Tuesday, July 11, 2006

The Phantom of the Opera- திரைக்குப்பின்னே!

இந்த ம்யூசிக்கல்ஸ் பத்தி ஏற்கனவே 'பாம்பே ட்ரீம்ஸ்' னு பதிவுப் போட்டப்பவே கொஞ்சம் சொல்லி இருந்தேன்! அப்பவே இந்த 'The Phantom of the Opera' பத்தி சொல்லி இருந்தேன்! அந்த இசை நாடகத்தை போனவாரம் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைச்சிது! இது சும்மா பட்டையை கிளப்பிக்கிட்டு இங்கே அமெரிக்கா, கனடாவிலேயும், அப்புறம் இங்கிலாந்திலேயும் ஒடிய ஒரு இசை நாடகம்! உங்கள்ல எத்தனை பேருக்கு இதபத்தி தெரிஞ்சிருக்குமோ, இல்ல போய் பார்த்திருப்பீங்களோ எனக்குத் தெரியாது! ஆனா, இந்த இசை நாடகம் பாம்பே ட்ரீம்ஸ் மாதிரி நம்ம ஊரு மசாலாவோட வந்த கதையில்லே! இது அந்த காலத்திலே, அதாவது 1900களில் இந்த 'Opera'ங்கிறது ரொம்ப பிரசித்துப் பெற்ற ஒரு இசை பாடல் தொகுப்பு, பிறகு அதோட நடனமும் சேர்ந்து ரொம்ப பாப்புலரான ஒன்னு. இது தோன்றினது பிரான்சு நாட்லதான்! அப்புறம் இது இத்தாலி நாட்லயும், ஜெர்மனியிலேயும் பரவ ஆரம்பிச்சி, பிறகு இங்கிலாந்துக்கும் போய் பிரசத்திம் பெற்ற ஒரு கலை! நம்ம ஊர்ல அந்த காலத்திலே உச்சஸ்தாயிலே சின்னப்பா, பாகவதர் பாடின பாடல்கள் மாதிரி, ஒரு மாதிரி இழுத்து அடித்தொண்டையிலேயிருந்து மூச்சு விடாம பாடனும்! இதுக்கு தனித் திறமை வேணும்! அப்படி 'Opera' பாடல்களோட சேர்த்து அழகா தொகுத்த ஒரு கதை, அதுவும் நாடகம் போடும் கோஷ்டி, அந்த 'Opera' நடக்கும் நாடக அரங்கத்தின் கீழே பேய்னு சொல்லிக்கிட்டு தன்னுடய முக உருவத்தை மறச்சி வச்சிக்கிட்டு இருக்கக்கூடிய ஒருத்தனுக்கு, இந்த 'Opera' இசை நிகழ்ச்சிக் கேட்டு கேட்டு இந்த இசை ஞானம் வந்து அத வச்சி கதாநாயகிக்கு கத்து கொடுத்து, அப்பறம் தன்னை காதலிக்க சொல்லி அந்த பேய் வற்புறத்த, மறுத்து காதலனோட திருப்பி ஒன்னு சேர்ற மாதிரி அப்படி இப்படின்னு கதை போகும்! ஆனா கதையைவிட இந்த நாடகத்தின் திரை மறைவிலே இருந்த டெக்னிக்ல சமாச்சாரங்களை படிக்கும் போது நம்ம ஆர் எஸ் மனோகர் போட்ட நாடகம் மாதிரி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோட பார்த்த திரில்! ஆர் எஸ் மனோகர் நாடகங்களை விட டெக்னிக்லா கம்ப்யூட்டர் உதவியோட காட்சிகள் அமைத்து நடைபெற்ற இந்த நாடகத்தை பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!

