Sunday, November 06, 2005

மலர்களே நாதஸ்வரங்கள்

என்னடா இவண் இவ்வளவு கவித்துமா தலப்பு வச்சுட்டு என்ன எழுதிருக்கப்போறானு பார்க்கறீங்களா. அதாங்க பூக்களோட என்னுடய சிறு வயது அனுபவங்கள் இருக்கே அது ஒரு தனி கதை. கூடிய மட்டும் இந்த பதிவிலே சொல்ல முடிஞ்சதெல்லாம் சொல்லிடறேன், அந்த சின்ன வயசிலே எனது பூக்கடை அனுபவங்கள் இருக்கே, அது சுகமான ஒன்னு. முதல்ல சும்மா வேடிக்கை பார்த்துட்டு, விஷேசமா தீனி பண்டங்கள் வாங்கி தின்னத்தான் எங்க பூக்கடைக்குப் போவேன். திருச்சி காந்தி மார்க்கெட்ல மேற்கு வாசல் நுழைவுல உள்ள ஒரு 30-40 கடைங்கள்ல எங்க கடையும் ஒன்னு. காலையில கடையை திறந்து வச்சு, பிறகு மொத்த கொள்முதல் செய்யற இடத்திலருந்து பூக்களை வாங்கி வந்து அதை மாலை, கதம்பம், மற்ற பூக்கள் சரம் கட்டி விற்பனை பண்ணனும். எப்பவுமே புதுசா வாங்கி வர பூக்களோட வாழ்க்கை ஒரு நாள் தான். அன்னென்னக்கி வாங்கற சரக்கை அன்னென்னக்கெ வித்து தீத்துடனும். இல்லேனா அதை அடுத்த நாளு குப்பையில கொட்ட வேண்டியது தான். பழய பூமாலைகள் சில நேரம் அடுத்த நாள் மதியம் வரை வச்சுருந்து வித்திடாலாம், அதுக்கு மேல தங்குனா அவ்வளவுதான். அதனால தான் இதுக்கெல்லாம், பெரிசபுள் குட்ஸ்னு வருமான வரிக் கிடையாது, ஆனா ரொம்ப ரிஸ்க்கான தொழில்.

பூக்கள்னு எடுத்துக்கிட்டா, ஒவ்வொன்னுக்கும் ஒரு குணம், மணம் உண்டு. இதுங்கள்ள ராஜா ரோஜாதான். செடியிலருந்து கீழே இறங்கினாலும் இதை சுத்திற தேனீக்களோட கும்பல் குறைவதில்லை. சில சமயங்கள்ல தேன் பருக அது பூக்களோட முட்டி மோதறப்ப நம்மல கொட்டற்தும் உண்டு. இந்த ரோஜா மாலைகள் எப்பவுமே விலை அதிகம். அதே நிறம் கொண்ட அரளிப்பூ மாலைங்க விலை குறைவு. சமயத்தில அரளி மாலங்களை ரோஜா மாலன்னு விக்கிரதுண்டு. ஏன்னா நிறம் கண்டு ஏமாந்துடலாம். வெறும் ரோஜாக்களையே வச்சு மாலை சுத்திட முடியாது, அதனால அதோட கூட சேர்ர பூ சம்பங்கி, இதை லில்லிப்பூன்னும் சொல்லுவாங்க, அவ்வளவு மணம் கிடையாது, ஆனா மாலையில ரோஜாவுக்கு நிகரா நிக்கும். செவ்வந்தியும் மாலையோட சேரும், ஆனா இந்தப்பூ வருஷம் பூரா கிடைக்காது. அதனால கேந்திப்பூ வச்சு மாலையை சுத்திடுவாங்க. இந்தப்பூவைத்தான் செந்ததூரப்பூவேன்னு ஸ்ரீதேவி 16 வயதினிலேல்ல அழகு பாடுனிச்சு. ஆனா இதை எந்த அம்மன் கோயில்லயும் பூஜைக்கு ஏத்துக்கிறதில்லை. பிறகு வாடாமல்லி, இந்தப்பூ 20 நாளானுலும் காஞ்சு போகாது. அதானலதான் இந்தப்பேரே. இன்னொரு முக்கியமானப்பூ மல்லிகை. இது ஒரு கோடைக்கால மலர். குண்டுமல்லி, மதுரமல்லி அப்படின்னு நிறைய வகைகள் உண்டு. இதுக்கு மயங்காத பெண்கள் கிடையாது. கண்ணதாசன் "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ" ன்னு எழுதுனான், சும்மா எதுகை மோனையா பாட்டு இருக்குட்டும்னுட்டு, ஆனா உண்மையில மயங்குறது பெண்கள் தான், மல்லிகையை எடுத்து முடிக்காத கூந்தல் கூந்தலே இல்லை, அந்த அளவுக்கு இது பிரசித்தம். இதேட கூட ஒட்டிக்கிட்டுப்போற இன்னெருப்பூ கனகாம்பரம். வாசமில்லா மலரிது, ஆனா வச்சா வசந்தம் வந்துவிடும். இன்னொருப்பூ முல்லைப்பூ, அதே மாதிரி ஜாதிப்பூ இதுங்களோட வாசம் எட்டு மைல் தூரம் அடிக்கும்.(என்னதான் பூக்களோட சினேகமா இருந்திருந்தாலும், அதை பொண்ணுங்க தலையில வச்சு அப்புறம் வர கூந்தலுடன் சேர்ந்து வரும் வாசனையே தனி தான், இதை கோயம்புத்தூர்ல படிச்சப்ப இந்த பூ வாசனைக்காக, அவினாசியிலருந்து பாப்பநாயக்கன் பாளையம் வரை சும்மானாலும் பஸ்ல போயிட்டு வரதுண்டு ) மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ஜாதி இந்த எல்லா பூக்களுமே மிகவும் மென்மையானவை, ரொம்ப பதவிசா எடுத்து நாத்துல கட்டணும். இதுங்க கிட்ட ரொம்ப வீரம் காட்டக்கூடாது, இல்ல காம்பு ஒடிஞ்சிடும்.

இந்த பூக்கள் கூட்டத்தோட ரொம்ப நெருக்கமா ஒரு பத்து வருஷம் தொட்டு, தூக்கி படுக்க வச்சு அன்பா பழகி இருக்கேன். அப்புறம் வாசனை திரவியங்கள். சந்தனம், புனுகு, அத்தர், பன்னீர், அப்படின்னு. இதையெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னால ராஜாக்கள் மட்டுமில்லாம் பிரஜைகளும் உபயோகித்து, குளித்துக் கொண்டாடிருக்காங்க. ஆனா இப்ப சாமி சிலைங்களை குளிப்பாட்டத்தான் உபயோகபடுது. அந்தக்காலத்தில நல்ல சந்தனம் கிடைக்கிறது கஷ்டம். சந்தனங்கிறது வெறும் மரக்கட்டை சந்தனம் தான், அதை வாங்க் சந்துக்கடை பக்கம் போகவேண்டிருக்கும். அப்பெல்லாம் சந்தனக்கட்டைங்கள கடத்தி கொண்டு வந்து விக்கிறதுக்குன்னு ஒரு கும்பல் இருக்கும் (ஒரு வேளை அப்பவே வீரப்பன் கும்பல் ஆப்ரேட் பண்ணிக்கிட்டு இருந்ததோ என்னமோ). அதை கடையில வச்சிருக்கமாட்டோம். தனியா வேற இடத்தில வச்சிருப்போம். கடையிலேயே புனுகு பூனையும் வளப்போம். அதுக்கு தினம் குடல் கறி வாங்கி வந்து போட வேண்டி இருக்கும். பூனையிலருந்து புனுகு எடுக்கிறது ஒரு தனிக்கலை.

பூக்கடையில நல்லா வியாபரம் ஆகணும்னா, நாலு கல்யாணம் வரணும் இல்லைணா நாலு எழவு விழும்னு. அப்புறம் வியாபரமே ஆகாத சில தமிழ் மாதங்கள் உண்டு, ஆடி மாசம் முக்கியமா. அப்புறம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, ஜனவரி புது வருஷ பிறப்பு, அப்புறம் பொங்கல், இந்த நேரங்கள் தான் உட்கார்ந்து நிமிர நேரம் இருக்காது. ஆயுதபூஜை வியாபரம் முடிச்சிட்டு அடுத்த நாள் விடியக்காத்தால வீட்டுக்கு வரும் போது முனியாண்டியிலேயோ இல்ல ஆறுமுகம் ஹோட்டல்ல வாங்கி சாப்பிடற பிரியாணி ரொம்ப பிடிக்கும்.

நான் முதல்ல சொன்ன மாதிரி காலயிலே கடையை திறந்து வக்க 6 மணிக்கெல்லாம் போகணும். அப்புறம் பூக்களை சந்தையிலருந்து கொள்முதல் செஞ்சு கடையில கொண்டு வந்து போடனும். அதுக்குன்னு வாங்கி வர ஆளுங்க இருப்பாங்க. சில சமயம் நானும் போயி வாங்கி வர வேண்டி இருக்கும். இதை விட பூக்கள் மலிவா இருக்கும்னு சில நேரங்கள்ல ஸ்ரீரங்கம் போயி வாங்கி வருவேன். பிறகு 8 மணிக்கு வீட்டுக்குப் போயி குளிச்சு சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடம் போயிடுவேன். இப்படி போயிட்டுருந்தப்பத்தான் ஒரு சுவையான் சம்பவம் நடந்துச்சு.

அப்பெல்லாம் பண்டமாற்று முறைதான். வாரத்துக்கு இரண்டு நாளக்கு அதாவது செவ்வாய், மற்றும் வெள்ளி சில ஹோட்டல்ங்களுக்கு நாங்க பூ மாலைக்கொடுத்துடுவோம், அவங்க அப்பப்ப காபி, டிபன் அப்படின்னு எங்களுக்கு கொடுத்து கழிச்சிடுவாங்க. இதுக்கு ஹோட்டல் காரங்களே கணக்கு வச்சுருப்பாங்க. பொதுவா எங்க ஞாயினா சீட்டு எழுதி கொடுத்தனுப்புவாரு, "வரும் சின்ன பையன் வசம் இரண்டு தோசையும், ஒரு காப்பியும் கொடுத்து அனுப்பவும்" னு நானே சில நேரம் அப்படி வாங்கி வந்திருக்கிறேன். எங்க ஞாயினாவும் சாப்பிட்டுட்டு, எனக்கும் சாப்பிட கொடுப்பார். ஆனா ரெகுலாரா வாங்கி சாப்பிட மாட்டார், எப்பவாது இது மாதிரி வாங்கி சாப்பிடுவாரு. இப்படி போயிட்டுருந்தப்ப தான், நான் காலையில கடை திறக்க போகும் போது, எங்க கடையில ஷ்ரீப்புன்னு ஒருத்தர் வேலை பார்த்துட்டுருந்தார். என்னவிட ஒரு ஏழெட்டு வயசு கூட இருக்கும். சின்னவனாலும் நான் முதலாளியாச்சே. ஒரு சீட்டுல எங்க ஞாயினா எழுதி கொடுக்கிற மாதிரியே எழுதி அவென்கிட்ட கொடுத்து, தோசை, குஸ்கா குருமா எல்லாம் வாங்கி தினமும் சாப்பிட்டுகிட்டுருந்தேன். அவனும் எனக்கு தினம் வாங்கி கொடுத்துக்கிட்டுருந்தான். ஒரு நாளு எங்க ஞாயினாவே எழுதி கொடுத்தப்பனுச்சப்ப, அந்த ஹோட்டல்காரங்க சொல்லிட்டாங்க, ஏற்கனவே உங்க கணக்குல நீங்க கொடுத்த பூவுக்கு அதிகமாவே வங்கி சாப்பிட்டுட்டீங்க அதனால காசு கொடுத்த தான் மேற்கொண்டு தரமுடியும்னுட்டாங்க. என்னடா நம்ம எப்ப இவ்வளவு வாங்கி சாப்பிட்டோமுனு அலசி பாத்தப்பதான் நம்ம சாப்பிட்ட கதை அம்பலமாச்சு. அப்புறம் வீட்டுக்கு வந்து விழுந்தது பாருங்க பூசை. இப்ப நினைச்சாலும் தாமாஷா இருக்கும் போங்க

ஆரம்பத்தில சின்னவனா இருந்தப்ப வெறும் ஞாயித்துக் கிழமைகள் தான் கடைக்குப் போவேன். ஏன்ன சாய்ந்திரம் ஒரு 4-5 மணிக்கெல்லாம் கடையை அடைச்சிட்டு ஏதாவது ஒரு சினிமாவுக்கு போயிடலாம். பொதுவா எங்க ஞாயினாவோட கடையில வேலை செஞ்ச்கிட்டுருந்த இன்னொரு பெரியவரோட சேர்ந்து, எம்ஜிஆர் படத்துக்குப்போயிடுவோம். படம் பாத்திட்டு வீட்டுக்கு திரும்பும் போது மனசெல்லாம் பயம் தான். ஏன்னா அம்மாகிட்ட அடி விழுமே. எங்க ஞாயினாவுக்கும் எங்க அம்மாகிட்ட பாட்டு விழும், பையனை சினிமா கூட்டிடுப்போயி கெடுக்கிறீங்கன்னு. அப்புறம் தூங்கி எழுந்தா போயே போச்சு. முழுநாளும் கடைஅடைப்புன்னு பாத்தா வருஷத்தில ரெண்டே நாள் தான். ஒன்னு ஆடும் பல்லக்கு, இன்னொன்னு சந்தனக்கூடு. ஒன்னு இந்துக்கள் கொண்டாடுகிறது. இன்னொன்னு முஸ்லீமுங்க கொண்டாடுகிறது. ஏன்னா இந்த பூக்கடை சமுதாயம் இந்த இரண்டு பேரையும் கொண்டது. எவ்வளவு அன்பா ஒருத்தருக்கு ஒருத்தர் இணைஞ்சு அழகா வாழ்ந்தாங்க. மதக்கலவரம்னா என்னான்னு தெரியாது அந்தக்காலத்திலே. வளர்ந்து பெரியவனாதும் தான் மண்டைக்காடு, கோயம்புத்தூர் கலவரம்னு தெரியவந்தது. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அனைவரும் நாலுகாசு சம்பாரிக்கணும்னு, எல்லாரும் நல்லாருக்கணும்னு நினச்சு வாழ்ந்தாங்க. அதெல்லாம் இப்ப நினக்கும் போது நாம வாழ்ந்ததும் ஒரு பொற்காலம்தான்னு தோணுது.

11 comments:

said...

உதயகுமார்,

உண்மையா அப்ப பொற்காலமேதான். இந்த குண்டு வெடிப்பு என்னன்னு நமக்கு அப்பத் தெரிஞ்சதா? இல்லையே.

அதுசரி. அந்தப் புனுகுப்பூனை கதையைச் சொல்றது.

said...

//அதுசரி. அந்தப் புனுகுப்பூனை கதையைச் சொல்றது. //

அது கொஞ்சம் ஏ டைப்பு சாமாச்சாரச்சே, அதெப்படி பப்ளிக்கா...

said...

இங்கே எல்லாரும் வயதுவந்தவர்கள்தான், அஞ்சலியைத்தவிர.

பூடகமா எழுதுங்க. அவுங்கவுங்க கற்பனையைத் தட்டிவிட்டுரட்டும்

said...

நீங்க சொன்னா சரி, ஆமா யாரது அஞ்சலி? பேபி ஷாலினி தங்கையா?

said...

உதயகுமார்,

அஞ்சலிதான் நம்ம தமிழ் வலைப்பதிவாளர்களிலே ச்சின்னக்குட்டி. வயசு இந்த டிசம்பருக்கு 7 ஆகப்போகுது.

said...

பாலக்கரை பாலரே,

தங்களின் அனுபவங்களை நன்கு பகிர்ந்து கொண்டீர்கள். சிறப்பாக இருந்தது பதிவு. எங்களுக்கும் இதுபோல ஆட்டோகிராப் உண்டு. ஒருநாள் பகிர்ந்து கொள்வோம்.

said...

//இதை படிக்கும் போது ஒருவருடைய
நஷ்டம் இன்னொருவருக்கு எப்படி லாபம் என்பதை தெரியப்படுத்துகிறது//

பல்லவி அவர்களே, லாப நஷ்ட கணக்குப் பார்த்தால் சில தொழில்களையே செய்ய முடியாது. ஆடு அழுகிறதே என்றால், கறி கடைகாரன் பொழைக்க முடியாது.

said...

துளசி, அஞ்சலியை அறிமுக படுத்தியதற்கு நன்றி. புனுகு எடுக்கிறது அவ்வளவு ஈசியான காரியம் இல்லை. பூனையை பக்குவமா கூண்டுக்குள்ளருந்து பின்னங்கால் இரண்டையும் பிடிச்சு, அதன் மர்மதேசத்தில் வழித்தெடுப்பது தான்.

said...

பாலக்கரை பால்யத்தை பார்வையிட்ட மூர்த்தி அவர்களுக்கு நன்றி

said...

பாபா...நல்ல பதிவு. பூக்களோடயே குடித்தனம் நடத்தியிருப்பீங்க போலிருக்கு.

ரொம்ப அதிகமா தோசை குஸ்கா குருமா எல்லாம் வாங்கி சாப்புட்டுடீங்களா? பூசை பலமா இருந்திருக்கும் போல...

//ஒன்னு ஆடும் பல்லக்கு, இன்னொன்னு சந்தனக்கூடு. // சந்தனக்கூடு தெரியும்; பாத்திருக்கேன். அது என்ன ஆடும் பல்லக்கு. கேள்விபட்டதே இல்லியே?

said...

குமரன், தோசை, குஸ்கா, குருமா எல்லாம் வாங்கி சாப்பிடறப்ப ரொம்ப ஜாலி தான் , அப்புறம் விஷயம் தெரிஞ்சு வாங்கி கட்டிக்கிட்டப்ப தான் சீ இந்த பழம் பளிக்கும்னு ஆயிடுச்சி.

ஆடும் பல்லாக்கு, ஸ்ரீரங்கத்தில ரெங்கநாதரை பல்லாக்கில ஏத்தி அதை அசஞ்சி ஆடி எடுத்துட்டு ஊர்வலம் வருவாங்க அது ஒரு பெரிய விஷேசம். எங்க பூக்கடை காரங்க அதுக்கு ஸ்பான்ஸர், அதனால சாமி பிரசாதம் தனியா ஸ்பெசலா கடை தேடி வந்துடும்.