Tuesday, February 14, 2006

காதல் சந்யாசியே, நீ வாழ்க! நீடூடி வாழ்க!

இன்னைக்கு என்னமோ காதலர் தினமுன்னு உலகமே அல்லோகல படுது, அது என்னாதான்னு கொஞ்சம் கேட்டப்ப, இதை பத்தி, ஏழெட்டு கதை சொலறாங்க. நம்ம பண்டிகைங்க மாதிரி, நரகாசுரனை கொண்ணு தீபாவாளி கொண்டாடுன மாதிரி, என்ன கதைன்னு பார்த்தப்ப, இது சிறப்பான ஐரோப்பிய நாகரீகத்திலிருந்த வந்த ஒன்னு, இந்த கொண்டாட்டம் எப்படின்னா, ஏதோ சந்நியாசியப்பத்தி சொல்றாங்க, அந்த காலத்தில ரோம ராஜியத்தில கண்ணாலம் கட்டாத ஆண்பிள்ளைங்க கண்ணாலம் ஆன ஆம்பளங்களை விட வழுவா ராணுவத்துக்கு உழைப்பாங்கன்னு அந்த கால ராஜா யாரும் கண்ணலாம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாராம், அப்ப கல்யாணம் பண்ணி வைக்கிற பூசாரி, யாருக்கும் தெரியாம கண்ணலாம் பண்ணி வச்சாராம், புறவு இது தெரிஞ்சு, ராஜா, அந்த சந்நாசியை கொன்னுட்டாராம், அவரு நினைவா கொண்டாடுறதா சொல்றாங்க! சில பேரு சொல்றாங்க அவரை ஜெயில்ல போட்டு இருந்தப்ப, அந்த ஜெயிலர் பொண்ணு மனசில இடம் புடிச்சாராம், அப்ப அந்தம்மாவுக்கு,ரோசாப்பூ எல்லாம் கொடுத்து 'என்றும் உன்னுடய வேலன்டைன்' ('From your Valentine') கடுதாசி கொடுத்து தன் அன்பை வெளிப் படுத்தினாராம்.அவரு அப்படி ஆசையா எழுதி தெரிவிச்ச அன்பை, இப்ப அடையாளமா எல்லாரும் தத்தம் காதலர்களுக்கு வாழ்த்து சொல்லி தெரிவிக்கிற நாளா கொண்டாடுறாங்களாம்! அப்புறம் இதெல்லாம் விவரம் தெரிஞ்சு அவரை கொண்ணுட்டங்கன்னு சொல்றாங்க. கதை எப்படியோ, இந்த சந்நாசி மேல ஒரு பரிதாபம், பச்சாதாபத்தோட, கதாநாயகனா உருவகப்படுத்தி பார்க்க போயி, ரொம்ப முக்கியமா, காதிலின் சின்னமா அவரை நினச்சதால, இந்த சந்நாசிக்கு பேரும் புகழும் வந்திச்சாம். அப்புறம் இந்த காதலர் தினத்துக்கு அடையாளமா இறக்கைகள் கொண்ட குழந்தை 'ஈரோஸ்', அதாவது காதல் தேவதை 'வீனஸ்' பையனைத்தான் காதல் கடவுளா கை எடுத்து கும்புடுறாங்களாம்! நம்ம தமிழ் காதல் கடவுள் முருகனை கும்பிடற மாதிரி!

ஆக இந்த கதை எல்லாம் முன்ன எனக்கு ஒரு மண்ணும் தெரியாது போங்க! இந்த காதல்னா என்னன்னு சின்ன வயசில, ஒன்னும் அறியா பருவங்கள்ல நடந்த நிகழ்ச்சிங்க தான் ஞாபகம் வருது.