இந்த Opera பத்தி சொல்லுனும்னா சின்னவயசிலே நான் அனுபவிச்ச சில விஷயங்களை சொல்லியாகனும்! நான் அப்ப எட்டாவது படிச்சிக்கிட்டிருந்த நேரம், நாங்க குடியிருந்த வீட்டுக்காரங்களோட பெரிய மகனனொருத்தர் காலங்காத்தால ரேடியாவை சத்தமா வச்சிக்கிட்டு இந்த Opera மாதிரி பாட்டை தான் கேட்பாரு! ஒ..ஏதோ இங்கிலீஷ் பாட்டைத்தான் கேட்கிறாருன்னு நானும் ஆர்வமா கேட்பேன். நானும் அந்த மாதிரி ரேடியாவெல்லாம் திருகி திருகி அந்த ஸ்டேஷனை வச்சி அந்த பாட்டை கேட்க முயற்சிப்பேன்,ஆனா ஒரு எளவும் வராது, அந்த மாதிரி பாட்டை போடற ஸ்டேஷனை எங்கடான்னு ஒன்னும் தெரியாம முழிப்பேன்! என்ன திருகியும் ஒன்னும் வராது! அப்ப எனக்குத் தெரியிலே இந்த Opera பத்தி! அதே மாதிரி கொஞ்சம் வயசுப்பையனான்னே, இந்த மாதிரி சத்தமா ரேடியாவை அலற வுட்டுக்கிட்டு இங்கிலீஷ் பாட்டு போட்டுக்கிட்டு தெருவுக்கே கேட்கிறமாதிரி வைப்பேன். நம்ம ஒன்னும் கேட்கிறதில்லை, அது புரியப்போறதுமில்லை! அப்ப நம்ம வீட்டை கடந்து சில பிகர்ங்க போய் வரும், அதுங்க கவனத்தை கவர, ஓ.. இந்த வீட்டு பையன் இங்கிலீஷ் பாட்டெல்லாம் கேட்பாருடின்னு, சில பொண்ணுங்க அப்படி இப்படி நம்ம வீட்ல நம்மல தேடி கண்ணு மேயும்! வாலிப கிறுக்குன்னு சொல்ற மாதிரி இந்த சேஷ்டை எல்லாம் பண்ணியிருக்கேன்! அது சட்னு ஞாபகம் வந்துச்சு, அதான் எழுதிப்புட்டேன்! சரி விஷயத்துக்கு வருவோம்!

இந்த The Phantom of the Opera இசை நாடகத்துக்குன்னு ஏகப்பட்ட சீன் செட்டிங்கஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் செஞ்சிருக்காங்க! இந்த நாடகத்திலே ஒரு சாண்டிலியர், அதான் பெரிய மஹால்ல எல்லாம் தொங்குமே, விளக்குச்சரம், அதான், அதை அப்படியே கீழே இருந்து மேலே ஏத்திக்கிட்டு போவாங்க அதை கொஞ்ச தூரம் பார்வையாளர்கள் உட்கார்ந்திருக்கிற பகுதிக்கு மேலே தானா எம்பி மேலே போகும், ஏதோ மேஜிக் மாதிரி இருக்கும்! ஒரு பெரிய தேவதைகளின் வெண்கல சிலை மேடையின் நடுவே தொங்க விட்டு அந்த Opera அரங்கத்தின் கூரை மேலே இருப்பது போன்ற காட்சி அமைப்பு! அதேமாதிரி திரைச்சீலைகள் 2700 முழம் நீளத்திலே இருக்க க்கூடிய விலைமிகுந்த திரைச்சீலைகள் ('Draperies') எல்லாம் அந்த விக்டோரியா காலத்தில் அவர் மாளிகையில் இருந்த பெரும் திரைச்சீலைகள் நாடகத்தின் முழுதும் உபயோகப்படுத்தி இருந்தாங்க! மிகப்பெரிய அரண்மனை தூண்கள் செட்டிங் செஞ்சு அதற்கு பின்புறம் ஏணிப்படிகள் அமைத்து, அதாவது பார்வையாளர்காளுக்கு தெரியாத வண்ணம், அந்த Phantom னு சொல்லக்கூடிய பேய் தோன்றி மறைவதற்காக ஏறி செல்ல வசதியா செய்து வச்சிருந்தாங்களாம்!

ஒரு சீன்ல இந்த Phantom னு சொல்லக்கூடிய பேய், கதாநாயகியை படகில் அழைத்து வருவது போன்ற காட்சி, அதற்காக பத்து புகை மூட்டம் ஏற்படுத்தக்கூடிய fog மெஸின்களை வச்சி அதை பைப் மூலமா பீச்சீ அடிச்சி புகை மூட்டத்தை உண்டாக்கி அதிலே அப்படியே படகினை ரிமோட் கண்ட்ரோலால் இயக்கி, அதை செலுத்தி, அவங்க ரெண்டு பேரும் வருவது போல காட்சி அமைத்திருப்பார்கள்! மேடையின் மேலே ஒரு இஞ்சுக்கு இன்னொரு பலகையில் ஆன மேடையை அமைத்து, அதற்குள் மெழுகுவர்த்தி போன்ற சிறிய விளக்குகளை மறைத்து வைத்து அதை "Phantom's Lair" என்ற பாட்டு வரும் காட்சியில் அழகாக உயர்த்தி எரிய வைத்து அப்படியே மின்மினி பூச்சிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றொன்றாக எரிய வைத்து அப்படியே மேஜிக் போன்ற வித்தை காட்டி இருப்பார்கள். அவை அத்தனையும் இயக்க கம்ப்யூட்ர் கண்ட்ரோலால் உயர்த்தி அப்படியே ஆச்சிரியபட வைத்து விடுவார்கள்!

அதே போல மேடையின் உள்ளே 'Travelator' என்கிற 'elevator cum Platform' போன்ற பிரிட்ஜ் ஒன்றை அமைத்து காட்சிகளுக்குத் தேவையான பாலத்தையோ, இல்லை சுடுகாட்டில் இருக்கக் கூடிய சமாதி மற்றும் சிலுவைகளையோ, இல்லை மேலேயும் கீழேயும் காட்சி பொருள்களை எடுத்து செட்டிங்ஸ் செய்து காட்சிகளுக்கு ஏற்ப அதை அமைக்க எலெக்டிரிகல் மோட்டரால் இயங்க கூடிய இந்த 'Travelator'ஐ உபயோக படுத்தம் பொழுது எனக்குத் தெரியவில்லை, 'எப்படி கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகளை மாற்றுகிறார்கள் என ஆச்சிரியப்பட்டுக் கொண்டிருந்தேன்'. இதன் பின் உள்ள இந்த 'Travelator'சூட்சமம் தெரிந்தவுடன் தான் எல்லாம் விளங்கியது! அதே போல காட்சிகளுக்கு தேவையான சீன்கள் கொண்ட படுதாவை மிக உயர்ந்த நிலையில் வைத்து, அதாவது ஸ்டேஜின் மேலே மிக உயரத்தில் வைத்து 'Counter weight/Fly system' என்கிற அமைப்பால் காட்சிக்குத் தேவயான படுதாவை ஏத்தி இறக்கி, நொடிப் பொழுதில் காட்சிகளை கொண்டு வருவதும், அதே போல் மேடையிலே கண் மூடி கண் திறக்கும் முன் நடிக்கும் நடிகர்களின் உடைகள் மாறி என்னவோ சினிமாவில் காட்சிகள் மாறுவது போல இருந்தது!

