Monday, March 27, 2006

சென்னை வந்தது ஜப்பான் - உதயமாகும் புதிய இந்தியா!

நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தேன், 'உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே' என்று. இந்த பதிவிலே நான் நமது அசுர வளர்ச்சியின் தாக்கத்தை உலகம் எப்படி ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதிலும் 'Deming Prize' பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன், அதன் சுட்டியையும் உங்களுக்கு சொல்லி இருந்தேன். ஆனால் இந்த வார ஆனந்த விகடனில் 'சென்னை வந்தது ஜப்பான்' என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தீர்களா?. படிக்காதவர்களுக்கு இதோ அந்த பிரசுரம்.

சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் ஒரு மான்ட்டேஜ். அந்த காட்சியில் நம் நாடு முன்னேறிய நாடாக உருவெடுத்திருக்கும். வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வார்கள். நம் நாட்டு மக்கள் எல்லாம் துபாய் ஷேக் போல குகு படகுக் கார்களில் பவனி வருவார்கள். சேரனின் இந்தக் கனவு எந்த அளவுக்கு மெய்ப்படும், எவ்வளவு சீக்கிரம் மெய்ப்படும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், சேரனின் கனவோடு மிகப் பொருந்திப் போகக்கூடிய காட்சி ஒன்றைக் கடந்த வாரம் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலையில் பார்க்க முடிந்தது.

டொயோட்டோ கார் கம்பெனியில் ஆரம்பித்து ஜெ.டி.பி. கார்ப்பரேஷன், ரினாய் கார்ப்பரேஷன்... என ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோ மொபைல் கம்பெனிகளின் முதலாளிகள், உயர் அதிகாரிகள் என இருபத்தைந்து பேர் சென்னை, பாடியில் இருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலைக்கு வந்திருந்தார்கள். அவர்களை அங்கே இழுத்து வந்தது எது தெரியுமா? தரம்!

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு டெமிங் விருது (Deming Prize). இப்படிப்பட்ட மிகப் பெரிய விருதை ஜெயித்திருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தயாரிக்கும் ஸ்டார்ட்டர் மோட்டார், டைனமோ, ஹெட் லாம்ப் ஆகிய உதிரிபாகங் களைத் தாங்கி ஓடாத காரோ, மோட்டார் சைக்கிளோ உலகத்திலேயே இல்லை என்கிற அளவுக்கு, உலகெங்கும் இந்த கம்பெனியின் தயாரிப்புகள் செல்கின்றன. இதுதான் ஜப்பானியர் களை இந்த கம்பெனி நோக்கி இழுத்ததா?

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியிடம் ஜப்பானியர்கள் பாடம் படிக்க வருகிறார்கள் என்றால், இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? இதற்கும் மேல் வலுவான காரணம் வேண்டும் அல்லவா?

இந்தக் கேள்வியை, அந்த ஜப்பானியக் குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்த ததாஷி ஒனிஷியிடம் கேட்டோம்.

சென்ட்ரல் ஜப்பான் பகுதியில் இருக்கும் டொயோட்டா குரூப் கம்பெனிகக்கும், அவற்றைச் சார்ந்த கம்பெனிகக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் கம்பெனிகள் அனைத்துக்கும் தரக்கட்டுப் பாடு என்பதுதான் தாரக மந்திரம். தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் தொழிற் சாலைகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... அதைத் தேடிச் சென்று பார்வையிடுவது மட்டுமல்ல, அதனிடமிருந்து பாடங்கள் படிப்பதும் எங்கள் வழக்கம். அந்த வகையில்தான் லூகாஸ் டி.வி.எஸ்.ஸுக்கு வந்திருக்கிறோம் என்றார் ததாஷி ஒனிஷி.

சரி, அப்படி என்ன அதிசயம் நடக்கிறது டி.வி.எஸ்.லூகாஸில்?

டோக்கியோவில் உள்ள ஆஸ்மோ கம்பெனியைச் சேர்ந்த சுட்டூமூ சுசுகி இதற்குப் பதில் சொன்னார். இன்று காலையில் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற் சாலையின் அனைத்துப் பிரிவுகக்கும் சென்று, இங்கே தயாரிக்கப்படும் பொருள்களைப் பார்த்தோம். பொருள் கள் மட்டுமல்ல, அவை இங்கே தயாராகும் முறைகூட உலகத் தரத்தோடு இருப்பதைக் கண்டோம்.

இங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எவருமே ஏதோ தொழிற்சாலைக்கு வந்தோம், அன்றைய வேலையை முடித்தோம், கிளம்பினோம் என்றில் லாமல், மனித உயிர்களோடு சம்பந்தப் பட்ட வாகனங்கக்கான உதிரிபாகங் களைத் தயாரிக்கிறோம் என்கிற உணர்வோடு, தங்கள் வேலையை பயபக்தியோடு செய்கிறார்கள். இத்தகைய தொரு தொழில் பக்தியை நாங்கள் வேறு எங்கும் கண்டதில்லை!

சுட்டூமூ சுசுகியைக் கவர்ந்த வேறு ஒரு அம்சமும் இந்த கம்பெனியில் இருக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில்கூடத் தொழிலாளர்கள் இங்கே வந்து தாங்கள் வேலை செய்யும் மெஷின்களை சர்வீஸ் செய்கிறார்கள். உற்பத்தியாகும் பொருளின் தரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் இயந்திரம் பழுதடைந்திருந்தால், அதைத் தாங்களே கண்டுபிடித்துச் சரி செய் கிறார்கள். தரக்குறைவான ஒரு பொருளைத் தான் தயாரிப்பது கம்பெனிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் தனக்கே கேவலம் என்று ஒவ்வொரு தொழிலாளியும் இங்கே கருதுகிறார். இதுதான் இந்த கம்பெனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து! என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார் சுட்டூமூ சுசுகி.

இங்கே இருக்கும் தொழிலாளர்களின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது இங்கே இருக்கும் பயிற்சிக்கூடம். தான் சம்பந்தப்பட்ட துறை யில்தான் என்றில்லை, ஆர்வம் இருந்தால் மற்ற துறைகளைப் பற்றியும் இங்கே ஒரு தொழிலாளி யால் பயிற்சி பெற முடியும். கம்ப்யூட்டர், லேட்டஸ்ட் உபகரணங்கள், பயிற்சித் திட்டம், பயிற்சியாளர்கள் என எதற்கும் இங்கே பஞ்சம் இல்லை. தேவை ஏற்பட்டால் வெளிநாடுகக்கு அனுப்பிக்கூட தொழிலாளர்கக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தொடர்ந்து சாதிக்கக் களம் அமைத்துக் கொடுத்தவர் இந்த கம்பெனியின் மேலாண் இயக்குநர் டி.கே.பாலாஜி. அவர் சொன்ன கருத்துக்களில் மறைந்திருக்கிறது இந்த கம்பெனியின் வெற்றி ரகசியம்.

ஜீரோ டிபெக்ட் & அதாவது, நூறு டைனமோவை விற்பனை செய்தால் அதில் ஒன்றுகூடப் பழுதானதாக இருந்துவிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜப்பானியர் களோ ஜீரோ டிபெக்ட்டையும் தாண்டி மேலே சென்றுவிட்டார்கள். அது எப்படி என்கிறீர்களா? நோயில்லாமல் இருப்பதே பூரண ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகாது இல்லையா? அதே மாதிரி குறையில்லாமல் இருந்தால் மட்டும் போதாது... நாம் தயாரிக்கும் பொருள்கள் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். அதுவும் முக்கியம்!

தரம்பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தெரியாமல் அந்த சப்ஜெக்டில் மூழ்கிவிடுகிறார் பாலாஜி. லூகாஸ்&டி.வி.எஸ். கம்பெனியின் மகத்தான வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

இதெ இதெத்தான் நான் சொல்ல வந்தேன் என் 'உதயமாகும் புதிய இந்தியாவிலே'

நாளை நமதே! ஜெய் ஹிந்த்!!

Saturday, March 25, 2006

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் - ஓர் ஆராய்வு

இந்தியா எப்பொழுதும் இல்லாத வகையில் இப்பொழுது மிக வேகமாக மாறி வருகிறது இந்த உலக அரங்கில். இந்த அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம், மார்ச்சு 2ம் தேதி கையெழுத்திடப்பட்ட, இரு சாரார் ஒப்பந்ததை சற்றே நீங்கள் கூர்ந்து கவனித்தால், பல உண்மைகள் விளங்கும். இந்த பன்னாட்டு அரசியலில், யாரும் யாருக்கும் அனுகூலம் செய்துவிடுவதில்லை, இந்தியாவிற்கும் இதனால் மிகப்பெரிய அரசியல் அனுகூலம் ஏற்பட்டுவிடவில்லை, இந்த ஒப்பந்தத்தால். உண்மையில் பார்த்தால், இந்த ஒப்பந்தத்தினால், அமெரிக்காவிற்கு தான் இலாபம் ஏற்பட்டுள்ளது, ஆச்சிரியப்படவேண்டாம், இதைப் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.!

இந்த ஒப்பந்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள், அமெரிக்காவிற்கு, அதன் பொருளாதாரத்திற்கும், மற்றும் அதன் வெளியுறவு கொள்கைக்கும் மிக அதிகம். அமெரிக்க அதிபர், ஜார்ஜ் புஷ் அவர்களின் இந்திய விஜயம், அதுவும் இந்திய வர்த்தக கல்லூரிகளுக்கு சென்றதையும், மற்றும், அவர் நடத்திய சம்பாஷனைகள் இந்திய விவாசயத்துறை விஞ்ஞானிகளோடு, மற்றும் விவசாயிகளுடன் நடத்திய பரிபாஷையின் அர்த்தம், உங்களுக்கு ஏதோ, வல்லரசின் அதிபர், நம் கடைகுடிமகனுடன் காட்டிய ஆர்வத்தினை பார்த்து, நீங்கள் புளகாங்கிதம் அடைந்தால், அதன் பின்னனி என்ன என்பதை சற்றே உள்நேக்கிப்பார்த்தால், மிகப்பெரிய உண்மை விளங்கும்.

நம்முடய 'மிடில் கிளாஸ்' என்று அழைக்கப்படும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? National Council of Applied Economic Researc (NCAER) என்றழைக்கப்படும் நிறுவனக் கணக்குப்படி, அது 5.7 கோடி, 2001-02ம் ஆண்டுகளில், அதுவே 9.2 கோடியாக உயர்ந்துள்ளது இந்த 2005-06 களில், மேற்கொண்டு, அது 15.3 கோடிகளை வரும் 2009-10களில் தொட்டுவிடும். இதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா, இந்த குடும்பங்கள் தான் நாம் கொண்டாட போகிற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தா. புரியவில்லை?

உங்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்னு கொடுத்தல், வாங்கல், அதாவது பணம் புழக்கம், என்பது, வருமானம், செலவீனத்தை பொறுத்ததே, இது தான் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை. அதை செய்யப் போகிற அந்த கர்த்தாக்கள் தான் நான் மேலே கூறிய அந்த நடுத்தரக் குடும்பங்கள். அதாவது 'Consumer Goods Sector' என்ற துறையின் வளர்ச்சி 3.4 சதவீதத்திலிருந்து, 2004களின் கணக்குப்படி, 5-6 சதவீத வளர்ச்சி, இந்த 2004-05 களில் உயர்ந்துள்ளது. அதே போல் தொழில் துறை, இந்த வருட கால் ஆண்டின் வளர்ச்சி அதற்குள்ளாக 8.4 சதவீதம் ஏற்பட்டுள்ளது, இது போன பத்தாண்டுகளுக்கு முன்னே அடைந்த ஒன்று. அதே போல, வெளி நாட்டு மூலதனம் நமது பங்கு சந்தையில், 10m பில்லியன் அமெரிக்க டாலர்களில் உயர்ந்துள்ளது. இதெல்லாம் நமது அதிவேக பொருளாதார வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அசுர வளர்ச்சியினால், வெளிநாட்டு மூலதனம், விவசாயம், மருத்துவம், உணவு தயாரிப்பு என்று பல்வேறு துறைகளிலும் வந்தவண்ணம் இருக்கிறது. அதுவும் அமெரிக்க கம்பெனிகள், இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கண்டு, முதலீட்டை செய்தவண்ணம் இருக்கின்றனர். அவர்களை பொருத்தவரை எந்த நாட்டிலே அதிக லாபம் ஈட்ட முடியுமோ அதிலே காசுக் கொட்ட தயாராக இருக்கிறார்கள். அதுவும் பாதுகாப்பான மூலதனத்துக்கு, இந்திய சட்டங்கள் வழிவகுப்பதால், இங்கே காசை கொட்ட அவர்கள் தயாராக உள்ளார்கள். இது தான் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட முதல் பொறி.

இந்த அசுர வளர்ச்சி, இந்தியாவை எங்கு கொண்டுவிடும் என்று எண்ணுகிறீர்கள்? முதலில் அமெரிக்காவின் கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயுவில் அவர்கள் கொண்டுள்ள உலக ஆளுமைக்கு முதலில் ஆப்பு வைக்கும். புரியவில்லையா?. நாம் அவர்களை இச்சக்திகளுக்கு எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய சக்தி! எப்படி. இந்த கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயுவின் தேவை, வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான, அமெரிக்கா, சைனா, இந்தியாவால் பலமடங்காக அதிகரிக்கும் போக்கும், ஸ்திரதன்மை இழந்த மத்திய ஆசிய நாடுகளின் போக்கும், தங்கு தடையின்றி கிடைத்த இந்த சக்தி, அமெரிக்காவின் ஆளுமை, மற்றும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை, கொஞ்சம் ஆட்டம் காண வைக்கப் போவதால், உள்நாட்டு கொள்கையாக, 'Advance Energy Initiative' என்று மாற்று வழி சக்தி ஆராய ஏகப்பட்ட பணத்தை கொட்டி ஆராய்ச்சியை முடிக்கிவிட்டுள்ளது.(இதைப் பற்றி, நான் ஏற்கனவே ,'வேண்டும் ஒரு புதிய ஷக்தி' என்ற பதிவு இட்டுருந்தேன், சற்றே அதை பார்க்கவும், விவரம் புரியும்!)

அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையாக, இந்த எண்ணைய் சக்தியை நாடும் இந்தியாவிற்கு மாற்று சக்தியான அணு சக்தி தொழில்நுட்பங்களை தங்கு தடையின்றி தருவதின் மூலம், நமது எண்ணைய் சக்தியின் தேவைகளை கொஞ்சம் இதன் மூலம் தணிப்பதால், நாம் அவ்வளவு வீரியம் கொண்டு எண்ணய் சக்திகளுக்குகாக பன்னாட்டு சந்தையில் அவர்களுடன் போடப் போகும் போட்டியை கொஞ்சம் இது தணிக்கும். அதுவே இரண்டாம் பொறி. அப்படி என்றால், அவர்களுக்கு யாரெல்லாம் பொருளாதார எதிரியாக வர இருக்கிறார்களோ, அவர்களை இப்ப்டி எதிர் கொண்டால் என்ன? ஆங்.. இங்கு தான் இருக்கிறதைய்யா அவர்களின் மிகப்பெரிய புத்திசாலித்தனம். அதுமட்டுமில்லை, இந்த அணு ஒப்பந்தம் அவர்களின் உலக அரசியலுக்கும் எப்படி துணைப் போகும் என்று ச்ற்று பார்ப்போமா?

இது வரை அமெரிக்காவின் தன்சார்ந்த கொள்கையினால், பெரிதாக எந்த லாபமும் ஏற்பட்டுவிடவில்லை. அந்த கொள்கையால் எடுத்த முடிவுகள், ஆப்கானிஸ்தானிலோ, இல்லை பாக்கிஸ்தானிலோ (அதாவது, அதன் நியூக்ளியர் விஞ்ஞானி, ஏ கூயு கான் சம்பந்தபட்ட அணு தொழில் நுட்பம் விற்பனை கொண்ட அத்தியாயத்தில்) இராக், மற்றும் இப்பொழுது இரான், என அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளின் வெளிப்பாட்டால் அமெரிக்கா பெரிதாக எந்த பயனும் பெறவில்லை. ஆகையால் அவர்கள் தன்சார்ந்த கொள்கையை விட்டு விட்டு கூட்டு கொள்கை கடைபிடிக்க ஆயுத்தமாகிவிட்டனர். அதன் முதல் அத்தியாயமே இந்த அமெரிக்க-இந்திய நட்பு, ஒப்பந்தம். அதாவது சிறந்து விளங்கும், இந்திய மக்களாட்சிமுறை, உலக ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கை அடக்கிய இந்தியாவுடன் கரம் கோர்ப்பது சாலச் சிறந்தது, என்பதே அவர்களின் வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சம். இந்தியாவும் உலக அரங்கில் பீறு நடைப் போட ஆய்த்தமாகிவிட்ட வேளையிலே, அதாவது 'Regional Power' என்ற தன்மையிலைருந்து விலகி 'Global power'என்ற வளர்ச்சியினை எதிர்நோக்கி நிற்கும் இந்த வேளையிலே, இந்த நட்பு, உறவு, ஒப்பந்தம், இந்தியாவிற்கு பெரிதும் கைக்கொடுக்காவிட்டாலும் (அல்லது, எப்படி என்பதை இனி வரும் ஆண்டுகளில் தான் அறியமுடியும்), அமெரிக்காவிற்கு இது ஒரு திருப்பமான கட்டம். அதாவது காலத்தின் கட்டாயம். எப்படி என்று கேளுங்கள்!

ஆப்கானத்தில், சட்டப்படியான அரசாங்கம் அமைப்பதில் மிகப்பெரிய வெற்றி ஏதும் அமெரிக்காவிற்கு கிட்டவில்லை. பாக்கிஸ்தான் இன்றும் அதற்கு இடைஞ்சலாக, தலைபானையும், அல்கெய்தாவையும் ஒரு பக்கம் வளர்த்துக்கொண்டே அமெரிக்காவிற்கு நட்புக் கரம் அடுத்த பக்கத்தில் நீட்டுகிறது. மற்றும், வளர்ந்து வரும் பாக்கிஸ்தான், சைனா உறவு அமெரிக்காவிற்கு பெரும் தலைவலி. இந்த அமெரிக்க அதிபரின் ஆப்கான் விஜயத்தில், அந்நாட்டின் அதிபர் 'ஹமீத் கர்ஷாய்' யுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த தலைபான் மற்றும் அல்கெய்தாவின் ஆதிக்கம், பாக்கிஸ்தான் - ஆப்கான் எல்லையிலே இருந்து வருவதை பற்றி தான் பேச்சே! ஆனால் இந்தியாவின் ஈடுபாடு இதற்கு நேர் எதிர்மாறாக, குடியாட்சி அமைத்த ஆப்கானிய அரசாங்கத்திற்கு அதிக மானியம் கொடுத்து அந்த அரசாங்கம் நல்ல முறையில் நடைபெற நமது பிரதமர் வழிவகுத்து கொடுத்துவிட்டு வந்தார், சென்றமுறை அங்கு சென்றிருந்த போது.
ஆனால் பாக்கிஸ்தானோ, தான் செய்து கொடுத்த எந்த சத்தியத்தையும் நடத்திக்காட்ட வில்லை, முக்கியமாக, 9/11 சம்பவங்களுக்கும், லண்டன் பாம் சம்பவங்களுக்கு பிறகு, மதர்ஸா பள்ளிகளை மூடச்சொல்லி அமெரிக்கா வைத்த வேண்டுகோளை இன்னும் நிறைவேற்றவில்லை. அதே போல் சொல்லிக் கொள்ளும் படியாக தலைபான், மற்றும் அல்கெய்தாவின் முக்கிய தலைவர்கள் யாரையும் கைதும் செய்யவில்லை. மேற்கொண்டு மேலே கூறியது போல சைனா-பாக்கிஸ்தான் ரகசிய உறவுகள் அமெரிக்காவிற்கு பெரிதும் எரிச்சலூட்டும் ஒன்று.

இதற்கெல்லாம் பதிலடி, இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டுவதுதான் என்ற அவர்களின் மாறிய வெளிஉறவு கொள்கை. அதாவது பெரும் அசுர வளர்ச்சி கண்டு வரும் சைனாவை எதிர்கொள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆளுமை கண்டு வரும் இந்தியாவுடன் கைக் கோர்ப்பதே சாலச் சிறந்தது என்பதே, அதன் இப்போதய தாரகை மந்திரம். வளர்ந்து வரும் இந்த சக்தியை இனம் கண்டு, அதனுடன் நட்புகான என்ன ஆயுத்தம் செய்யவேண்டுமென்பதை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து விட்டனர். அதன் செயலாக்கமே இந்த ஒப்பந்தம். அதாவது 'நிகோலஸ் பர்ன்ஸ்' அரசியல் பிரிவு இணை செயலர் அவர்கள் கூறியது, ஆசியாவை தவிர, உலகத்தின் எந்த பகுதியும் முக்கியமில்லை, அதாவது அமெரிக்காவின் தொலை நேக்கு இராணுவம், பொருளாதாரம், மற்றும் அரசியல் வளர்ச்சியில் பங்கு ஏற்க. ஆக இப்படி அவர்களுக்கு பயன் தரும் இந்த ஒப்பந்தம், மற்றும் அமெரிக்க அதிபரின் இந்த சரித்திரத்தில் முக்கியம் வாய்ந்த இந்த இந்திய விஜயம், பல ஆண்டுகளாகவே திட்டமிடப்பட்டு, இப்பொழுது தான் நிறைவெறி முடிக்கப்பட்டுள்ளது. ஆக அணு உலைகளின் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கே அனுகூலமே!!

