Monday, May 08, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பதிநான்காம் பகுதி

பார்த்தீங்களா, இந்த அரிதாரத் தொடர் அப்படியே நின்னு போச்சு. நடுவிலே வேறே பதிவுகளா போட்டுட்டு இதை உட்டுட்டேன். இந்த நாடகம், கூத்து, நடிப்பு, கச்சேரின்னு தான் நிறைய பொழுது காலேஜ்ல கழிஞ்சது. அப்ப நம்ம நடிப்பு, இயக்கங்கள் அடிமையாயி நமக்கு ரொம்ப தோஸ்தான நண்ப்ர்கள் அதிகம். அதிலும் நிறைய பேரு நிறைய தன்மைகளோட, குணாதிசியங்களோட இருக்கிறவங்க. ஆனா அமைதியா எப்பவும் சிரிச்சுக்கிட்டு அதிகம் பேசாம எங்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்த என் பிராஞ்சு, கிளாஸ்மேட் ராஜன்னை பத்தி சொல்லி ஆகணும். ஏன்னா அந்த கதை சோகம் மற்றும் ரொம்ப சுவாரசியமானது. எனக்கு நாடகம் போட ஒரு தீம் போட்டு கொடுத்த நிகழ்ச்சிகள். அது என்னான்னு உங்ககிட்ட சொல்லாம இந்த அரிதார தொடர் அவ்வளவு சிறப்பா இருக்காது, அதனாலே அதை பத்தி கொஞ்சம் பார்த்துட்டு, நம்ம பாக்யராஜ் சார்கிட்ட நடிக்க மற்றும் அவரை காலேஜ்க்கு அழைக்க போன நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

அப்ப நாங்க படிச்சப்ப முத ரெண்டு வருஷத்துக்கு பிராஞ்சு கிடையாது மூணாவது வருஷம் தான் பிராஞ்சு எல்லாம் கொடுப்பாங்க. அதுவும் முத மூணு செமஸ்டர் மார்க்கு வச்சு, அப்படி பார்த்தப்ப 80% மேலே தான் மெக்கானிக்கல் கிடைக்கும் அப்ப, அதற்கு அப்புறம் டிமாண்டு எலெக்ட்ரிகல், அப்புறம் சிவில், பிறகு எலெக்ட்ரானிக்ஸ். எலெக்ட்ரானிக்ஸ் கொஞ்சம் பாப்புலாராயிகிட்டுருந்த நேரம். நமக்கு எல்லாத்தையும் கூட்டி கழிச்சு முத மூணு செம்ஸ்டர்ல பண்ண அலும்புகெல்லாம் மொத்தமா எப்படி வச்சாலும் 77.6% க்கு மேலே எகிறல! அப்புறம் என்னத்த மெக்கானிக்கல் கிடைக்கும். என்னெத்த ஒத்த எங்கூர்காரன் எல்லாம் மெக்கானிக்கல்ல சில பேருக்கு கிடைச்சாலும், ஒட்டு மொத்தமா சிவில் போய்ட்டான்ங்க. நமக்கு என்னமோ அங்க போக பிடிக்கலை, அப்புறம் எலெக்ட்ரிகல்ல அந்த ஜெனேரட்டர் சீனிவாசன் அலும்பு தாங்காது, முத ரெண்டு செம்ஸ்டர் இரண்டு இரண்டு சப்ஜெக்ட் எடுத்து பிராணனை வாங்கிபுடுவான்னு எங்க சீனியர்ஸ்ங்க எல்லாம் அட்வைஸ. அதே மாதிரி, அந்தாளு லேப்க்கு போனாலும் ஒரே அலும்பு, என்னான்னு கேளுங்க, இந்த மோட்டருக்கு கனெக்ஷன் எல்லாம் நாங்களா சர்க்கூயூட் படி கொடுத்துட்டு சுட்சு ஆன் பண்ணினா, அது எழவு ஓடாது, அதில எதாவது தப்பா பண்ணியிருப்போம், எங்களுக்கு தெரியாது, ரொம்ப நேரம் பீராஞ்சுட்டு, நம்ம ஜெனேரட்டர் சீனீக்கிட்ட போன, அவரு பண்ற அலும்பு தாங்காது. 'சார் மோட்டர் ஓட மாட்டேங்கிது, நீங்க வந்து கொஞ்சம் பார்த்து சொன்னீங்கன்னா ஓடும் சார்' அப்படின்னு பசங்க சொன்னா, நக்கலா, அந்தாளு வந்து மோட்டர் பக்கத்திலே நின்னுக்கிட்டு, 'எப்பா மோட்டரு ஓடுப்பா, ஓடு' அப்படின்னு சொல்லிட்டு, எங்ககிட்டே 'நான் சொல்லிட்டேன்ம்பா, இனி ஓடும்' அப்படின்னு சொல்லிட்டு மனுசன் திரும்ப அவரு சேர்ல போய் தூரத்தில உட்கார்ந்துக்குவாரு. எங்களை லேப் முடியறவரை அழாதகுறையா நிக்க வச்சுட்டு கடைசியில, ஒரு வயரை 'இத்த என்ன மயித்துக்கு மாட்டி வச்சிருக்கே'ன்னு இழுத்து போட்டுட்டு போனா அப்புறம் மோட்டர் ஸ்டார்ட் ஆயி ஓடி லேப் முடிச்சு வர்றதுக்குள்ள உயிரு போயிடும், அதுக்குன்னே அந்த பிராஞ்சு வேணாம்னு எலெக்ட்ரானிக்ஸ் எடுத்தேன்! அப்ப நம்ம பேட்சு தான் ராஜன்! அமைதியா எங்க குரூப்ல எக்ஸ்பெரிமென்ட் பண்ணிக்கிட்டு, என்ன சொன்னாலும் சிரிச்சுக்கிட்டு அதிகமா பேசாம் இருப்பாரு! அவருக்கு வந்தது பாருங்க காதல், அதான் கதையே!