அப்ப நான் மூணாவதோ, நாலாவதோ படிச்சிக்கிட்டு இருந்த நேரம், என்னுடய தூரத்து சொந்தத்து அக்கா ஒன்னு, திடீர்னு அவங்க அண்ணனோட நண்பனை காதலிச்சு, ஒரே அமர்க்களமாயி, கடைசியில நீயும் வேணா உன் உறவும் வேணான்னு போயிட்டாங்க. நான் கொஞ்சம் அந்த அக்கவோட பாசமா இருப்பேன், தினம் சாய்ந்திரம் அவங்களோடத்தான் வெளையாடுவேன். திடீர்னு அவங்க காணாம போனோன்ன, என்னா ஏதுன்னு புரியாத வயசு, அந்த அக்கா இனி நம்மலோட இருக்க மாட்டாங்க, அவ்வளவுதான்னு சொன்னோன்ன சுருங்கிப் போன நாட்கள் எத்தனையோ! அப்ப அந்த காதலின் பலம் என்னான்னு தெரியல. அது மாதிரி அந்த அக்காவோட தோழி ரொம்ப நல்லவங்களா எங்க சொந்தக்கரங்களுக்கு தெரிஞ்சவங்க, அந்த அக்கா காதலுக்கு உதவனதால எதிரியா எல்லாரும் பாவிக்க ஆரம்பிச்சோன, நமக்கும் ஒன்னும் தெரியாம, எல்லாரும் வெறுக்கறாங்கன்னு அந்த அக்காவோட தோழி வீட்டை கடக்கிறப்ப இனம் புரியா வெறுப்பு நமக்கு வரும் அந்த விவரம் தெரியா வயசில. அப்பவும் தெரியல காதல்னா என்னான்னு!

அப்புறம், கொஞ்சம் பெரியவன் ஆனோன்ன, ஏழாவதோ, எட்டாவதோ படிக்கிறப்ப, எங்க தெரு கடைசி வீட்ல இருந்த அக்காவுக்கு, எங்க அண்ணமாருங்களும் அவங்க தோஸ்த்துங்களும் சேர்ந்து காதல் கடுதாசி நம்ம மூலமா கொடுத்துவிட்டப்பையும், புதிய வார்ப்புகள்ல வர காஜா ஷரிப்பு மாதிரி 'டுர்ர்ர்'னு பஸ் ஓட்டிட்டு போயி கொடுக்கத்தான் தெரிஞ்சுச்சு. அந்த காதல் என்னான்னு ஒரு மண்ணும் தெரியல, ஆனா இது விவரமான சங்கதி ஏதோ ஒன்னுன்னு அவங்க காட்டிக்கிற உற்சாகத்திலருந்து தெரிய வந்திச்சு. அந்த அக்காவை பார்க்கறச்ச, மத்த அக்காங்களை விட இந்த அக்கா மேல என்னமோ ஒரு புதுவிதமான ஈர்ப்பு இருந்தென்னமோ உண்மை தான்! அப்பையும் காதல்னா என்னான்னு தெரியல்லை!

பிறகு என் நண்பன் தங்கையை கிண்டல் பண்ண பசங்களை அடிக்க போயி, அந்த பொண்ணு நம்ம மேல ஏதோ அந்யோன்ய சினேகமா நம்ம கிட்ட இருந்தப்ப நம்ம மனசு அல்லாடும், அடிக்கடி பார்த்துக்கனும், பேசனும்னு தோணும், ஆனா அது just ஒரு கவர்ச்சி, அதுக்கு மேல எதுவும் பண்ணத்தோணல, அவங்க வீட்டுக்கு போயி ஏதோ விளையாடி,அதுக்கூட இருந்து பொழுது போக்க தோணுச்சே தவிர வேறே எதுவும் தோணல, காதல்னு என்னான்னு தோணல!

கொஞ்சம் நாளுக்கப்பறம், அந்த வாலிபம் வரத்தொடங்கனப்ப, ஆயிரத்து எட்டு முறை எங்க பெரியம்மா வீட்டு தெரு முகனை அடிக்கடி தேவையில்லாம கடக்கத்தோணும், ஏனா, அந்த கடைசி வீட்டு கமலி பார்க்காதா நம்மலை, சைட் விட்டு பேச மனசு அல்லாடும். அவ பக்கத்து வீட்டுல இருக்கிற என் ஃப்ரண்டு வள்ளியப்பன் எப்பவும் அந்த கமலியோட பேசிகிட்டு நிக்கிறதை பார்த்து மனசு பொறாமப்படும், ஆனா அவனா கமலியோட பேச ஏற்பாடு பண்ணி கொடுத்த சந்தர்ப்பங்களையும் தவற விட்டு விட்டு, மனசு அல்லாடும், அந்த கமலியும் அப்ப கடக்கிறப்ப நம்மல வெறுப்பேத்த ஏக்கத்தோட பார்க்குமே தவிர, கிடச்ச சந்தர்ப்பங்கள்ல தானா பேச முன்வந்ததில்லை. இது போன்ற காதல் ரசாயன மாற்றம் ஏற்பட்டப்பையும், காதல்னா என்னான்னு தோணல. ஏதோ இன கவர்ச்சி உணர்வுகள் வந்ததோட் சரி. காதல்னா என்னான்னு தெரியலை!

