Wednesday, June 28, 2006

நாலு போயி ஆறா??

இது என்ன விளையாட்டுன்னு தெரியல்லை, நாலு எழுத சொன்னாங்க, இப்ப ஆறு எழுதனுமாம். நம்ம வவ்வாலும், மணியனும் என்ன இந்த ஆறு விளையாட்டுக்கு கூப்பிட்டாங்க. நானும் எழுதனும்னு நினைச்சி ரொம்ப நாளாகி போச்சு! திடீர்னு உத்தியோக வேலை வந்திருச்சு, 'உத்தியோகம் புருஷலட்சணமில்லையா', அதெ எப்படி உடுறதுன்னு இருந்துட்டேன்! தமிழ்மணம் பக்கம் வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதுக்குள்ள தமிழ்மணத்தை ஏலம் போட்டு தண்டோரா எல்லாம் வந்திருக்கு, அது தான் கொஞ்சம் புதுசா இருந்திச்சி, மத்ததெல்லாம் பழசு தான். சரி இந்த பிடிச்ச ஆறு விஷயத்துக்கு வர்றேன்!

1) பிடித்த நூல்கள்/எழுத்தாளர்கள்
சுஜாதாவின் எல்லா கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த காலத்திலே இரட்டை பெண்மணிகள் சிவசங்கரியும்,வஸந்தியும் சேர்ந்து எழுதின கதைகள் ரொம்ப பிடிச்சிருந்தது! அப்புறம் சிவசங்கரி கதைகள் பிடிக்கும். பிடிச்ச புத்தகங்கள், வேறென்னா, சின்ன புள்ளையிலேருந்து இந்த ஆனந்த விகடன், குமுதம் தான். கல்கண்டு புத்தகத்தில வர்ற அந்த துணுக்கு செய்திகளும், 'சங்கர்லால் துப்பறிகிறார்' தொடரும் படிக்க அப்படி ஒரு பைத்தியமா அலைவேன் சின்ன வயசிலே! சினிமா பத்திரிக்கைகள், அந்த காலத்திலே பேசும் படம், பொம்மை விரும்பி படிப்பேன். இதை சும்மா ஓசியிலே படிக்க சலூன்ல போய் உட்கார்ந்திடுவேன்! அப்படியே தலை, மீசையும் ஒதுக்கிட்டு வருவேன்!

கொஞ்சம் விவரமானோன்ன, இந்தியாவிலே இருந்த வரை இந்தியா டுடேயும், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியும் தவறாம வாங்கி படிப்பேன். இப்ப டைம்ஸ், த எக்னாமிஸ்ட், வாரம் கழிஞ்சாலும் இந்த புத்தகம் படிக்கலேன்னா தூக்கம் வராது. அப்புறம் லீடிங் காலமினிஸ்ட்ங்களோட கட்டுரைகள் ரொம்ப புடிக்கும், அதுவும் சுப்ரமணியன்னு ஒருத்தர் ஐஐஎஸ்சியிலிருந்து எழுதிற அத்தனை டெக்னிகல் காலம்ஸ்ம் இந்த எக்னாமிக் டைம்ஸ்ல வர்றதை விடாம படிப்பேன், சமயத்திலே அப்ப அப்ப, அவருக்கு மெயில் போடுவேன், ஆனா, ரிப்ளே வந்த பாடு ஒன்னுமிருக்காது!

நாவல்னு எடுத்துக்கிட்டா எல்லா பேம்ஸ் எழுத்தாளர்கள் புத்தகமும் வாங்கி படிச்சிருக்கேன். இதிலே நான் - பிக்ஸன் கேட்டகிரி புக்ல பொருளாதாரம் வணிகம், உலகமயமாக்கல், இதிலெ வர புத்தகமெல்லாம் விரும்பி படிக்கிறதுண்டு!

அப்புறம் சின்னபுள்ளையிலே விரும்பி அதிகமா திருட்டுத்தனமா படிச்சது 'சரோஜாதேவி' புத்தகங்கள், படம் பார்க்கவும், படிக்கவும்!

2) பிடித்த திரைப்படங்கள்
இதுக்கு இந்த பதிவு போதாதே! ஏகப்பட்டதுல இருக்கு! ஆரம்பத்தில எல்லா எம்ஜிஆர் படமும் பார்க்க பிடிக்கும். அதுவும் பேலஸ், ஜீபிடர் தியோட்டர்ல டிக்கெட் கவுண்டருக்கு, ஆளுங்க தலைமேல ஏறி நடந்து போய் டிக்கெட் வாங்கி பார்க்கிற திரில் வேறெதில்லயும் இல்லை! எம்ஜிஆர் படத்திலே ரொம்ப அதிகமா பிடிச்சு போய் கிட்ட தட்ட ஒரு 40 தடவைக்கு மேலே பார்த்த படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'

சிவாஜி படங்கள், எப்பவுமே நான் போய் பார்க்கிறது செக்கண்ட் இன்னிங்ஸ்ல வர்றப்ப தான். படம் ஓடி, திரும்ப வரும் போதோ, இல்ல ஊர்ல இருக்கிற மெயின் தியேட்டர்ல ஓடி, புறநகர் பகுதிக்கு போய் டப்பா தியேட்டர்ல ஓடறப்ப பார்க்கிறது தான்! பெரும்பாலும், எங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற பிரபாத் தியெட்டர்ல வந்த எல்லா சிவாஜி படங்களையும் முதல் இன்னிங்ஸ்லயே பார்த்திடுவேன்! அதிக தடவை பார்த்த படம், 'திருவிளையாடல்' தான்

அப்புறம் ரஜினி, கமல், பாலசந்தர், பாரதிராஜான்னு ஆரம்பிச்சா, அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கும், அரிதாரம் எழுதிறவங்கிட்ட இந்த மாதிரி கேட்டு ஒரு பதிவில, அதுவும் ஒரு பாராவிலே எழுதி முடின்னா, எங்கன போறது நான்!

3) பிடித்த உணவு:
ஏங்க இது உங்களுக்கே போதுமா? அலும்பு தானே, சாப்பாட்டுராமன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன், என்னோட நட்சத்திர வாரத்திலே, என்ன இதபத்தி திருப்பி எழுத சொல்றீங்க! சரி கேட்டுட்டீங்க, சொல்லிடுறேன், அதிகமா பிடிச்சது நொறுக்குத் தீனி தான், அதுவும் தீபாவளி பலகார நொறுக்கு ஒருக்குங்களே, சொல்லவேணாம், இந்த தீவாளி பட்சணம் சுடும் கதை எங்க வீட்ல தமாஷா இருக்கும், அதை ஒரு தனி பதிவா அப்புறம் போடுறேன்! அந்த பட்சணத்திலே அதிகம் பிடிச்சது, சோமாஸா, பாசிபயரு உருண்டை, முறுக்கு தான், அடிச்சி நொறுக்குவேன்!

4)பிடித்த இடங்கள்
சுற்றுலான்னு எடுத்துக்கிட்டா ஏகப்பட்ட இடங்கள் போயிருக்கேன். போனதிலே திரில்லிங்கா, போய்ட்டு வந்தது காஷ்மீர், அதாவது ஒரு மூணு வருஷத்துக்கு முன்னே! அதுவும் தீவிரவாதி, கலவரம் அப்படி இப்படின்னு சொல்லியும், சும்மா ஜம்ம்முன்னு போய் காஷ்மீர்ல இறங்கி, இருந்த அஞ்சு நாளும் ராத்திரி பத்து மணிக்கு மேலே ரோட்ல ஜாலியா சுத்திட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தது ஒரு பயம் கலந்த திரில்லான அனுபவம். என்னவேணாம்னாலும் நடக்கலாம். நாங்க போய்ட்டு வந்த ஒரு பழய பஸார் பகுதியிலே, நாங்க வந்து அரைமணி நேரம் கழிச்சு தீவ்ரவாதிகள் துப்பாக்கி சூடு, கர்ஃப்யூன்னு ஏக ரகளை. அடுத்த நாளு படிக்கிறப்ப அப்படியே ஆடி போயாச்சு, இருந்தாலும், ம்.. அங்கேயும் போய்ட்டு வந்துட்டோம்ங்கிற ஒரு தில்லு, ஜில்லு, திரில்லு, சும்மா சொல்லக்கூடாது. அப்பறம் ஹிமாச்சல் பிரதேசம் முழுக்க மலையிலேயே ஒரு பதினைஞ்சு நாள் சுத்தினது மறக்க முடியாது. திவ்யமான சாப்பாடு, சுத்து, ராத்திரியிலே வேணுங்கிறதை ஏத்திக்கிட்டு குளிர் காஞ்சிட்டு, அப்புறம் தூங்கி எழும்பி பிரயாணம் தொடருவது ரொம்ப சந்தோஷமான ஒன்னு. அதே மாதிரி நல்ல ஜனவரி குளிர்ல ராஜஸ்த்தான் பாலைவனம் போய், அங்க மணல் மேட்டுல நடன நிகழ்ச்சி பார்த்திட்டு வந்தது மறக்க முடியாத ஒன்னு! (இந்த துபாய் பக்கம் நான் மட்டும் போனப்ப, டெஸர்ட் சபாரின்னு போய்ட்டு, ராத்திரியிலே பெல்லி டான்ஸ் பார்த்துட்டு வந்ததை, என் பொண்டாட்டிக்கிட்டேக்கூட சொல்லல, அதனால உங்கள்ள, யாராவது துபாய்வாசிக்கு அப்படி அனுபவம்னா, பின்னோட்டம் போடுங்க!)

5)பிடித்த பொழுது போக்கு
பொதுவா, அதிகமா சினிமா போறது, கம்ப்யூட்டர்ல அதிக நேரம் செலவழிக்கிறது தான் பிடித்த பொழுது போக்கு! அதுவும் இந்த வார கடைசியிலே ஏதாவது ம்ல்டிபிளக்ஸ்க்கு போய் DTSல படம் பார்த்துட்டு, நல்லா கானா சாப்பிட டில்லியிலே இருந்த எல்லா நல்ல ஓட்டலுக்கு போனதும் பிடித்த ஒன்னு! கிரிக்கெட் மேட்ச் அதிகமா டிவியிலே பார்க்கிறதும், அப்புறம் இந்த நியூஸ், டாக்ஸோ, இதெல்லாம் போட்டுட்டா டிவியோட ஒட்டிக்கிடறது தான். ஆனா, சீரியல், சித்திரஹார்னு நடுவிலே வர்ற, என் பொண்ணோட இடைஞ்சல், குடச்சல் தாங்க முடியாம, மறுபடிய்ம், இண்டெர்நெட், கம்ப்யூட்டர்னு நேரம் செலவளிக்கிறதுல இஷ்டம்!

6)பிடித்த/ அழைக்க விரும்பும் ஆறு சகவலைப்பதிவாளர்கள்

1)குமரன் - இவருக்கு ஏகப்பட்ட பதிவு இருக்கு, இவர் பதிவு எல்லாத்துக்கும் போய் உள்ளேன் ஐயா சொல்லிடணும்! அவரு இந்த ஆறு விஷயம் போட்டுட்ட்டாரான்னு தெரியாது, அவரை அழைக்கிறேன்!
2)தருமி- இவரு பதிவுகள் ஏகப்பட்ட பாக்கி இருக்கு பழசை எல்லாம் ரிவைஸ் பண்ண, அதுக்குன்னு நேரம் எடுத்து பண்ணனும், இவரையும் அழைக்கிறேன்!
3)கால்கரி சிவா- நம்ம ஊர்க்காரு, அவரையும் அழைக்கிறேன்
4)உஷா ராமசந்திரன் - தேன்நிலவு பரிசு வாங்கினதற்காக பாராட்டி, இந்த ஆறு விளையாட்டுக்கு அழைக்கிறேன்
5)துளசி கோபால் - இவங்க மூத்த குடி, இவங்க இல்லாமலா, இவங்களையும் அழைக்கிறேன்
6)சிறில் அலெக்ஸ்- இவரு பதிவுக்கு அப்ப அப்ப போவேன், எழுதறதெல்லாம், புடிக்கும், இவரையும் அழைக்கிறேன்

ஆக நானும் இந்த ஆறு மனமே ஆறுன்னு, அந்த ஆண்டவன் கட்டளை மாதிரி எடுத்துக்கிட்டு விளையாடி முடிச்சிட்டேங்கோ!

6 comments:

said...

வெளிகண்ட நாதர். என்னை அழைத்ததற்கு நன்றி. அவ்வப்போது வந்து உள்ளேன் ஐயா சொல்வதற்கும் நன்றி. :-) நான் ஏற்கனவே வேறு இருவர் அழைத்து ஆறு பதிவு போட்டுவிட்டேன். அதனால் எனக்குப் பதிலாக வேறு யாரையாவது அழையுங்கள். நானே ஒருவரை பரிந்துரை செய்யலாம் என்று இருக்கிறேன். பரமன் மகன் - உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர் - அவரை அழையுங்கள்.

நானும் தருமி ஐயாவை அழைத்திருக்கிறேன். அவர் வீட்டிற்குப் போய் சொல்லிவிட்டு வந்தேன். அவர் என்ன பதில் சொன்னார் என்று மீண்டும் அவர் வீட்டிற்குச் சென்று பார்க்கவேண்டும்.

said...

// எங்க வீட்டுக்கு பக்கத்திலே இருக்கிற பிரபாத் தியெட்டர்ல வந்த எல்லா சிவாஜி படங்களையும் முதல் இன்னிங்ஸ்லயே பார்த்திடுவேன//

திருச்சியில் இருந்த ஆறு வருடங்களில் நான் அதிகமாக படம் பார்த்தது இந்த தியேட்டரில் தான் .காரணம் வாரம் ஒரு சிவாஜி படம் போடுவார்கள்.

said...

வெ. நா! "ஆறு அது ஆழமில்லே" படிக்கவில்லையா?
பிறகு ஒரு திருத்தம் என் பெயர் உஷா. அப்பா பெயர் ராமசந்திரன். இன்ஷியல் ஆர். அதை
விரிவாக்கி பாஸ்போர்ட், வங்கி கணக்குகளில் ராமசந்திரன் உஷாவாய் இருந்ததால், அதையே
எழுத்து பெயராய் வைத்துக்கொண்டேன்.
வூட்டுக்காரர் பெயர் என்றால் பின்னால்தானே வரும் :-)

அப்பால, பெல்லி டான்ஸ் படம் இருக்கு, வேண்டுமா? ஏனோ நடனத்தைப் பார்த்தப்பொழுது,
அந்த முதிர்ந்த பெண்ணைப் பார்க்க பாவமாய் இருந்தது.

said...

சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை","சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது" இரண்டும் நல்லா இருக்கும்.

said...

அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி வெளிகண்ட நாதர். நானும் சங்கர்லால் விசிறிதான். எம்ஜியாரின் பாடல்களையும் சேஷ்டைகளையும் இரசித்தவன். உங்கள் காஷ்மீர் அனுபவங்கள் ஒரு பதிவாக வரும் என எதிர்நோக்குகிறேன்.

said...

வெளிகண்ட நாதர், அழைப்பிற்கு நன்றி