நம்ம தான் உலகத்திலே இருக்கிற அத்தனை டிவி சேனல்களியும் பார்த்துக்கிட்டிருக்குமே, என்ன தான் ஊடகம் இரு சில குடும்ப சொத்தா இருந்தாலும், சில சமயங்கள்ல மத்த சேனல்கள்ல வருகிற நியூஸையும் பார்க்க உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கும்னு நினக்கிறேன். தமிழக தேர்தல்கள் ரொம்ப தீவிரமா நடந்துகிட்டு அதை பத்தின செய்திகளுக்கு மத்தியில, அதையும் மீறி இப்படி வெளி உலக செய்திகள் பார்க்கக்கூடிய ஆளா இருந்தீங்கன்னா, இன்னைய தேதிக்கு நம்ம இலங்கை தமிழர்களுக்கு நடக்கிற கொடுமை போல உலகத்தில மிகவும் ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில சூடான் என்கிற ஒரு நாடு கேள்விபட்டிட்ருக்கிங்களா, அங்க இதுவரைக்கும் இல்லாத மனித உரிமை அத்து மீறல் நடந்துக்கிட்டிருக்கிறது. கிட்டதிட்ட நம்ம இலங்கை தமிழர்கள் மாதிரியே அங்கு பாதிக்கப்பட்டவங்க பழங்குடி கறுப்பர் இனம். போராட்டம் அந்த சூடான் நாட்டை ஆளும் அரேபியர் பெரும்பான்மையினரின் அரசாங்கத்துக்கும், அரேபியர் அல்லாத கறுப்பர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்களுக்கும். இது சரியா நம்ம இலங்கை பிரச்சனைபோல நாட்டை ஆளும் சிங்களவருக்கும் நம் தமிழருக்கும் நடக்கும் போராட்டம் போல! அதிகம் கவலையோட உலகில் உள்ள அனத்து நாடுகளும் எதிர் நோக்கி நிற்கும் இந்த மனித உரிமை மீறல் நிகழ்ச்சி மிகவும் சோகமான ஒன்னு. கொஞ்சம் என்னான்னு தான் பார்ப்போமே!
செங்கடலை ஒட்டி எகிப்து நாட்டுக்கு கீழே, உலகிலேயே மிக வருமையில் வாடும் இத்தோப்பியா நாட்டின் மேற்கே இருக்கும் நாடுதான் இந்த சூடான் நாடு. இதுவும் அரோபிய நாடுகளை போல கொஞ்சம் எண்ணைய் வளம் மிக்க நாடுங்கிறதே இங்க குறிப்பிட வேண்டிய ஒன்னு! இந்த நாட்டின், வடக்கு, மேற்கு பகுதியான டர்ஃப்ர் (Darfur) ங்கிற பகுதியிலே தான் இந்த போராட்டம், யுத்தம், சாவு, மனித உரிமை மீறல்! இந்த பகுதியிலே இருக்கிர ஒரு 450 கிராமங்கள் இந்த சண்டையினால சுத்தமா அழிஞ்சு போச்சு! மிச்சம் இருக்கிற இன்னொரு 125 கிராமங்களும் இந்தோ அந்தோன்னு கலவரத்தில பாதிக்கபட்டு இருக்கு.இந்த பகுதியிலருந்து சுமார் 200,000 பேரு அகதிகளா பக்கத்து நாடான ச்சாட் (Chad)ங்கிற நாட்டின் கிழக்கு பகுதியில தஞ்சமமடைஞ்சிருக்காங்க. கிட்ட தட்ட 60 லட்சம் மக்களை கொண்ட இந்த டர்ஃப்ர் (Darfur) பகுதியிலே சுமார் 12 லட்சம் பேரு அகதிகளா அங்கேயே இருக்காங்க. இந்த மாதிரி இருக்கிற நிலம் வீடு சொத்துக்களை விட்டு அகதிகளா வந்தந்தவங்க சரியான பாதுகாப்பு இல்லமா, சோறு தண்ணி கிடைக்காம அல்லாடுறாங்க. ஐக்கிய நாடுகளின் மிகப்பெரிய நிவாரண உதவியோட சுமார் 940,000 பேருக்கு சாப்பாடு, மற்றும் அகதிகள் முகாம் இட்டு பெரிய உதவிகள் நடந்துக்கிட்டு இருக்கு. அதிலயும் இந்த அகதிகள் கூட்டம் இருக்கிற மொத்தம் 154 முகாம்ல 72 முகாம்க்கும் மேலே இந்த சாப்பாடு, மருத்துவ உதவி எதுவும் போய் சேராமா ஒரு 200,000 பேருக்கு மேலே சாகும் தருவாயிலே இருக்காங்க! அதிலேயும் மூணுக்கு ஒரு குழந்தை ஊட்டசத்துல்லாம இறக்கும் தருவாயில் இருக்குதுங்க. இது தான் கொடுமை! அதனாலேயே உலகின் அனத்து நாடுகளும் இந்நாட்டின் மேல் கவனம் திருப்பி இருக்காங்க. அதுவும் உலகத்தின் முதல் மனித உரிமை அத்து மீறல் பிரச்சனைன்னு பிரகடனப்படுத்தி உதவி செய்ய முன் வந்திருக்காங்க.ஆனா அத்தனை உதவிகளும் இந்த பாவப்பட்ட மக்களுக்கு போய் சேருதான்னா, அதான் இல்லை, இது அதைவிட மிகப்பெரிய சோகம். ஏன்னா எல்லாமே சூடான் நாட்டு அரசாங்கத்தின் அராஜகத்தினால் , ஒட்டு மொத்த பகுதியும் துயரத்தில ஆழ்ந்திருக்கு!
இவ்வளவு துன்பங்களும் சொந்த நாட்டின் அரசாங்கத்தால் இந்த மக்களுக்கு வந்தது! கிட்டதிட்ட நம்ம இலங்கை போராட்டம் மாதிரியே தான். அதாவது நம்ம இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் எப்படி தமிழர்கள் பெரும்பான்மையா இருந்த பகுதியோ, அதே போல இந்த நாட்டின் வடக்கு மேற்கு பகுதியான டர்ஃப்ர் (Darfur) அரேபியர் அல்லாத கறுப்பர் இன பழங்குடி மக்களை கொண்ட பகுதியாகும். அதாவது சூடான் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியாகும், அது போல மக்கள் தொகையில் சூடான் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் ஏழில் ஒரு பங்கு இந்த பகுதியில் வசித்து வந்தனர். காலங்காலமாவே, அதாவது நம் தமிழ் ஈழ பிரச்சனை ஆரம்பித்த 1980களிலிருந்தே, இந்த இனச்சண்டை இருந்து வந்திருக்கு. அதாவது அரேபியர்களின் ஊடுருவலால் மெல்ல மெல்ல இந்த தேசம் முழுவதுமிருந்து கறுப்பர்கள் துரத்தி அடிக்கப்பட்டார்கள்! ஆக அரேபியர்கள் பெரும்பான்மை கொண்ட அரசாங்கம், அரேபியர்களை கொண்ட போராளிகளின் துணையோடு இந்த கறுப்பர்கள் இனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ஐக்கிய நடுகள் சபையின் தீர்மானத்தின் பேரில் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்ததை மீறி இப்பகுதி மக்களின் கறுப்பர் இனப்படுகொலை நிகழ்ந்த வண்ணம் இருக்கு! கொலை, சித்திரவதை, கற்பழிப்பு, துப்பாக்கிச்சூடு, அகதிகளின் முகாம் தாக்குதல், கடத்தல், சூரையாடல், சொத்துக்களை அழித்தல், விளைபொருட்கள் அபகரித்தல் என அத்தனை கொடுமைகளையும் இப்பகுதி கறுப்பர் இனமக்களின் மீது தொடர்ந்து நடத்தி வந்தது 'ஜிஞ்சாவீத்'(Janjaweed) என்றழைக்கப்பட்ட அரேபிய போராளிகளும் அதுனுடன் சேர்ந்த இந்த சூடான் நாட்டு அரசாங்க இராணுவமும் ! இவர்களை எதிர்த்து போராட கறுப்பர் இன போராளிகள், சூடான் மக்கள் விடுதலை படை( Sudanese People's Liberation Army (SPLA)) இருந்தும் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்று போயின!
பிறகு தொடர்ந்து நடந்த வந்த இந்த இனக்கலவரச்சண்டையால், அரேபிய போரளிகளும், கறுப்பர் இன போராளிகளும் சண்டையிட்டு அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், மேலும் சொந்த மண்ணிலே இந்த கறுப்பர் இனமக்கள் அகதிகளாயினர்! ஆனால் தொடர்ந்து நடந்த சண்டையில் அரேபியர் பெரும்பான்மை அரசு, அரேபிய போரளிகளுக்கு அதரவளித்து, இப்பகுதி மக்களை விமானத்தக்குதலுக்குட்படுத்தியது! அதனால் உயிரிழ்ந்தோர் பலர்! இந்த விமானத்தாக்குதலால் சொந்த மண்ணைவிட்டு ஓடி அகதிகளாக அண்டை நாடிகளிலும் தஞ்சம் புகுந்தனர்!
இந்த அகதிகளின் மீது உண்டான அத்தனை மீறல்களும், அட்டூழியங்களும் கொடுமையானவை. தந்தை தாயார், தனையன் முன்னிலையிலே பெண்களின் கற்பை சூறையாடுவது, பிறகு தந்தை, தனையன்களின் கை கால்களை வெட்டி எறிவது, அரசு எந்திரங்களை முடுக்கி விமானத்தாக்குதல், அரசின் இராணுவம் கிரமாங்களில் புகுந்து சூரையாடல், அரேபிய 'ஜிஞ்சாவீத்' போராளிகள் குதிரையிலும் ஒட்டகத்திலும் சென்று ஒட்டு மொத்தமாக கிராமத்தையே வளைத்து தீயிட்டு உயிரோடு கொளுத்துதல், தப்பி ஓடும் அப்பாவி ஜனங்களை வானிலிருந்து வெடிகுண்டு வீசி தாக்குதல், கிராமத்தில் உள்ள அனைவரும் தப்பிய உயிருக்கு பயந்து ஓடியபின்னர், அரேபிய 'ஜிஞ்சாவீத்' போராளிகள் கிராமத்தில் உள்ள அத்தனை சொத்துக்களையும் சூறையாடல், தொடர்ந்து தாக்குதல் நடத்தி கடைசியில் தீக்கிரையாக்குதல். இவை அத்தனையும் இந்த பகுதியில் இருந்த கறுப்பர் இனமக்களின் மீது நடந்த அட்டூழியங்கள்!
ஒன்றும் மட்டும் புரிகிறது இதே கொடுமையை அனுபவித்த நம் இலங்கை தமிழ் நெஞ்சங்களை நினைத்து பாருங்கள். யுத்த பூமியில் அழிந்த தமிழ் நெஞ்சங்களை நினைத்து பாருங்கள். இது போன்ற கொடுமைகளை இன்று பார்க்கும் பொழுது அனத்து உலக மக்களும் கொந்தளிக்கின்றனர்! இதெற்கென அமெரிக்க அரசாங்கம் தனியாக சிறப்பு பார்வையிட்டு, இந்த கொடுமைகளுக்காக சங்கை முழக்குகிறது! எங்கே சென்றது இந்த கொடுமைகள் எல்லாம் நம் தமிழ் சகோதரன் அனுபவித்த பொழுது! தான் வாழ்ந்த பூமியில் தன் சொந்தம் பந்தம் வீடு உறவு என அனைத்தும் இழந்து அகதியாய் கூட வாழவிடாமல் துரத்தியடித்தபொழுது எங்கே சென்றது இன்று அறைகூவல் விடுக்கும் உலகம். நம் சகோதரனை காக்க நம் சகோதர புலிகள் இல்லையெனில் எஞ்சி நின்று உரிமையை தட்டிகேட்க முடிந்திருக்குமா! இப்படி வலிமை காட்டவிடின் சொந்த மண்ணிலே இது போன்று அகதிகளாய் நின்று பிறகு மடிந்து போகும் இம்மக்களை நிலைதான் ஏற்பட்டிருக்கும்! யுத்தமில்லா பூமியாய், தான் பிறந்த நாட்டிலே சுதந்திர குடிமகனாய் தன் உரிமை காத்து தனித்து நிற்கும் வேளை எப்பொழுது வரும்!
Tuesday, May 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Really Good Work!! Good Blog!!
Srilankan Tamils and Sudanese People's peaceful life, may become real, very soon!!. Hoping for the best!.
வெளிகண்டநாதர், நெஞ்சை தொட்டப் பதிவு.
வெளிகண்ட நாதர் அவர்களே,
மிகவும் அருமையான பதிவு. நான் கூட இது பற்றி எழுத இருந்தேன். சிங்களப் பேரினவாதிகளின் கொடுமையினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன் என்பதால் சூடானிய பழங்குடி மக்களின் துன்பங்களை என்னால் உணர முடிகிறது. கடந்த வருடம் நான் ஈழத்திற்குச் சென்றிருந்த போது [ 20 ஆண்டுகளின் பின்னர்] நான் பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்க வேண்டும் என ஆவலுற்று அங்கு சென்ற போது சிங்கள இராணுவம் என்னை எனது ஊருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. காரணம் , "அதி உயர் பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் பல தமிழ் ஊர்களில் இருந்து காலம் காலமாக வசித்து வரும் தமிழர்களைத் துரத்தி விட்டு அப் பகுதிகளில் சிங்களப் படைகள் முகாம்கள் அமைத்தும் புத்த விகாரைகள் கட்டியும் உள்ளனர். இப்படித் துரத்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் கூட அற்ற அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இப்படி சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊர்களில் நான் பிறந்து வளர்ந்த ஊரும் அடங்கும். இந்த "அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குச்" செல்லுவதாயின் சிங்களப் படைகளிடம் அனுமதி பெற வேண்டும். எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்குள்ள ஓர் தமிழ் கத்தோலிக்க குருவை அணுகி என் ஆசையைத் தெரிவித்தேன். பாதிரியர் அவர்கள் எனது ஊருக்குப் பொறுப்பான சிங்களப் படைத் தளபதியைத் தொடர்பு கொண்ட போது, சில நிபந்தனைகளுடன் என்னை எனது ஊருக்குள் செல்ல அனுமதிக்க அத் தளபதி இணங்கினான். அந்த நிபந்தனைகள் இவை தான்:
[1]பாதிரியாருடைய வாகனத்தில் , பாதிரியாருடன் நான் மட்டும் தான் செல்ல வேண்டும்.
[2]எக் காரணத்தைக் கொண்டும் வாகனத்தை விட்டு இறங்கக் கூடாது.
[3]வாகனத்தில் இருந்த படியே ஊரைப் பார்க்க வேண்டும்.
[4]புகைப்படக் கமராவோ அன்றி வீடியோ கமராவோ எடுத்துச் செல்லக் கூடாது.
[5]செல்லுமிடப் பேசி[cell phone] எடுத்துச் செல்லக் கூடாது.
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் " இவ் ஊரே , நான் சின்னப் பெடியனாக[பையனாக] இருந்த போது மகிழ்ந்து குலாவியதும் இவ் ஊரே என்பதால், எப்படியும் நான் பிறந்த மண்ணைப் பார்க்க வேண்டும் எனும் வெறியால், சிங்களப் படைத் தளபதியின் நிபந்தனைகளுக்கு இணங்கினேன். எனது ஊருக்குள் பாதிரியரின் வாகனம் நுழைந்ததும் நான் அழுதே விட்டேன். காரணம் அங்குள்ள வீடுகள் முழுக்க தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகள் கூரைகள் ஏதும் இல்லாது சில சுவர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. மரங்கள் செழித்து வளர்ந்து காடாகக் காட்சி அளித்தது எனது ஊர். நான் பிறந்து வளர்ந்த வீடு கூட தரை மட்டமாக்கப் பட்டு வீடு இருந்த இடமே தெரியாமல் இருக்கிறது. எனது அயல் வீட்டுக்காரர்கள், என் பால்ய நண்பர்களுக்கெல்லாம் என்ன நடந்தது, அவர்கள் இப்போ எங்கே வசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. என் சிறு பிள்ளைக் கால நினைவுகளைக் [childhood memories]கூட சிங்களப் படைகள் விட்டு வைக்கவில்லை. இக் கொடுமைகள் அனைத்தும் உலகிற்கு கொல்லாமையைப் போதித்த புத்த பிரானின் பெயரால் தான் அரங்கேறுகிறது என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது.
Thanks Sivabalan!
சிவா, நன்றி!
வெற்றி, உங்களின் வலி எனக்கு புரிகிறது. இது போல் தன் தாயகம் தொலைத்தோர் அநேகம். இது போன்ற இனவெறியாட்டம் தணிந்து என்று உருவாகம் இந்த யுத்தமற்ற பூமி!
மிக மிக பயனுள்ள ஆக்கம். இதேபோல் மேலும் ஆக்கங்களை எழுத வாழ்த்துகிறேன்.
ஒன்று மட்டும் உண்மை. தமிழன் ஒன்று பட்டால் மட்டுமே ஈழத்தமிழர் இன்னும் சிலகாலமாவது இந்த உலகில் வாழ முடியும். இல்லாவிடின் ஈழத்தமிழர்கள் புத்தகங்களில் மட்டுமே அவர்களின் வாழ்வார்கள். அவர்களின் இறுதி யுத்தமும் அழிவும் சிங்களவர்களால் ராமர் இராவணனை அழித்ததற்கு சமமாக எழுதப்படலாம்.
Post a Comment