அப்புறம் காலேஜ் போயி, ஸ்டடி லீவுக்கு ஊருக்கு வரப்பெல்லாம் தெரு பசங்களோட சேர்ந்து தெரு மொகனயில நின்னு போற வர பொண்ணுங்களை சைட் அடிக்கிறப்ப, கூட இருந்த ஒருத்தன் எப்பவும் எட்டே முக்காலுக்கு கடக்கும் ஆட்டோவை குறிவச்சி, அதில வந்த கான்வென்ட் பொண்ணை டாவடிச்சு, அப்புறம் சினிமா, பூங்கான்னு சுத்தி எங்களுக்கு விஷயம் தெரிஞ்சப்பையும், என்னடா, நம்ம கூட இருந்து இவ்வளவு விவரமா சிக்னல் கொடுத்து, கரக்டா அந்த பொண்ணு மனசில இடம் புடிச்சு காதிலிச்சப்ப பொறாமையா இருந்திச்சு. பிறகு அந்த பொண்ணு அப்பங்காரன் அவனை போலீஸ்ல கொண்டி வச்சோன, வாதாடி அவனை மீட்டு, துவண்டு கடைசியல நொந்து போயி ஒன்னுமே வேணான்னு பைத்தியக்காரன் மாதிரி இருந்த அவனை தேத்தி ஏதோ திரும்பி வாழ வச்சப்பையும், இந்த காதல் என்ன கருமாந்திரமோ, ஆளை இப்படி ஆக்குதேன்னு கரிசன படத்தான் முடிஞ்சது. அப்பவும் காதல்னா என்னான்னு தெரியல்ல!


ஆனா வந்ததே நமக்குன்னு காதல், அதென்னமோ சரியான காலகட்டத்தில வரனும்னு, இஞ்சினியரிங் படிச்சு முடிச்சு, வேலை, பொறுப்புகள்னு ஏத்துக்கிட்டோன, எனக்குன்னு ஏங்கின பொண்ணை பார்க்க, பேச, நானும் ஏங்கின நேரங்கள்ல, தெரிஞ்சதே காதல்னா என்னவென்று. அந்த காதல் உணர்வுகள் அப்பொழுதும் மட்டுமில்லை, எப்பொழுதும் தான்! இதெற்கென்று கொண்டாட்டம்னு ஒன்னு உண்டுன்னு தெரிஞ்சாலும் சரி, தெரியாவிட்டாலும்சரி என்னிடத்தில் எப்பவும் இருப்பது என் காதல். அவளை கண்ட நாள் மட்டும் அல்ல, மணம் கொண்ட நாள் மட்டும் அல்ல, என்னுடன் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல, இனி வரப்போகும் எல்லா நாட்களிலும் உண்டு என் காதல்!

ஆக உண்மையில் எதுதான் காதல் என்று அலைபாயும் அன்பர்களே, தத்வார்த்த உண்மை இது தான்!

இதுதான் காதல் என்று, அறுதியிட்டுச் சொல்ல முடியாததுதான் காதல். உலகம் ஏகமனத்துடன் ஒப்புக் கொள்ளும் பொதுவான விளக்கத்தை யாரும் காதலுக்குச் சொல்லவில்லை. என்றாலும் காதலை அவரவர் சொந்த உணர்வும் அனுபவமும் சார்ந்தது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இக் காதலர் தினம் கொண்டாடத்தில் இந்த பதிவை பதிக்க காரணமாயிருந்த காதல் சந்யாசியே, நீ வாழ்க! நீடூடி வாழ்க!

0 comments: