Wednesday, July 19, 2006

மணி மந்திரம்! (எனை ஆண்ட அரிதாரம்!)

பாரதிராஜா பாடல் காட்சிகளை எப்படி படமெடுப்பார் என்பதை பற்றி நான் போட்ட பதிவு, செந்தூரப்பூவே - பாரதிராஜா முத்திரைகள்! (எனை ஆண்ட அரிதாரம்!) படித்திருப்பீர்கள்! அதில் பின்னோட்டமிட்ட தருமி மணிரத்தினத்தின் படங்களின் பாடல் காட்சிகளையும் பற்றி ஒரு கம்பேரிட்டிவ் பதிவு போடச் சொல்லி இருந்தார். மணியின் படங்களில் பாடல் காட்சிகளை விட கதை சொல்லும் மந்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதுவும் சினிமெட்டோகிராபி என்கிற அழகு தொழில்நுட்பத்தை, ஆரம்பகாலங்களில் அவருடன் சேர்ந்து படம் பிடித்த பிசி ஸ்ரீராம் கேமிராவின் கோணங்கள், ஒளி அமைப்புகள் எல்லாம் உலகத்தரம் வாய்ந்தவை. அதைப்போலவே மணியின் படங்களுக்கென பிரத்தியோகமாக வேலை பார்த்த ராஜீவ் மேனன், சந்தோஷ் சிவன், கே ரவிச்சந்திரன் போன்றோர்களும் அழகாய் படம் பிடித்து வெளிவந்த படங்களான, 'பம்பாய்', 'இருவர்', 'அலைபாயுதே', 'ஆய்த எழுத்து', 'கண்ணத்தில் முத்தமிட்டால்' என வெவ்வேறு சினிமெட்டோகிராபர்களை கொண்டு படம் பிடித்திருந்தாலும் கடைசியில் மணியின் டிரேட் மார்க் என்ற தொழில்நுட்ப வளையத்துக்குள்ளேயே படம் பிடிக்கப்பட்டிருக்கும். அப்படி பிடிக்கப்பட்ட படங்களின் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் மிக உன்னிப்பாக கவனித்தாலொழிய அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அப்படி செய்யபட்ட சில காட்சிகளின் கோணங்கள், ஒளி கலவைகள், பில்டரின் எஃபெக்ட்டுகளுடன் எடுக்கபட்ட சினிமெட்டோகிராபி என்ற தொழில்நுட்பம், அதோட மணியின் மிகப்பெரிய பலமான திரைக்கதை சொல்லும் திறன் பற்றி பளிச்சென உங்களுக்கு புரிய வைக்க இந்த பதிவு! ( ஒரே சினிமா சமாச்சாரமா எழுதிக்கிட்டிருக்கியே வேறே ஏதும் எழுதுப்பான்னு அரற்றவங்களுக்கு, இதோ, இதற்கப்பறம கொஞ்சம் பதிவு கழிச்சு தான் சினிமா பதிவு, இப்பவே சொல்லிப்புட்டேன்!)

மணியோட எத்தனையோ லேட்டஸ்டா வந்த படங்கள்ல இந்த தொழிநுட்ப கலக்கலும் கதை சொல்லும் திறமை பளிச்சிட்டாலும், எனக்கு ஆரம்ப காலத்திலே வந்த 'மெளனராகம்' படம் இன்னும் மனசிலே அப்படியே நின்னுக்கிட்டிருக்கு. உதாரணத்துக்கு இந்த காட்சி அமைப்பை பார்ப்போம்!

சீன்: ரேவதி, என்னமோ பெரிசா சாதிச்சிட்டதா, அதுவும் அப்பா, அம்மா சொல்லியும் கேட்கமா லேட்டாவந்து, பொண்ணு பார்க்க வந்த கும்பலை பார்க்காமலே திருப்பி அனுப்பிச்சிட்டதா நினைச்சிக்கிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போது அவங்க எல்லாம் இருக்கிறதை கண்ட அதிர்ச்சியான காட்சி! மாப்பிள்ளை மோகனும், அவருக்காக காத்துக்கிட்டிருக்க, அவங்க இரண்டுபேரும் தனியா சந்திச்சு உரையாடி, அந்த தனி சந்திப்பின் உரையாடிலின் விளைவே கல்யாணத்தை நிகழ்த்தக்கூடிய சம்பவமாகிப் போவதாகும் காட்சி! இதை மணியைத்தவிர இத்தனை அழகா திரைக்கதை சொல்லும் ('Narration') திறனை வேற எந்த இயக்குநர் கிட்டேயும் பார்க்க முடியாது!
Image Hosted by ImageShack.usஇந்த முதல் ஃபிரேம், ரேவதி மழையிலே ஆட்டம் போட்டுட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு திரும்பி, உள்ளே நுழையறப்ப, அவருக்காக காத்துக்கிட்டிருக்கிற மணமகன் குடும்பத்தை கண்டதும் அதிர்ச்சியோட உள்ளே நுழையும் காட்சி!

Image Hosted by ImageShack.usஅடுத்த ஃபிரேம்ல ரேவதிக்கு அலங்காரம் செய்யும் பொழுது, லேட்டா வந்ததுக்காக வாங்கி கட்டிக்கிட்டு, 'அதே நேரத்தில எவ்வளவு பெருந்தன்மையா மாப்பிள்ளை உனக்காக காத்துக்கிட்டு இருந்தாரு'ன்னு மாப்பிள்ளைப் புகழ் பாடறதையும் கேட்டுக்கிட்டு இருக்கிற ரேவதி எந்த வித ரியாக்ஷனும் இல்லாம மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு இருக்கிறதை 'கண்ணடி பிம்பம்' வழியா அவருடய பிரதிபலிப்பு என்னான்னு சொல்ற ஃபிரேம்!

Image Hosted by ImageShack.usஇந்த ஃபிரேம்லே ரேவதியோட தங்கச்சி, 'அவரு பாவம்!, உங்கிட்ட...' இந்த டைலாக சொல்ல வர்ற தங்கச்சியையும் கண்ணாடிபிம்பத்திலே தான் காமிக்கிறார் மணி, ஆனா அடுத்த ஃபிரேம் பாருங்க, அங்க தான் மணியோட திரைக்கதை சொல்லும் கெட்டிக்காரத் தனம் பளிச்சிடும்!

Image Hosted by ImageShack.us'அவரு பாவம்! உங்கிட்ட தனியா ஏதோ பேசணுமா, அதுக்குதான் இவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருக்காரு!' அப்படின்னு தங்கச்சி சொன்னோன்ன உடனே அதிர்ந்து திரும்பறப்ப தான் ரேவதியோட நிஜ முகம் நமக்கு தெரிய வருது! அதுவரை பிம்பத்தை எதிரொலியாக மட்டும் கண்ணாடியிலே காட்டி விட்டு அவரின் அதிர்ச்சியை நிஜத்தில் காட்டும் இக்காட்சி, அதற்கு அழகு சேர்க்கும் இசைஞானியின் பின்னனி இசை, காட்சியை எங்கேயோ கொண்டி நிறுத்தும்!

Image Hosted by ImageShack.us இந்த காட்சியில் மோகனை ஒரு இருட்டறையில் காட்டி, அதன் பக்கத்தில் இருக்கும் டேபிள் லேம்ப்பின் ஒளி மட்டும் தான் காட்சி பரிபாலனம்! வேறு எந்த ஒளி மூலத்தையும் கையாளவில்லை, இது மணியின் டிபிக்கல் ட்ரேட்மார்க்!

Image Hosted by ImageShack.usஅடுத்து ரேவதி அறைக்குள் நுழையும் காட்சி! லெனின்-விஜயனின் எடிட்டிங் திறமை பளிச்சிடுகிறது இங்கே! ஒரே ஒரு கோணத்தில் ரேவதியின் அனைத்து நகர்வுகளும் பதிவு செய்ய பட்டு எடுக்கப்பட்டிருக்கும்! அப்படியே காமிரா கண்கள் தூரத்திலிருந்து கேரெக்டர் அருகாமயில் சென்று அடுத்த ஃபிரேமிக்கு செல்வதை காணலாம்!

Image Hosted by ImageShack.us முந்தைய ஃபிரேமின் தொடர்ச்சி, ஆனால் ரேவதியை போக்கஸ் செய்யப்பட்டு காண்பிக்கப்படும் காட்சி! இக்காட்சியை தொடர்ந்து ரேவதியின் வசனங்கள், எதற்காக இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று கூறும் வசனக்காட்சிகள்!

Image Hosted by ImageShack.usஇந்த காட்சியின் கோணத்தில் ஓளி என்று பார்க்கும் பொழுது மோகன் ரேவதிக்கும் இடையில் இருக்கும் சின்ன டேபிள் லேம்ப் தான்! மீண்டும் இருண்ட பின்னனியில் வசனங்கள் நடந்தேறும் காட்சி! ஆனால் பளிச் என்று வந்திருக்கும்! இருவர் கதாபாத்திர உரையாடல் காட்சியின் கோணத்தில் காமிராவின் ஆங்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்!

Image Hosted by ImageShack.usஇந்த காட்சி குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியாக சம்பந்தம் முடிந்தை பற்றி பேசும் காட்சியின் தொடக்கம்! அடுத்தடுத்து ஒவ்வொருவராக போக்கஸில் வந்து தன்னுடய கருத்துகளை கூறும் காட்சிகள் இனி வரும் ஃபிரேம்களில்!

Image Hosted by ImageShack.usகுடும்பத்தாரார் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டாலும், ஆனால் படம் பார்ப்பவர்கள், ரேவதியின் கருத்து என்ன என்று, யோசிக்க வைக்கும் இந்த காட்சியில் ரேவதியை போக்கஸ் செய்து காட்டி இருப்பார் மணி!

Image Hosted by ImageShack.usமறுபடியும் எடிட்டிங்கின் திறமை பளிச்சிடும்! இனி ஒவ்வொருவராக அந்த அந்த கேரெக்டர்களை போக்கஸ் செய்து கருத்துக்கள் கூருவது போல இயல்பாக எந்த ஒரு குடும்பத்திலும் நடக்கும் இச்சம்பவம் போல படம் பிடித்து காட்டியிருப்பார்!

Image Hosted by ImageShack.usஆனால் ரேவதியோ விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருப்பார்! அதுவும் வளையலை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து விளையாடிக்கொண்டிருக்கும் தன் சந்தோஷமற்ற தன்மையை இந்த ஃபிரேம் படம் பிடித்து காண்பிக்கும்! இந்த மாதிரி கட்டங்களில் எந்த பெண்ணுக்கும் உள்ள மனோபாவத்தை அழகாக சொல்லி இருப்பார்!

Image Hosted by ImageShack.usரேவதியின் அண்ணன் தன்பங்குங்கு கூறும் காட்சியின் தொகுப்பு! இது மாறி மாறி வரும் கேரெக்டர்களின் வசனகாட்சிகளில் எடிட்டிங்கின் மேஜிக் தெரிய வரும்!

Image Hosted by ImageShack.usகடைசி தங்கை தன்பங்குக்கு தன் கருத்தை சொல்லும் காட்சி! அதையும் மிக அழகாக எடுத்து சொல்லி படம் பார்ப்பவர்களை ஆர்வத்தின் உச்சத்திற்கு எடுத்து செல்வார்!

Image Hosted by ImageShack.usரேவதியின் தந்தை ரேவதியிடம் எதற்காக உனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்று கேட்கும் காட்சியில் மீண்டும் கேரெக்டர் போக்கஸ் செய்து அடுத்து வரப்போகும் திடீர் திருப்பங்களிக்கான வீரியத்தை கொண்டு வர முயற்சிப்பார்!

Image Hosted by ImageShack.usகுடும்பத்தார் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியின் கோணத்தில் எடுக்கப்பட்ட அதே காட்சியின் மீதம் இங்கு ஒட்டப்பட்டிருக்கும்! ஆனால் வசனப்பதிவின் தொடர்ச்சியில் காட்சி எடுக்கபட்ட நிலையை வேறுவிதமாக கண்பிப்பது எடிட்டிங் திறமை!

Image Hosted by ImageShack.usபுதுவித கோணத்தில் ரேவதிக்கும் அவரது தந்தைக்குமிடையே நடக்கும் உரையாடல்! கேமிராவின் கோணம் ரேவதியின் முதுகு பக்கத்தை காண்பித்து, தந்தையை மட்டும் பிரதானபடுத்தும் காட்சி! வசனமும் பளிச்சென்று இருக்கும், தன் மிடில் கிளாஸ், அரசாங்க உத்தியோக தகப்பனின் கடமை என ரத்தினசுருக்கமான காட்சி, ஆனால் வீரியம் மிகுந்த ஒன்று!

Image Hosted by ImageShack.usரேவதியின் பரிகாசப் பார்வை, எதற்காக இந்த மிடில் கிளாஸ் நிர்பந்ததிற்கு கட்டுப்பட வேண்டும் என்கிற ஏளனப்பார்வை! வசனமின்றி தந்தையின் அறிவுரையை அவமதிப்பது போன்ற காட்சி அமைப்பு!

Image Hosted by ImageShack.usநான் மேலே கூறிய காட்சியின் தொடர்ச்சி, தந்தை வசனம் பேசுகிறார், ஆனால் அவர் காட்சிக்குப் பின்னால் தள்ளப்படுகிறார். இங்கு முக்கியமாக காண்பிக்க வேண்டியது ரேவதியின் அலட்சியப் போக்கு! இப்படி படம் பிடித்து காண்பிப்பதில் உண்டாகும் திரைக்கதை அழுத்தம் எப்படி வந்திருக்கிறதென்று பாருங்கள்!

Image Hosted by ImageShack.usதந்தை உரையாடி முடிக்கும் காட்சியின் முன்னே, அவர் காட்சியில் முழுவதுமாக முன்னுக்கு கொண்டு வரப்படுகிறார், ரேவதி பின்னே தள்ளப்படுகிறார்! கேமிராவின் கோணம் முந்தைய தந்தையின் உரையாடல் ஆரம்பிக்கும் கோணத்திலிருந்து சற்றே உயர்ந்து அவர் முகத்தின் உச்சரிப்புத் தோற்றத்தை பிரதானமாக்குகிறது!

