Friday, July 14, 2006

புதுப் பேட்டையும், சத்யாவும்!

போன வாரம் தான் செல்வராகவனின் புதுப் பேட்டை படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது! ரொம்ப நாளுக்கு முன்பாகவே உருப்படாதது நாரயண் எழுதிய நிழலுகம் பற்றிய பதிவுகள் படித்திருந்ததால், இந்த படம் பார்க்க ஒரு ஆவல் இருந்து கொண்டே இருந்தது! அதுவும் நான் விரும்பி ரசிக்கும் ராம் கோபால் வர்மாவின் இந்தி படங்கள் பல பம்பாய் நிழலுகம் பற்றிய கதைகள் தான்! அவர் முதன் முதலாக, நிழலுக கதை என்று ஆரம்பித்து எடுத்த படம் 'சத்யா'. பிறகு எடுக்கப்பட்ட நிறைய படங்கள் 'கம்பெனி'யிலிருந்து, தற்போது வந்த 'சர்க்கார்', 'D' வரை எல்லாமே அந்த பம்பாய் நிழலுக கதையின் பின்னனியில் அமைந்தவையே! நீங்கள் எத்தனை பேர் அந்த இந்தி படங்கள் எல்லாவற்றையும் பார்த்திருப்பீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் செல்வராகவனின் தமிழ் நிழலுக தாதாக்களை பற்றி எடுத்த முதல் முயற்சியான இந்த 'புது பேட்டை'யையும், அதே போன்று ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பே ராம்கோபால் வர்மா எடுத்த முதல் முயற்சியான 'சத்யா'வையும் சற்று ஆராய்ந்து கதை களம், அதை எடுத்த முறை, எவ்வளவு நிஜத்திற்கு அருகாமையில் அவ்விரு படங்களும் இருந்தன என்பதை பற்றி சற்ற ஆராயவே இந்த பதிவு! (சினிமா சம்பந்தமா எழுதுனாதான் அதிக மைலேஜ், பதிவை நிறைய பேரு பார்க்கிறாங்க, மத்த நல்ல விஷயம் எழுதுனாலும் கூட்டம் சேர்றதில்லைன்னு இந்த பதிவு மசலா பதிவு!)

செல்வராகவன் படம்னு ஒரு முத்திரையோட நான் படம் பார்க்க ஆரம்பிக்கலை. அதுக்கு காரணமும் இருக்கு அவரு எடுத்த முத ரெண்டு மூணு படத்தை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது! 'காதல் கொண்டேன்' படமும் அது ஓடி ரொம்ப நாளைக்கப்பறம் கேசட்ல பார்த்தேன். அதுவும் அவரோட முதபடம்னு '7G ரெயின்போ காலனி' படம் பார்த்துட்டு அட அசத்தலா இருக்கேன்னு தோணுச்சி. அதுவரை அவரு பேரு மீடியாவிலே, பத்திரிக்கையிலே அடிபட்டு, ஏதோ புதுசா செல்வராகவங்கிறவரு படம் நல்லா இருக்கும்னு கேள்விபட்டதோட சரி. அந்த காலத்திலே, சில டைரக்டர்கள் படம் முதப்படம் பார்த்தோனோ, ஆக இவரு படங்கள் எல்லாம் நல்லா இருக்கும்னு அடுத்த படத்துக்கு காத்துக்கிட்டிருப்பேன்! பெரும்பாலும் அந்த மாதிரி நான் எதிர்பார்க்கிற நல்ல டைரக்டர்கள் படம் தொடர்ந்து ஹிட்டாவே வந்து நல்லாவும் இருக்கும். இந்த எதிர்பார்ப்புல மண்ணை தூவி போட்டது நம்ம பாண்டியராஜன் தான். அவரு முத இரண்டு படம், அதுவும் இரண்டாவது படம் 'ஆண்பாவம்' பார்த்துட்டு மூணாவது படம் 'மனைவி ரெடி'ங்கிற படத்தை ஆவலோட எதிர்பார்த்தேன் அப்ப, ஆனா, அது குப்பை! அப்படி சில டைரக்டர்களை எதிர்பார்க்க வச்ச விஷயத்திலே, ரொம்ப நாளைக்கப்பறம், அதாவது என்னோட கல்லூரி நாட்களுக்கப்பறம்னா, அது செல்வராகவன் தான்! ஆக இந்த புதுப் பேட்டையும் எதிர்பார்த்தேன்! படம் நல்லாதான் வந்திருந்தது, ஆனா, முத படங்களோட வித்தியாசமான ட்ரீட்மெண்ட் இதிலே இல்லை! சரி இந்த இந்தி தமிழ் நிழலுக படங்களை பத்தி பார்ப்போம்!