Thursday, March 23, 2006

இலவு காத்தக் கிளி - சொல்லத்தான் நினைக்கிறேன்

அந்த காலத்தில, சின்ன வயசில நான் குமுதம், ஆனந்த விகடன் படிக்க ஆரம்பிச்சது அஞ்சாவதோ, இல்ல ஆறாவதோ படிக்கும் போதுன்னு நினக்கிறேன். அப்ப கதைகள், கட்டுரைகள் படிக்க அவ்வளவு ஆர்வம் இருக்காது. இந்த ஆறு வித்தியாசங்கள், அப்புறம் கார்ட்டூன் படங்கள் பார்க்கிறதுலதான் ஒரு ஆர்வம்ன்னு வச்சுக்கங்க. எங்க வீட்ல யாரும், அந்த பத்திரிக்கைகள் எல்லாம் படிக்க மாட்டாங்க. இதில ஒரு Irony, என்னான்னா, எங்க அம்மா, அவங்க சின்ன வயசிலே கதைகள் நிறைய படிப்பாங்களாம், அதில வர கேரக்டர்கள் பேர் எல்லாத்தையும் எங்க பெரியம்மா வீட்டு பிள்ளைங்களுக்கு வைப்பாங்கலாம், அப்பவே, இன்பசேகரன்ங்கிற பேரு வச்சவங்க, நான் சொல்றது 1950 களில்ல. அப்புறம் அவங்க கல்யாணத்துக்குப்பறம் அதில என்னமோ ஆர்வம் குறைஞ்சு போச்சு, பொருளாதார கட்டுப்பாடும்னும் நினைக்கிறன். ஆக இந்த மாதிரி புத்தகங்கள் படிக்கும்னும்னா, நான் எங்க பெரியம்மா வீட்டுக்க்குத்தான் போகணும். ஏன்னா, அங்க தான் வாங்கி படிப்பாங்க. நானும் சும்மா புத்தகத்தை எடுத்து புரட்டி பொம்மை பார்த்து ரசிப்பேன்!

அந்த புத்தகங்கள் வழக்கமா வாங்கி படிக்கிற பழக்கம் எங்க பெரியம்மா வீட்ல, எங்க அண்ணன் அக்காங்களுக்கு இருந்திச்சு. ஆனா,நான் புத்தகத்தை தூக்கினா, எங்க பெரியப்பா சத்தம் போடுவாரு, 'சின்ன புள்ள இதை எல்லாம் படிச்சு கெட்டு போகக்கூடாது'ன்னு என்னை எடுத்து பார்க்கவே விடமாட்டார். அதனால அவரு இல்லாதப்ப அவருக்குத் தெரியாம புரட்டினாத்தான் உண்டு. எதுக்கு சொல்றேன்னா, இப்பவும் ஊரு விட்டு ஊரு மாத்தி, தேசம் விட்டு தேசம் போயிம் அந்த பழக்கம் இன்னும் இருக்கு. அதுக் கிடைக்காத இடங்கள்ல இணையத்தில படிச்சிக்கிற வேண்டியது தான். ஆனா, என்ன இருந்தாலும், அந்த வார வாரம் வியாழக்கிழமையேலே வெளிவரும் புத்தகத்தை வாங்கி கடைசி பக்கம் வரை விடாம படிச்சி முடிக்கிறதுங்கிறதுல இருக்கிற அந்த திரில்லே தனி!!

இந்த புத்தகங்கள்லால நமக்கு சில பயன்களும் உண்டு, எப்படின்னு கேளுங்க, சின்ன வயசிலே, காசு கிடைக்காதப்ப, ஏதேனும் சினிமா போகணும்னா, இந்த பழைய குமுதம், ஆனந்த விகடன் பத்திரிக்கைகளை யாருக்கும் தெரியாம எடுத்துட்டுப் போயி, பழையப் புத்தக கடைக்காரங்கிட்ட போட்டுட்டு, பைசா வாங்கி, நிறைய சினிமா பார்த்த அனுபவங்கள் உண்டு. அப்பறம் கொஞ்சம் வளர்ந்தோன்ன, குமுதம், ஆனந்த விகடன் வாங்கி படிக்கிறதில்லாம, அதே மாதிரி வெளி வந்த வாரப் பத்திரிக்கைகள், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தாய், அப்படின்னு எல்லாத்தையும் படிக்கிறது. ஆனா,சில சமயங்கள்ல எல்லாத்தையுமே ரெகுலரா வாங்கிறதில்லை.

மற்ற எல்லா பத்திரிக்கைகள் எல்லாத்துக்கும் மூலம் இந்த குமுதமும், ஆனந்த விகடனும் தான். அதில கதை எழுதி பிரபலமான எழுத்தாளர்கள், பிறகு தாங்களாகவே தொடங்கின பத்திரிக்கைகள் தான் இவைகள். அதில சாவி எழுதிய 'வாஷிங்கடனில் திருமணம்', மணியன் எழுதும் பயணக்கட்டுரைகள் எல்லாமே ஆரம்பம் ஆனது குமுதம், ஆனந்த விகடன்ல தான். அப்பறம், திமுக வை பத்திரிக்கை மீடியத்தில வளர்க்கும்னு ஆரம்பிச்சது தான் குங்கும். வலம்புரி ஜான், அதிமுக ஆதரவு பத்திரிக்கையா, தனியா ஆரம்பிச்சது தான் தாய்.
இது எல்லாம், நான் சொல்ற எழுபதுகள்ல தொடங்கியது, அதுக்கப்புறம் எத்தனையோ வந்து போயிடுச்சு, சிலது கை மாறி இப்ப இதயம் பேசுகிறது, 'சரவணா ஸ்டோர்ஸ்'ஸா வந்திக்கிட்டு இருக்குனு கேள்விபடுறேன். அதே மாதிரி இந்த பத்திரிக்கைகள் தாக்கம், படத்தில வசனம் எழுதும் வரை இருந்திச்சு. பாக்யராஜ், பாரதிராஜாவோட 'புதியவார்ப்புகள்' படத்தில, வசனம் எழுதினப்ப, காஜாஷரிப் பேசற ஒரு வசனம் ரொம்ப பேமஸ். 'எங்கக்கா அவங்க இதயத்தை கொடுத்துட்டு, உங்கக்கிட்ட இருந்து குங்குமம் வாங்கிட்டு வரச் சொன்னாங்கன்னு' சிம்பாலிக்கா, இந்த வாரப்பத்திரிக்கை பரிமாறல்களை வச்சி காதல் காட்சியை டெவலப் பண்ணியிருப்பாரு!

அந்த காலத்தில, காலேஜ் படிச்சப்ப, என்னால எல்லா புத்தகங்களையுமே வாங்க முடியாது, அதுனால, எங்க வீட்டுக்கு பக்கத்தில இருந்த வெத்தில பாக்குக் கடையில போயி ஓசியில புத்தகத்தை எடுத்து ஒரு இரண்டு மணி நேரத்தில எல்லாத்தையுமே படிச்சு முடிச்சுடுவேன். அந்த கடையில பெரும்பாலான நேரங்கள்ல, அந்த கடைக்காரர், தன் சின்ன புள்ளைங்களை யாவாரம் பாக்க வச்சிட்டு எங்கயாவது போயிடுவார். அதுங்களும், நான் என்னமோ வாங்கத்தான் புரட்டி பார்த்திக்கிட்டு இருக்கேன்னு, கம்முன்னு இருக்குங்க. சில சமயம் விளைஞ்ச பெரிய புள்ளங்க வந்து கடையில உட்கார்ந்திருந்தா, 'இந்தா சும்மா காசுக் குடுக்காம படிக்காத, வையுங்க'ன்னு அதட்டும், நானும்,'இரு புள்ள, வாங்கலாமா, வேணாமான்னு பார்க்கிறேன்னு' சொல்லியே பாதி படிச்சு முடிச்சுட்டு, அந்த கையித்தில திரும்ப தொங்கப் போட்டுட்டு நடையை கட்டிடுவேன். இப்படி கயித்தல கட்டி தொங்க போட்ட புத்தகத்தை ஓசியில படிச்சே ஒரு தொடர் கதையை முடிச்சிட்டேன். அந்த தொடர் கதை தான், மணியன் எழுதிய 'இலவு காத்தக் கிளி'. இதை நீங்க எத்தனைப்பேரு படிச்சிருப்பீங்களோ எனக்குத் தெரியாது. ஆனா, இந்த கதையை படமா எடுத்து ரொம்ப நல்லா ஒடின படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' பெரும்பாலானோர் இந்த படத்தை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

பொதுவா மணியனோட சிறப்பு என்னான்னா, பயணக்கட்டுரைகள் எழுதுவதுதான். அந்தகாலத்தில அவரு வெளிநாடெல்லாம் சுத்திட்டு வந்தோன, அந்த அந்த இடங்களின் அருமை பெருமைகளை அழகா எழுதுறதிலே மணியன் மன்னன். அந்த தொடர்கள் வாசிக்க நல்லாவும் இருக்கும். சில நேரங்கள்ல நல்ல தொடர்கதைகளும் எழுதுவாரு. அப்படி வந்ததுதான் இந்த கதை. இது கல்யாணமாத மூணு அக்கா தங்கச்சிக்களை பற்றியது. அவங்க வீட்டுக்கு குடிவர்ற கதாநாயன் மேலே மூணு அக்கா தங்கச்சிங்களும் காதல் கொள்வாங்க, ஆனா யாரும் தங்க காதலை நேரடியா வெளியே சொல்லமாட்டாங்க. தக்கத்தருணம் வரும்போது தங்கள் காதால் தெரிய வந்து, அது நிறைவேறும்னு காத்துக்கிட்டு இருப்பாங்க. அதே மாதிரி ஹீரோவும், அந்த அக்கா தங்கச்சிங்கள்ல கடைசி தங்கச்சியை காதிலிப்பார், அவரும் தன் மனிசில இருக்கிறதை வெளியே சொல்ல மாட்டார். அந்த கடைசி தங்கச்சியும் அவரு மேலே தீராத காதலா இருப்பா. கடைசியில அக்காங்க ரெண்டுப்பேரும் ஹீரோ தன்னை காதலிக்கலங்கிறதை தெரிஞ்சுகிட்டு அவருக்கும் தன் கடைசி தங்கச்சி மேலே தான் காதல்ங்கிறதை தெரிஞ்சு ஒதுங்கிடுவாங்க, ஆனா சந்தர்ப்பவசத்தால கடைசி தங்கச்சியும் வில்லங்கிட்ட தன்னை இழந்த தாலே, அதுவும் தன் தோழிய காப்பாத்த போயி, அவனையே கல்யாணம் பண்ண வேண்டியதா போயிடும். கடசியில நம்ம ஹீரோவுக்கு யாருமே கிடைக்கமாட்டங்க. பழம் தானா மரத்திலிருந்து விழும்னு காத்துக்கிட்டு மரத்தில உட்கார்ந்திருக்கிற கிளி மாதிரி தான் நம்ம ஹீரோ, தானா கிடைச்சிடும்னு நம்பிக்கையில காதலை சொல்லாம மனசில வச்சி கடைசியில ஒன்னும் கிடைக்காம் போறது தான், இந்த 'இலவு காத்தக் கிளி'யின் கதை. ரொம்ப சுவாரசியமான தொடர் கதை. ஒவ்வொரு வாரமும், மணியனும் கதையின் தொடர் முடிவிலே முடிச்சு போட்டு நம்மல அடுத்த வாரத்துக்காக காக்க வச்சு படாத பாடு பட வச்சுடுவாரு. அப்படி படிச்ச இந்த கதை என்னால இன்னும் மறக்க முடியாத ஒரு தொடர்.

இதை படமாவும் நம்ம பாலசந்தர், நல்லா எடுத்திருந்தார். சிவக்குமார் தான் படத்தில ஹீரோ. அந்த மூணு சகோதரிகளா நடிச்சவங்கள்ல விதுபாலா, ஜெயசித்ரா, அப்புறம் மூணாவது யாருன்னு தெரியல. அந்த கடைசி தங்கச்சி ரோல் பண்ணுனது ஜெயசித்ரா. நல்ல நடிகை, அப்ப ஜெயசங்கரோட நிறைய நடிச்சி ஆக்ஷன் பட ஹீரோயினியா இருந்தாலும், இந்த படத்தில சும்மா அசத்தி இருப்பாங்க. அந்த வில்லனா நடிச்சது நம்ம கமலஹாசன். இந்தப் படம் தான் கமலுக்கு முதல் முதலா சின்ன வயசில நடிச்சதுக்கப்புறம் வாலிப வயசில நடிச்ச முதப்படம். தமிழுக்கு வரதுக்கு முன்னாடி அவரு நடிச்சதெல்லாம் மலையாள படங்கள், அதுவும் 'ராஸ லீலா' அப்படின்னு பலான படங்கள், செம்மீன் ஷீலாக்கூட ரொம்ப நெருக்கமா மலையாளப் படங்கள்ல நடிச்சுகிட்டு இருந்த நேரம். எல்லா ஹீரோவும் என்ட்ரி ஆவறது வில்லனாதாங்கிற தமிழ் பட இலக்கணப்படி, அவர் அறிமுகம் வில்லனாதான் இந்த படத்தில. அவரு தனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாரையும் லிஸ்ட் போட்டு ஒருத்தர் ஒரூத்தரா கெடுக்கிறது அவரு வேலை. மெச்சூர்ட்டி இல்லனாலும், நல்லாவே செஞ்சிருந்தார். கமலஹாசனும், ஜெயசித்ராவும் சந்திச்சிக்கிருப்ப எப்பவும் மோதல் தான், அப்ப கமலும் சொல்லுவாரு, 'நீயும் என் லிஸ்ட்ல கடைசியில இருக்கேன்னு', அதே மாதிரி முடிச்சுக்காட்டுவார். அப்படி அவங்க சந்திச்சு மோதிகிட்டு பாடற பாட்டு ரொம்ப பேமஸ் அப்ப, கேட்டுப்பாருங்களேன்! அந்த படம், அப்ப வாலிப முறுக்கு இருந்தா இப்படித்தான் இருக்கணும்னு அப்ப வாலிபர்களா இருந்த எல்லோருக்குமே ஆசையை வர வச்ச கேரக்டர். அந்த நெகட்டிவ் கேரக்டர், ரொம்ப பாஸிட்டிவா காட்டியிருப்பாரு பாலசந்தரு. பிறகு கடைசியில ஜெயசித்ராவோட கல்யாணம் பண்ணிக்கிட்டு, சிவகுமாரை அம்போன்னு தனியா நிக்கவச்சுருவாங்க!

'சொல்லத்தான் நினக்கிறேன் சொல்லத்தான் துடிக்கிறேன், சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்னு' எம் எஸ் வி பாடியிருந்த பாட்டு ரொம்ப மெலடி, கேசட் கிடைச்சா, வாங்கிப் போட்டுபாருங்க.

Tuesday, March 21, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பனிரெண்டாம் பகுதி

பொதுவா ஹாஸ்டல் சாப்பாடு அவ்வளவா யாருக்கும் பிடிக்காது. ஏன்னா வீட்ல அவ்வளவு காலம் இருந்திட்டு திடீர்னு இப்படி ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப பேருக்கு போரடிக்கும். ஆனா எங்க காலேஜ் மெஸ்ஸுங்க கோயம்புத்தூர்லயே பேர் போனது. மத்த காலேஜ் பசங்கல்லாம் கூட வந்து சாப்பிட்டுட்டு போவாங்க, அதுவும் என்வி மெஸ்ல போடற சிக்கன் ரொம்ப பேமஸ். எங்க காலேஜ் இருந்த பகுதி, அப்ப எல்லாம் வானம் பாத்த பூமி தான், அது பீளமேடு கடைசியில. அதாவது ஊர் எல்லைக்கிட்டன்னு வச்சுக்கங்க. நாலா பக்கமும் காய்ஞ்சு போன வனாந்திரம். எங்க காலேஜ்ஜும் எதிர்த்தாப்பல மெடிக்கல் காலேஜ்ஜும் தான், ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பை தாண்டினா. (இப்ப அந்த இடங்கள் எல்லாம் மினி சிட்டி மாதிரி ஆயிபோயிடுச்சி, ஒரு இரண்டு மூணு வருஷம் முன்ன போய் பார்த்தேன்) அதனால தண்ணிப்பஞ்சம் அங்க. டெய்லி குடிக்க லாரியில சிறுவாணி ஆத்து தண்ணி வரும். அது தான் எல்லா ஹாஸ்டல் மெஸ்ஸுக்கும் சப்பளை. வெஜிட்டேரியன் மெஸ் இரண்டு மூணு இருந்தது, ஆனா என்வி மெஸ் ஒன்னுதான். அதுல்ல சாப்பாடு மட்டும் ஒரு 500 பேருக்கு பரிமாறலாம் ஒரே நேரத்தில. அந்த என்வி மெஸ்லேயே சின்னதா முன்னாடி இருக்கிற ரூம்ல ஃப்னல் யியர் ஸ்டூடன்ட்ஸ் சாப்பிடுவாங்க. அப்ப தான் நம்ம ராஜ்யம், எப்படின்னு கேளுங்க!

நம்ம நடிக்கறதாலேயும், பிறகு டிராமட்டிக் கிளப் செக்ரக்டரிங்கிறதாலேயும், கொஞ்சம் பாப்புலர். அதனாலே மெஸ்ல இருக்கிற அத்தனை குக்கும், பரிமாறுகிற சின்ன பசங்களும், நம்ம நடிப்பு பார்த்து ரசிகர்ங்கிறதாலே, நம்க்கு தனி மரியாதை. கவனிப்பு ரொம்ப ஏகதடபுடலா இருக்கும். நானும் இந்த மெஸ் கூட்டமா இருக்கிற நேரத்தில போமாட்டேன். எப்பவும் கடைசியா தான் சாப்பிட போவேன். எங்க செட்டுங்கள்ல, நானு, திருவேங்கடம், மனோகரன், அங்குராஜ், அப்படின்னு எப்பவும் கடைசியா போறது. அந்த நேரத்தில எல்லாக் கூட்டத்தையும் கவனிச்சி முடிச்சிட்டு பரிமாற பசங்களும் கொஞ்சம் ஃப்ரியா நமக்கு சர்வ் பண்ணுவாங்க, சமயத்தில குக்குங்களும் வந்து, என்ன தம்பி, ஏதும் சூடா கொண்டாந்து போடட்டுமான்னு, இந்த மட்டன் வருவல், மற்றும் இன்ன பிற அயிட்டங்களை சூடா கொண்டாந்து போட்டு நம்ம கும்பல கவனிக்கிறதே தனி. மெஸ் செக்ரக்டரி, ஹாஸ்டல் செக்ரக்டரியக் கூட இப்படி தாங்கி கவனிக்க மாட்டேங்கே, ஆனா நமக்கு அவ்வளவு செல்வாக்கு! இப்படி தனி மதிப்பா இருந்த காலகட்டங்கள்ல இங்கே மட்டுமில்லாமே, காலேஜ் மேனேஜ்மென்ட்டும் நம்ம கிட்ட மரியாதையா இருப்பாங்க. சும்மா தேவர் மகன் சிவாஜி ரேஞ்சிலே மதிப்பு, மரியாதை. காலேஜ் பிரின்ஸ்பல், பிஏ டு ப்ரின்ஸ்பல் இவங்க கிட்ட எல்லாம் நமக்கு ஒரு தனி மரியாதை, அதாவது அவங்க ரூம்முக்கு சகஜமா போய் வந்தவங்கள்ல நான் ஒருத்தன், ஸ்டுடன்ஸ்ங்கிற முறையிலே. பிறகு ஏதேனும் ஸ்டூடன்ஸ் பிரச்சினைன்னு வந்தா, அப்புறம் மாணவர்கள் பிரதிநிதியா கூப்பிட்டு கலந்து ஆலோசிச்சு என்ன முடிவு எடுக்குனும்னாலும் நமக்கு எப்பவுமே அழைப்பு உண்டு. அதனாலேயே, அப்ப நம்ம மேலே புகஞ்ச ஹாஸ்டல் செக்ரக்டரி, யூனியன் செக்ரக்டரிகளும் உண்டு. ஆனா இந்த அந்தஸ்த்தே நமக்கு பகையான சம்பங்களும் உண்டு. எப்படின்னு கேளுங்க!

