சாலை நிறுவுவதற்குள் தாவு தீர்ந்துவீடும்!இந்த கஷ்டகாலங்களில் ரிலெயன்ஸ் பெட்ரோகெமிக்கல்ஸ் காம்பெளக்ஸ் கட்டினாலும் ரிஃபைனரி கட்டிய 90 களில் இந்த விதி முறைகள் தளர்த்தபட்டிருந்தது, ஆனால் அப்பொழுது அவர்கள் செய்த தில்லுமுல்லுகள் 'நீங்க நல்லவரா கெட்டவரா' என்று கேட்கவைத்தது!

ஒன்னுமில்லை, இந்தியாவிலே இருக்கக்கூடிய அத்தனை ரிஃபைனரி, பெட்ரோகெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளை கட்டி கொடுத்தது "Engineers India Ltd" (EIL)என்ற கன்சல்டண்ட் தான், இந்த மத்திய அரசாங்க நிறுவனம், அந்த 80களின் கடைசியிலே ரிலெயன்ஸ் ஜாம் நகரில் அந்த பெரிய ரிஃபைனரியை நிர்மானிக்க முயன்றபோது என்ன தரிகணத்தோம் போட்டும் EIL க்கு அந்த கட்டுமான பணி கிடைக்கவில்லை, ஏன்னா ரிலெயன்ஸ் அதை கொடுக்க மறுத்துவிட்டது. EIL அரசாங்க நிறுவனமாக இருந்ததால் அரசாங்க சட்டங்களுக்கு முரனாக எதையும் வடிவமைக்காது, ஆனால் அம்பானி குழுவினர் அரசாங்க அனுமதி ஒரு உற்பத்தி திறனுக்கு வாங்கி விட்டு ஆனால் தயாரிப்பது அதை விட இரண்டு மடங்கு! அதன்படி ரிஃபைனரி செய்து கொடுக்க EIL போன்ற அரசு நிறுவனம் தயாராக இருப்பதில்லை, அதனால் வெளியிலிருந்து வந்த Bechtel என்ற நிறுவனம் அதை செய்து கொடுத்தது! இது தான் நம்ம மாதவன் படத்தில் கண்டுக்கும் 6 நூற்பாலை அனுமதி, இருப்பதோ 12 நூற்பாலை என வரும் காட்சி! இதனால் ஏற்படும் லாபம் பிறகு உற்பத்தியாகும் இன்னொரு மடங்கு பொருளுக்கு வரி ஏய்ப்பு நடத்துவதே! இப்படி பட்ட தில்லுமுல்லுகள், அரசாங்க சட்டத்தை வளைத்தல் என பல செய்தாலும் கடைசியில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்துக்கு நிறைய லாபம் ஈட்டி கொடுத்து பெயர் வாங்கியது! ஆக எல்லாரும் சொல்லுவது போல குருபாய் பிஜினஸ் சாம தான் பேத தண்டம் அனைத்தையும் கடைபிடித்து முன்னுக்கு வந்த ஒன்று!

அது போல் வெறும் படிப்பு படித்து விட்டு அடுத்தவன் வியாபாரத்தை கவனித்து அதை பெருக்குவதை விட சுய தொழில் செய்து காட்டி இளைஞர்களை முன்னேற வித்திட்ட வகையில் வாழ்ந்து காமித்த குருபாய் இல்லை திருபாய் நல்லவரே! எந்த தொழிலில் இல்லை தில்லுமுல்லு, வீதியில் விக்கும் பூக்காரி கூட அசந்தால் ஒரு முழத்தை முக்கா முழமாக அளந்து கொடுத்து சம்பாதிக்கும் பொழுது இந்த வியாபார ஒழுக்க நெறியிழ்ந்தார் (Business Ethics) என கூறுவது சரியாகாது! இந்த Ethics, நெறிமுறைகள் என்று பார்க்கும் பொழுது நான்கு தத்துவங்கள் இருக்கிறது, ஒன்று மில் தத்துவம், Mill's Utilitarianism, அதாவது, எந்த ஒரு செயலும் பெரும்பான்மையோருக்கு பயனளித்தால் அந்த செயல் நன்றே! (an action is ethically correct, if it producesthe great benifit for the greatest number of people) அடுத்தது, Kant's Duty based ethics, அதாவது பெரும்பாலோரால் சரி என ஏற்று கொள்ளபட்டதை நீயும் செய்ய கடமைபட்டுள்ளாய்! (Each person has a duty to follow those courses of action that would be acceptable as universal principles for everyone to follow), மூன்றாவது Locke's rights-based ethics, அதாவது, அனைவரும் சுயமாகவும் சமத்துவத்துடனும் வாழ்வது, நோயின்மை, சுதந்திரம், ஆட்கொள்ளுதல், அவர்களின் உழைப்பு ஆகிய அனைத்தும் அவரவர் உரிமையே! ( All individuals are free and equal, and each has aright to life, health, liberty, possessions, and the products of his or her labour) நான்காவதாக, Aristotle's Virtue-based ethics, அதாவது, சந்தோசம் என்பது தன்னுடய தான் வகுக்கும் எல்லைக்குள்ளோ, கோட்பாடுகளுடனோ வந்தடைந்தால் நன்றே! எந்த ஒரு செயலுக்கும் சரியானதொரு தன்னிலை காரணமிருந்தால் அச்செயல் நன்றே! எந்த ஒரு விளிம்பிற்கும் செல்லாமல், அதாவது முற்றும் நல்லாதாகவோ, இல்லை முற்றும் தீயதாகவோ இல்லாமல் ஒரு இடைப்பட்ட தீர்வினை அடைவது மிகச்சால சிறந்தது! (Happiness is achived by developing virtues, or qualities of character, through deuction and reason. An act is good if it is in accordance with reason. This usually means a course of action that is the golden mean between extreemes of excess and deficiency. ஆக இந்த நான்கு தத்துவத்தில் எதை கடைபிடித்தாலும் முரண்பாடு உண்டு, அப்படி முரண்பாடுகள் வரும் பொழுது சாலச்சிறந்தது எது என சீர்தூக்கி அதன் படி நடந்தால் நீங்கள் ஒழுக்க நன்னெறியோடு செயல்படுவதாக அர்த்தம். அந்த வகையில் குருபாய் இல்லை திருபாய் கடைபிடித்து வாழ்ந்து கழித்த வாழ்க்கையால் அவர் நல்லவரே என்று தீர்மானமாகிறது! ஆக நம்ம மணி நமக்கு படம் பிடித்து காண்பித்த குரு நல்லவரே!

இந்த நான் மேலே சொன்ன ஒழுக்க நன்னெறிகள் (ethics) தத்துவம் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனும்னு ஆசை உங்களுக்கு உண்மையிலே இருந்தா, பின்னூட்டம் போடுங்க, அதை பத்தி வேரொரு சமயத்தில ஒரு தனி பதிவே போடுகிறேன்!

Tuesday, January 02, 2007

ஷண்முகசுந்தரமும் மோகனாம்பாளும்!

வணக்கம் என் இனிய இணைய, தமிழ்மண மக்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்னடா ரொம்ப நாளா வெளிகண்ட நாதர் கடையை விரிக்க காணோமேன்னு பார்த்தீங்களா, அதான் ஊருக்கு தவுந்த மொட்டை அடிக்க வேணும்ல, கிறிஸ்மஸ், நியூ யியர் கொண்டாட போயாச்சு! லீவு வுட்டாச்சுன்னு ஜாலியா சுத்த போயாச்சு! புது வருஷம் ஆரம்பிச்சோன தான் இப்ப ஜாகை இந்த இணையத்திலே! சரி விஷயத்துக்கு வர்றேன், புது வருஷ ஆரம்பத்திலே மங்களகரமா பாட்டுப் போட்டு ஆரம்பிப்போமுன்னு தான்! போன வாரம் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தேன்! அப்படியே எங்கயோ கொண்டி விட்டிடுச்சு! அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிலாம்ன்னு இந்த பதிவு! இந்த படத்திலே நடிச்ச சிவாஜி கணேசன், பத்மினி, இவங்க இரண்டு பேருமே நம்மகிட்ட இல்லை இப்போ, ஆனா அவங்க விட்டு போன இந்த ஒடும் நிழல்பட பதிவு தனி முத்திரை!

இப்ப எல்லாம் நல்லா நடிச்சிக்கிட்டிருக்கிற நடிகைகள், காலா காலத்திலே கல்யாணம் பண்ணிக்கிட்டா மார்க்கெட்டு கிடையாது அப்படியே முடங்க வேண்டியது தான் ஒரு கருத்து இருக்கு, ஆனா அப்ப கல்யாணம் பண்ணி போனாலும் நடிச்சு முத்திரை பதிச்ச பத்மினியை என்னான்னு சொல்றது! சரியா கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சி நடிச்சி வெளிவந்த இந்த 'தில்லானா மோகனாம்பாள்' பெரிய வெற்றி பெற்றதோட இல்லாம, காலத்தால் அழியாத காவியமானது! இது ஏன் இப்ப வெற்றி நடிகைகளா வலம் வரும் பெரும்பாலான நடிகைகளால முடியாம போகுது! ஏன்னா அதுக்கு காரணம் இருக்கு. வெறும் இடுப்பையும், தொப்புள்ள பம்பரம் விட்டு, இஷ்டம் போல கோணங்கித்தனமா டான்ஸ் ஆடி நடிச்சா அப்படி தான்! அதுக்குன்னு இருக்கும் கலைகள் எல்லாம் முறைப்படி காட்டி ஆடிப்பாடி நடிச்ச பழய நடிகைகள் கல்யாணம் ஆகியும் பேரும் புகழோட இருந்தாங்க! அப்படி இருந்த சாவித்திரி, பத்மினி மாதிரி நடிகைகள் இருந்த இந்த தமிழ் பட உலகை அதிகம் தெரியாத இந்த கால இளசுகளுக்கு அருமையான பாவமும், அபிநயமும் கூடிய இந்த காட்சிகள் பார்த்தா உண்மை விளங்கும்!

இந்த படத்திலே சிவாஜியின் கதாபாத்திரம் பேரு ஷண்முகசுந்திரம், பத்மினியோட கதாபாத்திரம் பேரு மோகனாம்பாள், இப்ப புரியுதா நம்ம பதிவுக்கு உண்டான டைட்டிலு! (இந்த 'மோகனாம்பாள்' என்ற பேரை கேட்டாலே ஒரு மயக்கம் தான் நமக்கு, ஏன்னா விவரம் தெரிஞ்சு காதல்ன்னு ஆரம்பிச்ச பெண்மணியின் பேரு!ரொம்ப காலம் கிறக்கம இந்த பேரை கேட்டாலே கனவுலேயே வாழ்ந்த நாட்கள் பல! ம்.. இப்ப அது எதுக்கு! பேரை கேட்டவுடனே ஒரு கிறக்கம் வந்து..ம்.., ஆகற வேலையை பாரு நினைப்பு தான் பொழப்பை கெடுக்குதுன்னு நீங்க சொல்றது கேட்குது!) ஷண்முகசுந்திரம் ஒரு பெரிய நாதஸ்வர வித்துவான், மோகனாம்பாள் ஒரு பெரிய பரதக் கலைஞர்! அவங்களுக்கிடையே இருக்கும் இந்த கலைப்போட்டியே பிறகு இருவரையும் காதல் கொள்ள செய்கிறது, அப்பறம் வழக்கம்போல முடிச்சுகளோட கட்டவிழ்ந்து இருவரும் கடைசியில் திருமணம் செய்து சுபம் என்று முடியும்! இது அறுபதுகளில் கொத்தமங்கலம் சுப்பு என்பவர் தொடர்கதையா ஆனந்த விகடனில எழுதிய கதைதான் பிறகு திரைப்படமா பல புராணப்படங்களை எடுத்த ஏபி நாகராஜன் என்பவரால் இயற்றப்பட்டு வெளிவந்தது!(ஆக, ஒரு முக்கியமான ஒரு செய்தி! கொத்தமங்கலம் சுப்புவின் மகள் வயித்து பேத்தியின் கணவர் நம்ம கூட தான் வேலை செய்கிறார்!) இதுக்கு இசை அமைத்தவர் கே வி மகாதேவன்! எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்! அதுலயும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' பாட்டும், 'நலந்தானா நலந்தானா' பாட்டும் அப்ப ரொம்ப பாப்புலாரான் ஒன்னு!

அதாவது பாடல்களிலேயே அபிநயம் புடிச்சு பாதி கதை சொல்லிடுவாங்க அப்ப! எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டாது! அதுவும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுக்கு பத்மினி தரும் அபிநயங்களும் அதுக்கு கணேசன் தரும் முகபாவங்களும் கலக்கல்! அதிலெ சில அபிநயங்கள் நான் சிலகாகிச்சது இதோ!

அதாவது நாட்டிய தாரகை மோகனாம்பாள் நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்திரத்தோட தில்லானாவுக்கு ஈடு கொடுத்து ஆடி போட்டி போட்டு கடைசியிலே 'தில்லானா'ங்கிற பட்டம் வாங்கிரது படத்தோட ஹைலைட்! அதுக்கு முன்னே அவங்க இரண்டு பேரும் ஊடல் கொண்டு, இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுல காட்டுற பாவங்களும் முகஅசைவும், இப்ப எந்த நடிகை நடிகயருக்கும் சுட்டு போட்டாலும் வராது (இந்த கதை மாதிரி காப்பி அடிச்சி பிற்பாடு வந்த கரகாட்டகாரன், சங்கமம், எல்லாம் இதுக்கு முன்னே நிக்க முடியலே, என்ன தான் பாடல்கள் நல்லா இருந்தாலும் அதில நடிப்பவர்கள் தான் அதை காவியமாக்க முடியும்!)