ஸ்டேஜ் மேனேஜர் என்கிறவர் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு 350க்கும் மேற்பட்ட அடிகளையும்(நம்ம ஊர்ல ப்ராம்ட்ம்பாங்க, இங்கே 'Cue') எடுத்துக்கொடுத்து அவர்களை இயக்க வேண்டும். அதே போல மூன்று கேமிராக்களை மறைவான இடத்தில் மறைத்து வைத்து மேடையில் என்ன காட்சிகள் எப்படி நடக்கிறது, எதில் என்னக் குறை இருக்கிறது என்பதை மேடைக்கு பின்னே அமர்ந்து அதை மானிட்டர்களில் கண்காணித்து உடனுக்குடன் தவறுகளை திருத்தம் செய்து, காட்சிகள் நன்றாக நடந்தேறிவிட்டனவா, கேரக்டர்கள் சரியாக வசனமோ, பாட்டோ டைமிங்கில் சொல்லி விடுங்கின்றனரா, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பொருட்கள், காட்சிக்கு தகுந்தாற் போல் வருகின்றனவா என கண்கானித்து, இல்லை எனில் அதை செம்மை செய்து, எந்த குறையுமில்லாமல் நாடகத்தை நடத்துகிறார்கள் என்று பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சிரியம் தாளவில்லை! அதே போல 'Pyrotechnic effects' என்று சொல்லக் கூடிய விளக்குகளின் ஜாலம், அதாவது 'flash light' கதிர்களை விழச் செய்ய அரங்கத்தில் 14 இடங்களிலிருந்து, அதாவது '14 flashPots' உபயோகித்து காட்சிகளை அந்த இருண்ட நாடக அரங்கத்திலே செய்து காட்டியப் பொழுது என்னமோ ஷங்கர் பட பிரமாண்டம் போல் இருந்தது!

இதை எல்லாம் நாடகம் போட்டவன் என்ற முறையில் எனக்குத் தெரியும் எவ்வளவு கஷ்டமான காரியம் என்று! வெரும் துணுக்கு தோரணங்களான எஸ் வி சேகர் போன்றோரின் நாடகங்கள் எல்லாம் கேரெக்டர்கள் வந்து பேசி ஆடியன்ஸை சிரிக்க வைத்து விட்டு போய்விடுவார்கள். அதற்கு ஏன் மேடை ஏற வேண்டும்!தெருக்கூத்திலே எல்லாவற்றையும் செய்து காட்டி விடலாம்! கஷ்டபட்டு செட்டிங்ஸ் போன்ற அதிசியக்க கூடிய சரித்திர நாடகங்கள் போட்ட ஆர் எஸ் மனேகரின் நாடகங்கள் தான் எனக்கு இதை பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வந்தது! ஏனென்றால் நாங்களும் எங்கள் கல்லூரி காலத்தில் இந்த பேக் ஸ்டேஜ் டைரக்ஷனுக்காக நிறைய கஷ்டபட்டிருக்கிறோம்! அந்த காலத்தில் ஸ்ட்ரோப் லைட் வைத்தும், ஆர்க் லைட், மற்றும் ஒன்னு இரண்டு ஸ்பாட் லைட் வைத்து விளக்கு கதிர்களின் மூலம் காட்சிகளின் பிரமாண்டத்தை கொண்டுவருவதற்காக ஏக பாடு பட்டிருக்கிறேன்! அதனால் சொல்கிறேன், இந்த நாடகத்திற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் என்னை உண்மையிலேயே பிரமிக்க வைத்தது!

இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் இவர்கள் ஊர் ஊராக அதே காட்சி அமைப்புகளை கொண்ட மேடை அமைக்க இவர்களுக்கு குறைந்தது நான்கு மாதங்களாவது பிடிக்குமாம். என்னமோ சர்க்கஸ் எடுத்துக்கிட்டு ஊர் ஊராக கூடாரமிட்டு நிறுவது போல! ஆக அமெரிக்கா வாழ் தமிழ் ஜனங்களே, உங்க ஊர் பக்கம் இந்த நாடகம் வந்தா கண்டிப்பா, நான் சொன்ன இந்த நாடக தொழில்நுட்பங்களை பார்த்து பிரமிக்க முடிஞ்சா போய் ஒரு எட்டு இதை பார்த்துட்டு வாங்க! இல்ல நியூயார்க் பக்கம் வரும் நம் மக்களே டைம்ஸ் ஸ்கொயர் பக்கம் இருக்கும் பிராட்வே தியோட்டரில் இது ஒடிக்கிட்டிருந்த போய் பாருங்க! அதே மாதிரி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து , சிங்கப்பூரில் எல்லாம் வந்து போட்டாங்கன்னா இந்த தொழில்நுட்ப அதிசியத்துகாகவே போய் பார்க்கலாம். நம்ம ஊரில் இப்ப நாடகங்கள் அவ்வளவா சிறப்பா இருக்கிறதில்லை, அதுவும் ஆர் எஸ் மனேகரின் மறைவுக்குப் பிறகு, இது போன்ற அதிசியக்க கூடிய நாடகங்கள் யாரும் தமிழில் போடுதில்லை! ஏன் நாம் இது போன்ற கேளிக்கைகளில் வளர்ந்த தொழில்நுட்பங்களை உபயோக படுத்துவதில்லை என்பது தெரியவில்லை! வெறும் வசனங்களையே எத்தனை நாள் தான் நம்பிக் கொண்டிருப்பது?