இந்த ஹாஸ்டல்ல அடி தடி நடக்கிறது ரொம்ப சகஜம். ஆனா என்னோட ஹாஸ்டல் லைஃப்ல நடந்த இந்த அடிதடில ரெண்டு மிகப்பெரிய சம்பவங்களை சொல்லணும். முதல்லுது நான் முத வருஷம் இரண்டாவது பாதியில நடந்த ஒன்னு. அதாவது ராகிங் முடிங்சு கைலியை கட்டிக்கிட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட போக ஆரம்பிச்சிருந்த நேரம். (இந்த ராகிங் நடக்கும் வரை, நாங்க ராத்திரி மெஸ்ஸுக்கு பேண்ட் சட்டை போட்டுட்டுத்தான் சாப்பிட போகணும். ராகிங் முத செம்ஸ்டர் எக்ஸாம் முடிஞ்சு, அடுத்த செம்ஸ்டர் ஆரம்பிச்சு ஒரு மாசம் கழியும் வரை உண்டு. அப்புறம் ராகிங் முடிஞ்சதுக்கு டிக்ளரேசன் எப்படின்னா, கைலி கட்டிக்கிட்டு மெஸ்ஸுக்குப் போய் சாப்பிட சீனியர்ஸ் எல்லாம் அனுமதிப்பாங்க. இத்தனைக்கும் ஃப்ர்ஸ்ட் யியர்ஸ் ஸ்டூடன்ஸ்க்குன்னு தனி மெஸ் தான், ஆனா சீனியர் மெஸ்ஸ கிராஸ் பண்ணித்தான் போயாகணும், மவனே, என்னக்காவது மறந்து கைலி கட்டிக்கிட்டு கிட்டிக்கிட்டு போய்ட்டா, அன்னைக்கு நைட் அவெ தொலைஞ்சான், ராக்கிங் முடிஞ்சு அவன் ஹாஸ்டல் ரூமு திரும்ப மணி நாலாயிடும்.)அப்ப எமர்ஜென்ஸி முடிஞ்சு இருந்த நேரம், அதுக்கு முன்ன, இந்த எம்ர்ஜென்ஸியால எல்லா சீனியர்ஸ்ம் காஞ்சிப்போயி, முத இரண்டு வருஷங்கள்ல ராக்கிங் பண்ணாம இருந்து, எங்க இம்மீடியட் சீனியர்ஸ் ராக்கிங்ல கொடுமை அனுபவிச்சதால, எங்க வருகைக்காக ரொம்பவே காத்துக்கிட்டு இருந்தாங்க. நாங்க வந்தோன்ன, எங்களை ராக்கிங்ல உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க. பொதுவாவே, இந்த இரண்டாவது வருஷ ஸ்டூடன்ட்ஸ் எப்பவுமே ராக்கிங் ஜாஸ்தி பண்ணுவாங்க, ஏன்னா, அது தான் அவங்களுக்கு ராக்கிங் பண்ணக் கிடைக்க கூடிய முதல் சந்தர்ப்பம், அதனால, எங்களை செமையா தாலிச்சிட்டாங்க.

அப்ப அந்த ராக்கிங் முடிஞ்சு, ஒரு நாள் சனிக்கிழமை ஒப்பன் ஏர் தியோட்டர்ல படம் ராத்திரி ஒடிக்கிட்டுருந்தப்ப, ஏதோ தகராறுல, அந்த இரண்டாவது வருஷ ஸ்டுடன்ட்ஸ்ல ஒருத்தன்,ஃபைனல் யியர் ஸ்டுடண்ட்ஸ்ஸ அடிச்சிட்டு ஓடிட்டான், அதை கேள்விப்பட்டு ஒட்டு மொத்தம்மா, செகண்ட் யியர் ஸ்டண்ட்ஸ் எல்லாம் அவங்க ஹாஸ்டல போயி உள்ள மூடிக்கிட்டு, மேலே இருந்து, பாட்டில், அது இதுன்னு, வீசி தாக்கிக்கிட்டு இருந்தாங்க. ஒட்டு மொத்த காலேஜ்ஜும் அவங்களுக்கு எதிரா கீழே நின்னு கல்லு வீசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க ஹாஸ்டலையும் மூடி, அப்படியே உள்ள வந்தா எலெக்ட்ரிக் கனெக்ஷன் எல்லாம் கொடுத்து, அதை ஒரு ஐலேண்ட்டா மாத்தி வச்சிருந்தாங்க. ராத்திரி முழுக்க இந்த கல்லெரிதல், பாட்லு வீசுதல்னு, யாருமே தூங்கமா, சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. இது பார்க்க என்னமோ கார்கில் வார் மாதிரி, மலை உச்சியில மெர்சினரிஸ், தீவிரவாதிங்க கீழே இந்திய ராணுவத்தோட சண்டைப் போட்ட மாதிரி கற்பனை பண்ணிக்கிங்க. கடைசியைல காலையில பிரின்ஸ்பால் எல்லாம் வந்து பார்த்திட்டு, இதுக்கு மேல போனா விபரீதமா எதுவும் ஆயிடும்னு, செகண்ட் யியர் ஸ்டுடண்ட்ஸ்க்கு எல்லாம் ஒரு மாசம் லீவு கொடுத்துட்டு, சீனியர்ஸ் எல்லாம் சமாதானமா போயிடுங்கன்னு சொல்லி அவங்க எல்லாரையும் வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க. அப்ப அவங்க ஹாஸ்டலை திறந்து அவங்களை ஒருத்தர் ஒருத்தரா வெளியில போக சொல்ல, அவங்க பயந்து வெளியில ஒருத்தர் ஒருத்தரா வந்தாங்க. முதல்ல ஒரு பத்து பதினஞ்சு பேரை சும்மா விட்டுட்டாங்க, அப்புறம் வந்தவெங்கெல்லாம் மாட்னாங்கே, உங்க வீட்டு அடியில்ல எங்க வீட்டு அடியில்ல, செம அடி வாங்கிட்டு போனங்க, அப்பதான் எங்க செட்ல இருந்த சில பிரகஸ்பதிகளும், ஏண்டா எங்களையா ராகிங் பண்ணிங்கன்னு, அந்த செகண்ட் யியர்ஸ் ஸ்டுடண்ட்ஸ் சில பேரை ராக்கிங் பண்ணி அடி போட்டு அனுப்பிச்சானுங்க. எங்களை ராக்கிங் பண்ணவங்களையே திருப்பி நாங்க ராகிங் பண்ண சந்தர்ப்பம் கிடைக்க, கொண்டாடிட்டாங்க மக்க! இது ஒரு மறக்க முடியாத சம்பவம், ரத்த களரியோட, பூர காலேஜ்மே அப்புறம் கொஞ்ச நாளைக்கு மூடி வச்சி, அப்புறம், ஓவ்வொரு வருஷ ஸ்டுடண்ட்ஸ்ஸையா வரவழச்சி காலேஜ தொடங்கினாங்க.

இதே மாதிரி நாங்க ஃபனல் யியர்ஸ் படிக்கிறப்ப, ஒரு மெஸ்ல நடந்த தகராறிலே, எங்க ஜூனியர்ஸ்ல ஒருத்தன் எங்க யியர் ஹாஸ்டல் செகரக்ட்ரிய அடிச்சாட்டானு, அதே மாதிரி அந்த ஜூனியர்ஸ் எல்லாம் ஒட்டு மொத்தமா அவங்க ஹாஸ்டல கூட, எங்க யியர்ஸ் பசங்க போயி தூக்கிப்போட்டு மிதிச்சு அடிச்சி, ரணகளம் பண்ணிட்டாங்க, அப்ப நான் அங்க சமரசம் பண்ண போனேன். அப்பத்தான், அந்த சம்பவம் போலீஸ் வர கேஸ்ஸா போயி, கடைசியில அடிச்சதுல்ல நானும் ஒருத்தனு கம்ப்ளெயின் கொடுத்து, அப்புறம், நமக்குத்தான் பிரின்ஸ்பால், எல்லாம் சப்போர்ட் பண்ண, ஏன்னா, அவங்க அப்ப ஹாஸ்டல் வந்து சமரசம் பண்ணப்ப என்னையை என் ரூம்ல இருந்து கூப்பிடு விட்டதாலே அவங்களுக்குத்தெரியும், நான் அப்ப அந்த அடி தடி நடந்த இடத்தில இல்லேன்னு. பிறகு ஒட்டு மொத்தமா, காலேஜ் பேரு கெட்டு போகுனும்னு, எல்லா கேஸ்ஸையும் வாபஸ் வாங்கி ஒன்னுமில்லாம ஆக்கினாங்க.


இந்த சம்பவம் நடந்த அடுத்த இரண்டு வாரத்தில தான் நான் அரேஞ் பண்ணியிருந்த புரோகிராம் கேன்சலாக்கிட்டு, இந்த டென்சன் நேரத்தில, இது மாதிரி புரோகிராம், அது இதுன்னு வச்சா திரும்ப கலவரம் வரும்னு அதை நிறுத்த சொல்லிட்டாங்க. கடைசியில கஷ்டப்பட்டு மெட்ராஸ் போயி சுஹாசினியை பார்த்து அவங்களை வரவழக்க அரேஞ்ச் பண்ணி வந்தும், எங்களால புரொகிராம் நடத்த முடியாம போயிடுச்சு, அவங்களும் வந்து கலந்துக்க முடியாம சோகமா போயிடுச்சு போங்க. அதுக்குன்னு மனம் தளரல, அடுத்த சில நாட்கள்ல பாக்யராஜ்ஜை காலேஜ்க்கு கூட்டிட்டு வந்து ஜாம் ஜாமுன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். அதுக்கிடையில அவரை எப்படி பார்த்தேன், அதுவும் அவரு அப்ப 'தூறல் நின்னு போச்சு' படத்துக்காக பிஸியா இருந்த நேரம். எப்படிங்கிறதை அடுத்த பதிவில பார்க்கலாமா?

Saturday, March 18, 2006

சீனாவில் ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்

கொஞ்ச நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு உன்னால் முடியும் தம்பி! - ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம் இதில் நான் வளர்ந்து வரும் ப்ளாக்கர்களின் சக்தியை பற்றி எழுதி இருந்தேன். முடிந்தால் அரசங்கத்தையே கவுக்கும் சக்தி இந்த ப்ளாக்கர்களுக்கு உண்டு என்பதை பற்றி எழுதி இருந்தேன். எப்படி இந்த ப்ளாக்கர்களின் குழுமம் (Blogosphere') இன்றய இணயம் தந்த வசதியால் எப்படி ஒரு விசுவரூபமான சக்தியாக அமெரிக்காவில் விளங்கி வருகிறது என்பதை பற்றியும் எழுதி இருந்தேன். அதேபோல் இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது, சீனாவில் இந்த ப்ளாக்கர்கள் குழுமம் எப்படி விசுவரூபம் எடுத்து வருகிறது என்பதைப் பற்றி வந்துள்ளது. அதன் பிரசுரம் இங்கே!!


ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே அடிவயிற்றில் புளியைக் கரைக்கக்கூடிய ஒரு நாடு உண்டென்றால், அது சீனா. இன்றைக்கு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வந்து, நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங்கோடு நட்புறவு பாராட்டுவதும்கூட, சீன பயத்தால்தான் என்று சொல்பவர்களும் உண்டு. எந்த நேரமும் தன் சக்தியால் எதுவும் செய்துவிடக்கூடிய அபாயம் சீனாவின் குணத்தில் உண்டு.

கட்டுக்கோப்பான அரசாங்கம், கொஞ்சமே கதவு திறந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க அனுமதிக்கும் கட்டுப்பாடான நடைமுறை, வலுவான படைகள், அதைவிட முக்கியமாக ஒற்றர்கள் என்று ஒரு அரசாங்கம் ஒருவிதமான கலவைத் தன்மையோடு இருக்கிறது என்றால் அது சீனா. குடியரசு, கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமை போன்ற சொற்கக்கெல்லாம் அவர்கள் அகராதியில் இடமே இல்லை. மேற்கு என்பது அவர்களுக்குப் பீதி. புஷ், மாபெரும் வில்லன்.

இதெல்லாம் இனி பூர்வக்கதையானால் ஆச்சர்யப் படுவதற்கில்ல. சுதந்திரத்த, அதன் செயல்பாட்டில் வேண்டுமானால், உங்களால் மறுத்துவிட முடியும், தடுத்துவிட முடியும். ஆனால், நீறுபூத்த நெருப்பாக மனதளவில் இருக்கும் அந்த உணர்வக் கிள்ளி எறிந்துவிட முடியுமா? சான்ஸே இல்ல. இளம் சீனர்கள் தங்கள் சுதந்திர உணர்வயும் போராட்ட உணர்வயும் வெளிப்படுத்த வேறுவேறு வழிகளக் கையாண்டு பார்த்தும், காலகாலமாகத் தோல்விதான். ஆனால், சீன நெடுஞ்சுவர் போன்ற வலிமயான அதிகாரத்தை இன்று கண்ணில் விரலைவிட்டு ஆட்டத் தொடங்கிவிட்டார்கள். பிளாக்ஸ் (Blogs) என்று சொல்லப்படும் வலைப் பதிவுகள்தான் அவர்களுக்குக் கைகொடுக்கிறது. 'பிளாக்ஸ்' எப்படி சீனாவுக்கு ஆப்பு வக்க முற்பட்டிருக்கிற என்று தெரிந்து கொள்ளப் புகும்முன், கொஞ்சம் இந்தப் பிளாக்ஸப் பற்றியும் பார்த்துவிடுவோம்.

இன்று உலகெங்கும் இருக்கும் எவரையும் இணைக்கும் இன்டர்நெட் வழங்கியிருக்கும் கொடைகளில் ஒன்று... பிளாக்ஸ். இது இணையத்தில் நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் சின்னக் குடில். உங்களுக்குப் பிடித்த நடிகை, நீங்கள் போய்வந்த ஊர், நீங்கள் ரசித்துப் பார்த்த கட்டழகி, படித்த புத்தகம், பிடிக்காத அரசியல்வாதி, ஒருகாலத்தில் முழங்கை வரை நெய்வழிந்த பார்த்தசாரதி கோயில் சர்க்கரைப் பொங்கல், காதல், கவிதை, இன்னும் என்ன வேண்டுமானாலும் எழுதி உங்கள் குடிலில் வலையேற்றலாம். மொத்தத்தில் அது உங்களுக்கான தனிப்பட்ட இடம். இணையத்தில் கட்டிக்கொண்டிருக்கும் சொந்த வீடு.

சொந்த வீடு என்றால், சுதந்திரம் அவசியம் தானே? அது இல்லையென்றால், சொந்த வீட்டுக்கு அர்த்தமே இல்லையல்லவா? கம்ப்யூட்டர் துறையில் கோலோச்சும் இளம் சீனர்கள் தங்கள் வாய்ப்பூட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய வடிகாலாக பிளாக்ஸைக் கண்டார்கள். இது நாள் வரை இல்லாத கருத்துச் சுதந்திரத்தை இணையத்தில் அவர்கள் கண்டார்கள். இன்று சீனாவில் கிட்டத்ததட்ட 111 மில்லியன் இணையப் பயனாளிகள் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் எழுதுகிறார்கள்? ஒரு குடும்பப் பெண்மணி தான் அன்று என்ன வீட்டில் சமைத்தேன் என்று ஒவ்வொரு நாம் தன் பிளாக்கில் எழுதினார். மற்றொரு பெண் லிலி, தன் பணியிடத்தில் தான் எப்படி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று எழுதினார். திருமணமானவர்கள் எல்லாம் எப்படித் தன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அவர் எழுதிய பதிவுகள் பயங்கர பாப்புலர். இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறதா? கரெக்ட். நாம் உட்கார்ந்து கொண்டிருப்பது இந்தியா என்ற சர்வசுதந்திர நாட்டில். முதல்வரிலிருந்து நாட்டின் முதல் குடிமகன் வரை எவரையும் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் நமக்குக் கைவந்த கலை. ஆனால், சீனா அப்படிப்பட்ட நாடு அல்ல.

அங்கே கம்யூனிஸ்ட் கட்சிதான் தலை, அதுவேதான் வால்... சர்வமும் அதுவே. அங்கேயும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என்று கட்சி சொல்லும். அதைத்தான் எழுதவேண்டும். இன்றைக்கு நேற்றைக்கல்ல... ஆண்டாண்டுகாலமாக இதுதான் சீனாவின் நிலை. பத்து ஆண்டுகக்கு முன்புதான், சீனாவில் முதன்முதலாக இன்டர்நெட் நுழைய அனுமதிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் என்னவிதமான மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று யூகித்துப் பாருங்கள். மக்களின் அடிமனதில் தேங்கிக் கிடக்கும் எண்ணங்கள், கருத்துகள், வலிகள், வேதனைகள் என்று எழுத எழுத மாளாமல் போகக்கூடிய பெரும் எதிர்ப்பு உணர்வுதான் மிஞ்சியிருக்கிறது.

உதாரணமாக, 'ஃபலூன் காங்க்' என்ற ஆன்மிக இயக்கம் அங்கே இருக்கிறது. சீன அரசுக்கு இது அரசுக்கெதிரான இயக்கமாகத் தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட 70 மில்லியன் பேர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதைக் கண்டவுடன், அரசு தடைசெய்துவிட்டது. இது நடந்தது ஏழாண்டுகக்கு முன், இன்று பலூன் காங்க் இயக்கத்தவர்கள்தான் இணையத்தை அசால்டாகப் பயன்படுத்துபவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? மொத்த இயக்கத்தையும் அதன் கருத்துகள், செயல்பாடுகள், போதனைகள் என்று இன்டர்நெட்டின் அத்தனை சாத்தி யங்களையும் பயன்படுத்தி, அந்த நம்பிக்கையை சீன மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

உதாரணமாக, பலூன் காங்க் என்ற ஆன்மிக இயக்கம் அங்கே இருக்கிறது. சீன நம்பிக்கை என்றில்லை... சீன அரசு நினைத்தால் எதையும் தடைசெய்துவிட முடியும். சீனாவில் இருந்துகொண்டு கூகுள் (Google) எனப்படும் இணையதள தேடுபொறியைப் (Search Engine) பயன்படுத்துபவர்கக்கு அந்த அரசின் கெடுபிடிகள் தெரியும். கூகுள் இணைய பக்கத்தில் போய், சீனாவின் புகழ்பெற்ற டியனன்மென் சதுக்கம்... மாணவர் படுகொலைகள் நடந்த ஜூன் 4 போன்ற சொற்களைக் கொடுத்துத் தேடச் சொன்னால், உங்கக்கு வெள்ளையான பக்கம் ஒன்றுதான் வரும். அச்சொற்கள் தடைசெய்யப்பட்ட சொற்கள்.

மற்றொரு முக்கியமான வலைதளம், விக்கிபீடியா என்பது. எப்படி என்சைக்ளோபீடியா அனைவராலும் பயன்படுத்தப்படுகிறதோ, அதுபோல், இது இணையத் தில் ஆர்வலர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு நாம் விக்கிபீடியாவில் எண்ணற்ற செய்திகள், கட்டுரைகள், தகவல்கள் சேர்க்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. அதில் டியனன்மென் சதுக்கப் படுகொலைகள் பற்றி, 12 பக்கத்தில் ஒரு கட்டுரை இருக்கிறது. சீனா அந்த வலைதளத்தையே சீனர்கள் பார்க்க முடியாமல் செய்துவிட்டது. இதேபோல், தலாய் லாமா, லாமா, திபெத், திபெத்தின் சுதந்திரம் போன்ற சொற்கம் அது சம்பந்தப்பட்ட வலைதளங்களும்கூட அவர்களுக்கு அந்நியம்தான்.

மீடியாவைத் தணிக்கை செய்வதற்கென்றே பெரிய துறை வைத்திருக்கிறது சீன அரசு. பத்திரிகை, தொலைக்காட்சி என்று கட்டுப்படுத்த முடிந்த அத்தனையையும் கட்டுப்படுத்தி வைத்திருக் கும் சீனா, இன்டர்நெட் என்று வந்தவுடன் அதிலும் தன் கெடுபிடியைக் காட்டத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட 40,000 வெப் போலீஸ்கள் இதே வேலையாக, ஒவ்வொரு சைபர் கபேவாகப் போய், இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வரின் தோள்மேலும் நின்றுகொண்டு வேவு பார்க்கிறார்கள். இது இல்லா மல், இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களை, குறிப்பிட்ட சொற்களைத் தடைசெய்யச் சொல்லி கட்டளை இடுகிறார்கள். ரொம்பவும் குதித்தால், தூக்கி உள்ளே வைத்துவிடுகிறார்கள்.

அப்படிச் சென்ற ஆண்டு, பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஷி தாவோ. பத்திரிகையாளரான இவர் செய்த ஒரே குற்றம், அரசின் ஒரு கட்டுப்பாட்டைப் பற்றி வெளிநாட்டு வெப்சைட்டுகக்கு செய்தி கொடுத்ததுதான். டியனன்மென் சதுக்க படுகொலையின் பதினைந்தாவது நினைவு தினத்தை எப்படிச் சீன பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகைகளில் கவர் செய்ய வேண்டும் என்று அரசு ஒரு கட்டுப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதை, ஷி தாவோ வெளிநாட்டு வெப்சைட்டுகக்கு இ&மெயில் மூலம் அனுப்பிவிட்டார். அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது... விளைவுதான், பத்தாண்டுகள் சிறைத் தண்டனை.

இதெல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் நடந்த சம்பவம்தான், இப்போது சர்வதேச மீடியாக்களின் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. டிசம்பர் 31, 2005 அன்று, ஜாவோ ஜிங் என்பவர் வைத்திருந்த பிளாக்கை மைக்ரோசாப்ட் நிறுவனம் மூடிவிட்டது. 2004 டிசம்பரில், பெரும் கனவுகளோடு அவர் தனது பிளாக்கை ஆரம்பித்தார். பெரும்பாலான பிளாக்குகள் டைரிகள் போலவோ, விளையாட்டாகவோ இருக்கிறது. நான் வித்தியாசமாகச் செய்யப் போகிறேன். அரசியல் பற்றி, உயர்தரமான ஒரு பிளாக் நடத்தப் போகிறேன். ஒரு தினசரியிலோ, பத்திரிகையிலோ வெளிவரத் தகுதியான அளவு தரமான அரசியல் கட்டுரைகளாக அவை இருக்கும் என்றார்.