முதல்ல பத்மினி காட்டும் அபிநயத்திலே

'அழகர் மலையழகா
இல்லை இந்த சிலையழகா'
ன்னு

கேட்டு பிடிக்கும் பாவம் பாருங்க, ஊடல் கொண்ட காதலரின் உணர்ச்சியை அப்படியே பரதத்திலே கொண்டு வரும் தன்மை திருப்பி திருப்பி ரிவைண்ட் பண்ணி பார்க்க வேண்டிய ஒன்னு! அடுத்து நவரசத்தையும் காண்பிச்சு, அதை அழகா பாட்டுல சொல்லி,

'நவரசமும், மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்!
செக்க சிவந்திருக்கும் இதழில் கனிரசமும்'
ன்னு

மோகனாம்பாள், சொல்லி காட்டும் பாவங்கள்ல நீங்க தஞ்சாவூரையே எழுதி கொடுக்கலாம் போங்க, என்ன ஒன்னு, நீங்க மிட்டா மிராசுதாரா இருக்கணும் அதுக்கு!

அடுத்து கேலியும் கிண்டலுமா,

'எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்!'
ன்னு

சொல்லி போடும் சதிராட்டம் இருக்கு பாருங்க, அப்படி நமக்காக ஒருத்தி சொல்லி ஆடும் அழகை பார்த்தீங்கன்னா சொக்கீடமாட்டிங்க நீங்க, அந்த நிலையிலே தான் ஷண்முகசுந்திரமும்! அப்பறம் நாணத்தோட,

'பாவையின் பதம் காண நாணமா?
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?'
ன்னு

சொல்லி தன்னுடய ஆவலை வெளிப்படுத்தும் அந்த அபிநயங்கள் இன்னைக்கு பரதம் ஆடுறேன்னு சொல்லும் எத்தனை நடிகைகளுக்கு வரும்! அப்பறம் இவ்வளவும் சொல்லிட்டு குறியால தான் யாருக்காக பாட்டு பாடி ஆடறேன்னு சொல்ல,

மாலவா, வேலவா!
மாயவா, ஷண்முகா!
ன்னு

சொல்லி காண்பிக்கும் பொழுது, நம்ம ஷண்முகசுந்திரம் அப்படி உதட்டை கடிச்சு 'அடிக்கழுதை'ன்னு வசனம் சொல்லாம சொல்லி காதலோட ஊடலின் உச்சமா சொல்லி காட்டும் அந்த நடிப்பின் நவரசம், நம்ம கணேசனை விட்டா யாருக்கு வரும்! நம்மலும் நடிக்க தெரியாம பலமாதிரி உடலை வருத்தி, தன்னை அடையாளம் வேறு கொண்டு, அஷ்டவதனியாக, இல்லை தசவதாரமாக்க முயற்சிக்கும் நடிகர்களை தூக்கி கொண்டாடுறோம்.

அப்பறம்,

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்!
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்!
ன்னு

சொல்லி அவரின் நாதத்தின் ஆளுமை எப்படி தன்னை கட்டி போட வைக்கிறதுன்னு சொல்லி அபிநயம் பிடிச்சி கடைசியிலே தன்னோட விரகதாபத்தை,

மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்ற கள்வனைப் போல்!
ன்னு

சொல்லி தான் கிறங்கும் அழகை அபிநயம் பிடிச்சு காண்பிக்க இனி கல்யாணம் பண்ணிக்கிட்ட எந்த நடிகையும் வரப் போறதில்லை! இது மாதிரி நடிப்பு, ஆடல், பாடல், கேளிக்கை எல்லாம் ஒருமுறை வருவது போலத் தான்! இனி யாரும் நம்மை கொண்டாட செய்யப்போவதில்லை!

நான் சொன்ன அத்தனையையும் கொஞ்சம் இந்த கிளிப்புலே கண்டுகளியுங்கள்! மறுபடியும் பத்மினி பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவை, நாடு திரும்பும் நாட்டியப் பேரொளி! வேணும்னா கொஞ்சம் படிச்சிட்டு வாங்க! சமீபத்தில் மறைந்த பத்மினிக்கு இப்பதிவின் மூலம் என் அஞ்சலி! அதே போல் என்றும் மனதைவிட்டு அகலாத நம் நடிகர் திலகத்திற்கும் இப்பதிவு ஒரு சமர்ப்பணம்!