Image Hosted by ImageShack.usரேவதி மறுத்து, "பொட்டணம் கட்டி விக்க பார்க்கிறீங்களா?" என்று கேட்டவுடன் தந்தை விடும் அரையை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் எழுந்து நிற்கும் காட்சி. இயல்பான காட்சியின் யதார்த்தம்! அதை அழகாக படம் பதிவு செய்த லாவகமே மணியின் மந்திரம்!

Image Hosted by ImageShack.usஅடுத்து இருள் கூடிய மேகத்தில் வெளிவரும் நிலாவை காண்பிக்கும் காட்சி, இருள் கப்பிய இறுக்கமான காட்சிகள் நடந்தேறியதை காண்பித்து சோகமயமான இரவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவது இன்னொரு ஹைலைட்!

Image Hosted by ImageShack.usஅடுத்து இந்த சோகமயமான தருணத்தில் நிலவை பார்க்கும் ரேவதி! இந்த ஒளி அமைப்புகள், மணியின் படங்களுக்கே உரித்தான இருள் படர்ந்த காட்சிகளின் தொகுப்பு! சோகத்தை சொல்லி அடிக்கிறார்! காட்சியின் அமைப்பை சற்றே கவனித்து பாருங்கள்!

Image Hosted by ImageShack.usரேவதியின் இடது கன்னத்தில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது மறுபக்கம் அது கடந்து செல்வதில்லை! இது போன்று இருள் படர்ந்த காட்சி அமைப்புக்கு சொந்தக்காரர் நம்ம மணி! ஆக இப்படி செம்மையாக காட்சிகளை செதுக்குவதில் வல்லுநர் நம் மணி. அதற்கு கை கொடுப்பவர்கள் இந்த கேமிராமேன்கள், அதாவது சினிமெட்டோகிராபர். இது மட்டுமின்றி, கலை, மற்றும் செட்டுகளிலே காட்சிகளின் தன்மைகளை சொல்ல வருவதை வசனங்களின்றி ஒளியின் அளவால் பொருட்களையும், மற்றும் கேமிரா கோணங்கள், அதை பதியவைக்கும் முறை, நடிக்கும் பாத்திரங்களின் உணர்ச்சி தோற்றங்களையுமே அடிப்படியாக கொண்டு காட்சிகள் அமைத்து அதற்கு புது வடிவம் எடிட்டிங்கால் கொண்டு வரப்பட்ட மேஜிக் என இப்படி அனைத்து தொழில் நுட்பங்களுடன் வருவது தான் மணியின் மந்திரம்! நான் கூறிய இக்காட்சி தொகுப்பின் பின்னனி வசனங்களை கேட்டு மகிழுங்கள், பிறகு அதனுடன் சமப்படுத்தி நான் மேலே கூறியதை பாருங்கள், சரியா வருகிறதா என்று!

இது போன்ற நுட்பங்களை நீங்கள் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் அம்சத்தை தெரிந்து கொள்ளாதவரை அதன் தாக்கம் தெரிவதில்லை! ஆனால் நம் அனைவருக்கும் உணர்ச்சிப் பூர்வமாக படத்தை பார்த்துவிட்டு பரவசம் அடைவது என்னவோ உண்மை! அதை நன்றாக இருக்கிறது என்று ரசித்து கொண்டே இருந்திருப்போம் ஆனால், கொஞ்சம் மேலே போய் இத்தரம் மிக்க நுட்பங்களை தெரிந்து கொள்ள முற்பட்டு பிறகு அக்காட்சிகளை ரசித்து பாருங்கள்! நான் சொல்வது உங்களுக்குப்புரியும்! வேண்டுமென்றால் நான் கூறிய அத்தனையும் எப்படி ஒத்து போகிறதென்பதை இன்னொரு தடவை டிவிடி வாங்கி இந்த 'மெளனராகம்' படத்தை நீங்கள் ஏன் திருப்பி பார்க்க கூடாது?

Tuesday, July 18, 2006

வீரபாண்டி (Hollywood) கோட்டையிலே- முழங்கிய ஏ ஆர் ரஹ்மான்!

நேற்று இரவு அமெரிக்க மேற்கு கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சிலஸ் என்ற நகரில் மலைகளுக்கு நடுவே அமைந்த நாடக இசை அரங்கமான 'ஹோலிவுட் பவுள்' ('Hollywood Bowl') என்கிற அரங்கத்திலிருந்து ஒலித்த ஏ ஆர் ரஹ்மானின் "வீரபாண்டி கோட்டையிலே, மின்னலடிக்கும் வேளையிலே, ஊரும் ஆறும் தூங்கும் போது, பூவும் நிலவும் சாயும் போது, கொலுசு சத்தம் மனசை திருடியதே!" நாதம் எட்டு திக்கும் சென்று அசைந்தாடிய இரவு!

இன்றைய இரவு 'ஏ ஆர் ரஹ்மானுடன் பாலிவோட் இரவு' என்ற மிகப்பெரிய விளம்பரத்துடன் நடந்தேறிய இசைக் கச்சேரி, வளர்ந்து வரும் 'பாலிவோட்' என்கிற பொழுது போக்கு தொழிற்சாலையை ஆணித்தரமாக இம்மேலை நாடுகளில் ஊடுவற உண்டான வழிமுறையாகவே எனக்குத் தென்பட்டது! மலைகளால் சூழப்பட்ட இந்த நாடக இசை அரங்கம் மிகவும் பிரசித்து பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாயந்த ஒரு இடமாகும்! அதில் நிகழ்ச்சி நடத்திய உலகப்புகழ் பெற்ற பீட்டல்ஸ் போன்ற இசைக்குழுவினருக்கு சமமாக ஒரு இந்தியன், அதுவும் தமிழன் கச்சேரி நடத்தி அமெரிக்க மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது இன்னொரு சரித்திரமே! இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் இந்நாட்டிலே வாழும் இந்தியக் குடிமகன்களை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சியை வடிவமைக்கவில்லை, இங்கு வாழும் இந்நாட்டினரின் மக்களை கருத்தில் கொண்டு அவர்களின் விருப்பம்,டேஸ்ட், போன்றவற்றிற்கு தகுந்தாற் போல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும், அதே ராகத்தில் அமைந்தாலும் வெளிஎழுப்பிய நாதத்தை கேட்கும் பொழுது ஒரு புதிய வடிவம் தென்பட்டது! அவர் இசை அமைத்த 'ச்சைய ச்சையாவும்', 'ஹம்ம ஹம்மா' வும் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஆட்டம் போடச் செய்தது! கடைசியாக பாடிய அவரின் 'வந்தே மாதிரம்' பாட்டு இத்தனை தூரம் கடந்து வந்தாலும் இந்திய நாட்டின் பாசப்பிணைப்பை வெளிபடுத்தும் அரங்கினில் இருந்த அனைத்து இந்தியரின் ஒட்டு மொத்த உணர்ச்சி குவியலை காணமுடிந்தது! நிகழ்ச்சிகள் எப்படி என்று கிழே பார்ப்போம் வாருங்கள்!

நீங்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டு அதுவும் லாஸ் ஏஞ்சலஸ் என்ற இந்த கனவு தொழிற்சாலையை கொண்ட இம்மாநகரத்திற்கு வரும் வாய்ப்புக்கிடைத்தால், சுற்றுலா என்ற முதல் கட்டம் இந்த 'ஹாலிவோட்' என்ற இப்பகுதியை சுற்றுவதே! அதுவும் இப்பகுதியில் நம் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் போல் அனைத்து ஸ்டுடியோ வளாகங்களும் உள்ளன! நீங்கள் சென்று வசதியாக அம்மாதிரி ஸ்டுடியோ வளாகம் சுற்றி வரவேண்டுமென்றால் இப்பகுதியில் அமைந்திருக்கும் 'யுனிவர்சல் ஸ்டுடியோஸ்' சென்று வரலாம். சமீபத்தில் வெளிவந்த 'கிங்காங்' என்ற ஆங்கிலப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலே, இல்லை டுபுக்குவின் விமரிசனம் படிக்கும் பாக்கியம் பெற்று இருந்தாலோ உங்களுக்கு தெரிந்திருக்கும்! அப்படத்தினை தயாரித்தவர்கள் இந்த ஸ்டுடியோவினரே! அது மட்டுமல்ல நீங்கள் கேள்விபட்டிருக்கும் வார்னர் ப்ரதர்ஸ், சோனி, 20த் சென்ச்சுரி ஃபாக்ஸ், வால்ட் டிஸ்னி, ஏபிஸி போன்ற ஸ்டியோக்களின் தளங்கள் இப்பகுதியில் தான் உள்ளது. இப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோலிவுட் புலிவர்ட் என்ற சாலை எப்பொழுதும் மாலை நேரங்களில் கோலாகளம் பூண்டிருக்கும். இந்த சாலையில் உள்ள 'கோடாக்' என்ற கலை அரங்கத்தில் தான் வருடந்தோறும் ஆஸ்கர் பரிசளிப்பு விழா நடக்கும். மற்றபடி இச்சாலையில் இரு பாதசாரி நடைபாதையில் ஹோலிவுட் படங்களில் நடிதத பிரபலங்களின் பெயர் கொண்ட நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்று இருக்கும். ஆக இச்சாலையின் இரு ஓரங்களிலும் நீங்கள் ஹோலிவுட் படங்களில் பார்க்கும் அதிசியமான உருவங்கள் கொண்ட கேரக்டர்களை தாங்கள் அரிதாரம் பூசிக்கொண்டு வருவோர் போவோரை மகிழ்வுக்கும் கூட்டத்தினரை நீங்கள் இங்கு காணலாம்.
அப்படி சுறுசுறுப்பாக இருக்கும் இந்த சாலை பகுதியிலிருந்து சில கட்டிட ப்ளாக்குகள் தாண்டினால் வெளியிலிருந்து தெரியாவண்ணம் இருக்கும் இந்த நாடக இசை அரங்கம் சுற்றிலும் இயற்கையாக 'சாண்ட்ட மோனிக்கா' மலைகளால் சூழப்பட்டு சரிவாக மேலிருந்து கீழ் இருக்கும் இயற்கை சூழ்நிலையிலே அமைந்திருக்கும் இந்த அரங்கம்('amphitheater') எப்படி பாரீஸில் இருக்கும் ஈஃபிள் டவர் உலகப்பிரசித்து பெற்றதோ, அவ்வளவு பிரசித்து பெற்றது இந்த 'ஹோலிவுட் பவுள்' என்ற அரங்கம்! அதே போல இங்கிருந்து, நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கும் 'ஹோலிவுட் சைன்' ('THE HOLLYWOOD SIGN') 'மெளண்ட் லீ' என்ற மலைகளுக்கு நடுவே அமந்திருக்கும் பெரிய சைன் போர்ட் உங்களுக்கு தெரிய வரும்!

இந்த அற்புதமான இசை அரங்கிலே நம் ரஹ்மான் இசை ராஜாங்கத்தையே நடத்தி முடித்தார் நேற்றைய இரவு! தொடக்கத்தில் ஆரவாரமின்றி தொடங்கிய பம்பாய் தீம் ம்யூசிக்குடன் நிகழ்ச்சி தொடங்கி, சற்று நேரத்தில் சுருதி ஏற்றி மணியின் 'தில் சே' ('உயிரே') படத்திலிருந்து 'தில் சே ரே' பாடலுடன் பின் திரையில் சாருக்கானும், மனிஷா கெய்ரோலாவும் ஆடிய பிம்பங்களுக்கிடையில் 'பாலிவோட் நைட்' இனிமையாக தொடங்கியபின் ஆர்பரித்த கூட்டத்தினரை கண்டு சற்றே தெரிந்தது இந்த பாலிவோட் என்ற மந்திர சந்தை எவ்வளவு ஊடுறுவி இங்கே இருக்கிறது என்பது! (காட்சி முடிந்து வரும்பொழுது ஒரு ஆங்கிலப் பெண்மணி மறக்காமல் இந்த 'தில் சே ரே' பாடலை ஞாபகப்படுத்தி, என்னிடத்தில் அந்த சாருக்கானின் படத்தின் பெயரை கேட்டு குறித்துக் கொண்டு, 'நான் எல்லா சாருக்கான் படங்களையும் பார்த்துவிட்டேன், ஆனால் இந்த படத்தை பார்க்கவில்லல அதனால் இந்த படத்தின் டிவிடி வாங்கி இனி பார்க்க வேண்டும் என கூறிச்சென்ற போது தான் தெரிந்தது இந்த பாலிவோட் என்ற தாக்கம் எவ்வளவு ஊடுறுவி இங்கே இருக்கிறது என்று!) பிறகு வந்த அனைத்து பாடல்களுமே இந்த ஊருக்கு தகுந்தார் போல் கூட்டு குரலாக ஒலித்தது. அதுவும் இவ்வூரின் இசைக்கலைஞர்கள் துணையைக் கொண்டு நடத்தப்பட்ட இசை தொகுப்பு ('Orchestration') காண்பதில் எந்த ஒரு ஆச்சரியமில்லை, ஏனென்றால் இசை குறியீடுகள் ('Notes') கொண்டு சுலபமாக வாசித்து முடித்து விடமுடியும்! ஆனால் கோஷ்டி கானம் ('Choir') பாடவந்திருந்த இந்நாட்டு மக்கள் கூட்டத்தினரைக் கொண்டு 'வீரபாண்டிய கோட்டையிலே, மின்னலடிக்கும் வேளையிலே' என்று முழங்க செய்த ஏ ஆர் ரஹ்மானை மேடையில் பார்த்தப் பொழுது பெரிமிதம் அடைந்தேன்!



இது மட்டுமின்றி, இவ்வூரு ம்யூசிக்கல்ஸ்(இதை பற்றி நான் எழுதிய பதிவுகள், பாம்பே ட்ரீம்ஸ், The Phantom of the Opera- திரைக்குப்பின்னே! போன்றவற்றை படிக்கவும்!) என்று அழைக்கப்படும் இசை நாடகங்களுக்கு ('Bombay Dreams' மற்றும் 'The Lord of The Rings') அவர் அமைத்த இசைப்பாடல்களை நம்மூரு பெண்மனி அனிதா(அனிஷா??, இவர் இந்த பாம்பே ட்ரீம்ஸ் என்ற இசை நாடகத்தின் நாயகி!) நாகராஜனைக் கொண்டு பாடவைத்து இந்த ஊரு 'Opera' வையும் பாடி அசத்தி விட்டார்! பிறகு ஹரிஹரன், சாதனா சர்கம், மதுஸ்ரீ, சுக்வீந்தர்சிங் என்று எல்லா பாடகர்களையும் கொண்டு பஞ்சாபி பாங்கராவிலிருந்து, நம்மூரு கொட்டு மேளம் ( ட்ரம்மர் சிவா வழக்கம் போல தனி ஆவர்த்தனமாக அடித்த கொட்டுகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு!) வரை அனைத்து இசைகளையும் முழங்க செய்து, கடைசியில் நிகழ்ச்சி முடிகையில் ஒட்டு மொத்தமாக அரங்கத்தில் இருந்த அத்தனை கூட்டமும் 'ஜனகனமன' பாடி இனிதாக முடித்தது, ரஹ்மானும் தன்னுடய பங்கிறகு 'யுவா', இல்லை ஃ (ஆய்த) எழுத்தில் பாடிய 'ஜனகனமன' என்ற பாட்டையும் பாடி முடித்தார்!

Saturday, July 15, 2006

செந்தூரப்பூவே - பாரதிராஜா முத்திரைகள்! (எனை ஆண்ட அரிதாரம்!)

என்ன 16 வயதினிலே அறிமுக வீடியோ கிளிப்பு விளக்கம் பார்த்தீங்களா?

சரி இப்ப இந்த செந்தூரப்பூவே பாட்டை பாருங்க! பாரதிராஜா பாடல் காட்சிகளை இப்படி தான் பிடிக்கனும்னு நிறைய இலக்கணம் வச்சிருந்தாரு! அந்த இலக்கணம் இப்ப வரை மாறல, கடைசியா நான் பார்த்த் கடல் பூக்கள் வரை அதை தொடர்ந்தாரு! இன்னுமும் நிறைய டைரக்டர்கள் அதையே கடைபிடிக்கிறாங்க! சரி அந்த முத பாட்ல அவரு என்ன தான் அப்படி இலக்கணத்தை கடைபிடிச்சாருன்னு கேட்கிறீங்களா? சரி வாங்க பார்ப்போம்!

முதல்ல இந்த வெள்ளை உடை போட்டுவுடுறது, அது கதாநாயகியிலேருந்து ஆரம்பிச்சிச்சு, அப்பறம் கூட வர்ற பொண்ணுங்களுக்கு தேவதைகள் போல அந்த வெள்ளை உடை அணிவப்பது, அது அவருடய ட்ரேட் மார்க்!

பிறகு கீழ்வானத்திலே உதிக்கும் சூரியன் பேக்ரவுண்ட்ல வர வச்சு,அடிவானத்தையும் அதன் சூரிய சுற்றொளியையும் காமிச்சு, கதாநாயாகிகளை குதிக்கவச்சு, இந்த ஆரம்ப பல்லவியிலே காமிக்கிறது அவருடய அடுத்த வழக்கம். இந்த பாட்லயும் பார்க்கலாம், அப்பறம் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லைன்னு, எல்லா படத்திலேயும் இந்த கதாநாயகி சோலோவா, அதாவது தனியா பாடுற கதாநாயகிகளை பார்க்கலாம். இதுக்கு உதராணமா மத்த பட கிளிப்புகளை அப்பறம் போடறேன், தொடர்ந்து வந்து பதிவை படிங்க!

அடுத்து ரொம்ப லோ ஆங்கிள்ல நிலபரப்பு, வயல்வெளி, பூத்துக் குழுங்கும் பூக்கள், அப்பறம் மரத்திலே ஒய்யாரமா கதாநாயகிகளை சாயவச்சு ஒத்தக் கையாலா ஒய்யாரமா தலைக்கு கை கொடுத்து பாட வைக்கிறது, அதை அப்படியே ட்ராலி ஷாட்ல சுத்தி வந்து படம் புடிக்கிறது! இதே மாதிரி 'புதிய வார்ப்புகள்' படத்திலே ரத்தியை மரத்தில சாய்ச்சு வர 'வான் மேகங்களே' பாட்டு வரும், கிடைச்சா பாருங்க! ஊஞ்சல்ல ஆடுறது, மரத்தை பிடிச்சிக்கிட்டு தொங்குறமாதிரி ஷாட்!

அடுத்து சின்ன சின்ன ஷாட்கள்ல போஸ் கொடுக்க வச்சு, அடுத்த அடுத்து கட்ஸ்ஸா வர்றது. இதிலே ஸ்ரீதேவி, பூவோட கண்ணம் உரசுறது, ஒன்னு மஞ்சப்பூ, அப்பறம் வெள்ளைப்பூன்னு, அதே மாதிரி கட்ஸ் வச்சு வர்றது! இதுக்கு ஸ்டில் போஸ் சீக்வுன்ஸ்னு சொல்லுவாங்க! இது பொதுவா எல்லா பாடல்கள்லயும் வர்றக்கூடியது. கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும்!

அடுத்து நான் 'சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!' பதிவிலே எழுதின மாதிரி அந்த 'Depth of field and focus' டெக்னிக்ல எடுத்த ஷாட்டுகள், அதாவது ஸ்ரீதேவி, செந்தூரப்பூ இது இரண்டும் ஆப்ஜக்ட், அதை டெப்த் குறைச்சு, கூட்டி ஒன்னு ஒன்னா போக்கஸ் பண்ணி பூவையும் ஸ்ரீதேவியையும் மாத்தி மாத்தி காமிக்கிறது, இது பாரதிராஜா அந்த காலத்திலே நிவாஸ்கூட சேர்ந்து கொண்டு வந்த இந்த டெக்னிக் எல்லா டைரக்டர்களும் விட்டு வைக்காம கடைபிடிச்சாங்க!

அடுத்து மலைச்சரிவுகள்லருந்து ஆடுகளோ, மாடுகளோ மந்தை மந்தையா கீழே இறங்கி வர்றது, அதுக்கு பக்கத்திலே கதாநாயகிகளை சந்தோஷமா ஆடவிட்டு படம் எடுப்பாரு. சந்தோஷம்னு இல்லை சோகமான பாட்டுகளுக்கும் இதே பிக்ச்சரைஷேஷன் தான். புதிய வார்ப்புகள்ல 'இதயம் போகுதே'ன்னு ஒரு பாட்ல ரத்தி பாக்யராஜ்ஜை தேடி பஸ் பின்னாடி வர்றப்பையும் இந்த டெக்னிக் தான். இது அதிகமா எல்லா பட்ங்களலயும் வரும்! இந்த காட்சிகள் பார்க்கறதுக்கு அச்சு கிராம வாசனையோட இருக்கும்! இந்த மாதிரி உணர்வை உண்டு பண்ணதிலே பாரதிராஜாவுக்கு பாதி வெற்றின்னா, அதில பாதி இளையராஜா போட்ட ம்யூசிக் தான், அந்த இண்ட்ர்லுயூட் ('interlude') தான்!

அப்பறம் இந்த மாதிரி பாடல் காட்சிகளுக்கு செலக்ட் பண்ற இடங்கள், ஆற்று படிகை, பாதியில நிக்கற மண்டபம், அதன் மண்டப கால்களுக்கிடையே ஓடிவரும் கதாநாயகி, அதை ஒட்டன நதி, அப்பறம் சின்ன மலை, மலைக்குகைகள் அதுக்குள்ள ஓடி வர்ற மாதிரி கதநாயகியோ, இல்ல டூயட் பாடிக்கிட்டு கதநாயகன், கதநாயகியோ ஓடி வர்ற மாதிரி! இதிலே ஸ்ரீதேவி ஓடி வர்ற அந்த மலைக்குகை காட்சிகள் மாதிரியே அலைகள் ஓயவதில்லையிலே ராதாவும் கார்த்திக்கும் ஓடி வரும் காட்சி அமைப்புகள், பார்த்திருக்கீங்களா! அப்பறம் நதி, நதியை ஒட்டின ஆற்று படுகை, மண்டபங்கள், இந்த பாட்ல வர்ற மாதிரியே காட்சி அமைப்புகளை நீங்க காதல் ஓவியம் படத்திலேயும் பார்க்கலாம்!

அப்பறம் புகை மூட்டங்களுக்கு நடுவே ஓடி வரும் கதாநாயகன், கதாநாயகிகள் இன்னொரு ட்ரேட் மார்க்! இதில்லாம் இந்த 16 வயதினிலேக்கு முன்னாடி அதிகம் வந்தது கிடையாது எல்லாமே அதுக்கப்பறம் பாரதிராஜா முத்திரைகளை காப்பி அடிச்சே அவர் அதிகம் தன் படங்கள்ளயே செஞ்சு காமிச்சார். அதே மாதிரி எல்லாரும் காப்பி அடிச்சாங்க!

அடுத்தது மலர் படுக்கை, மலர் தூவி தெளிச்சு கதாநாயகி ஆடி பாடுவது, இது இன்னொரு டெக்னிக்! இதை வச்சு அலைகள் ஓயவதில்லை படத்திலே எடுத்த 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாட்டு ரொம்ப பேஸ்! கொஞ்சம் கிளாமரா இருக்கட்டுமுன்னு ராதாவுக்கும், கார்த்திக்கும் மலர் உடை அணிவிச்சு கிளுகிளுப்பா எடுத்திருப்பாரு! இதிலெ ஸ்ரீதேவி பூ அள்ளி இரைத்துக் கொள்வதிலேருந்து தான் அதுவும் ஆரம்பம்!

இப்படி எத்தனையோ முத்திரைகள், இன்னைக்கும் நீங்க மத்த படத்திலே பார்க்கிறீங்கன்னா எல்லாமே பாரதிராஜா கத்துக் கொடுத்தது தான். அதவச்சு தான் பின்ன வந்த எல்லா டைரக்டர்களும் பாட்டுகளில் பிக்ச்சரஸை பண்ணுனாங்க! இதிலே சில டெக்னிக் கொஞ்சம் வித்தியாசமா விக்ரமன படத்தோட பாடல்கள்ல இருக்கும், அதை பத்தி அப்பறம் ஒரு தடவை எழுதுறேன்!

வெறுமன பாட்டு கேட்டோ இல்ல ஒளி ஓலி பார்த்தோ, அப்படியே அசால்டா நீங்க விட்டுட்டீங்கன்னா, உங்களுக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது. அதை கோர்வையா யாராவது எடுத்து சொன்னா, ஆமா இது சரி தாம்பீங்க! அதே தான்! சும்மா பாட்டு போட்டு வீடியோ கிளிப் போடறதோட இப்படி நான் அந்த காலத்திலே ஆராஞ்ச விஷயங்கள் எவ்வளவோ இருக்கு, அதை தனியா பதிவா போடுறேன்! அதிலேயும் பாரதிராஜாங்கிற இயக்குநர் இமயத்தை, காட்சிகளோட விவரிச்சு 'நிழல்கள்' படத்தை அப்பறமா எழுதுறேன். அதுவரைக்கும் நான் மேலே சொன்ன அத்தனையும் வர்தான்னு கீழே வீடியோல பாருங்க!



அறிமுக 16 வயதினிலே வீடியோ கிளிப் விளக்கம் பார்க்க, எனை ஆண்ட அரிதாரம் - ஒலி, ஒளி (ப்) பதிவு! செல்க!

எனை ஆண்ட அரிதாரம் - ஒலி, ஒளி (ப்) பதிவு!

16 வயதினிலே படத்தை பத்தி நான் நிறைய எழுதிட்டேன், என்னோட எனை ஆண்ட அரிதாரம்-மூன்றாம் பகுதியிலே, அப்பறம் தனியாவே, 16 வயதினிலே ன்னும், பாரதிராஜாவின் முதல் ஐந்து நட்சத்திரங்கள் னும் நான் எழுதிய நிறைய பதிவுகளை நீங்க படிக்கலாம். ஆனா காட்சிகளோட அதை விவரிச்சு சொன்னா நல்லா இருக்குமேன்னு, இது ஒரு புது முயற்சி! வீடியோ கிளிப்போட அதனுடய ஒவ்வொரு காட்சிகளையும் கீழே நீங்க பார்க்கலாம்!



தொடர்ச்சியா 16 வயதினிலே பார்க்க, செல்லுங்கள் 'செந்தூரப்பூவே - பாரதிராஜா முத்திரைகள்! (எனை ஆண்ட அரிதாரம்!)'

Friday, July 14, 2006

புதுப் பேட்டையும், சத்யாவும்!

போன வாரம் தான் செல்வராகவனின் புதுப் பேட்டை படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது! ரொம்ப நாளுக்கு முன்பாகவே உருப்படாதது நாரயண் எழுதிய நிழலுகம் பற்றிய பதிவுகள் படித்திருந்ததால், இந்த படம் பார்க்க ஒரு ஆவல் இருந்து கொண்டே இருந்தது! அதுவும் நான் விரும்பி ரசிக்கும் ராம் கோபால் வர்மாவின் இந்தி படங்கள் பல பம்பாய் நிழலுகம் பற்றிய கதைகள் தான்! அவர் முதன் முதலாக, நிழலுக கதை என்று ஆரம்பித்து எடுத்த படம் 'சத்யா'. பிறகு எடுக்கப்பட்ட நிறைய படங்கள் 'கம்பெனி'யிலிருந்து, தற்போது வந்த 'சர்க்கார்', 'D' வரை எல்லாமே அந்த பம்பாய் நிழலுக கதையின் பின்னனியில் அமைந்தவையே! நீங்கள் எத்தனை பேர் அந்த இந்தி படங்கள் எல்லாவற்றையும் பார்த்திருப்பீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் செல்வராகவனின் தமிழ் நிழலுக தாதாக்களை பற்றி எடுத்த முதல் முயற்சியான இந்த 'புது பேட்டை'யையும், அதே போன்று ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பே ராம்கோபால் வர்மா எடுத்த முதல் முயற்சியான 'சத்யா'வையும் சற்று ஆராய்ந்து கதை களம், அதை எடுத்த முறை, எவ்வளவு நிஜத்திற்கு அருகாமையில் அவ்விரு படங்களும் இருந்தன என்பதை பற்றி சற்ற ஆராயவே இந்த பதிவு! (சினிமா சம்பந்தமா எழுதுனாதான் அதிக மைலேஜ், பதிவை நிறைய பேரு பார்க்கிறாங்க, மத்த நல்ல விஷயம் எழுதுனாலும் கூட்டம் சேர்றதில்லைன்னு இந்த பதிவு மசலா பதிவு!)

செல்வராகவன் படம்னு ஒரு முத்திரையோட நான் படம் பார்க்க ஆரம்பிக்கலை. அதுக்கு காரணமும் இருக்கு அவரு எடுத்த முத ரெண்டு மூணு படத்தை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது! 'காதல் கொண்டேன்' படமும் அது ஓடி ரொம்ப நாளைக்கப்பறம் கேசட்ல பார்த்தேன். அதுவும் அவரோட முதபடம்னு '7G ரெயின்போ காலனி' படம் பார்த்துட்டு அட அசத்தலா இருக்கேன்னு தோணுச்சி. அதுவரை அவரு பேரு மீடியாவிலே, பத்திரிக்கையிலே அடிபட்டு, ஏதோ புதுசா செல்வராகவங்கிறவரு படம் நல்லா இருக்கும்னு கேள்விபட்டதோட சரி. அந்த காலத்திலே, சில டைரக்டர்கள் படம் முதப்படம் பார்த்தோனோ, ஆக இவரு படங்கள் எல்லாம் நல்லா இருக்கும்னு அடுத்த படத்துக்கு காத்துக்கிட்டிருப்பேன்! பெரும்பாலும் அந்த மாதிரி நான் எதிர்பார்க்கிற நல்ல டைரக்டர்கள் படம் தொடர்ந்து ஹிட்டாவே வந்து நல்லாவும் இருக்கும். இந்த எதிர்பார்ப்புல மண்ணை தூவி போட்டது நம்ம பாண்டியராஜன் தான். அவரு முத இரண்டு படம், அதுவும் இரண்டாவது படம் 'ஆண்பாவம்' பார்த்துட்டு மூணாவது படம் 'மனைவி ரெடி'ங்கிற படத்தை ஆவலோட எதிர்பார்த்தேன் அப்ப, ஆனா, அது குப்பை! அப்படி சில டைரக்டர்களை எதிர்பார்க்க வச்ச விஷயத்திலே, ரொம்ப நாளைக்கப்பறம், அதாவது என்னோட கல்லூரி நாட்களுக்கப்பறம்னா, அது செல்வராகவன் தான்! ஆக இந்த புதுப் பேட்டையும் எதிர்பார்த்தேன்! படம் நல்லாதான் வந்திருந்தது, ஆனா, முத படங்களோட வித்தியாசமான ட்ரீட்மெண்ட் இதிலே இல்லை! சரி இந்த இந்தி தமிழ் நிழலுக படங்களை பத்தி பார்ப்போம்!

'சத்யா' படத்தோட கதை இது தான், ஹைதராபாத்ல இருந்து வேலை தேடி பம்பாய் வர்ற ஒரு இளைஞன் பேரு சத்யா, முதமுதல்ல தங்கறது ஒரு மாட்டுத் தொழுவத்திலே, அப்ப அங்க லோக்கலா மாமூல் வாங்கிறவனை, அவனுக்கே உண்டான துணிச்சல்ல அவன் முஞ்சியை அவன் பிளேடை கொண்டே கிழிச்சுடுவான். அப்புறம் ராத்திரி பார்ல வேலை செஞ்சப்ப, அங்க வர்ற ஒரு நிழலுக ஆசாமிக்கு ட்ரிங்ஸ் கொடுக்கிறப்ப தப்பி தவறி அவன் மேலே விழப்போய், அவன் முரட்டுத்தனமா இவனை அடிக்க, இவன் முறைக்க, அப்புறம் அவங்கிட்டயே வேலை செஞ்சு, அங்கேய்யும் அடிவாங்கி போலீஸ்ல மாட்டி, சிறையிலே ஒரு நிழலுக தாதாவோட மோதி, பின்னே அவன்கூட ப்ரண்ட்ஸிப் புடிச்சு, அவன் கேங்கிலேயே சேர்ந்துடுவான். கதாநாயகன் தான் அந்த கேங்குக்கே புத்திசாலித்தனமா வழிகாட்டி கொஞ்சம் கொஞ்சமா மேலே வருவான். அப்ப அந்த அண்டர்கிரவுண்ட் கேங்ககுள்ள வர அடிதடியிலே இவன் சேர்ந்த கேங்கு கை ஓங்கும். இந்த கேங்கெல்லாம் கட்டுபடுத்துற ஒரு லீடர் பெரிய அரசியல்வாதியா எலெக்ஷன்ல நிப்பான், அதுக்கு இந்த கேங் வார் இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு அடக்கி வாசிப்பான் அந்த லீடர் கொஞ்ச நாளைக்கு! கடைசியிலே எலெக்ஷன்ல ஜெயிச்சோன, சத்யாக்கூட இருக்கிற அந்த கேங் லீடரை போட்டு தள்ளிடுவான். அதனால கடுப்பாகி சத்யாவும் அந்த லீடரை போட்ட தள்ள சரியான சமயம் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப, விநாயகர் சதூர்த்தி அன்னைக்கு புள்ளையாரை கடல்ல கரைக்க போறப்ப போட்டு தள்ளி, கடைசியிலெ போலீஸ் என்கவுண்டர்ல அவன் செத்து போவான். துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால செத்து போவாங்கிற மாதிரி முடிச்சிருப்பாங்க!

'சத்யா' படத்தோட ஹைலைட் என்னான்னா, திரைக்கதை, அதிலெ ஒரு 'பிக்கு மாத்ரே'ன்னு கேங்லீடரா நடிச்ச மனேஜ் பாஜ்பாயோட ஆக்டிங் தான்! அப்படியே கண்ணுல ஆக்ரோஷத்தை காட்டிக்கிட்டு, பம்பாய் வழக்கு ஹிந்தி பேசிக்கிட்டு, அந்த அண்டர்கிரவுண்ட் தாதாவை அப்படியே கண் முன்னால கொண்டு வந்து நிறுத்தி இருப்பாரு. அப்புறம் சுக்லா ன்னு இன்னொரு நடிகர், 'மும்பாய் எக்ஸ்பிரஸ்' ஹிந்தி பதிப்புல நாசர் பண்ண ரோல் பண்ணுணவர்! 'பிக்கு மாத்ரே' ஜெயில்லருந்து விடுதலையாயி வந்தோன எல்லோரும் தண்ணியை போட்டுக்கிட்டு பாட்டு பாடற சீன்னு கிளாஸ், அதவும் அந்த கல்லு மாமான்னு நடிச்ச சுக்லா கண்ணுல போதை வழியறதை அழகா படம் புடிச்சிருப்பாங்க! பிறகு எப்படி ஹிந்தி சினிமா உலகம் தாதா கையிலே சிக்கிக்கிட்டிருக்குங்கறதை காமிச்சிருப்பாங்க! இது மாதிரி ஆளு வச்சு கொல்லுறதை 'சுபாரி' பாங்க ஹிந்தியிலே. அதை ஆப்ரேட் பண்றது எல்லாம் துபாய் மாதிரி இடத்திலருந்து, அது எப்படி ஆப்ரேட் ஆகுது, அப்புறம் கொலை பண்ற கூலி ஆட்களுக்கு துப்பாக்கி கூட புடிக்கத் தெரியாது, ஒரு பத்தாயிரம் கொடுத்தா கதையை கச்சிதமா முடிச்சிட்டு வந்துடுவாங்க, அப்படி வர்றப்ப மாட்டிக்கிட்டா அவங்களை போட்டு தள்ளறது எப்படின்னு சொல்லி படம் ரொம்ப சுவாரசியமா போகும்.

இந்த கதைக்காக ராம் கோபால் வர்மா ஆராஞ்ச வச்ச கதையை வச்சு ஒரு ஆறு ஏழு படம் இது மாதிரி எடுத்துட்டார். அதிலே இரண்டாவதா வந்த 'கம்பெனி', அப்படியே தாவூத் இப்ராகிம் கதை தான்! அதாவது தாவூத் இப்ராகிமுக்கும், அவன் முக்கிய கூட்டாளியான சோட்டா ராஜனுக்குமிடையே உண்டான கேங் வார் தான் அந்த கதை! அதிலே அப்படியே திரைக்கதை இவங்க கதை வச்சி பின்னுனது தான். ரொம்ப சுவாரசியமான ஒன்னு! பார்க்காதவங்க கண்டிப்பா கேசட் கிடைச்சா வாங்கி பாருங்க! இந்த படங்களுக்கும் தமிழ் வந்த புதுப் பேட்டைக்கும் வித்தியாசம், நம்மூர்ல தாதாவுக்கு கத்தி, வீச்சருவா மட்டும் தான், ஆனா இந்த பாம்பே பக்கம் எல்லாம், துப்பாக்கிங்க தான், அதுவும் கைத்துப்பாக்கிங்க விதம் விதமா! அந்த காலத்திலேயே நம்ம ஊர் எம்ஜிஆர் படமான நீரும் நெருப்பும் வந்தப்ப கத்தி சண்டை போட்டதை தான் காமிக்கப்பாங்க, ஆனா அப்ப வர்ற ஹிந்திப்படம் குதிரை, துப்பாக்கி தான் பிரதானம். அப்பலருந்து இப்ப வரை நம்ம கத்தியை கீழபோடல போலருக்கு!

அப்பறம் சத்யா படத்திலே வர்ற முதகாட்சிகள்ல அந்த சுபாரி கொடுத்த ஆளுங்களால ஒரு படத்தயாரிப்பாளர் சுட்டு கொல்லப்படுவது அப்படியே நிஜமான சம்பவம். அதாவது ஹிந்தி பாடல்கள் விக்கும் கேசட் இண்டஸ்ட்ரீயிலே அப்ப ரொம்ப பேமஸா இருந்த 'குல்ஷன் குமார்'னு ஒரு ஆளை போட்டு தள்ளுனது இதே மாதிரி தான்! அந்தாளு இந்த தாவூத் கும்பலுக்கு அடிபணியாம அவங்க கேட்ட எக்ஸ்டார்ஷன் தொகையை கொடுக்காத தாலே, போட்டு தள்ளுனாங்க, அதே மாதிரி இந்த படத்திலேயும் காட்சி அமைச்சு, காசுக்காக என்கிருந்தோ போன் வரும், அந்த புரட்யூசர், இல்லை நான அதெல்லாம் கொடுக்கமாட்டேன்னோன்ன அவரை போட்டு தள்றது இந்த குல்ஷன் குமார் எபிஷோட் தான்!

புதுப்பேட்டை படம் எடுத்துக்கிட்டா இப்படி நிஜ சம்பங்கள் பின்னனி எவ்வளவு இருந்ததுன்னு எனக்கு தெரியாது. ஏன்னா அந்த மாதிரி சம்பங்களை பிணைஞ்சு படம் எடுத்திருந்தாலும் அது லோக்கல் நியூஸா அடங்கி போயிருக்க வாய்ப்பிருக்கு! பெரிசா எதுவும் தெரியலை! அதனாலே கொஞ்சம் படம் சுவாரசியமில்லாம இருந்தது! ஆனா தனுஷ் நடிப்பு, சும்மா சொல்லக்கூடாது, வேணுங்கிறப்ப அழறதும், காட்டுத்தனமா கத்துறதும், அப்படியே ஆக்ரோஷமா கத்தி சுழட்டறதும் எல்லாமே நொடியிலே மாத்தி செஞ்சுக் காமிக்கிறதை நான் வேறே எந்த நடிகரும், இந்த இளவயது நடிகர்கள்ல பார்த்தது இல்லை! அதவச்சு பார்க்கிறப்ப, அந்த சத்யால வந்த பிக்கு மாத்ரே மாதிரி, மனோஜ் பாஜ்பாய் மாதிரி நடிச்சிருக்கிறது கொஞ்சம் ஒத்து போகுது!

அப்பறம் நமக்கே உரித்தான அந்த விபச்சார பெண்கள் சுழலல்ல கதை பண்ணிருக்கிறது வேணும்னா அப்படியே தமிழ் சினிமா ட்ரெண்ட்! செண்டிமெண்ட்டா சில காட்சிகள் வரணும்னு இந்த மாதிரி திரைகதை காட்சிகள் இன்னும் தமிழ் சினிமாவிலே எத்தனை காலத்து பண்ணுவாங்களோ தெரியாது. சத்யாவிலயும் மென்மையான காதல் துணைக்கதை நல்லா சொல்லி இருப்பாரு நம்ம வர்மா! அதில நடிச்ச ஊர்மிலா மட்டோங்கர் அப்படி ஒன்னும் ஆடாத பொண்ணுல்ல, அதை வச்சு செக்ஸியா ரங்கீலா பண்ணுன ஆளு தான் ராம் கோபால் வர்மா, ஆனா இந்த படத்திலே மென்மையான் காதல் ஒரு முரட்டு தாதாவுடன் வந்தப்ப, நம்ம புதுப் பேட்டை இந்த காதல் கல்யாண காட்சிகள்ல கொஞ்சம் சறுகல் தான்!

அதுவும், தான் கேங்கிலேயே இருக்கிறவன் தங்கச்சி கல்யாணத்து தலைவனா போயி தானே தாலி கட்றது, அப்பறம் தாலிகட்டனவளே தனக்கு கடைசியிலே வில்லத்தனமாகறது கொஞ்சம் புதுசா இருந்தாலும், அவ்வளவு அப்பீலா இல்லை. இதே போன்ற கல்யாண காட்சிகள் திரைக்கதையா வந்த சத்யா படம் எனக்கு ரொம்ப அப்பீலா இருந்துச்சு. கல்யாணத்தில தன் பொண்டாட்டியை சத்தாச்சுக்கிட்டு ஆடி பாடற பிக்கு மாத்ரே, அப்பறம் அமைதியா இருக்கும் சத்யா வரும் திரைகதை தொகுப்பு ரொம்ப் இயல்பா இருந்துச்சு பார்க்கிறதுக்கு! ஆனா தடாலடி கல்யாண காட்சி வர்ற புது பேட்டை அவ்வளவு ஜெல்லாகல்ல!

புதுப்பேட்டையிலே ஒரு சிறப்பா இருந்த ஒன்னு கதையிலே வச்ச ட்வுஸ்ட்ங்கதான், கதையின் யதார்த்தம், உள்ளதை உள்ளபடி எடுத்தது. அதுவும் ஃபேண்டஸி எதுவும் இல்லாம! இது தான் சிறப்பு இந்த படத்திலே! மேற்கொண்டு சில காட்சிகளை எடுத்து சொன்ன விதம், அதுவும் தனுஷவை கொண்டே எத்தனை குணாதிசியங்கள் கொண்டவன் அந்த தாதா, எல்லாம் வந்துட்டா ஆளு எப்படி, இல்லேன்னா அவன் எப்படின்னு சொன்னது புடிச்சிருந்தது. ஆனா நான் பார்த்து ரசிச்ச சம்பங்களின் கோர்வை, சத்யா படத்திலே இருந்த அளவுக்கு இந்த புதுப்பேட்டையிலே இல்லங்கிறது தான் உண்மை! நான் சொன்ன ஹிந்தி படம் நீங்க பார்க்கலேன்னா, அதையும் பார்த்துட்டு கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்தீங்கன்னா நான் சொல்றது புரியும்!

Wednesday, July 12, 2006

மரணம் தொட்ட தருணம்!

"என்ன, இங்கே நின்னுக்கிட்டிருக்கம்மா, சார்ட்டட் பஸ் மிஸ் ஆயிடுச்சா" என்று காரை மெதுவாக ஆபீஸுக்கு வெளியே ஓட்டிக் கொண்டு அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பின் வழியே போகும் பொழுது சேகர் கவிதாவை பார்த்து கேள்வி கேட்டு விட்டு அருகில் நிறுத்தினான்.

"ஆமா கொஞ்சம் லேட்டாயிடுச்சு வேலை முடிச்சு வர்ற, அதான்" என்று பதிலளித்தாள் கவிதா

"வேணும்னா நான் உங்க வீட்டு பக்கம் தான் போறேன், விட்டுடட்டுமா" என்று கேட்க சரி எனக்கூறி காரில் உள்ள முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள் கவிதா!

"நீங்க எப்படி லேட்டு சார்", கவிதா

"பிரகதி மைதானத்திலே எலெக்டரானிக் எக்ஸிபிஷன்ல நம்ம கம்பெனி ஸ்டால்லுக்கு போய்ட்டு அங்கிருந்து வர கொஞ்சம் நேரமாயிடுச்சு, அதான்"

"நாளைக்கு வேறே சண்டிகர் போகணும், இந்த வீக் எண்ட்ல என் வைஃபை பார்த்துட்டு வரலாமுன்னு இருக்கேன்!"

"அப்படியா, ஏதோ எம்டெக் படிக்கிறதா சொன்னீங்கள்ள!" இது கவிதா

"ஆமா ஊருக்கு போன வாரம் போயிருந்தேன், நிறைய சாமான் வீட்ல இருந்து கொடுத்து அனுப்பிச்சிருக்காங்க, சரி இந்த வாரம் போய் பார்த்துட்டு கொடுத்துவிட்டு வரலாம் என்று இருக்கேன், அதுவும் காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் ட்ரெயினு, எப்பவும் ஏழு மணி வண்டியிலே போவேன். இன்னைக்குன்னு பார்த்து அதுல டிக்கெட் கிடைக்கலே!"

"என்ன சார் அடுத்த வாரம் ஃப்ரான்ஸ் போறீங்க போல இருக்கு!" இது கவிதா

"ஆமா அதுக்கு தான் கனாட் பிளேஸ் போய் கொஞ்சம் அப்படியே ஈரோ ரயில்ல கொஞ்சம் எல்லா நாடுகளையும் சுத்தலாமுன்னு எல்லா விவரமும் தெரிஞ்சு கேட்க போயிருந்தேன், பிறகு அங்கிருந்து பிரகதி மைதான் போயிட்டு ஆபீஸ் திரும்ப லேட்டாயிடுச்சு, இப்ப வீட்டுக்கு போய் படுத்து காலையிலே சீக்கிரம் எழும்பனும்"

பேசி கொண்டே கவிதாவின் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, தன் வீடு நோக்கி காரை செலுத்தினான் சேகர்

-------


வீட்டை அடைந்து காரை பார்க் செய்து விட்டு மேலே உள்ள தன் அப்பார்ட்மெண்டுக்கு சென்றான் சேகர்.

வீட்டிற்கு சென்றவுடன் டெலிபோன் மணி அடித்தது, ரிஸீவரை கையில் எடுத்தவுடன்

"என்ன நாளைக்கு வர்றீங்கள்ள" மறுமுனையில் சேகரின் மனைவி

"ஆமா, வழக்கமா வர்ற சப்தாபதி கிடைக்கலே, ஹிமாச்சல் எக்ஸ்பிரஸ்ல தான் டிக்கெட் வாங்கி இருக்கேன், காலையிலே அஞ்சு மணிக்கு ட்ரெயின், எழுந்திருச்சு ஓடணும், இப்பவே மணி பத்தாக போகுது, எப்ப தூங்கி, நான் எப்ப எந்திருக்க போறேன்னு தெரியலை!" இது சேகர்

"சரி வீட்டை எல்லாம் பத்திரமா பூட்டி, லைட் எல்லாம் அணைச்சிட்டு வாங்க!"

"காலையிலே சீக்கிரமாவே வந்தவுடுவேன், நீ சொன்ன மாதிரி ராக் கார்டன் போய்ட்டு வந்துடுவோம், குளிச்சிட்டு தயாரா இரு, நான் வந்தவுட்டு உன் அலங்காரமெல்லாம் வச்சுக்காதே!"

"சரி ஸ்டேஷன் வந்தவுட்டு போன் பண்ணுங்க"

பேசி முடித்துவிட்டு, அதுவரை அடுத்த வாரம் செல்ல இருக்கும் ஃப்ரான்ஸ் பயணத்திற்கும், ஈரோ ரயிலில் எல்லா ஐரோப்பிய நாடுகளையும் சுற்றுவதற்காக வேண்டிய பிளான்கள், மேப்புகள் எல்லாம் பார்த்துவிட்டு தூங்க போகும் பொழுது மணி ஒன்றாகி விட்டது. தூக்கம் வராமல் சேகர் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

'காலையில் நாலு மணிக்கே எழுந்திருச்சா தான் நியூடில்லி ஸ்டேஷன் போய் அஞ்சு மணி ட்ரெயின் புடிக்க சரியாக இருக்கும்' என எண்ணிக் கொண்டே அப்படியே கண்ணயர்ந்தான் சேகர்.

-------


காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு டாக்ஸியை பிடித்து நியூடில்லி ஸ்டேஷன் சென்றடைய சரியாக இருந்தது. ரயில் புறப்படும் தருவாயில் இருந்தது! சரி காலங்கார்த்தாலே ஒரு சாயா குடிக்கலாம் என்று டீ ஸ்டாலுக்கு சென்று டீ குடித்து விட்டு, காலை பத்திரிக்கை வாங்கிக் கொண்டு அப்படியே குஷ்வந்த் சிங் எழுதிய ஒரு குரு நாவலையும் வாங்கி கொண்டு தன் ஏஸி கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொண்டான்!

குஷ்வந்த் சிங் கதைகள் என்றாலும் இல்லை கட்டுரைகள் என்றாலும் விரும்பி படிக்கும் பழக்கம் கொண்டவன் சேகர். அந்த கிழம் வயதிலும் செக்ஸ் பற்றி எழுதும் அவர் எழுத்துக்களை விரும்பி படிப்பவன் சேகர்! அப்பொழுது தான் சுட சுட வெளிவந்த அந்த ஆங்கில நாவலை கடையில் வாங்கிய கையோடு அதன் முன்னோட்டத்தை படிக்க தொடங்கிவிட்டான். கூடவே அன்றைய நியூஸ் பேப்பர் வாங்கி இருந்தாலும், அதில் உள்ள தலைப்புச் செய்தியை விட குஷ்வந்த் சிங்கின் நாவலில் சுவாரசியமாக லயித்துப் போனான். எப்பொழுது சீட்டில் வந்து உட்கார்ந்தோம், வண்டி எப்பொழுது நகர்ந்தது என்று தெரியா வண்ணம் முதலில் முன்னோட்டம் மட்டும் படித்துவிட்டு கொஞ்சம் நியூஸ் பேப்பரை மேய்ந்து விட்டு பிறகு நாவலை தொடரலாம் என்றிருந்தவனுக்கு, நாவலின் சுவாரசியத்தால், முழுவதும் நாவலில் மூழ்கிப் போனான்!

-------


அது விரைவு வண்டியாக இருந்தாலும், பானிபட்டு ஸ்டேஷனில் கொஞ்சம் நேரம் நின்றது! தொடர்ந்து நின்று கொண்டிருந்ததால், காலையில் டிபன், சாயா விற்கும் பையன்களின் கூக்குரலாலும், சற்றே கலைந்து, நாவலை வைத்து வைட்டு, சிறிது பசி மயக்கம் போல் தெரிந்ததால் தானும் டீ, பிரெட், ஆம்ப்லெட் என வாங்கி தின்று விட்டு மீண்டும் நாவலை படிக்க துவங்கினான்

வண்டி நகர்ந்ததும், ஏஸியின் அட்டகாச சுகத்தால் அந்த சேர் கார் என்ற கம்பாண்ட்மெண்டில், அத்தனை சுவாரசியமான நாவல் தொடரிலும் சற்றே கண் அயர்ந்தான். பொதுவாக இது போன்ற ரயில் பயணங்களில் ஒரு சிலரை போல சேகருக்கு உறக்கம் என்பது அவ்வளவு விரைவாக வந்து விடாது. அதுவும் சென்னையிலிருந்து டில்லி பயணிக்கும் போதெல்லாம் இரண்டு இரவுகளை மிகவும் கஷ்டப்பட்டு கழித்து எப்பொழுது சென்னையோ, இல்லை டில்லியோ வந்தடைவோம் என்றிருப்பான். ஆனால் இன்று முந்தய நாளின் அலைச்சல், நேரம் தாழ்ந்து இரவில் உறக்கமின்றி மிகவும் தாமதமாக தூங்கி, காலையில் சீக்கிரம் விழித்ததால் என்னவோ அப்படியே தூக்கம் கண்ணை சுழட்ட, நித்தரையில் ஆழ்ந்து போனான்.

எப்பொழுதும் சேகருக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. அதாவது சக பிரயாணியுடன் சகஜமாக சிநேகம் செய்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு வருவது வழக்கம்! எங்கிருந்து வருகிறோம், எங்கே போகிறோம் என்ற தகவல்களுடன், அனைத்து விவரங்களுடன் தானும் சக பிரயாணியும் ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டு பயணம் செய்யும் அளவுக்கு பரிச்சியமாகிவிடுவான். ஆனால் இம்முறையோ பக்கத்து சீட்டு நபர் யார் என்று பார்க்காமல் நாவல் படித்துக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தான்!

-------


கண் விழித்து பார்த்தபோது, ரயில் வண்டி சண்டிகரை வந்தடைந்து நின்று கொண்டிருந்தது. எல்லா பயணிகளும் கீழே இறங்கி விட்டனர், ஓரிருவரை தவிர! வண்டி சண்டிகரிலிருந்து ஹிமாச்சல் பிரதேச நகரமான கல்காவை நோக்கி நகர்ந்தது!

திடீர் என்று கண் விழித்ததால், இறங்கவேண்டிய இடம் சண்டிகரை தாண்டி ரயில் செல்லுவதால், பதட்டத்துடன், எப்படியும் ஸ்டேஷன் வெளியே வந்து விட வேண்டும் என மேலே உள்ள தனது பெட்டியினையும், பையினையும் எடுத்துக் கொண்டு தான் என்ன செய்கிறோம் என்ற சமயோஜிதமின்றி, மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் ட்ரெயினிலிருந்து கீழே இறங்க ஆயுத்தமானான்!

அப்படி பதட்டத்துடன் ஓடும் பொழுது ஒரு பெரியவர் ஒருவர் சற்றே அவன் வழிப்பாதையில் , கம்பார்ட்மெண்ட்க்குள் வழிமறித்தும், அவரையும் ஒதுக்கிக் கொண்டு வேகமாக கம்பார்ட்மெண்டின் கதவிற்கு ஒடிச் சென்று, ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்து ரயிலுடன் தொடர்ந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தான்.

இது போன்று ஓடும் ரயிலில் கீழே இறங்குவது, அவன் பாம்பேயில் இருந்த பொழுது, எலெக்ட்ரிக் ட்ரெயினில் கீழே குதிப்பது சேகருக்கு மிகவும் கைவந்த கலையாகும். ஆனால் அது தன் வாலிப வயதில் நடந்து முடிந்து ஒன்று அதுவும் ஒரு பத்து வருடங்களுக்கு முன்! இப்போது அது போன்ற வித்தைகள் ஏதும் பழக்கத்தில் இல்லை, ஆனால் இறங்க வேண்டுமென்ற ஏதோ ஒரு தூண்டுதலால் கீழே குதித்தான்

அவன் துரதிர்ஷ்டம், ஏஸி கம்பார்ட்மெண்ட், இஞ்சினிலிருந்து இரண்டாவது பெட்டி, அப்படி கீழே இறங்கி ஓடும் பொழுது, தீடீரென ஸ்டேஷன் பிளாட்பாரம் முடிவடைந்து சற்றே சறுகலான பாதையில் பாதத்தின் அடுத்த அடியை எடுத்த வைத்த போது தன் நிலை தவறி கீழே விழுந்து சரியாக தண்டவாளத்தின் விளிம்பில் படுத்துக் கிடப்பதை கொஞ்சம் தாமதமாக உணர்ந்தான். அவன் அருகிலே ரயில் வண்டியின் சக்கரங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை பார்த்த பொழுது மரண பயம் உண்டாகியது. சற்றே தலை நிமிரலாம் என முயற்சித்த போது ஒடும் ரயில் பெட்டிகளின் படிகட்டுகள் நகர்ந்து தோள்பட்டையை தாக்கிய வண்ணம் இருந்த தால் மறுபடியும் கீழே குனிந்து அப்படியே தன்னை குறுக்கி படுத்துக் கொண்டான்.

அப்படியே கையை கொஞ்சம் நீட்டினாலும் தண்டாவாளத்தில் ஓடும் சக்கரங்களுக்கு இடையிலே கொடுத்து துண்டிக்க வேண்டியது தான், சரி சற்றே நகர்ந்து விடுவோம் என முயற்சித்தால் மேலே கடக்கும் படிகட்டுகளின் நங் என்ற இடி, ஆகா இன்று நம் கதை முடிந்து விட்டது எனக் கூனிக்குறுகி அத்தனை ரயில் பெட்டிகளும் தன்னை கடந்து செல்லும் அந்த தருணம் தான் மரணத்தை தொட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை! நன்றாகவே தெரிகிறது எப்படி பட்ட ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று! கரணம் தப்பினால் மரணம் என்பதை முழுவதுமாக உணர்ந்த அந்த மரணம் தொட்ட தருணத்தை எண்ணி பார்க்கும் பொழுது, ரயில் பெட்டிகள் தன்னை கடந்த பின் முழுவதுமாக நிமிர்ந்த பொழுது தான் அவனுக்கு தெரிய வருகிறது நாம் மரணத்தின் எவ்வளவு அருகாமையில் இருந்து அதை தொட்டு பார்த்து விட்டு வந்திருக்கிறோம் என்று!

எல்லாம் முடிந்த பின் மரணபயம் என்பது நீங்கி, நாம் பிழைத்துவிட்டோம் என தலை நிமிர்த்தி முழு உடம்பையும் மேல் எழுப்பி, காலை கீழே வைக்க முயற்சிக்கையில் தான் இடது காலிருந்த பாதத்தின் பெரும் பகுதி சிதைந்து போனது தெரிய வருகிறது! ஐயகோ இப்படி கால்கள் ஆகிவிட்டதே என்று இருந்தாலும், சரி முழு சக்தியையும் திரட்டி எப்படியும் மீதமுள்ள இடது காலின் குதிகால் துணைக் கொண்டும் கைகளை தரையில் ஊன்றி மேலே எழும்ப முயற்சிக்கும் பொழுது தான் தெரிந்து, இடது தோள்பட்டை குள்ளே உள்ள மூட்டு கீழே சரிந்து அதனால் ஏற்பட்ட வலியால் மேலே எழும்ப திராணியின்றி கீழே விழுந்து கிடக்கிறோமென்று!

எதுவும் செய்ய இயலாத நிலையில் கூடி நின்ற கும்பலை மன்றாடி அழைத்து தன்னை தூக்கி ஆட்டோவில் ஏற்றி ஏதாவது பக்கத்தில் இருக்கும் மருத்தவமனைக்கு எடுத்த செல்ல எத்தனிக்கின்றான் சேகர். அவன் மேல் கருணை கொண்ட சிலர் ஆட்டோவில் ஏற்றி அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதல் உதவிக்கு எடுத்து செல்ல, முதல்சிகிச்சை அளித்து விட்டு அந்த மருத்தவ நிர்வாகம், அதைவிட வசதி மிகுந்த மருத்தவமனைக்கு எடுத்து செல்ல சொல்கிறது. அப்படியே அங்கு கூடி நிற்பவர்களிடம் தன் மனைவிக்கு தெரியபடுத்த சொல்லி தொலைபேசி எண்களை கொடுத்து விட்டு தானே மற்றவர்கள் உதவியுடன் அந்த பெரிய மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை எடுக்க ஆயுத்தமாகிவிடுகிறான்!

மரணம் என்பது மனிதனை தொட்டு தழுவும் வரை தான் அந்த பயம், ஆர்பரிப்பு எல்லாமே, கொஞ்சம் போல நாம் பிழைத்துவிடக்கூடும் என நமக்குத் தெரிந்தால், மிகப்பெரிய தன்னம்பிக்கை வந்து மரணம் தொட்ட தருணத்தை பார்த்துவிட்டு மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு சேகரை போல வந்து விடுபவர்கள் நிறைய உண்டு! அய்யகோ நமது ஃபிரான்ஸ் பயணம் முடியாமல் போகிவிட்டதே, இது போல் மருத்துவமனையில் ஆறுமாதம் கழிக்க நேரிட்ட்தே என மனம் அல்லாடும்! ஆனால் அந்த மரணம் வந்த தருணம், எதுவுமே இல்லை, நாம் இப்பூவுலகை விட்டு போகப் போகிறோம் என்ற நினைப்பே மேலோங்கும்! அது போல மரணம் சந்தித்தவர்கள் மீண்டும் மரணத்தை சந்திக்க பயப்படமாட்டார்கள்

-------


தேன்கூடு + தமிழோவியம் (ஜூலை 2006 - மரணம்) போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

Tuesday, July 11, 2006

The Phantom of the Opera- திரைக்குப்பின்னே!

இந்த ம்யூசிக்கல்ஸ் பத்தி ஏற்கனவே 'பாம்பே ட்ரீம்ஸ்' னு பதிவுப் போட்டப்பவே கொஞ்சம் சொல்லி இருந்தேன்! அப்பவே இந்த 'The Phantom of the Opera' பத்தி சொல்லி இருந்தேன்! அந்த இசை நாடகத்தை போனவாரம் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைச்சிது! இது சும்மா பட்டையை கிளப்பிக்கிட்டு இங்கே அமெரிக்கா, கனடாவிலேயும், அப்புறம் இங்கிலாந்திலேயும் ஒடிய ஒரு இசை நாடகம்! உங்கள்ல எத்தனை பேருக்கு இதபத்தி தெரிஞ்சிருக்குமோ, இல்ல போய் பார்த்திருப்பீங்களோ எனக்குத் தெரியாது! ஆனா, இந்த இசை நாடகம் பாம்பே ட்ரீம்ஸ் மாதிரி நம்ம ஊரு மசாலாவோட வந்த கதையில்லே! இது அந்த காலத்திலே, அதாவது 1900களில் இந்த 'Opera'ங்கிறது ரொம்ப பிரசித்துப் பெற்ற ஒரு இசை பாடல் தொகுப்பு, பிறகு அதோட நடனமும் சேர்ந்து ரொம்ப பாப்புலரான ஒன்னு. இது தோன்றினது பிரான்சு நாட்லதான்! அப்புறம் இது இத்தாலி நாட்லயும், ஜெர்மனியிலேயும் பரவ ஆரம்பிச்சி, பிறகு இங்கிலாந்துக்கும் போய் பிரசத்திம் பெற்ற ஒரு கலை! நம்ம ஊர்ல அந்த காலத்திலே உச்சஸ்தாயிலே சின்னப்பா, பாகவதர் பாடின பாடல்கள் மாதிரி, ஒரு மாதிரி இழுத்து அடித்தொண்டையிலேயிருந்து மூச்சு விடாம பாடனும்! இதுக்கு தனித் திறமை வேணும்! அப்படி 'Opera' பாடல்களோட சேர்த்து அழகா தொகுத்த ஒரு கதை, அதுவும் நாடகம் போடும் கோஷ்டி, அந்த 'Opera' நடக்கும் நாடக அரங்கத்தின் கீழே பேய்னு சொல்லிக்கிட்டு தன்னுடய முக உருவத்தை மறச்சி வச்சிக்கிட்டு இருக்கக்கூடிய ஒருத்தனுக்கு, இந்த 'Opera' இசை நிகழ்ச்சிக் கேட்டு கேட்டு இந்த இசை ஞானம் வந்து அத வச்சி கதாநாயகிக்கு கத்து கொடுத்து, அப்பறம் தன்னை காதலிக்க சொல்லி அந்த பேய் வற்புறத்த, மறுத்து காதலனோட திருப்பி ஒன்னு சேர்ற மாதிரி அப்படி இப்படின்னு கதை போகும்! ஆனா கதையைவிட இந்த நாடகத்தின் திரை மறைவிலே இருந்த டெக்னிக்ல சமாச்சாரங்களை படிக்கும் போது நம்ம ஆர் எஸ் மனோகர் போட்ட நாடகம் மாதிரி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோட பார்த்த திரில்! ஆர் எஸ் மனோகர் நாடகங்களை விட டெக்னிக்லா கம்ப்யூட்டர் உதவியோட காட்சிகள் அமைத்து நடைபெற்ற இந்த நாடகத்தை பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!

இந்த Opera பத்தி சொல்லுனும்னா சின்னவயசிலே நான் அனுபவிச்ச சில விஷயங்களை சொல்லியாகனும்! நான் அப்ப எட்டாவது படிச்சிக்கிட்டிருந்த நேரம், நாங்க குடியிருந்த வீட்டுக்காரங்களோட பெரிய மகனனொருத்தர் காலங்காத்தால ரேடியாவை சத்தமா வச்சிக்கிட்டு இந்த Opera மாதிரி பாட்டை தான் கேட்பாரு! ஒ..ஏதோ இங்கிலீஷ் பாட்டைத்தான் கேட்கிறாருன்னு நானும் ஆர்வமா கேட்பேன். நானும் அந்த மாதிரி ரேடியாவெல்லாம் திருகி திருகி அந்த ஸ்டேஷனை வச்சி அந்த பாட்டை கேட்க முயற்சிப்பேன்,ஆனா ஒரு எளவும் வராது, அந்த மாதிரி பாட்டை போடற ஸ்டேஷனை எங்கடான்னு ஒன்னும் தெரியாம முழிப்பேன்! என்ன திருகியும் ஒன்னும் வராது! அப்ப எனக்குத் தெரியிலே இந்த Opera பத்தி! அதே மாதிரி கொஞ்சம் வயசுப்பையனான்னே, இந்த மாதிரி சத்தமா ரேடியாவை அலற வுட்டுக்கிட்டு இங்கிலீஷ் பாட்டு போட்டுக்கிட்டு தெருவுக்கே கேட்கிறமாதிரி வைப்பேன். நம்ம ஒன்னும் கேட்கிறதில்லை, அது புரியப்போறதுமில்லை! அப்ப நம்ம வீட்டை கடந்து சில பிகர்ங்க போய் வரும், அதுங்க கவனத்தை கவர, ஓ.. இந்த வீட்டு பையன் இங்கிலீஷ் பாட்டெல்லாம் கேட்பாருடின்னு, சில பொண்ணுங்க அப்படி இப்படி நம்ம வீட்ல நம்மல தேடி கண்ணு மேயும்! வாலிப கிறுக்குன்னு சொல்ற மாதிரி இந்த சேஷ்டை எல்லாம் பண்ணியிருக்கேன்! அது சட்னு ஞாபகம் வந்துச்சு, அதான் எழுதிப்புட்டேன்! சரி விஷயத்துக்கு வருவோம்!

இந்த The Phantom of the Opera இசை நாடகத்துக்குன்னு ஏகப்பட்ட சீன் செட்டிங்கஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் செஞ்சிருக்காங்க! இந்த நாடகத்திலே ஒரு சாண்டிலியர், அதான் பெரிய மஹால்ல எல்லாம் தொங்குமே, விளக்குச்சரம், அதான், அதை அப்படியே கீழே இருந்து மேலே ஏத்திக்கிட்டு போவாங்க அதை கொஞ்ச தூரம் பார்வையாளர்கள் உட்கார்ந்திருக்கிற பகுதிக்கு மேலே தானா எம்பி மேலே போகும், ஏதோ மேஜிக் மாதிரி இருக்கும்! ஒரு பெரிய தேவதைகளின் வெண்கல சிலை மேடையின் நடுவே தொங்க விட்டு அந்த Opera அரங்கத்தின் கூரை மேலே இருப்பது போன்ற காட்சி அமைப்பு! அதேமாதிரி திரைச்சீலைகள் 2700 முழம் நீளத்திலே இருக்க க்கூடிய விலைமிகுந்த திரைச்சீலைகள் ('Draperies') எல்லாம் அந்த விக்டோரியா காலத்தில் அவர் மாளிகையில் இருந்த பெரும் திரைச்சீலைகள் நாடகத்தின் முழுதும் உபயோகப்படுத்தி இருந்தாங்க! மிகப்பெரிய அரண்மனை தூண்கள் செட்டிங் செஞ்சு அதற்கு பின்புறம் ஏணிப்படிகள் அமைத்து, அதாவது பார்வையாளர்காளுக்கு தெரியாத வண்ணம், அந்த Phantom னு சொல்லக்கூடிய பேய் தோன்றி மறைவதற்காக ஏறி செல்ல வசதியா செய்து வச்சிருந்தாங்களாம்!

ஒரு சீன்ல இந்த Phantom னு சொல்லக்கூடிய பேய், கதாநாயகியை படகில் அழைத்து வருவது போன்ற காட்சி, அதற்காக பத்து புகை மூட்டம் ஏற்படுத்தக்கூடிய fog மெஸின்களை வச்சி அதை பைப் மூலமா பீச்சீ அடிச்சி புகை மூட்டத்தை உண்டாக்கி அதிலே அப்படியே படகினை ரிமோட் கண்ட்ரோலால் இயக்கி, அதை செலுத்தி, அவங்க ரெண்டு பேரும் வருவது போல காட்சி அமைத்திருப்பார்கள்! மேடையின் மேலே ஒரு இஞ்சுக்கு இன்னொரு பலகையில் ஆன மேடையை அமைத்து, அதற்குள் மெழுகுவர்த்தி போன்ற சிறிய விளக்குகளை மறைத்து வைத்து அதை "Phantom's Lair" என்ற பாட்டு வரும் காட்சியில் அழகாக உயர்த்தி எரிய வைத்து அப்படியே மின்மினி பூச்சிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றொன்றாக எரிய வைத்து அப்படியே மேஜிக் போன்ற வித்தை காட்டி இருப்பார்கள். அவை அத்தனையும் இயக்க கம்ப்யூட்ர் கண்ட்ரோலால் உயர்த்தி அப்படியே ஆச்சிரியபட வைத்து விடுவார்கள்!

அதே போல மேடையின் உள்ளே 'Travelator' என்கிற 'elevator cum Platform' போன்ற பிரிட்ஜ் ஒன்றை அமைத்து காட்சிகளுக்குத் தேவையான பாலத்தையோ, இல்லை சுடுகாட்டில் இருக்கக் கூடிய சமாதி மற்றும் சிலுவைகளையோ, இல்லை மேலேயும் கீழேயும் காட்சி பொருள்களை எடுத்து செட்டிங்ஸ் செய்து காட்சிகளுக்கு ஏற்ப அதை அமைக்க எலெக்டிரிகல் மோட்டரால் இயங்க கூடிய இந்த 'Travelator'ஐ உபயோக படுத்தம் பொழுது எனக்குத் தெரியவில்லை, 'எப்படி கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகளை மாற்றுகிறார்கள் என ஆச்சிரியப்பட்டுக் கொண்டிருந்தேன்'. இதன் பின் உள்ள இந்த 'Travelator'சூட்சமம் தெரிந்தவுடன் தான் எல்லாம் விளங்கியது! அதே போல காட்சிகளுக்கு தேவையான சீன்கள் கொண்ட படுதாவை மிக உயர்ந்த நிலையில் வைத்து, அதாவது ஸ்டேஜின் மேலே மிக உயரத்தில் வைத்து 'Counter weight/Fly system' என்கிற அமைப்பால் காட்சிக்குத் தேவயான படுதாவை ஏத்தி இறக்கி, நொடிப் பொழுதில் காட்சிகளை கொண்டு வருவதும், அதே போல் மேடையிலே கண் மூடி கண் திறக்கும் முன் நடிக்கும் நடிகர்களின் உடைகள் மாறி என்னவோ சினிமாவில் காட்சிகள் மாறுவது போல இருந்தது!

ஸ்டேஜ் மேனேஜர் என்கிறவர் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு 350க்கும் மேற்பட்ட அடிகளையும்(நம்ம ஊர்ல ப்ராம்ட்ம்பாங்க, இங்கே 'Cue') எடுத்துக்கொடுத்து அவர்களை இயக்க வேண்டும். அதே போல மூன்று கேமிராக்களை மறைவான இடத்தில் மறைத்து வைத்து மேடையில் என்ன காட்சிகள் எப்படி நடக்கிறது, எதில் என்னக் குறை இருக்கிறது என்பதை மேடைக்கு பின்னே அமர்ந்து அதை மானிட்டர்களில் கண்காணித்து உடனுக்குடன் தவறுகளை திருத்தம் செய்து, காட்சிகள் நன்றாக நடந்தேறிவிட்டனவா, கேரக்டர்கள் சரியாக வசனமோ, பாட்டோ டைமிங்கில் சொல்லி விடுங்கின்றனரா, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பொருட்கள், காட்சிக்கு தகுந்தாற் போல் வருகின்றனவா என கண்கானித்து, இல்லை எனில் அதை செம்மை செய்து, எந்த குறையுமில்லாமல் நாடகத்தை நடத்துகிறார்கள் என்று பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சிரியம் தாளவில்லை! அதே போல 'Pyrotechnic effects' என்று சொல்லக் கூடிய விளக்குகளின் ஜாலம், அதாவது 'flash light' கதிர்களை விழச் செய்ய அரங்கத்தில் 14 இடங்களிலிருந்து, அதாவது '14 flashPots' உபயோகித்து காட்சிகளை அந்த இருண்ட நாடக அரங்கத்திலே செய்து காட்டியப் பொழுது என்னமோ ஷங்கர் பட பிரமாண்டம் போல் இருந்தது!

இதை எல்லாம் நாடகம் போட்டவன் என்ற முறையில் எனக்குத் தெரியும் எவ்வளவு கஷ்டமான காரியம் என்று! வெரும் துணுக்கு தோரணங்களான எஸ் வி சேகர் போன்றோரின் நாடகங்கள் எல்லாம் கேரெக்டர்கள் வந்து பேசி ஆடியன்ஸை சிரிக்க வைத்து விட்டு போய்விடுவார்கள். அதற்கு ஏன் மேடை ஏற வேண்டும்!தெருக்கூத்திலே எல்லாவற்றையும் செய்து காட்டி விடலாம்! கஷ்டபட்டு செட்டிங்ஸ் போன்ற அதிசியக்க கூடிய சரித்திர நாடகங்கள் போட்ட ஆர் எஸ் மனேகரின் நாடகங்கள் தான் எனக்கு இதை பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வந்தது! ஏனென்றால் நாங்களும் எங்கள் கல்லூரி காலத்தில் இந்த பேக் ஸ்டேஜ் டைரக்ஷனுக்காக நிறைய கஷ்டபட்டிருக்கிறோம்! அந்த காலத்தில் ஸ்ட்ரோப் லைட் வைத்தும், ஆர்க் லைட், மற்றும் ஒன்னு இரண்டு ஸ்பாட் லைட் வைத்து விளக்கு கதிர்களின் மூலம் காட்சிகளின் பிரமாண்டத்தை கொண்டுவருவதற்காக ஏக பாடு பட்டிருக்கிறேன்! அதனால் சொல்கிறேன், இந்த நாடகத்திற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் என்னை உண்மையிலேயே பிரமிக்க வைத்தது!

இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் இவர்கள் ஊர் ஊராக அதே காட்சி அமைப்புகளை கொண்ட மேடை அமைக்க இவர்களுக்கு குறைந்தது நான்கு மாதங்களாவது பிடிக்குமாம். என்னமோ சர்க்கஸ் எடுத்துக்கிட்டு ஊர் ஊராக கூடாரமிட்டு நிறுவது போல! ஆக அமெரிக்கா வாழ் தமிழ் ஜனங்களே, உங்க ஊர் பக்கம் இந்த நாடகம் வந்தா கண்டிப்பா, நான் சொன்ன இந்த நாடக தொழில்நுட்பங்களை பார்த்து பிரமிக்க முடிஞ்சா போய் ஒரு எட்டு இதை பார்த்துட்டு வாங்க! இல்ல நியூயார்க் பக்கம் வரும் நம் மக்களே டைம்ஸ் ஸ்கொயர் பக்கம் இருக்கும் பிராட்வே தியோட்டரில் இது ஒடிக்கிட்டிருந்த போய் பாருங்க! அதே மாதிரி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து , சிங்கப்பூரில் எல்லாம் வந்து போட்டாங்கன்னா இந்த தொழில்நுட்ப அதிசியத்துகாகவே போய் பார்க்கலாம். நம்ம ஊரில் இப்ப நாடகங்கள் அவ்வளவா சிறப்பா இருக்கிறதில்லை, அதுவும் ஆர் எஸ் மனேகரின் மறைவுக்குப் பிறகு, இது போன்ற அதிசியக்க கூடிய நாடகங்கள் யாரும் தமிழில் போடுதில்லை! ஏன் நாம் இது போன்ற கேளிக்கைகளில் வளர்ந்த தொழில்நுட்பங்களை உபயோக படுத்துவதில்லை என்பது தெரியவில்லை! வெறும் வசனங்களையே எத்தனை நாள் தான் நம்பிக் கொண்டிருப்பது?

PS: சாம்பிளுக்கு, ஆர் எஸ் மனோகர் நாடக விமரிசன சுட்டி இதோ!

Monday, July 10, 2006

ஜானி-ரஜனி,ஸ்ரீதேவி,பிரேமி வரும் பாடல் காட்சி!

ஜானி படத்தை பத்தி நான் ஏற்கனவே 'எனைஆண்ட அரிதாரம்-ஆறாம் பகுதியிலே' எழுதி இருந்தேன்! விஷவலா கதை சொல்ல அப்ப மகேந்திரன் வந்திருந்தாருன்னு! அப்புறம் 'சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்'ங்கிற பதிவிலே இப்ப இருக்கக்கூடிய ஒளிப்பதிவாளர்களுக்கெல்லாம் முன்னோடி அஷோக் குமார்ன்னு எழுதி இருந்தேன். நேத்து திருப்பி ஜானி படம் பார்க்கிற வாய்ப்புக்கிடைச்சது. படம் பார்த்தோன நான் அந்த காலத்துக்கே போய்ட்டேன்! அவ்வளவு அருமை! கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அந்த காட்சிகளோட தாக்கம் இன்னும் இருக்கு! அதான் அழகா படம் புடிச்ச 'என் வானிலே'ங்கிற பாட்டை உங்களுக்காக இங்கே வீடியோ கிளிப் ஒன்னு போட்டிருக்கேன், பாருங்களேன், நான் சொன்னது உங்களுக்குப் புரியும்!

ரஜினி கொள்ளை அடிக்கிறதை விட்டுட்டு, ஸ்ரீதேவி பாட்ல மயங்கி, பூகொத்து கொடுக்க முடியாம போயி, ஒரு பூந்தோட்டத்தையே ஸ்ரீதேவி வீட்டுக்கு அனுப்பி வைப்பாரு! அப்புறம் பீச்சில அவரு பாடன பாட்டை ரஜினி கேட்டுக்கிட்டு இருக்கிறப்ப, அவரை பிரத்யோகமா தன் வீட்டுக்கு அழைச்சி அவருக்காக மட்டுமே பாடக்கூடிய பாடல் இது! இதிலெ சிறப்பு என்னான்னா, வீட்டுக்குள்ளேயே கேரக்டர்களை காமிக்கிற அழகு, அப்புறம் ஸ்ரீதேவிக்கு துணையா இருக்கிற பிரேமியைக்கூட அழகா எடுத்திருப்பாரு! கண்ணத்திலே கைவச்சி அழகா ஸ்ரீதேவி பாட்டை ரசிக்கிறதாகட்டும், இல்லை ரஜினியை க்யூட்டா காமிச்சிறக்கதாகட்டும். அப்புறம் ஸ்லோ மோஷன்ல ஒடி காட்சிகளின் கோர்வை ஆகட்டும், அப்புறம் அழகா கடற்கரையிலே பியனோ வாசிச்சுக்கிட்டு பாட்டு பாடி அதை ரஜினி ரசிக்கிறதாகட்டும், நீங்க உங்களையே மறந்து அப்படியே ஒன்றி போய்டுவீங்க! இது இப்ப இந்த மாதிரி காட்சிகள் அமைக்கிறது புதுசா இல்லாம இருக்கலாம், ஆனா ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னே நினைச்சிப்பாருங்க!

நான் எழுதின மாதிரி அடிக்கடி அந்த 'Depth of field and focus' டெக்னிக்ல காட்சிகளின் கட்ஸ் வரும்! நல்லா கவனிச்சு பாருங்க! ஸ்ரீதேவியின் கள்ளம் கபடமில்லாத குழந்தை தனமான மூஞ்சு! இதெல்லாம் அப்புறம் முக்கு சரி பண்றேன்னு கெடுத்துக்கிட்டு அசிங்கம் பண்ணிக்கிட்டதாலே அப்பறம் எனக்கு ஸ்ரீதேவியை பார்க்கவே புடிக்கல! ம்..'ஜால்பாஸ்', 'Mr India'யாவிலே ஷிபான் சாரி கட்டிக்கிட்டு சீத்துருவா வந்தப்ப செக்ஸ்வல் அட்ராக்ஷன்ல வேற மாதிரி நினைப்பு வந்தது என்னமோ உண்மை தான்! ஆனா இந்த பதினாரு வயதினிலே, ஜானி படம் சின்னபுள்ள மூஞ்சி மனசுல பச்சக்னு ஒட்டிக்கிட்ட மாதிரி இல்லங்கிறது தான் இங்க நான் சொல்ல வர்றது! ம்..என்ன இருந்தாலும் அந்த காலம் திரும்பி வருமா!

சரி இவ்வளவு சொல்லிட்டு நம்ம இளையராஜாவை சொல்லலேன்னா எப்படி! சூப்பரா இந்த படத்திலே கிளப்பி இருப்பாரு! அதென்னமோ தெரியிலே மகேந்திரன் படத்துக்குன்னு பிரத்யோகமா ம்யூசிக் போட்டு கொடுத்துடுவாரு அப்ப எல்லாம்! அதுவும் ஜென்ஸி ஆண்டோனிங்கிற அம்மாவும் சும்மா தூள் கிளப்பன நேரம் அப்ப! அவங்க பாடின பாட்டு தான் இது, 1980ல வந்த படம் இந்த படம்! அநத காலகட்டத்திலே காலேஜ் படிச்சி திரிஞ்ச நம்ம சினேகதங்கெல்லாம் வந்து பாட்டை பார்த்துட்டு எப்படி இருந்தது உங்க காலம்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க! முக்கியமா தாணுவும் மதுமிதாவும் வந்து பார்த்துட்டு பின்னோட்டம் போட்டு குரல் கொடுங்க!

சரி ரொம்ப போரடிக்கல்ல, பாட்டை பார்த்துட்டு, பார்க்காத சின்னபுள்ளங்க எப்படி இருந்துச்சுன்னும் எழுதுங்க! என்ன சரியா!

Saturday, July 08, 2006

ஜஸ்பர் காடுகளில் கோடை விடுமுறை இம்முறை!

என்னடா ரொம்ப நாள் ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருந்திருப்பீங்க! போன வாரம் ஒரே வேலைப்பளு! அதற்கப்பறம் விடுமுறைன்னு சொல்லி நடுவில கண்டம் சுத்திப் பார்க்க கிளம்பியாச்சு! அதான் வட அமெரிக்காவை தான் சொல்றேன்! நான் சின்னப்பிள்ளையா இருந்தப்பவே இந்த சரித்திர, பூகோளம் பாடம் படிக்கிறப்ப எனக்கு ரொம்ப புடிச்ச கண்டங்களோட மேப்புகள்ல இந்த அமெரிக்கா கண்டம் என்னை அதிகமா ஈர்த்ததுண்டு. அதுவும் அந்த வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்கள் ஒன்னுக்கொன்னு ஒட்டிக்கிட்டு அழகா இருக்கும் பார்க்க. அதிலே இருக்கிற அத்தனை இடங்களும் எனக்கு அத்துப்படி, அழகா, நாடுகளையும், பெரிய ஊர்களையும் குறிச்சிடுவேன் சரியா! எப்பவும், இந்த பூளோக பரிட்சையிலே கடைசியா மேப்பு கொடுத்து இடத்தை, நாடுகளை குறிக்க சொல்றப்ப, அதை சரியா குறிச்சு, அப்படியே பத்து மார்க்கும் வாங்கினவன். அதுவும் அந்த காலத்திலே, எஸ் எஸ் எல் சியிலே இந்த சரித்திர, பூகோளப் பாடத்திலே 98 மார்க்கு வாங்கினவன். இப்ப அந்த கண்டத்திலே இருந்துக்கிட்டு எல்லா இடங்களையும் சுத்திக்கிட்டு இருக்கேன், கேட்கவா வேணும், எல்லாத்தையும் விளாவாரியா போய் பார்த்துட்டு வந்தாச்சு!

வட அமெரிக்காவில கிழக்குப்பகுதிகள் எப்படி புரட்சிகரமா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்குதோ அதே மாதிரி மேற்கு பகுதிகள் இந்த கற்பாறைகள் நிறந்த மலைத்தொடர்கள் ரொம்ப பிரசித்துப் பெற்றது! நம்ம இந்தியாவிலே எப்படி மலைத்தொடர்கள் ரொம்ப முக்கியமான ஒன்னோ அது மாதிரி இங்கேயும்! நம்மல்ல நிறைய பேரு அந்த மாதிரி குன்றுகள், மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியிலே இருந்து வந்திருப்போம். அதுவும் இந்தியாவின் தெற்கு மாகாணங்கள்ல இருக்கிற கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் எவ்வளவு பேமஸோ, அதே மாதிரி மத்தியிலே இருக்கிற விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள், அப்புறம் வடக்கிலே இருக்கிற இமயமலைத் தொடர்கள் போல, இந்த அமெரிக்க கண்டத்திலே இந்த ராக்கி மவுண்டன் ரேஞ்சஸ்ன்னு, வட அமெரிக்காவின் தெக்காலெ இருக்கிற 'சாண்டியகோ' அதுக்கு கீழே இருக்கிற மெக்ஸிகோவிலருந்து ஆரம்பிக்கிற இந்த கருங்கல் மலைத்தொடர் வடக்கே அலாஸ்கா வரை வியாபித்துருக்கக் கூடிய ஒரு மலைத்தொடர்! அதுள்ள முக்கியமா இந்த கனடியன் ராக்கீஸ்னு சொல்லக்கூடிய மலைத்தொடர்கள் நீங்க எல்லாரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். இந்த ஊர்பக்கம் எங்கயாவது, அதாவது அமெரிக்காவிலேயோ, இல்ல கனடாவிலேயோ எங்க இருந்தாலும், ஒர் எட்டு இந்த பக்கம் வந்து பார்த்துட்டு போங்க! முக்கியமா கனடால இருக்கிற ஆல்பர்ட்டா என்கிற மாகாணத்திலே இருக்கிற இந்த மலைத்தொடர்கள் பார்க்க வேண்டிய ஒன்னு!

அதாவது கனடாவில் இருக்கும் இந்த மேற்கு பகுதி மாகாணங்கள்லான ஆல்பர்ட்டா, பிரிட்டீஸ் கொலம்பியா எல்லைகள்ல ஒட்டி இருக்குக் கூடிய மலைத்தொடர்கள், கனடியன் ராக்கீஸ்ன்னு ரொம்ப பிரசித்து பெற்றது. அதாவது இந்த மலைத்தொடர்கள் வடக்கில் ஆர்டிக் பகுதியின் அருகில் இருப்பதால, வருஷத்திலே ஒன்பது மாசமும் பனிமழை தான். அதனாலே இப்படி பனி விழுந்து ஆயரக்கணக்கான வருஷமா உறைஞ்சு போன பனி மலைகள் அப்படியே அழுத்ததாலே இருந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்து அப்படியே முழுசுமா மலைத்தொடர், பள்ளத்தாக்குகள் எல்லாம் வியாபித்து இருக்கும். இப்படி நகரும் பனிபடலங்களுக்கு 'கிளேசியர்ஸ்னு' ('glaceiers') ஆங்கிலத்திலே பேரு! இந்த நகரும் பனிப்பாறைகள் பத்தி நான் ஏற்கனவே பதிவுப் போட்டுருக்கேன், முடிஞ்சா அந்த பதிவு, 'ஆர்டிக் துருவ மிதக்கும் பனி பாறைகள் - A Titanic Journey!!' போய் படிச்சுப் பாருங்க! அது கடல்ல மிதக்கும் 'iceberg', பனிப்பாறைகள் பத்தி! ஆனா நான் சொல்றது மலைகள்ல இருந்து நகர்ந்து வரும் இந்த பனிபாறைகள்! அது நிறைய இந்த பகுதிகள்ல பார்க்கலாம்!

நீங்க முதல்ல வர்ற வேண்டிய இடம் 'கால்கரி'. அப்படி வரணும் நினைக்கிறவங்க எனக்கோ இல்ல கால்கரி சிவாவையோ தொடர்பு கொள்ளுங்க! வேணும்னா ஒரு பதிவர் மாநாடும் போட்டுட்டு அப்புறம் ஜாலியா நீங்க இந்த கனடியன் ராக்கீஸ்ங்கீற மலைக்காடுகள்ல சுத்தி பார்க்க போகலாம்! இந்த கால்கரிங்கிறது நம்ம நாட்ல இருக்கிற காஷ்மீர் பள்ளத்தாக்குப் போல! சுத்தி நீங்க பனி படர்ந்த மலைகள்ல பார்க்கலாம்! 'வெள்ளி பனி மலை மீதுலாவுவோம்'னு பாரதியார் பாட்டு பாடிக்கிட்டு அழகா நீங்க போய் வரலாம்! இங்கிருந்து ஆரம்பிச்சா பக்கத்திலே பேன்ஃப் ('Banff') அப்படின்னு ஒரு இடம்! இதை சுத்தி இருக்கக் கூடிய காடுகளை பேன்ஃப் நேஷனல் பார்க்குன்னு சொல்வாங்க! அது போலே கொஞ்சம் வடக்கால போனீங்கன்ன ஜஸ்பர்னு ஒரு இடம்! அதை சுத்தி இருக்கக்கூடிய காடுகள் தான் ஜஸ்பர் நேஷனல் பார்க்! இதை சுத்தி அழகான கற்பாறைகளால் சூழப்பட்ட அழகிய மலைகள், அதன் மீது படர்ந்து இருக்கும் பனி படலங்கள், பிறகு அழகிய பள்ளத்தாக்குகள், அதறகு அருகிலே விரைந்து ஓடி வரும் நதிகள், நீர் நிலைகள், ஏரிகள், ஊசியிலைக்காடுகள், பிறகு மலைசரிவுகள், அதற்க்கிடையில் ஓடி வரும் நீர்வீழ்ச்சிகள் அப்படின்னு கண்ணையும் மனசையும் பரிக்கக்கூடிய அழகிய இயற்கை வனங்கள்! வந்தா உங்களையே மறந்து போய்டுவீங்க!

பனிநிலம்னு ஒரு பகுதி ஜஸ்பர் போகும் வழியில் உள்ளது. இதற்கென பிரத்தியோகமான பெரிய வண்டிகள்ல நீங்க போய் அந்த 'ice Field', அதாங்க அந்த பனிநிலத்தை பார்க்கலாம்! இந்த பனிநிலம் பல வருடங்களா குளிர்காலத்திலே விழும் பனி மழையின் காராணமா, இந்த பனி சறுகுகள் அப்படியே நாள்பட நாள்பட கெட்டியாகி அப்படியே ஒரு பெரிய படர் போல இருக்கும், அப்பறம் அதுவே இறுகி போயி அப்படியே பனிபடிகங்கள் போலாகிவிடும்! இந்த கற்பாறைகளில் இருக்கும் இந்த பனிபடர்கள்,நீங்க போட்டவிலே பார்க்கிறது பல நூறு வருஷங்களுக்கு முன்னே, ஏன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே விழுந்த பனி மழை துகள்கள், அப்படியே கெட்டியாகி கொட்டிக்கிடக்கது! அப்படி படிகம் படிகமா ஒன்னுக்கு மேலே ஒன்னா இருப்பதால, அடியில் இருக்கும் படிகங்கள் அழுத்தத்தின் காரணமா கொஞ்சம் கொஞ்சமா இருக்கும் இடத்தை விட்டு நழுவி கீழே ஆத்து தண்ணி ஒடுவது போல மலைச்சரிவுகளில் கீழே நோக்கி நகர்கின்றன! அப்படி நகரும் பனிகளின் மூலமா அப்படியே நிலத்திலே படர்ந்து ஒரு பனிநிலமாகி போகுது. இந்த மலைக்கு மேலே இருக்கும் பனிபடர்நிலங்களுக்கு பேரு கொலம்பியா ஐஸ்ஃபீல்ட்('Columbia IceField'), அப்படியே மலைச்சரிவுகளில் படர்ந்திருக்கும் பனிநகர்வுகளுக்கு பேரு ஆத்தெபெஸ்கா கிளேசியர்('athabasca galcier')அப்பறம் அதிலிருந்து கீழே உருகி படர்ந்து வந்த ஐஸ் கால்விரல்களுக்கு பேரு 'Toe', அங்கிருந்து உருகி நீரா ஒடி கடைசியிலே அது ஏரியை வந்தடையுது! இப்படி வியாபித்து இருக்கும் ஐஸ்ங்க உருகுவதும், பிறகு குளிர்காலத்திலே பனியாவதும் தொன்று தொட்டு நடப்பது! ஆனா இப்ப உலக உஷ்ணமாவாதாலே இந்த பெரிய பனி கிளேசியர் எல்லாம் இருந்த இடம் தெரியாமா பின்னோக்கி(Retreat) ஒடி விட்டன! ஆக இது தான் இந்த கிளேசியர்னு சொல்லக்கூடிய பனிபடர், நகர்வுகளின் கதை! போய் பார்த்தீங்கன்னா , அப்படியே ஜில்லுன்னு இருக்கும்!

அப்புறம் நம்ம ஊருங்க மாதிரி மலைச்சரிவுகள், நீர்வீழ்ச்சிகள், பாயந்து வரும் நதிகள், பூந்தோட்டங்கள், ஊசியிலைக்காடுகள் எல்லாம் நீங்க பார்க்கலாம். நீங்க இந்தியாவிலே வடக்கே ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், வடமேற்கு உத்திரபிரதேச மலைக்காடுகள்னு எல்லா இடங்களுக்கும் வடக்கே ரஜினிகாந்து போறமாதிரி, இந்த இமயமலை அடிவாரம் போய் வந்திருந்தீங்கன்னா இதெல்லாம் உங்களுக்கு பரிட்சியமான ஒன்னா இருக்கும். என்னா ஐஸ் அதிகம் பார்க்கனும்னா, அங்கெல்லாம் கொஞ்சம் உச்சிக்கு போகணும், இங்க அப்படி இல்ல, கீழே நிலங்களிலேயே பார்க்கலாம்! இன்னென்னு பார்க்க கிடைக்காதது இங்கே என்னான்னா, மலைச்சரிவுகள், நதி ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் அருகே சிறு மலை இடுக்குகள் நடுவே தபம் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடிய சடா முனிவர்களும், தடுக்கி விழுந்தா கிடைக்ககூடிய சின்ன சின்ன கோவில்கள், காளிமாதா, தேவின்னு மலைக்கோவில்கள் இங்க இல்லே! நம்ம ஆளுங்க அந்த காலத்திலே வந்திருந்தா இந்த மாதிரி ஏதாவது கோயில் கொடின்னு மலை இடுக்குகளில் இல்லே உச்சிகளில் கட்டி பிரசாதம் கொடுத்திக்கிட்டிருப்பாங்க! அது கொஞ்சம் இங்க விட்டுப்போச்சு! மற்றபடி எல்லாம் நம்ம இமயமலை அடிவாரத்தில் கிடைக்கக்கூடிய காட்சிகளே! அதிகம் தூரம் போகலேன்னா ஊட்டி, கொடைக்கானல் மாதிரி தான்! ஆனா எல்லாத்தைவிட கற்பாறகளான மலைகள் அதன் சரிவுகளில் படர்ந்த பனி படலங்கள் பார்க்க இரண்டு கண்ணு போதாது இங்கே!