ஈராக் போர், தாய்வானில் நடைபெறும் சுதந்திரத்துக்கான போராட்டம், சீன இதழியலின் இன்றைய நிலை என்று அவர் சென்சிட்டிவான விஷயங்களைச் செதுக்கிச் செதுக்கி எழுதினார். ஜூலை 2005&க்குள் அவரது பிளாக்குக்குப் பயங்கர பாப்புலாரிட்டி வந்துவிட்டது. ஒரு நாளைக்கு ஏழாயிரம் பேர் அவர் வலைப்பதிவைப் படிக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த ஆகஸ்டில்தான சனி பிடித்தது. சைனா யூத் டெய்லி என்ற பத்திரிகையின் ஆசிரியர், தன்னுடைய செய்தியாளர்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று எழுதிய ஒரு கடிதத்தை தனது பிளாக்கில், ஜாவோ வெளியிட்டுவிட்டார். அடுத்த சில மணிநேரங்களில், அவரது பிளாக்கை அரசு தடைசெய்துவிட்டது. யாரும் படிக்க முடியாதபடி, அடைத்தும் விட்டது. மைக்ரோ சாப்டின் தளத்தில் தனது புது பிளாக்கை ஜாவோ தொடங் கவும் செய்தார். இங்கும் அவரது டிரேட் மார்க் விமர்சனங்கள் அனைவரையும் கவரத் தொடங்கிவிட்டது.

2005 டிசம்பரில், பீஜிங் நியூஸ் என்ற பத்திரிகையின் மூத்த ஆசிரியர்களை சீன அரசு தூக்கிப் போட்டுவிட்டு, வேறு ஆசிரியர்களைக் கொண்டு வந்தது. ஜாவோவுக்குப் பிடித்த பத்திரிகை இது. அதில் நல்ல வேகமான ரிப்போர்ட்டிங் உண்டு என்பது அவர் கருத்து. ஆசிரியர்களை அரசு மாற்றியவுடன் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தனது பிளாக்கில், இந்த மாற்றம் பற்றி எதிர்ப்புத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அந்தப் பத்திரிகையின் சந்தாக்களைக் கேன்சல் செய்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி வாசகர்களைத் தூண்டவும் செய்தார்.

மறுநாள்... ஷாங்காய் முனிசிபல் இன்பர்மேஷன் ஆபீஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஜாவோ பிளாக்கை தூக்கச் சொல்லிவிட்டது. அவ்வளவுதான். பிளாக்கர் உலகமே குலுங்கத் தொடங்கிவிட்டது. மைக்ரோசாப்ட்டுக்கு எதிராகக் கண்டனம், சுதந்திரப் பத்திரிகையாளர்களின் கண்டனம் என்று எல்லா இடங்களிலும் ஜாவோவுக்கான ஆதரவு பெருகத் தொடங்கிவிட்டது. சர்வதேச பத்திரிகைகளான நியூஸ் வீக்கும் போர்ப்ஸு-ம் கூட இதைப்பற்றி கவர் ஸ்டோரிகள் செய்துவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி என்னதான் சீன அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்து, போலீஸ்களாகப் போட்டுத் தள்ளினாலும், வலைப்பதிவாளர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. கூடவே, இதுபோன்ற ஜனநாயகக் குரல்கம் அதிகமாகிக்கொண்டே போகிறது.

இனி, சீனா பற்றி அமெரிக்கா கவலைப்படவேண்டாம். பிளாக்கர்களே பார்த்துக்கொள்வார்கள் போலிருக்கிறது!

ஆக நான் எழுதியது போல், இது "உன்னால் முடியும் தம்பி-ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்" தான்!!

நன்றி: ஆனந்த விகடன்

Thursday, March 16, 2006

ஹோலி ரே... ஹோலி.....

இந்த ஹோலிப் பண்டிகை மறக்க முடியாத ஒன்னு. நான் வட இந்தியாவில டெல்லி, உ.பி., ராஜஸ்த்தான்னு கழிச்ச காலகட்டங்கள்ல இந்த பண்டிகை எனக்கு மறக்க முடியாத ஒன்னு. வட இந்தியா வர வரை, இந்த 'மஞ்ச குளிச்சு, அள்ளி முடிச்சு, மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சுன்னு' இளையராஜா போட்ட பாட்டை பதினாறு வயதினிலே படம் பார்த்து தான் இந்த மஞ்சத்தண்ணி அடிச்சிக்கிறதை பத்தி தெரியும். அதுவும், தமிழ்நாட்டில எல்லா கிரமங்கள்ளயும் இப்படி மஞ்சத்தண்ணி அடிச்சி, ஊத்தி விளையாடி கொண்டாடுவாங்களான்னு தெரியாது. இது இந்த பாரதிராஜா ஊரு பக்கமா, தேனீ, பெரியகுளம் பக்கம் கொண்டாடுவாங்கன்னு கேள்விப் பட்டேன். யாரும் அவங்க அவங்க கிராமத்தில இதை கொண்டாடியிருந்தா பின்னோட்டத்தில விலாவாரியா எழுதுங்க. அப்புறம் எங்க திருச்சி பக்கத்தில சமயபுரம் மாரியாத்தாவுக்கு, மஞ்சக்குடம் எடுக்கிறதோட சரி. இப்படி அடிச்சி விளையாண்டுகிறது கிடையாது. ஆனா வட இந்தியாவில இது ஒரு முக்கியமான பண்டிகை. எப்படின்னு கேளுங்க!

வட இந்தியாவில நல்லா குளிரு ஆரம்பிக்கிறது சரியா ஜனவரி மாச நடுவில, அதாவது நம்ம போகிப் பண்டிகை கொண்டாடுறப்ப, இங்க லோடின்னு, பழயன கழிதலும், புதியன புகுதலும் மாதிரி, எல்லா பழய சாமானை போட்டு கொளுத்தி, ராத்திரியில ஆடி பாடி, குளிரை வரவழைப்பாங்க. அதே மாதிரி இந்த ஹோலி முடிஞ்சா, குளிர் முடிஞ்சுதுன்னு அர்த்தம், வசந்தம் ஆரம்பம்னு காலம் குறிக்கவும் இந்த பண்டிகையை குறிப்பிடறதுண்டு. ஆனா, இந்த பண்டிகை கொண்டாடுறத்துக்குண்டான கதை என்னான்னா, இரணியன்ங்கிற ராஜா, எல்லாரும் தன்னை கடவுளா நினைச்சு கொண்டாடனும்னு ஆசைப்பட்டப்ப, அவருடய மகன், விஷ்னு பக்த பிரகலாதா, அவரோட ஆணையை ஏற்காததால, அவனை தண்டிக்க வேண்டி, தன் சகோதரி ஹோலிகாவை அனுகுகிறார். அந்தம்மாவை நெருப்பெல்லாம் சுட்டு எரிக்கமுடியாதுன்கிறதால, சின்ன பையனா இருந்த பிரகலாதனை, தன் மடியில வச்சுகிட்டு நெருப்பில இறங்கிடறாங்க, ஆனா, பிரகலாதன் தொடர்ந்து விஷ்ணுவின் மேல் செய்த தவத்தின் காரணமா அந்த தீ சிதையிலருந்து எரியாம தப்பிடறார், ஆனா, ஒன்னும் செய்யமுடியாத நெருப்பு, இந்த ஹோலிக்கா அம்மாவை சாம்பலாக்கிடுது. இந்த தீய சக்திகள் ஒழியறதை காரணம் வச்சு, ஹோலிகாக்கள் நெருப்புல எரிஞ்சு சாம்பலாயிரதை முதல் நாள் ராத்திரி தீ மூட்டி கொளுத்தி கொண்டாடிட்டு அடுத்த நாள் எல்லாரும் கலரு தண்ணி அடிச்சி கொண்டாடுவதே இந்த ஹோலி.

இந்த ஹோலி கலரு ஊத்தி விளையாடறதுல்ல எந்த வரம்புகளும் கிடையாது, யாரு வேணாலும், யாரு மேலே வேணாலும் கலர் தண்ணியை ஊத்தலாம். வெள்ளையும் சொள்ளையுமா போனீங்கன்னா, அன்னைக்கு அம்புட்டுத்தான். திரும்ப வர்றப்ப, ஆளே அடையாளம் தெரியாம வருவீங்க. இதில குழந்தங்க விரும்பி, பிச்சுக்காரி, தண்ணி பீச்சி அடிக்கிற பம்பு வச்சுக்கிட்டு அடிச்சு விளையாடுங்க. அதில சோகம் என்னன்னா, வெறும் கலர் குங்குமத்தில கரைச்ச தண்ணி அடிச்சா கரை எல்லாம் போயிடும். சமயத்தில டை கலரை மிக்ஸ் பண்ணி அடிச்சா அந்த கலர் போக கிட்ட தட்ட ஒரு மாசம் ஆகும் பாருங்க. இன்னொன்னு வயசு பசங்க, வயசு பொண்ணுங்களை கலர் அடிச்சி பண்ற அநியாயம் அது வேறெ கதை. ஈவ் டீசிங் கேஸ் எக்கசக்கமா பிடிபடும். இருந்தாலும் கலர் அடிச்சு பயங்கரமா கொண்டாடுவாங்க. அதுவும் குடும்பங்கள்ல, தெரிஞ்சவங்கள்ல கொஞ்சம் ஜாஸ்தியாவே சுதந்திரம் எடுத்துக்கிட்டு, கலர் பூசி விளையாடுவாங்க. அப்புறம் மக்கள் புல்லா ஏத்திக்கிட்டு அடிக்கிற லூட்டி சொல்லி மாளாது.

ஆரம்பத்தில, நமக்கு ஹோலி நாள்னா வீட்டிலேயே சிறைதான். வெளியில எங்கேயும் போறதில்ல. அப்புறம் வருஷங்கள் ஆக ஆக எல்லோருடனும் பழகனோன்ன, ஹோலி சேர்ந்து விளையாடுவது ஒரு ஆனந்த கூத்துன்னு வச்சுக்கங்க. நீங்க போகலேனாலும், உங்க வீட்டுக் கதவை தட்டி, கலர் குங்குமத்தை வச்சிட்டு, 'ஹோலி முபாரக்'ன்னு சொல்லிட்டு போவாங்க. அதுக்கு பொம்பளங்க,ஆம்பளங்கன்னு கோஷ்டி கோஷ்டியா வீடு வீடா போயி வாழ்த்து சொல்றது, அப்புறம் கலர் பூசி கட்டி பிடிச்சிக்கிறது ஒரு ஜாலி. அதே மாதிரி முத நாளே ஆபிஸ்கள்லயும் கலர் பூசி, மிட்டாய் கொடுத்து கொண்டாடுவது வழக்கம், ஏன்னா, ஹோலி நாளு, ஆபிஸ்ங்க எல்லாம் லீவு. இது ஏன் நம்ம தமிழ் நாட்டில அவ்வளவு பாப்புலரா இல்லன்னு தெரியல்ல. ஏன்னா, தசாவதார புராணம் எல்லா பக்கமும் ஒன்னு. எப்படி நம்ம கொண்டாடாம விட்டுட்டோம், காரணம் தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க.

இன்னொன்னு, நீங்க கொஞ்சம் நகரத்தை விட்டுட்டு உள்ள இருக்கிற கிராமங்களுக்கு போனீங்கன்னா, இதை விட கூத்து அதிகம் இருக்கும்.நான் அப்படி தான் உ.பி.யில இருந்தப்ப, ஹோலி அப்ப, தப்பி தவறி டில்லி கில்லி வந்தா மதியத்துக்கு மேலே பஸ் கிடைக்காது ஊரு போய் சேர, அப்புறம் உங்க காரு, வண்டின்னு எது இருந்தாலும், சரியா நீங்க வீடு போய் சேர்ந்தா அது உங்க அதிர்ஷ்டம். மதியத்துக்குள்ள போகவேண்டிய இடங்களுக்கு போய் சேர்ந்திடணும். அதுவும் அந்த மாதிரி பஸ்ங்கல்ல அந்த ஹோலி சமயத்தில போகற அனுபவம் தனி, ஏன்னா, மொத்த பஸ்ஸும் தண்ணியில மெதக்கும். டிரைவரும் நல்ல மப்புல இருப்பாரு. பஸ்ல சீட்டு கிடைச்சு உட்கார்ந்தா உங்க அதிர்ஷ்டம், இல்ல மூணு, நாலு மணி நேரம் பஸ்ஸுக்குள்ள புதைஞ்சு வரணும். யாருக்கும் இந்த அனுபவம் இருந்தா எழுதுங்க! அதுவும் குண்டும் குழியுமான ரோடுகள்ல, நான் போனது 80களின் கடைசி, இப்ப எப்படின்னு தெரியல.

அதே மாதிரி ராஜஸ்தான்லயும், இந்த ஹோலி பண்டிகை ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க, கிராமங்கள்ள, அங்கங்க ஹோலிக்கான்னு அந்த முத நாள் தீ கொளுத்தி சுத்தி நின்னு ஆடிப்பாடுறது கண் கொள்ளாக் காட்சி, அதுவும், அந்த ராஜஸ்தானி ஸ்டைல்ல, உண்டான நடனங்கள், சரிகை கண்ணாடி களான டிரஸ் போட்டுகிட்டு, தம்பூரா வாசிசுக்கிட்டு ஆடும் நடனங்கள், ஓ.. கிளாஸிக், எப்பவாது, இது போன்று ராஜஸ்த்தான் போகும் வாய்ப்பு கிடைத்தா, தவற விட்றாதிங்க. அந்த பாலைவன காட்டிலே, அழகு நிலா மேட்டிலே, கும்மென்று கருத்து கிடக்கும் இருட்டினிலே, ராஜ்புத்ர மாந்தரும், வீரர்களும், சின்ன குழந்தைகளும், மண் பறக்க, ஆடும் நடனங்கள், அப்பா, கிராமத்து மண் வாசனைன்னு சொல்வாங்களே, அப்படியே இருக்கும். இன்னொன்னு, ஹிந்தி பேசற Heartlandல ராஜஸ்த்தான் மாநிலம் தான் முழுக்க முழுக்க இந்துக்களால் கொண்ட ராஜ்ஜியம்.

இங்க தான் அந்த ஹோலிகா எரியும் கொள்ளையிலிருந்து இளைஞர் வெளிய வர்றது, சரியான முகூர்த்த நேரத்தில, நடுநிசி 2 மணிக்கு அந்த கிராமத்து புரோகிதர் தீ வச்சு கொளுத்தி, அந்த பிரகலாத கதை மாதிரி இளைஞர் சுத்தி வர்றதை எல்லாம் பார்க்கமுடியும். இங்கே, பாரதிராஜா படம் மாதிரி ஒரு ஐதீகம் இருக்கு, அதாவது, எந்தெந்த வாலிபர்ங்க கல்யாணம் பண்ணீக்கனும் ஆசைப்படறோங்களோ, அதை அந்த எரியும் தீ முன்னே வேண்டிக்கிட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்கு ஒடிடணும். அப்படி வீட்டுக்கு ஓடும் வரை அந்த கொள்ளி கட்டு எரிஞ்சு முடியாம இருந்தா அவனுக்கு அந்த வருஷமே கல்யாணமாயிடும்.அதே மாதிரி கல்யாணமான பொண்கள், தன் கணவன்மார்கள் தீர்க்காயிசா ரொம்ப நாள் இருக்கணும்னு அந்த தீக்கொள்ளி முன்ன வேண்டிக்குவாங்க, அப்படி வேண்டிக்கிட்டா புருஷனுக்கு ஆயிசு கெட்டின்னு ஒரு ஐதீகம்.( நம்ம வீடுங்கள்ல நம்ல கொள்ளிகட்டுல இறக்கிவிடாம இருந்தா சரி!)

இந்த ஹோலிகளும் ஹிந்தி திரைப்படங்கள்ல ஒரு தனி இடம் பிடிச்சி வச்சிருக்கு. ரொம்ப பேமஸ் ஆன ஹோலி சாங்ஸ் எல்லாம் இருக்கு. அதெல்ல முக்கியாமா ஷோலே படத்தில நம்ம மாமி ஹேமாமாலினி பாடி ஆடின ஹோலிப்பாட்டு ரொம்ப பிரசித்தம். இப்படி வண்ணக்கலவைகளின் வர்ணம் பூசி, வாழ்த்து தெரிவிப்பதே இந்த ஹோலியின் மெயின் ஹைலைட்! ஆகையால் இது வந்திட்டாலே இப்படி 'ஹோலி.. ரே..ஹோலி' கூப்பாடு போட்டு கொண்டாடுறது வட இந்தியாவில இருக்கிற நம்ம தமிழர்களுக்கு பரிச்சயமான ஒன்னு!

Monday, March 13, 2006

நாலு எழுத நாளாகிபோச்சு!

சும்மா நானும் இந்த நாலை பத்தி கிண்டலடிச்சிக்கிட்டு இருந்தேன், என்ன எல்லாரும் நாலு நாலா நாள் பூரா எதாவது எழுதிகிட்டிருக்காங்களேன்னு. அப்பத்தான் குமரன் நம்மல இந்த ஆட்டத்துக்கு இழுத்துவிட்டுட்டு இப்ப லீவு போட்டுட்டு ஊர் சுத்தப்போறாரு. அதுக்குள்ள போடலாமுன்னு தான் இந்த நாலு சமாச்சாரத்தை எழுத ஆரம்பிக்கலாமுன்னு யோசிச்சப்ப, நமக்கும் பிடிச்ச நிறைய நாலுங்க இருக்குன்னு தெரியவந்துச்சு.

சின்ன புள்ளயா இருந்தப்ப புடிச்ச நாலு:

எங்க பூக்கடையில மூலையில உட்கார்ந்து மத்தியானம் கேரியர்ல வர்ற சாப்பாட்டை நல்ல தலவாழை இலைப்போட்டு சாப்பிட பிடிக்கும். கூட அண்ணாமராட்ட கடையிலருந்து வாங்கி வந்த கோலா உருண்டையோட சேர்த்து சாப்பிட பிடிக்கும்.

நானும், என் பால்ய சினேகிதன் தனபாலும் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் சாய்ந்திரம் அப்படியே காலாற நடந்து மெயின்கார்டுகேட்டுக்கோ, இல்ல ஜங்ஷனுக்கோ போயி, ராத்திரி ஜங்ஷன் பக்கத்தில, எம்பளாயிமென்ட் ஆபிஸ் பக்கத்தில இருந்த டிரைவின்ல (கவிதாவோ, இல்ல ரத்னாவோ பேரு) சாப்பிட்டுட்டு, மெயின்கார்டுகேட்டாண்ட இருந்த பத்மாவில்ல சாப்பிட்டுட்டு, பிறகு ராத்திரி ஆட்டம் சினிமாவுக்கு போறது ரொம்ப பிடிச்ச ஒன்னு

எங்க வெளிகண்ட நாதர் கோவிலுக்கு போற உய்யகொண்டான் ஆத்துபாலத்தில பட்டம் விடுறதும், இல்ல எங்க வீட்டு மொட்ட மாடியில பட்டம் விடுறதும், அதுக்காக, மாஞ்சா போடுறேன்பேர் வழின்னு, இருக்கிற பாட்டில உடைச்சி தூள்பண்ணி, அப்புறம் ஊமத்தை இலை, மஞ்சக்கலர் வேணும்னு செந்தூரத்தை கலந்து டொயின் நூல்ல போட்டு பட்டம் விட்டு, அறுந்த பட்டத்தை எடுத்துக்கிறேன்னு, பக்கத்து வீட்டு ஓட்டு மேலே ஒடி அதை உடைச்சி, அந்த வீட்டு அம்மாட்சிக்கிட்ட தினம் பாட்டு வாங்கிறது பிடிச்ச ஒன்னு.

எங்க தெருவில இருந்த வீடுகள்ல உள்ள திண்ணையில(இப்ப திண்னை வச்ச வீடுங்களை பட்ணத்தில பார்க்க முடியறதில்லை), தெரு பசங்களோட ஓடி விளையாடி தெருவையே உண்டு இல்லைன்னு ஆக்கிட்டு, அப்புறம் நிதம் எங்கள வஞ்ச அந்த பெரிய வீட்டு அக்கா, எங்களை ஒன்னும் செய்ய முடியாம கடைசியில எங்க கூட சேர்ந்து விளையாடி, 'இவ்வளவு பெரிய தடிமாடு, சின்னபிள்ளங்களோட என்ன விளையாட்டுன்னு அவங்க அம்மா திட்டியும் எங்களோட விளையாடி, கொட்டம் போட்ட அந்த தருணங்கள் பிடிச்ச ஒன்னு(அப்புறம் இரண்டு வருஷத்தில அது கல்யாணமாயி போனோன உண்டான சோகம் அது தனிக்கதை!)

இஞ்சினியரிங் காலேஜ் கோயம்புத்தூர்ல படிச்சப்ப பிடிச்ச நாலு:

தினம் சாய்ந்திரம் ஹாஸ்டலுக்கு பின்னாடி வழியா ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி போயிட்டு, வழியில பாட்டிக்கடையில சிகரெட் வாங்கிட்டு, அப்புறம் ரோட்டு கடை பேக்ரிக்கு போயி மரவள்ளிக்கிழங்கு சிப்சும், டீயும் சாப்பிட்டுட்டு ராத்திரி இருட்டி நேரா மெஸ்ல வந்து திரும்ப கொட்டிக்கிட்டு ரூம் திரும்பறது பிடிச்ச ஒன்னு!

காலங்காத்தால எழுந்து அந்த சிலு சிலு காத்தில கிரவுண்டுக்கு போயி ஒரு பத்து ரவுண்டும்,அப்புறம் அரைமணி நேரம் பேரலல் பாரும் செஞ்சிட்டு நேரா மெஸ்ல வந்து சூடா காப்பி குடிச்சிட்டு அரட்டை அடிக்கிறது பிடிச்ச ஒன்னு. அதே மாதிரி செம்ஸ்டர் எக்ஸாமுக்கு பயபக்தியா பரீட்சைக்கு முதன் நாள் பின்னாடி காலனில இருந்த பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வர்றது பிடிச்ச ஒன்னு (கொஞ்சம் பிகர்ங்கல பார்த்துட்டு வந்து உட்கார்ந்து படிச்சா நல்லா ஏறும், ரொம்ப மங்களகரமா இருக்கும்!)

குளிர்காலத்தில மூணுமாசத்துக்கொரு தடவை ஊட்டி போயிட்டு, மத்தியானம் ஜின்னு அடிச்சிட்டு நல்லா கறியும் கோழியும் சாப்பிட்டுட்டு பிறகு நடந்தே தொட்டபேட்டா மலை மேல ஏறி, போதை இறங்கி திரும்ப கீழே இறங்கி நடந்து வந்து பஸ்ஸ பிடிச்சு கோயம்புத்தூரு வந்து சேருறது பிடிச்ச ஒன்னு.

வாரம் வாரம் சனிக்கிழமை போடற ஓப்பன் ஏர் தியோட்டர்ல படம் பார்க்க, அடிச்சிபுடிச்சிக்கிட்டு சோத்த சீக்கிரமே எட்டு மணிக்கெல்லாம் மெஸ்ல தின்னுட்டு அப்புறம் மைதானத்தில போயி உட்கார்ந்து, பொட்டி வரலேன்னோ, இல்ல புரெஜெக்டர் ரிப்பேர்னு தேவுடு காத்துட்டு, அந்த கேப்பில சின்ன ஸ்கிட்டு போட்டு தெரு கூத்து மாதிரி மொத்த கும்பலும் எங்கள சுத்த, அப்புறம் எங்கள கேட்டு திரும்ப படம் ஆரம்பிக்கிற கூத்து எனக்கு பிடிச்ச ஒன்னு.

நாம் மெட்ராஸ்ல குப்ப கொட்டனப்ப பிடிச்ச நாலு:

கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல யிருந்து ராத்திரி ஷோவுக்கு படம் பார்க்க மெளண்ட் ரோடு போயிட்டு, அப்புறம் படம் பாத்துட்டு பஸ்கிடைக்காம, ராத்திரில புகாரில பிரியாணி சாப்பிட்டுட்டு லாரி புடிச்சு காலேஜ் வந்து சேர்றது பிடிச்ச ஒன்னு.

திருவல்லிக்கேணியில தங்கியிருந்தப்ப, தினம் ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டு, அப்படியே காலாற பைகிராஃப்ட்ஸ் ரோட்ல நடந்து போயி கண்ணகி சிலை தாண்டி, மெரினா பீச்சில போய் உட்கார்ந்துட்டு கடலையே வெறிச்சு பார்த்துட்டு ஒரு ஒரு மணி நேரம் உட்கார்ந்துருந்திட்டு வந்தது பிடிச்ச ஒன்னு.

வாரம் வாரம் ஞாயித்துக்கிழமை, நான் தங்கியிருந்த மேன்ஷன் கீழே, அதாவது ரத்னா கபே பக்கத்தில, இருந்த அங்குராசுக்கடை பிரியாணியை காலையில பத்து மணிக்கு சாப்பிட குருப்பா நாங்க தங்கியிருந்த ரூம் மேட்டுங்களோட சேர்ந்து போயி சாப்பிட்டுட்டு வர்றது பிடிச்ச ஒன்னு.

கிண்டி காலேஜ்ல ஞாயித்துக்கிழமைங்கள்ல காலையில மெஸ்க்கு லேட்டா போயி, காலை மெனு, ரவா தோசையை நம்க்குன்னு ஸ்பெஷலா போட்டு சுகமா சாப்பிட்டுட்டு வர்ற்து பிடிச்ச ஒன்னு ( மெஸ் குக், பாய் எல்லாரும் பக்கா தோஸ்து, நம்மல ஸ்பெஷலாக கவனிப்பாங்க!)

நான் டெல்லியில தங்கியிருந்தப்ப பிடிச்ச நாலு:

அப்ப அப்ப அசோகா ரோட்ல இருக்கிற ஆந்திரா பவன் போயி திவ்வயமா மத்தியான சாப்பாடு சாப்பிட்டு வர்றது பிடிச்ச ஒன்னு. (என் சக தர்ம பத்தினிக்கும் பிடிச்ச ஒன்னு, ஆந்திரா பவன் சாப்பாடுன்னா, நாக்க தொங்க போட்டுட்டு அலையறவங்க!)

வாரம் தவறாம ஏதாவது ஒரு மல்டிபிளக்ஸ்க்கு போயி படம் பார்த்துட்டு (குடும்பதோட தான்) பிறகு நல்ல நார்த் இண்டியன் காணா (சாப்பாடு) சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேர்றது பிடிச்ச ஒன்னு!

அப்ப அப்ப காரை எடுத்துக்கிட்டு இமயமலை அடிவாரம் போயிட்டு வர்றது ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதுவும் ஹிமாச்சல், ஹுமாயுன், கர்வால் மலைத்தொடர்கள், அக்சர்தாம், அப்படின்னு பத்து நாள் தங்கி வர்றது பிடிச்ச ஒன்னு. (நம்ம ரஜினி மாதிரி தான் அடிக்கடி இமயமலை அடிவாரம் போய்டறது, தியானத்துக்குன்னு இல்லனாலும், சிலு சிலு காத்து, இயற்கை சூழ்நிலை, மனசு நம்மக்கிட்ட இருக்காது போங்க!)

மோட்டர் பைக் இருந்த வரைக்கும் நாங்க மூணு பேரும் (நான், என் மனைவி, மகள்) அதில டில்லியையே சுத்தி வலம் வந்தது, அது 100 கிமீ னாலும் அசராம போய் வந்ததது பிடிச்ச ஒன்னு.

இப்படி நாலு நாலா நாலு இடங்கள்ல என் பிடிச்ச அனுபவத்தை எழுதிட்டேன். மேற்கொண்டு சினிமா, பாட்டுக்கள், பிடிச்சவங்க, போகவேண்டிய இடங்கள்,சாப்பாடு அயிட்டம் அப்படின்னு எல்லாத்திலேயும் வெறும் நாலோட முடிஞ்சிறதில்ல நம்மளுது. அதனால அதை பத்தி விரிவா எழுதல.

பிறகு வெறும் இந்த நாலு பேரை மட்டும் அழைச்சி இந்த சங்கிலி தொடர்ச்சி போட மனசில்லை. ஏன்னா, தமிழ் மணம்னு வந்திட்டா எல்லாரும் நமக்கு சினேகிதம். ஆக எல்லாருமே இந்த பிடிச்ச நாலுங்களை எழுதி போடுங்க, படிக்க ஆவலா இருக்கு!

நியூசிலாந்து பகுதி-துளசிக்கு பிராக்ஸி!

துளசி லீவு எடுத்துட்டு போனாலும் போனாங்க, திரும்பி வந்தும் நியூசிலாந்து பகுதி பதிவு போடமாட்டேங்கிறாங்க, நானும் பின்னோட்டம் எழுதி போட்டும் போடல. சரி அவங்க ரொம்ப பிஸியா இருக்கிறதால, ஏன்னா நிறைய அரியர்ஸ் வச்சுக்கிட்டு அல்லாடிக்கிட்டு இருக்கிறதால, அவங்களுக்கு பிராக்ஸி கொடுப்போமேன்னு இந்த பதிவு. அவங்க நியூஸிலாந்து பகுதி 21 படிச்சவங்களுக்கு கீழே ஒரு வீடியோ கிளிப்பு போட்டிருக்கேன் பாருங்க. எப்படி மவோரிங்க வணக்கம் சொல்லி வரவேற்கிறாங்கங்கிறதை இதுல பாருங்க. நான் ரோட்டரோ போயிருந்தப்ப, எடுத்தது. இந்த இடம் நியூசிலாந்தின் வடக்குத் தீவுல இருக்கிற இடம். இந்த இடம் ஒரு கந்தக பூமி, ஆமா, பூமியிலருந்து வெண்ணித்தண்ணி ஊத்தை நீங்க பார்க்கலாம், அப்புறம் அப்படியே மண்குழம்புகள் கொதிக்கறதையும் பார்க்கலாம். அதை 'Mud Geyser'ம்பாங்க! அந்த ஊர்லதான் இந்த மவோரி இனத்தவங்களோட கலைநிகழ்ச்சி பார்க்கலாம். அப்படி பார்த்தப்பதான் எடுத்தது இந்த வீடியோ. சும்மா தமிழ் மணத்தில போடறேன்னு கொஞ்சம் இளையராஜா பாட்டைபோட்டு ரீரிக்கார்டிங் பண்ணி படம் ரிலீஸ் பண்ணிட்டேன். நீங்க இதை நூறு நாள் ஓட்டனும், இல்ல நல்லா இருக்கா, இல்லையான்னு பின்னோட்டம் போடனும். சரியா, ரைட்,ரைட், சவுண்டு...சயிலெண்ட்...

Saturday, March 11, 2006

லக்க..லக்க...லக்க...லக்க...லக்க..லக்க.......

இன்னைக்கு சண்டைக்கோழி படம் பார்க்கிறப்ப, மதுரை வீரன் சாமி பத்தியும், காக்கும் தெய்வம் பத்தியும் அதிகம் பேசி வசனம் வந்தோன, இதை பத்தி கொஞ்சம் அலசலாமுன்னு தான் இந்த பதிவு. ஏற்கனவே நான் வெளிகண்ட நாதர் பேர்ல போடற பதிவை பார்த்துட்டு ரொம்ப பேர் என்ன, நீங்க ஆன்மீகம் எழுதலையான்னு கேட்டாங்க, அதுக்குத்தான் இந்த பதிவு. அதுக்கு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு, சும்மா ஒரு பில்டப்புக்குத்தான். கோயில், சாமி, பூதம்னு பேசபோறோமே, கொஞ்சம் வித்தியாசமா தலைப்பு வைப்போம்னுதான்.

இந்த இந்து கடவுள ஆராச்சி பண்றப்ப, இந்துயிசத்தை, அந்த ரிக் வேத காலத்திலருந்து கொஞ்சம் பார்த்தோமுன்னா, விஷயம் தெரியும், அதாவது வழிபாட்டுகள்ல தலைவான விளங்கினது, பிரஜாபதி, அதாவது கடவுள், மனிதர்கள் எல்லாருக்கும் தந்தை! அந்த பிராஜாபதியை யாரு பார்த்தது? ஏதோ ஒளி கற்றை, அந்த பிராஜாபதியைதான் பல ரூபமா அப்ப கொண்டாடினாங்களாம், அதாவது, இந்திரன், வருணன், சூரியன், அக்னி, சோமன், ருத்ரன், யமன் அப்படின்னு. இந்திரன் வீரக்கடவுள், இடி, மின்னல்களோட சம்பந்தபடுத்தி அழைக்கப்பட்டவன். அதாவது, மின்னலை பூட்டிய வண்டியில், இடி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உலவினவன். இந்த இந்திரனை, கிரீக்லயும், ஜெர்மனியிலையும் அப்பவே கொண்டாடினாங்களாம், அதவாது, Zeus God of Greek and Thor of the Germans னு ஒரு கருத்து இருக்காம். இந்த இந்திரனுக்கு வாகணம் வெள்ளையானை! அடுத்தது வருண பகவான், இயற்கையை ஆளுமை கொண்டவன், மிகவும் பரிசுத்தமான கடவுள் ரிக் வேதத்திலே! இந்த வருண பகவானுக்கு பழைய இரானிய மக்களுக்கு மிகவும் வேண்டபட்ட கடவுள், இந்து மதத்தை போல! பிறகு சூரிய பகவான், இப்படின்னு போயிகிட்டு இருக்கு...

பிறகு ஆரம்பிச்சது தான் ஆரிய கடவுள்கள், திருமூர்த்திகள், சிவா, விஷ்ணு, பிரம்மான்னு. உங்களுக்கு எல்லோருக்குமே தெரியும் இந்த கடவுள்களோட புராணங்கள், கதைகள் எல்லாம், சிவபுராணம், தசாவதாரம், இராமாயணம், மஹாபாரதம், அப்படின்னு.. போயிகிட்டு இருக்கும்...
அதே மாதிரி, சக்தி அவதாரம் கதைகளும், அவங்களோட ஒட்டிய சாமிகளையும் உங்களுக்கு தெரியும். பார்வதி, மலைகளின் ராணி, மஹாதேவி, கெளரி, அன்னபூரணி, சரஸ்வதி, அப்படின்னு எல்லோரும் ஆரியமாலங்க! இவங்க கதைகளும், புராணங்களும் நிறையவே தெரிஞ்சு இருக்கும். ஆதிபராசக்தியிலருந்து பொட்டு அம்மன் வரைக்கும், ஏபி நாகராஜன், இராமராஜன் எல்லாம் படமா எடுத்து தள்ளி நம்மல பக்தி வெள்ளத்தில ஆழ்த்திட்டாங்க போங்க! ஆக இவங்களையும் நல்லா தெரியும்.

பிறகு தமிழக கிராமங்கள்ல அதிகம் கும்பிட படுகிற மாரியாத்தாளையும் நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா.. நம்ம காக்கும் தெய்வங்கள் பத்தி அதிகமா புராணமோ, கதைகளோ வர்றதில்லை, ஏன்? மதுரை வீரன், முனீசுவர்ன், ஆஞ்சனாரு, இப்படின்னு, இவங்க கதைகள் அதிகம் நம்க்கு தெரிவதில்லை.
அதை பத்தி திரைப்படங்கலும் அதிகம் வரதில்லையே. ஆனா, கிராமத்து கதையை வச்சு எடுக்கிற படங்கள்ல கடைசி சண்டைக்காட்சி, இது மாதிரி காவல் தெயவத்துக்கு முன்னே, பிரம்மாண்டமா இருக்கும். எல்லா சாமிக்கும் அந்தந்த ஊருங்கல்ல ஒரு குட்டிக்கதையிருக்கும்.. இவங்க எல்லாம் எல்லை சாமிகள். அந்த ஊரைவிட்டு வேறெங்கேயும் பிரசித்தம் அவ்வளவு கிடையாது.

நான் கிராமத்தில வளராதவன், அதனால அதிகமா கதைகள் எனக்குத்தெரியாது. ஆனா, மதுரை வீரன் சாமியை நாங்க தொடர்ந்து கும்பிடுவோம். இன்னொன்னு, ஆடு கடா வெட்டி படையல் போட்டு நல்லா மூக்க புடிக்க சாப்பிட்டுட்டு ஏப்பம் உட, இந்த சாமியை அடிக்கடி கும்படுறதுண்டு. அதுக்குன்னே எங்க பங்காளிங்க வீட்டுக்கு சாமி கும்பட எப்ப போப்போறோம்னு சும்மா நச்சரிச்சுக்கிட்டு இருப்பேன். என் கேள்வி என்னான்னா, கிராமங்களை விட்டுட்டு அதிகமா இந்த சாமிக்கோயில்கள் இருப்பதில்லை, ஏன்? அதாவது ஆரியக்கடவுள்கள், திராவிடக்கடவுள்ங்கிற பிரிவுல இது வந்துடுதோ!.


நான் வட நாட்டில இருந்த பொழுதும், அங்கே மேலே சொன்ன, சிவன், விஷ்ணு, சக்தி கோயில்கள் தான் அதிகம். இது மாதிரி மனிதரை மனிதர்கள் காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த சாமிகள் தெக்காலதான் அதிகம். ஏன் அப்படி? இதுதான் திராவிட கடவுள்களா? அப்புறம் இந்த சாமிகளை வேற விதமாத்தான் சித்தரிச்சு காட்றாங்க, அதாவது பேய் விரட்ட, சித்தபிரம்மை தீக்க, அப்படின்னு.. ஏன் அன்பான வெளிப்பாட, சரஸ்வதி, லக்ஷமி, அன்னபூரணி, அப்படின்னு நல்லமாதிரி சாமிகளை, இந்த சாமிகளை வெளிப்படுத்திக்காட்டல, விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்! நான் ஆர்யம், திராவிடன் பிரிவனை பேசவர்ல. பொதுவா, நம்ம தமிழ் நாட்ல அதிகமா இந்த மாதிரி கும்படற சாமிகள், சுடலை மாடன் சாமி, மதுரை வீரன், (மதுரைக்காரங்க, மீனாட்சியை தான் தூக்கிவச்சுக்குவாங்க, இந்த மதுரை வீரன் சாமியை வுட்டுடுவாங்க, ஏன்னோ) அதிகமா பரவலா கும்படறதில்லை, இதன் சரித்திரம் என்ன? ஆரிய அமுக்கமா? எப்படி..

அப்புறம் கடைசியா, ஆரிய வழியில வந்த கடவுள் தான் முருகப்பெருமான், ஆனா, நம்ம அவரை அதிகமா தமிழ்கடவுள்னு சொல்லுறோம், ஏன்? பெரும்பாலும் வடக்கால, அதாவது, வட இந்தியாவில யானைமுகத்தானை அதிகம் வழிபடுவதால், நம்ம முருகப்பெருமானை எடுத்துக்கிட்டமோ? கார்த்திக்னு, அவ்வளவு பாப்புலர் இல்ல அவரு அங்க, ஏன்? இந்த உருவ வழிபாடு வருவதற்கு முன்ன, வேதகாலத்துக்கு முன்ன, நம்ம முன்னோர்கள் உருவ வழி இல்லாம வழிபட்ட அஞ்சு பூதங்கள் வழிப்பாடு ஏன் இப்படி உருவ வழிபாடானாது. அந்த உருவ வழிபாட்டு முறையில வந்த இந்த காவல் தெய்வங்கள் அதிகம் ஊர் எல்லையை வுட்டு தாண்டரதில்ல! வெறும் பேய்விரட்ட அப்படின்னு ஏன்? லக்க..லக்க..லக்க..லக்க...லக்க...லக்க...

Tuesday, March 07, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பதினொன்றாம் பகுதி

சமீபத்தில கமலஹாசன் எங்க காலேஜ் வந்துக்கு பேசிட்டு போனதாகவும், அப்ப, தமிழ் படத்தில நடிச்சு ஆஸ்கர் பரிசு வாங்கறது அவ்வளவு ஈசியில்லன்னு, ஏதோ பேசிட்டு போனதா, தெட்ஸ்தமிழ் (Thatstamil) வெப் சைட்ல வந்திருந்தது. அத படிச்சோன, எனக்கு பழய ஞாபகம் தான் வந்துச்சு.அதாவது, நான் டிராமடிக் கிளப் செக்ரட்ரியா இருந்தப்ப, யாரையாவது நடிகர் நடிகைகளை எங்க காலேஜ் ஃப்ங்க்ஷனுக்கு கூட்டிகிட்டு வர ரொம்ப சிரம்மம் எடுத்திருப்பேன். கமலஹாசன் மாதிரி பெரிய நடிகர்களை கூட்டிட்டு வர்றதுங்கிறது பெரிய குதிரை கொம்பு, அப்ப, ஏன்னா, மெட்ராஸ்னா, எந்த காலேஜ்லருந்து போய் கூப்பிட்டாலும் உடனே வந்துடுவாங்க, 'கோயம்புத்தூரா, அவ்வளவு தூரம் எப்படி தம்பின்னு', இழுப்பாங்க. இப்படி பிரபலங்கள கூப்பட நாயா பாடா அலஞ்சிருப்பேன், அந்த காலத்தில நான்!

அதுவும் எங்க குரூப்ல இருந்த அங்குராஜ் (தொடரை தொடர்ந்து படிச்சி வந்தீங்கன்னா, மொதல்ல, நான் சொல்லல, டாக்டர் கொன்னைன்னு, சுஹாசினி தங்கச்சியை டாவுவுட்டுகிட்டுருக்கேன்னு, அவனே தான்), சுஹாசினி வீட்டுக்கு பின்னாடி தான் இருக்கேன், 'வாடா மாமே', நம்ம பேசி கூட்டிகிட்டு வந்திடலாம் ரொம்ப உசுப்பி ஏத்தி என்ன இரண்டு மூணு முறை மெட்ராஸ் வர வச்சு அலைகழிச்சிட்டான்.
அவனுக்கு வீடு ஆழ்வார் பேட்டையில, எல்டாம்ஸ் ரோட்டுக்கு பக்கத்தில தான். அங்க போன, துரை, இவரை பார்க்கறதுக்கே, ஏழுநாளு காக்க வச்சருவாரு, எப்ப போனாலும் அவங்க அண்ணன் தான் ஆஜராவாரு, அங்குராஜ்ஜு எங்கேன்னு கேட்டா, 'அவன் கரண்ட் பில்லு கட்ட போயிருக்கான், அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கான்னு' பதில் வரும். அப்ப நான் மெட்ராஸ் போன தங்கறது, என் இன்னோரு குளோஸ் பிரண்டு திருவேங்கடம் வூட்லதான், எங்க சித்தப்பா வீடு அய்யனாவர்த்தில இருந்தாலும். ஏன்னா, திருவேங்கிடம் வீடு, மெளன்ட் ரோடு சென்ட்ர்ல, அதாவது தேவி தியோட்டருக்கும் அன்னா தியேட்டருக்கும் இடைப்பட்ட பின்னாடி தெருங்கள்ல ஒன்னான, புராசாகிப் தெருக்குள்ள இருந்தது (பழய போட்டா பாருங்க!, அந்த சந்து போற வழி தெரியும், சரியா சொல்னும்னா, ஜெயப்ரதா தியேட்டர் போய்ருக்கீங்களா, அதுக்கு பக்கத்தில தான்). அவங்க வீட்டு மாடில தனி ரூம் இருந்த தாலே அங்க தான் போய் எப்பவும் தங்குவேன்.ரொம்ப வசதி, அங்கேருந்து எங்க வேணும்னாலும் பஸ் புடிச்சி போறதுக்கு. புறவு சாய்ந்திரத்தில, எங்க மெட்ராஸ் 'B' பார்ட்டிங்களோட சேர்ந்து மெரீனா பீச்சு சுத்துறத்துக்கு வசதி. அதாவது பின்னாடியான்ட தெரு வழியா போன, திருவல்லிக்கேணி, அப்புறம் பைகிராப்ட்ஸ் ரோடு, ரத்னா கபே, நேரா போன கண்ணகி சிலை, பீச்சுன்னு வசதியா இருக்கும்.

அப்படி போயி வர்றப்ப தான் வடபழனி போயியே என் காலு தேஞ்சு போனது அந்த கடவுளுக்கே வெளிச்சம், இல்ல 37B, பல்லவனுக்குத்தான் வெளிச்சம்!. எதுக்கு, வடபழனி முருகன் கோயில்லுக்கு போயிட்டு வந்தேன்னா நினைச்சீங்க, அதான் இல்ல, எல்லாம் அங்கருக்கிற ஸ்டியோ ஏறி இறங்கத்தான். பெரும்பாலும், அந்த காலகட்டங்கள்ல வந்த நிறைய சினமாக்களோட, பட சூட்டிங்கை பார்த்திருக்கேன்.
ஒரு தடவை அப்படித்தான் 'சங்கிலி'ன்னு ஒரு படம், சிவீ ராஜேந்திரன் டைரக்ஷன்ல விஜயா வாஹினில்ல சூட்டிங், போய் பார்த்தப்ப, கூட்டத்தில வந்தவன் இல்லாம, ஏதோ அஸிஸ்டென்ட்ன்னு நினைச்சி, 'தம்பி, போய் சாப்புடுங்கன்னு', அழகா கூட்டிட்டு போயி, அந்த சூட்டிங்ல இருந்த கும்பலோட சேர்ந்து சோறு தின்னுட்டு வந்திருக்கேன்னா, பாத்துக்கங்க! ஆனா, நல்ல அருமையான சாப்படு கிடைக்கும் பாத்துக்கங்க, இந்த அலுமினிய அடுக்கு, பெரிய அடுக்கு சும்மா பத்து அடுக்கு பாத்திரத்தில, நிறையா வரும், பின்னாடி கேன்டீன் மாதிரி இருக்கிற இடத்தில திருப்தியா சாப்பாடு போடுவாங்க. (வேற சில சமயத்தில, விரட்டாத குறையா, நிக்க வுடமாட்டாங்கெ, அதுவும், சிலுக்கு டான்ஸ் சீன்னு எடுக்கிறப்ப ஒரு தடவை, துரத்தி துரத்திவுட்டும் பாத்தாச்சுல்ல, 'சகலகலாவல்லவன்' படம்னு நினைக்கிறேன்.)

அந்த சங்கிலி படத்தில தான் பிரபு முதன் முதலா அறிமுகம் ஆனது. பிரபுவை பத்தி எனக்கு முன்னமே பரிச்சியம் இருக்கு. பரிச்சயம்னா, நான் திருச்சியில இருக்கிறப்ப எங்க பாலக்கரை பக்கத்தில இருக்கிற பிரபாத் டாக்கீஸ்க்கு அவர் அடிக்கடி வருவாரு. சும்மா அப்பவே குண்டுன்னா குண்டு போங்க. அதுவும் அந்த மேனஜர் ஆபீஸ்ல வந்து உட்கார்ந்திருக்கிறப்ப, நாங்க போயி, சிவாஜி புள்ளைன்னு வேடிக்கை பார்ப்போம். அப்ப திருச்சியில பிரபாத் கொட்டாய, சிவாஜிதான் லீசுக்கு எடுத்து நடத்தினாரு. அந்த தியேட்டர் இடம் முஸ்லீம் வக் போர்டுக்கு சொந்தம், அதை ரொம்ப நாளு வச்சி நடத்தினது சிவாஜி தான். அப்ப எல்லாம் திருச்சியில சிவாஜி படம் பிரபாத்ல தான் ரிலீஸ்ஸாகும். ஆக, பிரபு, சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், ராம்தாஸ் எல்லாம் நடிச்ச சீனுன்னு நினக்கிறேன், அதை சூட் பண்ணாங்க.

இப்படி சூட்டிங்ல நான் அநேகமா அந்த கால கட்டத்தில எல்லா நடிகர், நடிகைகளையுமே பார்த்திருக்கென். அப்படி ஒரு நாள், ஸ்ரீதேவி, அந்த காலத்தில இளசா இருக்கிறப்ப, தெலுங்கு பட சூட்டிங்ல பார்த்திருக்கேன். அதே மாதிரி எங்கூட படிச்ச ஃபிரண்டு, அவங்க அப்பா, பிஎஸ் வீரப்பா, ஆபிஸ்ல அக்கெவுண்டண்டா இருந்தப்ப, அங்கே, நம்ம கேப்டனை பார்த்திருக்கேன். நாங்க ஒரு வாரம் ரெகுலரா அங்க போனப்ப, விஜயகாந்த் அங்கேயே தான் டேரா அடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு அப்பதான் சினிமாவில காலடி எடுத்து வச்சிருந்த நேரம். அப்ப எம் ஏ காஜான்னு ஒரு டைரக்டர், அவரை அறிமுக படுத்தி வச்சாரு. அதாவது ரஜனிகாந்த் அப்பதான் வேகமா முன்னேறிக்கிட்டு இருந்த நேரம், கொஞ்சம் கொஞ்சமா ஹீரோ ஆயி பெரிய ஆளா வந்துகிட்டு இருந்தப்ப, அவரு ஸ்டைல், அந்த கருப்பு நிறம் எல்லாம் ஒரு அட்ராக்ஷன் அப்ப. அந்த நேரத்தில அவரு மாதிரி நகல்ங்க நிறைய வர ஆரம்பிச்சப்ப தான் , இந்த விஜயகாந்த் வந்தாரு, இன்னொரு ஆளும் நளினிகாந்த்ன்னு, அவரும் ரஜினிமாதிரி முடி ஸ்டைல் எல்லாம் வச்சிகிட்டு வந்தாரு. ஆனா, இவெங்க யாரும் ரஜினி முன்னாடி நிக்க முடியல்ல. அப்ப விஜயகாந்துக்கு சரியான் பிரேக் கிடைக்காம இருந்த நேரம். பிஎஸ் வீரப்பா, புதுசா கம்பெனி ஆரம்பிச்சு படங்கள் எடுத்து கொஞ்சம் கமர்சியலா ஜெயிச்ச நேரம் அது. அப்ப அவரு புது முகங்களை வச்சி படம் எடுத்தப்ப, விஜயகாந்தை வச்சு எடுத்த படங்கள் கொஞ்சம் சக்ஸசாச்சு. 'சட்டம் ஒரு இருட்டறை' தான் அவருக்கு ஒரு நல்ல பிரேக் கொடுத்துச்சு.(இதுல ஒரு வேடிக்கை என்னா தெரியமா, யாரை நகல் எடுத்து நடிக்க வந்த விஜயகாந்துக்கு பிரேக் வாங்கி கொடுத்த இந்த படம் தான், அசல் ரஜினிகாந்த், ஹிந்தியில முதன்முதலா நடிச்சு 'அந்தாகானுன்'னு வெளிவந்துச்சு, பாருங்க, ம்... என்ன Irony?) அதுக்கப்புறமும் சில நடிகைங்கெல்லாம் அவருகூட் நடிக்க மறுத்த தான் கேள்வி.
அதுல்ல ஸ்ரீபிரியா, ராதிகான்னு நினக்கிறேன், அப்புறம் அவரு பெரியளாயி, ராதிகாவே, அவரை பிராக்கெட் போட்டு, இவரு ஓடி ஒளிஞ்சு, இன்னைக்கு இன்னும் பெரியாளாயி, கட்சி ஆரம்பிச்சு, ஓட்டு கேட்டுக்கிட்டுருக்காரு, மத்தது எல்லாம் சரித்தரம்.

இப்படி நான் மெட்ராஸ்சே கதின்னு அலைஞ்சு திரிஞ்ச நாட்கள் அப்ப ரொம்ப, அந்த நேரத்தில நடிக்க சான்ஸ்னு என்னமோ போகல, ஆனா, காலேஜ்க்கு அவங்கள எல்லாம் கூட்டிகிட்டு வரணும்னு அலைஞ்சேன். கடைசியில ஒரு வாரம் காத்திருந்து, தினம் சாருஹாசன் தான் எங்களுக்கு பதில் சொல்லிகிட்டு இருப்பாரு. கடைசியில சுஹாசினி, தெலுங்கு பட சூட்டிங் முடிச்சிட்டு வந்து, அவங்க வீட்ல இருந்தப்ப புடிச்சி பேசி, ஒரு வழியா அவங்களை ஒத்துக்கவசோம். வண்டிசத்தம், தங்கற வசதி எல்லாம் காலேஜ்லருந்து அரேஞ்ச் பண்ணி, எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டோம். அதாவது இரண்டு மாசத்துக்கு அப்புறம் நடக்க வேண்டிய பொரோகிராமுக்கு, ஏற்பாடு பண்ணியாச்சு. அப்ப தான் ஒரு சோகம் நடந்துச்சு போங்க, அந்த புரோகிராமே நடத்தமுடியாம, பயங்கர ரகளையாயி, போலீஸ் கச்சேரின்னு அலையவேண்டியதா போச்சு, அதென்ன கூத்துன்னு தானே கேட்கிறீங்க, அடுத்த பதிவில விரிவா சொல்றேன், வர்ட்டா..!

Sunday, March 05, 2006

ஆஸ்கர் இரவு - நாம் ஏன் இல்லை!

இன்று டிவியில் உட்கார்ந்து முழுசுமா ஆஸ்கர் பரிசு விழா நிகழ்ச்சியை பார்த்தேன். இது பற்றி அதிகம் தெரியாத அந்த நாட்களிலே இதை பற்றி பத்திரிக்கைகள் பேச கேள்விபட்டிருக்கிறேன். இந்த பரிசனை பெற பழைய தமிழ் படங்கள் சிலவும் போட்டியிட்டன எனவும், அதிலும் கமல் நடித்த 'நாயகன்', மற்றும் 'ஹேராம்' படங்கள் எல்லாம் அப்போது போட்டி இட்டன என்று தெரியும். ஆனால் இவைகள் எவையுமே பரிசு சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்று பிறகு தெரிந்தது. கமலஹாசன் அடிக்கடி பேட்டிகளில் எப்படியும் நாம் ஆஸ்கார் பரிசு வாங்கிவிட வேண்டும் என்று கூறி கொண்டிருப்பார். எத்தனையோ அவருடய படங்கள் நமக்கு பிடித்து, எப்படியும் பரிசு வாங்கிவிடும் என்று நம்பிக்கையிருந்தாலும் கடைசியில் எதுவும் தேறுவதில்லை, ஆக கமல் அதைப்பற்றி விரக்தியாக பிறகு பேட்டி கொடுத்ததையும் படித்திருக்கிறேன். ஆக இது என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை அப்பொழுதிருந்தே, மேற்கொண்டு நான் இப்பக்கம் வந்த பின் அதில அதிகம் ஈடுபாடு கொண்டு விவரம் தெரிஞ்சுக்க முற்பட்டேன்.

ஆஸ்கார் விருது என்பது அமெரிக்கர்களால், அவர்களின் அமெரிக்கன் மோஷன் பிக்ஸர்ஸ் அஸோஸியேசன் வருஷா வருஷம் அமெரிக்காவில், ஹாலிவுட்டில், தயாரிக்கபட்ட ஆங்கில படங்களுக்கு சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகை, மற்றும் அனைத்து சினிமா தொழில்நுட்பத்துறைகளிலும் சிறந்தவைக்கு பரிசு கொடுப்பது. அதை 'அக்கெடமி அவார்ட்' என்று கூறுவார்கள். நம்ம ஊர்ல தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கும், இந்திய அரசு அனைத்து மொழித்திரைப்படங்களுக்கும், பரிசுகள் கொடுப்பது போலவும் மற்றும் 'ஃபில்பேர் அவார்ட்' ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வரும் படங்களுக்கு பரிசளிப்பது போல. இந்த ஆஸ்கார் விருது வருடா வருடம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு, இவ்வருடம் 78 வது முறையாக கொண்டாடப்படுகிறது. 1955ம் ஆண்டு வரை அது அமெரிக்காவில் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தான் தரப்பட்டது, பிறகு 1956ம் ஆண்டிலிருந்து, வெளிநாட்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து ஒருசிறந்த படத்துக்கும் , இந்த ஆஸ்கார் விருதனை வழங்கி வருகின்றனர்.

அப்படி சிறந்த வெளிநாட்டு படங்களின் பிரிவுக்குத்தான் நம் நாட்டு படங்களும் அனுப்ப படுகின்றன. அப்படி அனுப்ப பட்ட படங்களே, இந்த 'நாயகன்', 'தேவர்மகன்', 'குருதிப்புனல்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்' 'ஹேராம்' போன்ற படங்கள். முழுப்பட்டியலை காண, நீங்கள் விக்கிப்பீடியாவில் பார்க்கலாம். அப்படி அனுப்பினாலும், அப்படங்கள், அனைத்து தேசத்துடன் போட்டியிட வேண்டும். பிறகு அது தகுதி உள்ள படமாக இறுதி சுற்றுக்கு வரவேண்டும். அப்படி இறுதி சுற்றுக்கு வந்த படங்கள், மூன்று தான் நம் நாட்டிலிருந்து. அவை, 'மதர் இந்தியா' (1957), 'சலாம் பாம்பே' (1988), 'லகான்'(2001). ஆக நம் தமிழ் படங்கள் அதிகமாக இந்த ஆஸ்கார் விருதுக்கு போயிருந்தாலும், இறுதி சுற்றுக்கு வர தகுதி பெறவில்லை.

இந்த வெளி நாட்டு பிரிவுகளில், அதிகமாக பிரஞ்சுப்படங்கள் , 34 முறை இறுதி சுற்றுக்கு வந்து, 9 முறை பரிசு வென்றிருக்கிறது. அதே போல இத்தாலியை சேர்ந்த படங்கள், 27 முறை இறுதி சுற்றுக்கு வந்து, 10 முறை பரிசு வென்றிருக்கிறது. பிறகு ஸ்பெயின் 19 முறை இறுதி சுற்றுக்கு வந்து, 4 முறை பரிசு வென்றிருக்கிறது, அதே போல, சுவீடன் நாட்டு படங்கள் 14 முறை இறுதி சுற்றுக்கு வந்து 3 முறை பரிசு வென்றிருக்கிறது. ஆக பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டுப்படங்களே அதிகம் வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்கா நாடு, ஐரோப்பிய சமுதாயத்திலிருந்து வந்து குடியேறியவர்களின் நாடென்பதால், அந்த கண்டத்திலைருந்து வந்த நாடுகளே பரிசை பெற்று சென்றனவோ என்னமோ!

ஆனால், இந்த இறுதி சுற்றுக்கு வந்த இந்திய திரைப்படங்களிலே அதிகம் பேசப்பட்டது, அமீர்கான் நடித்து வெளிவந்த லகானைப்பற்றி தான். இங்கு, இந்த ஆஸ்கார் பரிசு வாங்க வேண்டுமென்றால், அதற்கென நிறைய மெனக்கிட வேண்டும். இங்கு ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்க ஜூரிகள் என்ற நடுவர்கள் குழு கொண்ட அமைப்பிடம் நிறைய மார்க்கெட்டிங் செய்ய வேண்டும், பிறகு அவர்களிடம் படத்தினை நன்று புரமோஷன் செய்து, ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி அமீர்கான் நன்கு செய்தும் கடைசியில் பரிசை தட்டி செல்ல முடியவில்லை. என்னதான், நாம் சினிமா தொழில்நுட்ப வகையில் ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் படங்கள் பிடித்து வெளியிட்டாலும், இன்னும் அவர்களின் அளவுக்கு நெருங்கவில்லை போலும். அது தான் எந்த பரிசும் கிடைப்பதில்லை போல.


மேற்கொண்டு சிறந்த இந்திய திரைப்படங்களை தேர்வு செய்வதிலும் நம்மிடையே ஏகப்பட்ட குழப்பம் இருக்குறது. படங்களை தேர்வு செய்வது, 'Film Federation of India' என்ற அமைப்பு. சில வருடங்களில் எந்த படங்களையுமே அனுப்பவதில்லை. இந்த ஆண்டு 'பெகலி' என்ற ஹிந்திபடத்தை தேர்வு செய்து அனுப்பினார்கள், அது இறுதி சுற்றுக்கு வர தகுதி பெறவில்லை. இந்த படம், தன் கணவன் உருவில் வந்த பூதத்துடன் உறவாடும் கதாநாயகி, அதன் மேல் கொண்ட காதல் பற்றி. படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி நடிக்க, ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் இயக்கியது. நம்மூரு 'காதல்' படத்தையும், 'அந்நியன்' படத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தினர். ஏனோ அப்படங்களில் ஒன்றையும் அனுப்ப வில்லை.

கமலஹாசனும், மருதநாயகத்தை எடுத்து, அதை எப்படியும் ஆஸ்கர் பரிசு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார். ஆனால் அப்படம் என்னவாச்சு என்றே தெரியவில்லை. கிணத்தில் போட்ட கல்லை போல இன்னும் அப்படியே இருக்கிறது. இப்பொழுது சில கூட்டங்களில், இல்லை பேட்டிகளிலும், கமல், சீ,சீ இந்த பழம் புளிக்கும் என ஆஸ்கர் பத்தி பேசுகிறார். கலைஞனுக்கு என்றும் அசர்வு என்பது ஏற்படக்கூடாது. கமல் மீண்டும் முயற்சி செய்து, எப்படியும் ஆஸ்கர் பரிசு வாங்க முற்பட வேண்டும். இப்போது அமெரிக்காவிலும், இந்திய படங்களின் மீது ஒரு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது, அனைவரும் 'பாலிவுட் மசாலா' என்று விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆக நல்ல படங்கள் எடுத்து இந்த ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினால் மட்டும் போதாது, அதற்கென்று சில சூட்சமங்களும், மார்கெட்டிங் டெக்னிக்னிகளும் முறையாக பின்பற்றினால் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.

இந்த 78ம் ஆஸ்கர் விருது, வெளிநாட்டு படங்களின் பிரிவுக்கு, தென் ஆப்பிரிக்க படம் 'TSOTSI'க்கு விருது கிடைத்துள்ளது. இந்த படம், நகரசுழலில், ஏமாற்றபட்ட, வன்முறையை கையாளும் ஒரு கோபமான வாலிபன் பற்றியது, கடைசியில் அன்பு தான் ஜெயிக்கிறது. இது போன்ற கதைகள் நம்மிடையே அதிகம், ஆனால் நாம் ஏன் பரிசனை வெல்வ முடிவதில்லை. நம் திரையினருக்குத்தான் வெளிச்சம்.

கடைசியாக, எனக்கு பிடித்த ஹீரோயின் 'Reese Witherspoon' (ரீஸி விதர்ஸ்பூன்)க்கு சிறந்த நடிகைக்கான பரிசு அவர் நடித்த 'Walk the Line' என்ற படத்துக்கு கிடைத்துள்ளது. இவருடய சிறந்த 'Chick Flick' படங்களில் மறக்க முடியாது 'Legally Blonde'. நாய்குட்டியும் கையுமாய், கோர்ட் வந்து புத்திசாலியாய் வாதாடும் அழகே தனி!. கேஸட் கிடைத்தால் பார்க்கவும்!

Saturday, March 04, 2006

மீண்டும் ஷோலே - ஹிந்தி திரைப்பட பார்வை!

எல்லோரும் ஒரு 30 வருஷத்துக்கு முன்னே வந்த இந்த 'ஷோலே' திரைப்படம் பார்த்திருப்பீங்க. அந்த காலகட்டத்திலே நான் ஹை ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்த நேரம். அப்போ அதிகமா ஹிந்தி படங்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமிச்சு இருந்த நேரம். தமிழை தவிர எந்த மொழி படத்துக்கு போனாலும், ஆடும் ஓடும் பிம்பங்களை வச்சுத்தான் கதை போற போக்கை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அப்படியும் இது மாதிரி ஹிந்திப்படங்கள் தான் போறது. ஏன்னா, அந்த காலகட்டத்தில, தமிழ்படங்கள் எதுவும் சொரத்தயில்லாம இருந்த நேரம். ஹிந்திபடங்கள்ல, ஆராதனா, யாதோங்கிபாராத், ரொட்டி கப்டா அவுர் மக்கான், ரோட்டி, கபிகபி, அப்படின்னு எல்லா ஹிந்திபடங்களும் தமிழ்நாட்டில சக்கை போட்டுக்கிட்டு இருந்த நேரம். அதே மாதிரி ஹிந்தி பாடல்களும், மக்களுக்கு புரிஞ்சுதோ இல்லையோ, ஆனா பட்டையை கிளப்பிக்கிட்டு இருந்த நேரம். அப்ப நம்ம மெல்லிசை மன்னர் எல்லாம் போட்ட பாட்டுகளை விட இந்த ஹிந்தி பட பாடல்கள் மக்களிடையே பிரசித்த பெற்று இருந்த நேரம்.
இதை தூக்கி எறிஞ்சு, கிராம மெட்டுகள்ல தன் ராஜாபாட்டை படைக்க இளையராஜா வராத நேரம். பொறிபறக்க,ஸ்டைல் காட்ட ரஜினியோ, இல்ல சப்பாணி மாதிரி வித்தியாசமா நடிச்சு மனசை கவர கமலஹாசனும் வராத நேரம். எம்ஜிஆரும் கட்சி ஆரம்பிச்சு, அதிகமா நல்ல படங்கள் வராத நேரம், அப்படியே வந்த 'நீரும் நெருப்பும்', 'ராமன் தேடிய சீதை' மாதிரி படங்கள் அவ்வளவா வெற்றி பெறல. அந்த மாதிரி நேரத்தில வந்த ஹிந்திபடங்கள்ல ராஜாங்கம் படைச்சது தான் இந்த 'ஷோலே'!

வழக்கமா நமக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத குதிரை, கொள்ளக்காரன், துப்பாக்கி சண்டையின்னு வருகிற ஹிந்திபடங்கள்ல, இந்த ஷோலே ஒரு வித்தியாசமான ஒன்னு. ஏன்னா அந்த எழுபதுகள்லயும் எம்ஜிஆர், கத்தி சண்டை போட்டுகிட்டு இருந்து வந்த படம் 'நீரும் நெருப்பும்'. அதுனால நமக்கு கொஞ்சம் புதுசா இதெல்லாம் தெரியும். அந்த குதிரை விரட்டு, துப்பாக்கிச் சண்டைகள் பார்க்க ரொம்பவே ஆர்வமா இந்த மாதிரி படத்துக்கு போவேன். ஆனா வெறும் துப்பாக்கி, குதிரைன்னு இல்லாம, விறு விறுப்பா, கதை போகும். இந்த சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரங்க கதை நிறைய தினத்தந்தில்ல பெரிசா கட்டம் கட்டி வரும். அதை படிக்கிறதுல ரொம்ப ஆர்வம். அதனாலேயே இந்த ஹிந்திபடத்துக்கெல்லாம் போறதுண்டு. இந்த படம் ஹிந்திபட சரித்திரத்தில, ஏன் இந்திய திரைப்பட சரித்திரத்தில ஒரு தனி சரித்திரம் படைச்சது. இது தமிழ்நாட்டிலேயே ஒரு வருஷத்துக்கு மேலே ஓடுன படம்னா நம்புவீங்களா, அதே மாதிரி பாம்பேயில 'மராத்தா மந்திர்'ன்னு ஒரு தியோட்டர்ல தொடர்ந்து அஞ்சு வருஷம் எல்லாம் ஓடி கின்னஸ் புத்தகத்தில இடம் பெற்ற ஒன்னு. அப்பேர்பட்ட படம், கதை, காட்சி அமைப்பு, இசை, இப்படி எல்லாமே அப்ப ஒரு புதுசு. அதைத்தான் திருப்பி எடுக்கப் போறாங்களாம்.

படத்தோட கதை சம்பல் பள்ளதாக்கில இருக்கிற கொள்ளக்கார கும்பல், அதோட மோதும், ஒரு போலீஸ் அதிகாரி, அவரு அந்த கொள்ளக்காரங்க இருக்கிற கிராமத்தின் தலைவர், ஹிந்தில அவங்களை 'தாக்கூர்' அப்படின்னு கூப்புடுவாங்க!. எனக்கும் இந்த கொள்ளக்காரங்க (Decoit) அனுபவம் இருக்கு! நான் 1980 களின் முதல் பகுதியில, பாம்பேயில்ல, அணுசக்தி துறையில ட்ரியினிங் எடுத்துட்டு கொஞ்ச காலம் வட இந்தியாவில, உத்திரபிரதேச மாநிலத்தில உள்ள நரோரா அணுசக்தி மின்நிலையத்தில வேலை செஞ்சப்ப, அந்த அனுபவம் உண்டு. அந்த மின்நிலையம் போற வழி, அந்த மாதிரி கொள்ளைகாரங்களால ஆபத்து மிகுந்த பகுதி. அதுவும் இருட்டின பின்ன அங்கிருந்து டில்லி போகனும்னா, உயிர் உங்க கைக்கு உத்ரவாதம் கிடையாது. என்ன வேணும்னாலும் நடக்கலாம், அப்படி போன எங்க ஸ்டேஷன் ஆபீசர் கதை கந்தலாயி வந்ததை பத்தி வேணும்னா அப்புறம் ஒரு பதிவா போடுறேன்! (ஏன்னா, நானும் அப்ப அவரு கூட போனவன்!)

அப்படி, அந்த கொள்ளக்காரத் தலைவன், அந்த படத்தில பேரு 'கப்பர் சிங்'. ரொம்ப சூப்பர்ப் கேரக்டர். அதை நடிச்சது 'அம்ஜத் கான்'னு ஒரு ஆக்டர், அந்த படத்தில தான் அவரு அறிமுகம். அந்த கேரெக்டருக்கு இன்னொரு வில்லன் 'டேனி' அப்படின்னு ஒருத்தரை தான் முதல்ல அணுகினாங்க, அவருக்கு ஏற்கனவே படங்கள் புக்கானதினால, இந்த புதுமுகத்தை போட்டாங்க. அவரும் அந்த கேரக்டருக்கு ஒரு புது மோல்டு கொடுத்திருந்தார். வட இந்தியாவில அவ்வளவு பிரசித்தம் இந்த கேரெக்டர். இங்க உள்ள அம்மாக்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை தூங்கவைக்க, 'கப்பர் சிங்' பேரைத்தான் சொலவாங்களாம், இப்படி, 'கண்ணா தூங்கிடு சீக்கிரம், இல்ல 'கப்பர் சிங்' வந்து புடிச்சுட்டு போயுடுவான்னு!' அவ்வளவு பயங்கரத்தை அவனுடய கேரக்டர்ல காட்டியிருப்பாங்க, அவரும் நல்லா நடிச்சு இருப்பாரு. இப்ப அந்த நடிகர் உயிரோட இல்லங்கிறது வேற விஷயம்.
அந்த தாக்கூரு கையை வெட்டிடுவான் அந்த கப்பர் சிங், முள்ளை, முள்ளாலத்தான் எடுக்கனும்னு, சில பெட்டி கிரைம்ஸ் பண்ணிகிட்டு இருக்கிற குற்றவாளிங்க இரண்டு பேரை அந்த கிராமத்துக்கு தாக்கூரு வரவழச்சி, அந்த கொள்ளக்காரனை எதிர்ப்பார். அந்த ரெண்டு பேரா நடிச்சது அமிதா பச்சனும், தர்மேந்திராவும். அந்த கிராமத்துக்கு வந்தோன, தர்மேந்திரா, அந்த கிராமத்தில குதிரை வண்டி ஓட்டற ஹேமாமாலினிய காதிலிப்பார், அமிதாபச்சன், அந்த தாக்கூரோட விதவை மருமகளை காதிலிப்பார். அந்த விதவை மருமகளா நடிச்சது அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அப்ப அவர் 'ஜெயா பாதுரி'. படத்தோட ஹைலைட், அந்த முதல்ல வர ஓடும் ரெயில்ல போடற சண்டை காட்சி. அது மாதிரி இன்னும் ஒரு படமும் சண்டைக் காட்சிகளை படம் புடிச்சதில்லை. நம்ம தமிழ் படத்தில அதை நினைச்சே பார்க்க முடியாது. ஆங்.. வேணும்னா, நம்ம மணி, ட்ரெயின் மேலே டான்ஸ் ஆடி, ஒரு பாட்டு எடுத்தாரே, என்ன படம் அது 'தில்சே' ன்னு இந்திபடம், தமிழ்ல பேரு தெரியல, அதை வேணா சொல்லலாம். அது மட்டுமில்ல, மிக நளினமான காதல் காட்சிகளும் கொண்ட படம் இது. அமிதாப்பும், விதவை ஜெயாவும் அதிகம் பேசிக்க மாட்டாங்க. கண்ணுக்குள்ளயே கவிதை பாடுவாங்க! ஏன்னா, அவங்க விதவை, இவரு இப்படி சின்ன சின்ன குற்றங்கள் செஞ்சுகிட்டு நிலையான வாழ்க்கையில்லாம் சுத்துறவரு. வாழ்க்கையில செட்டில ஆகணும்னு ஆசை படுவார், அதனால அந்த நம்பிக்கையான காதல் நிறைவேற வசனங்கள் எதுவுமே இல்லாம கவிதை மாதிரி, அப்படி ஒரு காட்சி இருக்கும், சாய்ந்திரம் இருட்டினோன, அமிதாப் வெளியில உட்கார்ந்து மெளத் ஆர்கான் வாசிச்சுகிட்டு இருப்பாரு, ஜெயா ஒவ்வொரு சிமிழ் விளக்கா அணைச்சிகிட்டே வருவாங்க, இருட்டினதை காமிக்க, ஆனா தன் அறையில் இருக்கிற விளக்கை அணைக்காம அப்படியே படுத்து தூங்கிடுவாங்க, அந்த எரியும் விளக்கின் தீபம் தான் அவங்க நம்பிக்கையின் வெளிச்சம் மாதிரி அழகா படம் பிடிச்சிருப்பாங்க!

இந்த படம் மாதிரி திரும்ப இனி எடுக்க முடியாதுன்னு எல்லாரும் சொல்லிகிட்டு இருந்தப்ப தான், தெலுங்கு, இந்தி படம் எடுக்கிற டைரக்டர், 'ராம் கோபால் வர்மா' இதை திருப்பி எடுக்க போறாராம். இந்த 'ராம் கோபால் வர்மா' யாருன்னு கேட்கிறீங்களா, இவரு ஒரு பெரிய டைரக்டர், பாம்பே அண்டர் வோர்ல்ட் பத்தி நிறைய படம் எடுத்திருக்கிறார். நம்ம ஊரு மணி மாதிரி நிஜமா நடக்கிற நிகழ்ச்சிகளின் பிண்ணனியில் எடுத்த எல்லா படங்களும் நார்த் இந்தியாவில ஓடு ஓடுன்னு ஓடிச்சு. 'சத்யா', 'கம்பெனி', 'டி', 'சர்க்கார்' அப்படின்னு எல்லா படமும் ஸக்சஸ். எல்லாமே, தாவூத் இப்ராகிம் மாதிரி அண்டர்வோல்ட் டான்ங்களை பத்தி தான், நல்ல ஆராஞ்சு, நிறைய கதை வச்சுக்கிட்டு சுட்டு தள்ளிக்கிட்டு இருக்கிறாரு. (இப்ப செல்வராகவன் எடுத்துக்கிட்டு இருக்கிற 'புதுப் பேட்டை' ங்கிற படம் இந்த மாதிரி தான், ஒரு பேக்ட்ராப்பை வச்சின்னு கேள்வி பட்டேன்) அவரு எடுத்த ஒரு தெலுங்கு படம் தமிழ்லக் கூட 'உதயம்'னு வந்ததுன்னு நினைக்கிறேன். பிறகு ரஹமானை வச்சி பாட்டு கட்டி, பட்டைய கிளப்பன, 'ரங்கீலா' ன்னு ஒரு ஹிந்திபடமும் நீங்க கேள்வி பட்டிருப்பீங்க! அதுவும் இவரு எடுத்தது தான். ஹிந்தி திரை உலக பாரதிராஜா இவரு. நிறைய படம் எடுத்து, புது புது டெக்னிக்குகள கொண்டு வந்தவர். அப்புறம் சினமா தொழில ஒரு கம்பனி மாதிரி நடத்துறவரு. கந்துவட்டி கதை எல்லாம் கிடையாது. அந்த கம்பெனிக்கு பேர் 'பேக்டரி'ன்னு. இன்னய தேதிக்கு எல்லாரும் இவரு படத்தில நடிக்க ஆசை படறாங்க. அவரு தான் இந்த ஷோலே படத்தை திருப்பி எடுக்க போறாரு.


இந்த 'ஷோலே' படத்துக்கு பின்னாடி நிறைய நிஜக்கதைகள் உண்டு. அப்ப அந்த கப்பர் சிங் பாத்திரத்தில நடிக்க அமிதாப் பச்சன் ரொம்ப ஆசைப்பட்டாராம் அப்ப, அதே மாதிரி தாக்கூரா நடிச்ச சஞ்சீவ் குமாரும் ஆசைப்பட்டாரம். இப்ப அவரு மண்டையை போட்டுட்டாறு. பிறகு தர்மேந்திரா, ஹேமாமாலினி மாமி காதலிக்க ஆரம்பிச்சது இந்த படத்தில தானாம். அதுக்கு முன்ன மாமி சஞ்சீவ் குமார், ஜித்தேந்திரான்னு டாவு வுட்டுகிட்டு இருந்தாங்க. அமிதாப்பும் ஜெயாவும் கல்யாணம் பண்ணி அபிஷேக் பச்சன் வயித்தில இருந்தாரம் இந்த படம் நடிக்கிறப்ப.

அதனால அமிதாப் நடிக்க ஆசைப்பட்ட அந்த கேரெக்டர்ல திருப்பி அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறாரு. பிறகு தர்மேந்திரா நடிச்ச வீருங்கிற கேரக்டர்ல அபிஷேக் பச்சன் நடிக்க போறாராம். பிறகு நம்ம மலையாள நடிகர் மோகன்லால், தாக்கூரா நடிக்கிறாராம். நம்ம மாமி 'பசந்தி' நடிச்ச பாகத்தில உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்களாம், ரஜினிக்கு இதை கேட்க பொறாமையா இருக்கும். ஆனா கதை எப்படின்னு தெரியல, திருப்பி சம்பல் பள்ளத்தாக்கு பகுதி பிண்ணனியில வரப்போவுதா, இல்ல மும்பையான்னு தெரியல்ல, பொறுத்திருந்து பார்ப்போம்! படம் வரட்டும்!

Friday, March 03, 2006

உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே!

வந்தாலும் வந்தாரு புஷ் இந்தியாவுக்கு, இங்கிருக்கிற பத்திரிக்கை, புத்தகமெல்லாம் இந்திய புகழ் பாடாத குறையா, அதை பத்தி தான் எழுதி தள்ளிகிட்டு இருக்காங்க! ஆசியாவின் அடுத்த பவர் ஹவுஸ் அப்புடின்னு ஒரே புகழாரம். ஏன் திடீர்னு இந்த பாசம், கவனிப்புன்னு யாரும் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அப்படி என்னதான் ஆச்சு, சுவிட்சர்லாந்தில உள்ள டெவோஸ் ('Davos') ல நடந்த வேர்ல்ட் எக்னாமிக் ஃபாரத்தில பேசப்படுற ஒரு ஸ்டார் யாருன்னா, இந்திய துணை கண்டம் தான். கவனிச்சீங்களா, இந்த ஒரு இரண்டு மாசமா அத்தனை உலகத் தலைவர்களும் இந்தியாவில டேரா அடிச்சிக்கிட்டு இருக்காங்க, புஷ்ஷ விடுங்க,

போன ரெண்டு வாரம் முன்ன பிரஞ்சு அதிபர் வந்து ஏதோ ஏதோ கை எழுத்து போட்டுட்டு போனாரு, அதுக்கு முன்ன சமீபத்தில முடி சூட்டின சவுதி அரசர் வந்திட்டு போனாரு. அது மாதிரி இப்ப புஷ்ஷு போனதுக்கப்பறம், ஆஸ்திரேலிய பிரதமர் வரப்போறாரு! அப்படி என்னதான் ஆச்சு. திடீர்னு எல்லாருக்கும் நம்ம மேல கவனம் திரும்ப, நம்மல பத்தி நல்லா தெரியுமா இவங்களுக்கு நம்ம எப்படி பட்ட தேசமுன்னு, இல்ல நமக்குத்தான் தெரியுமா, இவங்ககிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறோமுன்னு! ஒரு பார்வை பார்க்கலாமா?

முதல்ல இந்த 15 வருஷ கால கட்டத்தில நம்முடய அசுர வளர்ச்சி, அத எப்படி சொல்றதுன்னா, Gross Domestic Product(GDP), ஜிடிபி,ஜிடிபின்னு ஒன்னு சொல்வாங்களே அதை கேள்விபட்டிருக்கீங்களா! அதாவது ஒரு நாட்டின் முதலீடுகள், ஏற்றுமதிகள், தனிமனிதர்களின் செலவீனம், புறவு அரசாங்கத்தின் செலவீனம் இது எல்லாத்தையும் கூட்டிகழிச்சு ஒரு சதவீதத்தை சொல்றது. இதை பொருளாதார நிபுணர்கள் எழுதறதை பார்த்திருப்பீங்க, இது இப்ப நம்ம கிட்டதட்ட 8 சதவீதம் அடைஞ்சிட்டோம். தொடர்ந்து மென்மேலும் வளர நிரைய வாய்ப்புகள் இருக்கு. இத வெறுமன சொன்ன உங்களுக்கு புரியாது, மத்த நாடுகளோட ஒப்பிட்டு பார்த்தா நாம எப்படின்னு புரியும். உதாரணத்துக்கு, சைனா 9.9%, ஹாங்காங் 7.6%, மலேசியா 5.2% , அமெரிக்கா 3.1%, ஆஸ்திரேலியா 2.6%, ஜப்பான் 4.2%, பிரான்ஸ் 1.2%, கனடா 2.8%, இப்படின்னு பட்டியல் போட்டு பொருளாதார வளர்ச்சியை குறிப்பாங்க. இப்படி வருஷா வருஷம் இது ஏத்ததில இருந்தா, அப்படியே உயர்ந்துகிட்டு போனாலும் , நிலையா அதிகபடியான சதவீதத்தில இருந்தாலும், ஒரு நாடு வளர்ச்சி அடையுதுன்னு சொல்வாங்க, அப்படி அதிகமா நம்ம சைனாவுக்கு நிகர வளரருதுனாலதான் நம்ம மேல ஒரு கண்ணு!
எல்லாம் நம்ம கிட்ட கை கோக்க ஆசை படறாங்க. இதை பத்தி ஆராஞ்சி சில பேரு அடுத்த 50 வருஷத்தில நம்ம எப்படி இருப்போம்னு ஜோசியம் சொல்றாங்க, அதாவது, இன்னும் பத்து வருஷத்தில நம்ம பொருளாதாரம் இத்தாலிய நாட்ட விட பெரிசாயுடுமுன்னு, அப்புறம் இன்னும் 15 வருஷத்தில பிரிட்டன் நாட்டை தூக்கி சாப்பிட்டுவிடுமோன்னு. 2040ல நம்ம தான் பொருளாதாரத்தில வளர்ந்த மிகப்பெரிய நாடு. இன்னய தேதிக்கு அமெரிக்கா தான் அந்த அந்தஸ்த்தில இருக்கு தெரியுமா? பிறகு 2050ல ஜப்பானை விட அஞ்சு மடங்காகிவிடுமுன்னும், நம்மலோட சம்பாத்தியம், அதாவது 'Per Capita Income'னு சொல்றது 35 மடங்கு அதிகரிச்சுடும்னு ஜோஸ்யம் சொல்லியாச்சு. இதெல்லாம் உண்மையாகுமான்னெல்லாம் தெரியாது. ஆனா, இன்றைய காலகட்ட வளர்ச்சி, அவங்க ஏற்கனவே யோசிச்சி வச்சிருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாயிருக்கு. அதனால இந்த ஹேஸ்யம் எல்லாம் சாத்தியமேன்னு சொல்றாங்க!

இதுக்கு சில நிகழ்கால சாத்தியங்களை கொஞ்சம் பாருங்க, இந்தியவில உள்ள சில கம்பெனிகளின் அசுர வளர்ச்சி அவர்களின் நிகர லாபமே இதுக்கு அத்தாட்சி, வரிசையா ஒவ்வொரு வருஷமும், 15,20 25 சதவீதம் லாபத்தை உயர்த்தி இருக்கிறதை வச்சு கண்டுக்கலாம், இல்ல பங்கு சந்தையின் அபார வளர்ச்சி, அதாவது அத்தனை நாடுகளும் போட்டி போட்டிக்கிட்டு முதலீடு செஞ்சு, அதிகப்படி லாபம் வந்து அதனோட பங்குகளின் வளர்ச்சியை 'பாம்பே ஸ்டாக் எக்சேஞ் sensex' 10000த்துக்கு மேல போயிருப்பதை எல்லாம் பார்த்திருப்பீங்க. இன்னொரு உதாரணம், நம்ம டாடா குருப்பை எடுத்துக்கங்க, அவெங்க செய்யாத தொழில் இல்ல, காருலருந்து, சாப்ட்வேர் வரைக்கும், அவங்க வளர்ச்சி, 1700 கோடியிலிருந்து 2400 கோடி வரை உயர்ந்திருப்பது. பிறகு ஆட்டோ பார்ட்ஸ் செய்யக்கூடிய சின்ன சின்ன கம்பெனிகளின் சம்பாத்தியம் 400 கோடியிலிருந்து, 1000 கோடி வரை வளர்ச்சி அடைஞ்சிருக்கு. அடுத்த சில ஆண்டுகள்ல பெரிய அமெரிக்கவின் கார் கம்பெனி ஜென்ரல் மோட்டார்ஸ், ஒரு 100 கோடிக்கு ஆட்டோ உபரி பாகங்களை இந்தியாவிலருந்து இறக்குமதி செய்ய போறாங்க!

ஆனா அதே சமயத்தில நம்மலோட அடுத்த பக்கத்தை பார்த்தீங்கன்னா ஒரே சோகம். அது தான் நமது ஏழ்மையும், சுகாதார சீர்கேடும். இன்னைக்கு உலகத்தில இருக்கிற ஏழ்மையான நாடான நைஜீரியா மாதிரி மூணு நாடு நம்ம நாட்டுக்குள்ள இருக்குன்னா நம்பமுடியாமா உங்களுக்கு, ஆனா, அதான் உண்மை. சிதிலமடஞ்ச நம்ம ஏர்போர்ட்டுகள், நெரிசல்மிகுந்த சாலைகள், நகரின் மையப்பகுதி சேரிகள்னு தான் வெளிச்சம் போட்டு காட்டமுடியம். முதல்ல சொன்ன மாதிரி, 300 சிலிக்கான்வேளிகள் இருந்தாலும் 3 நைஜீரியாக்களும் கொண்ட நாடு தான் நம்நாடு! 30 கோடிக்கு மேல தினப்படி வருமானம் ஒரு டாலருக்கு கீழேன்னா ஆச்சிரியமில்ல, இங்க, அமெரிக்காவில, கிட்டதிட்ட ஒரு டாலருக்கு ஈடான காசு நாணயங்களை தூக்க சிரமப்பட்டு, அது வேணாமின்னு அங்க அங்க வச்சிருக்கிற தர்ம உண்டியல்ல போட்டுட்டு போற நம் ஊர்லருந்து இடம்பெயர்ந்த நம்மூரு மக்கள், அவங்க போடற அந்த தர்மகாசுகள் தான், இந்தியாவில எத்தனையோ பேரோட தினப்படி வருமானம் இன்னமும்னு எத்தனை பேருக்கு தெரியும்? உலக ஏழைகள்ல 40 சதவீதம் நம்ம நாட்ல இருக்கிறது எத்தனை பேருக்கு தெரியும். உலகத்தில நம்ம தான் இரண்டாவது இடம், HIV கிரிமியோட அலையிற மக்கள் தொகையிலன்னு எத்தனை பேருக்கு தெரியும்? இப்படி நாம சோகமயமான பக்கத்தை கொண்டிருந்தாலும், நம் எதிர்நோக்கி இருக்கும் வருங்காலம் ரொம்ப புதுசு! எப்படின்னு கேளுங்க!

நம்ம வளர்ச்சியை சைனாவோட ஒப்பிடறப்ப, நம்முடோது திட்டமிட்டு செயல்படுபவை அல்ல, ஒரே குழப்பம், கட்டுபாடு இன்றி ஏனோ தானோன்னு வளரும் ஒன்னு. சைனாவை போல திட்டமிட்டோ, இல்ல சீரமைப்போடவோ ஒன்னும் செய்றதில்லை. 'புதுசா ஏர்போர்ட்டு வேணும்னாலும், இல்ல எட்டு வழிதடம் கொண்ட ரோடு வேணுமின்னாலும், இல்ல பூத்து குழுங்கும் தொழிற்பூங்கா வேணுமின்னாலும், இதே ஒரு சில மாசங்கள்ல தயார்' அப்படின்னு எதுவும் வந்திடறதில்லை. இதெல்லாம் தான் வெளிநாட்டு மூலதனங்கள் எதிர்பார்க்கும் ஒன்னு. இம் என்றவுடன் உண்டாவதில்லை இந்த வசதிகள் . நம் அரசாங்கமும், சைனாவை போன்ற அடக்குமுறை சர்வாதிகார அரசாங்கம் ஒன்னும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் ஒரு பீகிங் போலவோ, இல்லை ஷாங்காய் போலவோ உருவாக்கிட முடியறதில்லை. ஏன்னா நம்முடையது, மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஜனநாயக அரசு, அதுக்கு முட்டுகட்டை போட நிறைய அமைப்புகள் உண்டு. முக்கியமா கம்னியூஸ்ட் கட்சி, யூனியன் இதுவே போதும். ஜனநாயகத்தால் பயனடைவோர் குறிப்பிட்ட யூனியன் சங்கத்தினர், முதலாளிகள், ஜாதிகள், பணக்கார வர்க்கங்கள், இவைகளே, ஜனநாயகத்தின் அடிமட்ட குடிமகன் என்றும் ஜனநாயகத்தால் பயனடைந்தான் என்று சரித்திரமே கிடையாது! ஆக சைனாவை போல, இந்த ஜனநாயக அரசாங்கம் அத்தகைய உரிமை பெற்றதில்லை, நிமிடத்தில் வசதி படைத்திட! ஆனால் இந்த வெளிநாட்டு மூலதனங்களின் தேவைகளை பூர்த்தி செய்திட, நமக்கே தெரியாமல் நம்மிடையே வளர்ந்து வரும் வியாபார தந்திரம் படைத்த விற்பண்ணர்கள், சீக்கிரம் பணம் பார்க்க துடிப்பவர்கள் 'Entrepreneurs' தான் முக்கிய காரணம். அதனால் தான் இந்த வளர்ச்சி! கோல்கேட் பற்பசை தயாரித்த 'Procter & Gambel' நிறுவன பழைய தலைவர்'குருசரன்தாஸ்' சொன்ன மாதிரி 'அரசாங்கம் இரவில் தூங்கும் பொழுது, பொருளாதாரம் வளர்கிறது'

ஆக இப்படி வழி நடத்தும் இந்த புதிய விற்பண்ணர்கள் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம். இன்னொன்னு தெரியமா, வளர்ந்து வரும் நம் இந்திய கம்பெனிகள் சைனாவினுடய கம்பெனிகளை விட நிர்வாக திறமை பெற்று முன்னனியில் இருப்பதை. உலக சந்தையில் அதிஉன்னதமான கம்பெனிகளின் வரிசையில் இடம் பெற்ற நம் 'Infosys', 'Ranbaxy', 'Reliance' போன்ற தனியார் கம்பெனிகளின் வளர்ச்சி, உலக முதலீட்டாளர்களிடம் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு, அந்த சைனாவின் கம்பெனிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது. இன்னொன்னு தெரியுமா, ஒவ்வொரு வருஷமும் ஜப்பான்ங்காரன் கொடுக்கும் உலகில் சிறந்த கம்பெனிக்கான பரிசு, 'Deming Prize', சிறப்பாக நடத்தப்பட்ட கம்பெனிகள்ல, இந்தியாவில இருக்கிற கம்பெனிகளுக்கு சமீபமா தொடர்ந்து கொடுத்திருக்கிறான், தெரியமா? அதில நம்ம 'சுந்தரம் கிலைட்டான்ன்னுக்கும்' கிடச்சிருக்கு, வேணும்னா இதோ சுட்டி அது மாதிரி இந்த விற்பண்ணர்கள் மட்டுமில்ல இந்த வளர்ச்சிக்கு காரணம், உங்களை, என்னை மாதிரி ஆளுங்களும் காரணம். எப்படி?

நமக்கு நாமே ராஜா, வீடு வேணும்னா, இந்தோ லோனை போட்டு உடனே கட்டிமுடிச்சிடுறோம், காருல போவனும்னு ஆசை பட்டா இதோ ரெடி, காருக்கு பணம் கடங்கொடுக்க ரெடி, வாங்கி ஓட்டியாச்சு, இதை ஒருத்தர் ரெண்டு பேருல்ல ஒட்டு மொத்தமா எல்லாரும் பண்ண இறங்கிட்டா, இதைத்தான் தனிமனித செலவீனம்னு சொல்றது. இப்படி செலவீன சதவீதத்தில நம்ம இப்ப 67%, சைனா 42%. கிட்ட திட்ட அமெரிக்காவுக்கு பக்கத்தில நெருங்கிட்டோம், அவங்களோடது 70%. 'Credit Card'தொழில் வளர்ச்சி இதுனால 35% வருஷத்துக்கு முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அப்புறம் செல்போன், இப்படி சொல்லிக்கிட்டே போலாம். இப்ப புரியுதா, நம்ம GDPயின் வளர்ச்சி என்னான்னு. ஏற்கனவே சொன்ன மாதிரி 'GDP' சதவீதம் கூட்டி கழிக்க இந்த தனிமனித செலவீனம் ஒரு அங்கமாகிறது.

இது வெறும் கணக்கு போட்டு சொல்லும் மந்திர வளர்ச்சி இல்ல, உண்மையாவே, வளரதுடிக்கும் நம்மவர்கள் எத்தனையோ பேரு இந்தியாவை விட்டு உலகம் முழுக்க வியாபிக்க, பொருளாதார படைஎடுப்பு நடத்த துடிக்கிறாங்க. ஏன் நம்மளுடய கனவு தொழிற்சாலை, சினிமா தொழிற்சாலை, ஹிந்தி, தமிழ், தெலுங்குன்னு, எல்லாரும் உலகம் முற்றிலும் இருக்கும் 50 கோடி ரசிகர்களை குறிவச்சு கதை எழுதி படம் பண்ணி வெளியில விடுறாங்க. இதில நம்ம தமிழ் திரையுலகம், ஹிந்திபடவுலகம் மாதிரி இன்னும் எழுச்சி பெறலன்னு தான் சொல்வேன். ஏன்னா, இப்ப வர ஹிந்தி படங்கள் பெரும்பான்மையா குறி வைக்கிறது வெளி நாட்ல இருக்கும் இந்தியர்கள் தான். அப்படி வளரும் பொழுது, அடுத்த நாட்டவனையும் ரசிகர் கும்பல்ல சேர்க்கும் காலம் அதிக தூரமில்லை, அப்புறம் பாருங்க எப்படி அசுரத்தனமான வளர்ச்சின்னு! எத்தனையோ ஏற்ற தாழ்வுகள், அரசாங்க சிக்கல்கள், கையாலாகத்தனம், மற்றும் இரைச்சலான ஜனநாயகம் என்று இருந்தாலும், தனிபட்ட மக்கள் விழித்தெழ ஆரம்பிச்சாட்டங்க, ஆக அவங்க எல்லாரும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில தனி தனி ராஜாவாயாச்சு, ஆக நம்மகிட்ட இருந்த விலங்கை உடச்சிக்கிட்டு எல்லாரும் வெளியே வர துவங்கியாச்சு!

நம்ம நேரு சொன்ன மாதிரி 'இது போன்ற தருணம் சரித்திரத்தில எப்பவாவது அரிதா தான் வரும், அப்படி வரும் பொழுது, நம் அடிமைத்தனம் விலகி, பழமையை உடைத்து, புதுமை காண வெளிவா' அவரு சொன்னது நள்ளிரவில் சுதந்திர இந்தியா பிறந்தபொழுது, அதே மாதிரி, இப்போ பிறப்பது அதே போன்ற புதிய இந்தியா, ஒரு தனித்துவமான சமூகம் அமைக்க, புரட்சி கொண்டு, வண்ணங்களோடு வெளிப்படையான,துடிப்பான, எல்லாவற்றிக்கும் மேலாக புதிய மாற்றங்களை ஏற்று உதயமாகும் புது இந்தியாவை உருவாக்க , வா வெளி வா! புரட்சி படைப்போம்! நாளை நமதே!

Wednesday, March 01, 2006

தவமாய் தவமிருந்து - அழகு ப்ரியம்வதா!

திடீர்னு, தமிழ்மணத்தில, அப்ப அப்ப எதாவது புதுமையா, எனக்கு பிடிச்ச நாலுன்னோ, இல்ல இரண்டு பேரு கூட்டணி பண்ணி, ஓட்டு வாங்குன்னோ காமடி பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அப்படி நான் பார்த்ததிலே, இந்த நாலு புடிச்சதில நிறைய பேரு சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து' படத்தை புடிச்ச படம்னு எழுதி இருந்தாங்க. பிறகு தவமாய் தவமிருந்து திரைப்படம் பற்றி, அதிகமான விமரிசனங்களை எல்லாரும் தனி தனி இடுகைகளா, அதன் முக்கிய கேரக்டர், பிறகு, கதை, இயக்கம் பத்தி எல்லாரும் நிறைய எழுதினாங்க. எல்லாமே, நம்ம நடந்து வந்த வாழ்க்கையை படம் பிடிச்சு கண்பிச்சத போல இருந்திச்சு, நடக்கிற நிஜ வாழ்க்கையோட ஒத்து போறதாவும், சில பேரு குற்ற உணர்வா தங்களுக்கு தெரியரதாவும் நிறைய எழுதுனாங்க. அப்புறம் நிறைய பேரு எங்க அண்ணன் அண்ணி எல்லாம் அப்ப்டி இல்லேன்னும் எழுதி இருந்தாக! சில பேரு அம்மாவை பத்தி யும் இந்த நேரத்தில யோசிச்சு பார்க்கனும்னு எழுதி இருந்தாங்க! பலருக்கு கண்ணு குளமாச்சும்னு, அது நம்மலது மட்டுமில்லாம, பார்த்த மத்த பேருக்கும் ஆனுச்சுங்கிறப்ப அந்த படத்தோட தாக்கம் எப்படின்னு எழுதி இருந்தாங்க.

நானும் அந்த படத்தை பார்த்து, அதை எல்லாம் ரசிச்சு, கண்ணும் குளமாச்சு, பிறகு அந்த படத்தில வந்த நிறைய சம்பங்களும் என் வாழ்க்கைக்கும், எனக்கும் பரிச்சயங்கிறது தெரிஞ்சாலும், அதல 'out of focus', அதாவது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத, இல்ல ஒட்டாத,சில காட்சிகள், கேரக்டர் பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!

முதல்ல நான் சொல்ல வரது அந்த பிரிண்டிங் பிரஸ்ல முத்தையாவோட வேலை செய்ற இளவரசு பத்தி. ரொம்ப இயல்பா, அருமையா நடிச்சுருப்பாரு. அதாவது முதாலாளிக்கு கஷ்டம்ங்கிறப்ப கூட ஒத்தாசையா போஸ்டர் ஒட்ட போறதும், பிறகு, பிரிஞ்ச குடும்பத்தை ஒன்னு சேர்க்க உண்டான பேச்சு வார்த்தை துவக்கி வைக்கிறதும், இது மாதிரி நான் என் நிஜவாழ்க்கையில சந்திச்ச ஆளுங்க உண்டு!. சின்ன வயசிலே, அவங்க கூட வேலைசெஞ்சு, சினேகமா இருந்து, ரொம்பகாலம் விசுவாசமான் வேலை ஆட்களா எங்க கடையில வேலை பார்த்தவங்க நினைப்பு அதிகம் வந்திச்சு, இதை பார்த்தோன! அதிலயும் சில சமயம் அதராவா பேசியும், அதட்டி பேசியும், குதர்க்கமா பேசியும், அந்த அன்பான முதலாளி, தொழிலாளி உறவை, நான் என் நிஜ வாழ்க்கையில கண்டதை எந்த சினிமாவிலயும் நான் பாத்ததில்ல. முக்கியமா, 'ஏண்ணே, அடுத்தவன் பாஷையை கத்துக்க இம்புட்டு செலவளிக்கணுமா, அதுக்காக இப்படி கஷ்டபடுனுமா' ன்னு வர வசனங்கள். பிறகு முதலாளி முத்தையா, அவங்க குறையை சொல்லிகாமிச்சு கடிந்து கொள்வது, அதாவது 'உனக்கு ஒன்னும் கேக்காதப்பயே இப்படி, எல்லாம் கேட்டுச்சுனா' ன்னு அவர் காது கேளாதை இவர் சொல்லி காமிப்பதும், பிறகு அவர் 'அண்ணே, உங்களுக்கும் மெசினு வைக்கணும், அப்பதான் கேட்கும் போல' என்று குத்தி காமிக்கும் காட்சிகள், இது பேன்று ஏராளம். இது போன்ற சம்பவங்களை அனுபவத்தில் உணர்ந்தவன் என்பதால், என்னை தாக்கம் செய்தது, இது போன்ற காட்சிகள், கேரெக்டர்கள்!

அடுத்தது, அந்த வட்டி பணம் வாங்க வரும் நபர், அவர் தன் முதாலளியிடம் படும் கஷ்டங்கள், வட்டி வாங்கமல் செல்வதால், காலையில் கடை திறந்தோன வந்து முதல் ஆளா நிற்பதும், பிறகு முத்தையாவிடம் பாட்டு வாங்குவதும், பிறகு கரிசனத்தோட, 'எப்பவும் வட்டியை கட்றீங்க, எப்ப முதுலை அடைப்பீங்க, இப்படி மேலும் மேலும் கடன் வாங்கினான்னு' கேட்கும் காட்சிகளும், என் தந்தையாரிடம், இப்படி அக்கரை எடுத்துக்கூறிய புண்ணியவான்களை நான் என் வாழ்க்கையில் பலரை சந்தித்துருக்கிறேன்! திரையில் இது போன்ற காட்சியை பார்த்த பொழுது, என்னை நானே ஆசுவாசுபடுத்த முயற்சித்தேன், அவ்வளவு தாக்கம்!

பிறகு அந்த பட்டாஸுக்கடைக்காரர், முத்தையா கொடுத்த லிஸ்ட்டுக்கு விலை போட்டு கொடுத்துவிட்டு, பிறகு சாய்ந்திரம் வந்து வாங்குகிறேன் என்றவுடன் பொறுமுவதை, வெகு இயல்பாய் நடித்து கொடுத்திருப்பார்.

பிறகு சேரன் ஊர் திரும்பி வந்தவுடன், அவர் அம்மா கோபித்து கொண்டு கதவை சாத்தும் பொழுது, ஜன்னல் வழியாக, அவரை மன்னிக்க சொல்லும் ஊர்கிழவிகள், வாஞ்சியுடன், செய்த தப்பை மன்னிக்க சொல்லி வாதாடும் காட்சி, யதார்த்தின் உச்சம்!. இது போன்ற நிகழ்ச்சிகள் அனைவருக்குமே நடந்த ஒன்றாகவே இருக்கும்!

பிறகு சேரன் காரை ஒட்டிச்செல்லும் டிரவைர், அவர் வாஞ்சையாக ஆறுதல் கூறி, சேரனுடன் தந்தையின் பெருமை பேசும் காட்சிகள், வெகு சாதரணம் தான், ஆனால் நிஜ வாழ்க்கையில், இது போன்று கட்டங்களில், இது போன்ற கேரக்டர்களை சந்தித்தவர்கள் நம்மில் அனேகம் பேர்!


கடைசியாக, சேரனுக்கும், ப்ரியம்வதாவிற்கும் மென்மையான காதல் அரும்பும் காட்சி, எனக்கு மிகவும் பிடித்த காட்சி! இது போன்று யதார்த்தமாய், காட்சி அமைப்பு, நாம் அதிகம் பார்க்கும் சினிமாக்களில் வருவதில்லை. காதல் அரும்புவதை பெரும்பாலான படங்கள் நிஜத்திற்கு அப்பால் தான் படம் பிடித்துள்ளனர். வேண்டுமானால் பாருங்களேன் அந்த வீடியோ கிளிப்பை!

இது போன்று பல காட்சிகள், கேரெக்டர்கள், அந்த வட்டி பணம் கொடுப்பவர், சென்னையில் உதவும் நண்பர், அவருக்கு உண்டாகும் சங்கோஜங்கள், சேரனின் நண்பன், என இப்படி மெயின் கதைக்கு சம்பந்த படாதவர்கள், மிக இயற்கையாக மனதிலே ஆழம் பதிந்தினர். இது தான் சேரனுக்கு உண்டான வெற்றி. மெயின் கதை, அதை சுற்றிய கேரக்டர்கள் எல்லாம் சுலபமாக பின்னி, திரைக்கதை அமைத்து படம் எடுத்துவிடலாம், இது போன்ற உபரி பாகங்களின் தாக்கம் எந்த ஒரு படத்திலும் நமக்கு வருகிறதோ, அந்த படங்கள் இமாலய வெற்றி அடைவதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை!