Saturday, May 27, 2006

எண்ணெய் என்பது எது வரை!!

இந்த ஆட்டோகிராப் படத்திலே, சேரன் தன் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணை தேடி, அவ வீட்டுக்கு தன் கல்யாண பத்திரிக்கை வக்க போவாரு, குதிரை வண்டியில், அப்ப அவரு சொல்லுவாரு, 'இன்னும் இது எத்தனைக் காலத்துக்கு இந்த குதிரை வண்டியெல்லாம் இருக்கப்போகுது! இனி வர பிள்ளைங்கெல்லாம் இதை பார்க்கப்போறங்களான்னு' சொல்லி வசனம் பேசற காட்சியை பார்த்துட்டு ஒன்னு சட்டுன்னு சொல்ல வருது. இனி குதிரை வண்டி தான்னு. மனுசுன் எல்லா எரி சக்தி, எண்ணெய், எரிவாயு இதெல்லாம் இன்னும் எத்தனைக் காலத்துக்கு உபயோகிப்பான், எப்ப இதெல்லாம் தீர்ந்து போய், திரும்ப மனுஷன் குதிரை வண்டிக்கு வருவான்ங்கிறதை பத்தி தான் இப்ப பேச்சு! இல்ல வேறே எதாவது சக்தி கொண்ட எரி பொருளை கண்டுபிடிச்சு பொழப்பை நடத்துவானான்னா, எப்படி இருக்க போவது நிலமைன்னு கொஞ்சம் விவரமா பார்ப்போமா?

இந்தக் குதிரைக்கதையை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோமுன்னா, 1894, முத முதல்ல பாரீஸ்ல ஒரு ரேஸ் போட்டி நடந்தது, குதிரை இல்லாத எந்த வண்டி நீண்ட நேரம் ஓடக் கூடியதுன்னு! அதுவும் ஒரு 78 மைல் தூரத்துக்கு! அப்ப எல்லாரும் எல்லாவிதமான ஓட்டு சக்திகளை உபயோகிச்சு ஓட்டினாங்க, மின்சாரத்துல இயங்குறதுலருந்து, நீராவியிலயிங்கிறதிலருந்து, அழுத்தமான காத்துலருந்து எல்லா சக்திகலையும் உபயோகிச்சு ஓடின வண்டிகள் அந்த போட்டியில கலந்துக்கிட்டன. ஆனா கடைசியில ஜெயிச்சது என்னமோ, ஒரு புது வாகனஎரிசக்தி எண்ணெய், அது விளக்கெரிக்கறதுக்கு அந்தக்காலத்தில உபயோகத்திலருந்தது, அதாவது சுராமீண் எண்ணெய்க்கு பதிலா, அப்ப கண்டுபிடிச்ச கச்சா எண்ணெய்லிருந்து வந்த பெட்ரோலை, விளக்கெரிக்க உபயோகபடுத்தின எண்ணெய்யை, போட்டு ஓட்டினக் காரு தான் முதல்ல வந்தது!

அப்படி ஓட்டி ஜெயிச்சாலும், பெட்ரோல்லோட எதிர்காலம் அப்ப ரொம்ப ஒன்னும் பெரிசா இருந்திடல! ஏன்னா உள் எரி வாகனங்கள்('Internal Combustion Vehicle') பெரிசா சத்தம் போட்டுக்கிட்டும், புகையை கிளப்பிக்கிட்டும், பயங்கரமா பார்க்க இருந்ததாலே அதில ஆர்வம் இல்ல மக்களுக்கு அப்ப. அதனால 1900 வரை, இந்த வாகங்கள் மின்சாரத்தில் ஓடக்கூடியது கொஞ்சம், நீராவியில் ஓடக்கூடியது கொஞ்சம், பெட்ரோல்ல ஓடறது கொஞ்சம்னு இருந்துச்சு! அப்பறம் ஒரு பத்து வருஷம் கழிச்சு பார்த்தீங்கன்னா, பெட்ரோல் வாகனங்கல் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிவிடுட்டு முன்னாடி அது தான் பீறு நடைபோட்டு வலம் வந்தது. ஏன்னா, அந்த உள் எரி வாகனங்கள் மென்மேலும் சிறப்பாக உருவாக்கப்பட்டு நல்ல ஓட்டும் சக்தியின் நிரூபிக்கப்பட்டது, அது மட்டுமில்ல அப்ப எல்லாரும் நினச்சது, இந்த கச்சா எண்ணெய் கையிருப்பு (reserve) ஏகப்பட்டது நம்ம கையிலே இருக்குன்னு! ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா, என்ன? வாங்க பார்க்கலாம்!