'சத்யா' படத்தோட கதை இது தான், ஹைதராபாத்ல இருந்து வேலை தேடி பம்பாய் வர்ற ஒரு இளைஞன் பேரு சத்யா, முதமுதல்ல தங்கறது ஒரு மாட்டுத் தொழுவத்திலே, அப்ப அங்க லோக்கலா மாமூல் வாங்கிறவனை, அவனுக்கே உண்டான துணிச்சல்ல அவன் முஞ்சியை அவன் பிளேடை கொண்டே கிழிச்சுடுவான். அப்புறம் ராத்திரி பார்ல வேலை செஞ்சப்ப, அங்க வர்ற ஒரு நிழலுக ஆசாமிக்கு ட்ரிங்ஸ் கொடுக்கிறப்ப தப்பி தவறி அவன் மேலே விழப்போய், அவன் முரட்டுத்தனமா இவனை அடிக்க, இவன் முறைக்க, அப்புறம் அவங்கிட்டயே வேலை செஞ்சு, அங்கேய்யும் அடிவாங்கி போலீஸ்ல மாட்டி, சிறையிலே ஒரு நிழலுக தாதாவோட மோதி, பின்னே அவன்கூட ப்ரண்ட்ஸிப் புடிச்சு, அவன் கேங்கிலேயே சேர்ந்துடுவான். கதாநாயகன் தான் அந்த கேங்குக்கே புத்திசாலித்தனமா வழிகாட்டி கொஞ்சம் கொஞ்சமா மேலே வருவான். அப்ப அந்த அண்டர்கிரவுண்ட் கேங்ககுள்ள வர அடிதடியிலே இவன் சேர்ந்த கேங்கு கை ஓங்கும். இந்த கேங்கெல்லாம் கட்டுபடுத்துற ஒரு லீடர் பெரிய அரசியல்வாதியா எலெக்ஷன்ல நிப்பான், அதுக்கு இந்த கேங் வார் இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு அடக்கி வாசிப்பான் அந்த லீடர் கொஞ்ச நாளைக்கு! கடைசியிலே எலெக்ஷன்ல ஜெயிச்சோன, சத்யாக்கூட இருக்கிற அந்த கேங் லீடரை போட்டு தள்ளிடுவான். அதனால கடுப்பாகி சத்யாவும் அந்த லீடரை போட்ட தள்ள சரியான சமயம் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப, விநாயகர் சதூர்த்தி அன்னைக்கு புள்ளையாரை கடல்ல கரைக்க போறப்ப போட்டு தள்ளி, கடைசியிலெ போலீஸ் என்கவுண்டர்ல அவன் செத்து போவான். துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால செத்து போவாங்கிற மாதிரி முடிச்சிருப்பாங்க!

'சத்யா' படத்தோட ஹைலைட் என்னான்னா, திரைக்கதை, அதிலெ ஒரு 'பிக்கு மாத்ரே'ன்னு கேங்லீடரா நடிச்ச மனேஜ் பாஜ்பாயோட ஆக்டிங் தான்! அப்படியே கண்ணுல ஆக்ரோஷத்தை காட்டிக்கிட்டு, பம்பாய் வழக்கு ஹிந்தி பேசிக்கிட்டு, அந்த அண்டர்கிரவுண்ட் தாதாவை அப்படியே கண் முன்னால கொண்டு வந்து நிறுத்தி இருப்பாரு. அப்புறம் சுக்லா ன்னு இன்னொரு நடிகர், 'மும்பாய் எக்ஸ்பிரஸ்' ஹிந்தி பதிப்புல நாசர் பண்ண ரோல் பண்ணுணவர்! 'பிக்கு மாத்ரே' ஜெயில்லருந்து விடுதலையாயி வந்தோன எல்லோரும் தண்ணியை போட்டுக்கிட்டு பாட்டு பாடற சீன்னு கிளாஸ், அதவும் அந்த கல்லு மாமான்னு நடிச்ச சுக்லா கண்ணுல போதை வழியறதை அழகா படம் புடிச்சிருப்பாங்க! பிறகு எப்படி ஹிந்தி சினிமா உலகம் தாதா கையிலே சிக்கிக்கிட்டிருக்குங்கறதை காமிச்சிருப்பாங்க! இது மாதிரி ஆளு வச்சு கொல்லுறதை 'சுபாரி' பாங்க ஹிந்தியிலே. அதை ஆப்ரேட் பண்றது எல்லாம் துபாய் மாதிரி இடத்திலருந்து, அது எப்படி ஆப்ரேட் ஆகுது, அப்புறம் கொலை பண்ற கூலி ஆட்களுக்கு துப்பாக்கி கூட புடிக்கத் தெரியாது, ஒரு பத்தாயிரம் கொடுத்தா கதையை கச்சிதமா முடிச்சிட்டு வந்துடுவாங்க, அப்படி வர்றப்ப மாட்டிக்கிட்டா அவங்களை போட்டு தள்ளறது எப்படின்னு சொல்லி படம் ரொம்ப சுவாரசியமா போகும்.

இந்த கதைக்காக ராம் கோபால் வர்மா ஆராஞ்ச வச்ச கதையை வச்சு ஒரு ஆறு ஏழு படம் இது மாதிரி எடுத்துட்டார். அதிலே இரண்டாவதா வந்த 'கம்பெனி', அப்படியே தாவூத் இப்ராகிம் கதை தான்! அதாவது தாவூத் இப்ராகிமுக்கும், அவன் முக்கிய கூட்டாளியான சோட்டா ராஜனுக்குமிடையே உண்டான கேங் வார் தான் அந்த கதை! அதிலே அப்படியே திரைக்கதை இவங்க கதை வச்சி பின்னுனது தான். ரொம்ப சுவாரசியமான ஒன்னு! பார்க்காதவங்க கண்டிப்பா கேசட் கிடைச்சா வாங்கி பாருங்க! இந்த படங்களுக்கும் தமிழ் வந்த புதுப் பேட்டைக்கும் வித்தியாசம், நம்மூர்ல தாதாவுக்கு கத்தி, வீச்சருவா மட்டும் தான், ஆனா இந்த பாம்பே பக்கம் எல்லாம், துப்பாக்கிங்க தான், அதுவும் கைத்துப்பாக்கிங்க விதம் விதமா! அந்த காலத்திலேயே நம்ம ஊர் எம்ஜிஆர் படமான நீரும் நெருப்பும் வந்தப்ப கத்தி சண்டை போட்டதை தான் காமிக்கப்பாங்க, ஆனா அப்ப வர்ற ஹிந்திப்படம் குதிரை, துப்பாக்கி தான் பிரதானம். அப்பலருந்து இப்ப வரை நம்ம கத்தியை கீழபோடல போலருக்கு!

அப்பறம் சத்யா படத்திலே வர்ற முதகாட்சிகள்ல அந்த சுபாரி கொடுத்த ஆளுங்களால ஒரு படத்தயாரிப்பாளர் சுட்டு கொல்லப்படுவது அப்படியே நிஜமான சம்பவம். அதாவது ஹிந்தி பாடல்கள் விக்கும் கேசட் இண்டஸ்ட்ரீயிலே அப்ப ரொம்ப பேமஸா இருந்த 'குல்ஷன் குமார்'னு ஒரு ஆளை போட்டு தள்ளுனது இதே மாதிரி தான்! அந்தாளு இந்த தாவூத் கும்பலுக்கு அடிபணியாம அவங்க கேட்ட எக்ஸ்டார்ஷன் தொகையை கொடுக்காத தாலே, போட்டு தள்ளுனாங்க, அதே மாதிரி இந்த படத்திலேயும் காட்சி அமைச்சு, காசுக்காக என்கிருந்தோ போன் வரும், அந்த புரட்யூசர், இல்லை நான அதெல்லாம் கொடுக்கமாட்டேன்னோன்ன அவரை போட்டு தள்றது இந்த குல்ஷன் குமார் எபிஷோட் தான்!

புதுப்பேட்டை படம் எடுத்துக்கிட்டா இப்படி நிஜ சம்பங்கள் பின்னனி எவ்வளவு இருந்ததுன்னு எனக்கு தெரியாது. ஏன்னா அந்த மாதிரி சம்பங்களை பிணைஞ்சு படம் எடுத்திருந்தாலும் அது லோக்கல் நியூஸா அடங்கி போயிருக்க வாய்ப்பிருக்கு! பெரிசா எதுவும் தெரியலை! அதனாலே கொஞ்சம் படம் சுவாரசியமில்லாம இருந்தது! ஆனா தனுஷ் நடிப்பு, சும்மா சொல்லக்கூடாது, வேணுங்கிறப்ப அழறதும், காட்டுத்தனமா கத்துறதும், அப்படியே ஆக்ரோஷமா கத்தி சுழட்டறதும் எல்லாமே நொடியிலே மாத்தி செஞ்சுக் காமிக்கிறதை நான் வேறே எந்த நடிகரும், இந்த இளவயது நடிகர்கள்ல பார்த்தது இல்லை! அதவச்சு பார்க்கிறப்ப, அந்த சத்யால வந்த பிக்கு மாத்ரே மாதிரி, மனோஜ் பாஜ்பாய் மாதிரி நடிச்சிருக்கிறது கொஞ்சம் ஒத்து போகுது!

அப்பறம் நமக்கே உரித்தான அந்த விபச்சார பெண்கள் சுழலல்ல கதை பண்ணிருக்கிறது வேணும்னா அப்படியே தமிழ் சினிமா ட்ரெண்ட்! செண்டிமெண்ட்டா சில காட்சிகள் வரணும்னு இந்த மாதிரி திரைகதை காட்சிகள் இன்னும் தமிழ் சினிமாவிலே எத்தனை காலத்து பண்ணுவாங்களோ தெரியாது. சத்யாவிலயும் மென்மையான காதல் துணைக்கதை நல்லா சொல்லி இருப்பாரு நம்ம வர்மா! அதில நடிச்ச ஊர்மிலா மட்டோங்கர் அப்படி ஒன்னும் ஆடாத பொண்ணுல்ல, அதை வச்சு செக்ஸியா ரங்கீலா பண்ணுன ஆளு தான் ராம் கோபால் வர்மா, ஆனா இந்த படத்திலே மென்மையான் காதல் ஒரு முரட்டு தாதாவுடன் வந்தப்ப, நம்ம புதுப் பேட்டை இந்த காதல் கல்யாண காட்சிகள்ல கொஞ்சம் சறுகல் தான்!

அதுவும், தான் கேங்கிலேயே இருக்கிறவன் தங்கச்சி கல்யாணத்து தலைவனா போயி தானே தாலி கட்றது, அப்பறம் தாலிகட்டனவளே தனக்கு கடைசியிலே வில்லத்தனமாகறது கொஞ்சம் புதுசா இருந்தாலும், அவ்வளவு அப்பீலா இல்லை. இதே போன்ற கல்யாண காட்சிகள் திரைக்கதையா வந்த சத்யா படம் எனக்கு ரொம்ப அப்பீலா இருந்துச்சு. கல்யாணத்தில தன் பொண்டாட்டியை சத்தாச்சுக்கிட்டு ஆடி பாடற பிக்கு மாத்ரே, அப்பறம் அமைதியா இருக்கும் சத்யா வரும் திரைகதை தொகுப்பு ரொம்ப் இயல்பா இருந்துச்சு பார்க்கிறதுக்கு! ஆனா தடாலடி கல்யாண காட்சி வர்ற புது பேட்டை அவ்வளவு ஜெல்லாகல்ல!

புதுப்பேட்டையிலே ஒரு சிறப்பா இருந்த ஒன்னு கதையிலே வச்ச ட்வுஸ்ட்ங்கதான், கதையின் யதார்த்தம், உள்ளதை உள்ளபடி எடுத்தது. அதுவும் ஃபேண்டஸி எதுவும் இல்லாம! இது தான் சிறப்பு இந்த படத்திலே! மேற்கொண்டு சில காட்சிகளை எடுத்து சொன்ன விதம், அதுவும் தனுஷவை கொண்டே எத்தனை குணாதிசியங்கள் கொண்டவன் அந்த தாதா, எல்லாம் வந்துட்டா ஆளு எப்படி, இல்லேன்னா அவன் எப்படின்னு சொன்னது புடிச்சிருந்தது. ஆனா நான் பார்த்து ரசிச்ச சம்பங்களின் கோர்வை, சத்யா படத்திலே இருந்த அளவுக்கு இந்த புதுப்பேட்டையிலே இல்லங்கிறது தான் உண்மை! நான் சொன்ன ஹிந்தி படம் நீங்க பார்க்கலேன்னா, அதையும் பார்த்துட்டு கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்தீங்கன்னா நான் சொல்றது புரியும்!

6 comments:

said...

உதயகுமார்,

நீங்க சொன்ன 'கம்பெனி' பார்த்து ரொம்ப நாளாச்சு. உண்மையைச் சொன்னா அதை மறந்தே போயாச்சு.
வீட்டுலே இருக்கு. ஆனா இன்னொரு முறை பார்க்கச் சோம்பல்.

வரவர ஹிந்திப் படம் பார்க்கவே பிடிக்கறதில்லை. நல்ல படங்களா ஒன்னுரெண்டு பார்க்கறதோடச் சரி.

said...

நான், நீங்கள் சொல்லியிருக்கும் இந்தி படங்களை பார்த்திருக்கிறேன்.

ஆனால் உங்கள் கருத்தோடு என்னால் ஒத்து போக முடியவில்லை.

எல்லாவிதத்திலும், சத்யா, கம்பெனியை விட புதுப்பேட்டை ஒரு படி மேலான படம் தான்..


சாரு புதுப்பேட்டை படத்தின் விமர்சனம் மிக அழகாக எழுதியுள்ளார் .. படித்து பாருங்கள்...

http://www.charuonline.com/kp216.html

said...

வணக்கம் வெ.னாதர்,
புதுப்பேட்டை ரொம்ப கத்துகுட்டி தனமா இருக்கும் , வசனம் மட்டும் தான் எதார்த்தமா இருக்கு.

said...

துளசி, நான் கம்பேர் பண்ணுனது சத்யாங்கிற படத்தோட, அது இருக்கா வீட்ல, இருந்த அந்த கேசட்டையும் போட்டு பாருங்க!

//வரவர ஹிந்திப் படம் பார்க்கவே பிடிக்கறதில்லை.// ஏன், அப்ப அப்ப நல்ல படங்கள் வந்துக்கிட்டு தானே இருக்கு!

said...

நக்கீரன், நானும் சாருநிவேதித்தா விமரிசனத்தை படைச்சேன்! அவரும் குறை நிறைகளை சொல்லி இருக்காரே! நான் சொல்ல வர்றது கதை சம்பங்கள் அதன் திரைக்கதை எல்லாம் தான். செல்வராகவன் கையாண்ட விதம் எனக்கு பிடிச்சிருந்தது! உண்மை சம்பங்களுக்கு நிகரா, அதை ரிச்சா செஞ்சு காமிச்சதுல ராம்கோபால் வர்மா மாஸ்டர்னு நிரூபிச்சிருப்பாரு! அதே மாதிரி கதை ஸ்க்வுன்ஸ்ல தொய்வே இருக்காது! உண்மை சம்பங்கள் கண்முன்னே நிக்கிறமாதிரி இருக்கும்!

said...

வவ்வால், நீங்க உல்டாவா சொல்றீங்க! பாலகுமாரனை ஏன் வசனம் எழுத சொன்னாங்கன்னு தெரியல்லை, ஒரு வேளை நாயகன் மாதிரி நிழலுக படக்கதைக்கு எழுதுனதால இருக்கலாம்! அவரோட எழுத்துக்கள் கதையிலே நல்லா இருக்கும், ஆனா சினிமா வசனத்துக்கு கொஞ்சம் இடிக்கும்! இந்த நாவலாசிரியர்கள்ல சினிமா கதை வசனம் எழுதனாலே கொஞ்சம் செயற்கை தான், நான் சுஜாதவையும் சேர்த்தே சொல்லுவேன்! பழைய பாரதிராஜா படங்களுக்கு வசனம் எழுதின ஆர் செல்வராஜ், பாக்யராஜ் படங்களை கொஞ்சம் போட்டு பாருங்க திரும்ப, நான் சொன்னது புரியும்!