நாங்க படிச்சப்ப எங்க காலேஜ் ஊருக்கு வெளியே, எதிர்த்தாப்பல மெடிக்கல் காலேஜ், அதுவும் எங்க காலேஜ்க்கு வாசல் நேரா பொம்பள புள்ளங்க ஹாஸ்டல். அது இருந்தாலும், நடுவில மரங்கள், அது இதுன்னு அவ்வளவா நடமாட்டம் தெரியாது. அவங்க காலேஜ், அப்புறம் ஹாஸ்டலுக்கு போற மெயின் என்ட்ரன்ஸ்க்கு எதிர்த்தாப்பல தான் நம்ம பாட்டி மெஸ், டீக்கடை, அதுக்கு பக்கத்திலே ரெண்டு பக்கமும் பொட்டகாடு, கொஞ்சம் தள்ளினா எங்க காலேஜ் காம்பவுண்டு! நடுவுல சில சமயம் 20 நிமிஷ பிரேக் வர்றப்ப அங்க போய் டீ, தம் அடிச்சுட்டு திருப்பி காலேஜ் வர்றது எங்க வழக்கம். அப்படி எங்க கூட வர்ற ராஜன், கொஞ்ச நாள்ல 'நீங்க போங்க மக்கா நான் அப்புறம் வர்றேன்னு', எங்களை அனுப்பிடுவாரு, அவரு டீ, சிகரெட்டு கொஞ்சம் ரசிச்சு லேட்டாதான் சாப்பிடுவாரு, சரின்னு உட்டுட்டு வந்துடுவோம். அப்புறம் தான் தெரிஞ்சுது, மனுஷன், அந்த மெடிக்கல் காலேஜ்ல் படிக்கிற செல்விங்கிற பொண்ணுக்காக உட்கார்ந்து பார்த்துட்டு வர்றாருன்னு.