அப்படி இந்த எண்ணெய்யை வச்சு இந்த நூற்றாண்டிலே வளர்ந்த பொருளாதாரத்துக்கு இப்ப வந்திருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்! இந்த கறுப்பு தங்கம் காய்ஞ்சுப் போச்சுன்னு! ரொம்ப வருஷமா, சில ஜியாலஜிஸ்ட்ங்க சொல்லிக்கிட்டிருந்தாங்க, உலகம் எண்ணெய் சக்தியிலே வளர ஆரம்பிச்சு இப்ப உச்சத்திலே போயிக்கிட்டிருக்கு, அது தீர்ந்து, அதற்கு மாற்று சக்தின்னு ஒன்னு வராத வரைக்கும், இப்ப வளர்ந்து நிக்கிற பொருளாதாரம் அதல பாதளத்துக்கு போயிடும், ஏன்னா உலகம் இப்ப எண்ணெய்யை பூமியிலருந்து உறிஞ்சு எடுக்கிறதுல மிக உச்சத்துக்கு போயிடுச்சுன்னு! போன சில மாதங்கள்ல எங்க பார்த்தீங்கனாலும், டிவியில, மேகஸின்ல, மீடியால 'காலி டப்பா பெருங்காய டப்பா ' ('The Empty Tank'), 'கேஸ் கதை முடிஞ்சு போச்சா?' ('Out of gas?'), 'சரிந்து வீழ்ந்து விழும் பொருளாதாரம்' ('The Coming Economic Collapse'), 'எப்படி வாழ்வோம் நாம் இனி, எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலர் ஆனால்' ('How Can you Thrive when Oil Costs $200 a Barrel') அப்படின்னு கொட்டை எழுத்திலே வந்துக்கிட்டுருக்கு! ( இந்த வாசகம் எல்லாம் இந்த ஊருபக்கம் வர வாசகங்கள், நான் கொஞ்சம் தமிழ்ல வந்தா எப்படி இருக்கும்னு பார்த்து போட்டது, எங்க, நம்மூரு மக்களுக்கு இதெல்லாமா இனிக்கும்? 'ஜெயலட்சுமி போலீஸாரின் மன்மத லீலை', 'காஞ்சி மாமா கன்னி கழிந்தார்', ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புவனேஸ்வரியின் லீலைகள் அம்பலம்', அப்படின்னு வாசகம் வந்தா தானே நமக்கு கிக்கு, 'சமயல் எரி வாயு கேஸ் சிலிண்டெர் ரூபாய் 300க்கு மேல் போனால், இனி காப்பி குடிப்பது எப்படின்னு' யாரவது ஆராஞ்சு கட்டுரை எழுதி சமீபத்திலே பார்த்ததா இருந்தா சொல்லுங்க கொஞ்சம்!)

