Monday, May 22, 2006

பிரபஞ்சத்தின் மூலம் பரம்பொருளே! -ஓரு விஞ்ஞான உண்மை!

அட நில்லுங்க, எங்க போறீங்க! என்ன ஆன்மீக சொற்பழிவு எதுக்கும் அடிபோடறனோன்னு பயப்படறீங்களா? ஆனா, அப்படி ஆன்மீகம் சொன்ன கருத்தை வலுவாக்கத்தான் இப்ப விஞ்ஞானம் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கு. அண்ட சராசரவெளி, பிரபஞ்சம் இது எல்லாத்துக்கும் முதற்காரணமான பரிபூரணபரம் பொருள் அந்த முதற்கண் கடவுள்ங்கிற ஆன்மீக தத்துவத்திற்கு இன்னும் அர்த்தம் புரிபடலை,ஆனா அதற்கான விஞ்ஞான விளக்கங்கள், விடைகள் இப்ப நிறைய கிடைச்சிக்கிட்டிருக்குன்னு, அப்ப அப்ப இந்த அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்குது. இதெல்லாம் தெரிஞ்சுக்குனும்னா, அணுவுக்கும் அணுவான பெளதீக உண்மைகள் உங்களுக்கு கொஞ்சம் புரிபடணும். அதாவது இதை 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானமும், பிரபஞ்சவியலும் ('Cosmology') கொஞ்சம் தெரிஞ்சா, இதெல்லாம் என்னா சொல்ல வர்றாங்கன்னு நமக்குப்புலப்படும். ஆக பொது ஜனங்களே, நமக்கு அடிப்படையா, நம்மூர்ல சொல்ற அந்த அன்மீக கூறலுக்கு உண்டான விஞ்ஞான உண்மை என்னான்னு, இந்த பக்கம் தொடரும் தேடலை, இந்த சயின்ஸ் மூலமா என்ன சொல்லவர்றாங்கன்னு தெரிஞ்சக்கலாம் வாங்க!

நீங்க எல்லாரும் மொட்ட மாடியிலே படுத்து தூங்கி இருந்தீங்கன்னா, ஒரு நிஜத்துக்கு சின்னபுள்ளையிலருந்து அலைஞ்சுருப்பீங்க! அதாவது வானத்திலே நிலா, நட்சத்திரம்னு, அண்டை வெளியை பார்த்து சில நேரம் ரசிச்சிட்டு அப்புறம், இதெல்லாம் என்னா, எங்கிருக்கு, என்னா கிரகம், நட்சத்திரம் அப்படின்னு தெரிஞ்சுக்க ஆசைபட்டிருப்பீங்க! பிறகு கொஞ்சம் மேலே போயி இதெல்லாம் எப்படி வந்தது, நாம் எப்படி பூமிக்கு வந்தோம், அப்படின்னு கற்பனைக்குதிரையை தட்டி விட்டுட்டு அப்புறம் விடை ஏதும் கிடைக்காம, இந்த பிரபஞ்சம், பிதா, பரம்பொருள் அப்படின்னு கோயில் காலச்சேபம் கேட்டுட்டு அதை அங்கனையே விட்டுருப்பீங்க. இல்ல சினிமா படங்கள்ல காமிக்கற நிலவு, பெண்கள், கவிதை, வானவெளி, நட்சத்திரம்னு பார்த்து சிலாகிச்சிட்டு விட்டுருப்பீங்க. இல்ல நிழல்கள் படத்தில வர ராஜேசேகர் மாதிரி , கஞ்சா அடிச்சிட்டு நடசத்திரங்களை பார்த்து மயங்கி, 'இது ஒரு பொன்மாலை பொழுது'ன்னு பாட்டுபாடி அப்புறம் அதை பக்கத்து வீட்டு பொண்ணு கேட்டு மயங்கி, அதை டாவுவுட்டுகிட்டு, இப்படியெல்லாம் பொழுது கழிச்சிருப்பீங்க. ஆனா விஞ்ஞான ரீதியா இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணிருக்க மாட்டீங்க. நீங்க இல்லேனா, அட்லீஸ்ட் நான் அந்த மாதிரி விட்டதை கொஞ்சம் படிச்சி தெரிஞ்சுக்கிட்டேன்னு தான் உங்கக்கிட்ட சொல்லிக்கலாமுன்னு இதை எழுதுறேன்!

முதமுதல்ல மக்கள், இந்த உலகம்னு எடுத்துக்கிட்டா, அதற்கு அடிப்படை என்னான்னு இயற்கையை ஆராஞ்சு, பஞ்சபூதங்களாகிய, நீர், நிலம், நெருப்பு, காத்து, வாயுன்னு தெரிஞ்சு அதை கொண்டாட ஆரம்பிச்சாங்க! ஆனா இன்னெக்கு நமக்கு அதை விட அதிகமா தெரியும், விஞ்ஞான ரீதியா! அதாவது எல்லாத்துக்கும் அடிப்படை என்னான்னா அணு, மூலம், பரிபூரண பரம் பொருள்!

இந்த அணுக்கள்னு சொல்ல வந்தாலே நீங்க எல்லாம் படிச்ச அந்த 'periodic table' தான் ஞாபகத்துக்கு வரும். அதாவது இயற்கையா கிடைச்ச கனிம பொருட்களின் மூலவஸ்துக்களை, அதன் அணுவின் அடிப்படை தொகுப்பில் இருக்கும் நியூட்ரான், புரோட்டான் எண்ணிக்கை தான் அது! அப்புறம் அதுகளுக்குள்ள இருக்கும் பதம், எதிர்பதம் மின் அணு தொடர்புகள்ல, பதமா இருக்கும் அணுவின்நடுப்பகுதியும்(Nucleus) அதற்கு எதிர்பதமா இருக்கும் மின் அசை(எலெக்ட்ரான்), இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். முதல்ல இதைத்தான் எல்லாரும் அடிப்படை, அணு, அப்படின்னு நினைச்சாங்க, ஆனா 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம், அதுக்கு மேலே போயி அந்த புரோட்டான், நியுட்ரான்கள் இன்னும் சிறிய துகள்களா இருக்குதுன்னும், அதுக்கு ஆங்கிலத்தில 'quarks' ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!
இந்த பெளதீக விஞ்ஞானத்திலே அணு மாதிரி உருவை ('Model') இப்படி சொல்றாங்க, எலெக்ட்ரான் அணுவின்நடுப்பகுதியை(Nucleus) சுற்றி தொடர் சுழற்சியில் சுற்றி வருவதாகவும், இந்த அணுவின் நடுப்பகுதியிலே நியூட்ரான், புரோட்டான்ங்கள் குதியாட்டம் போடறதாகவும், அந்த நியூட்ரான், புரோட்டான் களுக்குள்ள இருக்கும் 'quarks' என்னும் துகள்கள், கிலுகிலுப்பையை ஆட்டுனா அதுக்குள்ள இருக்கும் துகள்கள் எப்படி மேலே கீழே ஆடுமோ, அதுபோல ஆடிக்கிட்டிருக்குன்னு (மொத்ததிலே ஆங்கிலத்திலே இதுக்கு 'jiggle'னு பேரு, அதாவது ஒரு 'irregular motion')

இந்த 'quarks' அளவுன்னு எடுத்துக்கிட்டீங்கண்ணா மிக மிகச்சிறியது. அணுவின் அளவு ஒரு பங்குன்னா, 10000த்தில ஒரு பங்குதான் அணுவின்நடுப்பகுதி(Nucleus), அதே மாதிரி 100000 த்திலே ஒரு பங்கு தான் புரோட்டான், அதுல 'quarks', எலெக்ட்ரான் எல்லாம் 100,000,000 த்திலே ஒரு பங்கு, பார்த்தீங்களா எவ்வளவு சிறிசுன்னு!

சரி இப்ப எதுக்கு இந்த கணக்குன்னு கேட்கிறீங்களா, அதான் தொடர்ந்து அடிப்படையிலே எத்தனை பரம் பொருள் (Particle) இருக்குன்னு கண்டுபிடிக்கிறதுதான் இந்த பெளதீக விஞ்ஞானம்! இது வரைக்கும் 200 க்கும் மேற்பட்ட இந்த பரம் பொருள்கள் இருக்குன்னும்( ஆனா இது அடிப்படை அணுக்கள்இல்லை, அப்படி அடிப்படை அணுக்களின் தொகுப்பு), அதை தொடர்ந்து எந்த வடிவத்திலே இருக்குன்னு கண்டுபிடிச்சா நமக்கு இந்த பிரபஞ்சம் பத்தி கொஞ்சம் அதிகம் தெரிஞ்சக்க முடியும்!. புரியல்லை! சரி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்!

சரி 200க்கும் மேற்பட்ட பரம் பொருள்கள்னு சொன்னா, அதுக்கு அடிப்படையான பொருட்கள் என்னா அப்படின்னு நீங்க கேட்கிறது புரியுது, அதைத்தான் இந்த பரம் பொருட்களை (Particle) கொண்டான உலகம் மற்றும் அதனை பிடித்து கொண்டிருக்கும் தத்துவத்தை விளக்க அவங்க தொகுத்த மாதிரி உரு தத்துவம் தான் 'Standard Model Theory' அதாவது அனைத்து பரம் பொருள்களை விளக்கனும்னா, அதில ஒரு 6 'quarks' துகளும், 6 'lepton' (இது நம்ம எலெக்ட்ரான் மாதிரி துகள்கள்)அவைகளை அனைத்து செல்லும் விசை சாதன பொருட்கள் ('Force carrier particles') அதன் சிக்கலான கட்டமைப்பு விளக்கும் இந்த உரு தத்துவம் தான் இந்த பெளதீக விஞ்ஞானத்தின் மூலம்! அதை இப்ப ஒரு 70 வருஷத்துக்கு முன்னே கண்டுபிடிச்சாங்க. அதுவும் புது புது பரம் பொருட்களை(Paraticle) இப்ப தான் ஒரு 30, 40 வருஷத்துக்கு முன்ன தான் கண்டுபிடிச்சாங்க!

இந்த உலகம்ங்கிறது வேறெ ஒன்னுமில்லை, மலையிலருந்து மடுவரைக்கும் இந்த 'quarks' துகளும், 'lepton' துகள்களுமேன்னு சொல்லி முடிச்சிடலாமா, ஏன்னா அதானே அடிப்படை. ஆங்.. அதான் இல்லை! ஒவ்வொரு பரம் பொருளுக்கும்('matter particle') அதற்கு எதிர் பதமான பரம்பொருள்('antimatter particle')ன்னு ஒன்னு இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க!போச்சுடா இது வேறேயா!

ஆமா, அந்த பரம் பொருளுக்கு இருக்கும் குணாதிசியமாதிரியே அந்த எதிர்பத பொருளுக்கும் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க, ஆனா,எதிர்பத பொருளுக்கு மின்விசை எதிர்மறையா இருக்கும்னு கண்டுபிடிச்சாங்க. ஆனா அந்த இரண்டும் ஒன்னை ஒன்னு சந்திசிக்கிச்சுன்னா உண்டாகுமய்யா பிரளயம், அதுல இருந்து பிறக்கும் ஒரு புதுசக்தி ( 'When a matter particle and antimatter particle meet, they annihilate into pure energy!') இது தான் இந்த பிரபஞ்சம் தோன்ற மூலக்காரணம்!

இப்படி ஆரம்பமாகி சின்ன சின்ன துகள்கள்,அதற்கிடையே உண்டான விசைகள், பிறகு அதிலிருந்து வரும் பொருட்கள் இதை எல்லாம் ஆராஞ்சு அதன் ஒவ்வொரு போக்கினையும் கண்டறிஞ்சு, அடிப்படை பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதே இந்த பெளதீகம். அதுக்குன்னு அமைக்கப்பட்டிருக்கும் விசை கலங்கள் (Particle accelerator),அதன் மூலமா அனத்து வித பரம் பொருட்கள் அதன் தன்மைகளை கண்டறிந்து கடைசியில் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்கள் ( நம்ம கண்டறிஞ்ச X-ray, போட்டான்ஸ், கதிர்கள், மற்றும் அனைத்து பிரபஞ்ச கதிரியக்கங்கள் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிறது), விசைகள் எல்லாம் ஆராயந்து சில உண்மைகளை தெரிந்து கொள்வது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். இப்ப புரிஞ்சுதா இந்த பெளதீக உண்மை. இன்னும் இதை பத்தி தெரிஞ்சுக்குணும்னா, நிறைய தளங்கள் இருக்கு படிச்சு தெரிஞ்சுக்கலாம்!

சரி இதெல்ல என்ன விஷேசம்னு கேட்கிறீங்களா, ஆமா விஷேசம் சொல்றதுக்கு முன்னே விஷயம் சொல்லுனுமில்ல, நான் பாட்டுக்கு மேட்டர்,ஆன்டி மேட்டர்னு சொல்ல ஆரம்பிச்சு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இப்படி இந்த இரண்டு பொருட்களும் சந்திச்சு முட்டி மோதி உருவான ஒரு சக்தியால் உண்டானது இந்த பிரபஞ்சம்னு ஆரம்பிச்சா என்னை அடிக்க வரமாட்டீங்க, அதனாலதான் அதுக்கு பின்னாடி இருக்கிற இந்த பெளதீகத்தை சொல்லிட்டு மேற்கொண்டு விஷயம் சொல்லலாமுன்னு வந்தேன்!

அதாவது நான் சொன்ன அந்த பரம் பொருள் மற்றும் எதிர் பரம் பொருள் இதுவரைக்கும் கண்டறிந்ததில் சமனாகவும், எதிர்பதமாகவும் முக்கியமா ஒத்திசைவு ('Symmetry') கொண்டதுன்னு தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா இப்ப கண்டுபிடிக்கபட்ட உண்மை என்னான்னா, அந்த பொருட்கள் ஒத்திசைவு தன்மை கொண்டவை அல்ல (Assemytrical)என்பது தான்!

அதாவது சிகாகோவில் இருக்கும் 'Fermilab' என்ற ஆராய்ச்சி நிறுவனம், நான் கூறிய அந்த பரம் பொருட்களில் ஒன்றான, 'B-mesons' எனழைக்கப்படும் பரம்பொருளை இரண்டு ரூபத்திலும், அதாவது மேட்டர், ஆன்டி மேட்டர்களாக மாற்றி, பிறகு பரம்பொருளாக மாற்றும் இந்த 'Mixing' என்ற முறையில் அதன் பரம்பொருள், எதிர் பரம்பொருள் நிலையில் எடை வித்தியாசத்தை கண்டறிந்தனர். அதாவது அது பரம்பொருளாக இருக்கும் பொழுது ஒரு எடையும், அது எதிர்பரம்பொருளாக இருக்கும் பொழுது இன்னொரு எடையாக இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இது தான் நான் சொன்ன அந்த ஒத்திசைவு தன்மையற்ற (Assemytrical) ஒன்று! இதுவரை இந்த அறிவியலில் கூறப்பட்டு வந்த உண்மை சற்று புறம்பாகிறது! அந்த எடை வித்தியாசம் இதுவரை கண்டறியப்பட்ட 'B-mesons' பொருட்களை விட அதிகம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்! இது தான் விஷேஷம்! அதாவது இதுவரை 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம் சொல்லி வந்த தத்துவத்திலிருந்து மாறுபட்டது என்றும் அந்த பரம் பொருள், எதிர் பரம்பொருள்களுக்குண்டான சமநிலை தத்துவம் சரிவடைந்து விட்டது இன்னும் சில பிரபஞ்ச உண்மைகளை கண்டறிய துணைபுரியும் என்று கருதுங்கினறனர்

கடைசியிலே எவ்வளவு தான் விஞ்ஞான உண்மைகளை கண்டறிய முற்பட்டாலும் இந்த பிரபஞ்சம் பத்தியும், பரம்பொருள் பத்தியும் என்றுமே நிலைப்பாடான உண்மைகளை கண்டறிந்து இந்த பிரபஞ்சத்தை வெல்ல மனிதனுக்கு எத்தனைக் காலம் புடிக்குமோ? ம்.. தியான நித்திரையில் ஆழ்ந்து இறைவனை நிந்தி, பிரபஞ்சமும் பரம்பொருளும் விளங்கும், யாரோ சாமி தூரத்திலே சொல்ற மாதிரி தெரியுது! -:)

16 comments:

said...

எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்

said...

மீஸான்களுக்கு பரம் பொருள் என்று யார் பெயர் வைத்தது?

வஜ்ரா ஷங்கர்

said...

மீஸான்களுக்கு பரம் பொருள் என்று யார் பெயர் வைத்தது?

வஜ்ரா ஷங்கர்

said...

