Wednesday, July 12, 2006

மரணம் தொட்ட தருணம்!

"என்ன, இங்கே நின்னுக்கிட்டிருக்கம்மா, சார்ட்டட் பஸ் மிஸ் ஆயிடுச்சா" என்று காரை மெதுவாக ஆபீஸுக்கு வெளியே ஓட்டிக் கொண்டு அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பின் வழியே போகும் பொழுது சேகர் கவிதாவை பார்த்து கேள்வி கேட்டு விட்டு அருகில் நிறுத்தினான்.

"ஆமா கொஞ்சம் லேட்டாயிடுச்சு வேலை முடிச்சு வர்ற, அதான்" என்று பதிலளித்தாள் கவிதா

"வேணும்னா நான் உங்க வீட்டு பக்கம் தான் போறேன், விட்டுடட்டுமா" என்று கேட்க சரி எனக்கூறி காரில் உள்ள முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள் கவிதா!

"நீங்க எப்படி லேட்டு சார்", கவிதா

"பிரகதி மைதானத்திலே எலெக்டரானிக் எக்ஸிபிஷன்ல நம்ம கம்பெனி ஸ்டால்லுக்கு போய்ட்டு அங்கிருந்து வர கொஞ்சம் நேரமாயிடுச்சு, அதான்"

"நாளைக்கு வேறே சண்டிகர் போகணும், இந்த வீக் எண்ட்ல என் வைஃபை பார்த்துட்டு வரலாமுன்னு இருக்கேன்!"

"அப்படியா, ஏதோ எம்டெக் படிக்கிறதா சொன்னீங்கள்ள!" இது கவிதா

"ஆமா ஊருக்கு போன வாரம் போயிருந்தேன், நிறைய சாமான் வீட்ல இருந்து கொடுத்து அனுப்பிச்சிருக்காங்க, சரி இந்த வாரம் போய் பார்த்துட்டு கொடுத்துவிட்டு வரலாம் என்று இருக்கேன், அதுவும் காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் ட்ரெயினு, எப்பவும் ஏழு மணி வண்டியிலே போவேன். இன்னைக்குன்னு பார்த்து அதுல டிக்கெட் கிடைக்கலே!"

"என்ன சார் அடுத்த வாரம் ஃப்ரான்ஸ் போறீங்க போல இருக்கு!" இது கவிதா

"ஆமா அதுக்கு தான் கனாட் பிளேஸ் போய் கொஞ்சம் அப்படியே ஈரோ ரயில்ல கொஞ்சம் எல்லா நாடுகளையும் சுத்தலாமுன்னு எல்லா விவரமும் தெரிஞ்சு கேட்க போயிருந்தேன், பிறகு அங்கிருந்து பிரகதி மைதான் போயிட்டு ஆபீஸ் திரும்ப லேட்டாயிடுச்சு, இப்ப வீட்டுக்கு போய் படுத்து காலையிலே சீக்கிரம் எழும்பனும்"

பேசி கொண்டே கவிதாவின் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, தன் வீடு நோக்கி காரை செலுத்தினான் சேகர்

-------


வீட்டை அடைந்து காரை பார்க் செய்து விட்டு மேலே உள்ள தன் அப்பார்ட்மெண்டுக்கு சென்றான் சேகர்.

வீட்டிற்கு சென்றவுடன் டெலிபோன் மணி அடித்தது, ரிஸீவரை கையில் எடுத்தவுடன்

"என்ன நாளைக்கு வர்றீங்கள்ள" மறுமுனையில் சேகரின் மனைவி

"ஆமா, வழக்கமா வர்ற சப்தாபதி கிடைக்கலே, ஹிமாச்சல் எக்ஸ்பிரஸ்ல தான் டிக்கெட் வாங்கி இருக்கேன், காலையிலே அஞ்சு மணிக்கு ட்ரெயின், எழுந்திருச்சு ஓடணும், இப்பவே மணி பத்தாக போகுது, எப்ப தூங்கி, நான் எப்ப எந்திருக்க போறேன்னு தெரியலை!" இது சேகர்

"சரி வீட்டை எல்லாம் பத்திரமா பூட்டி, லைட் எல்லாம் அணைச்சிட்டு வாங்க!"

"காலையிலே சீக்கிரமாவே வந்தவுடுவேன், நீ சொன்ன மாதிரி ராக் கார்டன் போய்ட்டு வந்துடுவோம், குளிச்சிட்டு தயாரா இரு, நான் வந்தவுட்டு உன் அலங்காரமெல்லாம் வச்சுக்காதே!"

"சரி ஸ்டேஷன் வந்தவுட்டு போன் பண்ணுங்க"

பேசி முடித்துவிட்டு, அதுவரை அடுத்த வாரம் செல்ல இருக்கும் ஃப்ரான்ஸ் பயணத்திற்கும், ஈரோ ரயிலில் எல்லா ஐரோப்பிய நாடுகளையும் சுற்றுவதற்காக வேண்டிய பிளான்கள், மேப்புகள் எல்லாம் பார்த்துவிட்டு தூங்க போகும் பொழுது மணி ஒன்றாகி விட்டது. தூக்கம் வராமல் சேகர் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

'காலையில் நாலு மணிக்கே எழுந்திருச்சா தான் நியூடில்லி ஸ்டேஷன் போய் அஞ்சு மணி ட்ரெயின் புடிக்க சரியாக இருக்கும்' என எண்ணிக் கொண்டே அப்படியே கண்ணயர்ந்தான் சேகர்.

-------


காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு டாக்ஸியை பிடித்து நியூடில்லி ஸ்டேஷன் சென்றடைய சரியாக இருந்தது. ரயில் புறப்படும் தருவாயில் இருந்தது! சரி காலங்கார்த்தாலே ஒரு சாயா குடிக்கலாம் என்று டீ ஸ்டாலுக்கு சென்று டீ குடித்து விட்டு, காலை பத்திரிக்கை வாங்கிக் கொண்டு அப்படியே குஷ்வந்த் சிங் எழுதிய ஒரு குரு நாவலையும் வாங்கி கொண்டு தன் ஏஸி கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொண்டான்!

குஷ்வந்த் சிங் கதைகள் என்றாலும் இல்லை கட்டுரைகள் என்றாலும் விரும்பி படிக்கும் பழக்கம் கொண்டவன் சேகர். அந்த கிழம் வயதிலும் செக்ஸ் பற்றி எழுதும் அவர் எழுத்துக்களை விரும்பி படிப்பவன் சேகர்! அப்பொழுது தான் சுட சுட வெளிவந்த அந்த ஆங்கில நாவலை கடையில் வாங்கிய கையோடு அதன் முன்னோட்டத்தை படிக்க தொடங்கிவிட்டான். கூடவே அன்றைய நியூஸ் பேப்பர் வாங்கி இருந்தாலும், அதில் உள்ள தலைப்புச் செய்தியை விட குஷ்வந்த் சிங்கின் நாவலில் சுவாரசியமாக லயித்துப் போனான். எப்பொழுது சீட்டில் வந்து உட்கார்ந்தோம், வண்டி எப்பொழுது நகர்ந்தது என்று தெரியா வண்ணம் முதலில் முன்னோட்டம் மட்டும் படித்துவிட்டு கொஞ்சம் நியூஸ் பேப்பரை மேய்ந்து விட்டு பிறகு நாவலை தொடரலாம் என்றிருந்தவனுக்கு, நாவலின் சுவாரசியத்தால், முழுவதும் நாவலில் மூழ்கிப் போனான்!

-------


அது விரைவு வண்டியாக இருந்தாலும், பானிபட்டு ஸ்டேஷனில் கொஞ்சம் நேரம் நின்றது! தொடர்ந்து நின்று கொண்டிருந்ததால், காலையில் டிபன், சாயா விற்கும் பையன்களின் கூக்குரலாலும், சற்றே கலைந்து, நாவலை வைத்து வைட்டு, சிறிது பசி மயக்கம் போல் தெரிந்ததால் தானும் டீ, பிரெட், ஆம்ப்லெட் என வாங்கி தின்று விட்டு மீண்டும் நாவலை படிக்க துவங்கினான்

வண்டி நகர்ந்ததும், ஏஸியின் அட்டகாச சுகத்தால் அந்த சேர் கார் என்ற கம்பாண்ட்மெண்டில், அத்தனை சுவாரசியமான நாவல் தொடரிலும் சற்றே கண் அயர்ந்தான். பொதுவாக இது போன்ற ரயில் பயணங்களில் ஒரு சிலரை போல சேகருக்கு உறக்கம் என்பது அவ்வளவு விரைவாக வந்து விடாது. அதுவும் சென்னையிலிருந்து டில்லி பயணிக்கும் போதெல்லாம் இரண்டு இரவுகளை மிகவும் கஷ்டப்பட்டு கழித்து எப்பொழுது சென்னையோ, இல்லை டில்லியோ வந்தடைவோம் என்றிருப்பான். ஆனால் இன்று முந்தய நாளின் அலைச்சல், நேரம் தாழ்ந்து இரவில் உறக்கமின்றி மிகவும் தாமதமாக தூங்கி, காலையில் சீக்கிரம் விழித்ததால் என்னவோ அப்படியே தூக்கம் கண்ணை சுழட்ட, நித்தரையில் ஆழ்ந்து போனான்.

எப்பொழுதும் சேகருக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. அதாவது சக பிரயாணியுடன் சகஜமாக சிநேகம் செய்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு வருவது வழக்கம்! எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் என்ற தகவல்களுடன், அனைத்து விவரங்களுடன் தானும் சக பிரயாணியும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டு பயணம் செய்யும் அளவுக்கு பரிச்சியமாகிவிடுவான். ஆனால் இம்முறையோ பக்கத்து சீட்டு நபர் யார் என்று பார்க்காமல் நாவல் படித்துக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தான்!

-------


கண் விழித்து பார்த்தபோது, ரயில் வண்டி சண்டிகரை வந்தடைந்து நின்று கொண்டிருந்தது. எல்லா பயணிகளும் கீழே இறங்கி விட்டனர், ஓரிருவரை தவிர! வண்டி சண்டிகரிலிருந்து ஹிமாச்சல் பிரதேச நகரமான கல்காவை நோக்கி நகர்ந்தது!

திடீர் என்று கண் விழித்ததால், இறங்கவேண்டிய இடம் சண்டிகரை தாண்டி ரயில் செல்லுவதால், பதட்டத்துடன், எப்படியும் ஸ்டேஷன் வெளியே வந்து விட வேண்டும் என மேலே உள்ள தனது பெட்டியினையும், பையினையும் எடுத்துக் கொண்டு தான் என்ன செய்கிறோம் என்ற சமயோஜிதமின்றி, மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் ட்ரெயினிலிருந்து கீழே இறங்க ஆயுத்தமானான்!

அப்படி பதட்டத்துடன் ஓடும் பொழுது ஒரு பெரியவர் ஒருவர் சற்றே அவன் வழிப்பாதையில் , கம்பார்ட்மெண்ட்க்குள் வழிமறித்தும், அவரையும் ஒதுக்கிக் கொண்டு வேகமாக கம்பார்ட்மெண்டின் கதவிற்கு ஒடிச் சென்று, ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்து ரயிலுடன் தொடர்ந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தான்.

இது போன்று ஓடும் ரயிலில் கீழே இறங்குவது, அவன் பாம்பேயில் இருந்த பொழுது, எலெக்ட்ரிக் ட்ரெயினில் கீழே குதிப்பது சேகருக்கு மிகவும் கைவந்த கலையாகும். ஆனால் அது தன் வாலிப வயதில் நடந்து முடிந்து ஒன்று அதுவும் ஒரு பத்து வருடங்களுக்கு முன்! இப்போது அது போன்ற வித்தைகள் ஏதும் பழக்கத்தில் இல்லை, ஆனால் இறங்க வேண்டுமென்ற ஏதோ ஒரு தூண்டுதலால் கீழே குதித்தான்

அவன் துரதிர்ஷ்டம், ஏஸி கம்பார்ட்மெண்ட், இஞ்சினிலிருந்து இரண்டாவது பெட்டி, அப்படி கீழே இறங்கி ஓடும் பொழுது, தீடீரென ஸ்டேஷன் பிளாட்பாரம் முடிவடைந்து சற்றே சறுகலான பாதையில் பாதத்தின் அடுத்த அடியை எடுத்த வைத்த போது தன் நிலை தவறி கீழே விழுந்து சரியாக தண்டவாளத்தின் விளிம்பில் படுத்துக் கிடப்பதை கொஞ்சம் தாமதமாக உணர்ந்தான். அவன் அருகிலே ரயில் வண்டியின் சக்கரங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை பார்த்த பொழுது மரண பயம் உண்டாகியது. சற்றே தலை நிமிரலாம் என முயற்சித்த போது ஒடும் ரயில் பெட்டிகளின் படிகட்டுகள் நகர்ந்து தோள்பட்டையை தாக்கிய வண்ணம் இருந்த தால் மறுபடியும் கீழே குனிந்து அப்படியே தன்னை குறுக்கி படுத்துக் கொண்டான்.

அப்படியே கையை கொஞ்சம் நீட்டினாலும் தண்டாவாளத்தில் ஓடும் சக்கரங்களுக்கு இடையிலே கொடுத்து துண்டிக்க வேண்டியது தான், சரி சற்றே நகர்ந்து விடுவோம் என முயற்சித்தால் மேலே கடக்கும் படிகட்டுகளின் நங் என்ற இடி, ஆகா இன்று நம் கதை முடிந்து விட்டது எனக் கூனிக்குறுகி அத்தனை ரயில் பெட்டிகளும் தன்னை கடந்து செல்லும் அந்த தருணம் தான் மரணத்தை தொட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை! நன்றாகவே தெரிகிறது எப்படி பட்ட ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று! கரணம் தப்பினால் மரணம் என்பதை முழுவதுமாக உணர்ந்த அந்த மரணம் தொட்ட தருணத்தை எண்ணி பார்க்கும் பொழுது, ரயில் பெட்டிகள் தன்னை கடந்த பின் முழுவதுமாக நிமிர்ந்த பொழுது தான் அவனுக்கு தெரிய வருகிறது நாம் மரணத்தின் எவ்வளவு அருகாமையில் இருந்து அதை தொட்டு பார்த்து விட்டு வந்திருக்கிறோம் என்று!

எல்லாம் முடிந்த பின் மரணபயம் என்பது நீங்கி, நாம் பிழைத்துவிட்டோம் என தலை நிமிர்த்தி முழு உடம்பையும் மேல் எழுப்பி, காலை கீழே வைக்க முயற்சிக்கையில் தான் இடது காலிருந்த பாதத்தின் பெரும் பகுதி சிதைந்து போனது தெரிய வருகிறது! ஐயகோ இப்படி கால்கள் ஆகிவிட்டதே என்று இருந்தாலும், சரி முழு சக்தியையும் திரட்டி எப்படியும் மீதமுள்ள இடது காலின் குதிகால் துணைக் கொண்டும் கைகளை தரையில் ஊன்றி மேலே எழும்ப முயற்சிக்கும் பொழுது தான் தெரிந்து, இடது தோள்பட்டை குள்ளே உள்ள மூட்டு கீழே சரிந்து அதனால் ஏற்பட்ட வலியால் மேலே எழும்ப திராணியின்றி கீழே விழுந்து கிடக்கிறோமென்று!

எதுவும் செய்ய இயலாத நிலையில் கூடி நின்ற கும்பலை மன்றாடி அழைத்து தன்னை தூக்கி ஆட்டோவில் ஏற்றி ஏதாவது பக்கத்தில் இருக்கும் மருத்தவமனைக்கு எடுத்த செல்ல எத்தனிக்கின்றான் சேகர். அவன் மேல் கருணை கொண்ட சிலர் ஆட்டோவில் ஏற்றி அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதல் உதவிக்கு எடுத்து செல்ல, முதல்சிகிச்சை அளித்து விட்டு அந்த மருத்தவ நிர்வாகம், அதைவிட வசதி மிகுந்த மருத்தவமனைக்கு எடுத்து செல்ல சொல்கிறது. அப்படியே அங்கு கூடி நிற்பவர்களிடம் தன் மனைவிக்கு தெரியபடுத்த சொல்லி தொலைபேசி எண்களை கொடுத்து விட்டு தானே மற்றவர்கள் உதவியுடன் அந்த பெரிய மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை எடுக்க ஆயுத்தமாகிவிடுகிறான்!

மரணம் என்பது மனிதனை தொட்டு தழுவும் வரை தான் அந்த பயம், ஆர்பரிப்பு எல்லாமே, கொஞ்சம் போல நாம் பிழைத்துவிடக்கூடும் என நமக்குத் தெரிந்தால், மிகப்பெரிய தன்னம்பிக்கை வந்து மரணம் தொட்ட தருணத்தை பார்த்துவிட்டு மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு சேகரை போல வந்து விடுபவர்கள் நிறைய உண்டு! அய்யகோ நமது ஃபிரான்ஸ் பயணம் முடியாமல் போகிவிட்டதே, இது போல் மருத்துவமனையில் ஆறுமாதம் கழிக்க நேரிட்ட்தே என மனம் அல்லாடும்! ஆனால் அந்த மரணம் வந்த தருணம், எதுவுமே இல்லை, நாம் இப்பூவுலகை விட்டு போகப் போகிறோம் என்ற நினைப்பே மேலோங்கும்! அது போல மரணம் சந்தித்தவர்கள் மீண்டும் மரணத்தை சந்திக்க பயப்படமாட்டார்கள்

-------


தேன்கூடு + தமிழோவியம் (ஜூலை 2006 - மரணம்) போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

19 comments:

said...

உதயகுமார்,

என்னப்பா ... இப்படி பயங்கரமான கற்பனை. திக்னு ஆயிருச்சு.

said...

சரிதான் ஐயா,
மரணத்திற்கு அருகில் சென்று வந்தவர்களிடம் மரண பயம் பட்டுப் போகும்.
நான் நண்பர்களிடம் சவால் விட்டு; ஒரு நீர் சுழற்சியில் தலைகீழாக கரனம் அடித்து,அடியில் சென்று சொருகிக்கொண்டேன்.மூச்சுத் தினறி செத்தோம் என நினைத்த தருனத்தில் இறை அருளாள் மீண்டு வந்தேன்.

அன்றிலிருந்து நமது கொள்கை மரணத்திர்க்கு அஞ்சேல்;
பாதகம் செய்பவரை / சொல்பவரை கண்டால் அவரோடு மோதுவதுதான்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

said...

சுறுசுறுப்பாக போன கதை ஏதோ சப்பென்று முடிந்தது ஏமாற்றமாக இருந்தது. இன்னும் நல்ல முடித்திருக்கலாம்.

said...

மறுமொழிகள் இருந்தாலும் ஏன் முகப்பு பகுதியில் 0 கருத்துக்கள் என்று காட்டுகிறது உங்க வலைப்பூவில்?

said...

என்ன துளசி அவ்வளவு பயங்கரமாவா இருந்தது!

//இப்படி பயங்கரமான கற்பனை// இது நிஜமா நடந்த ஒரு சம்பவம்!

said...

முரளி, நீங்க சொல்வது சத்தியமான பேச்சு. மரணத்திலிருந்து மீண்டு வந்தவர்களால் தான் அதை அடையாளம் காண முடியும்!

said...

சார்,

// அது போல மரணம் சந்தித்தவர்கள் மீண்டும் மரணத்தை சந்திக்க பயப்படமாட்டார்கள் //


கதை நல்லாயிருக்கிறது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

வாங்க ஜெஸிலா, வருகைக்கு நன்றி! கதையின் முடிவு இன்னும் கொஞ்சம் சுவாரசியமா கொண்டு போயிருக்கலாம் தான். மரணம் சம்பவிக்கும் நேரம் எப்படி இருக்கும் என்பதை மரணம் தழுவி சென்றவர்களுக்குத் தெரியும்!

//மறுமொழிகள் இருந்தாலும் ஏன் முகப்பு பகுதியில் 0 கருத்துக்கள் என்று காட்டுகிறது உங்க வலைப்பூவில்? // எதை சொல்லுகிறீர்கள்?

said...

வருகைக்கு நன்றி சிவபாலன்!

said...

அந்தக் கடைசி வரி தவிர்த்து கதையை முடித்திருக்கலாமோ?

said...

எனக்கு என் 'மரணம் தொட்ட கணங்கள்' நினைவுக்கு வந்திச்சி...

said...

சொந்த அனுபவமா வெளிகண்ட நாதர்?!

said...

வாங்க தருமி, அதே தான் உங்களுடய மரணம் தொட்ட கணங்கள் போன்ற சம்பவத்தின் பிணைப்பே இந்த கதை! எமனை வென்றவரல்லவா நீங்கள், உங்களை விட மரணம் தொட்ட த்ருணத்தை யார் அறிந்திருக்க முடியும்?

said...

//சொந்த அனுபவமா வெளிகண்ட நாதர்?!// என்னுடய கதைகள் அனைத்தும் நிஜத்தின் பின்னே புனையப்பட்டது தான்!

said...

நிஜத்தின் நிழல் அருமையாக வந்திருக்கிறது. இருந்தாலும் கலைத்துறையில் பங்கேற்றவர் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கியிருக்கலாம். வாழ்த்துக்கள்!!

said...

வணக்கம் வெ.நாதர்,

நன்றாக வந்துள்ளது கதை! இது போன்ற மின்சார ரயில் வண்டி,மற்றும் அதன் பாதையை கடக்க எத்தனிக்கும் போது பல முறை மாட்டிக்கொண்டு மரணத்தை தவிர்த்து இருக்கிறேன்.

சென்னையில் பலரும் இருப்பு பாதையைக்கடக்க நடமேடைகளைப்பயன்ப்படுத்தாமல் குறுக்கே கடப்பது வழக்கம்.

சமிபத்தில் அப்படி நானும் கடந்தப்போது அடுத்தடுத்து 3 பாதைகளில் மின்வண்டி வந்தது எனக்கு எந்த பாதையில் வருகிறது என அவதனிக்கவே முடியவில்லை, நான் கடக்க கால் வைத்த பிறகு பார்த்தால் அதில் ஒரு மின்சார ரயில் அருகில் வந்து விட்டது எனக்கு பின்னால் செல்வதா முன்னால் செல்வதா என குழப்பம் வேறு :‍)) ஸ்தம்பித்து விட்டேன் என்று சொல்லலாம். தானாகவே பாதையை கடந்த்து விட்டேன் எனது சட்டையை முதுகில் உரசியப்படி மின்வண்டி கடந்தது! ஒரு நொடியில் மரணம் தவிர்த்தேன்.

எனது முட்டாள் தனம் தான் , ஆனால் இது நடைமேடையில் ஏறிக்கடக்க இருக்கும் சோம்பேறித்தனம் என்பேன். மாதத்திற்கு ஒருவராவது இப்படி மின்சார ரயில்களில் அடிப்பட்டு புறநகர்ப்பகுதிகளில் இறக்கிறார்கள்.

ஆனாலும் என்னைபோலவே மக்கள் மீண்டும் ,மீண்டும் கவனமில்லாமல் குறுக்கே கடக்கிறார்கள். எல்லாம் "சீக்கிரம் போய்விட வேண்டும்" என்ற அவசரம் தான்!

said...

வாங்க மணியன், இது நாடக திரைக்கதை போலுமில்லாமல், சிறுகதை போலமில்லாமல் எழுதிவிட்டேன்! அடுத்த கதைகளை விறு விறுவாப்பக்குகிறேன்!

said...

வவ்வால், என்ன ரொம்ப நாளா காணோம்! வேலைப்பளுவா? நீங்கள் கூறுவது போல அதிகம் இது போல் மரணத்தின் விளிம்பில் தப்பி பிழைப்பவர்கள் அதிகம் தான்! அஜாக்கிரதை, சோம்பேறி தனம் தான். ஆனால் இந்த கதையில் தூங்கி எழுந்த நாயகன், ஏதோ தவறவிட்டு விட்டு பதட்டத்தில் முட்டாள் தனமாக எடுக்கும் முடிவு, இது போன்று முட்டாள் தன முடிவுகளின் விளைவுகள் மிகவும் கொடுமையானது!

said...

வணக்கம் வெ.நாதர்,

கொஞ்ச நாள் தேசாந்திரம் போய்டேன் அதான் இந்த பக்கம் வரலை. இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கே தான் , இனிமே யாரும் நிம்மதியா தூங்க முடியாது வந்துடோம்ல, எல்லாரையும் கலாசிட வேண்டியது தான் இனிமே நம்ம வேலை! நீங்களும் ஜஸ்பர் காடுகள்னு பனிமலைக்குலாம் போய்டு வந்து இருக்கிங்க போல பார்த்தேன் அந்த பதிவை. ஒரு சந்தேகம் அந்த பனிமலைலயும் பனி லிங்கம் எல்லாம் இருக்கா :-))