இப்படி மீடியான்னு இல்லே, இந்த எண்ணெய் கம்பெனிக்காரங்களும் இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு இந்த 'எண்ணெய் என்பது எது வரை'ங்கிற பட்டிமன்றத்துக்கு வந்துட்டாங்க!அதுவும் செவ்ரான் ('Chevron') மாதிரி கம்பெனிங்க , 'நமக்கு முதல் ஒரு ட்ரில்லியன் பேரல் எண்ணெய்யை குடிக்கிறதுக்கு 125 வருஷம் புடிச்சுச்சு,ஆனா, அடுத்த ஒரு ட்ரில்லியன் பேரலை குடிக்க 30 வருஷத்துக்கு மேலே ஆகாது'ன்னு விளம்பரம் கொடுக்கிறாங்க. இந்த பட்டி மன்றம் 'இனி எப்படி நம்மலால எண்ணெய் வாங்க செலவிட முடியுமான்னு' கேள்வி கேட்டவங்க 'எண்ணெய் இருக்கா இனி வாங்கறதுக்கு' ன்னு கேள்வி கேட்கும் அளவுக்கு போயிடுச்சு. ஆனா உண்மையிலே இந்த நிலமை வந்திடுச்சா, உலகத்திலே இருக்கிற எல்லா எண்ணெய் வளமும் குன்றி போயிடுச்சா, இதான் இப்பக் கேள்வி! என்னான்னு பார்ப்போம் வாங்க!

உண்மையிலேயே உலகத்திலே எண்ணெய் பஞ்சம் வந்துடுமா? இன்னெக்கு இருக்கிற எண்ணெய் உற்பத்தியின் உச்சம் நிஜமாலுமே இனி வர பொருளாதாரத்தை பாதிக்குமா? அப்படின்னு நடக்கிற சர்ச்சையிலே, உற்பத்தியின் உச்சங்கிறதைவிட, இதே போல மலிவா தொடர்ந்து எப்பவும் நமக்கு பூமிக்கு அடியிலேருந்து எண்ணெய் தடையில்லாம கிடைச்சு, இப்போ ஓடிக்கிட்டிருக்கிற கார், பஸ், விமானங்க தொடர்ந்து ஓடுமாங்கிறதுதான் கேள்வி! இதை மனசுல வச்சி, இந்த எண்ணெய் கம்பெனி எல்லாம் தன்னுடய ரிஸ்க் எடுத்து எண்ணெய் தோண்டும் வேலையை விட்டு வேறே தொழில்நுட்ப வளர்ச்சியிலே காசு கொட்ட முன் வந்திருக்காங்க தான் இப்ப நாம பார்க்கிறது! அதாவது தோண்டி எண்ணெய் தேடறதை விட்டுட்டு, இந்த எண்ணெய் போன்ற மற்ற எரி சக்தியை தொழில் உற்பத்தி மாதிரி பண்ணப் போறோம்னு, செல் ('Shell')ங்கிற கம்பெனி சொல்லிக்கிட்டு திரியுது! அதாவது நான் ஏற்கனவே எழுதின பதிவான 'தானிய பெட்ரோல்-விவசாயம் தரும் மாற்று சக்தி!' மாதிரி கலந்தடிச்சு பெட்ரோல் டீசல் எல்லாம் தயாரிச்சு, இப்ப கிடைக்கிற எண்ணெய் வளத்தை நீண்ட நாளைக்கு வச்சு காப்புத்துவோம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க! இந்த ஒரு எரிசக்தி மாற்று வழியானது புது தொழிற்கூடங்கள் வர வழி வகுக்குது.

அமெரிக்காவில இருக்கிற ஜென்ரல் எலெக்ட்ரிக் மாதிரி கம்பெனிங்க ஃபூயல் செல்('Fuel cell')ங்கிற தொழில்நுட்பம் பண்ணக்கூடியவங்க(இந்த ஃபூயல் செல் பத்தி அப்புறம் ஒரு முறை எழுதுறேன்!), இங்கிலாந்தில் இருக்கும் வர்ஜின் ஃபூயல்ஸ்(இந்த 'Virgin' பத்தி பல பேருக்கு தெரிஞ்சிருக்கும், அதாவது 'Virgin Atlantic' விமானக்கம்பெனி இருக்குல்ல, அதான் முதம்தல்ல நம்ம பெங்களூருக்கு விமானம் லண்டன்லிருந்து விட்டப்ப தாடி வச்சுக்கிட்டு, 'Richard Branson'ன்னு ஒருத்தரு நிறைய குட்டிங்களோட ராஜா மாதிரி வந்து இறங்கினாருல்ல! அவரு கம்பெனி ,நான் எழுதின தானிய பெட்ரோல் கட்டுரையில வந்த Cellulosic-ethanolங்கிற எரி பொருளை தயாரிக்க நிறைய செலவளிச்சு பெரிய சுத்திகரிப்பு ஆலை கட்டிக்கிட்டிருக்கு இங்கிலாந்திலே!), அப்பறம் அப்பிரிக்காவில இருக்கிற சசோல்ங்கிற கம்பெனி (இந்த கேஸ்லருந்து பெட்ரோல் பண்றவங்க, 'GTL'ன்னு ஒன்னு தயாரிக்கிறவங்க, இந்த 'GTL'பத்தி கீழே பார்ப்போம்) எல்லாரும் மாற்று கம்பெனிகளாக எண்ணெய் கம்பெனிக்கு நிகரா போட்டி போட்டு இந்த தொழில்நுட்பங்கல் எல்லாத்திலேயும் முதலீடு செய்றாங்க! ஏன் நம்ம ரிலெயன்ஸ் கூட ஆமணாக்கலருந்து டீசல் எடுக்க முதலீடு செய்றதா நம்ம பெத்த ராயுடு சொல்லல!

இதெல்லாம் வச்சு பார்க்கறப்ப, உலகத்தின் எண்ணெய் வளம் குன்றியமாதிரி இருக்கில்ல!. ஆனா பேர்போன ஜியாலஜிஸ்ட்ங்க என்ன சொல்றாங்கன்னா, 1990ல் இந்த எண்ணெய் உற்பத்தி பீக்ல போயிருக்கணும், ஆனா போகல்ல, இந்த 2005ல உச்சம் வரும்னு எதிர் பார்த்தது, அப்படியும் வரலை! ஆனா இப்ப இருக்கற உற்பத்தியிலே (உலக உற்பத்தி இன்னெக்கு 80 மில்லியன் பேரல்லுக்கு மேலே ஒரு நாளைக்கு)இன்னும் ஐந்தாண்டுகள்ல, இது ஒரு தின உற்பத்தியில 15 மில்லியன் பேரல் அதிரிக்க போகுதுன்னு சொல்றாங்க! இப்ப நடந்திக்கிட்டிருக்கிற அத்தனை ப்ராஜக்ட்டையும் கணக்கில எடுத்தா, இந்த அளவுக்கு உற்பத்தி அதிகமாகுமுன்னு சொல்றாங்க! அப்புறம் உங்களுக்கு என்ன சிரமம்னு கேட்கிறாங்க!. ஆனா இன்னொரு குரூப் என்ன சொல்லுதுன்னா, முன்ன மாதிரி நம்ம நிறைய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கல! அதாவது ஒரு பேரல் எண்ணெய் வளம் கண்டுபிடிச்சா, நம்ம இரண்டு இல்ல மூணு பேரல் எண்ணெய் குடிச்சுக்கிட்டு இருக்கோம்! இப்ப நம்ம கொண்டாடற இந்த அதிகப்படியான் உற்பத்தி திறன் 30 வருஷம் முன்னே கண்டுபிடிச்ச லாட்டரி தான், இப்ப போய்கிட்டிருக்கு. மேற் கொண்டு அந்த எண்ணெய் கிணறு வளர்ச்சி ஆய்வு திட்டங்களுக்காக செய்யும் செலவு ரொம்ப அதிகமாகி கிட்டிருக்கறதாலே மேற் கொண்டு செலவு செய்ய எண்ணெய் கம்பெனிங்க முன் வரல்லைன்னு சொல்றாங்க!

ஆனா வளர்ந்த பெரிய எண்ணெய் கம்பெனிங்க மூச்சு இப்ப திணறது அவங்க எண்ணெய் கிணறுகளின் உறபத்தி திறனை அதிகரிக்க, மேற்கொண்டு ரிசர்வ்களை அதிகரிக்க! அதற்காக உலக எண்ணெய் கிணறுகள் எல்லாம் காய்ஞ்சு போச்சான்னா, அதான் இல்லை! உலகத்தின் பெரும் பகுதி, ரஷ்யாவில உள்ள சைபீரியா, OPEC என்கிற எண்ணெய் உற்பத்தி பண்ணி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சில பகுதிகள், வடகடல் பகுதி ('North Sea') மற்றும் அலாஸ்காவில் உள்ள பகுதிகள் இங்கே எல்லாம் நாம் சரியாக போய் ஆராய்ந்து தோண்டமல் இருக்கக்கூடிய வளங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு! அதுவும் இப்ப அலாஸ்காவிலும் வடகடல் பகுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் 2015 -2020ல் உற்பத்தியில் பீக்கில் வரும் என எதிர்பார்க்கப்டுகிறது! அதுவும் அமெரிக்காவின் மண் வள ஆராய்ச்சி நிறுவனம் ('United States Geoligcal Survey') அறிவித்த அறிக்கையின் படி உலக எண்ணெய் வளத்தில் மொத்தம் 3 ட்ரில்லியன் பேரல் நாம் மூன்றில் ஒரு பகுதி தான் உபயோகித்திருக்கிறோம், இன்னும் 2 மடங்கு உள்ள வளத்தில் இந்த உச்ச நிலையை அடைய இன்னும் 30 ஆண்டுகள் பிடிக்கும் என்கின்றனர். அதுவும் வழக்கமாக எடுக்கும் எண்ணெய் கிணறுகள் அன்றி, கனடாவில் கிடைக்கும் மணல் எண்ணெய் வளம், மற்றும் 'Oil shale' என்றழக்கப்படும் எண்ணெய் படிக பாறைகளிலிருந்தும் (இது அமெரிக்காவில் அதிகம் உள்ளது, 1.2 ட்ரில்லியன் பேரல் எண்ணெய் வள உற்பத்தி செய்ய முடியும் இப்படிகபாறைகளிலிருந்து!, இதை எல்லாம் விடுட்டு எண்ணெய்காக ஈராக்ல போய் சண்டை போடறாங்க பாருங்க, ஏன்னா முதல்ல உலகத்தில மத்த இடங்கள்ல சீப்பா எண்ணெய் எடுத்துட்டு அப்புறம் இதெல்லாம் எக்ஸ்பிளாய்ட் செய்வாங்க, எப்படின்னு பார்த்துக்கங்க நம் ஜனங்களே!) எடுக்கப்படும் எண்ணெய் வளத்தையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணெய் உபயோகத்தின் உச்ச நிலை என்பதடைய இன்னும் ஒரு 60 இல்லை 70 ஆண்டுகள் பிடிக்கலாம் என்ற கணக்கை கூறுகிறது! ( இது அடுத்த பதிவில் தொடரும்!)

இரண்டாம் பதிவு : எண்ணெய் என்பது எது வரை!! --(2)

15 comments:

said...

அருமையான, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தொடர்.

வெளிகண்ட நாதர், ஒரு தகவல்.

நாலு-அஞ்சு வருசம் முன்னாடி எண்ணை கிணரு கண்டு பிடிச்சு, இருக்கற எண்ணைய எடுக்கற செலவும், விக்கற வருமானமும் கட்டுபடி ஆகாதுனு உட்ட கிணறு எல்லாம் இப்ப இருக்கற விலைல கட்டுபடி ஆகும்னு திரும்ப எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

"Have week reached the peak in oil" அப்படினு கேட்டா யாருமே சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. சொல்லாம இருக்கறதுல OPEC பங்கு நிறையனு தோனுது.

இந்த "Fuel Cell" கண்டு பிடிப்பு பத்து வருசமா நடந்துக்கிட்டு இருக்குனு சொல்றாங்களே, சரியா கொஞ்சம் சொல்லுங்க.

said...

வருகைக்கு நன்றி நன்மனம் அவர்களே!

//"Have week reached the peak in oil" அப்படினு கேட்டா யாருமே சரியா பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. சொல்லாம இருக்கறதுல OPEC பங்கு நிறையனு தோனுது.// இந்த கட்டுரையின் சாராம்சமே அதை பத்தி ஆராய்வதே! தொடர்ந்து என் கட்டுரையை படிங்க நிறைய உண்மைகள் விளங்கும்!

//இந்த "Fuel Cell" கண்டு பிடிப்பு பத்து வருசமா நடந்துக்கிட்டு இருக்குனு சொல்றாங்களே, சரியா கொஞ்சம் சொல்லுங்க. // இதை பத்தி விவரமா ஒரு பதிவு போடுகிறேன். சுருக்கமா இது கமர்சியல் ஆகாத்துக்கு காரணம் என்னான்னா, இதன் உற்பத்தியின் செலவு, பாதுகாப்பா ஹைட்ரஜன் ரீசார்ஜிங் எப்படி பண்ண்றது, அதை எப்படி ரீட்டைலிங்கு எடுத்துட்டு போறதுங்கிறது நிறைய ரிசர்ச் நடந்துக்கிட்டிருக்கு. இதில முக்கியமா GM நிறைய காசு செலவழிச்சு ஒரு மாதிரி நடைமுறைக்கு வரதுக்கு கொண்டு வந்திட்டாங்க, இன்னும் ஒரு இரண்டு மூணு ஆண்டுகள்ல அதிகமா மார்க்கெட்ல புழ்ங்க வாய்ப்பிருக்கு. அதேமாதிர் ரொம்ப திறன் கொண்ட பாட்டரிகளால் இயங்கும் ஹைபிரிட் கார்களும் வர இருக்கு, ஏற்கன்வே 50,000 க்கும் மேலே இந்த மாதிரி கார்கள் இங்கே அமெரிக்காவிலே ஓடிக்கிட்டிருக்கு!

said...

தமிழ்மணத்துக்கு இப்படி ஒரு 'வழி' இருக்குன்னு தெரியறது நல்லா இருக்கு.

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!

//இந்த எண்ணெய் உபயோகத்தின் உச்ச நிலை என்பதடைய இன்னும் ஒரு 60 இல்லை 70 ஆண்டுகள் பிடிக்கலாம் என்ற கணக்கை கூறுகிறது! ( இது அடுத்த பதவில் தொடரும்//

எண்ணை வளம் இருக்கிறது என்றாலும் 20 ஆண்டுக்கு பிறகு எடுக்க அதனை சுத்திகரிக்க தற்போது ஆகும் செலவு விட அதிகம் ஆகும் ,அவை எல்லாம் மிக ஆழத்திலும் ,அதன் தரம் குறைவாகவும் உள்ளது என தகவல்,முந்தைய உங்களது பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் அதனை குறிப்பிட்டு இருந்தேன் மீண்டும் அதில் இருந்து நினைவிற்கு!

//முதன் முதலாக பெட்ரோலியம் கண்டறிந்த நாள் முதல்(ஆD 1853) எத்தனைக்காலம் எண்ணைக் கையிருப்பு இருக்கும் எனக்க்கிட்டுள்ளார்கள் அதன் காலக்கெடு 342 ஆண்டுகள்.இதில் 153 ஆண்டுகள் கடந்தாகி விட்டது ,இன்னும் ஒரு 189 ஆண்டுகள் உள்ளது.அத்தனை ஆண்டுகள் உள்ளதே என மகிழ வேண்டாம் ஏன் எனில் தற்போதைய காலத்தில் பெட்ரோலிய உபயோகம் பெருக்கு தொடர் விகிதத்தில் வளர்ந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது எனவே சுமாராக இன்னும் ஒரு 50 ஆண்டுகள் வரைத் தான். தற்போது உள்ள எண்ணை வளத்தை வைத்து காலம் தள்ள முடியும்.இதிலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல் என்னவெனில். இன்னும் ஒரு 20 ஆண்டுகள் வரை எடுப்பது மட்டுமே பொருளாதார ரீதியாக லாபகரமானது,அதன் பின்னர் எண்ணை எடுக்க ஆகும் செலவு இரட்டிப்பாகும். எனவே பெட்ரோலில் கார் ஓட்டுவது அடுத்த 20 ஆண்டுகளுக்கே சாமன்யனுக்கு சாத்தியப்படும்.//

அடுத்த 20 ஆண்டுகளில் வளைக்குடா பிரதேடம் தவிர வேறு எங்கும் எண்ணை வளம் இருக்காது என கணித்துள்ளார்கள்.
எனவே எண்ணை விலை விண்ணை தொடும் அப்போது எனவே மாற்று சக்தி அவசியம் தேவை!

மேலும் ஃபியல் செல்கள் செலவு அதிகம் பிடிக்கும் மேலும் சுற்று சூழல் அபாயம் உள்ளது! எனவே தான் சூரிய சக்தியினால் இயங்கும் கார்கள் கண்டு பிடிக்க முனைப்புடன் உள்ளனர்.இன்னும் சொல்லபோனால் வருங்காலத்தில் மிகப்பெறிய மாற்று சக்தியாக சூரிய சக்தியே விளங்கும்! அதற்காக ஏராளமான ஆராய்ச்சி நடைப்பெற்று வருகிறது.இந்தியாவில் மிகப்பெரிய சூரிய சக்தி மின்னிலையம் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மிக சிறிய அளவில் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் எடுப்பது ,ஜியோதெர்மல் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது எல்லாம் சோதனை அளவில் உள்ளது.காற்றாலைகள் அதிகம் நிறுவப்படுகிறது இந்தியாவில் மகாராஷ்டிரா காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது தமிழகமும் நிறைய காற்றாலை நிறுவியுள்ளது.

said...

தருமி,
எந்த வழியை குறிப்பிடுகிறீர்கள்?

said...

வவ்வால், நீங்கள் குறிப்பிடுவது போல இந்த 'Non-Conventional energy' சரியான வழியே! இருந்தும் நான் கூறிய Conventional energy முறையிலே இன்னும் நிறைய வழி முறைகள் இருக்கு! என்னுடய அடுத்த தொடரை படித்தால் விவரம் உங்களுக்கு விளங்கும். நான் சொல்வது இந்த 'Peaking' என்ற நிலை இன்னும் வரவில்லை என்பது தான். அதன் ஆதாரங்களை அடுத்த பதிவில் தருகிறேன்!

said...

எண்ணெயே இல்லாமப் போச்சுன்னா...?

"இனி நான் ஊருக்குப் போகவே முடியாதா?" ((((-:

சீக்கிரம் மாத்துக் கண்டுபிடிச்சு, பூமியைச் சுரண்டாம இருந்தா நல்லது.

said...

துளசி, கவலைபடாதீங்க, ஏதாவது மாத்து வழி பொறக்கும், அதுவரை உங்களுக்கு மவோரிங்களே துணை!

said...

எண்ணெயைப் பற்றிப் பேசும்போது ஒரு சின்ன 'குவிஸ்'.


உலகிலேயே பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை எந்த நாட்டில், எங்குள்ளது?

-சிமுலேஷன்

said...

மைக்கேல் க்ளேரின் 'ப்ளட் அண்ட் ஆயில்' படித்து விட்டீர்களா? Anti-Republican என்று left-of-the center வகையில் எழுதப்பட்டிருந்தாலும் தகவல்கள் பல நிறைந்த அருமையான புத்தகம். இரண்டாம் உலகப்போரில் எண்ணெய் எப்படி allies-க்கு strategic advantage தந்தது அதன் விளைவாக போருக்குப்பின் எப்படி மிடில் ஈஸ்ட் அமெரிக்காவிற்கும் மற்ற வல்லரசு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதிலிருந்து, இந்த எண்ணெயினால் விளையும் நேரடி மற்றும் மறைமுக ரத்தக்களரிகளையும், உலக நாடுகளின் செஸ் விளையாடல்களில் முக்கிய அங்கமாக இது ஆகிவிட்டது பற்றியும் பல முக்கியத் தகவல்களைத்தரும் புத்தகம்.

said...

முதன் முதலாக எண்ணை எடுத்தது சீனர்கள்,முதல் என்னை கிணரு போலான்டில் , பொப்ராக வில்(bobraka) அதன் பின் ரஷ்யாவில் பக்குவில்(baku) அமைக்கப்பட்டது ஆனால் முதல் வணிக ரீதியான சுத்திகரிப்பு ஆலை அமைத்து முறைப்படி எண்ணை சுத்திகரித்தது வட அமெரிக்கவில் கனடா ஒன்டாரியொ(ontario) வில்.

said...

Simulation, வருகைக்கு நன்றி, வவ்வால் உங்கள் குவிஸ்க்கு பதிலளித்து விட்டார். மேற் கொண்டு விவிரம் காண இதோ விக்கிபீடியா சுட்டி!

said...

அருணகிரி, வருகைக்கு நன்றி, நான் அந்த புத்தகம் பற்றி கேள்வி பட்டுள்ளேன்!, படித்ததில்லை, விரைவில் அதை படிக்க முற்படுகிறேன்!

said...

மன்னிக்கவும். நான் கேட்க நினைத்த கேள்வி, 'உலகின் பழைமயான, ஆனால் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் சுத்திகரிப்பு ஆலை எது? எங்கே?'வென்று.

விடை- இந்தியாவில், அஸ்ஸாமிலுள்ள 'டிக்பாய்' சுத்திகரிப்பு ஆலையாகும். துவங்கப்பட்ட ஆண்டு 1901. நூறாண்டுகள் கடந்து, இன்றும் இந்த ஆலை இயங்கிக் கொண்டிருக்கின்றது.

துளித்தெடுப்புக் கோபுரம் (Distillation Column) அல்லாது ஒரு பெரிய கடாய் போன்ற ஒரு பெரிய சட்டியில் (batch still) ஆரம்ப காலங்களில் துளித்தெடுப்பு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டியினை இன்றும் இந்த ஆலையிலே காட்சிப் பொருளாய்ப் பார்க்கலாம். (இந்தச் சுட்டியில் படம் பார்க்கலாம் http://tinsukia.nic.in/subpages/digboi.html)

கொசுறுச் செய்தி: உலகின் முதல் (1859) எண்ணெய்க் கிணறு (பென்சில்வேனியா, அமெரிக்கா) தனது வர்த்தக உற்பத்தி துவங்கிய ஏழே வருடங்களில், இந்தியாவிலும் (1886) எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

-சிமுலேஷன்

said...

சிமுலேஷன், நீங்கள் கேட்க நினைத்த கேள்வியின் உள் அர்த்தம் இப்போது விளங்குகிறது.

ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், இந்த அதரபுரதான சுத்திகரிப்பு எண்ணெய் ஆலையின் சில பணிகளை மேற்கொண்டவன் என்கிற முறையில் பெருமை கொள்கிறேன்!