காலையில, புள்ளைங்க எல்லாம் கும்பலா பஸ் புடிச்சு டவுன்ஹால் பக்கத்தில இருக்கிற ஜிஹெச் க்கு போகணும், அவங்களுக்கு மத்தியானம் மேலே தான் கிளாஸ்(பார்த்தீங்களா, அவங்க கிளாஸ் எப்ப எப்பன்னு தெரிஞ்சு வச்சிருக்கோம்) இது விவரம் எங்களுக்கு மொதல்ல தெரியாது! அப்புறம் ஒரு நாள் பேசிகிட்ட இருந்தப்ப, மக்கா உனக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல யாரைவது தெரியுமான்னு, கேட்டப்ப, நான் சொன்னேன், 'எனக்கு ஒரு பொட்டச்சியும் தெரியாது, வேணும்னா, நம்ம பன்னீரை கேளுன்னு'. அப்புறம் பன்னீருக்கு அங்கே தவமணின்னு, அவங்க கிராமத்து பொண்ணு, அப்ப அந்த காலேஜ்ல படிக்கிறப்ப தெரியும். அதனாலே பேசி நாங்க பார்க்க போலாம்னு இருந்தோம். எனக்கு அப்பெல்லாம் இந்த வெட்டியா போயி பொட்டபுள்ளைங்க கிட்ட கடலை போடறது பிடிக்காது. இருந்தாலும் அந்த பக்கம் போனா கலரு பார்க்கலாமேன்னு நப்பாசை தான்! 'சரி நான் ஒரு நாள் கூட்டிட்டு போறேன், உனக்கு யாரவையாவது தெரியுமா? அப்பதான் சரியா இருக்கும்னு', பன்னீரு சொல்லிட்டான். 'நம்ம மூணு பேரு போனா அட்லீஸ்ட் குரூப்பா இரண்டு பேருக்காவது தெரிஞ்ச பொண்ணுங்க இருந்த மத்த பொண்ணுங்க கூசாம வந்து பேசுங்கன்னு', சொன்னான். என்ன பண்றதுன்னு பார்த்தப்ப, என் பால்ய சினேகதன் தனபாலு, அவெங்க சொந்த காரப் பொண்ணு ஒன்னு மெடிக்கல் கோயம்புத்தூர்ல தான் படிக்குது, பேரு ஜெயந்தின்னு எப்பவோ சொல்லி வச்சிருந்தது ஞாபகம் வந்துச்சு. சரி எனக்காக இல்லேன்னாலும் நம்ம ராஜனுக்காகவாது சும்மா போய் பார்ப்போம்ன்னு, தேத்திக்கிட்டு பன்னீருக்கிட்ட சொல்லி நமக்கும் அங்க தெரிஞ்ச பொண்ணுங்க இருக்க, போயி பார்த்து கடலை போடுட்டு(பேசிட்டு) வரலாமுன்னு சொன்னேன்!

அப்படி பேசி வச்சி ஒரு நாளு அவெங்க ஹாஸ்டலுக்கு போக பிளான் போட்டம். எவ்வளவு தைரியம் பாருங்க, அந்த ஜெயந்திங்கிற பொண்ணை நான் பார்த்துக்கூட இல்லை, பேரு ஜெயந்தி, ஊரு சேலம்ங்கிற தகவலை தவிர ஒரு மண்ணும் தெரியாது. இதை வச்சு தேடுவோமுன்னு, ப்ன்னீருக்கிட்டேயும் சும்மானச்சும் எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுன்னு உடான்ஸ் உட்டுட்டு போயாச்சு. அங்க போயி தவமணிக்கிட்ட எங்களை அறிமுக படுத்தி வச்சிட்டு, இவனுக்கும் அவெங்க ஊருகார பொண்ணு ஜெயந்தின்னு,உங்களோட படிக்கிற பொண்ணை பார்க்க வந்திருக்கான்னு சொல்லி அந்த பொண்ணும், என் பேரு எல்லாம் கேட்டுகிட்டு போயி அந்த ஜெயந்திக்கிட்டே சொன்னோன்ன, 'எனக்கு அப்படி யாரையும் தெரியாதுன்னு' உண்மையில சொல்லிட்டு போவ வேண்டியதுதானே. ஆனா பாருங்க, ஆகா கடலைக்கு ஆளுகிடச்சிருச்சின்னு நேர்ல வந்துடுச்சி, இத்தனைக்கும் என் பால்ய சினேகதன் தனபாலு பேர் கூட சொல்லி அனுப்பல்ல!( ஆக அந்த வயசிலே இரண்டு இனத்துக்கும் இருக்கிற கவர்ச்சி ஒன்னு தான், தெரியாத ஆடவனோட பார்க்கணும் பேசணும்ங்கிற ஆசை அவகளுக்கும் இருக்கு!)அதுக்கப்புறம் அது நல்ல ப்ரண்டா நான் காலேஜ் முடிக்கிற வரை இருந்திச்சு. எதுக்கு சொல்ல வ்ர்றேன்னா, என் சம வயசு ஒத்த பெண்களோடு பழகி நட்பா அதுவரை இருந்ததில்லை. எப்பவுமே நம்மல ஒரு பொண்ணு அணுகி பேச ஆரம்பிச்சாலே காதல் வயத்தோட கவனம் போகும் அந்த நேரத்தில நல்ல மனபக்குவத்திலே ஒரு ஃப்ரண்டா, தோழியா ஒரு ரிலேஷன் வச்சி காலேஜ் முடிச்சது வர ஃப்ரண்டலியா இருந்தது நான் மறக்க முடியாத ஒன்னு! அப்புறம் அந்த பொண்ணு எனக்கே சொல்லாம என் ஜீனியரை ரொம்ப நாள் லவ்பண்ணிக்கிட்டிருந்திருக்கா, அவெங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டு செட்லானது வேறே கதை! இன்னொன்னு, நட்பா, எங்க ஊருக்கெல்லாம் வந்து, நாங்க ரெண்டு பேரும் நைட் ஷோ படம் பார்த்துட்டு அவளை அவங்க சொந்த காரங்க வீடல விட்டுட்டு வந்ததை, எங்க வீட்ல கூட சரியா எடுத்துக்கலா, அந்த பக்குவம் பெரியவங்களான அவெங்களுக்கே இல்லை, எங்கே பையன் தப்பு பண்ணிடுவானேங்கிற பச்சாதாபத்தால வந்த ஆற்றாமைத்தவிர, இது போன்ற நட்புகளை அங்கீகாரிக்கக்கூடிய பக்குவம் இல்லை! இதெல்லாம் அனுபவம்! சரி கதைக்கு வருவோம்.

இந்த நட்பை உப்யோகிச்சு, அந்த செல்விங்கிற பொண்ணை எப்படியும் வரவழைக்க முயற்சி பண்ணுனோம். அந்த பொண்ணு இந்த தவமணி, ஜெயந்தி குரூப்ல இல்லாததாலே, ஹாய், ஹலோ சொல்ற்தோட சரி போல, ரொம்ப பிகு பண்ணிக்கிட்டு வரலை. மேற்கொண்டு ராஜனை பார்க்கிறதுக்கு காரணம் வேணுமில்லை. சும்மா தெரியாத பையன்கிட்ட வந்து பேசிடுமா(ஜெயந்திக்கு ஆப்போஸிட்) என்ன? அப்புறம் நாங்களும் அவ்வளவுதான்னு விட்டுட்டோம். இப்படி போனப்பதான் ஒரு தடவை தவமணிக்கிட்டருந்து பன்னீருக்கு போன் வந்தப்ப, அதை அட்டெண்ட் பண்ண போனப்ப எக்கு மாத்தா செல்விக்கிட்டே பேசிட்டாரு நம்ம ராஜன்.(தவமணி, அப்ப வந்த செல்விகிட்ட ரிஸீவரை கொடுத்துட்டு ஏதோ யாரோ கூப்டாங்கன்னு போயிடுச்சாம், இது நிஜங்க, நம்புங்க, கதையில டுவிஸ்ட் வேணும்னு எழுதலை!) எங்க குரூப்ல அதிகம் பேசமா அமைதியா இருந்தவரு, அந்த பொண்ணுக்கிட்ட என்ன பேசினாரோ, அது மயங்கி, தினம் ராப்பொழுதுல பாதி போன்லேயே மனுசன் கழிச்சாரு. அப்ப்டி லவ்வுன்னவருக்கிட்டே கடைசியில் சோகம் என்னான்னா, அந்த பொண்ணு நாலாம் வருஷம் படிக்கிறப்ப இது மாதிரி ஜிஹெச்க்கு ஒரு நாள் போய் வந்தப்ப, பஸ் ஆக்ஸிடண்ட்ல இறந்து போயிடுச்சு. நம்ம ராஜனும் சோகமாயி ஒரு வருஷம் படிப்பு அவருக்கு வேஸ்ட்டா போச்சு, நாங்க முடிச்சு அடுத்த வருஷம் தான் அவரு முடிச்சாரு! (இது மாதிரி ஆட்டோகிராப் சோகம் நம்மகிட்டயும் இருக்குங்க, சேரன்!)

இதை வச்சு கடைசி வருஷம் நாங்க போட்ட நாடகம் சும்மா கலக்கலோ கலக்கல். எங்க காலேஜ் பசங்ககிட்ட நல்ல பேரு வாங்கி கொடுத்துச்சு! அப்புறம் பாக்கியராஜ், அப்பதான் புதிய வார்ப்புகள்ல எல்லாம் கதாநாயகனா நடிச்சு, அவரு படம் சொந்தமா சுவரில்லாத சித்திரங்கள் எடுத்துக்கிட்டிருந்த நேரம். அவரை அறிமுகபடுத்தி வைக்கிறேன்னு ஒரு மெட்ராஸ் பிரண்டு கூட்டிகிட்டு போனான். அப்ப அவரு வீடு வள்ளுவர் கோட்டத்துக்கிட்ட இருந்திச்சு. அப்ப முத சம்சாரம், எனக்கு பேரு வரலைங்க, வீட்டுக்குப்போனப்ப, அவங்கதான்,'நாங்க காலேஜ்லருந்து சாரை பங்ஷனுக்கு கூப்பிட வந்திருக்கோம்னு' சொன்னப்ப, அவரு விஜயா கார்டன்ஸ்ல இருக்காரு ஸ்டோரி டிஸ்கஸன்லன்னு சொன்னாங்க. சரின்னு வந்து, அப்ப அந்த ஸ்டுடியோக்குள்ள எப்படி போகிறதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தப்ப தான் நம்ம கோயம்புத்தூர்காரு வந்தாரு, அவரு வேறே யாருமில்லை எங்களுக்கு முதல்லேயே பரீட்சையமான மணிவண்ணன், அவரு அப்ப சான்ஸ் கேட்டு அலைஞ்சுக்கிட்டு இருந்த நேரம். அவருதான் எங்களை ஸ்டுடியோ உள்ள போக வழிபண்ணி கொடுத்தாரு, அது எப்படின்னு அடுத்த பதிவில பார்க்கலாமா?

11 comments:

said...

cool letters

said...

சார், ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது!!

ஆனா, நம்ம சிவில் பிராஞ்சு வேணாம்னு எலெக்ட்ரானிக்ஸ்
எடுத்தது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!!


// பேரு ஜெயந்தி, ஊரு சேலம்ங்கிற தகவலை தவிர ஒரு மண்ணும் தெரியாது. இதை வச்சு தேடுவோமுன்னு, ப்ன்னீருக்கிட்டேயும் சும்மானச்சும் எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுன்னு உடான்ஸ் உட்டுட்டு போயாச்சு. //
நிறைய விசயம் இருக்கும் போல இருக்கிறது!

நல்ல பதிவு!! தொடருங்கள்!!

said...

சிவபாலன், முந்தைய தொடர்களை படிச்சிங்கீளா? நல்ல சுவாரசியமான நிகழ்வுகள், சம்பவங்கள் எழுதி இருக்கேன். இந்த தொடருக்குன்னு ஏகபட்ட ரசிகர் கூட்ட்டம் இருக்கு! முதல்ல அதை படிங்க, பின்னோட்டமும் போடுங்க அந்த பாகங்கள் எல்லாத்திலேயும்!

//நிறைய விசயம் இருக்கும் போல இருக்கிறது!// ஆமா சுவாரசியமா:)

said...

அடடா.., இந்தப் பதிவ எப்படி விட்டேன்?

மத்தபடி எப்பவும் போல நல்லா இருக்கு...

பெத்தராயுடு

said...

வெளிகண்ட நாதர்,
உங்கள் பழைய நினைவுகளை நல்ல சுவையாகச் சொல்லியுள்ளீர்கள். உங்களின் முன்னைய அரிதாரப் பதிவுகளை இதுவரை படிக்கவில்லை. இப் பதிவைப் படித்த பின் படிக்க வேணும் போல் உள்ளது.

நாடகம் போடும் அனுபவம் இருந்தால் இம்முறை நியூயோர்க்கில் [யூலை] நடக்கவுள்ள தமிழர் திருவிழாவில் ஒரு நாடகம் போடுங்களேன்!

நன்றி

வெற்றி

said...

!( ஆக அந்த வயசிலே இரண்டு இனத்துக்கும் இருக்கிற கவர்ச்சி ஒன்னு தான், தெரியாத ஆடவனோட பார்க்கணும் பேசணும்ங்கிற ஆசை அவகளுக்கும் இருக்கு!)//
:-)))))))))))))


அரிதாரத்தை நட்சத்திர பதிவில் ஒன்னு போடுங்க என்று கேட்கலாம் என்று இருந்தேன். போட்டுட்டீங்க. அப்படியே,
இந்த நட்பு மேட்டரில் இன்னாளும் தொடரும் புரியாமை பற்றி இந்த மஞ்சூர் ராசா கேட்ட கதையைப் படிச்சிடுங்க.http://nunippul.blogspot.com/2006/06/blog-post_15.html

விளம்பரம் இல்லைங்க :-), ஒத்த
சிந்தயனையாளர்களின் எண்ண பரிமாறல்கள்

said...

//நாடகம் போடும் அனுபவம் இருந்தால் இம்முறை நியூயோர்க்கில் [யூலை] நடக்கவுள்ள தமிழர் திருவிழாவில் ஒரு நாடகம் போடுங்களேன்!//
வெற்றி, சரியான டீட்டைல் கொடுங்களேன், முயற்சிக்கலாம்

said...

//!( ஆக அந்த வயசிலே இரண்டு இனத்துக்கும் இருக்கிற கவர்ச்சி ஒன்னு தான், தெரியாத ஆடவனோட பார்க்கணும் பேசணும்ங்கிற ஆசை அவகளுக்கும் இருக்கு!)//
:-)))))))))))))//உஷா,
எக்கசக்க ஸ்மைலி போட்டு சிரிச்சிட்டா, ஒத்துக்கிறீங்களா, இல்லையா :-)

இன்னும் படிக்கலை, கண்டிப்பா படிக்கிறேன்!

said...

வெளிகண்ட நாதர்,

//வெற்றி, சரியான டீட்டைல் கொடுங்களேன், முயற்சிக்கலாம்//

ஒவ்வொரு வருடமும் FETNA[Federation of Tamil Sangams of North America] நடாத்தும் தமிழர் விழா பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா? 2003 ம் ஆண்டு New Jersey ல் தானே நடந்தது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு venue. இம் முறை New York ல் நடக்கவுள்ளது.

இம்முறை நடக்கவுள்ள நிகழ்ச்சி நிரலைப் பார்க்க இந்த[கீழே] இணையத் தளத்திற்குச் செல்லுங்கள்.
இம்முறை வைரமுத்து, வாணிஜெயராம் ஆகியோரும் வருகிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் நாட்கள் அமெரிக்காவில் Long Weekend தானே. குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுங்கள்.

இம்முறை நடக்கவுள்ள நிகழ்வுகள்[இத் தளத்தில் பாருங்கள்]:

www.fetna2006.org

நீங்கள் இம்முறை நாடகம் போடுவதற்கு இப்ப late ஆகி விட்டதோ தெரியாது. எதற்கும் ஒரு முறை நீங்கள் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பாருங்களேன். அவர்களுடன் தொடர்பு கொள்ள கீழே குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லுங்கள். அவர்களின் contact infos அத் தளத்தில் உண்டு. அவர்களின் contact infos அத் தளத்தில் இல்லையென்றால் சொல்லுங்கள், நான் அவர்களின் தொலைபேசி இலக்கங்களை உங்களுக்குத் தருகிறேன். இப்போது பணிமனையில் உள்ளதால் அவ்விலக்கம் என்னிடம் கைவசம் இல்லை. வீட்டிற்குச் சென்றதும் தருகிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

said...

வெளிகண்ட நாதர்

//அவர்களுடன் தொடர்பு கொள்ள கீழே குறிப்பிட்ட தளத்திற்குச் செல்லுங்கள்.//

எனது முன்னைய பின்னூட்டத்தில் இணையத்தள முகவரியை எழுத மறந்துவிட்டேன். தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இதோ அந்த இணையத்தள முகவரி:


www.fetna.org

Thanks.

Best Regards,
Vettri

said...

தகவல்களுக்கு நன்றி, வெற்றி!