PS: சாம்பிளுக்கு, ஆர் எஸ் மனோகர் நாடக விமரிசன சுட்டி இதோ!

4 comments:

said...

நீங்கள் கூறியுள்ள இந்த நாடகத்தை தமிழ் நாட்டிலிருக்கும் என்னால் பார்க்க முடியாவிட்டாலும், ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை (அரை குறையாத்தான் - ம்ஹும், எங்க பாக்க விடுறாங்க...) பார்த்திருக்கிறேன்..

அதில் நீங்கள் கூறுவதைப் போல், கூடுதலாக படமென்றாலும் கதைப் படி கதையையே நாடகம் போல் காட்டுகிறார்கள்(என்று நினைக்கிறேன், திரைக்கதை புரியவில்லை, காட்சியை வைத்து சொல்கிறேன்)

குறிப்பாக, முதல் காட்சியில் அலட்டலாக ஒரு கதாநாயகி பிசகாக பாடிக்கொண்டீருக்க, நாயகி அருமையாக பாடிக் காட்டுவார். மிகவும் ரசித்தேன்..

உங்கள் பதிவும் நன்றாக இருந்தது...

//1900களில் இந்த 'Opera'ங்கிறது ரொம்ப பிரசித்துப் பெற்ற ஒரு இசை பாடல் தொகுப்பு, பிறகு அதோட நடனமும் சேர்ந்து ரொம்ப பாப்புலரான ஒன்னு. இது தோன்றினது பிரான்சு நாட்லதான்! அப்புறம் இது இத்தாலி நாட்லயும், ஜெர்மனியிலேயும் பரவ ஆரம்பிச்சி, பிறகு இங்கிலாந்துக்கும் போய் பிரசத்திம் பெற்ற ஒரு கலை! //

The King of Mask என்ற திரைப்படத்தில் தான் Operaவைப் பற்றி முதன்முதலாக அறிந்து கொள்ள வாய்த்தது.. அதுமுதல், இது சீன கலாச்சரமென்றே (அதாவது நம்ம ஊர் கூத்து மரபைப் பொன்றது) நினைத்திருந்தேன்..


அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்...

said...

சார்

அருமையான பதிவு..

நாடகத்தை நேரில் பார்த்தது போல் உணர்வை ஏற்படுத்துவிட்டீர்கள்..

மிக்க நன்றி.

said...

லிவிங் ஸ்மைல், வருகைக்கு நன்றி! //அரை குறையாத்தான் - ம்ஹும், எங்க பாக்க விடுறாங்க...)// என்ன அப்படி தொந்தரவு படம் பார்க்க முடியாம? ஏன் அரைகுறை??

said...

இந்தப் படத்தை நான் டிவிடியில் பார்த்தேன். அருமையான படம் ஆனால் பொறுமையில்லாதவர்களும்ஈ கலா இரசனை உள்ளவர்களும் இரசிப்பது சிறிது கஷ்டம்தான். உங்கள் தகவல்களுக்கு நன்றி....