// 'Particle Physics'ங்கிற பெளதீக விஞ்ஞானம் சொல்லி வந்த தத்துவத்திலிருந்து மாறுபட்டது என்றும் அந்த பரம் பொருள் //

சார்,

நியூட்டனின் 3வதியில் மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறதா?

மிக அருமையான பதிவு!!

நன்றி!



// அதாவது சிகாகோவில் இருக்கும் 'Fermilab' என்ற ஆராய்ச்சி நிறுவனம் //


முடிந்தால் இங்கேயும் சென்று பார்கிறேன். ஏன்னா நம்ம இருக்கிறதும் சிகாகோவில்தான்

said...

நாதரே,

ரொம்ப நல்லா வந்திருக்கு உங்க கட்டுரை... நன்றி!

தெகா.

said...

ஆன்மீகம் தானோ என ஆச்சர்யப்பட்டுக் கொண்டே க்ளிக்கினேன் .. நல்லவேளை.. ஒரு அரிய அறிவியல் கட்டுரை :)

வாழ்த்துக்கள் ..
சுகா

said...

துளசி, சரியா தான் சொன்னீங்க, எல்லாம் அந்த ஆண்டவனக்கே வெளிச்சம்!

said...

வஜ்ரா, 'particles'னா பரம்பொருள் தான். மூலத்தை தானே ஆராயிராங்க! அதனலா தான் எல்லாத்துக்கும் மூலமானதை ஆன்மீகத்திலையும் பரம்பொருள்னு சொல்றாங்க!

said...

//நியூட்டனின் 3வதியில் மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கிறதா// சிவ பாலன், இது வரைக்கும் இல்லை, வந்தாலும் ஆச்சிரியப்பட வேணாம். விஞ்ஞானம் திரும்ப திரும்ப சொன்ன தத்துவங்களை ஊரிஜதபடுத்துவது தானே!

//முடிந்தால் இங்கேயும் சென்று பார்கிறேன். ஏன்னா நம்ம இருக்கிறதும் சிகாகோவில்தான்// கண்டிப்பா போய்ட்டு வாங்க, முடிஞ்ச போய் வந்ததை பதிவா போடுங்க!

said...

நம்மூரு ஆன்மிகம் pantheism எனும் வகையறாவை சார்ந்தது.விசிஷ்டாத்வைதிகள் ஆயிரம் வாதிட்டாலும் இந்துமதம் என்பது pantheism தான் என பல வெளிநாட்டு அறிஞர்கள் கருதுகின்றனர்.Pantheism த்தின் கோட்பாடுகள் சில பிரபஞ்ச தத்துவத்தோடு ஒத்துப்போவதாக நினைக்கிறேன். Universe is God என்பது ஐன்ஸ்டீனின் மதம்.Pantheism சொல்வதும் அதுவே.ஐன்ஸ்டீன் விதியை விஞ்ஞானபூர்வமாக நிருபிக்க முயன்றார்.கயோஸ் தியரி(Chaos theory) மூலம் அது தவறு என நிருபணமானாலும் பின்னாளில் கயோஸ் தியரியே தப்பாகலாம்.

ஐன்ஸ்டினின் நிருபிக்க முயன்ற Theory of everything(TOE) என்பது கடவுள்தான் என தோன்றுகிறது. TOE என்பத்ற்கு பதில் God என்றே அவர் சொல்லிவிட்டு போயிருக்கலாம்

டான் பிரவுனின் ஏஞெல்ஸ் அன்ட் டிமன்ஸில் matter,antimatter வைத்து அழகாக கதை சொல்லியிருப்பார்.பார்த்தீர்களா?

said...

தெகா, வருகைக்கு நன்றி! சரியாக வருமோன்னு நினைத்து எழுதியது! உங்களை மாதிரி ஆளுங்க படிச்சு நல்லா வந்திருக்குன்னா, சந்தோஷம் தான்!

said...

சுகா, ஆன்மீகம்னு ஆரம்பிச்சு விஞ்ஞானத்தை முடிச்சு போட்டது. செல்வன் சொன்னமாதிரி. ஆனா இந்த எளவு 'particle phaysics' ரொம்ப நாளா என்னை தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்த சப்ஜெக்ட், அதான் சரி சும்மா எழுதுவோம்னு எழுதுனேன், கடைசியிலே 'dry'யா ஆகிடலை!

said...

செல்வா, டாவின்ஸி கோட் தான் படிச்சுக்கிட்டிருக்கேன்! தெரியும் அந்த 'Angels and Demons' பத்தி. கண்டிப்பா வாங்கி படிக்கிறேன்!

ஆமாம் எவ்வளவு தான் விஞ்ஞானம் பேசுனாலும்... அது தான் கடைசி வரியிலே ஒரு பன்ச் வச்சேன் -:)

said...

வணக்கம் வெளிகண்டநாதர்!

இது ஒரு பெரிய தத்துவத்தின் ஒரு சிறிய நுனியைத்தொட்டுக் காட்டியுள்ளீர்கள்.பதிவைப்படிக்கும் போதே எனக்கு ஏஞ்சல்ஸ் & டெமோன் தான் நினைவுக்கு வந்தது,ஆனால் எனக்கு முன்னரே நம்ம செல்வன் வந்து அதையே சொல்லி இருப்பதை பின்னூட்டம் வரும்போது தான் தெரிகிறது.

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் இரண்டாம் பாகத்தில் பிரபஞ்சம் பற்றி சொல்லியுள்ளார் அதில் பிரபஞ்சம் தோன்றிய துவக்க காலத்தையே சக்தி வாய்ந்த தொலை நோக்கி மூலம் விண்வெளியில் உற்று நோக்கி புகைப்படம் எடுத்தாக ஒரு படம் போட்டுள்ளார் பாருங்கள்.மீசான்கள் போன்றே ஒரு நுண்ணிய துகள் உண்டு அதற்கு போசான் என்று இந்திய அறிவியல் அறிஞ்ஞர் சத்யேந்திர நாத் போஸ் பெயரை வைத்துள்ளார்கள்.அவர் தான் போசான் என்ற நுண்துகள் அணுவில் இருக்கிறது என்று ஐன் ஸ்டீனுக்கு கடிதம் வாயிலாக கூறியுள்ளார்.பரம் என்றால் முடிவற்ற அல்லது முழுமையான என்று பொருள்.இத்துகள்கள் முடிவற்றதா?

said...

வவ்வால், வருகைக்கு மிக்க நன்றி! இந்த ஆன்மீக தத்துவங்களுக்கு விஞ்ஞான் விளக்கம் உண்டான்னா, அது ஏதும் இல்லை. ஆனா ஏதோ ஒன்னுக்கொன்னு தொடர்பு இருக்கிறதை எல்லாம் அறிந்த ஞானிகளே ஒப்பு கொண்டிருக்காங்க. இந்த பிரபஞ்ச தேடல் மனுசுக்கு புரிபடும் வரை தொடர்ந்து இருந்துக்கிட்டிருக்கும். நான் இந்த பெளதீக உண்மைகளை எப்படி எழுதலாம்னு யோசிச்சப்ப, இந்த மாதிரி ஒரு 'Corelation' கொடுப்போன்னு சும்மா எழுதினேன்! மற்றபடி ஒன்னுமில்லை!

ஆமா, சத்யேந்திரநாத் போஸ் பத்தி நான் குவாண்டம் கம்ப்யூட்டர் எழுதனப்பையே சொல்லி இருந்தேனே, நீங்க படிக்கலையா?

//பரம் என்றால் முடிவற்ற அல்லது முழுமையான என்று பொருள்.இத்துகள்கள் முடிவற்றதா?// வஜ்ராவும், இதைத்தான் கேட்டார், எல்லாத்துக்கும் மூலமானது முழுமையா தானே இருக்கனும், அடிப்படை பொருள் தான் அந்த துகள், அப்படி தானே இந்த பெளதீகம் பார்க்குது! (நான் சொல்ல வந்தது எல்லாம் matter, and particle தான்!)

said...

அன்புள்ள வெளிகண்டநாதர்
அறிவியல் பற்றி எழுதுகிறீர்கள். மகிழ்ச்சி, ஆனால் இந்த பரம்பொருள்-மேசான் - லெப்டொன் என்றெல்லம் தயவுசெய்து குழப்பாமல் இருந்தால் நன்றாக இருக்கும். நிச்சயமாக இவை சம்பந்தமில்லாதவை. அப்புறம் உங்கள் விருப்பம்.
அருள்