Tuesday, April 25, 2006

காசேதான் கடவுளடா!

நான் டெல்லியிலே இருந்தப்ப, தருமி எழுதிய பதிவு மாதிரி'பிள்ளையாரும் பால் குடித்தார்…' மாதிரி ஒரு விஷயம் பத்து வருஷ முன்ன நடந்தது. அதை வெகுவா நம்புற ஜனங்கள் மட்டுமில்லாம, மெத்த படிச்ச நம்ம ஆளுங்களும், அறிவியல் தர்க்கம் பண்றவங்களும் 'capillary action' ன்னும், 'surface tension' னும் போட்டுவுட்டுகிட்டு அதை justify பண்ணிக்கிட்டு இருந்தை இப்ப நினைச்சிக்கிட்டாலும் சிரிப்பா தான் வருது! இந்த கதை டில்லின்னு இல்லாம லண்டன் வரை நம்மூரு பிள்ளையாரை வச்சி விளையாண்டது பத்தி சில பேரு ஆச்சிரியபடலாம். இதெப்படி மேலை நாட்ல இந்த கூத்து அப்படின்னு. ஆனா இந்த சாமி, கோவில் விஷயங்க இங்கே அமெரிக்காவிலே எப்படி ஒரு பெரிய வியாபாரமா வியாபிச்சு இருக்குங்கிறதை பத்தி ஒரு சின்ன பார்வை பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு. அது எப்படி இங்கே உள்ள சர்ச்சுங்க எல்லாம் ஒரு பெரிய கார்ப்ரேட் வியாபாரத்தலமா இயங்கிக்கிட்டு இருக்குங்கிறதை, சுவராசியாமா நீங்க பார்க்கலாம். சாமி, கோயிலு, பூஜை, புணஸ்காரம்னு காசு புடுங்கும் கூட்டம் நம்ம ஊர்ல மட்டுமில்லை, இங்கேயும் தான், அதுவம் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில எம்பிஏ படிச்சிட்டு எவ்வளவு பெரிசா செஞ்சுக்கிட்டிருக்காங்க தெரியுமா?

நம்ம சினிமாக்கள்ல காமிக்கற மாதிரி மரத்துக்கு மஞ்சத்துணியை கட்டிவிட்டு காசு பார்க்கும் கும்பலுங்க நிறைய, அதே மாதிரி அங்கங்க திடீர் கோவில் முளைச்சு பூஜை, பாட்டுன்னு அமர்க்களம் படுத்துவாங்க. கவுண்டமணி ஒரு படத்தில, மஞ்சத்துணியை மரத்துக்கு மரம் கட்டிவிட்டு பிறகு ஸ்கூட்டர்லயும், காருலயுமா போயி உண்டியல்ல இருந்து கலெக்ஷன் பண்ணி வரதை காமிச்சி காமிடி பண்ணது ஞாபகம் இருக்கா! இங்கேயும் ஆக மொத்தத்தில அதே மாதிரி தான், ஆனா என்ன, எல்லாமே கார்ப்ரேட் பிஸினஸ் ஸ்டையில்ல நடக்கிற ஒன்னு, எப்படின்னு பாருங்க!

இந்த வில்லோ கிரீக் கம்யூனிட்டின்னு (Willow Creek Community) ஒரு இடம், இல்லினீயாஸ்(Illinois) மாகாணத்திலே, 'south Barington' ங்கிற ஊருல இருக்கிற அந்த சர்ச்சு, ஒரு ஷாப்பிங் மாலுக்கு இருக்கிற அத்தனை வசிகளோட, அதாவது 'food court' லருந்து 'basket ball court' வரை, அப்புறம் சின்ன சின்ன cafe, starbucks வோடது, பெரிய ராட்சஷ டிவி ஸ்கிரீண், அப்புறம் 4000 காருக்கு மேலே நிறுத்த உண்டான பார்க்கிங் ஸ்பேஸ், டிஸ்னிலேண்ட் தோத்துச்சு போங்க! ஆனா, நம்ம ஊரு மாதாக் கோவிலு மாதிரி கூறிய கோபுரங்களோட, இல்லை பெரிய சிலுவைகள், ஞானஒளியில சிவாஜி அடிக்கிற பெல்லு, அப்புறம் அந்த சர்ச்சுக்களுக்கே உரிய கலர் கலரா கண்ணாடி ஜன்னல்கள் இது எல்லாம் எங்கேப்பா இந்த சர்ச்சுலன்னு தேடினீங்கண்ணா, ஒன்னும் கிடைக்காது(இப்பவும் நிறைய பழமையான அந்த கோத்திக் கலைகளுடன் கூடிய புரதான யேசுகிறித்துவ ஆலயங்கள் நிறைய அமெரிக்காவில பார்க்கலாம், இருந்தாலும், நான் சொல்ற இந்த சர்ச்சுங்க கொஞ்சம் மார்டன், இது தான் இன்றய கார்ப்ரேட் அமெரிக்காவின் மத சின்னம்! அதுதான் பெருகி நிக்குது!)

மேலே சொன்ன சர்ச்சுகளில், இந்த கார்ப்ரேட் தீம் வெறும் உருவ வடிவங்கள், வசதிகள்ல மட்டும் இல்ல, அதனுடய நிர்வாகமும் கார்ப்ரேட் ஸ்டைல் தான். கோவிலின் தூதறிக்கையிலருந்து ('Mission statement') அதாவது, 'நாத்திகர் அனைவரையும் யேசு கிறித்துவன் வழி நடப்பவராக செய்வதே', அப்புறம் ஏழு வழி தந்திரம் மற்றும் பத்து முக்கிய கடவுள் நம்பிக்கை எண்ணங்கள் வரை எல்லாம் உண்டு. இதுக்குன்னு ஹார்வோர்ட் மற்றும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் எம்பிஏ ('MBA') படித்த மாணவர்களை கொண்ட நிர்வாகம் மற்றும் இதற்கென கன்செல்டன்ஸி நிறுவனம்! இது மாதிரி கார்ப்ரேட் உலகத்திலருந்து கடன் வாங்கி வழிநடத்தபடும் செயல் முறைகள் தான் இன்னைக்கு இந்த மாதிரி சர்ச்சுகள் இயங்கும் ரகசியம்! ஆக இந்த கோவில்கலின் மூத்த மத தலைவர்கள் CEO, COO என அழைக்கப்படுகிறார்கள், பூஜைபண்ணும் பாதிரியார்கள், 'Service Directors' என அழைக்கப்படுகிறார்கள். பிறகு இது போன்ற குட்டி குட்டி கோவில்களில் பிரசங்கம் பண்ணுபவரை 'Pastor' என அழைப்பார்கள், அவர்கள் தான் இப்பொழுது 'Pastorpreneur' காக கருதப்பட்டு, நல்ல ச்ம்பாத்தியம் ஈட்டுகின்றனர். அப்படியே தங்களை அழைத்துக்கொள்ளவும் முற்படுகிறார்கள்.

1975ம் ஆண்டுக்குப்பிறகு, மக்கள் வெகுவாய் சர்ச்சுகளுகு வருவது குறைந்தது கண்டு, இதுக்கு காரணம் என்னவென்று, இந்த வில்லோ கிரீக் சர்ச்சின் நிறுவனர் அறிய முற்பட்டார். அதன்படி ஒரு இன்ஃபார்மல் சர்வே எடுத்து, அதற்கு தகுந்த மாதிரி மாற்றங்களை கொண்டு வந்தார். அதாவது முதலில் கிறித்துவ மத பிம்பங்களான சிலுவை மற்றும், அந்த கலர் கண்ணாடி ஜன்னல்கள் என்றிருந்த பிம்பங்களை உடைத்து, பூஜை, பிரசங்கங்களை நாடக இசை வடிவிலே பெரிய வீடியோ திரைகள் அமைத்து மக்களின் உண்மையான பிரச்சனைகளை எடுத்து பேசி தமது போதனைகளில் ஒரு புதுமை புகுத்தினார். அதாவது இழந்த வாடிக்கையாளர்களை மீட்கும் வியாபார தந்திரமாகவே இது ஆயிற்று!

அடுத்து 'user-friendliness' என்ற உபயோகிப்போர் நட்பு எனும் அடுத்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக கோவிலில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஊடுறவச் செய்தார்! மதம் காண வரும் புதியோருக்கு எல்லா வசதிகளும் ஒழுங்கு முறையில், அதாவது சரியாக் சீர் செய்யப்பட்ட புல்வெளி மேடைகள், கார்கள் ஒழுங்காக நிறுத்த உண்டான வசதி என்று ஓவ்வொரு கோவில் சேவையும்(கரசேவை முதற் கொண்டு) திறம்பட செய்து தந்த வரவேற்பு மக்களை பெரிதும் கவர்ந்தது! அது மட்டுமில்லை, இந்த கோவிலின் மீது ஈடுபாடு வரக் காரணம், சில தன்விருப்ப கூட்டத்தினராலும் (மோட்டர் சைக்கிள் ஓட்டுபதில் விருப்பம் உடைய கூட்டத்தினர், இல்லை தன் எடையை கண்காணிக்கும் கூட்டத்தினர் என்று)மற்றும் குடிகாரர்களை, செக்ஸ் அடிக்ட்களை திருத்தி ஆலோசனை வழங்கி பொது சேவை செய்வ தாலும், கார் இல்லோதருக்கு தானமாக வரும் கார்களை பழுதுநீக்கி இல்லாதோருக்கு வழங்கிய தாலும், அனைவருக்கும் ஒரு ஈடுபாடு வரத்தொடங்கியது. அதுவுமில்லாமல், சிறு குழந்தைகள் பராமரிப்பு, வாலிப வயதினருக்கென பிரத்தியோக ஆடிட்டோரியங்கள் என்று அனைத்து வசதியும் செய்து கொடுத்து இந்த 'user-friendliness' கொள்கையை கடைபிடித்து அடுத்த வியாபர தந்திரம்!

இது மட்டுமில்ல, நான் மேலே கூறியது போல், சில சர்ச்சு வளாகங்கள் பெரிய ஷாப்பிங் மால் போன்ற அத்தனை வசதிகள், பேங்கிலிருந்து, மருந்து கடைகளிருந்து, பள்ளிக்கூடங்கள் என அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு கார்ப்ரேட் உலகம்! கோவிலிலும் பூஜைகள் வயோதிகருக்கு தனி நேரம், இளைஞருக்கு தனி நேரம், கல்யாணமாகாதோர் என வெறும் புதன் ஞாயிறு கிழமைகள் மட்டுமில்லாது அனைத்து நாட்களிலும் கோவில் திறப்பாடு! இது போன்ற வசதிகளுடன் அமெரிக்கா முழுமையும் நிறைய சர்ச்சுகள் வர தொடங்கி உள்ளன. அவை எல்லாம் மக்களை கவர சில பூஜைகளில் பிரபலங்களையும், பெரிய விபத்துகளில் மாண்ட உறவினர்களையும் அழைத்து சிறப்பு பூஜைகள் செய்வது , மற்றும் டிவி போன்ற ஊடகத்துறையிலும் ஒளிபரப்பு செய்து அதிக பட்ச மக்களை அடைய வழி செய்து அனைத்து வியாபர தந்திரங்களையும் செய்கின்றன.

இந்த வியாபார யுக்தியில் வெற்றி பெற்ற சில கோவில்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 15% மேலாக செலவிட்டு தொழில்நுட்பங்களையும் புகுத்தி உள்ளன என்றால் ஆச்சிரியத்திற்கு இடமில்லை. பெரிய பெரிய வீடியோ புரெஜக்ஷன்கள், மற்றும் கம்ப்யூட்டர், இசைபதிவுக்கூடங்கள் என எல்லாமே ஒரு மாயாஜாலம் தான்! இவ்வளவு பெரிய வசதிகளோடு, அத்தனை வியாபார தந்திரங்களால் இயங்கும் இந்த கோவில்களின் ஆண்டு வருமானம் ஐந்து ஆறு கோடி டாலர்களுக்கு மேல், அதில் வேலை பார்க்கும் நபர்கள் ஐந்நூருக்கும் மேலே! இந்த கோவில் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல் Finance, HR என அத்தனை துறைகளும் உள்ளன!

இப்படி விஷ்வரூபமாக வளர்ந்தாலும் தொல்லை தான், மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களை போல! தியானமோ அல்லது தொழ வரும் பக்தர்கள் அனைவரும் தனி தனியாக பிரத்தியோக கவனம் தங்கள் மீது பிரசங்கம் செய்யும் பாதிரியார்களைடமிருந்து வர வேண்டும் என வரும் எதிர்பார்ப்புகளை சமாளிக்க முடியாமல் போகிறது. ஏனென்றால், ஒரு பெரிய ஸ்டேடியம் போல 5000, இல்லை 6000 பேருக்கு இறை கூட்டம் நடத்தும் போது இது முடிவதில்லை. ஆகையால் சிறு சிறு கூட்டங்களாக பிரித்து இறைக்கூட்டம் நடத்தி வாடிக்கையாளர்கள் சிதறாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டி உள்ளது இந்த கோவில் நிறுவாகத்தினருக்கு! மற்றும் நான் ஏற்கனவே கூறியது போல் இறைகூட்டங்கள் வகைபடுத்த படுகின்றன, அதாவது ஞாயிற்று கிழமைகளில் பொதுவானவர்களுக்கும், புதன் கிழமைகளில் ஆழமாக இறையான்மையில் ஈடுபடுவர்களுக்கும், புதன்கிழமையில் புதியதாக சமயத்தில் நுழைந்தவர்களுக்கும் என வகை படுத்தி புது நிர்வாக யுக்தியுடன் நடத்தபடுகிறது! மேலும் ஆங்காங்கே கிளைகோவில்களை தோற்றுவித்து வழிபாடு சேவைகளை உண்டாக்குதல் ('a form of religious franchising') ஆக வியாபார தத்துவத்தில் அடங்கிய அத்தனை திட்டங்களும், தொலைநோக்கு பார்வைகளும், வழிமுறைகளும் பின்பற்ற பட்டு ('Strategic planning and strategic vision') நடத்தபட்டு வருகிறது!

இது மட்டுமல்ல, நான் கூறிய இந்த கோவில், இந்த கோவில் நிர்வாக முறையை திறம்பட நடத்திட ஒரு தனியே கன்செல்ட்டிங் ஆர்மே நடத்துகிறது. இதன் கீழ் பதியப்பட்ட கோவில் கள் பத்தாயிரத்துக்கு மேலே! மேற்கொண்டு சிறப்புக்கூட்டங்கள் நடத்தி, அதில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டு, தலைமை பிரசங்கராக புகழ் பெற்ற அமெரிக்க வியாபார ஆசான் 'Jim Collins', மற்றும் 'Bill Clinton' போன்றோரை வைத்து, இந்த சிறப்பு கூட்டங்ளால் சம்பாரிக்கும் தொகை 2 கோடி டாலருக்கு மேல்! இக்கோவில்கள் வியாபார உலகத்தின் தந்திரங்களை கடைபிடிப்பதோடு, அதை திரும்ப அவ்வுலகுக்கே கற்றும் கொடுக்கின்றன(reversal businesses), எப்படி என்பதை வணிக மேதை 'Peter Drucker' கூறுகிறார், இக்கோவில்கள் எப்படி புதியதாய் வழிபட ஆரம்பிப்போரையும், volunteer களையும் ஊக்கபடுத்தி ஒரு நல்ல ஊழியனாக மாற்றுகின்றன, பிறகு திறம்பட்ட தொழிலாளராக மாற்றுகினறன. இந்த கொள்கை (Motivation factor) வியாபர உலகுக்கும் மிகத்தேவை என்கிறார்!

ஆக இம்மாதிரி கோவில்களும் தொழுகைகளும் முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்டது இந்த மண்ணிலே! இது தொன்று தொட்டு அமெரிக்காவில் நடப்பது தான். அந்த காலத்தில் வந்து குடியேரியவர்கள் மதக்குருமார்களும், வியாபார கும்பல்களும் தான். அக்கால 'Methodist preachers', அதாவது 'Fransisco' போன்ற மதத் தலைவர்கள் வியாபர நுட்பங்களை ('Marketing Technics') கையாண்டு மதத்தை பரப்பினார்கள். அது இப்பொழுதும் தொடர்கிறது, எல்லாமே ஒரு வியாபாரமாய்! அவர்கள் கூரும் கூற்று கடவுள் 'உன்னை படைத்தான், உன்னுடய சிறந்த உன் தேவைகளை நீயே பூர்த்தி செய்து கொள்ள' ஆம் உண்மை தான், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, 20 லட்ச டாலர்களில் வீடும், 10 லட்ச டாலர்களில் பறக்கும் விமானம் வைத்துக் கொண்டு காசு பார்க்கும் இந்த பாதிரியார்கள் கடவுள் படைத்த மனிதர்கள்!

இத எதுக்கு பதிவு பண்ணேன்னா, நம்ம ஊர்லயும் இந்த professional அநியாம் நடக்கத்தான் செய்து, காஞ்சி மடம் முதக்கொண்டு, தினிகரன் கூட்டம்னும், அம்மா அமிர்தாமாயினினும், சாமி பிரேமதாசான்னும் மேல்மருவத்தூர்ன்னும் நடக்கிறது நடந்துகிட்டு தான் இருக்கு!. விவேக் போட்டு காமிக்கிற காமடிங்க, இப்படி ஸ்டைலா சம்பாரிக்கும் டெக்னிக் நம்ம ஊர்லயும் வந்தாலும் ஆச்சிரியபடறதுக்கில்லை. மேலை நாடா இருந்தா என்ன, கீழை நாடா இருந்தா என்ன, காசேதான் கடவுளடா!

16 comments:

said...

பெங்களூர் ஹரே கிருஸ்னா கோவில் நீங்கள் சொல்வதுபோல் கடைவளாகங்கள், 3 D திரையரங்குகள் என விளங்குகிறது.

said...

'அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா'

இதானே அடுத்தவரி:-)))

நல்ல 'விவரமான' பதிவு.

said...

"When the first rogue met the first stupid, the former became a missionary and the latter his follower" //

- இது நான் சொல்லலீங்க; யாரோ சொன்னதை நான் வாசிச்சது. சரியா தப்பான்னு தெரியாதுங்க :-))

said...

நல்ல பதிவுங்க...

விளக்கமாகவும் தேவையான தகவல்களும் படம்களும்னு ஒரு பத்திரிக்கைக்குறிய பாங்குடன் அருமையா எழுதறீங்க....

கலக்குங்க! :)

said...

A good Blog!! Worth Reading!!

In America, lot of people are CEO's (Christmas & Easter Only - Visits Church). But these churches are trying their level best to make a market.

In Coimbatore, there is a church, where every member has to pay 10% of his or her salary every month. In turn Church will provide functions, parties, classes etc.. etc.. Now this church has built Rs 10 crore structure in the heart of the city with land value of Rs 15 crore.

said...

நாதரே, மிக அருமையா செஞ்சீருக்கீங்க பாரட்டுக்கள்...! உங்களுக்கு ஒன்று தெரியுமா "கடவுள் வியாபாரம்" தான் இன்றைய நாளில் மிக லாபகரமான வியாபாரம். இங்கு ஜியார்ஜியாவில் ஒரு தெருவுக்கு ஐந்து அல்லது ஆறு சர்ச்சுகள் இருக்கின்றன. அதில் வியாபாரம் அதிகம் நடப்பது "யார் மாதத்திற்க்கு குறைந்த சதவீதம் போட்டால் போதும் என்ற சர்ச்சுகளுக்குத்தான்." எனக்குத் தெரிந்து இங்கு ஒரு சர்ச்சில் 15% (இது 25% வரை கூட போகும்) ஒரு நபரின் மாதச் சம்பளத்தை செலுத்தினால்தான் உள்ளே கால் வைக்க அனுமதி. :-)

இருப்பினும் போகும் சர்ச்சை கொண்டு ஒருவர் பொருளாதார ரீதியில் எப்படியிருக்கிறார் என்பதனை காட்டும் ஒரு அளவுகோலகாவும் மாறியிறுக்கிறது அந்த "கடவுள் வியாபாரத்தளம்."

கோயிலுக்கு போனேன் மன நிம்மதி வாங்க, அங்க எனக்கு மூனு மாதப் பாக்கி ஒரு திரும்ப அனுப்பட்ட சொந்த காசோலைன்னு ஒருத்தர் பொலம்பிகிட்டு இருந்தாறு ஒரு ஞாயிற்றுக் கிழமை.

எனக்கு எப்படி இதுயெல்லாம் தெரியுமுன்னா, என் பக்கத்து பார்க்கிங் லாட் ஒரு சர்ச், அது சினிமா கொட்டகையா இருந்தது, நிறைய ட்ராபிக் இருக்கிற ரோடு...

அங்ஙன தினச் சிறப்பு விசயங்கள்யெல்லாம் உண்டு புது கஸ்டமர்களை உள்ளே இழுக்கும் பொருட்டு காலை உணவு இலவசம்...அப்படி இப்படின்னு ஏதாவது ஒருயுக்தி.

எது எப்படியோ மனுசனுக்கு நிம்மதி கிடச்சா சாரி...நமக்குத்தான் அந்த பிரட்சினையே இல்லையே, ஏன்னா நானே ஒரு கடவுள் அப்புறம் என்னை சுற்றி ஒரு இரண்டு கடவுள்கள்... ;-)

அன்பு,

தெகா.

said...

நாதரே, சும்மா சொல்லக்கூடாது. சூப்பர் கட்டுரைங்க.


//ஏன்னா நானே ஒரு கடவுள் அப்புறம் என்னை சுற்றி ஒரு இரண்டு கடவுள்கள்... ;-)//

தெகா பார்த்து சார், ஒரு கும்பல் ஆப்புடன் காத்திருக்கிது

கடவுளாக மாறதுடிக்கும்

கால்கரி சிவா

said...

மணியன், ஆமா,நீங்க சொன்ன மாதிரி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் கொஞ்சம் மார்டன் தான்!

said...

துளசி, காசேதான் கடவுளடா படம் அப்ப பிச்சிக்கிட்டு ஓடிச்சு, தேங்கா சீனிவாசன் அடிக்கிற கூத்து செம ரகளையா இருக்கும் படம் பார்த்தீங்கள?

said...

சரியா தப்பான்னு தருமிகிட்ட கேட்கமுடியாதே, தருமி சொன்னா கேட்டுக்கணும்!

said...

இளவஞ்சி, தங்கள் வருகைக்கு நன்றி! ஆனா உங்க அளவுக்கு மண்வாசனையை காட்டமுடியாது, இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு நன்றி!

said...

சிவபாலன், அதான் நீங்க சொன்ன சம்பளம் பணம் கோவிலுக்கு கொடுக்கிறது இங்கேயும் நடக்குதே, தெகா, சொல்லி இருக்கிறது போல!

said...

கடவுள் வியாபாரம்" தான் இன்றைய நாளில் மிக லாபகரமான வியாபாரம். // இது ஒரு யுனிவர்சல்லா ஏத்துக்கிட்ட ஒன்னு! எல்லா ஊருக்கும் பொது தான் போல!

said...

சிவா, ஆப்படிக்கிற கும்பல் நிறையத்தான் இருக்குப்போல!

said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

இந்த பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்..

http://www.desipundit.com/2006/04/27/samiasami/

said...

//அமிர்தாமாயினினும்//
வெளி கண்ட நாதர்
இவரைப் பற்றி சில தகவல்கள். மீனவக் குடும்பத்தில் பிறந்தவர். நாலாவது வகுப்பு வரை மட்டும்
படித்தவர். இறையருள் பெற்றவர். ஏன் இறையருள் பெற்றவர் என்பது இவரை நீங்கள் ஒரு முறை
பார்த்தால் தெரியும். இவர் வட அமெரிக்காவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு கோடை காலத்தில்
வருகிறார். இவருக்கும் நீங்கள் குறிப்பிட்ட வியாபாரிகளின் வியாபாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அன்புடன்
சாம்